வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

சோ.தர்மன் கவிதைகள்: தமிழ் இலக்கிய மரபின் நவீனப் புலப்பாடு - மகாராசன்


தமிழ் நிலத்தின் தெக்கத்திக் கரிசல் வட்டாரச் சமூக வாழ்வியலையும், அந்நிலத்தின் பண்பாட்டு வரைவியலையும் தமது கதைப் படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள்.

வேளாண் மரபும், கூத்து மரபும், எழுத்து மரபும் சார்ந்த வாழ்வியல் பின்புலமானது திரு சோ.தர்மன் அவர்களைத் தமிழ் இலக்கியப் பேருலகில் மிகச் சிறந்த படைப்பாளியாக மிளிரச் செய்திருக்கிறது. தூர்வை, கூகை, சூல், வௌவால் தேசம், பதிமூனாவது மையவாடி போன்ற பெருங்கதைப் புனைவுகளின் வழியாகவும், பல்வேறு சிறுகதைகளின் வாயிலாகவும் தேர்ந்த கதைசொல்லியாகத் தமிழ்ச் சமூகத்தில் அறியப்பட்டிருக்கும் திரு சோ.தர்மன் அவர்கள், பல்வேறு நாடகப் பனுவல்களையும் எழுதியிருக்கிறார். வானொலி நாடகங்களாகவும் அவை ஒலிபரப்பாகி இருக்கின்றன. 

விவசாயி, பஞ்சாலைத் தொழிலாளி, தொழிற்சங்கவாதி, கதையாசிரியர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், பண்பாட்டு வழக்காற்று ஆய்வாளர் எனும் பன்முகப் பரிமாணங்களோடு திகழும் திரு சோ.தர்மன் அவர்கள், தமிழ் மரபின் சாயலை உள்வாங்கிய நவீனக் கவிதைகளையும் அவ்வப்போது எழுதியிருக்கிறார். அவ்வகையில், கவிஞர் எனும் பரிமாணத்தையும் உள்பொதித்து வைத்திருந்தவர்தான் திரு சோ.தர்மன் அவர்கள். 

தமிழில் அறியப்படும் பெரும்பாலான எழுத்தாளர்கள் கவிதை எனும் வடிவத்தில்தான் முதலில் எழுதத் தொடங்கியிருப்பார்கள். அதன்பிறகுதான் சிறுகதை, புதினம் எனப் புனைகதை வடிவங்களில் நுழைந்திருப்பார்கள். அவ்வாறுதான் திரு சோ.தர்மன் அவர்களும் எழுத்துலகிற்குள் நுழையும்போது கவிதை எனும் வடிவத்தில்தான் எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆனாலும், கவிதை வடிவத்தைக் காட்டிலும் கதை சொல்லல் வடிவம்தான் அவரது படைப்பாக்கங்களை வளப்படுத்துவதற்குத் தோதாக அமைந்திருக்கிறது எனக் கருதியிருக்கிறார். அதாவது, கவிதையில் சொல்ல முடியாததைச் சிறுகதையிலும், சிறுகதையில் சொல்ல முடியாததைப் பெருங்கதைகளிலும் சொல்வதற்கான விரிந்த பரப்பும் சுதந்திரமும் இருக்கின்ற காரணத்தால், கவிதைப் படைப்புகளைக் காட்டிலும் புனைகதைப் படைப்புகளை எழுதுவதற்குத்தான் முக்கியத்துவம் அளித்திருக்கிறார். 

இதைக் குறித்து அவர் கூறுகையில், "எல்லோரும்போல நானும் கவிதைகள்தான் எழுதிக் கொண்டிருந்தேன். இளம் வயது. அந்தநேரம் வயதுக்கேற்ற கவிதைகளைத்தான் எழுதினேன். கவிதை என்றால் என்ன என்று தெரியாமலேயே நான் கவிதை எழுதிக்கொண்டே இருந்தேன். இருபத்தைந்து வயதில் காதல் கவிதைகளும் இயற்கை வருணனைகளும்தான் எழுத முடிந்தது. என்னுடைய வாசிப்பு அதிகமாக அதிகமாக நான் நினைத்ததைக் கவிதையில் சொல்ல முடியாத ஒரு சூழல் உருவாகியது" என்கிறார். 

மேலும், சங்க இலக்கியங்கள் படித்த பிறகு நாம் எழுதினதெல்லாம் கவிதையா? என்று நினைக்கத் தோன்றியது. கவிதைகள் எவ்வளவு பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றைக்கு, பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் வர்ணிப்பதுதான் கவிதையாக இருக்கிறது. அதனால்தான் நான் கவிதையை விட்டுவிட்டுக் கதைக்குள் சென்றேன். உரைநடைக்குள் போனால் நமக்கு விசாலமான இடம் கிடைக்கிறது. கவிதையில் சொல்வதைவிட சிறுகதையில் நாம் நிறையச் சொல்லலாம்" என்கிறார். 

தினமணி, தினக்கதிர், நீலக்குயில், ஆனந்த விகடன், அக்கு, ழகரம், சதங்கை போன்ற இதழ்களில் தொடக்க காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. ஆயினும், அக்காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் யாவும் அவரது கைவசத்தில்கூட இல்லாமல் போயின. புனைகதை எழுத்துகளில் தீவிரம் காட்டியபிறகு எப்போதாவது அவர் எழுதிய கவிதைகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் வந்திருக்கிறார். 

திரு சோ.தர்மன் அவர்களது புனைகதை எழுத்துகளையும், சமூக ஊடகங்களில் அவர் பதிவிடும் கருத்துகளையும், அவரது சொற்பொழிவுகளையும் ஒருசேரக் கவனிக்கையில், அவ்வப்போது அவர் எழுதிய கவிதைகளும் தனித்துவச் சாயல் கொண்ட புலப்பாட்டுத் தொனியையும், கவிதைப் பொருண்மையின் ஆழத்தையும் கொண்டிருப்பதை உணர முடியும்.

புனைகதை எழுத்துகளில் அவர் விவரிக்கும் கதைக்களமும் கதை மாந்தர்களும் வாழ்க்கைப்பாடுகளும்தான் அவரது கவிதைகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. அவர் வாழும் நிலமும் அவரது அனுபவங்களுமே அவரது கவிதையின் பாடுபொருளாய் விரிந்திருக்கின்றன. அவரது ஒவ்வொரு கதைகளையும் படித்த பிறகு ஏற்படுகிற வாசிப்பு உணர்வின் மனநிறைவும் அனுபவப்பாடுகளின் உள்வாங்கலும் அவரது கவிதைகளைப் படிக்கிறபோதும் ஏற்படுகின்றன. எனினும், கவிதை எனும் இலக்கிய வடிவத்திற்கான பொருண்மைச் செறிவும், மனித வாழ்வின் அனுபவப் போக்கைக் குறித்தத் தத்துவச் செறிவும் உள்ளீடாகப் பரவிக் கிடக்கின்றன.

திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகள் யாவற்றையும் ஒருசேர வாசிக்கும்போது, அக்கவிதைகள் யாவும் தமிழ்த் திணை இலக்கிய மரபின் நவீனக் கவிதை வடிவமாய் இருப்பதை அறிய முடியும். அவ்வகையில், தமிழ் இலக்கிய மரபின் வேரும் நவீன இலக்கியத்தின் துளிருமாய் அவரது கவிதைகள் மனித வாழ்வின் பச்சையத்தைப் பேசுகின்றன.

தமிழ்க் கலை இலக்கிய மரபானது, பன்மைத் தன்மைகளை உள்ளீடாகக் கொண்டிருக்கும் தனித்துவம் நிரம்பியது. மேலும், ஒற்றைத் தன்மையோ அல்லது ஒரு போக்குத் தன்மையோ கொண்டிராமல், பன்முக மரபுகளையும் செழிக்கச் செய்திருக்கும் நெடிய வரலாற்றையும் கொண்டிருப்பதாகும்.

நிலம் சார்ந்த பல்வேறு வட்டார மரபுகளையும், தொழில் வழக்காறுகளையும், அனுபவப்பாடுகள் நிரம்பிய மனித வாழ்வியலையும், பல்வேறு வகைப்பட்ட மனித உணர்வுகளையும், சமூகப் பண்பாட்டுக் கோலங்களையும் கலை இலக்கியப் படைப்புகளாக வடிவமைக்கும்போது, அவற்றின் உள்ளடக்கம், உள்ளடக்கத்தில் வருகிற மனித வாழ்வியல், வெளிப்பாட்டு வடிவம், படைப்புக் கண்ணோட்டம் போன்றவை இருவேறு புலப்பாட்டு நெறிகளை உருவாக்கியிருக்கின்றன. 

அதாவது, வாய்மொழி நிகழ்த்து வடிவங்களைக் கொண்ட நாட்டுப்புறப் படைப்பாக்க மரபுகளாகவும், எழுத்து வடிவங்களால் நிலைப்படுத்தப்பட்ட செவ்வியல் படைப்பாக்க மரபுகளாகவும் வடிவமைந்திருக்கின்றன. அவ்வகையில், வாய்மொழி மரபிலும் எழுத்து மரபிலும் செழித்து வளா்ந்து கொண்டிருக்கும் பாங்கை, தமிழ் கொண்டிருக்கிறது. 

இத்தகைய இருவேறு மரபுகளும் இணைகோட்டு மரபாகவும், கலை இலக்கியக் கோட்பாட்டு மரபாகவும்கூட செழுமையடைந்திருக்கின்றன. இத்தகைய இருவேறு மரபுகளைத்தான்

''நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்''

என்கிறது தொல்காப்பியம். 

மேற்குறித்த சூத்திரத்திற்கு உரையெழுதும் இளம்பூரணர், "நாடக வழக்காவது சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். உலகியல் வழக்காவது உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது" எனக் கூறுகின்றார்.

மனித வாழ்வின் அகப்பாடுகளையும், மனிதரைச் சூழ்ந்திருக்கும் புறவுலகையும் புலப்படுத்துவதுதான் இலக்கியப் படைப்பின் மூலப்பொருள் ஆகும். இத்தகைய இலக்கியத்தைப் புனைவாகவும் புனைவுமொழியிலும் புலப்படுத்துவதை 'நாடக வழக்கு' என்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய நாடக வழக்கானது செய்யுள் மொழியாகவும், பிற்காலத்தில் புனைவுமொழியாகவும் வடிவமைந்திருப்பதைக் குறிக்கிறது. 'உலகியல் வழக்கு' என்பது, மனித வாழ்வியலை உள்ளதை உள்ளபடியாகப் புலப்படுத்தும் நடப்பியல் தன்மையையும் பேச்சுவழக்கு மொழி வடிவத்தையும் குறிப்பதாகக் கருதலாம்.

மக்களின் வாழ்க்கையில் காணப்பெறும் பேச்சு வழக்கும், புனையப்படும் செய்யுள் வழக்கும் இலக்கியத்தில் பதிவாகின்றன. அதனால் இலக்கியத்தில் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கலந்து காணப்பெறுகின்றன. இத்தகைய நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும் உருவாக்கப்படும் இலக்கியப் படைப்பாக்கத்தையே 'புலனெறி வழக்கம்' எனச் சுட்டுகின்றனர் தமிழ் இலக்கண மரபினர்.

புலம், புலன், புலனெறி, புலமை, புலவர், புலயர் போன்ற சொற்கள் நிலம், ஐம்புலன்கள், அறிவு போன்ற பொருண்மையைச் சுட்டக்கூடியவை. நிலம் சார்ந்த பின்புலத்தில் பெறப்பட்ட ஐம்புல நுகர்வைப் புலப்படுத்தும் மன அறிவே புலனெறி என்பதாகும். 

இத்தகைய அறிவால் படைக்கப்படும் இலக்கிய இலக்கணப் படைப்பாக்க நெறியே 'நூலறிவுப் புலம்' எனப்படுகிறது. நூலறிவுப் புலத்தை வளர்த்துக் கொண்டவரே புலவர். புலவர்களின் படைப்பாக்கத் திறமே புலமையாகும். அத்தகுப் புலமையால் படைக்கப்படும் இலக்கிய இலக்கணங்கள் யாவும் புலம் - புலன் என்பதாகும். அதனால்தான், ''புலன் நன்குணர்ந்த புலமையோரே'' எனத் தொல்காப்பியரும்,

''புலம் தொகுத்தோனே போக்கறு பனுவல்'' எனப் பனம்பரனாரும் சுட்டுகின்றனர்.

'புலன்' என்னும் இந்தச் சொல் இலக்கிய இலக்கண நூலறிவைக் குறிக்கும் அதேவேளையில், செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகவும் குறிக்கப்படுகிறது. ''சேரி மொழியாற் செவ்விதின் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலனென மொழிப புலனுணர்ந்தோரே'' என, எட்டுவகை இலக்கிய வனப்புகளுள் ஒன்றாகப் புலன் என்பதையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

இந்த நூற்பாவின் முதல் சீரினைத் 'தெரிந்த' என்ற சொல்லாகப் பாடம் கொள்கிறார் இளம்பூரணர். 'தெரிந்த மொழியால்' என்று பாடங்கொண்டதைப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் 'சேரி மொழியால்' என்றே பாடங்கொள்கின்றனர்.

இந்த நூற்பாவிற்கு உரையெழுதும் இளம்பூரணர், "வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு, ஆராய வேண்டாமல் பொருள் தோன்றுவது புலனென்னும் செய்யுள் என்று உரைக்கின்றார். அதேபோல, செவ்விதாகக் கூறி, ஆராய்ந்து காணாமைப் பொருள் தொடரானே தொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர். அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன என்பது கண்டு கொள்க" என்று உரை விளக்கம் தருகின்றார் பேராசிரியர். இக்கருத்தை வழிமொழிந்தேதான் நச்சினார்க்கினியரின் உரைக் கருத்தும் அமைந்திருக்கிறது.

அதாவது, "செவ்விதாகக் கூறப்பட்டு, ஆராய்ந்து காணாமை, பொருள் தானே தோன்றச் செய்வது புலனென்று கூறுவார் அறிவறிந்தோர். அவை விளக்கத்தார் கூத்து முதலிய வெண்டுறைச் செய்யுளென்று கொள்க" என்று பேராசிரியரின் கருத்தை ஒட்டியே பொருள் உரைக்கின்றார் நச்சினார்க்கினியர்.

மேலும், "பலருக்கும் தெரிந்த வழக்குச் சொல்லினாலே செவ்விதாகத் தொடுக்கப்பட்டு, குறித்த பொருள் இதுவென ஆராய வேண்டாமல், தானே விளங்கத் தோன்றுவது புலன் என்னும் வனப்புடைய செய்யுளாம் என்பர் இலக்கண நூலுணர்ந்த ஆசிரியர்கள்" என்று ஆய்வுரை வழங்குகின்றார் க.வெள்ளைவாரணர்.

புலன் என்பதற்குத் தொல்காப்பியம் தருகிற கருத்தும், அந்நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் தந்திருக்கிற உரைக் கருத்துகளும் உலகியல் வழக்கான பேச்சு வழக்கைத்தான் குறிக்க வருகின்றன. அதிலும் குறிப்பாக, வட்டார வழக்கு, சிற்றூர்ப் பேச்சு வழக்கு, கிராமிய வழக்கு எனப்படுகிற நாட்டுப்புற வழக்கு என்பதைத்தான் குறிப்பதாகக் கருத முடிகிறது. அந்தவகையில், புலன் என்பது எல்லோர்க்கும் பொருள் தெரிந்த சொல்லால் அமைக்கப்படும் இலக்கியம் என்பதாகக் கொள்ளலாம். தமிழ்ச் சிற்றிலக்கிய வகையில் ஒன்றாகக் குறிக்கப்படும் பள்ளு நூல்கள் அனைத்தும் புலன் என்னும் வனப்பைச் சார்ந்த இலக்கியங்கள்தான். பெரும்பான்மை மக்கள் மொழியிலும் வட்டாரத் தன்மையிலும் அமைந்திருக்கும் நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் யாவுமே புலன் என்னும் இலக்கிய வனப்பின் விளைச்சல்கள்தான்.

மேலும், "புலனென்பது, இயற்சொல்லால் பொருள் தோன்றச் செய்யப்படும் பாட்டு" என்று யாப்பருங்கலவிருத்தி ஆசிரியர் அமிதசாகரர் மொழிகின்றார். அதாவது, உலகியல் வழக்கில் இயம்பும் சொற்களால் இயற்றப்படும் இலக்கிய வனப்பே புலன் என்பதாகும். அவ்வகையில், திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகள் யாவும் தமிழ் இலக்கிய மரபின் 'புலன்' எனும் வனப்பைச் சார்ந்தவையாக முகம் காட்டுகின்றன. அதாவது, தற்காலத்திய நவீனக் கவிதைகளில் பெரும்பான்மையாகத் தென்படுகிற இருண்மையோ, பூடகமோ, ஒளிவுமறைவோ, பாசாங்குத்தனமோ எதுவுமின்றி, மிக எளிமையான புலப்பாட்டு நெறிகளைக்கொண்ட நவீனக் கவிதைகளாகத்தான் அவரது கவிதைகள் வடிவமைந்திருக்கின்றன. 

எளிமை மிக இயல்பானது; நுட்பமானது; அழகானது. வாய்மொழி இலக்கிய மரபில் காணப்படுகிற பாட்டுகளும் கதைகளும் பழமொழிகளும் இன்ன பிற நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் யாவுமே எளிமையானதும் நுட்பமானதுமான மொழிப் புலப்பாட்டையும் அழகியலையும் கொண்டிருப்பவை. அதேபோன்றுதான், திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகளும் வெள்ளந்தியாகவும் வாஞ்சையாகவும் எளிமையாகவும் அமைந்திருக்கின்றன. மேலும், திரு சோ.தர்மன் அவர்களின் கவிதை மொழியானது, தனித்துவக் கவிதை அழகியல் வடிவத்தையும் நுட்பமான பொருண்மை ஆழத்தையும் பெற்றிருக்கிறது. 

தொல்காப்பியம் குறிப்பிடுகிற 'நாடக வழக்கு' என்பதற்குப் புனைவுச் செய்யுள் அல்லது புனைவுமொழி இலக்கியம் என்பதான பொருளில்தான் உரையாசிரியர்கள் எடுத்துரைக்கின்றனர். நாடக வழக்கு என்பதை, நாடக நிகழ்த்து வடிவங்களில் இடம்பெறுகிற 'உரையாடல் பாங்கு' அல்லது 'உரையாடல் வடிவம்' என்பதாகவும் பொருள் கொள்ள வாய்ப்புண்டு. உலகியல் வழக்கு என்பதற்கும், புலன் என்பதற்கும் விளக்கமளிக்கும் உரையாசிரியர்கள், அதற்குச் சான்றாக 'விளக்கத்தார் கூத்து' எனும் நிகழ்த்துப் பனுவல் ஒன்றைச் சுட்டுகின்றனர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிடும் விளக்கத்தார் கூத்து என்பது, அவர்கள் காலத்தில் வழக்கிலிருந்த நாடகச் செய்யுள் நூலாக இருந்திருக்கிறது. அக்கூத்து நூல் எல்லோர்க்கும் பொருள் இனிது புலனாகியிருக்கிறது.  

திரு சோ.தர்மன் அவர்களது பெரும்பாலான கவிதைகள், நாடகக்கலை மரபிலும் கூத்துக் கலை மரபிலும் இடம்பெறுகிற உரையாடல் பாங்கு வடிவத்திலேயே அமைந்திருக்கின்றன. கூத்து மற்றும் நாடக நிகழ்த்து மரபில் இடம்பெறுகிற நடிப்புக் கூறுகள் நிகழ்த்துக் கலை வடிவத்தையும், அவற்றில் இடம்பெறுகிற உரையாடல் பகுதிகள் இலக்கியக் கலை வடிவத்தையும் ஒருசேரக் கொண்டிருப்பவை. நாடக மற்றும் கூத்துக் கலை மரபில் இடம்பெறுகிற கதைமாந்தர்களின் உரையாடல் பாங்கு வடிவத்தை இலக்கியப் படைப்பாக்கத்தில் பயன்படுத்துகிறபோது இலக்கியப் பனுவலும் ஓர் நிகழ்த்துப் பனுவலாய் வடிவம் கொள்கிறது. அதாவது, கவிதைக்குள் இடம்பெறும் உரையாடல்கள், கவிதை எனும் இலக்கியப் பனுவலை நிகழ்த்துப் பனுவலாகவும் மாற்றிவிடுகின்றன. 

திரு சோ.தர்மன் அவர்களது பெரும்பாலான கவிதைகள், கவிதை எனும் இலக்கியப் பனுவலாகவும் இருக்கின்றன; கவிதைகளுக்குள் இடம்பெறும் உரையாடல்கள் நிறைந்த நிகழ்த்துப் பனுவலாகவும் அமைந்திருக்கின்றன. அவரது இளவயதுக் காலகட்டத்தில் அமையப்பெற்ற கூத்து மரபின் பின்புலச் சூழல்தான், கவிதைகளுக்குள் உரையாடல் பாங்கு இடம்பெற்றதற்கான காரணமாக அமைந்திருக்கக் கூடும்.

வேளாண் தொழில் மரபோடு கூத்து மரபும் ஊடாடிக் கிடந்த தமது குடும்பப் பின்புலம் குறித்து அவர் கூறும் பகுதிகள் இங்கு கவனிக்கத்தக்கவை. "கூத்துக் கலையைப் பார்க்க எனது பதின்மூன்று வயதுவரை வாய்ப்புக் கிடைத்துக் கொண்டே இருந்தது. எனது தந்தை என்னை சிறுவயதிலேயே கூத்து நடக்கும் இடத்திற்கெல்லாம் அழைத்துக்கொண்டு போய் நடிப்பார். எல்லா ஊர்களுக்கும் போவார்கள். அவர்கள் ஆடும் ஆட்டம், காட்சி, பாடல்கள் எல்லாமே சேர்ந்துதான் எனக்குள் வாசிப்பிற்கு உண்டான விதை விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களின் கூத்துக் கலையை எனது பதின்மூன்றாவது வயதிற்குப்பின் நிறுத்தி விட்டார்கள். அப்போது என் மனதிற்குள் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த வெற்றிடம்தான் என்னை வாசிப்பிற்குள் நுழைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த உலகத்தில் யாருக்குமே கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம். நான் ராமனின் தோள்களில் பயணப்பட்டிருக்கேன். சீதையின் மடியில் படுத்து உறங்கியிருக்கேன். அனுமனின் விகார முகமும் நீண்ட வாலும், மாயமான் மாரீசனின் கொம்புகளும் என் விளையாட்டுப் பொருட்கள். ஒயில் கும்மி என்று சொல்லக்கூடிய ராமாயணக் கூத்தில் என் அய்யாதான் ராமர் வேசம். என் மாமா லட்சுமணன் வேசம். சின்னைய்யா சீதை வேசம். இவர்கள் தூக்கி விளையாடும் செல்லப்பிள்ளையாய் நான். கடைசிவரை கூத்தைக் கடவுளாகப் போற்றி ராமனாகவே வாழ்ந்து மறைந்தவர் என் அய்யா. அவர் என்னுள் விதைத்துச் சென்ற கதைகளையே நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கேன். 

வெற்றிலையை இரண்டாக மடித்து, காம்பு கிள்ளி, நரம்பை உரித்து, நான்காய் மடித்து, அண்ணாந்து வாயில் வைத்தவுடன் பீமனும் கீசகனும் யுத்தம் செய்யும் கதையை எங்கள் அய்யா சொல்லும் அழகே அழகு" என்கிறார்.

நாடகம் மற்றும் கூத்துக் கலை மரபில் இடம்பெறும் உரையாடல் பாங்கு, சங்க காலத் திணை இலக்கிய மரபிலும் காணக்கூடிய வடிவமாக இருக்கின்றது. அத்தகைய உரையாடல் பாங்கைத் தான் 'கூற்று முறை' எனக் குறிப்பிடுகின்றனர். சங்க கால அகப்பொருள் சார்ந்த திணைநிலைக் கவிதைகள் யாவும் கதை மாந்தர் கூற்றுகளாகவே அமைந்திருக்கும் பாங்குடன் திகழ்கின்றன.

உரையாடல் பாங்கு அல்லது கூற்று முறைப் பாங்கு, கவிதைப் புலப்பாட்டின் ஓர் உத்தி முறையாகவே பயின்று வந்திருக்கிறது. கவிதைப் படைப்பின் பொருண்மையை விளக்கப்படுத்தும் வகையில் கதை மாந்தர் கூற்றுகளாகவே தமிழ் மரபின் அகத்திணைக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. தலைவன், தலைவி, தோழி, செவிலி, பார்ப்பான், பாங்கன், பாணண், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர், ஆகிய பன்னிரு மாந்தர்கள் அகப்பொருள் கூற்று நிகழ்த்துதற்கு உரியர் என்கிறது தொல்காப்பியம். மேற்குறித்த கதை மாந்தர்கள் கூறுவது போலவே சங்க கால அகப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.

அகப்பொருள் செய்திகளைக் கதை மாந்தர் கூற்றுமுறையில் அமைத்துப் பாடும்போது, 'ஒருவர் கூற்று' முறையில் (monologue) அமைத்துப் பாடுதல், 'இருவர் தம்முள் மாறி மாறி உரையாடும்' முறையில் (Dialogue) அமைத்துப் பாடுதல் எனும் இருவகைக் கூற்று முறையில் அக்காலப் புலவர்கள் பாடியிருக்கின்றனர். ஓர் அழகிய நாடகக் காட்சியைக் கவிதைக்குள் கொண்டு வந்து நிறுத்தும்படியாகத்தான் கூற்று முறைகளும் உரையாடல் பாங்கும் அமைந்திருக்கின்றன. 

ஒருவரோ இருவரோ அல்லது பலரோ கூறுவதுபோல கவிதைக்குள் கூற்றுகள் இடம்பெறலாம். எனினும், இருவரோ அல்லது ஒருவரோ கூறுவதுபோல கவிதை அமைவதும், குறைந்தளவு ஒருவரது கூற்றாவது அகப்பொருள் கவிதையில் அமைவதும் சிறப்பாகக் கருதப்பட்டிருக்கிறது. சங்க கால அகப்பாடல்கள் பலவும் 'ஒருவர் கூற்று' முறையில் அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஒரு கூற்று முறையில் அமைந்த கவிதைகளை ''நாடகத் தனிக்கூற்று வகைப் பாடல்கள் (Dramatic Monologues)" என்கிறார் அறிஞர் மு.வரதராசனார்.

சங்க கால அகப்பொருள் இலக்கியப் புலப்பாட்டு நெறியான கூற்று முறை உரையாடல் பாங்கிலான கவிதைகளின் நவீன வடிவமாகத்தான் திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகளும் அமைந்திருக்கின்றன. அகப்பொருளை மட்டுமல்ல, சமூக வாழ்வின் புறப்பொருளையும்கூட கூற்று முறை உரையாடல் பாங்கிலான கவிதை வடிவத்தில் புலப்படுத்தியிருக்கிறார். இத்தகையப் புலப்பாட்டு நெறிதான் இவரது கவிதைகளின் தனித்துவ வடிவமாக அமைந்திருப்பது நோக்கத்தக்கதாகும்.

நாடக உரையாடல் பாங்கில் அமைந்திருக்கும் அகத்திணைக் கவிதைகளின் குறிப்பான தன்மை  

"சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்" என்பதாகும். அதாவது, கவிதையை வாசிக்கிற ஒருவர் இந்தக் கவிதை இன்னாருடைய அனுபவம்; இன்னாரைப் பற்றியது என்பதான தரவுகளைப் பெற்றுவிடக் கூடாது. மாறாக, கவிதையில் பதியம் போட்ட உணர்வுகளை வாசகரும் உள்வாங்கி அசைபோட்டுக் கொள்கிற வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும். இதையே 'அகப்பொருள் மரபு' என்கிறார்கள். அகப்பொருள் மரபில் கவிதைகளைப் பின்னுகிறபோது பல்வேறு உத்திகளைப் படைப்பாளர்கள் கையாண்டுள்ளனர்.  

அகப்பொருள் மரபிற்கெனச் சில இலக்கிய உத்திகளை இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சங்ககால அகத்திணைக் கவிதைகள் வேறு வேறு பொருள்கோடலுக்கும் வழிவகுப்பதாக 'அகப்பொருள் உத்திகள்' அமைந்திருக்கின்றன. அவற்றுள் 'உள்ளுறை' மற்றும் 'இறைச்சி' ஆகியன குறிப்பிடத்தக்கவை.

"உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிக" எனச் சொல்வது உள்ளுறை உத்தி. அதேபோல,

"இறைச்சிதானே பொருட் புறத்ததுவே" எனவும் சுட்டுகிறது தொல்காப்பியம். அதாவது, கவிதையின் நேரடிப் பொருள் என ஒன்று இருக்கும். அக்கவிதைவழிப் பெற்றுக்கொள்கிற மறைபொருள் வேறொன்றாக அமைந்திருக்கும். பொதுவாகவே சில சொற்கள் மேலோட்டமான பொருளையும் (Surface meaning) உள்ளீடான பொருளையும் (Deep Meaning) கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அகத்திணைக் கவிதைகள் பெரும்பாலும் வேறொன்றைச் சொல்லி, குறிப்பானதை விளக்கி நிற்கும் நுட்பம் கொண்டவை. இந்த இலக்கிய நுட்பத்திற்குத் துணை செய்யும் வகையிலே 'முதற்பொருள்' எனப்பெறும் 'நிலங்களும் பொழுதுகளும்' கவிதையில் பயின்று வரும். அதேபோல, நிலத்திலே காணலாகும் உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களும் பரவி நிற்கும். இதைக் 'கருப்பொருள்' என்கிறார்கள். ஆக, முதற்பொருளும் கருப்பொருளும் இணைந்த 'இயற்கைப் பின்னணி' அகத்திணைக் கவிதைகளுக்கு உயிர் கொடுப்பதாக அமைந்திருக்கிறது.  

இயற்கைப் பின்னணி மூலமாகக் கவிதை செதுக்கி, மனிதர்க்கு உரித்தான செய்தியைச் சொல்கிறபோது 'உரிப்பொருள்' என்றாகிறது. ஆகக்கூடி, சங்க காலத்திய அகத்திணைக் கவிதைகள் யாவும் அய்ந்துவகை உரிப்பொருள்களைத் தன்வயம் கொண்டிருக்கின்றன. அக்கவிதைகள் கட்டியெழுப்பிய சொல்லாடல்களைக் கடந்து ஊடிழையாடிப் பார்க்கும்போது கவிதையின் நேரடிப் பொருளிலிருந்து வேறொன்றைப் புரிந்து கொள்ள முடியும்.

திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகள் நவீன வாழ்வின் போக்குகளையும், மனித அனுபவங்களையும்தான் பேசுபொருளாக முன்வைத்திருக்கின்றன. கரிசல் வட்டாரத்தின் நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாகக் கொண்டு, அவ்வட்டாரத்தின் உயிர்ப் பொருட்களையும் உயிரற்ற பொருட்களையும் கருப்பொருளாகக் கொண்டு, அவற்றின் மூலமாக ஒவ்வொரு கவிதையின் வாயிலாகவும் ஓர் உரிப்பொருளைப் புலப்படுத்துகிறார் திரு சோ.தர்மன்.

தாம் வாழும் வட்டார நிலம், குளங்கள், கண்மாய்கள், நீர்நிலைகளில் வாழும் மீன்கள் மற்றும் பறவைகள், வெள்ளாமைப் பயிர்கள், குளக்கரை மரங்கள் மற்றும் தெய்வங்கள், தம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் யாவற்றோடும் உரையாடும் தொனியில் கூற்று முறையில் அமைந்த உரையாடல் பாங்கைத் தம் கவிதைகள் முழுக்கக் கையாண்டிருக்கிறார். 

நாடகக் காட்சியாய் விரியும் அவரது கவிதைகள் நவீனக் கவிதைக்கான படிமங்களைக் காட்டுகின்றன. அக்கவிதைகளில் பொதிந்திருக்கும் உள்ளீடான பொருண்மைகள் குறியீட்டுத் தன்மையுடனும் நவீனம் பெற்றிருக்கின்றன. அதாவது, திரு சோ.தர்மன் அவர்களது 

கவிதைகள் உரையாடல் பாங்கிலான கூற்றுகளையும், காட்சிப் படிமங்களையும், குறியீட்டுப் பொருண்மைகளையும் கொண்ட கவிதை வடிவத்துக்குள் நவீன வாழ்வின் போக்கைக் குறித்த எளிய தத்துவம் போல் போதித்துச் செல்கின்கின்றன.

அகம் சார்ந்ததாகவோ அல்லது புறம் சார்ந்ததாகவோ அல்லது எழுத்து மரபு சார்ந்ததாகவோ அல்லது வாய்மொழி மரபு சார்ந்ததாகவோ உருவாக்கம் பெறுகிற கவிதை அல்லது "இலக்கியம் என்பது, எந்தக் காலத்திலும் நுாற்றுக்கு நுாறு வீதம் நேரடியான சமுதாயச் சித்திரம் அன்று. புற உலகை அதாவது, காட்சிகளையும் அனுபவங்களையும் எழுத்தாளர் அப்படியே சொல்லில் வடிப்பதில்லை. அனுபவ முழுமையிலிருந்து தற்செயலான, மேம்போக்கான அம்சங்களையெல்லாம் நீக்கிவிட்டு, அடிப்படையான சாராம்சத்தை அக உணா்வில் உரைத்து வகைமாதிரிக்குப் பொருத்தமான வடிவத்தில் உருவாக்குகின்றனர். இன்னொரு விதமாய்க் கூறுவதாயின், ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள் புறநிலைப்பட்ட எதார்த்தத்தை அகநிலைப்பட்ட எதார்த்தமாக மாற்றியமைக்கின்றனா். 

மனிதனின் சமூக வாழ்க்கையே கலை இலக்கியம் அனைத்திற்கும் ஒரே அடிப்படையாய் இருப்பினும், அவை உருவாக்கிக் காட்டும் வாழ்க்கை கண்ணாரக் காணும் வாழ்க்கையைவிட வளமிக்கதாயும் உயிர்த் துடிப்புள்ளதாயும் அமைந்து விடுகிறது. வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் உள்ள சிறப்பான உறவு இதுதான்" என, இலக்கியத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். கவிதை உள்ளிட்ட எந்தவோர் இலக்கிப் படைப்புக்கும் உருவாக்கத்திற்கும் உள்ள நெய்திடும் உறவு இதுதான்.  

ஆக, அகம் சார்ந்தோ அல்லது புறம் சார்ந்தோ உருவாக்கம் பெறுகிற கவிதை அல்லது இலக்கியமானது வாழ்வியல் சார்ந்தது எனினும், நடப்பியல் சார்ந்தோ அல்லது புனைவு சார்ந்தோ வெளிப்படுத்தப்படுவது என்றாலும், மொழியால் ஒப்பனை பெறுகிற கலை வடிவமாகவே முகம் காட்டுகிறது எனலாம்.  

பெருமரத்தின் தளிர் நுனிக்கும், மண்ணுக்குள் புதைந்திருக்கும் வோ்களின் நுனி முடிச்சுகளுக்கும் ஒரு தொடுப்பு இருப்பதைப்போல, மரபுக்கும் நவீனத்திற்கும் தொடுப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் மொழியே வளப்பமுடன் செழிக்கும். அவ்வகையில், தமிழ் இலக்கிய மரபுக்கும் நவீனத்திற்கும் ஊடாடிப் பயணிக்கும் வாய்ப்பைத் தருவதாக திரு சோ.தர்மன் கவிதைகள் அமைந்திருக்கின்றன.

எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களது கதைப் படைப்புகளில் விரிந்து கிடக்கும் படைப்புலக மனிதர்களோடு வாழ்ந்திருக்கிறேன். அவரது கலை, இலக்கியம், சமூகச் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்தும் படித்தும் வருகிறேன். அவரது எழுத்துகள் எமக்கான படைப்புலக் கிளர்ச்சியையும் வாசிப்பின் நிறைவையும் தருகின்ற மிக நெருக்கமான எழுத்துகள். அவற்றைப் போலவே, அவரது கவிதைகளும் அவரது படைப்புப் பரிமாணத்தைக் காட்டுவதோடு தனித்துவக் கவிதை அழகியலையும் கொண்டிருப்பவை. 

திரு. சோ.தர்மன் அவர்களது புனைகதைப் படைப்புகள் நூல்களாக வந்திருப்பதைப் போலவே, அவரது கவிதைகளும் நூலாக வெளிவரவேண்டும் எனும் பெருவிருப்பத்தை அவரிடம் தெரிவித்தபோது, "அதெல்லாம் கவிதையா என்பது தெரியாது. கவிதையில் பெரிதாக நாட்டமில்லை" என, கவிதை நூல் வெளியீடு பற்றிய தமது தயக்கத்தைத் தெரிவித்தார். எனினும், அவரது கவிதைகள் நூலாக வெளிவரவேண்டும் எனும் எமது பிடிவாதப் பேரன்பையும் வேண்டுகோளையும் தயக்கத்துடனே ஏற்றுக்கொண்டார். 

அவர் எழுதிய கவிதைகள் யாவற்றையும் தெரிவுசெய்து, செப்பமாக்கித் தொகுத்து, கவிதை நூல் வடிவத்தில் அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதைப் பார்த்த பிறகுதான், கவிதைகள் யாவற்றையும் ஒருசேரக் கண்ட பிறகுதான் முழு மனநிறைவோடு தமது கவிதைகள் நூலாக்கம் பெறுவதற்கான இசைவைத் தந்தார் திரு சோ.தர்மன். 

சோ.தர்மன் கவிதைகள் எனும் இந்நூலை, தெரிவும் தொகுப்பும் செய்து பதிப்பித்துக் கொண்டுவருவதற்குக் கனிவுடன் இசைவளித்த திரு சோ.தர்மன் அவர்களுக்குப் பேரன்பையும் நன்றியையும் உரித்தாக்கி மகிழ்கிறேன்.

இந்நூலை, யாப்பு வெளியீடாகப் பதிப்பித்திருக்கும் திரு செந்தில் வரதவேல் அவர்களுக்கும், இந்நூலினை அழகுடன் வடிவமைப்பு செய்து தந்த திரு பிரபாகர் அவர்களுக்கும் மிக்க நன்றியும் அன்பும்.

திரு சோ.தர்மன் அவர்களது புனைகதை எழுத்துகளைக் கொண்டாடும் தமிழ்கூறும் நல்லுலகம், அவரது கவிதைகளையும் கொண்டாடும்; கொண்டாட வேண்டும் எனும் பெருவேட்கையோடு மட்டுமல்ல, அவரது கவிதைப் படைப்பாக்க ஆளுமையையும் தமிழ்ச் சமூகத்திற்கு அடையாளப்படுத்த வேண்டும் எனும் கடமை உணர்வோடு இந்நூலைக் கொண்டுவருவதில் நிறைவும் மகிழ்வும் அடைகிறேன்.

தோழமையுடன்,
மகாராசன்.

*

சோ.தர்மன் கவிதைகள்,
தெரிவும் தொகுப்பும்: 
மகாராசன்,
முதல் பதிப்பு: சனவரி 2024,
பக்கங்கள்: 117,
விலை: உரூ 120/-
வெளியீடு: 
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக