மேற்கு வங்கம், சாந்தி நிகேதனில் முனைவர் பட்ட ஆய்வுப்பணி மேற்கொண்டிருப்பவர் சத்தீஸ்வரன் அவர்கள். வங்க மொழி நூல்களைத் தமிழிலும், தமிழ் நூல்களை வங்க மொழியிலும் மொழியாக்கம் செய்யும் அரும்பணியையும் அவர் செய்து கொண்டு வருகிறார்.
படைப்பாக்கத்திலும் தமது தனித்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில் 'தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்' எனும் கவிதைத் தொகுப்பையும் கொண்டு வந்திருக்கிறார்.
காடு கரைகளில் சுற்றித் திரிந்து, ஆடு மாடுகளை மேய்த்துத் திரும்பி, வெயிலேறிய வெக்கையில் வியர்த்துக் கிடந்து, கரிசல் தூசுகளோடும் சம்சாரி மனிதர்களோடும் உறவாடித் தளிர்த்திருந்த தெக்கத்தி ஆத்மாக்களின் வேர்த்தடங்களைக் கவிதை மொழியில் உயிர்ப்பித்திருக்கிறார் சத்தீஸ்வரன் அவர்கள்.
வாழ்ந்த வாழ்க்கையையும், வாழ்கிற மிச்ச வாழ்வையும் பாசாங்கும் பூடகமும் ஒப்பனையும் இல்லாமல் மொழியில் தூவிடும்போது துயர்மிகு சொற்களும் அழகியலாய்ப் படைப்பாக்கம் செய்துகொள்ளும் என்பதற்கு சத்தீஸ்வரன் கவிதைகள் மிகச்சிறந்த சான்றுகளாகும்.
வெறுமையும் வெயிலும் மண்டிய ஓரக்காட்டுத் திசையின் நிலப்பரப்பான திருச்சுழி, கமுதி, வீரசோழன், நரிக்குடி, காரியாபட்டி வட்டாரத்தின் நில வரைவியலும் மனித வாழ்வும் தமிழ்ப் படைப்பு வெளியில் சொல்லிக் கொள்ளும்படியாகப் பதிவாகியிருக்கவில்லை. இந்நிலையில், அந்த வட்டாரத்தின் நிலத்தையும் அந்நிலத்தின் தற்போதைய இருப்பையும், அது சார்ந்த மனித வாழ்வின் அசலையும் கொஞ்சமும் பிசசாமல் கவிதைகளுக்குள் கொண்டு வந்து மொழியால் ஆன ஆவணமாய் ஆக்கிவிட்டிருக்கிறார் சத்தீஸ்வரன்.
தமிழ்ப் படைப்பாக்க மரபில் முதல் பொருள் எனப்படுகிற நிலமும் பொழுதும் மிக முக்கியமானவை. இந்த நிலமும் பொழுதும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறு வேறு தன்மைகளைக் கொண்டிருப்பவை. முதல் பொருளான நிலத்தில் காண்பவைதான் கருப்பொருட்கள். நிலமும் கருப்பொருளும்தான் மனித வாழ்வின் உரிப்பொருளை வடிவமைக்கின்றன. அவ்வகையில், தமது வட்டாரத்தின் முதல் பொருளையும் கருப்பொருளையும் உரிப்பொருளையும் சமகாலச் சூழலின் தன்மையோடு படைப்பாக்கம் செய்திருக்கிறார் சத்தீஸ்வரன்.
