வெள்ளி, 21 ஜூன், 2024

உழுகுடிப் பாதங்களின் கொப்புளங்கள் - அய்யனார் ஈடாடி



பசப்படித்த நிலமும், ஈரம் பொதிந்த மண்ணும் சுமக்கும் வலிகளைப் பேசுகின்றன மகாராசன் எழுதிய 'நிலத்தில் முளைத்த சொற்கள்'. 

இந்நூல், இனத்தின் பசியும் நிலத்தின் வலியும் கண்களில் நீரைத் திரட்டிக் கொப்பளிக்கச் செய்கின்றன. கங்குகள் சுமக்கும் பெருங்காட்டின் வேதனைகளைச் சொல்லி மாளாது அகம் நொந்து முடிவுறாத ஒப்பாரிகளாய்ப் பாடுகின்றன.

தொல்நிலத்தின் காணிகளைப் பிடுங்கி எக்காளமிட்டுச் சிரிக்கும் முந்நிறத்துகொடி இன்றும் தூக்குக் கயிறுகளாய் எண்ணற்ற உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்பதைப் பேசுகிறது இந்நூல்‌.

தொரட்டிகளால் முறிக்கப்பட்ட எம்நிலத்தின் பூங்கிளைகளைகளுக்காக அரற்றுத் துடிக்கிறாள் நிலத்தாய்ச்சி. ஊர் தெறிக்கும் மணிக்குலவையோடு பிள்ளைமுடி வாங்கும் குடும்பச்சியின் நடுகை, நினைவுச் சுடராய் நிமிர்கின்றது.

சொல்லளந்து போட்ட குடுகுடுப்பைக்காரனுக்கு நெல்லளந்து போடும் குடும்பச்சிகளின் வெள்ளந்தி மனம், மனதை இறுகப் பற்றித் தழுவுகிறது.

ஏர் மகாராசன் அவர்களின் எழுத்துழவு நிலத்தின் பாடுகளைச் செம்மையாகப் பாடுகின்றன; சொற்கள் வெடிக்கின்றன. சங்க இலக்கியங்கள் ஆங்காங்கே அணிவகுத்து நிமிர்கின்றன.

வெடித்துச் சிதறிய நிலத்தில் மக்களின் வேதனைகள் சூட்டுக் காய்களாய்ச் சுட்டி இருக்கிறது கவிஞரின் வெள்ளந்தியான சிவந்த இதயத்தை. இன்னுமோர் தலைவனைத் தேடித்தான் அலைகிறது காய்ந்த நிலத்தின் மடி, கிடத்தி அமர்வதற்கு.

கட்டுரையாளர்:
எழுத்தாளர் அய்யனார் ஈடாடி
மதுரை.
**

நிலத்தில் முளைத்த சொற்கள்,
மகாராசன்,

யாப்பு வெளியீடு,
பக்கங்கள் 112,
விலை ரூபாய் 100/-
நூல் வேண்டுவோர் 
தொடர்புக்கு:
90805 14506.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக