புதன், 30 டிசம்பர், 2015

பெண் கதைகள் கட்டவிழ்க்கும் ஆணுலகம்

உமா மகேசுவரியின் மரப்பாச்சி கதைகளை முன் வைத்து
                                         
       தமிழ் இலக்கியத் தளத்தின் வடிவமும் உள்ளடக்கமும் காலந்தோறும் மாறியிருக்கின்றன; மாற்றம் பெற்றும் வருகின்றன.  அத்தகைய வடிவ-உள்ளடக்க மாற்றத்திற்கான சூழல்களைச் சமூகமே உருவாக்கித் தருகின்றது.  சமூகத்தில் நிலவுகின்ற கருத்தியலை அப்படியே பதிவு செய்தோ – மறுத்தோ – எதிர்த்தோ – மாற்றியோ இலக்கியமாக்கும் முயற்சிகள் வெற்றியடைவதும் தோல்வி அடைவதும் இயல்பாய் ஆகிவிட்ட ஒன்றுதான். 
   பாடுபொருள்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொண்டிருந்த தமிழ் இலக்கியத் தளம் என்பது சமகாலத்தில் விரிவடைந்திருக்கிறது.  புனைவுகளின் கோர்வைகள் மட்டுமே இலக்கியமாகாமல், மனித வாழ்வின் எதார்த்தங்கள் அதன் போக்கில் இயல்பான மொழியால் இலக்கியமாக உருக்கொள்ளும் நிலை தற்காலத்தில் ஏற்பட்டிருக்கிறது.  எதார்த்தப் படைப்புகளின் ஊடாகக் கலகத் தன்மையினையும், தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்தும் முயற்சிகளையும் பார்க்க முடிகின்றது.  இத்தகையப் போக்குகள் ஒடுக்குண்டு கிடந்து நிமிர்ந்தெழும் பெண் எழுத்துக்களிலும் வெளிப்பட்டு வருவதைக் கவனிக்கலாம்.
       தமிழ் இலக்கியப் பரப்பைப் பெரும்பாலும் ஆண்களே ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலை தற்போது மாறியிருக்கிறது.  பெண்களும் தங்களின் அறிவுத் தேடல்களை – வாழ்க்கை அனுபவங்களை மொழிப்படுத்தி வருகிறார்கள்.  ஆண் மொழிகிற எழுத்துகளிலிருந்து பெண் மொழிகிற எழுத்துகள் வேறுபட்டிருக்கின்றன. பெண் மொழிக்கான உலகம் ஆணுக்கான உலகத்திலிருந்து வேறுபடுகின்றது.  பெண் மொழியானது ஆண் உலகத்திடம் சமரசத் தன்மை கொண்டோ – புனைவுத் தன்மை கொண்டோ அணுகாமல், ஆண்மொழி கட்டமைத்து வைத்திருக்கிற ஆதிக்கக் கூறுகளை எதிர்த்துக் கலகக் குரலாய் வடிவம் கொண்டு வெளிக் கிளம்பியிருக்கிறது.  பெண்ணில் உண்டாகிற ரணங்கள், வேதனைகள், அழுகைகள், அவற்றால் ஏற்படுகிற மவுனங்கள், தனிமை, வெறுமை என எல்லாமே குருதியோடும் வியர்வையோடும் இழைந்து இழைந்து, பருப்பொருளாய் – பருப்பொருளில் இருந்து வெளிக்கிளம்பும் நுண்பொருளாய்ப் பெண் உலகம் மாறுகிறது.  அவ்வகையில், அடர்த்தியாய்ப் பரவிக் கிடக்கும் ஆணின் மொழிக்குள் ஊடுறுவி இலகுவான பெண்மொழியால் ஆணுலகத்தைக் கட்டவிழ்ப்பு செய்கின்றன  உமா மகேசுவரியின் மரப்பாச்சி சிறுகதைகள்.
       அழியாச் சோகங்களையும், பிழிந்து சக்கையாகிப்போன கனவுகளையும், விம்மிக் கொண்டிருக்கும் மவுனங்களையும் சேர்த்து, குருதியினையும் வியர்வையினையும் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குப் பெண்கள் வழியாக எடுத்துச் செல்லப்படுவதை மரப்பாச்சி கதைகள் மிக நேர்த்தியாகச் சொல்கின்றன. மரப்பாச்சி கதைகளின் மொழியாக்கம் பெண் பேச்சில் அமைந்திருக்கிறது.  வரலாற்றின் துணையோடும் பெண்ணியத்தோடும் அல்லாமல், எதார்த்தமான உலகை இயல்பான பெண் பேச்சில் அம்பலப்படுத்தும் வகையில் கதை சொல்லல் முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
       தொடக்க கால ஆதிப்பொதுவுடைமைச் சமூகத்திற்குப் பிறகு, குறிப்பாகத் தாய்வழிச் சமூகத்திற்குப் பிறகான தந்தைவழிச் சமூகம் முதற்கொண்டு  முதலாளித்துவச் சமூகம் வரைக்குமான வரலாற்றுக் கட்டமைப்புப் பின்புலத்தில் ஆணின் ஆதிக்கம் நிலவி வருகின்றது.  நிலத்தோடு பெண்ணைத் தொடர்புபடுத்திப் பார்க்கின்ற ஆணின் கருத்தியலில் பெண் என்பவர் உடைமைப் பொருளாக – உற்பத்திப் பொருளாக – நுகர்வுப் பொருளாகவே இருந்து வருகிறார். இதனால், பெண்ணின் உடல் மீது நிகழ்த்தப்படும் காயங்களால் வடுவாகிப்போன பின்பும்கூட,  அதனை மீண்டும் மீண்டும் கிளருவதன் மூலம் ஏற்படும் ரணங்களால் உண்டாகிற பெண்ணின் வலிமொழியால் கதையாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
      சமூக அமைப்புகளுக்குள்ளும் – இலக்கியத் தளத்துள்ளும் பெண்ணின் உணர்வுகள் அழுத்தமாகப் பதியாத நிலையில், மரப்பாச்சி கதைகள் முழுவதும் பெண்ணின் உணர்வுகளையே மிக அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.  இதுவரையில் நாம் கண்ட பெண் புனைவுகள் என்ற தளத்திலிருந்து விலகி, உண்மைகளைப் புரிய வைக்கின்ற தளமாக விரிந்திருப்பது மரப்பாச்சி கதைகளுக்குக் கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. பெண்ணின் அடையாளத்தையே அழித்துவிட்ட பெருஞ்சோகத்தின் முனகல் மரப்பாச்சியில் கேட்கிறது.  மொழியால் கட்டமைக்கப்பட்ட கதைகளாக அல்லாமல்,  உணர்வுகளால் கட்டமைக்கப்பட்ட கதை மொழியானது பெண்ணின் மொழியாக மரப்பாச்சியில் படிந்திருக்கிறது.
       தாய் தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய பாசம் – அன்பு – அரவணைப்பு போன்றவற்றின் போதாமை பெண்ணைத் தனிமைப்படுத்துகின்றது.  உயிருள்ள மனிதர்களிடமிருந்து எழவேண்டிய உணர்வுப் பரிமாற்றங்களைப் பெறமுடியாத நிலையில், மரப்பாச்சிப் பொம்மை உயிருள்ளதாக ஆகி விடுகின்றது. பெண் தனக்கு வேண்டிய உலகத்தை மரப்பாச்சியில் நிர்மாணித்துக் கொள்கிறார்.  பெண் எதை விரும்புகிறாரோ அதனை மரப்பாச்சியால் தர முடிவதற்குக் காரணம், மரப்பாச்சிக்கு உயிர் இருப்பதாக எண்ணிக் கொள்வதனால்தான்.  மரப்பாச்சியிடம் ஒரு பெண் தன்னுடைய உள்ளத்து / உடல் கிளர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்கிறார். பெண்ணில் ஏற்படக்கூடிய உடற்கூறு மாற்றங்களையும், அதனால் உண்டாகிற மன உணர்வுகளையும் யாரிடமும் வெளிக்காட்டவோ  சொல்லவோ விரும்பாத நிலையில், பெண்ணின் மன எல்லைக்குள் வந்துபோகிற உரிமை மரப்பாச்சிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மரப்பாச்சிகதை இதைப் புலப்படுத்தும்.
       “நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல் அனு கேட்கையில்            
       மரப்பாச்சி மவுனமாய் விழிக்கும்.  “எனக்கு யாரிருக்கா? நான் தனி.          
       அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும்.  சுடுகாயைத்
       தரையில் உரசி அதன் கன்னத்தில் அவள் வைத்தால் “ஆ, பொசுக்குதே
       என்று முகத்தைக் கோணும்.  அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில்
       மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சிலநேரம் அம்மாவாக,  
       கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.  (ப.8)
குழந்தைப் பருவத்திலிருந்து மேடேறி, பூப்படையும் பருவம் நோக்கி நகரும் பெண்ணின் தனிமை நிலையில் தனக்குரிய வடிகாலாகவும் மரப்பாச்சி அமைகின்றது.
       அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள். மேஜையில் இருக்கும்     
       மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப்
       பின்னுகின்றன.  அதன் முலைகளை உதிர்த்து மார்பெங்கும் திடீரென மயிர்
       அடர்ந்திருக்கிறது.  வளைந்த இடுப்பு நேராகி  உடல் திடம் அடைந்து
       வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும்
       விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது.  அது மெதுவாக நகர்ந்து அவள்
       படுக்கையின் அருகில் வந்தது.  அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து
       அனுவை அருந்தியது.  (ப.10)
தனக்கான தோழியாகவும் – அதேவேளையில், கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் ஆணாகவும் மரப்பாச்சி மாறி மாறிக் கொள்கிறது.  அதனால்தான், முலைகள் கொண்ட மரப்பாச்சிப் பொம்மை மீசை முளைத்து ஆணின் வடிவம் கொள்கிறது.  இந்த ஆண், எதார்த்த உலகில் உள்ள மற்ற ஆண்களைப்போல அல்லாமல், தன்னைத் தாங்கிக் கொள்கிற ஆணாக -  தான் விரும்பும் உலகத்தைப் படைத்துத் தரும் ஆணாகவே பெண் கற்பனை செய்து கொள்கிறார்.
       ஆணுக்குள் எளிதாக ஊடாட்டம் நிகழ்த்த நினைக்கிற பெண்ணின் ஏக்கங்கள் கனவுகளாகி – கனவுகள் பிரம்மையாகி நிகழும் தளத்தில் ‘மலையேற்றம் கதை அமைந்திருக்கிறது.  கனவின் சாயலாய் உளவியல் கூறுகளைக் கொண்ட ஆண் பற்றிய புனைவுகள் கட்டமைக்கப்படுகின்றன. 
மலை தீர்மானங்களின் திரளாகத் தொலைவில் எழும்பியிருந்தது.  அதன் திடம்; கம்பீரம்; இறுக்கம்; உறைந்த மவுனம்;  உதிராக் கடினம் எல்லாமும் அதை எட்ட முடியுமென்ற நம்புதலை ஏற்படுத்துவதாயில்லை.  ஆனால் மலையின் அழைப்பு பகிரங்கமாகவும், உரத்தும் கேட்டது.
      அதன் நீல விளிம்புகள் நிறுத்தாமல் சபலமேற்படுத்துவனவாக       
      ஒளிர்ந்தன.(ப.85)   
ஒரு மலையை இரு பெண்கள் அடைகிறார்கள்.  தாங்கள் நுழையக்கூடிய – சுதந்திரமாய்த் திரியக்கூடிய இடமாய் மலை அமைந்திருப்பதாக உணர்கிறார்கள்.  மலை எதார்த்த உலகின் ஆணைப்போல அல்லாமல் தன் ஆணவத்தை அழித்துக் கொள்வதாகவும், எளிதாய் ஊடாட்டம் நிகழ்வதாகவும் கருதிக்கொண்டு மலையேறுகிறார்கள்.  மலை பெண்ணைப் பார்த்துக் கேலியாய்ச் சிரிப்பதாகவும்,  ஊடாட்டம் நிகழ்த்தி முன்னேறிக் கொண்டிருக்கும் பெண்களிடம் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஒப்புவிக்கும் இடத்திற்கு வருவதாகவும் மலை அமைந்து போகிறது பெண்ணின் மனதில்.
எந்தப் பற்றுதலையும் நிரந்தரமாய்க் கொள்ளாமல்,  குவிந்து கூர்ந்த உச்சியையே இலக்காகக் கருதி ஏற்றம், ஏற்றம், ஏற்றம் ................ உயர உயரக் காற்றின் உந்து சக்தி என்னுள் புகுந்தது.  ஆடை கலைத்து,  தோலைத் திறந்து சதைகளைக் காற்று தீண்டத் தீண்ட,  உடல் எடையிழந்து இறகாகி இழைந்தது.  துவக்கச் சிரமங்கள் முற்றிலும் விலகி, என் உடல் வசமிழந்து சுழன்றும், மேலே பறந்தும் மேலேறுவதை ஆச்சர்யமுடன் பார்த்தேன் . . . . . . . . . .  அறிந்தேயிராத அதீத உடலின்பத்தின் உச்ச நிலைபோல் தொடை நரம்புகள் தொய்ந்து தெறிக்க,  மெல்லிய தசையிடுக்குகள் விண்விண்ணென அதிர்ந்தன.  கூம்பி விரிந்து உடல் மையம் சிலிர்த்துத் துடித்தது.  (ப.88)
இங்கே, மலைச்சிகரம் ஆணாக ஆகலாம்.  மலையில் நீர் அருந்துகிறார்கள்.  அந்த மலையேற்றம் சுலபமாக அமையாவிட்டாலும், இறுதியில் தன்னை ஒப்புவித்துக் கொள்ளும் மனநிலை ஏற்பட்டிருப்பதைக் காணலாம். 
      பெண் மனம் தேடும் ஆண் பற்றிய நீள் ஓட்டத்தினை ‘மரணத்தடம் கதையிலும் காணமுடியும். மரணம் என்ற ஒன்றுக்குள் கரைந்து போய்விட்டால் ஒன்றும் இல்லை.  அந்த ஒன்றும் இல்லாத சுகத்தைத் தருகின்ற மரணத்தை ஆணாகப் புனைந்து கொள்ளும் பெண்ணின் மன நிகழ்வு இக்கதையில் பதிவு செய்யப்படுகிறது.
          அவள் உள்ளே நுழைந்தபோது அங்கே யாரும் இருப்பதாகத்  
       தெரியவில்லை. ஆனால் திடுமென உயிர் பெற்ற மின் பிம்பம் போல் அந்த
       மூலையில் அவன் தோன்றுகிறான்.  நீண்ட நெடுங்காலமாக அவளுக்காகக்
       காத்துக் களைத்த முகம்.  குழந்தையின் கண்கள், இளைஞனின் திடமான
       மேனி, முதிர்ந்த புன்னகை,  வயதுகளுக்கு அப்பாற்பட்டன போலும். 
       அத்தனை வயதையும் ஒட்டுமொத்தமாகக் கலந்து குவித்தவன் போலும்
       தோற்றம் தருகிறான்.  (ப.93)

எதிர்பாராத ஒரு கனத்தில் அவளை இழுத்து தன்னோடு தழுவிக் கொள்கிறான்.  அகன்ற தோள்களும் அவள் உடல்மேல் குவிந்த கைகளும் சேர்ந்து அவனது அணைப்பிற்கு ஒரு ஏணைத் தன்மையைத் தருகின்றன.  எந்தப் புதிய சுமையும்,  எந்தச் சிறிய நெருடலையும்,  எந்த மெல்லிய உறுத்தலையும் ஏற்படுத்தாத அந்தத் தழுவலின் அமைதிக்குள்ளிருந்து ஒரு உறைந்த போதை அவள் நாளங்களில் நிறையத் துவங்கிய நேரம்.  அவள் அவனுடைய உடைகளைத் தீவிரமாக வெறுக்கிறாள்.  இறுகிய தோல் போன்ற பிய்த்தெறிய முடியாத உடைகள்: மென்மையான உள்ளங்களையும், அலையாடும் முகத்தையும் தவிர மற்றெல்லாவற்றையும் முற்றிலுமாக மறைக்கின்றன.  அவை...................
குறுகியதும்,  நீண்டதுமான முத்தங்கள்: திறப்புகளற்ற அவள் ஆடைகளோடேயே அவளுடலின் வளைவுகளில் ஏறி இறக்கும் ஈரமற்ற தூரிகை போன்ற அவன் விரல்கள்.  காம இலக்கற்ற விரல்கள் என்று அவற்றை எண்ணிக் கொள்வது பிடிக்காமல் பிடித்திருக்கிறது.  ஆக்கிரமிப்பின் வெளிகளற்ற, ஆனால் அதை நோக்கி அணு அணுவாய்,  அனுசரனையாய் அவனை முன்னகர்த்துகிற விரல்கள்........... குளிர்கோர்த்த குகையின் சுவர்கள் தனது வளைவுகளை இழந்து, தட்டையாகி மிருதுவான படுக்கையாக அவர்களிருவரையும் உள்வாங்கின.
என நீளும் இக்கதையில் வரும் நிகழ்வுகளும் உரையாடல்களும் எதார்த்த வாழ்வில் உலவித் திரியும் ஆணோடு அல்ல.  மன வெளியில் வந்து போகும் ஆண்,  பெண் வரைந்து கொண்ட ஆணாகத் திகழ்கிறார்.
       பெண்ணின் மனதுக்குள் நிகழும் பிரம்மை என்ற உணர்வு நிலையில் மரணம்கூட ஆணாகத்தான் இருக்கிறது.  அதுதான் பெண்களின் உலகத்தை மறுதலிக்காத ஆணாகத் திகழ்கிறது.  எந்தப் புதிய சுமைகளையும் – எந்தச் சிறிய நெருடல்களையும் – எந்த மெல்லிய உறுத்தல்களையும் ஏற்படுத்தாத ஆணின் தழுவல்களையே பெண் மனம் எதிர்பார்க்கிறது.  அத்தகைய ஆணிடம் மட்டுமே பெண் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறார்.  வெறுமனே எந்திரத் தன்மையோடு நிகழ்ந்திராத பாலியல் நிகழ்வையே பெண் விரும்புகிறார்.
ஒரேயொரு முறை புரண்டு விழித்துக் கொள்ளுங்களேன்.  உடம்புக்கென்ன என்று ஒரு வார்த்தை கேளுங்களேன். (ப.97)
எனத் தன் கணவரிடம் எதிர்பார்ப்புகளைக் குவிக்கும்போது,  அது ஏமாற்றம் தருகையில், பெண்ணின் மனம் ஆறுதல் அடைய அலைந்தோடும்போது தனிமை  வெளியே பெண்ணைத் தேற்றுகிறது.
நீ மூட்டும் அடுப்பு நெருப்பில்,  நீராடும் நதியலைகளில், நடக்கின்ற நிலத்தின் அடியாழங்களில், உன் தலைமேல் கவிந்த ஆகாயப் பரப்பில்,  இப்போது உன் சுவாசக் குழலுக்குள் புக மறுக்கும் காற்றணுவில்........  எங்கும், எதிலும்,  எப்போதும் உன்னோடிருக்கிறேன். உன்னை உற்றுக் கவனிக்கிறேன்.  தழுவத் தவிக்கிறேன்.  (ப.96)
எனப் பிரம்மையில் தோன்றும் ஆணின் வார்த்தைகளிடத்தில் – பெண்ணுக்கு ஆறுதலாய்த் தோன்றும் ஆணிடத்திலே மட்டும்தான் தன்னை முழுமையாக ஒப்படைக்கிறார் பெண்.  இவ்வாறாக,  மரப்பாச்சியும் மலையும் மரணமும் பெண்மொழி தேடும் / விரும்பும் ஆண்களாகின்றன.
       மரப்பாச்சி கதைகள் இருவேறு ஆணுலகத்தைக் கட்டவிழ்ப்பு செய்கின்றன.  வாழும் எதார்த்த உலகில் பெண் எதிர் கொள்ளும் ஆணுலகத்தின் முக மூடிகளைக் கட்டவிழ்ப்பு செய்வதாகவும்,  ஒரு பெண் மனம் எதிர்பார்க்கும் ஆணைப் பற்றிய எண்ண ஓட்டங்களை மனதின் புதைநிலையிலிருந்து கட்டவிழ்ப்பு செய்து காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றன.
“அப்பா, இந்தக் கதையில அந்த ராஜா என்று அனு எதையாவது கேட்டால்,
“பெரிய மனுஷிபோல் என்ன கேள்வி நை, நைனு, சும்மா இரு (ப.8)
பெண் குழந்தை என்பதனாலே பெண்ணின் ஆக்கத்திறன் மறுதலிக்கப்படுகிறது அப்பா என்கிற ஆணின் மூலமாக.
அனு தான் தனியாக இல்லாததை உணர்ந்தாள்.  உடல் மீது நூறு விழிகள் மொய்த்து உறுத்தின.  அனிச்சையாக ஓடத் தொடங்கியபோது எதன் மீதோ மோத, கடினமான கைகள் அவளை இறுக்கின. கரிய நரை முடியடர்ந்த நெஞ்சில் அவள் முகம் நெருக்கப்படுகிறது.  கொட்டும் முத்தங்கள் கன்னத்தில், உதட்டில், கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற விரல்களின் தடவல்,  மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது.  சிறிய மார்பகங்கள் கசக்கப்பட்டபோது  அவள் கதறிவிட்டாள்.  காய்ந்த கீற்றுப் படுக்கை மீது அனுவின் உடல் சாய்க்கப்பட்ட போது,  அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள், கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின் உடல்,  அத்தை ஓடி வரவும் மாமா அவசரமாக விலகினார். (பக்.13)
பருவமடையாத – பருவமடையப்போகிற பெண்ணின் மீது, திருமணமான – அத்தையின் கணவரென உறவுமுறை கொண்டவரால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைத் தீண்டல்கள் மாமா என்கிற ஆணின் மூலமாக நடைபெறுகிறது.
என் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய் எடுத்தியா?  நீ எடுக்காம எங்கேடி போவும்?  புதுப் புடவைன்னு முனகிட்டு இருந்தியே,  அதுக்காகத் திருடினியா? (ப.27)
மனைவியின் மீதுள்ள கணவனின் அதிகாரம் பெண்ணைத் திருடியாய்ப் பார்க்கச் சொல்கிறது.
மச்சான் குளியலறைக் கதவை அறையும் படீர் சத்தம்.  நீர்த்துளிகள் சொட்டும் தலைமுடி. எந்தக் குளியலாலும் கழுவ முடியாத குரோதம் தொனிக்கும் கண்கள்.  அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.  நான் சுவரோரம் ஒண்டிக் கொண்டேன்.  அழுக்குத் துணிகள் அமுக்கிய வாளிக்குள் துழாவினார். ஒரு சட்டையை உருவி, அதன் பையில் விரல் விட்டுத் தேடினார். அந்த ஐநூறு ரூபாய் நோட்டு அவர் கையிலிருந்தது.  அவர் இப்போது உள்ளே வரப் போகிறார். அக்காவைத் தொட்டு எழுப்பி,  அடித்ததற்காக அவளிடம் மன்னிப்பு கேட்டு.......  இல்லை, நான் நினைத்தது போல் அவர் ஒன்றும் செய்யவில்லை.  அந்த ஐநூறு ரூபாய் நோட்டை உள்ளங்கையில் சுருட்டிப் பதுக்கினார். தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.  (ப.31)
தான் தவறிழைத்தவர் என்பதைக் காட்டிக் கொள்ளாத – மனைவியை அடித்துப் போட்டதற்கு வருத்தமோ மன்னிப்போ கேட்காத மிகக் குறுகலான புத்தியைக் கொண்ட கணவன் என்கிற ஆணுடன் சேர்ந்துதான் பெண் வாழ வேண்டியதிருக்கிறது.
       என்ன பண்ணுறே பாத்ரூமில்? எனக்கு லேட்டாகுது இட்லி எடுத்து  
       வைக்கிறயா?.............(39)
பம்பரமாய்ச் சுழன்று வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கும் மனைவியின் மீது கணவன் என்கிற ஆணின் மூலமாகத்தான் அதிகாரம் செலுத்தப்படுகிறது.
       உன் கணவரும் ஒரு சோதனை – லேசானதுதான் செய்துக் கட்டும்  (ப.47)
ஒரு பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டாலே கருக்கொள்ள வேண்டும்; குழந்தைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்ற சட்டங்கள் எழுதப்படாமலே நம் சமூகத்தில் நடைமுறைக்கு வந்திருக்கின்றன.  குழந்தையைப் பெற்றெடுக்காத பெண்களுக்கு நேர்கின்ற கொடுமைகள் வேறு யாராலும் அனுபவிக்க முடியாதவை.  ஒரு பெண் கருக் கொள்வதற்காக மருத்துவமனைகளில் செய்து கொள்ளும் மருத்துவச் சோதனைகள் பெண்ணின் உடலைச் சிதறு காயாக்கி விடுகின்றன.  எல்லாச் சோதனைகளும் முடிந்து இறுதிக்கட்டமாய் ஆணுக்குச் சோதனை. இப்படி, சமூக மதிப்பீடுகளே ஆணின் தனத்தோடு இருந்து கொண்டிருக்கின்றன.
       நீ ஏன் இப்ப வெளியே வந்தே? (ப.56)
பெண் நடமாட்டத்தின் எல்லைக் கோடுகளைத் தீர்மானிப்பது ஒரு ஆண்தான்.  பெண் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என நினைப்பதும் ஓர் ஆண் தான்.
ஆம்பிளப் பிள்ளைன்னா கொஞ்சம் அப்படி இப்படித் தானிருப்பான். நாமதான் விட்டுப்பிடிக்கணும் (ப.70)
கட்டுப்பாடற்ற சுதந்திரம் ஆணுக்கு மட்டுமே உண்டு.  குறிப்பிட்ட வரையறைத் தளத்துக்குள் ஆண் இருக்க வேண்டிய அவசியமில்லை என நியதிகளை உருவாக்குவதும் ஆண்தான். அந்த உரிமைகளை வழங்குவதும் ஆண்தான்.  சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் ஆணின் ஆதிக்கம்தான் நிலவுகின்றது என்பதைப் பல கதைகள் சொல்கின்றன.
       எதார்த்த உலகில் பெண்ணைச் சக உயிரியாகப் பார்க்காமல், பாலியல் நுகர்வுப் பொருளாகப் பார்த்தல் – ஆணின் காம வேட்டைக்குப் பெண் பலியாதல் – பெண் என்பவர் பிற ஆண்களுடன் தொடர்போ உறவோ வைத்துக்கொள்ள அனுமதி மறுத்தல் – குடும்ப உறவுகள் பெண் மீது செலுத்தும் அதிகாரங்கள் – பண்பாடு என்ற பெயரில் பெண் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் – வீட்டு வேலைகள் அனைத்தையும் பெண்ணே செய்து முடித்தல் – வீடு என்ற குறுகிய வட்டத்துள்ளே பெண்ணை அடக்கி ஆளுதல் – நடத்தை முறைகளில் பெண் மீது ஏற்ற இறக்கம் காட்டுதல் – சொத்துக்களில் பெண்ணுக்கு உரிமை மறுத்தல் என நீளும் பெண்ணின் வாழ்வனுபவம் என்பது,  ஆணின் அதிகாரக் கரங்களின் கூர் நகங்களுக்குப் பலியாகிக் கிடக்கிறது.
      எதார்த்த உலகில் பெண் எதிர் கொள்ளும் ஆணுலகம் அதிகாரத்தைக் கொண்டதாகவும், பெண்ணை அங்கீகரிக்க மறுப்பதாகவும் அமைந்துவிட்ட நிலையில், ஆணைப் போலவே கனவுகளைச் சுமக்கிற – உணர்ச்சிகள் ஊற்றெடுக்கிற – உணர்வுகளை அடை காக்கிற – அறிவுத் தேடலைக் கொண்டிருக்கிற பெண் தனக்கான ஆணுலகத்தைக் கற்பனை செய்து பார்க்கிறார்.  எதார்த்த வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தையும் செய்துவிட முடியாது என்ற அவநம்பிக்கை என்பது பெண்ணை இயற்கையின் ஊடாகவும், பிரம்மைகளின் ஊடாகவும் பெண் வேண்டுகிற ஆணுலகத்திற்கு எடுத்துச் செல்கிறது. அதனால்தான், தன்னுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இயல்பாகப் பகிர்ந்து கொள்ளும் ஆணுலகத்தை,  தான் காணுகின்ற மரப்பாச்சிகளிடமும் மலை முகடுகளிலும் இயற்கையின் அத்தனை உருவங்களிலும் மரணத்திலும் கூடக் காண்கிறார்.   இந்த வகையான ஆணுலகமே பெண் மனம் தேடும் ஆணுலகமாக மரப்பாச்சி சிறுகதைகளில் அமைந்திருக்கிறது.

                                                          நன்றி : கவிதாசரண் இதழ்



                         











திங்கள், 28 டிசம்பர், 2015

பண்பாட்டு மார்க்சிய உரையாடல் – சில குறிப்புகள்

பண்பாட்டு மார்க்சிய உரையாடல் – சில குறிப்புகள்
                                                                                                                          : மகாராசன்
மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்துப் பேசிக் கொள்ளுதல் எளிமையான ஒன்றுதான். விடிய விடிய பேசிக் கொண்டிருந்தாலும், விடிந்த பின்னும் பொழுது அடையப் பேசிக் கொண்டிருந்தாலும் ‘பேச்சுகள்’ யாவும் செயல் தளத்திற்கு வருதல் அரிதுதான். அணுத் திரட்சிக்குள் கரைந்து போன ‘பேச்சுகள்’ ஏராளம்.
     நவீனமாகவும்... நளினமாகவும்... நாசூக்காகவும்... நயம்படவும் பேச்சுகள் தொடர்கின்றன தமிழ்ச் சூழலில். பெரும்பாலான பேச்சுகள் ‘அறிவுஜீவித் தினவுகளை’முன்வைப்பதாக இருந்து கொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்தில், சமூக மாற்றத்திற்கான கருத்தியல் சார்ந்த தத்துவ வேர்களை அடையாளம் காண்பதற்கு முன் நகர்ந்தது ‘புதியகாற்று’ இதழ்.
     ஓர் இதழை நடத்திக் கொண்டிருப்பதே ‘ஆகப் பெரிய காரியம்’தான். வணிக நோக்கைத் தவிர்த்து முடிந்தளவு மாற்றுத் தடத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ‘புதிய காற்று’ ஓர் உரையாடல் தளத்தையும் உருவாக்கி அதன் வழியே பன்முகத் தன்மை கொண்ட கருத்தியல்களை வரவழைத்துப் பார்க்க முயற்சித்தது. 
     இந்தியச் சமூகத்தில் மார்க்சியம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகியும்கூட, மார்க்சியம் முன் வைக்கிற மாற்றங்கள் நிகழவில்லை. இதற்குக் காரணம் என்ன? மார்க்சியம் காலாவதியாகிப் போனதா? இல்லை. மார்க்சியத்தை இந்தியச் சமூகத்தில் பொருத்திப் பார்ப்பதில் குறைகள் நிகழ்ந்திருக்கின்றன. மார்க்சியத்தை அதன் உள்ளார்ந்த தன்மைகளைப் புரிந்து கொள்வதிலும், இந்தியச் சமூக நிலைமைகளைக் குறிப்பான வகையில் ஆய்வு செய்ததிலும் தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. இதுதான் உண்மையாக இருக்க முடியும்.      இருவேறு வர்க்க நிலைமைகள் குறித்து மார்க்சியம் முன் வைக்கிறது. இந்த ஒன்றை மட்டுமே பெரும்பாலான மார்க்சிய இயக்கங்கள் பற்றிக் கொண்டதனால், இந்தியச் சமூகத்தின் அடி ஆழம் வரை விரவிக்கிடக்கிற பார்ப்பனியச் சாதியக் கயிறுகள் கண்ணுக்குப் புலப்படாமல் போய்விட்டன.எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்த்த முடியாமலே போய்விட்டன.
        ஒரு சமூகத்தின் நிலைமைகளைச் சரியான முறையிலே மதிப்பீடு செய்து கொண்டதற்குப் பின்பாகத்தான், எந்தவொரு தத்துவத்தையும் அதனோடு பொருத்திப் பார்ப்பதில் இலக்குகளை அடைய முடியும். சாதியத்தை சமூகத்தின் மேல் அடுக்காகவே கருதிக் கொண்டிருந்த நிலைமைகள் தற்போது மாறி வருகின்றன. சமூகத்தின் உற்பத்தி முறைகளையும் உற்பத்தி உறவுகளையும் தீர்மானிக்கும் அடிக்கட்டுமானமாகச் சாதியம் இருப்பதைத் தற்போதைய மார்க்சிய இயக்கங்கள் மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், மார்க்சியம் குறித்தும் இந்திய தமிழகச் சமூக நிலைமைகள் குறித்தும் நிறைய விவாதிக்கவேண்டிய களங்களாகி நிற்கின்றன.
      ஒடுக்குண்டவர்களுக்கான விடுதலைத் தத்துவமாக மார்க்சியத்தை ஏற்றுக் கொள்கிற அதேவேளையில், சாதிய விடுதலையை, பெண் விடுதலையை, தேசிய இனங்களின் விடுதலையை வென்றெடுப்பதில் மார்க்சியத்தின் வழிகாட்டுதல்கள் என்னவாக இருக்கின்றன என்பதைப் பற்றிய விவாதங்கள் அண்மைக் காலத்தில் கூர்மையடைந்திருக்கின்றன.
      தலித் அரசியல் கூர்மையடைந்து சற்றே பலவீனப்பட்டுப்போய் தேர்தல் அரசியலிலே கரைந்துபோய்க் கொண்டிருக்கிறது. தீவிரப் பெண்ணிலை வாதத்தை முன்னெடுத்துப் பாலியல் உடல் அரசியலிலே வந்து நிற்கிறது பெண்ணியம். இந்தியச் சிறைக்கூடத்தில் அடங்க மறுத்து சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வரும் காசுமீர் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகள் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களும் தங்களின் சுயத்திற்காகப் போராடி வருகின்றன. 
      மேற்சொன்ன தலித் விடுதலை - பெண் விடுதலை - தேசிய இன விடுதலை என்பதெல்லாம் தனித்தனியே நடக்கக் கூடியவைகளா? அவற்றை இணைக்கும் தத்துவம் எதுவாக இருக்க முடியும். மார்க்சியத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், மார்க்சியத்தின் மீது நம்பிக்கையற்று, மார்க்சியத்தைச் சந்தேகிப்பது என்தெல்லாம் மார்க்சியம் குறித்த அறியாமையால் வரக் கூடியவை. ஆக, உண்மைத் தன்மைகளும் தேவைப்படுகிறது என்பதைச் சுயவிமர்சனத்தோடு பரிசீலிக்க வேண்டிய கட்டத்தில் எல்லோருமே நின்று கொண்டிருக்கிறோம்.
      இத்தகையச் சூழலில் ‘பண்பாட்டு மார்க்சிய உரையாடலை’ப் புதியகாற்று இதழ் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்தது. மதுரையில் நடைபெற்ற இவ்வுரையாடல் தளம் தமிழகத்தின் வடபகுதியில் உள்ள திருவண்ணாமலைக்கு நகர்ந்திருப்பதே முதல் உரையாடலுக்குக் கிடைத்த வரவேற்புதான். சமூகப்பிரச்சனைகளோடு மார்க்சியத்தைத் தொடர்புபடுத்தும் வகையில் பல்வேறு அமர்வுகளாய் நடைபெற்ற இவ்வுரையாடல் நடந்து முடிந்திருக்கிறது. வெகு சிறப்பாகவும் மிக நேர்த்தியாகவும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்த முஸ்தபா, அன்பு, பிரகாஷ் ஆகியோரின் உழைப்பு வீண்போகவில்லை. ‘பண்பாட்டு மார்க்சிய உரையாடல்’ என்று சொன்னால், ‘பண்பற்ற மார்க்சியம்’ என ஒன்று இருக்கிறதா? என்ற விமர்சனம் எழுந்தாலும், ‘பண்பாட்டுத் தளத்தில் மார்க்சியம் குறித்த உரையாடல்’ என்பதாக அர்த்தப்படுத்திப் பேச வேண்டிய நிர்பந்தங்களும் ஏற்பட்டுப்போயின.
       செயலுக்கான வழிகாட்டியாக உள்ள மார்க்சியம் இந்தியச் சிந்தனை மரபில் ஏற்படுத்தியிருக்கும் தடங்களின் பதிவுகள் குறித்துத் தொடக்கவுரை ஆற்றினார் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன். ‘மார்க்சியமும் தலித்தியமும்’ குறித்த அமர்வுக்கு தலைமையேற்ற அரங்க மல்லிகா, தலித் விடுதலையின் தேவைகளை முன்வைத்துப் பல கேள்விகளை எழுப்பினார். இந்த அமர்வில் மிகக் கூர்மையான விவாதங்களை முன்வைத்தவர் டி.தர்மராஜன்தான். ‘ஒவ்வொரு தலித்துமே இருவிதப் பிரச்சினைகளை எதிர் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது. உளவியல் ரீதியான பிரச்சனைகளையும் சமூகத்தில் நிலவுகிற தீண்டாமைப் பிரச்சனைகளையும் எல்லா தலித்துகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இம்மாதிரியான பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்குக் கிராமங்களை விட்டு விட்டு நகரம் நோக்கிப் புலம்பெயர வேண்டும்’ என்றார்.
      மார்க்சியம் முன்வைக்கும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் தலித்திய ஆய்வுகளுக்கு உதவுகிற அதேவேளையில், வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் சாதியம் குறித்தும் ஆராய வேண்டியதன் தேவையை வலியுறுத்தியது பார்வையாளர்களுக்குப் புதிய கோணத்தைக் காட்டியது. அடுத்துப் பேசிய பாண்டியன் ‘தலித் மக்களின் சுயச்சார்பு என்பது நிலத்தோடுதான் தொடர்புடையது’ என்பதாகப் பேசினார். டி.தர்மராஜன், மீ.த.பாண்டியன் உரைகள் தலித்தியப் பிரச்சனைகளை அணுகுவதில் உள்ள பிரச்சனைகளைக் கூர்மையாக்கித் தந்து கொண்டிருந்த வேளையில், திருவள்ளுவனின் மேடைப் பேச்சுத் தொனியில் அமைந்த உரை, தொழிற்சங்கங்களின் மீதான குற்றச்சாட்டுகளாகவே அமைந்திருந்தது விவாதத்தைத் திசை திருப்பி விட்டுவிட்டது.
      உலக நாடுகளில் உள்ள இயற்கை வளங்களையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களும் ஏகாதிபத்திய நாடுகளும் சுரண்டிக் கொளுத்துக் கொண்டிருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு அடிப்படைக் காரணம் விவசாயத்துறையில் நவீனத்தைப் புகுத்தியதுதான். இந்தியாவின் விவசாய முறைகளில் ‘பசுமைப் புரட்சி’ திட்ட முறைகள் உணவு ஆதாரங்களைப் பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டவை. பசுமைப் புரட்சியின் மூலமாக இங்குள்ள விவசாயத்துறையிலே ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் - இயற்கை வளங்கள் தொழில் துறையினரால் ஏற்பட்டிருக்கும் நஞ்சாக்கத்தையும் சுற்றுச் சூழல் குறித்த அமர்வில் மருத்துவர் ஜீவானந்தம் எடுத்துரைத்தார்.
      1965ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியின் விளைவாக இங்குள்ள பாரம்பரிய விவசாய முறைகள் அழிந்து போய்க் கொண்டிருப்பதையும், அதன் மூலமாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டுவிட்டுப் புலம் பெயர்ந்து கொண்டிருப்பதையும், பசுமைப் புரட்சி திட்டமிட்ட மோசடி என்பதையும் ஏர் மகாராசன் பேச்சில் காணப்பட்டது. அதேபோல, தற்போதைய மரபினப் பசுமைப் புரட்சித் திட்டத்தின் அபாயங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் விதைகள் - உரங்கள் - பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் நச்சுத் தன்மைகள் குறித்துப் பிரேம் குமார் விரிவாக முன்வைத்தார்.
      இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சினைகளாக இருந்து கொண்டிருக்கும் தேசிய இனப் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய இருக்கின்றன. அவ்வகையிலே ‘மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினைகளும்’அமர்வில் பேசிய பொன்னீலன் ‘இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் உத்வேகம் கொள்ளாமல் இருக்கின்றன’என்றார். அரங்க குணசேகரன் ‘இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் தரகு முதலாளிய அரசியலை அம்பலப்படுத்திப் பேசியது குறிப்பான விவாதத்திற்குத் தள்ளியது.
      தொடர்ந்து பேசிய முருகன், தேசிய இனப் பிரச்சினைகள் குறித்த தலைப்புக்குள் வராமலேயே, எவ்விதமான தர்க்கங்களுக்குள்ளும் அடைபடாமல் ‘பாட்டாளி வர்க்கத்துக்குத் தேசமில்லை’ என்பதாக முடித்தது பல விவாதங்களை எழுப்பியது. இதற்குள் வேறொரு பயங்கரமும் இருந்து கொண்டிருக்கிறது. உலக ஏகாதிபத்தியங்கள் சுரண்டலை முன்னெடுத்துச் செல்கையில் தேசம் என்பதைப் பார்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் ஓருலகம் - ஒரே சந்தை - ஒரே ஆட்சி என்பதான உலகமயமாக்கல் என்பதுதான். உலகமயத்தை எதிர்த்தல் என்பது தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தின் மூலமே சாத்தியப்படும். இங்கே இந்தியாவையே ஒரு தேசமாகப் பார்க்கும் நிலையில்தான் தேசிய இனப்பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் அமைந்து போகின்றன.
      உரையாடல் அரங்கில் சூடான விவாதங்களை எழுப்பியது பெண்ணிய அரங்குதான். சகல மட்டங்களிலும் ஒடுக்குண்டு கிடக்கும் பெண் இன விடுதலை கேள்விக் குறியாகவே இருந்து கொண்டிருக்கும் சூழலில், தற்போதைய பெண்ணியச் சிந்தனைகள் உரத்த கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறது. தந்தைவழிச் சமூகம் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் ஒடுக்குமுறை வடிவங்களை அம்பலப்படுத்தியதோடு ஆணாதிக்கத்தின் இருப்புகளைக் கேள்விக்கு உட்படுத்திப் பேசினர் அரங்க மல்லிகாவும் அ.வெண்ணிலாவும். 
       பண்பாட்டுக் கட்டமைப்பின் வழியாகப் பெண் ஒடுக்குண்டு கிடக்கிறாள். ஆண் மூலமாக அதிகாரம் உள்ளிட்ட அனைத்து வன்முறைகளும் பெண்மீது திணிக்கப்படுகிறது. பெண்ணின் உடைத் தேர்வுகூட ஆண்களால் தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக மாறியிருப்பதைக் கோபத்தோடு முன்வைத்தார் வெண்ணிலா. குடும்பம் என்ற நிறுவனம் எப்படி பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அமைப்பாக இருக்கிறது என்பதையும் அவற்றின் காயங்கள் வலிகள் பெண்மொழியாக உருக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. அதோடு ‘மார்க்சியமும் படைப்பிலக்கியமும்’, ‘வெகுசன மார்க்சியம்’ போன்ற அமர்வுகள் பார்வையாளர்களுக்கு இடையே நிறைய கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பிவிட்டன.
      உரையாடலில் பங்கேற்றுப் பேசிய சிலர் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். தனக்குத் தெரிந்தவை மட்டுமே மார்க்சியம் என்று முன்வைப்பது உணர்வு நிலையிலிருந்து வரக்கூடியவை. அதேபோல, மார்க்சியம் என்பதை ‘மார்க்ஸ்’ சொன்னவற்றை மட்டும்தான் குறித்து நிற்கிறதா? ஏங்கெல்சு, லெனின், ஸ்டாலின், மாவோ... என மார்க்சுக்கு அடுத்து வந்தவர்கள் மார்க்சியத்தைச் செழுமைப்படுத்தியவர்கள்தான். மேற்சொன்னவர்களின் கருத்தாடல்களும் மார்க்சியத்திற்குள் அடங்காதா? மார்க்சிய ஆசான்கள் மொழிந்தவை யாவுமே மார்க்சியம்தானே?

உரையாடலில் பங்கேற்ற பலரும் அந்தோணியா கிராம்சி, அல்தூசர், பெர்பெக்ட் மார்க்சு... என மார்க்சிய விமர்சகர்களைப் பற்றிய உரையாடல் மார்க்சிய உரையாடல்தானா? அவர்கள் குறித்துப் பேசுதல் தவறல்ல; அவர்களைப் பற்றி மட்டுமே பேசுதல் என்பது? இம்மாதிரியான போக்கு அறிவுலக வளர்ச்சிப் போக்காக இருப்பினும், மக்களிடமிருந்து மார்க்சியத்தை அந்நியப்படுத்தவே செய்யும். இனிவரும் உரையாடல்கள் முழுமையான மார்க்சிய அறிதலுக்கு வழிவகுக்க வேண்டும். ‘பண்பாட்டு மார்க்சிய உரையாடல்’ தத்துவத் தளத்தில் நல்லதொரு விவாதப் புள்ளிகளை காண்பித்துக் கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சிந்தனைப் போக்குகளுக்கு வடிவம் கொடுக்கும் பேரா.முத்துமோகனுக்குப் பாராட்டு சொல்லியே ஆக வேண்டும்..
      சி.பி.அய்., சி.பி.எம், கட்சிகள் முன்வைப்பதுதான் மார்க்சிய அரசியல் என்பதைத் தாண்டி, திறந்த மனநிலையோடு மார்க்சியம் குறித்த உரையாடலாகப் ‘பண்பாட்டு மார்க்சிய உரையாடல்’ தொடர்ந்தால் சமூக மாற்றத்திற்குப் பேருதவியாக இருக்கும். எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டேயிருக்கிறது எல்லோருக்குள்ளும். 
   நன்றி: புதிய காற்று இதழ், ஆகசுடு 2006, கீற்று.காம்

சனி, 26 டிசம்பர், 2015

இயற்கையைக் கையகப்படுத்தும் பெண்மொழி

இயற்கையைக் கையகப்படுத்தும்
பெண்மொழி
லதாவின் கவிதைகளை முன்வைத்து
: மகாராசன்

   தனித்த ஒரு பனுவல் எனும் வாசனையைத் தாண்டி, ஒரு பனுவலுக்குள் இயங்கும் பல பனுவல்களோடு ஒன்றிக்கொள்ள இன்றைய கவிதைமொழி பல வாசல்களைத் திறந்து விட்டிருக்கிறது.  ஒரு படைப்பாளி சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் இன்றைய கவிதை பொறுப்பேற்றுக் கொள்கிறது.  அதுமட்டுமல்லாமல், படைப்பாளியின் மனவெளிக்குள் கவிதையின் ஊடாக வாசகரை அழைத்துச் செல்வதற்கும் இன்றைய கவிதைமொழி தன் பயணத்தை நீட்டித்திருக்கிறது.
   ஒரு பனுவலுக்குள் இயங்கும் பல பனுவல்களின் வெளிகளுக்குள் அரசியல், பொருளியல், சமூகம், உற்பத்தி,  உறவு, பண்பாடு, மொழி என எல்லாமும் விரவிக் கிடக்கின்றன.  சொற்களைக் கொண்டு கொலுவாக்கும் படிமங்களின் சலனங்கள், சொற்களற்ற மவுனத்திலிருந்து எழும்படிப் பண்ணுகின்றன.  ஒவ்வொரு கவிதையின் வெளியிலிருந்தும் சட்டெனத் தரையிறங்க முடியாத நிலையினையும், நெருங்க முடியாத தளத்தின் பக்கம் ஒட்டி நின்று பார்க்கும்படியாகவும் கவிதைகள் தளம் அமைக்கின்றன. இவற்றின் பக்கங்களில் எல்லாம் அலுப்படையாமல் மிக இலகுவாகக் கைகோர்த்துக்கொண்டு திரிவதற்கு லதாவின் கவிதைமொழி இடம் கொடுத்திருக்கிறது.
   வாழ்வின் சகலத்திலும் அரும்புகளைப் பழக்கி அதை அதனதன் இயல்பென்று விடுகிற உயிரியல்ல மனிதர். மனித வாழ்வின் மாற்றத்திலிருக்கும் பல தளங்கள் அணுக முடியாத புகைச் சுருள்களாக மாறுகின்றன.  தளங்கள் அனைத்தும் மனிதமயமாகிப் பேசிக்கொண்டிருக்கின்றன.  மவுனத்தோடு உணர்வுகளை எழுப்பும் உறவுகளைத் துலக்கிக் கொண்டிருக்கின்றன. நம்மோடு தொடர்புகொள்ள வைக்கப்பட்டவையோடுதான் நாம் நமக்கான பொருள்கோடலைக் கொண்டிருக்கிறோம் என்பதும், பல தளங்களை மறுத்துவிட்டு ஒரு தளத்தோடு நின்றுபோவதில் செழுமையான – உயிரோட்டமுள்ள வாழ்வின் நாலாவிதத்திலும் பாய்ந்துவிடக்கூடிய கற்றை இல்லை என்பதுவுமாக அவிழ்கின்றன பெண்ணின் கவிதைப் புலப்பாடுகள். அவ்வகையில், லதாவின் பாம்புக் காட்டில் ஒரு தாழை எனும் கவிதைத் தொகுப்பு அமைந்திருக்கிறது.
   புதிய இடமாற்றத்திற்கான துய்ப்புகள் சீக்கிரமே வழிந்து விடுகிறது. பழைய இடமே மனதில் உறைந்து போவதுண்டு. இங்கே ‘இடம் என்ற சொல்லை எடுத்துவிட்டுப் பலதோடும் பொருத்திப் பார்க்கலாம். நகரத்து உணவு மேசையில் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கும் பனுவல், புதிய ஈர்ப்பையும் ஈர்ப்புக்குப் பின்னாலான வலியின் அவதிகளையும் அசிங்கத்தையும் சகித்துக் கொள்ள முடியாத நெருக்கடியையும் படரவிட்டுவிடுகிறது. முழுமையும் ஆண் ஆளுமையைப் பற்றிக்கொள்ள ஏங்கப் பண்ணுவதாய் முயற்சிக்கிறது. முழுமையைப்போலத் தென்பட்டதெல்லாம் சாய்ந்துவிடாத வண்ணம் எவரையும் பிடரிதொட விரட்டிக்கொண்டிருக்கிறது.
   ஒவ்வொரு மனிதரையும் குறைந்த அளவு இகழ்ச்சியோடும், அதே அளவு புகழ்ச்சியோடும் சந்திக்கவோ பழக நேரவோ தயாரிக்கப்பட்டுவிடும் மன அமைப்பில் மனதை அதன் தன்மையுடன் புரிந்து கொள்வதற்கு “எதிர்பாராத பொழுது கவிதை உதவும்.
   பால்பேதம் சோர்வு தரும் (ப.32) கவிதையில் மனம், காலம், பெண், ஆண், இயக்கம் என எல்லாமும் அடங்கியிருக்கிறது.  “பிரிவுத் துயரில் உறையும் வெளி பற்றி, எவருக்கென்ன எனும் வரிகளின் இறுதியாகக் காலம் கடந்து, எதையும் கடந்து அனைத்துக்குமான உள்ளீட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.  மூர்க்கமும் மண்டியிடலும் மீறிய இயக்கம் அல்லாத கருணை கல்லாகி விடுகிறது.  எவ்வுயிருக்கும் எது தேவையானது? அல்லது அவ்வுயிருக்கே உள்ள தனித்துவம் எது? உன்னதமானது எது? என்கிற கேள்விகளுக்குக் ‘கரையும் கடலும் (ப.38) கவிதை பதில் சொல்லலாம். 
   நியாயம் மீறுகின்ற அநியாயத்தின் நியாய தர்க்கங்கள்  பிணைந்து கிடப்பதை எங்கிருந்து அவிழ்க்கத் துவங்குவது என்பதை அவரவரிடமே கொடுத்து விடுகின்றன பல கவிதைகள்.  இருத்தல் குறித்த கேள்விகளையும் பதில்களையும் தருவித்துப் பார்க்கிறபோது, தொலைந்துபோகும் அடையாளத்தைத் தொன்மம் வந்து தொட்டுத் துலக்குவதைப்போல உளறிக் கொட்டுகிறது மொழி. நம் வாழ்நாளில் ஒவ்வொரு மழையும் நினைவுகளைக் கிளறிவிடப் போதுமானவையாக இருந்தாலும், வெளியே காலத்தை வாரி இரைத்துத் தந்தாலும் கண்முன்னே தெரிகிற வெளி அழுகிக் கொண்டிருப்பதைக் காப்பாற்ற முடியாததாகவும் இருப்பதை ‘வெளி  (ப.52) கவிதை சொல்லிச் செல்கிறது.
   உலகம் இயக்கத்தால் ஆனது. உலகில் உள்ள யாவையும் இயங்குகின்றன.  இயற்கைக்குள் செயற்கையுமாக மனிதரின் மனமும் உடலும் இயங்கி இயங்கி வரலாற்றின் மிகச்சிறு நுகர்வுப் புள்ளிகளையும் உண்டாக்குகிறது. வரலாற்றின் சந்ததிகள் அதே இயக்கத்தில் மாற்றத்தைக் கோரும்போது இயக்கம் சூடு பிடிக்கிறது. இயக்கத்திற்கு அவசியம் மாற்றம். இயக்கத்தை விழிப்படையச் செய்வது மாற்றம். அதனால்தான், தலைமைகள் பின்வாங்குகின்றன; முரண்களைப் பிழையென்றே வாதிடுகின்றன; மாற்றத்தை முடிந்தளவு ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. முரண்களில் வெற்றி தோல்வி ஒருபுறம் இருந்தாலும், இயக்கத்தின் கவனிக்க முடியாத பக்கங்களைக் கவனிக்கக் கூடிய வசீகரத்தைப் பெற்றுவிடுகிறது. அந்த வசீகரத்தில் தங்கள் முகத்தைக் காட்டிக் கொள்ள எல்லா கொழுத்த நிழல்களும் கும்மியடிக்க வந்து விடுகின்றன.  மாற்றம் என்ற புள்ளி மதத்தில் – இனத்தில் சுழலச் செய்வதன் முற்சியாய் ‘மேய்ப்பன் (ப.56) கவிதை தெளிவான போக்கில் மிகச் சிக்கலான பொறியைத் தட்டி விடுகிறது. உலகை இழுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லும் எல்லாக் குதிரைகளுமே
     ‘இருப்பு மறுப்பு / பிளப்பு மரிப்பு /
     கடந்து கடந்து / புதிய உயிர்ப்பு (ப.71)
என்பதற்குத் தலை கவிழ்த்துக் கொள்ள வேண்டும்.
     காத்திருப்பதில் நட்டமெதுவும் / பெரிதாய் இல்லை /
     உயிர் வாழ்வதைகத் தவிர  (ப.62)
உயிர் வாழ்தலில்தான் காத்திருப்பு வாய்க்க முடியும். மரபிலிருக்கும் தலைவி தலைவன் களவு முற்றிலும் நவீனத்தில் தகைவது, கூட்டை விட்டுவிட்டு வெளியே பறப்பதாகக் கொள்ளலாம்.  மரபிலிருந்து மிகக் கணிசமாகப் பெற்றதை அடுத்த கட்டப் பாய்ச்சலுக்காக அதன் மிளிரலை ஒளிரவிடுவது அழகு. ‘ஆற்றுப் பாடல் (ப.75) பாவத்தை விடுவித்துக் கொள்கிற மனத்தின் நவீன களத்தின் துல்லியங்களைப் பார்வைக்கு வைக்கிறது.
   கட்டுப்பாடுகளைக் கொண்டது புனிதமெனச் சமைத்தெடுக்கிறபோது,  அது தன் வன்முறையை நியதிகளின்பாற்பட்டதாகத் தக்க வைப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு எழும்பும் எதிர்மையைச் சாத்தானாகவே குறிக்கப் பெறுகிறது.    போர்ட் கேனிங் கோட்டை வாசல் (ப.98) போல எத்தனையோ கோட்டைகள் – எத்தனையோவற்றின் புதைகுழியிலிருந்து நம்மிடம் பேசுவதற்காக நின்றிருந்தாலும், ஆளும் திமிர் அதன் வாயைக் கட்டிப்போட்டு பிச்சை வாங்கும் யானையாய் மாற்றிவிட்ட பிறகு, எங்கோ போய்க்கொண்டு இருக்கிறோம் என்பதை உறைய வைக்கிறது கவிதை.
   ‘பானையில் கரைகிறது சூரியன்  (ப.101). இது நவீன மனவெளி மட்டுமல்ல; தடித்துத் தட்டையாகிக் கோணிக் கொண்டிருக்கும் நாசமான / சாரமற்ற வாழ்வு வெளியும் இதுதான்.  பிழிந்தெடுக்கப்பட்ட மக்களை, தோளில் கிழிந்துபோன துண்டாய்ப் போட்டபடி வரும் அரசியலை “கருப்புச்சாலை கவிதை பல நகர்வுகளுக்குச் சாத்தியமாக்குகிறது.  உள்ளூரில் சாதியாகவும் அயலில் தோல் நிறமாகவும் பார்க்கும் பேதத்தை ‘செப்டம்பர் 11 (ப.92) கவிதை வழியாக வரலாற்று அரசியலைத் தொட்டு உள்ளில் நிகழும் வாழ்வுப் போக்கினைப் பேசுகிறது.
   பெண்மொழி, தன் உடலின் மூலம் இயற்கை யாவற்றையும் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இயற்கையே பெண்ணாக ஆகும்போது பெண்ணின் மொழியும் இயற்கையான ஒன்றாகிறது.  செயற்கையாகிவிட்ட / வறட்சிமிக்க மொழிக்கு மாற்றாக அது தன்னைப் பேசுகிறது. முதன் முதலாக அது தன்னிலிருந்தும் தனது சுயத்திலிருந்தும் பேசுகிறது.  யோனியிலிருந்து தொப்பூள்க் கொடிக்கு நகரும் ஈரத்தை மீண்டும் சிவப்பு ஈரத்துடன் மண்ணில் விதை கொண்டு எழச் செய்பவரின் மொழி ஆண்மொழியிலிருந்து விலகித்தான் நிற்கும்.  காலத்தை உண்டு செரித்து வலிகளைச் சுமக்கும் பெண்மொழி இயற்கையாகவே வித்தியாசப்பட்டுத்தான் நிற்கும்.  இயற்கையே பெண்ணுடல் என்பதற்குச் சிவற்றைச் சுட்டலாம்.
       ‘வலி ருசிக்கும் அற்புதத்தை / அறிவாயோ என் பூவே 
       ‘அணுவைத் துளைக்கத் / தாங்குமா என் சிறு பூ (ப.11) 
       ‘தீயில் விறைத்து நின்ற காலம் / நீர்த் தூவலில் வெடித்துச் சிதற
       விழிகள் உயிர்பெற்று விடை பெற்றன (ப.33) 
       ‘வெளி எங்கும் பாம்பு......./ மடல்களை உதிர்த்த தாழை  
       ஒற்றைத் தண்டுடன் / வளர்கிறது  (ப.46)  
   மதம் முன்மொழிய மனிதர்கள் வழிமொழியத் தொடரும் வரலாற்றில் புது முடிச்சுப் போடும் நிகழ் அசாதாரணமானது.  ஆண்மைக்கு எதிராக நிலைபெறும் பெண்மை சரிக்குச் சரியாக இருக்கிறதே தவிர, தாழ்வென்று கற்பிக்கும் ஆண்மொழிக் கருத்தியலைத் தகர்த்திட பெண் உடலும் ஆயுதமாக முன்வந்து வரலாற்றினைப் புரட்டிப்போடத் தொடங்கியிருக்கிறது.  லதாவின் எல்லாக் கவிதைகளிலுமே இத்தகையப் பெண்மொழிச் சொல்லாடல்கள் முளைத்திருப்பதைக் கவனிக்கலாம்.
                                                
நன்றி : புதிய கோடாங்கி இதழ்



வியாழன், 24 டிசம்பர், 2015

இருத்தல் உளவியல் : முல்லைப் பாட்டை முன்வைத்து… : மகாராசன்

 இருத்தல் உளவியல் :
 முல்லைப் பாட்டை முன்வைத்து…          :  மகாராசன்

   மக்களின் வாழ்வியல் வழக்கங்களிலும் புழக்கங்களிலும், வாய்மொழி மரபிலும் நிகழ்த்து மரபிலும் தமிழ் செழித்து நின்ற அதேவேளையில், சங்கம் வைத்துத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பெருமளவு இயற்றப்பட்டு எழுத்து மரபிலும் தமிழ் தழைத்து வளா்ந்தது.  அந்தவகையில் தமிழின் மணிமுடியாகத் திகழ்பவை பாட்டும் தொகையுமாகும். இவற்றைச் சங்கப் பாடல்கள் எனப் பொதுவாகச் சுட்டுவா்.
   சங்கப் பாடல்கள் எனப்பெறும் பாட்டும் தொகையுமாய் அமைந்த திணைசார் பாடல்கள் தோன்றிய காலம் வேறு; தொகுக்கப்பட்ட காலம் வேறு. தோன்றிய காலம் முதல் தொகுக்கப்பெற்ற காலம் வரையில் தெரிவு செய்யப்பட்ட பாடல்களின் தொகுதியே பாட்டும் தொகையுமாகும். அடியை அளவாகவும், அகத்தையும் புறத்தையும் எல்லையாகவும், பா ஒப்புமையை வரம்பாகவும் கொண்டு தொகை தொகையாக வகை செய்தனா்.  மேலும், அவற்றைக் குறைந்த அடிகளைக் கொண்டவை; நீண்ட அடிகளைக் கொண்டவை எனத் தனித்தனியாகத் தொகுத்தனா்.  இத்தொகுப்பையே பதினெண் மேற்கணக்கு  எனச் சுட்டுவா். தமிழின் இலக்கிய மரபை அறிந்தவர்கள், பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களைத் திணை இலக்கியங்கள் என்றே குறிப்பிடுவர்.
   பதினெண் மேற்கணக்கு நுால்களில் ஒரு பிரிவு பத்துப்பாட்டு. பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் உள்ள முல்லைப் பாட்டு என்னும் அய்ந்தாவது பாட்டு, முல்லைத்திணை பற்றிய அகப்பொருள் பாட்டாக அமைந்திருக்கிறது. பண்டைத் தமிழ் இலக்கியப் பாடுபொருள் மரபானது அகப்பொருளையும் புறப்பொருளையுமே வெளிப்படுத்துகின்றது.  இவற்றுள்,  அகமானது ஒத்த அன்பினராகிய தலைவியும் தலைவனும் தம்முள் கூடுகின்ற காலத்தில் உள்ளத்து உணா்வால் துய்க்கும் இன்பம். அவ்வின்பம் இன்ன தன்மையுடையது எனப் புறத்தார்க்குக் கூற இயலாத அகத்துணர்வு உடையதாகையால் அகப்பொருள் எனப்படும் என்பர் சான்றோர்.
   தொல்காப்பியம் ஏழுவகையான அகப்பொருள் திணைகளைக் குறிப்பிடுகின்றது. அவற்றுள் அன்பின் அய்ந்திணைகளாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைத் திணைகள் குறிக்கப்படுகின்றன. குறிஞ்சி  முதலிய குறியீடுகள் அந்தந்த நிலத்திற்குரிய மலர்களின் பெயர்களே என்றும்;  இப்பெயர்கள் பின்னர் உரிப்பொருளைப் புலப்படுத்தும் குறியீடுகள் ஆயின என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனா்.   இந்நிலையில், முல்லை என்பது முல்லைப்பூ அல்லது முல்லைக் கொடியைக் குறிக்கும்.  முல்லையின் மிகுதி அல்லது சிறப்பு குறித்து முல்லை வளரும் நிலத்திற்குப் பெயராகி அந்நிலத்து நிகழும் ”ஆற்றியிருத்தல்” என்னும் ஒழுக்கத்தையும் இச்சொல் குறிக்கிறது. ஆயின், முல்லை என்பதன் பொருள் ”இருத்தல்” என்றும், விளக்கு ஆகிய சுடர் இருந்த இடம் விளக்கு என்று சொல்லப்படுவது போல, இருத்தலாகிய ஒழுக்கம் நிகழும் இடமும் முல்லை எனப்படும் என்கிறார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்.
     ”வஞ்சிதானே முல்லையது புறனே”  எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது.  முல்லை என்னும் அக ஒழுக்கத்திற்கு இயைவுடைய புற ஒழுக்கம் வஞ்சியாகும். ஓா் அரசர் பகையரசா் நாட்டினைக் கைப்பற்றப் படையெடுத்தல் வஞ்சியாகும் என மரபிலக்கணங்கள் குறிப்பிடுகின்றன.
   தலைவி தமது தலைவனைப் பிரிந்து இல்லத்திலே இருப்பது போல, தலைவனும் தமது தலைவியைப் பிரிந்து பாசறையில் இருப்பான்.  தலைவி, தலைவனைப் பிரிந்து இருக்கும் மனையானது காடுசூழ் உலகமாகும். அதேபோல, தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனின் பாசறையும் காடுசூல் உலகத்தே அமைக்கப்படுகின்றது.  ஆகையால், வஞ்சித் திணை முல்லைத் திணைக்குப் புறனாவது பொருந்தும்.  இந்நிலையில், முல்லைத் திணையை விரித்துச் சொல்லும் முல்லைப்பாட்டு, முல்லைத் திணையோடு தொடா்புடைய வஞ்சித் திணையையும் கூறிச் செல்கிறது. அதாவது,  எடுத்துரைக்கும் பொருளுக்கு மாறுபாடு இல்லாமல், வேறொரு பொருளை உட்செருகி, மேற்கொண்ட பாடலின் தொடா்பு அறுபடாமல் திறம்படவும் நுட்பமுடனும் எடுத்துரைக்கிறது முல்லைப்பாட்டு.
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவா் பெயா்கொளப் பெறாஅா்.
என, தொல்காப்பியம் அகப்பொருள் மரபைக் குறித்து விளக்குகிறது.  இத்தகைய அகப்பொருள் மரபிற்கேற்ப, பத்துப்பாட்டுள் முல்லைப்பாட்டு ஒன்று மட்டுமே பாட்டுடைத் தலைவரைக்  குறிக்காமல் அகப்பொருள் மரபுத் தடத்தில் பயணிக்கிறது.  ஆனால், தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியனையே முல்லைப்பாட்டு குறிப்பதாகச் சிலா் சுட்டுவா்.  அதாவது, பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டுக்கு அடுத்து உள்ள மதுரைக் காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைத் தலைவனாகக் கொண்டிருத்தலால், அவற்றுக்கு முன்னுள்ள முல்லைப்பாட்டும் அவனையே தலைவனாகக் குறிக்கிறது என்ற கருதுகோளை முன்வைப்பா் சிலா்.  இக்கருதுகோள் முல்லைப் பாட்டுக்குப் பொருந்தி வராத ஒன்றாகும். முல்லைப்பாட்டில் வஞ்சித்திணை பற்றிய செய்திகளும் விரவி வருவதனால் அதனைப் புறம் பற்றிய பாட்டாகக் கருதமுடியாது.  
   முல்லைப்பாட்டின் எந்தஓா் இடத்திலும் தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பற்றிய செய்தியைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ சுட்டவில்லை.  மாறாக, தலைவியைப் பிரிந்திருக்கும் தலைவனது நிலையினையும், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியது நிலையினையும் படம்பிடித்துக் காட்டுகிறது முல்லைப்பாட்டு. குறிப்பாகச் சொல்வதானால், தலைவி தலைவனது நெஞ்சங்கள் ஆற்றியிருக்கும் நிலையில் அவ்விரு நெஞ்சங்களைத் தேற்றும் வகையிலும் ஆற்றுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றது முல்லைப்பாட்டு.  அதனால்தான், முல்லைப்பாட்டை நெஞ்சாற்றுப்படை எனக் குறிப்பிடுகிறார் அறிஞர் தமிழண்ணல்.
   பொருள் தேடல் காரணமாகவோ அல்லது போர் காரணமாகவோ பிரிந்து செல்லும் தலைவன், கார்ப் பருவத் தொடக்கத்திற்குள் வந்து விடுவதாகக் கூறிப் பிரிவான். அவ்வாறு கூறிச் சென்ற தலைவன் வரும்வரையில் ஆற்றியிருத்தல் தலைவியின் கடமை என்பதாக முல்லைத் திணை மரபு சுட்டுகின்றது.  இல்லத்தில் இருந்து இல்லறக் கடமைகளை ஆற்றுவது தலைவிக்கு உரியது எனவும், இல்லறம் தாண்டிய தொழில் மற்றும் போர் தொடா்பான புற உலகக் கடமைகளை ஆற்றுவது தலைவனுக்கு உரியது எனவும் பண்டைக் காலத்தியப் பண்பாட்டு மரபாகப் பேணப்பட்டுள்ளது.  இவ்வாறான பண்பாட்டு வாழ்வியல் சூழ்நிலையில் தலைவி மற்றும் தலைவனது உள்ளத்து உணா்வுகளைப் புலப்படுத்தும் பாங்கில் அகத்திணை இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன.
   பகைவரோடு போர் செய்யக் கருதிப் புறப்பட்ட தலைவன் தன் தலைவியை நோக்கி, தான் பிரிந்து செல்ல வேண்டியதன் தேவையை நயம்பட எடுத்துக் கூறிப் பிரிந்து சென்றான்.  அவ்வாறு தலைவன் கூறிச்சென்ற காலம் முதுவேனில் பருவமாகும். தலைவனின் பிரிவை ஆற்ற முடியாமல் வருத்தம் முற்றியிருக்கும் தலைவி, முதுவேனில் பருவத்தை ஒருவாறு கழித்து ஆற்றியிருந்தாள்.  தலைவன் கூறிச்சென்ற கார்ப் பருவத் தொடக்கம் வந்தெய்தியது.
   ”காலை வாராராயினும் மாலை காண்குவம்” என்கிற சிறு நம்பிக்கையின்மேல் தலைவியின் உயிர் தரித்து நின்றது.  காலைப்பொழுதும் உச்சிப்பொழுதாகி, பின்பு கதிர் சாயத் தொடங்கியது.  அத்தகைய மாலைப் பொழுதுதான் ”கொலைக்களத்து ஏதிலா் போல”  வந்தெய்தியது. ஆயினும், தன் ஆருயிர்த் தலைவனோ இன்னும் வரவில்லை என்ற தவிப்பில் உழன்று துடிக்கும் தலைவியின் மனநிலை பாடாய்ப் படுத்துகின்றது. இந்நிலையில்தான் முல்லைப்பாட்டு தொடங்குகின்றது.  
   கார்ப் பருவ வருகையைக் குறித்துத் தொடங்கும் முல்லைப் பாட்டானது 
               பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை
என்கிறது.  பெருமழை பொழிந்தது மேகம்.  பெருமழை பெய்திட்ட காலம் கார்ப் பருவம்; சிறுபொழுதான மாலைக் காலமாகும். இத்தகைய மாலைப் பொழுதுதான் பிரிந்தவா்களுக்கு  வருத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.  அதனால்தான், மாலைப் பொழுதைச் சிறுபுன்மாலை எனக் குறிப்பிடுகிறது  முல்லைப்பாட்டு. மாலைப் பொழுதில்தான் பிரிவாற்றாமைத் துன்பம் மிகும் என்பதை 
   காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
   மாலை மலரும் இந்நோய்.
எனக் குறளும் குறிப்பிடுகிறது.
   கார்ப் பருவம் வந்த பின்னாலும் தலைவன் வராது இருத்தலைக் கண்டு பெரிதும் ஆற்றாமையுற்ற தலைவியின் துன்பம் கண்ட முது பெண்டிர், தலைவன் வருகை குறித்து விரிச்சி கேட்க, கேட்ட விரிச்சியை இன்னவென்று முது பெண்டிர் எடுத்துரைத்தாலும், தலைவன் வருகையை எதிர்பார்த்துத் தவிக்கும் தலைவிக்குத் தேறுதல் மொழி கூறித் தேற்றினாலும் தலைவி தேறுதல் அடையவில்லை.  மாறாக, 
காட்டவும்; காட்டவும் காணாள், கலுழ்சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப
கலங்கித் தவித்தாள். தலைவி குறித்து முல்லைப்பாட்டு கூறுகிற இவ்விடத்திற்குப் பொருளுரைக்கும் நச்சினார்க்கினியர்,   இது  ”நெய்தற்குரிய இரங்கல் பொருளன்றி முல்லைக்குரிய இருத்தல் பொருளாகாது” என்கிறார்.
   நச்சினார்க்கினியரின் மேற்குறித்த பொருள் கோடல் தவறானது என்கிறார் அறிஞர் மறைமலையடிகள். ”வேனிற்காலத் தொடக்கத்தில் தலைவன் தான் பிரியும்போது யான் கார்காலத் துவங்குதலும் மீண்டு வந்து நின்னுடன் இருப்பேன். நீ அதுகாறும் நம் பிரிவாற்றாமையால் நிகழும் துயரைப் பொறுத்திருத்தல் வேண்டும்”  என்று கற்பித்த வண்ணமே ஆற்றியிருந்த தலைமகள், அவன் குறித்த கார்ப்பருவம் வரக்கண்டும், அவன் வந்திலாமையால் பெரிதும் ஆற்றாலாகினாள்.  இது உலக இயற்கை.  இங்கனம் ஆற்றாலாகின்றமை கண்ட பெரு முதுபெண்டிர் விரிச்சி கேட்டு வந்து வற்புறுத்தவும் ஆற்றாது வருந்தும் தலைவி, பின் நாம் இங்ஙனம் ஆற்றாமை வருந்துகின்றது,  கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியும்”  என்று நெடுக நினைத்துப் பார்த்து, அவா் வருந்துணையும் நாம் ஆற்றுதலே செயற்பாலது என்று தன்னைத் தேற்றிக்கொண்டு கிடந்தாள் என்பது முல்லைப்பாட்டின் 82-ஆவது அடிமுதல் நன்கெடுத்துக் கூறப்படுதலின் இப்பாட்டின்கண் முல்லை ஒழுக்கமே விளக்கமாகச் சொல்லப்பட்டது என நச்சினார்க்கினியரின் கருத்தை மறுத்துரைக்கிறார் மறைமலையடிகள்.
   மறைமலையடிகளாரின் மேற்குறித்த கருத்தோடு ஒத்தும் நச்சினார்க்கினியரின் கருத்தை மறுத்தும் பொ.வே. சோமசுந்தரனாரின் கருத்தும் அமைகின்றது.   ”மனவியல் உணர்ந்த ஆசிரியா் நப்பூதனார், ஈண்டுத் தலைவி தலைவன் வருகை காணாமையால் புதிதாக எழுந்த துயராலே துன்புற்றாள் என்றும்,  அந்நிலையிலே முதுபெண்டிர் தேற்றினா் என்றும், அவள் கண்கள் முத்துதிர்த்தன என்றும், அங்கனம் துன்பம் மிக்குழியும் அவா் வருந்துணையும் நாம் ஆற்றுதலே செயற்பாலதென்று நீடு நினைத்துத் தேற்றியும், திருத்தியும், மனத்தை வேறு பொருளில் திருப்பி இன்பல இமிழிசை ஒர்ப்பனள் கிடந்தோள் என்றும் ஆற்றியிருத்தல் பொருளாகிய முல்லைப் பொருளையே நுண்ணிதின் கூறியிருக்க, நச்சினார்க்கினியர்  இங்கனம் கூறுதல் பொருந்தாமை உணா்க எனக் கருத்துரைக்கிறார் பொ.வே. சோமசுந்தரனார்.  ஆக, பூப்போல் உண்கண் புலம்பு முத்துரைப்ப என்பது,  முல்லைக்குரிய ”இருத்தல்” என்பதையே குறிக்கிறது எனலாம்.
   தலைவனைப் பிரிந்த தலைவியின் இருத்தல் உளவியலைப் புலப்படுத்திய முல்லைப்பாட்டு, 24-ஆம் அடிமுதல் 80-ஆம் அடிவரையில் முல்லைக்குப் புறமான வஞ்சித்திணை தொடா்புடைய செய்திகளை இடைப்பிறவரலாக எடுத்துரைத்துவிட்டு, பின்பு தலைவியின் நிலையை மீண்டும் புலப்படுத்த முனைகின்றது. 
                                காணாள் துயா் உழந்து 
   நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு
   நீடு நினைந்து தேற்றியும், ஓடுவளை திருத்தியும்,
   மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
  ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து
  பாவை விளக்கில் பரூஉச் சுடா் அழல,
  இடம்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து,
  முடங்கு இறைச் சொரிதரும் மாத்திரள் அருவி
  இன்பல் இமிழ்இசை ஓா்ப்பனள் கிடந்தோள்
  அஞ்செவி நிறைய ஆலின.
எனத் தலைவியின் நிலைமையைச் சுட்டுகிறது முல்லைப்பாட்டு.
   ஒழுகும் மழைநீரின் ஓசையைக் கேட்டவாறு தலைவனை எண்ணிக் கிடக்கிறாள் தலைவி. அம் மழைக் காலத்தே முல்லை நிலம் செழித்துக் கிடக்கிறது. தலைவனும் போர்வினை முடித்துத் திரும்பிக் கொண்டிருக்கிறான்.  தலைவன் முல்லை நிலத்திலே தவழும் காட்சியைக் காண்கிறான்.
செறி இலைக் காயா அஞ்ஞனம் மலர,
முறி இணா்க் கொன்றை நன்பொன்கால,
கோடல் குவிமுகை அங்கை அவிழ, 
தோடு ஆா் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி,
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்,
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள
எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களில்
என்பதாகத் தலைவன் காணும் முல்லை நிலக்காட்சி அமைகின்றது.
   மேற்குறித்தவாறு விவரிக்கப்படும் முல்லை நிலக்காட்சிகள், முல்லை நிலத்தின் இயல்பை மட்டும் எடுத்துரைக்கவில்லை. இவ் எடுத்துரைப்பின் ஊடே தலைவியைப் பிரிந்திருந்த தலைவனின் மனதுக்குள் முளைத்துச் செழித்திருக்கும் தலைவி மீதான அன்புப் பெருக்கம் உள்ளுறையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை வலுப்படுத்தும் வகையிலே
முதிர்காய் வள்ளிஅம் காடுபிறக்குஒழிய 
துணைபரி துரக்கும் செலவினா்
என்பதாகச் சுட்டுகிறது முல்லைப்பாட்டு.  அதாவது, முல்லை நிலத்துச் செந்நிலப் பெருவழியில் தலைவியைக் காணும் வேட்கையில் தேரைச் செலுத்தி வருகின்ற தலைவனின் மனநிலை புலப்படுத்தப்படுகிறது. இயல்பாகவே விரைந்து செல்லும் இயல்புடைய குதிரைகளை மேலும் மேலும் துாண்டி வருகிற தலைவனது வேட்கை இதன்வழி வெளிப்படுகிறது. தலைவன் தலைவியைக் காண்பதற்குப் பெரிதும் வேட்கை கொண்டிருப்பது குறிப்பாய் உணா்த்தப்படுகிறது.
   தலைவனின் இத்தகைய மனநிலையைக்      குறித்துப் பேராசிரியா்  அ.சீநிவாசன் பின்வருமாறு விளக்கியிருப்பது, தலைவனின் உளவியலை நன்கு புலப்படுத்தும்.  
   தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமையைத் தலைவனோடு ஒப்புநோக்கத் தலைவன் சிறிதும் குறைந்தவன் அல்லன்.  தலைவி கார்காலம் வரும்வரை ஆற்றியிருக்கிறாள்.  தலைவனும் கார்காலம் வரும்வரை போர்வினை ஆற்றியிருக்கிறான்.  கார்காலத்தில் தலைவன் தலைவி இருவருமே வெவ்வேறிடத்தில் ஆற்றாதிருக்கின்றனா்.  இருவா்தம் ஆற்றாமைக்கும் காரணம் கார்காலம் ஆகும்.  கார்காலம் உயிரினங்கள் கூடி மகிழும் காலம். வினை மேல் சென்ற தலைவனுக்கு எதிர்பாராத வகையில் சிறிது காலம் நீட்டிப்பினும், வினை முடித்துக் கார்காலத்தில் தலைவியிடம் வந்து சோ்வதைக் காணலாம்.  தலைவி தலைவன் இருவா்தம் ஆற்றாமை என்பது கார்காலத்தின் குறுகிய காலமே அன்றி, பெரும்பான்மை ஆகாது. கார்காலம் தலைவன் தலைவி இருவரும் இல்லிருந்து மகிழும் காலம்.  எனவே ”இருத்தல்” என்பது தலைவிக்கு மட்டும் உரிய ஒழுக்கம் அன்று. தலைவன் தலைவி இருவரும் சேர்ந்திருந்த நிலையில் ஒருவா் மற்றொருவரின் காதல் உணா்வுகளை மதித்து மகிழ்ந்து வாழும் அகவொழுக்கம் எனலாம் என விவரிக்கிறார் பேராசிரியா் அ. சீநிவாசன்.
   மேற்குறித்த விவரிப்புகளின் அடிப்படையில் முல்லைபாட்டை நோக்கும்போது, ஆற்றியிருத்தல் தலைவிக்கு உரியதாக மட்டும் அல்லாமல் தலைவனுக்கும் உரித்தாக அமைந்திருப்பது புலனாகிறது.  தலைவியின் ஆற்றியிருத்தல் ஏங்கித் தவிப்பதின் வழியும், தலைவனின் ஆற்றியிருத்தல் பெருவேட்கையின் வழியும் பொங்கி வழிவதை முல்லைப்பாட்டின்வழி அறிய முடிகிறது.
   முல்லைத் திணையின் உரிப்பொருளான ”இருத்தல்” தன்மையைத் தலைவி நோக்கிலும் தலைவன் நோக்கிலும் புலப்படுத்துகிறது முல்லைப்பாட்டு. ”இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லைத் திணையின் உரிப்பொருளாகும்.”  அந்தவகையில், வினையிற் பிரிந்த தலைவனை நினைத்துத் தலைவி கார்ப் பருவத்தில் ஆற்றாதிருத்தலும், தலைவன் வருகையை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து இருத்தலும் தலைவி நிலையில் இருத்தல் நிமித்தங்களாகும். தலைவன் கார்ப் பருவத்தில் தலைவியிடம் போய்ச் சேருதல் வேண்டும் என்று வினை முடித்து விரைந்து வருதலும் தலைவன் நிலையில் இருத்தல் நிமித்தங்களாகும்.  இந்நிமித்தங்கள், தலைவி தலைவன் இருவரும் சோ்ந்து வாழவேண்டும் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகின்றன. ஆக, தலைவியின் இருத்தல் உளவியலையும், தலைவனின் இருத்தல் உளவியலையும் ஒருங்கே புலப்படுத்தி முல்லைத் திணையை அன்பின் திணையாகவே புலப்படுத்துவதில் முல்லைப்பாட்டு சிறப்படைகிறது எனலாம்.


திங்கள், 14 டிசம்பர், 2015

திணைமொழி எடுத்துரைப்புகள் :- மகாராசன்

திணைமொழி  எடுத்துரைப்புகள்                 
 :  மகாராசன்


தமிழினத்தின் தொன்மைச் சிறப்புகள்,  செழுமையான வாழ்க்கை முறைகள், வளமையான பண்பாட்டுக் கூறுகள், பொதுமை நோக்கிய அறிவுப் புலப்பாடுகள் போன்ற இன்ன பிறவற்றையும் எடுத்துரைக்கும் சான்றுகளாக இலக்கியப் பதிவுகளும் திகழ்கின்றன.
   வாய்மொழி மரபிலும் எழுத்து மரபிலும் செழித்து வளா்ந்து கொண்டிருக்கும் பாங்கை, தமிழ் கொண்டிருக்கிறது. அயலவா்களின் அதிகாரம், குடியேற்றம், மற்றும் பண்பாட்டுப் படையெடுப்புகளால் சிதைந்து போகாமல் எண்ணற்ற பண்பாட்டுக் கோலங்களைத் தம்மகத்தே கொண்டிருக்கும் மொழியாகத் தமிழ் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
   வரலாற்றுத் தொன்மையும் பண்பாட்டுச் சிறப்பும் கொண்ட மொழிகளுள் தனியிடமும் சிறப்பிடமும் பெற்றுத் திகழ்கிறது தமிழ்.  செந்தமிழாகவும் செழுந்தமிழாகவும் சிறந்து விளங்கும் தமிழின் முதன்மை அடையாளமாக ஒளிவீசும் தன்மை கொண்டிருப்பது பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்தான். தமிழ் இலக்கிய வரலாற்றின் ஆணிவேராகவும் முதுகெலும்பாகவும் பலவகைப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் திகழ்ந்தாலும் தமிழ் இலக்கிய மரபின் தலைநிமிர்வாய்த் திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்தான்.
   ஒருகாலத்தில், தமிழ் இலக்கியம் என்றாலே புராணங்களும் இதிகாசங்களும் பக்திப்பாடல்களும் சிற்றிலக்கியங்களும்தாம் என்கிற நினைப்பும் போக்கும் எஞ்சியிருந்தன.  இவைமட்டும் அல்லாது தமிழ்மொழி சமக்கிருத மொழியிலிருந்து தோன்றியது;  தமிழால் தனித்தியங்க முடியாது;  அய்ந்தெழுத்தால் ஆன ஒரு பாடை என்றெல்லாம் எழுதப்பட்டதையும் சொல்லப்பட்டதையும் தமிழா்களே காலங்காலமாய் நம்பியும் வந்த காலத்தில்தான்,  தமிழ் திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்; தமிழ் தனித்து இயங்கக் கூடியது; சமக்கிருதம் வேறு;  தமிழ் வேறு; தமிழ் செவ்வியல் தன்மை கொண்டிருப்பது என்கிற உண்மைகளை உலகுக்கு உரத்துச் சொன்னவர் அறிஞா் கால்டுவெல்.
   இந்திய ஒன்றியத்தின் நிலப்பகுதி வரலாற்றுத் தொடக்கத்தை வடக்கிலிருந்து சொல்லி வந்த நிலையில், மனிதகுலத் தோற்றத்தின் வரலாற்றையே இந்திய ஒன்றியத்தின் தென்கோடியில் இருந்து தொடங்க வேண்டும்;  உலக மாந்தா் தோன்றிய நிலப்பகுதி குமரிக்கண்டம்;  உலக மாந்தா் முதலில் பேசிய மொழி தமிழ் என்பதையெல்லாம் தெளிவுபடுத்த முனைந்தவா் அறிஞா் பாவாணா்.  இவ்வாறாக கால்டுவெல், பாவாணா் போன்றோரின் எடுத்துரைப்புகளுக்கு வலுசோ்க்கும் சான்றுகளாய் அமைவன பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்தான். இவற்றுள் பெரும்பாலானவற்றைத் தொகுத்தும் பதிப்பித்தும் வெளிக்கொணர்ந்தவர் அறிஞர் உ.வே.சா. ஆவார்.
   பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நுால்கள் அனைத்தும் திணை எனப்பெறும் நிலம்சார் பண்பாட்டு வாழ்வியல் மரபை எடுத்துரைக்கும் இலக்கியங்களாய் அமைந்திருக்கின்றன.  தொல் தமிழ் இலக்கியத்தின் மரபே திணை  என்னும் மரபுதான். ஒட்டுமொத்தத் தமிழினத்தின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கவில்லை என்றாலும், ஏதோ ஒருவகையிலான வரையறுப்பு வெளிகளுக்கு உட்பட்ட தமிழரின் அகவாழ்வையும் புறவாழ்வையும் திணை என்னும் மரபின் வழியே எடுத்துரைக்கும் பாங்கு பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் வெளிப்பட்டிருக்கிறது. இத்தகையச் சிறப்பு வாய்ந்த பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும் ‘சங்க இலக்கியம்’ எனப் பொத்தாம் பொதுவாய் அழைக்கும் மரபு பெரும்பாலோரின் சிந்தனை மரபுகளில் படிந்திருக்கிறது.
   பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும் பொருண்மை நோக்கில் பெயரிட்டு அழைப்பதுதான் அவ்விலக்கியங்களுக்கான மதிப்பு இருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றின் மரபுகளையும் பொருண்மைகளையும் முழுமையாய் அறிந்தவா்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இலக்கியங்களைத் ”திணை இலக்கியங்கள்” என்றே சுட்டுவா்.  திணை இலக்கியம் என்னும் சொல்லாடல்தான் சரியான சொல் வழக்காகவும் அழகியலாகவும் இருக்கமுடியும்.  இத்தகைய திணைசார் இலக்கியங்கள் வெறுமனே மரபு இலக்கியங்களாக மட்டுமே நின்றுவிடாமல், இன்றைய நவீன காலத்திய இலக்கியம் வரையிலும் பயணித்துக்கொண்டிருக்கும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றன.
   மண்ணுக்குள் புதைந்திருக்கும் விதையானது மழை பெய்யும் காலம் வரையிலும் காத்திருந்து, மழைபெய்த பின்னால் சில்லென்று முளைத்துக் கிளம்பி காடு, மேடு எல்லாம் பச்சை போர்த்தி, சிலிர்த்துக் கிளைத்து,  பூத்துக் குழுங்கி, காய்த்துக் கனிந்த பின்பு, மீண்டும் விதையாகி மண்ணுக்குள் புதையுண்டுபோகும் விதைபோல, திணைசார் கவிதைகள் யாவும் அவை தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை புதையுண்டு புதையுண்டு முளைத்துக்கொண்டிருக்கும் தாய்மைப் பண்பைக் கொண்டிருக்கின்றன.
   ஒரு காலகட்டத்திய ஒருசார் மக்களின் புலப்பாடாக வெளிப்படும் ஓா் இலக்கியம் அல்லது கவிதை, பலகாலம் கடந்தும் பல தலைமுறைக்கும் வந்து சோ்வதில்தான் அதன் உயிர்ப்பும் ஆற்றலும் உள்ளடங்கி இருக்கிறது.  ஓா் இலக்கியம் அல்லது கவிதை காலந்தோறும் தலைமுறைதோறும் பயணிக்கும்போது பல்வேறு வகையிலான புரிதலுக்கும் வாசிப்புக்கும் நுகா்வுக்கும் இடமளிக்கும் வகையில் அமையும்.  அவ்வகையில் திணைசார் கவிதைகளும் அன்றைய காலகட்டத்திலிருந்து இன்றைய நவீன காலகட்டம் வரையிலுமாகப் புதிய புதிய வாசிப்புக்கும் நுகா்வுக்கும் உரிய வாயில்களை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக, அகத்திணைக் கவிதைகள் யாவும் மழைபெய்யும் போதெல்லாம் முளைக்கும் விதைபோல் வாசிக்கும் போதெல்லாம் புதிய நுகா்வை, புதியதான பொருண்மையை, புது மாதிரியான அழகியலைத் தரும்படியாகப் பல உள்ளீடுகளைக் கொண்டிருக்கின்றன.  அதாவது,  திணைசார் கவிதை மொழியானது மரபின் ஆணிவேராகவும் புதைந்து இருக்கிறது;  நவீனத்தின் கிளைகளாகவும் படர்ந்திருக்கிறது.
   மொழி என்பதே குறியீடுகளின் தொகுப்பாகத்தான் அமைந்திருக்கிறது. சொற்கள் நிரம்பிக் கிடக்கும் மொழியைச் செதுக்கிச் செதுக்கித்தான் கவிதை உருவாக்கப்படுகிறது.  புறநிலையில் ஒரு பொருளாக்கத்தையும் புதைநிலையில் வேறு வேறு பொருளாக்கத்தையும் கொண்டிலங்கும்  கவிதையை, வாசிப்புக்குத் தகுந்தாற்போலப் பொருள்கோடல் செய்வதற்கு வாய்ப்புகள் நிரம்ப உண்டு. அதேபோல, திணை என்னும் சொல்லாடலே செதுக்கப்பட்ட சிலைபோல அமைந்திருக்கின்றது. குறிப்பாக, திணைசார் கவிதைகள் செதுக்கப்பட்ட கோயில் சிலைபோல இருப்பதாகச் சுட்டுவா். 
   திணை என்பதற்கு நிலம், ஒழுக்கம், வாழ்வியல் எனப் பல பொருண்மைகள் வழங்கப்படுவதைப்போல, அழகான கோவில் சிலை என்பது முதலில் ஒருகல்; பிறகு அழகான சிலை; அதன்பிறகு வழிபடுவதான ஒன்று என்பதைப்போலத் திணைசார் கவிதைகளும் பலவகையான பொருண்மைகளைக் கொண்டுள்ளன.   கோயில் சிலையைக் கல்லாகப் பார்ப்பவா்களும் உண்டு; அழகான சிலையாகப் பார்ப்பவா்களும் உண்டு;  தெய்வம்  என்பதாகப் பார்ப்பவா்களும் உண்டு.  இதே போலத்தான் கவிதை பயில்வோருக்கு ஏற்றாற்போலப் பல பொருண்மைகளும் திணைசார் கவிதைகளுக்குள் புதைந்து கிடக்கின்றன. 
   மொழி என்பது ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் சொற்களின் தொகுப்புதான் என்றாலும், அவ்வாறான சொற்கள் கொண்டு செதுக்கப்படுவதாய்த்தான் கவிதை பிறக்கின்றது. வெறும் கல்லாய் கிடப்பதைச் சிலையாய் வடிப்பது போலவே, மொழியில் பரவிக்கிடக்கும் சொற்களை அனுபவம் எனப்பெறும் நுகா்வு வெளிப்பாட்டிற்குத் தகுந்தாற்போல, பொருண்மையையும் அழகியலையும் ஒருங்கே வெளிப்படுத்துவதற்குத் தோதாய்ச் செதுக்கிச் செதுக்கி உருவாக்கப்படுவதுதான் கவிதை. அதாவது, தாம் வாழ்கிற இச்சமூகத்தாலோ அல்லது சொந்த நுகா்வுகளாலோ பெறப்படுகிற உணா்வுகள் உள்ளக் கிடங்கில் அமிழ்ந்து கிடந்து ஒரு சமயத்தில் மொழியைத் துணை சோ்த்துக்கொண்டு புறத்தே வந்து விழுவதுதான் கவிதை.
   ஒரு படைப்பாளி  சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் கவிதை இடமளி்க்க வேண்டும். அதாவது, ஒரு பனுவலுக்குள் பல பனுவல்கள் நுழைவதற்கான பல வாயில்களைத் திறந்து விட்டிருப்பதாய் ஒரு கவிதை அமைந்திருக்க வேண்டும்.
   கவிதை குறித்த மேற்குறித்த குறிப்புகள், கவிதை பற்றிய புனிதத் தன்மையைக் கட்டமைக்க முயல்வதாகத் தோன்றலாம். மேற்குறித்த விவரிப்புகள் அகம்சார் கவிதைகளுக்கே பொருந்தி வரக்கூடியவை. சமூகம்சார் அல்லது நிகழ்சார் கவிதைகள் புறம் என்பதாய்ப் பதிவாகி விடுகின்றன. அதாவது, புறம்சார் பதிவுகள் வரலாறு என்பதோடு நெருக்கமுடையதாகி விடுகின்றன. அகம்சார் நிகழ்வுகளும் ஒரு காலத்திய மனிதர்களின் வாழ்வியலில் புலப்படும் உளவியல் கோலங்கள்தான். இத்தகைய உளவியல் கோலங்களும் வரலாற்றில் பதியக் கூடியவைதான். அதேவேளையில், அகம்சார் பதிவுகள் வரலாறு என்பதிலிருந்து விலகி நிற்கின்றன அல்லது  வரலாறாய் மாறத் தயங்குகின்றன.
   அகம் சார்ந்ததாகவோ அல்லது புறம் சார்ந்ததாகவோ அல்லது எழுத்து மரபு சார்ந்ததாகவோ அல்லது வாய்மொழி மரபு சார்ந்ததாகவோ உருவாக்கம் பெறுகிற கவிதை அல்லது இலக்கியம் என்பது எந்தக் காலத்திலும் நுாற்றுக்கு நுாறு வீதம் நேரடியான சமுதாயச் சித்திரம் அன்று. புற உலகை அதாவது காட்சிகளையும் அனுபவங்களையும் எழுத்தாளர் அப்படியே சொல்லில் வடிப்பதில்லை. அனுபவ முழுமையிலிருந்து தற்செயலான, மேம்போக்கான அம்சங்களையெல்லாம் நீக்கிவிட்டு, அடிப்படையான சாராம்சத்தை அக உணா்வில் உரைத்து வகைமாதிரிக்குப் பொருத்தமான வடிவத்தில்  உருவாக்குகின்றனர். இன்னொரு விதமாய்க் கூறுவதாயின், ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள் புறநிலைப்பட்ட எதார்த்தத்தை அகநிலைப்பட்ட எதார்த்தமாக மாற்றியமைக்கின்றனா். மனிதனின் சமூக வாழ்க்கையே கலை இலக்கியம் அனைத்திற்கும் ஒரே அடிப்படையாய் இருப்பினும், அவை உருவாக்கிக் காட்டும் வாழ்க்கை கண்ணாரக் காணும் வாழ்க்கையைவிட வளமிக்கதாயும் உயிர்த் துடிப்புள்ளதாயும் அமைந்து விடுகிறது.  வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் உள்ள சிறப்பான உறவு இதுதான்.
   கவிதை உள்ளிட்ட எந்தவோர் இலக்கிப் படைப்புக்கும் உருவாக்கத்திற்கும் உள்ள நெய்திடும் உறவு இதுதான்.  ஆக,  அகம் சார்ந்தோ அல்லது புறம் சார்ந்தோ உருவாக்கம் பெறுகிற கவிதை அல்லது இலக்கியமானது வாழ்வியல் சார்ந்தது எனினும், நடப்பியல் சார்ந்தோ அல்லது புனைவு சார்ந்தோ வெளிப்படுத்தப்படுவது என்றாலும்,  மொழியால் ஒப்பனை பெறுகிற கலை வடிவமாகவே முகம் காட்டுகிறது எனலாம்.  இந்நிலையில்,  புறம் சார்ந்த அல்லது நிகழ் நடப்பியல் சார்ந்த கவிதைகளைக் காட்டிலும்,  அகம் சார்ந்த கவிதைகள்தான் மொழியின் சொற்களால் அதிகளவு ஒப்பனைக் கோலங்கள் பூண்டு கிடக்கின்றன.  தமிழின் திணைசார் கவிதைகளில் குறிப்பாக.  அகத்திணைக் கவிதைகளில் மொழியின் ஒப்பனைக் கோலங்களையும் பன்முக வாழ்வியல் கோலங்களையும் வேறுவேறான பொருண்மைக்  கோலங்களையும் அதிகளவு காண முடியும்.
   ”வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்பதான வெளிக்குள் பலவகை நில அமைப்புகள், இயற்கைச் சூழல், மக்கள் வாழ் நிலைகள், தொழில் முறைகள், பண்பாட்டுக் கோலங்கள் எனப் பன்மைத் தன்மை பரவிக்கிடக்கிறது. தமிழ் நில வெளியின் இத்தகைய பன்மைத் தன்மைகளைப் பன்மைத் திணைகளாகவே புலப்படுத்தியுள்ளன  திணைசார் கவிதைகள்.  அதாவது, நிலம் மற்றும் பண்பாட்டு வெளிகளின் எடுத்துரைப்புகளாகவே திணைசார் கவிதைகள் அமைந்திருக்கின்றன. பன்மைத் திணை நிலைகளைப் புலப்படுத்தும் பன்மைத் திணை மரபே தமிழின் மரபாய் உறுப்பெற்று இருக்கிறது.
   தமிழின் திணைசார் கவிதைகள் பன்மைத் தன்மைகளைக் கொண்டிருப்பதைப் போலவே, பன்மை வாசிப்பு நுகர்வுகளைத் தருகிற பனுவல்களாகவும் அமைந்திருக்கின்றன. ”சுட்டி ஒருவா் பெயா்கொளப் பெறாஅர்” என்னும் அகத்திணை மரபு, பன்மை நுகர்வைப் பலரும் பல காலத்திலும் பலவகைக் கோணத்திலும் உள்வாங்கச் செய்யும் ஓா் உத்திதான்.  மேலும் உள்ளுறை, இறைச்சி போன்ற உத்திகள் பன்மை நுகர்வைப் பெற்றுக் கொள்வதற்கானவைதான்.
   பெருமரத்தின் தளிர் நுனிக்கும், மண்ணுக்குள் புதைந்திருக்கும் வோ்களின் நுனி முடிச்சுகளுக்கும் ஒரு தொடுப்பு இருப்பதைப்போல, மரபுக்கும் நவீனத்திற்கும் தொடுப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் மொழியே வளப்பமுடன் செழிக்கும்.  அவ்வகையில் மரபுக்கும் நவீனத்திற்கும் ஊடாடிப் பயணிக்கும் ஒளிக்கதிர்களாய் திணைநிலைக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. 
   ஒரு கவிதை காலங்கடந்து மட்டும் அல்ல; பல்வேறு நுகர்வுகளுக்கும் வாசிப்புகளுக்கும் எடுத்துரைப்புகளுக்கும் இடம் தருவதாய் அமைந்திருக்க வேண்டும்.  அந்தவகையில், தமிழின் அகத்திணைக் கவிதைகள் பெரும்பாலும் பன்முக எடுத்துரைப்புகளுக்கு  வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன.  சான்றாக, குறுந்தொகையில் உள்ள  ”செம்புலப் பெயல் நீரார்” இயற்றிய கவிதையை அனுகலாம்.  ஆய்வாளா்களாலும் கவிதை நுகா்வாளா்களாலும் பரவலாக எடுத்தாளப்பெறும் இக்கவிதை, பல்வேறு எடுத்துரைப்புகளுக்கு இசைவாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளீா்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீா் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. (குறுந்தொகை,40)

என்னும் இக்கவிதை, சுட்டி ஒருவா் பெயா் கொளப் பெறாஅா் எனும் பொது மரபுச் சட்டகத்தைப் புலப்படுத்தும் அதே வேளையில், இந்தக் கவிதையை வெளிப்படுத்திய புலவா் பெயா் இன்னதென்று தெளிவிக்காமல் அமைந்திருக்கிறது.

   மேற்குறித்த கவிதையின் முதல் பனுவல், அக்கவிதையை இயற்றிய புலவரின் உள்ளத்திற்குள் புதைந்திருக்கக் கூடியது.   என்ன சூழலில், எந்தக் காலத்தில், என்ன நோக்கத்தில், என்ன பெயரில் இந்தக் கவிதையை எழுதினார் எனத் திட்டவட்டமாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதாவது, இந்தக் கவிதையின் முதலாவது பொருன்மைப் பனுவல் யாருக்கும் தெரியாமல் புலவரோடு மட்டும் உறவாடக் கூடியதாக அமைந்து விடுகிறது. 

   உள்ளத்திற்குள் நிகழ்ந்த அல்லது நுழைந்த ஓா் அனுபவம் எனும் நுகர்வு, அவ்வுள்ளத்திற்குள்ளே நோ்ந்துவிட்ட முதல் நுகர்வாகவே அமிழ்ந்துவிடக் கூடியது. இந்த நுகர்வை மொழியாக்கி நடுகையில், அது வேறொரு நுகர்வாக மாறி விடுகிறது.  மொழியில் முளைத்த இந் நுகர்வை வாசிக்கும்போது வேறு ஓர் நுகர்வு கிடைக்கின்றது.  மொழியின் சுருக்கு முடிச்சுகளாகப் பரவிக்கிடக்கும் சொற்களின் குறியீட்டுத் திசைகளில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்களாய் விரிந்து கொண்டிருக்கும் தன்மையை மேற்குறித்த கவிதை கொண்டிருக்கிறது.

   இனக்குழு வாழ்க்கை முறைக்கு உட்பட்டிருந்த ஒரு சமூக அமைப்பில், வெவ்வேறு இனக்குழுவைச் சார்ந்த ஒரு பெண்ணும் ஓர் ஆணும் காதல் உறவாடிய நிலையை இக்கவிதை காட்டுவதாய் கொள்வது ஒருவகை எடுத்துரைப்பு.

   இனக்குழுக் கட்டுப்பாடுகள் பலவகைப் பண்பாட்டுக் கூறுகளாய் நிரம்பி வழிந்த ஒரு சமூக அமைப்பில் - சமூகக் காலகட்டத்தில், பண்பாட்டுக் கோடுகளைத் தாண்டிய இரு மனங்களின் சங்கமத்தை மேற்குறித்த கவிதையில் காணமுடியும். சாதி, மதம், இனம், மொழி, நிலம், பண்பாடு கடந்து காதல் கொள்ளும் இரு மனங்களின் கூட்டுப் பதிவாய் அக்கவிதை அமைந்து இருப்பதாய் உணர வைப்பது ஒருவகை எடுத்துரைப்பு.

   இரு மனங்களின் சங்கமத்தைச் ”செம்புலப் பெயல் நீராய்” உவமித்துச் சொல்வதின் வாயிலாகப் பெண் மனதுள் ஆணும், ஆண் மனதுள் பெண்ணும் ஊடுறுவி இருப்பதை உணா்த்துவதாகக் கொள்ளலாம்.  மழை நீரின் தன்மையைச் செம்மண்ணும் செம்மண்ணின் நிறத்தை-தன்மையை மழை நீரும் அடையும் தன்மையைச் ”செம்புலப் பெயல் நீர்” எனும் சொல்லாடல் குறிப்பதாய்க் கொள்ளலாம். அதாவது, நிலம் அசையாமல் ஓரிடத்தில் நிலையாய்க் கிடந்து கொண்டிருப்பது.  அசைவுத் தன்மையை – நகா்வுத் தன்மையை நிலம் கொண்டிருப்பது இல்லை. நிலத்தின் தன்மை இவ்வாறு இருக்க, மழைநீா் என்பதற்கோ தனியாக நிறம் இல்லை. மழை நீரானது நகா்வுத் தன்மையைக் கொண்டிருக்கக் கூடியது. மேலிருந்து கீழே விழுவதும் உருண்டோடும் தன்மையதுமாய் நகா்வுத் தன்மை கொண்டது.  இப்போது நிலத்தில் மழைநீா் விழுகிறபோது நிலத்தின் நிறத்தை மழைநீா் பெறுகிறது.  நகராத நிலத்தின் துகள்கள் மழைநீரோடு கலந்து நகா்வுபெற்று உருண்டோடுகிறது.  மழைநீரின் நகா்வை மண்ணும், மண்ணின் நிறத்தை மழை நீரும் பெறுகின்றன. இந்நிகழ்வுதான் பெண்ணும் ஆணும் மனதால் கலந்துவிட்ட நிகழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டதாய் ஆகிப்போகிறது. இதைச் செம்புலப் பெயல் நீராக அக்கவிதை காட்சிப்படுத்துவதாகக் கொள்வது ஒருவகை எடுத்துரைப்பு.

   மேற்குறித்த எடுத்துரைப்பானது, பெண்ணுக்கும் ஆணுக்குமான களவு வாழ்க்கையில் இரு மனங்களுக்குள் நிகழ்ந்த ஒரு நுகர்வாய் விரித்துரைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஆனால் அந்த நிகழ்வைக் கடந்து, உள்ளங்களாலும் உடல்களாலும் இணைந்துவிட்ட நிகழ்வைக் குறிப்பதாகவும் இக்கவிதையில் பொருள் கோடல் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கொள்வது வேறுவகை எடுத்துரைப்புதான்.

   காதல் வற்றிப்போகக் கூடாது. பெண்ணுக்கும் ஆணுக்குமான களவு மற்றும் இல்லற வாழ்வுக்குக் காதல் ஊறிக்கொண்டே இருக்கவேண்டும்.  செம்புலத்தில் பெய்த மழைநீா் தேங்கி இருக்கும் வரையில் மண்ணின் நிறத்தைக் கொண்டிருக்கும். மழைநீா் வற்றிப்போகக் கூடியது.  இத்தன்மை காதலுக்கு உவமையாக வருகையில் பொருத்தம் இல்லாமல் அமைந்து இருப்பதாய் எண்ணத் தோன்றுகிறது.  ஆகையால், செம்புலப் பெயல் நீரைக் களவு நிலையில் இரு மனங்கள் மட்டும் கலந்துவிட்ட ஒரு நிகழ்வாய்ப் பார்க்கக் கூடாது; அதையும் கடந்து இரு உடல்களுக்கு இடையில் நிகழ்ந்த பாலியல் துய்ப்பின் நுகர்வைச் சுட்டுவதாக இக்கவிதை அமைந்திருப்பதாகப் பார்க்கும் வேறுவகை எடுத்துரைப்பும் இருக்கின்றது.  அதாவது, செம்மண் என்பது பெண் உடலாகவும், பெயல் நீா் என்பது ஆண் உடலாகவும் குறியீட்டு நிலையில் பொருளுரைப்பதாகக் கொள்ளலாம்.

   மேற்குறித்த எடுத்துரைப்பு நிலைகளைக் கடந்த இன்னொருவகைப் பொருள்கோடலுக்கும் இடம் தருவதாய் அக்கவிதை அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
      
   பெண்ணும் ஆணும் உடல்களால் இணை சோ்வதற்கு முன்பாக - பாலியல் துய்ப்புக்கு முன்பாக உள்ளங்கள் இரண்டும் கலந்தாக வேண்டும். இருவா் உள்ளங்களிலும் இருவா் மீதான ஈா்ப்பும் காதலும் உருவாகவேண்டும். உருவாகும் அந்த ஈா்ப்பை முதலில் காதலாக வெளிப்படுத்த வேண்டும்.  வெளிப்படுத்திய அந்தக் காதலை அந்தக் காதலுக்கு உரியவா் ஏற்றுக் கொண்டாக வேண்டும். காதலை ஏற்றுக்கொண்டதாய் உரியவா்  உரியவரிடம் வெளிப்படுத்துகிறபோது மனதில் பூக்கிற உணா்வுக் கோலங்கள்தான் இக்கவிதையில் புலப்படுவதாய்ச் சுட்டுவோரும் உண்டு.

   பொதுவாக, பெரும்பாலான எடுத்துரைப்புகள் ”செம்புலம்” என்பதற்குச் ”செம்மண்” என்பதாகவே பொருள் கோடல் செய்துள்ளன.  ஆனால் ‘செம்புலம் என்பது செம்மண் நிலப்பகுதியைக் குறிப்பதல்ல;  மாறாக வானம் பார்த்த மானாவாரி நிலப்பகுதியைக் குறிப்பதாகவும் பொருள் கோடல் செய்யப்படுகிறது.

   மழை இல்லாமல் வறட்சியில் விரிவோடி வாய்பிளந்து கிடந்த மானாவாரி நிலப்பகுதியில் திடுதிப்பென கனமழை பொழிகிறது. வெகுகாலம் கழித்துப் பெய்திட்ட கனமழையால் நிலத்திற்குள் புதையுண்டிருந்த எண்ணற்ற மரம், செடி, கொடி, புல், பூண்டு என அத்தனை வகையான பயிர் பச்சைத் தாவர உயிர்களும், அவற்றைத் தொடர்ந்து பூச்சிகள், வண்டுகள், பறவைகள் போன்ற பலவகை விலங்கினங்களும் முகம் காட்டத் தொடங்கி விட்டன. காய்ந்து கிடந்த நிலப் பகுதி யாவும் பச்சைப் பசேலென்கிற சேலை உடுத்திக் கிடக்கிறது.  இலைகளும் தழைகளும் பூக்களும் பிஞ்சுகளும் கனிகளும் படையலாய்ப் பரவிக் கிடக்கின்றன.  விரிப்போடிய நிலமெங்கும் இறுமாப்பாய்ப் பசுமை பூத்துக் கிடக்கிறது.  செழிப்பும் சிலிர்ப்பும் நிலம் முழுவதிலும் பரவிக் கிடக்கிறது.
  
   இயற்கைக்குள் நடக்கிற இந்நிகழ்வெல்லாம் மழைநீா் மண்ணுக்கு வந்துவிட்ட பிறகுதான். மழை இல்லையெனில் மண் சிலிர்க்க முடியாது. மண்ணைச் சிரிக்கச் செய்வதும் சிலிர்க்கச் செய்வதும் மழைதான். இந்நிகழ்வைப் போலத்தான் வெறுமையாய் - தனியராய் அலைந்து திரியும் ஒருவருக்குள் இன்னொருவா் நுழைந்து அன்புமழை  பெய்விக்கிறபோது  உள்ளமெல்லாம் சிலிர்க்கும்; வாழ்வெல்லாம் பூக்கும்; எல்லாமும் மகிழ்ச்சியில் திளைக்கும்.

   மண்ணில் பெய்திட்ட மழைநீருக்குப் பின்னால் ஏற்படும் மாற்றங்களைப் போலவும் சிலிர்ப்பைப் போலவும், ஒருவா் உள்ளத்திற்குள் இன்னொருவரின் வருகை அல்லது செல்கையானது வாழ்க்கையைச் செழிப்பாக்குகிறது; சிலிர்க்கச் செய்கிறது.  இந்த நுகர்வைத்தான்  ”செம்புலப் பெயல் நீா்” எனும் உவமை கொண்டு சொல்வதாகக் கொள்ளும் எடுத்துரைப்பையும் பொருத்தமானதாகக் கருதலாம். ஆக, ஒரே கவிதை ஒவ்வொரு காலத்திய அல்லது வாசிப்புக்கு ஏற்றாற் போன்ற பலப்பல எடுத்துரைப்புகளுக்கும் வழிகோலியிருக்கும் பனுவலாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

   குறுந்தொகையின் மேற்குறித்த கவிதை, நவீன காலத்திய வாழ்க்கையினூடாகக் கடந்து செல்கையில் வேறுவகைப் பொருள் கோடலையும் எதிர்கொள்கிறது.

உனக்கும் எனக்கும் ஒரே ஊா்
வாசுதேவ நல்லுார். 
நீயும் நானும் ஒரே மதம்
திருநெல்வேலிச் சைவ பிள்ளைமார் வகுப்பும்கூட.
உந்தன் தந்தையும் எந்தன் தந்தையும்
சொந்தக்காரர்கள்; மைத்துனன்மார்கள்.
எனவே
செம்புலப் பெயல் நீா்போல
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே.

என்கிற மீராவின் கவிதைவரிகள், குறுந்தொகைக் கவிதையின் இன்னொரு வகையிலான எடுத்துரைப்புதான். கால ஓட்டத்தில் கரைந்துபோன காதல், சாதி சமயக் கோலங்களின் துணைதேடிக் கிடப்பதை அங்கதக் தொனியில் வெளிப்படுத்துவதாய் இக்கவிதை அமைந்திருப்பினும், இது குறுந்தொகைச் சாயல் கொண்ட கவிதை எடுத்துரைப்புதான்.
  
   திணைசார் கவிதைகள் குறித்து நவீன எடுத்துரைப்புகளை முன்வைத்துள்ள நுால்களுள் சங்கச் சித்திரங்கள் ஒன்றாகும்.  ஜெயமோகன் எழுதிய அந்நுாலில் மேற்குறித்த குறுந்தொகைக் கவிதையினையே மரபு சிதையா புதிய சாயலில் எடுத்துரைப்பு செய்யப்பட்டுள்ளது.

எனது தாயும் உனது தாயும்
யாரென்று நாமறியவில்லை.
எனது தந்தைக்கும்
உனது தந்தைக்கும்
என்ன உறவென்றும்
தெரியவில்லை.
நானும் நீயும்
முன்பு கண்டதுமில்லை.
பாலை மண்ணில்
மழை நீா்போல
அன்புடைய நெஞ்சங்கள்
ஒன்றாய்க் கலந்தன.

என்பதாய் நவீனம் கோத்துக் கவிதையாகியிருக்கிறது குறுந்தொகைக் கவிதை.
 
   உரையாசிரியர்கள், மரபுசார் மற்றும் நவீனத் திறனாய்வாளா்கள், படைப்பாளிகள், வாசிப்பாளா்கள் போன்றோருக்குத் தகுந்த மாதிரியான எடுத்துரைப்புகளுக்கும் பொருள் கோடல்களுக்கும் வாய்ப்பைத் தந்திருக்கும் மேற்குறித்த குறுந்தொகைக் கவிதையைப் போல, திணைசார் கவிதைகள் தொடங்கி நவீனக் கவிதைகளும் தமிழ் மரபில் நிரம்ப உண்டு.  அவ்வாறான கவிதைகளே வெகுகாலம் உயிர்ப்புடன் உலாவிக் கொண்டிருப்பனவாகும்.

பார்வை நுால்கள்:

1.   உ.வே. சாமிநாதையா், குறுந்தொகை  மூலமும் உரையும், 1947,
கபீா் அச்சுக்கூடம், சென்னை.
2.   ஜெயமோகன்,  சங்கச் சித்திரங்கள், 2010, தமிழினி வெளியீடு, சென்னை.
3.   கோ. கேசவன்,  மண்ணும் மனித உறவுகளும், 2001,
சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
4.   மீரா, ஊசிகள், 2008,  அகரம் வெளியீடு, தஞ்சாவூர்.



சனி, 5 டிசம்பர், 2015

இலக்கை அறிந்த ஈட்டி : மகாராசனின் 'கீழிருந்து எழுகின்ற வரலாறு’ நூல் குறித்த மதிப்புரை

இலக்கை அறிந்த ஈட்டி :
(மகாராசனின்  'கீழிருந்து எழுகின்ற வரலாறு’ நூல் குறித்த மதிப்புரை)

பேராசிரியர் சே. கோச்சடை

வரலாற்று உணர்வு வெள்ளையர்களுக்கு இருப்பதைப் போல இந்தியர்களுக்கு, அதிலும் தமிழர்களுக்குக் கிடையாது. ''ஒவ்வொரு மனிதனும் பல பத்தாண்டுகள் வாழ்கிறான். அவன் தன்னைப் பற்றி - தன் குடும்பத்தைப் பற்றி - தன் முன்னோரைப் பற்றி - தான் அறிந்தவற்றைப் பற்றி செய்திகளை ஒரு வரலாறாக பதிவு செய்து வைக்க வேண்டும் என்கிற வரலாற்று உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்” என்பதை நாடோறும் வற்புறுத்திய நாடறிந்த நல்லறிஞர் சுரதா என்று வே. ஆனைமுத்து அவர்கள் (சிந்தனையாளன் சூலை 2006) குறிப்பிடுவார். இதை நன்கு புரிந்து கொண்ட 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நூலின் ஆசிரியர் மகாராசன் 'தமிழ்ச் சமூகத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சிகளுக்குத் தன் வரலாற்றைப் பதிவு செய்யாத மெத்தனப்போக்கும், வரலாற்றைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமையும் ஒரு காரணம்” என்கிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வரலாற்றை எழுதிப் பார்க்கும் முயற்சியாக இந்த நூல் வெளியாகியுள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்ட போதிலும் இவற்றை (1) தொல்காப்பிய ஆய்வு (2) எதிர்க் கதையாடல்கள் (3) நவீன கவிதையின் அரசியல் (4) இந்திய தேசியம் பற்றிய பார்வை என்று பிரிக்கலாம்.

ஏடறிந்த வரலாறு எல்லாம் வர்க்கப் போராட்ட வரலாறே என்று 'பொதுவுடைமைக் கட்சி அறிக்கை’ கூறினாலும்கூட, உலகெங்கிலும் எழுதப்பட்டுள்ள வரலாறு ஆளும் வர்க்க வரலாறாகவே உள்ளது. அந்த வரலாறுகூட தமிழ் நாட்டுக்கு இல்லை. கல்வெட்டுகளையும் இலக்கியங்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியையும் வைத்துக் கொண்டு தமிழக வரலாறு எழுதப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வரலாறு முதலில் தொல்காப்பியத்தில் தொடங்குகிறது. இரண்டு கட்டுரைகள் தொல்காப்பியத்தை ஆராய்கின்றன. தொல் காப்பியம் இலக்கண நூலாகும். அது வரையில் வழக்கில் இருந்தவற்றைத் தொகுத்து வகைப்படுத்தும் வேலையைத் தொல்காப்பியர் செய்திருக்கிறார். 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்” செய்தார். ஆனால் 'அர்த்த சாஸ்திரம்” எழுதிய கௌடில்யர் அப்படியல்லாமல் வாழ்க்கை நெறிக்கான சட்ட திட்டங்களை அவரே வகுத்தார். எனவே சாணக்கியரைப் பார்க்கிற கண்ணோட் டத்தில் தொல்காப்பியரைப் பார்க்க முடியாது.

'சமூகப் படி நிலைமைகளை’ சாணக்கியர் நியாயப்படுத்தினார்; தொல்காப்பியர் சுட்டிக் காட்டுகிறார்” எனலாம். நூலாசிரியர் குறிப்பிடுவதைப்போல நால் வருணத்திற்கான கருத்தியல்களைத் தொல்காப்பியம் 'உருவாக்கி வைக்கவில்லை. எப்பேர்பட்ட மெய்யியலாரும் எல்லாக் காலத்துக்குமான மெய்யியலைத் தரமுடியாது. அவர்தன் காலத்தை மிஞ்சி ஒரு குறிப்பிட்ட வரம்பு வரையிலேயே சிந்திக்க முடியும். அப்படிச் சிந்திக்கிறபோது, அக்காலத்திய சமூக முரண்பாடுகளில் முற்போக்கு சக்திகளின் பக்கம் அவர் நிற்கிறாரா என்று பார்த்து அவரை எடை போட வேண்டும். சேக்ஸ்பியரின் நாடகங்களை அப்படித்தான் மார்க்ஸ் கண்டு வரவேற்றார்.

தொல் பொதுவுடைமைச் சமூகத்தை விடவும் நில மாண்ய சமூகமும், இதைவிட முதலாளியியமும் முற்போக்கானது என்கிறபோது அந்தப் பொருளில் தான் நாம் கூறுகிறோம். அப்படிப் பார்க்கும்போது எழுத்து, சொல் அதிகாரங்களை அவர் இன்றைய மொழியியல் அடிப்படைகளுக்கும் பெரிதும் பொருந்துமாறு வரையறுத்திருப்பது பாராட்டத்தக்கது. பொருளதிகாரத்தில் அன்றைய சமூக வாழ்க்கையைத் தொகுத்துத் தந்துள்ளார். அதனால்தான் 'என்மனார் புலவர்” என்பதைப் போன்ற கூற்றுகள் சூத்திரங்களில் இடம் பெறுகின்றன. எனவே வரையறைகள் செய்து ஒழுங்கு படுத்துகிற சமுதாயக் கட்டுமானத்தின் மய்யமாகவும், அதிகார அமைப்பாகவும் இலக்கணப் பனுவல்கள் இருந்தன என்பது ஏற்கத்தக்கதன்று.

ஐவகை நில ஒழுக்கத்தைக் கைக்கொண்டு தமிழர் வாழ்ந்த அக்காலத்திலேயே ஆரியக் கலப்பால் நால் வருணப் பாகுபாடு நுழைந்துவிட்டது. இந்த மயக்கம் பொருளதிகாரம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. இந்த இயல்பை நூலாசிரியர் மிகுச் சிறப்பாக வெளிப்படுத்தி யுள்ளார்.

இருபெரும் வர்க்கங்களாகப் பிளவு பட்டிருந்த தமிழ்ச் சமூகத்தில், ஆளும் வர்க்கத்தின் வாழ்க்கையையும் சமூக மதிப்பீடுகளையும் மட்டுமே தொல்காப்பியம் பதிவு செய்துள்ளது என்பது குறைபாடுதான். 'உயர்ந்தோரையும், அவர்களுடைய வாழ்க்கையையும் வழக்கையும் ஆவணப் படுத்தியுள்ள தொல்காப்பியம் பெரும்பான்மையாக உள்ள உழுதுண்போரை, 'இழிஃசனர் என்று ஒதுக்கியே வைத்துள்ளது. சமணமும் பௌத்தமும் அப்போதே வளர்ச்சியடைந் திருந்தன. அந்தச் சமயங்களின் பகுத்தறிவுக் கண்ணோட் டத்தில், வெளியில் இருந்து செயல்படும் அறியவொண்ணாத ஆற்றலே சமூக இயக்கத்திற்கான காரணம் என்று கூறாமல், அகக் காரணங்களை அலசுகிறது எனலாம். அது போல தொல்காப்பியம் சமூக ஏற்றத் தாழ்விற்குப் பிறப்பை அடிப்படையாகக் கொள்ளவில்லை என்பதை ஆசிரியர் சரியாகக் காட்டுகிறார்.

தொல்காப்பியம் மேல்தள மக்களைப் பற்றிய சிந்தனைகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. தொல்காப்பியம் காட்டும் பெண்களும் மேல்தட்டு மக்களைச் சார்ந்தவர்களே!

தொல்காப்பியம் காட்டும் சமூகம் அரசுகள் உருவான நிலமானியச் சமூகமாகும். இச்சமூகத்தில் முந்தைய தொல் பொதுவுடைமைச் சமூகத்திலிருந்த தலைமை நிலையை இழந்த பெண்கள் 'மனையுறை மகளிர்” ஆகிவிடடனர். எனவே பெண்களும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் ஆகிவிட்டனர்.

'நிலம் ஆண்களின் உடைமையாக மாற்றும் மாறுகின்றபோது, பெண்ணும் ஆண்களின் உடைமையாக மாற்றப்பட்டாள்” என்று நூலாசிரியர் மகாராசன் சரியாகவே சுட்டிக் காட்டுகிறார். உற்பத்தி, மறு உற்பத்திக்கான கருவிகளை அடக்கியாளும் அதிகாரம் ஆண்களிடம் சேர்ந்தது. மேல்தட்டு பெண்களைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்திருந்த போதிலும், சனநாயக உரிமை உள்ள இக்காலத்தில் சமூகத்தின் அடித்தட்டு மக்களும் மேல்நோக்கி நகரும் போக்கில் இக்கருத்தியல்கள் அடித்தட்டு பெண்களுக்கானவையாகவும் மாற்றப்படுகின்றன. தம்மீதான ஒடுக்கு முறைக்கு எந்தப் பார்ப்பனியம் காரணமாக உள்ளதோ, அந்தப் பார்ப்பனிய சடங்குகளை முன்னிறுத்தித் தலித்துகள் உட்படப் பெரும்பான்மை ஒடுக்கப்படும் வர்க்கம் திருமணம் போன்றவற்றை நடத்துகிறது. இது விரும்பியே நடக்கிறது. இதைப் போலவே, பெண்களும் விரும்பு ஏற்கும் வண்ணம் அடிமைத்தனம் அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் தனித்தனியே சில மீறல்கள் நடந்தன. எனினும் இப்போது உள்ளதைப் போன்ற பரவலான எதிர்ப்பு கிளம்பவில்லை. தொல்காப்பியம் பெண் மீதான அதிகாரத்தை விமர்சனமில்லாமல் பதிவு செய்துள்ளது. இதைச் சிறப்பாக மகாராசன் விளக்கியுள்ளார்.

ஒடுக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து தொல்காப்பியத்தை நூலாசிரியர் நன்றாக ஆய்வு செய்துள்ளார். எனினும் அவர் மார்க்சிய, லெனினிய நோக்கில் ஆராய வேண்டுமே ஒழிய, இன்றைய முற்போக்கு சிந்தனைகளையும் பெண்ணிய சிந்தனைகளையும் அந்நூல் கொண்டிருக்கவில்லை என்று பார்க்கக்கூடாது. தொல்காப்பியம் என்பது நம் காலத்து நகையைப் போன்றது. அதிலுள்ள தங்கத்தை உருக்கி புதிய நகை செய்யலாம். அதிலுள்ள சிறந்த சிந்தனைகளுக்காக அதை மறுவார்ப்புச் செய்ய வேண்டுமே ஒழிய, அப்படியே ஏற்பதோ, அப்படியே புறக்கணிப்பதோ கூடாது. தொல்காப்பியம் போன்ற அறிவியலடிப்படையிலான இலக்கண நூல் அமைந்தது நம்மொழி, இனத் தனித் தன்மையைப் பேணக் காரணமாகிவிட்டது. இது நம் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் இடங்களைக் காண்பதும் மீறுவதும் நம் கடமை.

தமிழக வரலாற்றில் ஒடுக்கு முறைக்கு எதிரான மரபு செழுமையாகவே இருந்துவந்துள்ளது. பார்ப்பனிய வைதிக மரபுக்கு எதிரான சமண பௌத்தக் கருத்துக்கள் இங்கு ஆழமாக வேரோடி இருந்தன. அதை அயோத்திதாசப் பண்டிதரைப் போன்ற அறிஞர்கள் சிறப்பாகக் கொணர்ந் துள்ளனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் பார்ப்பனியம் வெற்றியடைந்து எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டது. விதிவாதம் பேசி சுரண்டப்படுகிறவர்களும் அதை ஏற்று அடங்கச் செய்துவிட்டது. இப்போது அந்த அடக்குமுறைக்கு எதிரான கலகக்குரல்கள் தலித்தியமாகவும், பெண்ணியமாகவும் பாட்டாளிவர்க்கக் குரலாகவும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன. தொழில் வளர்ச்சி நகரங்களில் ஒருவகையிலும், சிற்றூர்களில் பழைய கொடூரமான வகையிலும் தலித்துகளை ஒடுக்குகிறது. இதைச் சிறந்த எடுத்துக்காட்டுகளின் மூலம் மூன்றாவது கட்டுரையில் விளக்குகிறார். எல்லாம் விதிப்பயன் என்று ஒடுங்கிப்போனது அந்தக்காலம்.

'எதையும் செய்யப் போவதில்லை நான்.....”


'எனக்கு பூட்டிய இழிமுகத்தை மட்டுமல்லாது

நீயணிந்து கொண்ட உயர் முகத்தையும்

கிழித்துக் கொண்டிருப்பது தவிர’


என்று இளைஞர்கள் எழுந்துவிட்டனர். ஒரு காலத்தில் óஇங்கிருந்த நிலமானிய உற்பத்திக்கு உதவிய சாதிப் பிரிவினையே இன்றைக்கு ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகிவிட்டது. அதைச் சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் சேர்ந்து நொருக்கியிருக்க வேண்டும். இங்கு இப்போது தலித் ஆண்களும் பெண்களும் ஒடுக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழுவது ஒட்டுமொத்த சமூகத் துக்குமே நல்லது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எல்லாவகையான சர்வாதிகாரங்களையும் அழித்தொழிப் பதைப்போல தலித்துக்களின் விடுதலை எல்லோருக்குமான விடுதலையாக மாறும் என்பதைச் சரியாகவே இனங்காட்டியிருக்கிறார்.

“'எதிர்க் கதையாடல்களின் தகர்ப்பில் உருவாகும் மாற்றுகள்” இன்றைக்கு ஆளும் வர்க்கங்களின் கதையாடல்களை எதிர்ப்பவர்களைச் சுட்டுகிறார். உண்மையில் நமது கதையாடல்கள்தான் நம் மண்ணுக்கே உரியவை. அலோபதி மருத்துவம் ஆளும் வர்க்க மருத்துவம் ஆன பிறகு நம் மண்ணுக்கே உரிய, சித்தம், ஆயுர்வேதம், யுனானி போன்றவை மாற்று மருத்துவமுறைகள் ஆகிவிட்டன. இதைப்போன்ற கொடுமைதான் எதிர்க்கதையாடல் என்பதும், ஒடுக்கப்பட்ட மக்களுடைய கதையாடல்களே நேர்க்கதையாடல்கள். பார்ப்பனிய கதையாடலே எதிர்க்கதையாடல். எதிரியின் வரையறையையும் அளவுகோலையும் கொண்டு நம்மை நாமே மதிப்பிடும் இழிநிலைக்கு உள்ளாகிவிட்டோம். ஒடுக்கப் பட்டோர் தங்களுடைய மூல வேர்களைத் தேடும் முயற்சிதான் தம் குலதெய்வங்களைக் காண்பது ஆகும்.

நிறுவன சமயங்கள் மற்றும் சடங்கு முறைகளுக்கு நேர் எதிரானவை இனக் குழுக்களின் மெய்யியலும் சடங்கு முறைகளும் ஆகும். இவர்களுக்கு தெய்வமும் உறவினர், நண்பரைப் போலத்தான் . என்ன நடந்தாலும் தெய்வச் செயல் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதில்லை. 'ஒனக்குக் கண்ணு அவிஞ்சு போச்சாஃ என்று தெய்வத்தையே கேள்வி கேட்கும் மக்கள் அவர்கள். ஏனென்றால் ஒடுக்கப்பட்டோரின் தெய்வங்கள் எல்லாம் 'செத்துச் சாமியாகிவிட்ட மூதாதையர்தாம்”. கிராமங்கள் நகர் மயமாவதையும் அதனால் விளைகிற பண்பாட்டு மாற்றங் களையும் பதிவு செய்கிற கவிதைகளை எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். படிமுறை அமைப்பிலான சாதி ஆதிக்கத்தை ஒழிக்க, ஒடுக்கப்பட்ட சாதிகள் தமக்குள் இருக்கிற வேற்றுமைகளை ஒழிக்க வேண்டும் என்கிறார் கவிஞர் அபிமானி.

ஆனால் நம் பிறந்த மண், நம் தொல் பண்பாடு ஆகியவற்றை உயர்வாகப் பார்க்கும் போக்கு, நம்மை மீண்டும் இருண்ட காலத்துக்கே இட்டுச் செல்லும். பழம் பெருமை பேசுதல் புதுப் பெருமைகளை உருவாக்கு வதற்காக அமைய வேண்டும். தொழில் வளர்ச்சி வரவேற்கத் தக்கது. ஆனால் தொழில் துறைக் கழிவுகளும் திட்டமிடாத நகர்மயமாதலும் மண்ணைக் கெடுப்பவை. கிராமத்தில் உள்ளவர்களின் அன்பும் பற்றும் பண்பாடும் உயர்வானவை. ஆனால் வளர்ந்துவரும் சமூகச் சிக்கல்களைத் தீர்க்க இயலாதவை. எனவே நகர்மய மாதலினூடே, தொழில் வளர்ச்சியினூடே இயற்கையைக் கெடுக்காத, உயிர்ம வேளாண்மைக்கு உறுதுணையான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது நம் கடமையாகும். அப்படிப்பட்ட கவிதைகள் சிலவற்றையும் சேர்த்துப் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வரலாறு எழுதும்போது வாய்மொழித் தரவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது என்று நூலாசிரியர் நினைக்கிறார். ஆனால் தனிச் சாதியினரின் வாய்மொழி மரபுகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றுபோல அமைந் திருப்பதைக் காணலாம். அவற்றில் மேல்நிலையாக்கக் கூறுகள் விரவி உள்ளன. எனவே, களஆய்வு, நாட்டார் வழக்காறுகள் தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுகள், பிற நாட்டாரின் குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்தி முறை சார்ந்த வரலாறு, - பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வரலாறு எழுதப்படவேண்டும்.

கிருத்தவ சபைகளில் சேருகிறவர்களின் குடும்பக் கொடிவழி பதிவுசெய்யப்பட்டுப் பேணப்படுகிறது. அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் பெயர்களை அரிய முடியும். இந்துக்களிடம் அந்த வழக்கமில்லை. இனியாவது ஒவ்வொரு வரும் தங்கள் கொடிவழியே (எங்ய்ங்ஹப்ர்ஞ்ஹ்) முடிந்தவரையில் தொகுக்க வேண்டும். இது தனிமனிதராகச் செய்யக் கூடியதில்லை. ஒருவர் தன் கால் வழியைத் தேடிப் பின்னோக்கிச் சென்றால் அது ஒரு சாதியின் வரலாறாகவும் சாதி கலந்த சமூக வரலாறாகவும் அமையும். இதைத் தனிமனிதர்கள் தொடங்கிச் செய்ய வேண்டும். இது உருப்பெறும்போது குடும்பங்களின் வரலாறு, ஒடுக்கப்பட்டோர் வரலாறு உருவாகும்.

நவீனக் கவிதைமொழி பற்றிய கட்டுரையில் கவிஞர் அபியின் நேர்காணலோடு நின்று, தன்னுணர்ச்சிப் பாடல்களை, அதுவும் அரசியலற்ற கவிதைகளை ஆராய்கிறார். நவீன கவிதை என்பது புறவயக் கவிதைகளை புறக்கணிக்க மாட்டாத சமூகம் சார்ந்த கவிதை என்பதே இதன் சிறப்பு. அத்தகைய கவிதைகளைப் பற்றியும் எழுதியிருக்க வேண்டும். பழைய மரபுகளைக் கடந்து புதியனவாக வரும் நவீனம் உற்பத்தி முறை சார்ந்தே உருவாகிறது. இதை இன்னமும் விரிவாகச் செய்திருக்கலாம்.

பெண்மொழி எழுத்துகள் பற்றி நிறையப் பேசப்படும் காலம் இது. ஆனால் ஊடகங்கள் ஒடுக்கும் வர்க்கத்திடம் உள்ளன. அங்கும் அதிகாரம் ஆண்களிடமே உள்ளது. எனவே பெண்கள் ஆண்களின் பார்வையில் விமர்சிக்கப் படுகிறார்கள். பெண்கள் தம் உடற்கூறு மாற்றங்களைப் பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ பேசவிடாமல் ஆண்களால் தடுக்கப்படுகின்றனர். அதை மீறுகிற போக்கில் பெண்கள் கூடக்குறைய எழுதிவிட்டுப் போகட்டுமே ஆண்கள் அப்படி எழுதும்போது பொறுத்துப் போக வில்லையா? பெண் தன் உடல் மீது தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது மட்டுமே பெண்ணியம் ஆகாது. பெண்ணுக்கு அக வாழ்க்கையைப் போலவே புற வாழ்க்கையும் உண்டு. அகவாழ்க்கையிலும் பாலியல் தவிர்த்த எத்தனையோ உண்டு. ஆனால் இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள கவிதைகளைப் படிப்போர்க்கு பெண் எழுத்து என்பது 'பாலியல் எழுத்துகள்” என்ற கருத்து உருவாகும்.

பெண்ணியம் என்பது அனைத்துத் துறையிலும் ஆண்-பெண் சமத்துவம் கோருவது. ஆணோடு சேர்ந்து அனைத்துத் துறைகளிலும் முன்னிலையில் நிற்கும் புறவாழ்க்கையையும், அவளது அக வாழ்க்கையின் பிற கூறுகளையும் சுட்டிக்காட்டுவதாக உள்ள கவிதைகளையும் எடுத்துக்காட்டியிருக்கலாம். இக்குறை பாட்டை இனிவரும் கவிதைகளில் களைவார் என நம்பலாம். ஏனெனில் ஏற்கனவே பெண்ணைப் பாலியல் நுகர் பொருளாகக் கட்டமைத்துள்ள ஆண் ஆதிக்க வரையறைக்குள் பெண்தானே சென்று விழுவதைப் போல இக்கட்டுரைகள் உள்ளன. தமிழ்க் கவிதைகளைப் பற்றிய திறனாய்வு, சிறப்பாக அமைந்துள்ளன. எனினும் 'தமிழ்ப் புதுக்கவிதைகள்” சமூகத்தின் கடைநிலைகளைப் பற்றிப் பேசுகின்றனஃ என்ற கட்டுரையாசிரியரின் கூற்று முற்றிலும் ஏற்கத் தக்கதில்லை. தொடக்கத்தில் அப்படி இருந்தாலும், இப்போது வெளிவரும் கவிதைகள் பலதரப்பட்டவையாக உள்ளன.

இந்திய தேசம் பற்றிய கட்டுரை சில நூல்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளாமல் ஆழமாக எழுதப்பட்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். ஞான அலாய்சியஸின் தேசிய இனச் சிக்கலைப் பற்றிய நூல் சிறப்பாக உள்ளது. பழைய மார்க்சிய லெனினியக் கட்டுரைகளையும் உள்வாங்கிக் கொண்டு இன்னும் சிறப்பாக எழுத வேண்டும். பார்ப்பனியம் தன் தேவைக்காக இந்திய தேசம் என்ற கருத்தியலை முன்வைத்தபோதும், இங்குள்ள பெரும்பான்மை மக்கள் அதை ஏற்க வேண்டிய புரவயக் காரணங்கள் என்ன? ஒரு பரந்த நாடு இருப்பதன் நன்மைகள் என்ன? பல தேசிய இனங்கள் ஒன்று கலந்து அமெரிக்க தேசம் எப்படிக் கட்டியமைக்கப்பட்டது. என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மொத்தத்தில் 'கீழிருந்து எழுகின்ற வரலாறுஃ நல்ல முயற்சி. தோழர் குருசாமி மயில் வாகனன் சொல்லியிருப்பதைப் போல தன் உறையில் இருந்து வாளை உருவி வீசிய கன்னிப் போரிலேயே வெற்றி பெற்றிருக்கும் மகாராசன் மேலும் மேலும் வளர்ந்து பொழிவு பெறுவார் என்று நம்புகிறேன்.
 

                                    நன்றி: கவிதாசரண் இதழ், 2007, கீற்று.காம்