தம்மைச் சுற்றிக் கிடக்கும் ஒரு வட்டார நிலப்பரப்பில் வாழ்வோரின் மனித உள்ளுணர்வுகள், அந்த வட்டார நிலத்தின் மடியிலேதான் தவிப்பாறத் தவிக்கும். சத்தீஸ்வரனின் ஆகப்பெரும்பாலான கவிதைகள், அவரை உயிர்ப்பித்திருந்த நிலத்தின் மீதான வாழ்வின் ஏக்கத்தையும், அந்நிலத்தின் மீதான பற்றுக்கோட்டை விட்டுவிடக் கூடாது எனும் தவிப்பையும், வாழ்ந்திருந்த அந்த நிலம் மிச்சம் மீதி எதுவுமில்லாமல் சிதைக்கப்படுவதைக் கண்டு பீறீடும் கோபத்தையும், செய்வதறியாது நிற்கும் கையறு நிலையையும் புலப்படுத்தும் பாங்கில் தனித்துவத்தைக் காட்டுகின்றன.
மிகப் பருண்மையான நிலப்பரப்பில் காணலாகும் மிக நுண்ணிய கூறுகளும், கண்டும் காணாது தனித்திருக்கும் நிலத்தின் பன்மைக் கோலங்களை அடையாளப்படுத்துவதில் விரிகின்ற காட்சிப் படிமங்களும், நிலத்திற்கும் அவருக்குமிருக்கிற மிக நெருக்கமான உறவும் ஊடாட்டமும் புழுதிக் காட்டின் நிறத்தோடும் மணத்தோடும் மொழிவழியாய்க் காண்பிக்கின்றன.
தமது வட்டார நிலத்தின் உயிர்ப்பான வாகுவை, கவிதைக்குள் பாவுகிற முயற்சியில் அவரது வாழ்வும் மொழியும் மிக இலகுவாகத் துணை நிற்கின்றன. கவிதைகள் வழியாகவும் ஒரு வட்டார நிலத்தின் வரைவியலை அசலாகக் காட்சிப்படுத்திக் காண்பிக்க இயலும் என்பதைத் தமது தொகுப்பின் மூலம் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் சத்தீஸ்வரன்.
மிச்ச சொச்சமாய்க் கைவசமிருக்கும் பூர்வீக நிலத்தை இழந்து, அந்நிலத்திலிருந்து மெல்ல மெல்ல அந்நியப்படுத்தப்படும் ஆத்மாக்களின் வலிமொழியாகத்தான் சத்தீஸ்வரனின் 'தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்' அமைந்திருக்கின்றன.
"மழை மேகம்
கூடும் காலம் தேடியலைந்து நம்பிக்கையின்
கடைசித்துளியும் வற்றிப்போய் உயிரலைந்த நிலமெல்லாம் விலைசொல்லும் நிலைவந்து மேய்ச்சல் நிலம் தொலைத்த வெள்ளாட்டங்குட்டிகளை
போன விலைக்கு விற்றுவிட்டு பிழைப்பு வேண்டி நகரேகும் வழியில் ஒதுங்க
இடமற்றத் தவிப்பின் மீதேறி பொழிந்து தள்ளுமிதை
பொல்லாத வானென்று சொல்லீரோ ஊரீரே…! "
"விளைச்சல் மறந்து
காந்தும் மண்ணில்
வெறும் வயிற்றில்
வேகும் பசியாய்
வெயில் தின்று வெந்து கிடக்கும் குண்டாற்று மணற்பரப்பு மண்ணின் துயர்கள்
முள்ளாய் மாறி
காடு கரையெல்லாம்
கருவேல மரங்கள்
வெக்கையும் வேதனையும் உரிப்பொருளாக வெந்து
கறுத்த கரிசல் மண்ணில் தோண்டித் தோண்டி கற்கள் நட்டும் மண்காத்து நிற்கின்றன இன்னும் சில கோவணமிழந்த ஐயனார்சாமிகள்…"
எங்கோ தூரதேசம் தேடி
ஊரைப் புதைத்துவிட்டுப் போனதனால்
உல்லாங்குருவிகளின்
ஓலம் கேட்டு
ஓடிவர நாதியில்லை.
பாழுங்கிணற்றின் படிக்கல்லருகே
இற்றுவிழக் காத்திருக்கும் மரக்கிளையில் கயிறு கட்டித் தொங்கிக்கொண்டிருப்பவனின்
காய்ப்பேறிய கைகளில்
இன்னமும்கூட
மிச்சமிருக்கலாம் ஒருபிடி மண்."
"கரிச்சான்களின் சத்தங்கூட அத்துப்போன கரிசக்காட்டின் செத்த மண்ணில் வெள்ளாமையத்து
புதர் மண்டிக்கிடக்கும் சீமைக்கருவேலை
ஒரு அசப்பில்
பரட்டப் புளியமரத்தையோ கடனுக்கு அஞ்சித் தொங்கிய தொத்த சம்சாரியையோ நினைவூட்டியபடி இருக்கலாம்.
மிச்சமிருக்கும் உசுருகளை நியாபகம் வைத்துக் கொள்ள
இனி எதுக்கும் ஏலாது தோட்டந்தொரவு வித்து விலாசமத்துப் போய்
ஏதோ ஒரு நகரத்து வீதியில் நாறிக் கிடக்கிலாம்
நம் பிள்ளைகளின் பிழைப்பு."
"முச்சந்திச் சிலையென விறைத்துக் கிடக்கும்
இப்பெரு நகரத்தின்
ரேகைகளை அழித்து
சாணி மொழுகிய வாசல்களின் பூசணிப்பூ வாசம் சுமந்து வைக்கோல் போர்களின் மேலெழும்பி
வியர்வை படிந்த
புழுதி கரைத்து
அப்பாவின் கோவணம்
நனைந்து சொட்ட வார்க்காரத்தோப்பில்
மின்னல் வெட்டி ஈரம் வற்றிய நெகிழி நெஞ்சுக்குள் உயிர்ப்பூட்டிச் செல்லும் இம்மழை எனது சொந்த ஊரிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்."
இப்படியாக, பூர்வீக நிலத்திற்கும் பூர்வீக மனத்திற்கும் இடையிலான நுண் உணர்வுகளும், பூர்வீக நிலத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட அலைந்துழலும் வாழ்வின் பாடுகளும் சத்தீஸ்வரனின் கவிதைமொழிக்குள் உலவித் திரிகின்றன. குறிப்பாக, பூர்வீக நிலத்தின் கிராமிய வாழ்வின் பாடுகளும், புலம்பெயர்தலால் நேர்ந்த நகர வாழ்வின் பாடுகளும் சத்தீஸ்வரனின் கவிதைப் பாடுபொருளாய் விரிந்திருக்கின்றன. இரு வேறு நிலத்தின் வாழ்க்கைப் பாடுகள் தந்திருக்கும் மனித உள்ளுணர்வுகள் தனிமைப்பட்டும் துயர் நிரம்பியும் இருப்பதைத்தான் அவரது கவிதைச் சொற்கள் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
தமது முதல் கவிதைத் தொகுப்பின் வாயிலாகவே பக்குவமான படைப்பாக்க மொழியையும் புலப்பாட்டு நெறியையும் வெளிப்படுத்தியிருக்கும் சத்தீஸ்வரன், தமது வட்டார நிலத்தின் வரைவியலை அடுத்தடுத்த படைப்பாக்கங்கள் வாயிலாக இன்னும் வளப்படுத்துவார் எனும் பெரு நம்பிக்கையை அவரது கவிதைகள் தந்திருக்கின்றன. தமது நிலத்தைக் கவிதை மொழிக்குள் உயிர்ப்பித்திருக்கும் சத்தீஸ்வரன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.
*
தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்,
ஞா.சத்தீஸ்வரன்,
முதல் பதிப்பு 2022,
விலை உரூ 120/-
ஆம்பல் பதிப்பகம், சென்னை.
தொடர்புக்கு: 7868934995.
*
கட்டுரையாளர்:
முனைவர் ஏர் மகாராசன்.
சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக