வெள்ளி, 21 ஜூன், 2024

அழகிய கவிதை மொழியிலான வித்தியாசமான பாடுபொருட்கள் - சிவக்குமார் கணேசன்


நிலத்தை நம்பி விவசாயம் செய்து வாழும் மக்களின் வாழ்வை, மகிழ்வை,பெருந்துயரை, மக்களின் மொழியிலேயே பதிவு செய்திருக்கிற கவிதைகளின் தொகுப்பு, மகாராசன் எழுதிய 'நிலத்தில் முளைத்த சொற்கள்'.

ஒரு கவிதையில் அவரே சொல்வதுபோல, தன் அத்தனை பாடுகளையும் கவிதைகளில் இறக்கி வைத்திருக்கிறார்.


'கல்லடுக்குகளில் செதில்களில்

வேர்களை நுழைத்தபடி 

கோபுர நிழல் மறைப்பில் 

வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது

இச்சிச் செடி'

என்று துவங்கி,


'எழுதப்படாமலே போனது 

எனதூர்த் தல புராணம்'

என்று முடிகிற, கைவிடப்பட்ட கோவிலொன்றின் துயரத்தைப் பேசுகிற கவிதையில் உணர்வுகள் கொந்தளிக்கின்றன.


'பசப்பூறிய பூனத்தின் ஈரத்தில்

நீந்தத் தவித்து

சுற்றுக்கல் புடைப்புகளில்

ஒட்டிக் கிடக்கின்றன

கெண்டை மீன்கள்'.


எத்தனை அழகிய வரிகள் இவை. வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது செடி என்று வெறுமனே குறிப்பிடாமல், இச்சிச் செடி என்று அந்தச் செடியின் பெயரைக் குறிப்பிட்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.


'வயலைப் பாழ்படுத்தி

பயிர்களைச் சாகடித்துத்தான்

விளக்கெரிய வேண்டுமெனில்

வயிறு எரிந்து சாபமிடும்

உழவர்கள் தூற்றிய மண்ணில்

எல்லாம் எரிந்து சாம்பலாகி

நாசமாய்ப் போகட்டும்'

என்கிற வரிகளில் எத்தனை தகிப்பு.


'வாழ்தலின் பேரின்பத்தை 

மணக்க மணக்கப் பாடியது 

பூப்பெய்திய காடு'

என்று அவர் சொல்கிற காடு, வனம் அல்ல. விளை நிலம்.

 

வெறுமனே துயரங்களை மட்டும் கவிதைகளில் பாடாமல்,

'இறகின் கனமும் 

பூவின் மனமும் 

அரும்பிடும் வாழ்க்கை

இனிதுதான்'

என்று நம்பிக்கை விதையையும் விதைக்கிறது ஒரு கவிதை.


பசப்படித்தது நிலம், நிலத்தாய்ச்சி, தொளி வயல், நீர் முலைத்தாய்ச்சி, வேம்பு மரத்தாய்ச்சி, பனந்தூர்க் குதுவல் மறைவு, இப்படி புதுப்புது அழகிய ஆச்சர்யமான வார்த்தைகள் கவிதைகளில் நிறைந்திருக்கின்றன.  


நாகரிகப் போர்வை போர்த்திய காட்டுமிராண்டி மனிதர்களால் கொல்லப்பட்ட அப்பாவி மது, பலிபீடத்தின் மீது அமர்ந்திருந்த பிரபாகரின் மகன் பாலச்சந்திரனின் கண்கள், காட்டுத்தீயை அணைக்கும் சிறுமழை, பொசுங்கிய வாழ்வை நினைத்துக் கால்கள் பொசுக்க நடந்த கண்ணகி, வலுக்கட்டாயமாய் வெளியேற்றப்பட்ட காடுகளின் ஆதிக்குடிகள், இலங்கையின் இறுதி யுத்தம், நல்லதொரு குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரனுக்கு நெல்லளித்து, சொல்லளந்து போட்டவனுக்கு நெல்லளந்து போடுறதுதானப்பா சம்சாரிக வாழ்க்க என்று சொல்லும் பெண், காதலற்ற முத்தங்களால் கசங்கிக் கிடக்கின்ற எச்சில் கோப்பைகள், மறைகாலத்தின் களவுப் பூ, மந்தையில் ஓரத்தில் கிடக்கிற இளவட்டக் கல், இப்படியான வித்தியாசமான பாடுபொருள்களாலான கவிதைகளின் தொகுப்பு.


முகப்புப் படமும், தொகுப்பிலுள்ள ஓவியங்களும் அழகு.


ஒரு வாசகனை, நான்காவது வரியை வாசிக்க வைப்பதுதான் இன்றைக்குப் பெரும் சிரமம் என்று நண்பர்களிடம் சொல்வேன். தொகுப்பில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை நெடுங்கவிதைகள் என்றாலும், உள்ளடக்கத்தால், அழகான கவி மொழியால், வாசிப்பவருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன.


முனைவர் மகாராசன், மதுரை சின்ன உடைப்பைச் சேர்ந்தவர். ஏர் இதழை நடத்தியவர். பெண்மொழி குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது அரசுப் பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆய்வு நூல்கள், கட்டுரை நூல்கள், உரை நூல்கள்,தொகுப்பு நூல்களை எழுதியுள்ள இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது.


கட்டுரையாளர்:

முனைவர் சிவக்குமார் கணேசன்,

கவிஞர் மற்றும் நீரியல் / பறவையியல் அறிஞர்.

மதுரை.

*

நிலத்தில் முளைத்த சொற்கள்,

மகாராசன்,

யாப்பு வெளியீடு,

பக்கங்கள் 112,

விலை ரூபாய் 100/-

நூல் வேண்டுவோர் 

தொடர்புக்கு:

90805 14506.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக