புதன், 7 பிப்ரவரி, 2024

என் பெயரெழுதிய அரிசி: அகிம்சைச் சொற்களால் மானுடம் பாடும் கவிதைகள் - அம்சம் மகாராசன்.


சொல் புதிது, சுவை புதிது, பொருள் புதிது, சுவை மிக்க நவ கவிதை எனப் புதுக்கவிதை பாடியவர் பாரதி. அத்தகையப் புதுக்கவிதை மரபில், மானுடம் பாடும் நெறியை இக்காலத் தலைமுறையினருக்கு எளிமையாவும் கவித்துவமாகவும் உயிரோட்டமாகவும் கவிதைகளில் புலப்படுத்தும் கவிஞர்களுள் திரு கண்மணி ராசா குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

கண்மணி ராசா எழுதிய கவிதைகள் 'என் பெயரெழுதிய அரிசி' எனும் நூலாக அண்மையில் வெளிவந்திருக்கிறது.

மனிதர்கள் வாழும் இந்தச் சமுதாயத்தின் மலர்ந்த தருணங்களையும், மாறாத வடுக்களாய் அமைந்த தருணங்களையும், மனித ஆழ்மன உணர்வுகளையும் தமது கவிதைகளில் முழுமையான பாடு பொருள் ஆக்கியுள்ளார். 

சமூகத்தில் நாம் எந்தளவுக்குச் சூறையாடப்பட்டிருக்கிறோம்; ஒடுக்கப்பட்டிருக்கிறோம்; சுரண்டப்பட்டிருக்கிறோம் என்பதையும், அவரது ஆழ்மனதில் படிந்த உணர்வுகளையும் கவிதைகளில் இறக்கி, மனப்பாரத்தையெல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார். 

புதிதாக வாசிப்பவர்களுக்கும்கூட கவிதையை ருசித்துக் காண்பதற்கான வடிவத்தில் கவிதைகளைத் தந்திருக்கிறார். கவிதையின் உணர்வைத் தனதாக்கிக் கொண்டு, கவிதையிலிருந்து மீள முடியாத அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் கண்மணி ராசா. 

செறிவான சொற்கள், காட்சிப் படிமங்கள், குறியீடுகள் , உவமைகள், உள்ளுறைகள் போன்ற உத்திகளைத் தனதாக்கிக் கொண்டு எழுதும் கவிஞர்களுக்கு மத்தியில், அனைத்துத் தரப்பு வாசிப்பாளர்களுக்கும் பொதுவானதாகவும், உலகத்தில் நிலைத்திருக்கும் சமூக நிலைப்பாட்டையும் பொதுவியலாய் எழுதியுள்ளார் கண்மணி ராசா. 

கவிஞருக்குச் சமூகம் கொடுத்திருக்கும் உணர்வையும் வலியையும் கவிதையை வாசிக்கும் ஒவ்வொரு வாசகருக்குள்ளும் கடத்தியுள்ளார் கவிஞர். தான் வாழும் சமுதாயம், நம் முன்னோர்கள் வாழ்ந்த சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள், பசி, வறுமை, இரக்கம், கருணை, அடக்குமுறை, காதல், அன்பு, கனவு, இழப்புகள், நம்பிக்கை, ஏமாற்றம் போன்ற உணர்வுகளுக்குள் வாசகர்களையும் உறையச் செய்திருக்கிறார் கவிஞர்.

கவிஞரின் உருவத்தைப் போன்றும் உள்ளத்தைப் போன்றும் எளிமையான சொற்களும் ஆழமான உணர்வும் காத்திரமான உணர்வுகளும்தான் இவரது கவிதைகளில் நிரம்பியிருக்கின்றன. இவரது பெரும்பாலான கவிதைகள் அகிம்சைச் சொற்களையே கொண்டிருக்கின்றன. மனிதத்தின் மீதான அன்பின் சொற்களையே அவரது கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார். 

இவரது கவிதைகளின் வடிவம் எளிது என்றாலும், அவை கொடுக்கும் உணர்வும் அதன் தாக்கமும் கனமானவை. கவிதைகளைப் படிப்பவரை எளிதில் தட்டியெழுப்பி, சமகாலச் சமூகத்தையும் முந்தைய தலைமுறையினர் வாழ்வையும் எளிதில் நினைவூட்டி ரெளத்திரம் கொள்ள வைக்கின்றார் கவிஞர்.

"பொழுது சாய்ந்ததும் தெரிய
 செவ்வானம் அல்ல;
அது பொன்னுலகம்.
போராடினால்தான் கிடைக்கும்".

"கொக்கே
கொக்கே
முத்துப் போடு..!
கை நகங்களை
காட்டியபடியே
ஓடினர் குழந்தைகள்
ஐயோ...!
அது குண்டு போடும் ...
என்றலறியபடியே 
குழியைத் தேடினாள் 
அகதிக் குழந்தை".

"நீர் மாலைக்கு 
பொட்டப் புள்ளைக வாங்கம்மா...! எனும் குரல் கேட்டு,
சந்தனம் அப்பிய
கண்களிலிருந்து
சடாரென வழிந்தது
முன்னரே குளிப்பாட்டிய
தண்ணீரா ...?
அதுவரை அடக்கி வைத்த
கண்ணீரா ...?
இன்னமும் 
தவிக்கிறேன் நான்".

இப்படி, பகட்டில்லாத சொற்கள் மூலம் வலியை வாசகரின் மனதிற்கு அப்படியே நுழைக்கிறார்.

"இந்தக் கவிதையிலிருக்கும்
துயரம்
நீங்கள் கண்டதுதான்.
அப்புறமேன்
இந்தக் கவிதைக்கு 
வந்த கோபம் 
உங்களுக்கு 
வரவேயில்லை...?"

நம் மகிழ்ச்சியையும் வாழ்வையும் தொழிலையும் இழந்து ஏதிலியாய் ஆகிக் கொண்டிருக்கிறோம். நமது புழங்கு வெளியையும் புழங்கும் சொற்களையும் உணவையும் வரலாற்றையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கவிதைக்கான ரௌத்திரத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார் கவிஞர்.

"ஆனாலும்
எவரும் அறியாதபடி
எங்கள் எல்லோரிடமும் 
இருக்கிறது 
கண்ணகியின் 
இன்னொரு மார்பு".

"பசி வந்தபோது 
என் தாத்தாவிடம்
நிலம் இருந்தது.
பசி வந்தபோது 
என் அப்பாவிடம் 
நெல் இருந்தது.
பசி வருகையில்
என்னிடம் ரேஷன் அரிசி இருக்கிறது. 
இனி
பசி வரும் போது 
என் மகனிடம் இருக்கும்...?"

"புழுக்கமாய் 
இருந்தாலும் சரி
பூட்ஸை அணிந்து கொள்.
எவ்வளவு நேரமானாலும் 
பரவாயில்லை.
மேலத்தெரு வழியாகவே 
பள்ளிக்குப் போ!
அங்குதான்
காலணி அணிந்ததற்காய்
கட்டி வைத்து அடித்தார்கள் 
உன் பாட்டனை".

"நகரத்து வீதிகளில்
நடந்து நடந்து
மகிழ்கிறான் 
சேரியிலிருந்து வந்தவன்
செருப்பணிந்த கால்களோடு".

"அடுப்பு வேலையில்
அவளுக்கு உதவியதில்லை.
ஆனாலும்,
அருமையாகச் சமைப்பேன் பெண்ணியக் கவிதை."

இப்படியாக, மிக எளிய நடையில் ஆழமான கருத்துக்களை ஒவ்வொரு கவிதையிலும் புலப்படுத்தியுள்ளார். கவிதைகளைப் படிக்கும்போது, அவற்றுள் தங்கி அனுபவித்து, அந்த உணர்வின் வழியில் உணர்வையும் வலியையும் அனுபவித்து, அதிலிருந்து வெளிவர ஒரு நிமிடம் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால் நான் முழுமையாக ஒரே மூச்சில் வாசித்த கவிதை நூல் இதுவென்றுதான் சொல்ல வேண்டும். 

கவிஞரின் சிந்தனையை, அவர் பார்க்கும் உலகத்தை, அவரது உணர்வை, எழுத்தில் யாவரும் ஏற்கும் வண்ணமாய் நிதானமான சொற்களைக் கொண்டு ரௌத்திரமான கருத்துக்களையும் அகிம்சை முறையில் எடுத்துரைக்கும் கவிதை நூலாக என் பெயரெழுதிய அரிசி அமைந்திருக்கிறது. 

கவிஞர் கண்மணி ராசா அவர்களுக்கு வாழ்த்துகள்.

*

என் பெயரெழுதிய அரிசி,
கண்மணி ராசா,
முதல் பதிப்பு 2023,
வாசக சாலை பதிப்பகம்,
விலை: 130/-
*
கட்டுரையாளர்:
திருமதி அம்சம் மகாராசன்,
முதுகலை ஆசிரியர்,
செம்பச்சை நூலக நிறுவனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக