வியாழன், 14 ஏப்ரல், 2022

பொன்னேர் உழவுச் சடங்கும் பண்பாட்டு நடத்தைகளும் : மகாராசன்




வேளாண்மை செய்யும் நிலத்தில், முதன் முதலாக உழவு செய்வதைப் பொன்னேர் பூட்டல் என்றே உழவுத் தொழில் மரபினர் சிறப்புடன் கொண்டாடி வருகிறார்கள். இதனை வேளாண்மை உழவுத் தொழிலுக்கான வளமைச் சடங்காகவே நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலும் பிற வட்டாரங்களிலும் சித்திரை அமாவாசை முடிந்தவுடன் வளர்பிறையிலோ அல்லது சித்திரை முதல் நாளிலோ அல்லது முதல் வாரத்திலோ அந்தந்த ஊர்களில் உள்ள உழவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரே நிலத்தில் கோடை உழவு செய்யும் சடங்கைச் செய்து வருகின்றனர்.


தமிழ்நாட்டின் சிற்றூர்ப் புறங்களில் நடைபெற்று வருகின்ற உழவுச் சடங்கின் பின்புலத்தில் இருக்கும் பண்பாட்டு நடத்தைகள் பற்றி, கப்பிகுளம் ஜெ.பிரபாகர் காட்சிப்படுத்தும் விவரிப்புகள் அத்தகைய வளமைச் சடங்கின் நோக்கத்தையும் பின்புலத்தையும் புலப்படுத்தியுள்ளன.

அதாவது, அதிகாலையில் வீடு கழுவி, வேளாண் புழங்கு பொருட்களைச் சுத்தம் செய்து, மாடுகளைக் குளிப்பாட்டி, கலப்பையுடன் ஊர்க்குடும்பர் நிலத்தில் ஒன்று கூடுவார்கள். ஏர் ஓட்டுவதற்குப் பழகாத புதிய காளைகளும், ஏர் ஓட்டிப் பழகாத இளந்தாரிகளும் அங்கே இருப்பார்கள். வேடிக்கை பார்க்க வருபவர்களும், சாட்டைக்கம்பு எனும் தார்க்குச்சிகளைப் புதிதாகச் செய்து கொண்டு வருவார்கள். 

கலப்பை, மேழி, கொழு, கயிறு, தார்க்குச்சி மட்டுமின்றி மாடுகளுக்கும் மஞ்சள், சந்தனம் பூசி, பூச்சூடி, மாலை அணிவிப்பார்கள். நிலத்தின் வடகிழக்குப் பகுதியில், நாழி நிறைய நெல் வைத்து, தேங்காய், பழம், சந்தனத்துடன் சூரியனை நோக்கி வேண்டுவார்கள்.

நிலக்கிழார்கள் என்றழைக்கப்படும் பெரிய விவசாயிகளும், மாடு, வண்டி, சிறிதளவு நிலம் வைத்துள்ள நடுத்தர விவசாயிகளும், சிறு விவசாயிகளும் ஒட்டுமொத்தமாக ஏர் பூட்டி அணிவகுத்து நிற்பார்கள். ஊர் நாட்டாண்மை, நீர்ப் பாய்ச்சி முன்னிலையில் ஊர்க்குடும்பரின் நிலத்தில் சம்சாரிகள் உழவு செய்வார்கள். 

பெண்கள் பனை ஓலைப் பெட்டியில் இருக்கும் நெல், கம்பு, சோளம், வரகு, கேழ்வரகுத் தானியங்களை விதைப்பார்கள். புதிதாக உழவு பழகும் காளைகளையும் ஏரில் பூட்டி உழவுக்குப் பழக்குவார்கள். இதை உழவு மாடு வசக்குதல் என்பர். ஏர் ஓட்டிப் பழக நினைக்கும் இளைஞர்களும் ஏர்க்கலப்பையைப் பிடித்து உழவு செய்வார்கள். 

பின்னர், கூடியிருக்கும் அனைவருக்கும் தேங்காய், பழம் மட்டுமின்றி பானக்கரையம் என்றழைக்கப்படும் புளிக்கரைசல், பனங்கருப்பட்டி சேர்த்த பானகம் வழங்குவார்கள். படையலில் வைத்த கப்பியரிசியை அதாவது முனை தீட்டாத பச்சரிசியை ஊறவைத்து பனை வெல்லம், பொட்டுக்கடலை சேர்த்து அனைவருக்கும் வழங்குவார்கள். வேளாண் கிராமங்களில் அன்று தோசை, இட்லி காலை உணவாக இருக்கும். காய்கறி குழம்பு, ஆடு, கோழி கறிச்சோறுடன் மதிய விருந்து நடக்கும்.

புஞ்சையை நோக்கி அணிவகுத்துச் செல்லும் மாடுகளை, பொன்னேர் பூட்டி முடித்தவுடன் அவிழ்த்து விட்டு விடுவார்கள். வீடுகள் நோக்கி மாடுகள் ஓடி வரும். இளைஞர்கள் வீடு திரும்பும்போது முறைப்பெண்கள் மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்வும் சில கிராமங்களில் நடப்பதுண்டு. நாளேர் உழவு முடிந்ததும், அவரவர் விவசாய நிலங்களில் கோடை உழவு செய்வார்கள் என விவரிக்கிறார் கப்பிகுளம் ஜெ.பிரபாகர். 

பொன்னேர் உழவு எனும் இத்தகைய உழவுச் சடங்கானது, வேளாண்மை உழவுத் தொழில் சார்ந்த வளமைச் சடங்காகவும், வேளாண் உழவு மரபின் பண்பாட்டு அடையாளமாகவும் மட்டுமல்லாமல், வேளாண்மை உழவுத் தொழில் செயல்பாடுகளுக்கான ஒத்திகைச் சடங்காகவும் பயிலுகைச் சடங்காகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வேளாண்மை உழவுத் தொழில் மரபையும் நுட்பத்தையும் அறிவையும் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் அல்லது கையளிக்கும் வகையில்தான் உழவுச் சடங்கின் உள்ளீடும் நோக்கமும் அமைந்திருக்கின்றன.

கால மாற்றமும் சமூக மாற்றமும் புதிய புதிய வேளாண்மை உற்பத்தி முறைகளையும், உற்பத்திக் கருவிகளையும் தந்திருக்கின்றன. அவற்றுள் நிறைய சாதக பாதகங்கள் இருந்தாலும், வேளாண்மை உழவுத் தொழிலும், அதனை மேற்கொண்டு செய்துவரும் உழவுத் தொழில் மரபினரும் இருக்கவே செய்கின்றனர். 

கடந்த காலத்தில் இருந்தது போன்று இப்போது பெருவாரியாக மாடுகளும் இல்லை; ஏர்க் கலப்பைகளும் இல்லை. ஒவ்வோர் ஊரிலும் ஒரு சிலர்தான் உழவு மாடுகளையும் ஏர்க் கலப்பைகளையும் வைத்திருக்கின்றனர். உழவுந்துகளும், உழவுந்துக் கொக்கிக் கலப்பைகளும் சட்டிக் கலப்பைகளும்தான் பெருவாரியான உழவுக் கருவிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றன.  

ஆனாலும், வேளாண்மை சார்ந்த சிற்றூர்ப் புறங்களில் உழவுச் சடங்குகள் இன்னும் உயிர்ப்புடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். அதனால்தான், ஒருசில உழவு மாடுகளின் ஏர்களுக்குப் பின்னே உழவுந்துகளும் அணிவகுத்து நிற்கின்றன. உழவு மாடுகளையும் ஏர்க் கலப்பைகளையும் அலங்கரிப்பதைப் போன்றே உழவுந்துகளின் இயந்திரக் கலப்பைக்கும் மஞ்சள், குங்குமம், மாலை கட்டி அலங்கரிக்கப்படுகிறது. 

ஏர் மாடுகளோடு உழவுந்துகளையும் சேர்த்துக்கொண்டு ஊர்க் குடும்பர், நீர்ப் பாய்ச்சி நிலத்திலோ, கோவில் நிலத்திலோ, ஊரின் பொது நிலத்திலோ புழுதியை உழவு செய்கின்றனர். இதற்கும் நாளேர் பூட்டுதல் - பொன்னேர் பூட்டுதல் என்றுதான் பெயர். உழவுக் கருவிகள் மட்டும்தான் மாறி இருக்கின்றன; உழவுத் தொழில் மரபினரோ அவர்களின் உழவுச் சடங்கு மரபோ இன்னும் மாறவுமில்லை; மறையவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

புஞ்சை நிலத்தில் மட்டுமின்றி நஞ்சை நிலத்திலும் நாளேர் பூட்டுதல் நடக்கின்றன. மானாவாரிப் பகுதிகளில் மட்டுமல்லாமல், ஆறுகள் பாயும் ஆற்றங்கரையோரப் பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு நாளில் பொன்னேர் பூட்டும் நிகழ்வு நடக்கிறது. நாளேர் பூட்டினால்தான் - உழவுச் சடங்கை நிகழ்த்தினால்தான் விளைச்சல், அறுவடை நன்றாக இருக்கும் என்பது உழவுத் தொழில் மரபினரின் நம்பிக்கையாக மட்டுமல்ல; பட்டறிவின் புலப்பாடாகவும் இருகின்றது. 

வேளாண்மை உழவுத் தொழிலின் பட்டறிவைத் தொழில் மரபாகக் கொண்ட உழவுத் தொழில் மரபினரே, உழவுத் தொழில் மரபின் நீட்சியாக இருந்து வருவதை இத்தகைய உழவுச் சடங்குகள் புலப்படுத்துகின்றன. கோயம்புத்தூர் பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நாற்று நடவுத் திருவிழா நடைபெற்று வருகின்றது. இத்திருவிழாவின் ஓர் அங்கமாக, தங்கக் கலப்பையால் ஏர் பூட்டும் சித்திரமேழி உழவு என்றழைக்கப்படும் உழவுச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. 

மேலும், ஊர், நாடு, பட்டி, பதி, பாளையம், வட்டகை பதினெட்டுக் குடும்புகளின் பிரதிநிதியாக நான்கு வம்சங்களைச் சேர்ந்த பேரூர் நாட்டுப் பட்டக்காரர்கள், ஊர்ப் பண்ணாடிகள் முன்னிலையில் வயலில் இறங்கி பொன்னேர் பூட்டி உழுகின்ற சடங்கும் நிகழ்த்தப்படுகிறது. அதாவது, சடங்கு மரபிலும் தொழில் மரபிலும் உழவுத் தொழில் மரபின் நீட்சி இருப்பதை அச்சடங்கு தெரிவிக்கிறது. 

உழவுச் சடங்கின் பண்பாட்டுப் பரவலை உலகின் பல பகுதிகளிலும் காண முடிகிறது. பொன்னேர் பூட்டும் அல்லது நல்லேர் பூட்டும் இத்தகைய உழவுச்சடங்கு, தமிழ் நாட்டில் மட்டுமல்லாது, ஈழத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும், பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் அவ்வப்பகுதி உழவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல, சித்திரை மாதத்தில் கம்போடியா நாட்டிலும் அங்குள்ள அரச பரம்பரையினர் தங்கத்தினால் ஆன ஏர் கொண்டு நிலத்தில் உழுது உழவைத் தொடங்கி வைப்பதும், அதன்பின்னர் உழவர்கள் தத்தம் வயலில் உழுவதுமான உழவுச் சடங்கு இன்றும் அங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதும் ஒப்பிடத்தக்கது. 




இவ்வாறாக, வேளாண்மை உற்பத்திச் செயல்பாடுகளை உழவுத் தொழிலாகவும் உழவுச் சடங்காகவும் புலப்படுத்தி வருகின்ற உழவுத் தொழில் மரபினரே - வேளாண் மரபினரே, வேளாண் மாந்தராக - உழவுத் தொழில் வேளாளராக இருந்து வருவதை இத்தகைய உழவுச் சடங்குகள்வழி அறிய முடிகிறது.

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
இரண்டாம் பதிப்பு, மார்ச்சு 2022,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
*
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக