அண்மையில் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றிருக்கும் 'நீர்வழிப்படூஉம்' நூலினை வாசிக்க வேண்டும் எனும் பெரு விருப்பம் உள்ளுக்குள் இருந்தது. அதற்குக் காரணம், அந்நூலின் தலைப்புதான்.
கதை நூலினை மெதுமெதுவாய் வாசிக்கக்கூடிய எம்மைப் போன்றோருக்கு, விறுவிறுப்பாக வாசிக்க வைக்கும் கதைநூலாக 'நீர்வழிப்படூஉம்' அமைந்திருக்கிறது. இந்நூலை எழுதிய திரு தேவிபாரதி அவர்கள், தமது அனுபவங்களையும் தம்மைச் சுற்றிய சமூக மனிதர்களின் அனுபவங்களையும் கதை சொல்லல் வழியாகப் பகிர்ந்திருக்கிறார்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்ட நாவிதர்களின் சமூக வாழ்வையும், தங்களுக்கு முன்பாக வாழ்ந்த தலைமுறையினர் அனுபவித்த எதார்த்த வாழ்வின் வறுமையையும், பிற சமூகங்கள் வாழ்வதற்காக நாவிதர் சமூகம் பட்ட பாடுகளையும் கதையில் முன் பின் நகர்த்தி, அவற்றையெல்லாம் சிதையாமல் எழுத்தில் கோர்த்துள்ளார் தேவி பாரதி.
நாவிதர், மருத்துவர், முடி திருத்துபவர், அம்பட்டையர், பார்பர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தச் சமூகத்தினரின் புழங்குவெளி மிகக் குறுகலானது. பத்துக்குப் பத்து அளவு கொண்ட அறை அல்லது குடிசை. இதோடு மட்டும்தான் அவர்களின் புழங்குவெளி எனப் பொதுச் சமூகம் கருதிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தத் தலைமுறைக்கு முன்பு வாழ்ந்திருந்த அந்தச் சமூகத்தின் குடி நாவிதன், குடி நாசுவத்தி இல்லாமல் மனித குலத்தில் எதுவும் நடக்காது எனும் நிலைதான் இருந்திருக்கிறது.
மனிதகுலம் இயங்குவதற்கு இரத்த நாளங்களாய் நாவிதர்கள் இருந்திருக்கிறார்கள். பண்ணையார் / பண்ணையாரச்சிகள் ஏவும் வேலைகளையும் - ஏவாத வேலைகளையும் செய்யக்கூடியவர்களாகவும், கல்யாணம், கருமாதி, பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு, பிள்ளைப்பேறு, நோய் நொடி வந்தால் மருந்து கொடுத்தல் எனச் சகலமும் கற்றவர்களாகவும், தனக்கென்று தனி இடம் வகித்தவர்களாகவும், வா என்றால் வந்து நிற்பவர்களாகவும், போ என்றால் போகின்றவர்களாகவும், அவமானங்களைப் போர்வை போன்று போர்த்தியவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். நாவிதர் வாழ்வில் வறுமையும், மதிப்பில்லாத கடின உழைப்பும், பண்ணையார் படுத்தும் அவமானமும் என எல்லாவற்றையும் சுமந்தலைந்த நாவிதர்களின் கடந்தகால வாழ்வைத்தான் இந்நூல் பேசுகிறது.
தமிழ்நாட்டின் கொங்கு வட்டாரத்தில் உள்ள ஈரோட்டைச் சுற்றியுள்ள ரங்கம்பாளையம், ஆம்பராந்துக்கரை, உடையாம்பாளையம், வெள்ளக்கோயில், கருங்கல்பாளையம், நாச்சு வலசு ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளைக் கதைக்களமாக வைத்தும், அவ்வட்டாரச் சொற்களையே கதையின் எழுத்து நடையாகவும் பயன்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.
நீர்வழிப்படூஉம் கதையில் வரும் முக்கியமான கதைமாந்தர், 'காரு' என எல்லோராலும் அழைக்கப்படும் ஆறுமுகம் ஆவார். காருவின் தங்கை மகனான ராசாதான் இந்நூலின் கதை சொல்லி. இந்தக் கதை சொல்லியின் தாய்மாமன்தான் 'காரு மாமா' ஆவார்.
காரு மாமாவின் இறப்புச் செய்தி அறிந்து அங்கு செல்லும் கதைசொல்லியான ராசா, காருமாமாவின் இறப்புச் சடங்கிலிருந்து அவரது கதையைச் சொல்லத் தொடங்கி, காரு மாமாவின் சமூகப் பின்புலமான நாவிதர் குலத்தைப் பற்றிய விரிந்த கதையைச் சொல்லியிருக்கிறார்.
காரு மாமாவின் அக்காவை உடையாம்பாளையத்தில் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அந்தப் பெரியம்மாவிற்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த கொஞ்ச நாளிலேயே அவரது கணவரும் இறந்து விடுகிறார். அடுத்ததாக, காரு மாமாவின் மூத்த தங்கையை வாத்தியார் வேலை பார்ப்பவருக்குக் கட்டித் தருகிறார்கள். அவரும் ஐந்து பிள்ளைகளைப் பெற்ற பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். இவர் கதை சொல்லி ராசாவின் அம்மா ஆவார். காரு மாமாவின் கடைசித் தங்கை திருமணமாகி மெட்ராசில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் ராசம்மாவைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார் காரு மாமா.
காரு மாமாவின் அக்கா வீட்டுக்காரர் இறந்த பிறகு, குடி முறைமை செய்வதற்கு உடையாம்பாளையத்தில் ஆள் இல்லாமல் போகிறது. இதனால், பெரியம்மாவை அழைத்து, வேறு ஆளை நியமிக்கச் சம்மதம் கேட்கிறார்கள் பண்ணையார்கள். அப்போது, என் கணவர் குடி முறைமை செய்திருந்த இடத்தில் வேறு யாரையும் நியமிக்க விடமாட்டேன்; என் அண்ணனையே அழைத்து வருகிறேன் என்று கூறிவிடுகிறார்.
இந்நிலையில், பெரியம்மாவின் அண்ணனை அழைத்துவர ரங்கம்பாளையம் செல்கிறார்கள். அங்கிருக்கும் பண்ணையார்களிடம் பெரியம்மாவும் உடையாம்பாளையம் பண்ணையார்களும் காருவை அழைத்துச்செல்ல அனுமதி கேட்கிறார்கள். அதற்கு, அவர்கள் "காருக்கு நிகர் யாரும் வர இயலாது; எங்கயாச்சு தெக்க வடக்க போயி எவனாச்சுங் கெடச்சாக் கூட்டியாந்து வெச்சுக்குங்கோ" என அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்கள்.
உடையாம்பாளையம் பண்ணையார்கள் நாவிதர்களைத் தேடி அலைய, பக்கத்து ஊரான முத்தயன் வலசுலேயே ஆள் கிடைத்து விடுகிறது. அவரும் பெரியம்மாவும் சேர்ந்து குடிமுறையை மிக நேர்த்தியாகச் செய்து வருகிறார்கள். இதற்கிடையில், சவுந்திரா என்பவரை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார் பெரியம்மா. முத்தயன் வலசு பெரியப்பாவுக்குத் திருமணம் ஆன கொஞ்ச நாள்கள் கழித்து, பெரியம்மாவும் சவுந்திரா பெரியம்மாவும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதை ரங்கம்பாளையத்திலிருக்கும் காரு மாமாவிடம் பெரியம்மா சொல்லி அழுகிறார்.
பெரியம்மாவின் மீது பாசத்தில் இருந்த காரு மாமா, ரங்கம்பாளையத்துப் பண்ணையாரிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல், பெரியம்மாவிற்குத் துணையாக அம்மாச்சி, அப்புச்சி, அம்மா, மெட்ராஸ் சின்னம்மா என எல்லோரையும் அழைத்துக் கொண்டு உடையம்பாளையம் வந்து விடுகிறார். முத்தையன்வலசு பெரியப்பா பார்த்துக் கொண்டிருந்த குடிமுறைமையைச் சரிபாதியாகப் பிரித்துக் கொண்டு நாவிதம் செய்து வருகின்றனர். இதற்கிடையில், காருமாமாவின் மனைவியான ராசம்மா அத்தை, தமது குழந்தைகளுடன் அவ்வூரிலிருந்த செட்டி ஒருவரோடு ஓடிப் போகிறார்.
மனைவியையும் பிள்ளைகளையும் இழந்த வேதனையில் இருந்த காரு மாமாவை, காக்கா வலிப்பு நோய் தாக்குகிறது. மனமுடைந்த காருமாமா குடி முறைமை செய்வதையே விட்டு விடுகிறார். பெரியம்மாவும் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்ததிலிருந்து அடிக்கடி மகள் வீட்டிற்குச் சென்று மாதக்கணக்கில் அங்கேயே தங்கிவிடுகிறார். மனைவி, குழந்தைகள், உடன் பிறந்தவர்களின் பிரிவு, தனிமை என அனைத்தும் சேர்ந்ததால் காரு மாமா மனப்பிறழ்வுக்கு உள்ளாகி பின்பு இறந்தும் போகிறார்.
இறந்துபோன தமது அண்ணனின் சேறுபடிந்த காலங்களை நினைத்துப் பெரியம்மா ஒப்பாரி பாட, ராகத்திற்கும் சலங்கை ஒலிக்கும் ஏற்றாற் போல் முத்துவலசு பெரியப்பா ஆட, சொந்த பந்தம், சண்டைச் சச்சரவு, ஆட்டம் பாட்டமாய் இறப்பு வீட்டு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில், காரு மாமாவிற்குக் கொள்ளி வைப்பதற்கு அவரது மகன் ஈஸ்வரனையும் அழைத்து வந்துவிடுகிறார்கள். சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆடிப்பாடியவாறு காரு மாமாவின் உடல் சுமந்த தேர் காடு நோக்கிச் செல்கிறது. தேர் செல்லும்போது கனமழை கொட்டித் தீர்க்கிறது. எதையும் கண்டுகொள்ளாமல் பூவும் நீரும் புண்ணியவானுக்கே என்றவாறு கூட்டம் நகர்கிறது.
இறுதியாக, தாலியறுப்புச் சடங்கன்று ராசம்மா அத்தையும் தமது மகள் ஈஸ்வரியோடு பரிதாபமாக வந்து சேர்கிறார். செட்டி தன்னுடன் ஆறு மாதம் இருந்துவிட்டு ஏமாற்றிவிட்டுப் போன வாழ்வையும், செட்டியோடு சென்ற பிறகு பட்ட பாடுகளை எல்லாம் சொல்லி அழுகிறார் ராசம்மா அத்தை. இதனால், அவர் மீது இருந்த கோபம் எல்லோருக்கும் தணிகிறது.
ராசம்மா அத்தையால் ஏற்பட்ட அவமானம், காருமாமா இறப்பு என எல்லாவற்றையும் கடப்பது போல் கடந்து, அவரவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறார்கள். வெட்டுதல், ஏற்றம், சமநிலை, சரிவு என வாழ்வின் அனைத்துத் தருணங்களையும் உள்ளடக்கிய தாயம் விளையாட்டு போலத்தான் அவர்களது வாழ்வும் அமைந்திருந்தது என்பதாகக் கதை உணர்த்துகிறது. வறுமையையும் அவமானங்களையும் அனுபவித்த நாவிதக் குடிகள், எல்லாவற்றையும் கடந்து போவதுபோல்தான் காருமாமாவின் இறப்பையும் கடந்து செல்கிறார்கள்.
தாயம் விளையாட்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடந்துசெல்வதுபோல, விளையாட்டில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதுபோல, நாவிதர்களின் குடிமுறைமை வாழ்வும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது; அவர்களது வாழ்வும் ஏற்ற இறக்கங்களையும் இன்ப துன்பங்களையும் கொண்டதாக இருந்திருக்கிறது. வாழ்வும் ஒரு விளையாட்டுபோலத்தான் என்பதைக் கதையின் இறுதிப் பகுதி சொல்லிச் செல்கிறது.
இங்குள்ள ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கென்று குடி நாவிதர் குடும்பங்களைத் தத்தமது ஊர்களில் வைத்திருப்பது வழமையாய் இருந்திருக்கிறது. குடி நாவிதரை வைத்திருக்காத சமூகங்கள் ஏசலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே, குடி நாவிதர்களை ஒவ்வொரு சமூகமும் வைத்திருப்பதைச் சமூகக் கௌரவமாகக் கருதப்பட்டிருக்கிறது. ஒரு சமூகத்தைச் சார்ந்தும், அதற்குச் சேவகம் செய்வதும்தான் குடி நாவிதர்களின் குடி முறைமை வாழ்வாக இருந்திருக்கிறது.
குடி நாவிதர் இல்லாமல் எவ்வளவு பெரிய பண்ணைக்காரனாலும் ஒன்றும் செய்ய முடியாது. கல்யாணம், காட்சி, குழந்தைப் பேறு, வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் முதலில் வந்து நிற்பவர்கள் குடி நாவிதர்கள்தான். ஒவ்வொன்றையும் எப்படிச் செய்ய வேண்டும், யாருக்குத் தகவல் சொல்ல வேண்டும், என்னென்ன வாங்க வேண்டும், எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று எல்லாவற்றையும் தீர்மானித்துச் செய்ய வேண்டிய இடத்தில் நாவிதர்கள்தான் இருந்திருக்கிறார்கள். பண்ணையக்காரர்களிடம் செல்வம் இருந்தது. நாவிதர்களிடம் அந்தச் செல்வத்தைச் சேர்ப்பதற்கான உழைப்பு இருந்திருக்கிறது .
பண்ணையாரச்சிகளுக்குக் குடி முறைமை செய்பவர்கள் குடி நாசுவத்தி ஆவார்கள். குடி நாவிதர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் குடி நாசுவத்திகள்.
பண்ணையாரச்சிகளின் பிள்ளைப் பேறு காலத்தில் கம்பறு கத்தியை எடுத்துக்கொண்டு எந்நேரமாக இருந்தாலும் பிரவசம் பார்க்கச் செல்வார்கள் குடி நாசுவத்திகள். பிரசவம் பார்க்கும் வீட்டில் இவர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள். குழந்தை பிறந்த பிறகு குழந்தையையும் தாயையும் குளிப்பாட்டிக் கொடுத்துவிட்டு, அவர்களுடன் மூன்று நாள்கள் தங்கி விடுவார்கள். தனிக்கட்டில், போர்வை, தலையணை, தேனீர், சாப்பாடு என்று சகலமும் அனுபவிப்பார்கள். அதாவது, குடும்ப மருத்துவச்சிகளாக இருந்திருக்கிறார்கள்.
யாருக்கெல்லாம் பிரசவம் பார்க்கிறார்களோ, அக்குழந்தையைப் பல காலம் கழித்துப் பார்த்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள். தாங்கள் பிரசவம் பார்த்த குழந்தைகளுக்கு நோய்நொடி வந்தால் துடித்துப் போவார்கள். மருந்துகளையும் எண்ணெய்களையும் கொண்டு நோய் சரியாகும் வரை இருப்புக் கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்ட குடி நாசுவத்தியாகத்தான் பெரியம்மா எனும் கதைமாந்தர் இருந்திருக்கிறார். குடி நாசுவத்திகளைக் குறித்த விவரிப்புகள் பெரியம்மாவின் அனுபவங்களாக விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.
இந்நூலில் குடிமுறைமை செய்யும் குடி நாவிதர் / குடி நாசுவத்தி பற்றியும், அவர்களுக்கான ஒரு காலம் இருந்திருக்கிறது என்பது பற்றியும் முழுமையாகக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், குடி முறைமை செய்யும் நாவிதர்களின் ஓயாத உழைப்பும், குடி நாசுவத்திகளின் கம்பறு கத்தியும், பேறு கால வைத்திய முறையும் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் வரும் பல கதைமாந்தர்கள் வாசிப்பவர் மனங்களில் உலாவுவது போலவே வந்துபோகிறார்கள். நமது முன்னோர்கள் வதைகள் பல பட்டுத்தான் நம்மை வளர்த்திருக்கிறார்கள் என்னும் செய்திதான் கதை வடிவில் ஆவணமாக்கப்பட்டிருக்கிறது.
இந்நூலைப் படிக்கும்போது ஒரு இடங்களில்கூட சோர்வோ சலிப்போ ஏற்படவில்லை. சில பக்கங்களைக் கடந்து செல்வோம் என்ற எண்ணம்கூடத் தோன்றவில்லை. சொற்கள் புரியாத இடங்களில்கூட நின்று, திரும்பப் படித்துப் புரிந்து கொண்டு, கதையோடும் அதன் நிகழ்வுகளோடும் வாழ்ந்தது போன்ற அனுபவத்தை இந்நூல் தந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
எங்கோ பிறப்பெடுத்த ஆற்றுநீர் அதன் வழியில் பள்ளம் உள்ள திசையின் பக்கம் செல்வதுபோல், நாவிதர் சமூகமும் தமது உயிரைத் தக்க வைத்துக்கொள்ள வெவ்வேறு ஊர்களுக்குச் செல்கிறார்கள்; செல்லும் ஊரைத் தமது சொந்த ஊராகக் கருதுகிறார்கள்; அவ்வூரில் உள்ளவர்களையே தம் சொந்த மக்களாகக் கருதி வாழ்கிறார்கள்.
அந்தந்த ஊர்களில் உள்ள பண்ணையார்கள் செழித்திடுவதற்காக, அவர்களுக்குச் சேவகம் செய்து வந்த நாவிதர்கள், வறுமையையும் கொடுமையையும் எதிர்த்துப் போகும் மனமற்றவர்களாய் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்க்கையில் பட்ட பாடுகளையும் படாத பாடுகளையும் மனதில் சுமந்து கொண்டு, குடி முறைமைச் சேவகம் செய்து பிழைக்கும் வாழ்க்கை முறையைத்தான் அடுத்தடுத்த தலைமுறைக்கும் அதே வழியில் அதன் போக்கில் ஆற்றுப்படுத்தி வாழ்ந்திருக்கின்றனர் நாவித சமூகத்தினர்.
எதிர்த்துப் போகும் வழக்கம் ஆறுகளுக்கில்லை. ஆற்றுநீர் வழிப்போக்கைப் போன்றுதான் நாவிதர் வாழ்வும் இருந்திருக்கிறது. அதனால்தான், 'நீர்வழிப்படூஉம்' எனும் சொல்லால் நாவிதர் வாழ்வைக் குறியீடாகக் குறிக்கும் தலைப்பாக வைத்திருக்கிறார் தேவி பாரதி அவர்கள்.
நீர்வழிப்போக்கைப் போலத்தான் நாவிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், நீர் பாயாத வறண்ட நிலமாகத்தான் - வெந்தழியும் நிலமாகத்தான் நாவிதர் சமூகத்தின் வாழ்வு இருந்திருக்கின்றது என்பதை நீர்வழிப்படூஉம் ஆவணப்படுத்தி இருக்கிறது.
ஒரு சமூகத்தின் வாழ்வியலையும் வரைவியலையும் புனைகதை வழியாகப் பதிவு செய்திருக்கும் திரு தேவிபாரதி அவர்களுக்கு மிக்க நன்றி. 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கும் நீர்வழிப்படூஉம் நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.
இக்கதைக்களம் உணர்வுபூர்வமானது. சில தருணங்கள் மிகவும் மகிழ்ச்சியானது, நெகிழ்ச்சியானது. தமிழ் மொழியில் உள்ள diglosic situation, the Yusuf the high and low variances அருமையாகப் பயன்படுத்தி உள்ளது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகதையைத் தெளிவாக புரிய வைத்து நாவல் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் படி இருக்கிறது
பதிலளிநீக்கு