தமிழ் தூய்மையான தென்மொழி என்றும், திராவிடம் என்பது ஆரியம் கலந்த தென்மொழிகள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். பால் தயிராய்த் திரிந்த பின் மீண்டும் பாலாகாதது போல், வட மொழி கலந்து ஆரிய மயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது.
வடமொழிக் கலப்பால் திராவிடம் உயரும்; தமிழ் தாழும். ஆதலால், வடசொல் சேரச்சேரத் திராவிடத்திற்கு உயர்வு. அது தீரத் தீரத் தமிழிற்கு உயர்வு.
திராவிடம் என்ற மொழிநிலையே வடமொழிக் கலப்பால்தான் நேர்ந்தது. அல்லாக்கால் அது கொடுந்தமிழ் என்றே பண்டுபோற் கூறப்படும். தமிழ் தனித்தியங்கும். திராவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.
இங்ஙனம் வடமொழியை நட்பாகக்கொள்ளும் திராவிடத்திற்கும், பகையாகக்கொள்ளும் தமிழிற்கும் ஒருசிறிதும் நேர்த்தம் இருக்கமுடியாது. ஆதலால், தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி, திராவிடம், திராவிடன், திராவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல்கூடாது.
திராவிடம் அரை ஆரியமும், முக்கால் ஆரியமும் ஆதலால், அதனோடு தமிழை இணைப்பின், அழுகளோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல், தமிழும் கெடும்; தமிழனும் கெடுவான். பின்பு தமிழுமிராது; தமிழனுமிரான். இந்தியா முழுவதும் ஆரியமயமாகி விடும்.
திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு என்னும் கொள்கையை விட்டுவிட்டுத் திராவிட நாடு என்னும் பொருத்தமற்றக் கொள்கையைக் கடைபிடித்துத் தமக்குத் தாமேயும் முட்டுக்கட்டை இட்டுக் கொண்டது. இது நீங்கினாலொழிய முன்னேற்றமும் வெற்றியுமில்லை. தமிழ் என்னும் சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும் திராவிடம் என்னும் சொல்லில் இல்லை.
தமிழ், சென்னையைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டில் மட்டுமுள்ளது. தமிழ் வேறு; திராவிடம் வேறு. தமிழையும் திராவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையும் கலப்பது போன்றது.
●
வடமொழி கலந்து ஆரிய மயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. திராவிடரும் மீண்டும் தமிழராக மாட்டார். அரை ஆரியமும், முக்கால் ஆரியமுமான திராவிடத்தோடு தமிழை இணைத்தால், அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் தமிழும் கெடும். தமிழனும் கெடுவான்.
தமிழ் வேறு; திராவிடம் வேறு என்பதுடன், ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக.
●
தமிழ் என்னும் சொல் தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும்.
கடல் கோளுக்குத் தப்பிய குமரிக் கண்டத் தமிழருள் ஒரு சாரர் வடக்கே செல்லச் செல்ல, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும், மொழிக் காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திராவிடமாகத் திரிந்தது. திராவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திராவிடமாய்த் திரிந்ததினாலேயே, வட நாடுகளை வேற்று மொழி நாடென்னாது “மொழி பெயர் தேயம்” என்றனர் முன்னோர். “மொழி பெயர் தேசத்தாயிராயினும்” என்பது குறுந்தொகை (11).
தமிழ் திராவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்க தமிழம் என்னும் பெயரும் திரமிளம் - த்ரமிடம் - த்ரவிடம் எனத் திரிந்தது. ஒப்பு நோக்க : தோணி - த்ரோணி (வட சொல்), பவழம் - ப்ரவாளம் (வ), பித்தளை - இத்தடி (தெலுங்கு), குமி - குலி (தமிழ்).
தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிகுந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர, சோழ, பாண்டியர் தொன்று தொட்டுத் தமிழகத்தைப் புகழ் பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது; திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திராவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேத காலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டுகட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்சீயர் தமிழிலக்கணத்தைத் “த்ராவிட சாஸ்த்ரம்” எனக் குறித்திருப்பதையும் காண்க.
திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும், தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடு கூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.
எந்நாட்டிலும் மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள் நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ் நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும். ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப்பெறுதல் வேண்டும்.
உலகின் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே. ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும் பொருட்படுத்தாது, ‘நான் தமிழன்’ என ஏக்கழுத்துடன் ஏறு போற் பீடு நடை நடக்க, தாழ்வுணர்ச்சி நீங்குத் தகைமைக் கட்டங்கிற்றே வாழ்வுயர்ச்சி காணும் வழி. தமிழ் வாழ்க!
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…
*
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக