திங்கள், 28 டிசம்பர், 2015

பண்பாட்டு மார்க்சிய உரையாடல் – சில குறிப்புகள்

பண்பாட்டு மார்க்சிய உரையாடல் – சில குறிப்புகள்
                                                                                                                          : மகாராசன்
மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்துப் பேசிக் கொள்ளுதல் எளிமையான ஒன்றுதான். விடிய விடிய பேசிக் கொண்டிருந்தாலும், விடிந்த பின்னும் பொழுது அடையப் பேசிக் கொண்டிருந்தாலும் ‘பேச்சுகள்’ யாவும் செயல் தளத்திற்கு வருதல் அரிதுதான். அணுத் திரட்சிக்குள் கரைந்து போன ‘பேச்சுகள்’ ஏராளம்.
     நவீனமாகவும்... நளினமாகவும்... நாசூக்காகவும்... நயம்படவும் பேச்சுகள் தொடர்கின்றன தமிழ்ச் சூழலில். பெரும்பாலான பேச்சுகள் ‘அறிவுஜீவித் தினவுகளை’முன்வைப்பதாக இருந்து கொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்தில், சமூக மாற்றத்திற்கான கருத்தியல் சார்ந்த தத்துவ வேர்களை அடையாளம் காண்பதற்கு முன் நகர்ந்தது ‘புதியகாற்று’ இதழ்.
     ஓர் இதழை நடத்திக் கொண்டிருப்பதே ‘ஆகப் பெரிய காரியம்’தான். வணிக நோக்கைத் தவிர்த்து முடிந்தளவு மாற்றுத் தடத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ‘புதிய காற்று’ ஓர் உரையாடல் தளத்தையும் உருவாக்கி அதன் வழியே பன்முகத் தன்மை கொண்ட கருத்தியல்களை வரவழைத்துப் பார்க்க முயற்சித்தது. 
     இந்தியச் சமூகத்தில் மார்க்சியம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகியும்கூட, மார்க்சியம் முன் வைக்கிற மாற்றங்கள் நிகழவில்லை. இதற்குக் காரணம் என்ன? மார்க்சியம் காலாவதியாகிப் போனதா? இல்லை. மார்க்சியத்தை இந்தியச் சமூகத்தில் பொருத்திப் பார்ப்பதில் குறைகள் நிகழ்ந்திருக்கின்றன. மார்க்சியத்தை அதன் உள்ளார்ந்த தன்மைகளைப் புரிந்து கொள்வதிலும், இந்தியச் சமூக நிலைமைகளைக் குறிப்பான வகையில் ஆய்வு செய்ததிலும் தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. இதுதான் உண்மையாக இருக்க முடியும்.      இருவேறு வர்க்க நிலைமைகள் குறித்து மார்க்சியம் முன் வைக்கிறது. இந்த ஒன்றை மட்டுமே பெரும்பாலான மார்க்சிய இயக்கங்கள் பற்றிக் கொண்டதனால், இந்தியச் சமூகத்தின் அடி ஆழம் வரை விரவிக்கிடக்கிற பார்ப்பனியச் சாதியக் கயிறுகள் கண்ணுக்குப் புலப்படாமல் போய்விட்டன.எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்த்த முடியாமலே போய்விட்டன.
        ஒரு சமூகத்தின் நிலைமைகளைச் சரியான முறையிலே மதிப்பீடு செய்து கொண்டதற்குப் பின்பாகத்தான், எந்தவொரு தத்துவத்தையும் அதனோடு பொருத்திப் பார்ப்பதில் இலக்குகளை அடைய முடியும். சாதியத்தை சமூகத்தின் மேல் அடுக்காகவே கருதிக் கொண்டிருந்த நிலைமைகள் தற்போது மாறி வருகின்றன. சமூகத்தின் உற்பத்தி முறைகளையும் உற்பத்தி உறவுகளையும் தீர்மானிக்கும் அடிக்கட்டுமானமாகச் சாதியம் இருப்பதைத் தற்போதைய மார்க்சிய இயக்கங்கள் மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், மார்க்சியம் குறித்தும் இந்திய தமிழகச் சமூக நிலைமைகள் குறித்தும் நிறைய விவாதிக்கவேண்டிய களங்களாகி நிற்கின்றன.
      ஒடுக்குண்டவர்களுக்கான விடுதலைத் தத்துவமாக மார்க்சியத்தை ஏற்றுக் கொள்கிற அதேவேளையில், சாதிய விடுதலையை, பெண் விடுதலையை, தேசிய இனங்களின் விடுதலையை வென்றெடுப்பதில் மார்க்சியத்தின் வழிகாட்டுதல்கள் என்னவாக இருக்கின்றன என்பதைப் பற்றிய விவாதங்கள் அண்மைக் காலத்தில் கூர்மையடைந்திருக்கின்றன.
      தலித் அரசியல் கூர்மையடைந்து சற்றே பலவீனப்பட்டுப்போய் தேர்தல் அரசியலிலே கரைந்துபோய்க் கொண்டிருக்கிறது. தீவிரப் பெண்ணிலை வாதத்தை முன்னெடுத்துப் பாலியல் உடல் அரசியலிலே வந்து நிற்கிறது பெண்ணியம். இந்தியச் சிறைக்கூடத்தில் அடங்க மறுத்து சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வரும் காசுமீர் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகள் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள எல்லா தேசிய இனங்களும் தங்களின் சுயத்திற்காகப் போராடி வருகின்றன. 
      மேற்சொன்ன தலித் விடுதலை - பெண் விடுதலை - தேசிய இன விடுதலை என்பதெல்லாம் தனித்தனியே நடக்கக் கூடியவைகளா? அவற்றை இணைக்கும் தத்துவம் எதுவாக இருக்க முடியும். மார்க்சியத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், மார்க்சியத்தின் மீது நம்பிக்கையற்று, மார்க்சியத்தைச் சந்தேகிப்பது என்தெல்லாம் மார்க்சியம் குறித்த அறியாமையால் வரக் கூடியவை. ஆக, உண்மைத் தன்மைகளும் தேவைப்படுகிறது என்பதைச் சுயவிமர்சனத்தோடு பரிசீலிக்க வேண்டிய கட்டத்தில் எல்லோருமே நின்று கொண்டிருக்கிறோம்.
      இத்தகையச் சூழலில் ‘பண்பாட்டு மார்க்சிய உரையாடலை’ப் புதியகாற்று இதழ் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருந்தது. மதுரையில் நடைபெற்ற இவ்வுரையாடல் தளம் தமிழகத்தின் வடபகுதியில் உள்ள திருவண்ணாமலைக்கு நகர்ந்திருப்பதே முதல் உரையாடலுக்குக் கிடைத்த வரவேற்புதான். சமூகப்பிரச்சனைகளோடு மார்க்சியத்தைத் தொடர்புபடுத்தும் வகையில் பல்வேறு அமர்வுகளாய் நடைபெற்ற இவ்வுரையாடல் நடந்து முடிந்திருக்கிறது. வெகு சிறப்பாகவும் மிக நேர்த்தியாகவும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்திருந்த முஸ்தபா, அன்பு, பிரகாஷ் ஆகியோரின் உழைப்பு வீண்போகவில்லை. ‘பண்பாட்டு மார்க்சிய உரையாடல்’ என்று சொன்னால், ‘பண்பற்ற மார்க்சியம்’ என ஒன்று இருக்கிறதா? என்ற விமர்சனம் எழுந்தாலும், ‘பண்பாட்டுத் தளத்தில் மார்க்சியம் குறித்த உரையாடல்’ என்பதாக அர்த்தப்படுத்திப் பேச வேண்டிய நிர்பந்தங்களும் ஏற்பட்டுப்போயின.
       செயலுக்கான வழிகாட்டியாக உள்ள மார்க்சியம் இந்தியச் சிந்தனை மரபில் ஏற்படுத்தியிருக்கும் தடங்களின் பதிவுகள் குறித்துத் தொடக்கவுரை ஆற்றினார் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன். ‘மார்க்சியமும் தலித்தியமும்’ குறித்த அமர்வுக்கு தலைமையேற்ற அரங்க மல்லிகா, தலித் விடுதலையின் தேவைகளை முன்வைத்துப் பல கேள்விகளை எழுப்பினார். இந்த அமர்வில் மிகக் கூர்மையான விவாதங்களை முன்வைத்தவர் டி.தர்மராஜன்தான். ‘ஒவ்வொரு தலித்துமே இருவிதப் பிரச்சினைகளை எதிர் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது. உளவியல் ரீதியான பிரச்சனைகளையும் சமூகத்தில் நிலவுகிற தீண்டாமைப் பிரச்சனைகளையும் எல்லா தலித்துகளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இம்மாதிரியான பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்குக் கிராமங்களை விட்டு விட்டு நகரம் நோக்கிப் புலம்பெயர வேண்டும்’ என்றார்.
      மார்க்சியம் முன்வைக்கும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் தலித்திய ஆய்வுகளுக்கு உதவுகிற அதேவேளையில், வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் சாதியம் குறித்தும் ஆராய வேண்டியதன் தேவையை வலியுறுத்தியது பார்வையாளர்களுக்குப் புதிய கோணத்தைக் காட்டியது. அடுத்துப் பேசிய பாண்டியன் ‘தலித் மக்களின் சுயச்சார்பு என்பது நிலத்தோடுதான் தொடர்புடையது’ என்பதாகப் பேசினார். டி.தர்மராஜன், மீ.த.பாண்டியன் உரைகள் தலித்தியப் பிரச்சனைகளை அணுகுவதில் உள்ள பிரச்சனைகளைக் கூர்மையாக்கித் தந்து கொண்டிருந்த வேளையில், திருவள்ளுவனின் மேடைப் பேச்சுத் தொனியில் அமைந்த உரை, தொழிற்சங்கங்களின் மீதான குற்றச்சாட்டுகளாகவே அமைந்திருந்தது விவாதத்தைத் திசை திருப்பி விட்டுவிட்டது.
      உலக நாடுகளில் உள்ள இயற்கை வளங்களையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களும் ஏகாதிபத்திய நாடுகளும் சுரண்டிக் கொளுத்துக் கொண்டிருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரப் பின்னடைவுகளுக்கு அடிப்படைக் காரணம் விவசாயத்துறையில் நவீனத்தைப் புகுத்தியதுதான். இந்தியாவின் விவசாய முறைகளில் ‘பசுமைப் புரட்சி’ திட்ட முறைகள் உணவு ஆதாரங்களைப் பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டவை. பசுமைப் புரட்சியின் மூலமாக இங்குள்ள விவசாயத்துறையிலே ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் - இயற்கை வளங்கள் தொழில் துறையினரால் ஏற்பட்டிருக்கும் நஞ்சாக்கத்தையும் சுற்றுச் சூழல் குறித்த அமர்வில் மருத்துவர் ஜீவானந்தம் எடுத்துரைத்தார்.
      1965ஆம் ஆண்டு காலகட்டத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியின் விளைவாக இங்குள்ள பாரம்பரிய விவசாய முறைகள் அழிந்து போய்க் கொண்டிருப்பதையும், அதன் மூலமாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டுவிட்டுப் புலம் பெயர்ந்து கொண்டிருப்பதையும், பசுமைப் புரட்சி திட்டமிட்ட மோசடி என்பதையும் ஏர் மகாராசன் பேச்சில் காணப்பட்டது. அதேபோல, தற்போதைய மரபினப் பசுமைப் புரட்சித் திட்டத்தின் அபாயங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் விதைகள் - உரங்கள் - பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் நச்சுத் தன்மைகள் குறித்துப் பிரேம் குமார் விரிவாக முன்வைத்தார்.
      இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சினைகளாக இருந்து கொண்டிருக்கும் தேசிய இனப் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் நிறைய இருக்கின்றன. அவ்வகையிலே ‘மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினைகளும்’அமர்வில் பேசிய பொன்னீலன் ‘இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் உத்வேகம் கொள்ளாமல் இருக்கின்றன’என்றார். அரங்க குணசேகரன் ‘இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் தரகு முதலாளிய அரசியலை அம்பலப்படுத்திப் பேசியது குறிப்பான விவாதத்திற்குத் தள்ளியது.
      தொடர்ந்து பேசிய முருகன், தேசிய இனப் பிரச்சினைகள் குறித்த தலைப்புக்குள் வராமலேயே, எவ்விதமான தர்க்கங்களுக்குள்ளும் அடைபடாமல் ‘பாட்டாளி வர்க்கத்துக்குத் தேசமில்லை’ என்பதாக முடித்தது பல விவாதங்களை எழுப்பியது. இதற்குள் வேறொரு பயங்கரமும் இருந்து கொண்டிருக்கிறது. உலக ஏகாதிபத்தியங்கள் சுரண்டலை முன்னெடுத்துச் செல்கையில் தேசம் என்பதைப் பார்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் ஓருலகம் - ஒரே சந்தை - ஒரே ஆட்சி என்பதான உலகமயமாக்கல் என்பதுதான். உலகமயத்தை எதிர்த்தல் என்பது தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தின் மூலமே சாத்தியப்படும். இங்கே இந்தியாவையே ஒரு தேசமாகப் பார்க்கும் நிலையில்தான் தேசிய இனப்பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் அமைந்து போகின்றன.
      உரையாடல் அரங்கில் சூடான விவாதங்களை எழுப்பியது பெண்ணிய அரங்குதான். சகல மட்டங்களிலும் ஒடுக்குண்டு கிடக்கும் பெண் இன விடுதலை கேள்விக் குறியாகவே இருந்து கொண்டிருக்கும் சூழலில், தற்போதைய பெண்ணியச் சிந்தனைகள் உரத்த கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறது. தந்தைவழிச் சமூகம் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் ஒடுக்குமுறை வடிவங்களை அம்பலப்படுத்தியதோடு ஆணாதிக்கத்தின் இருப்புகளைக் கேள்விக்கு உட்படுத்திப் பேசினர் அரங்க மல்லிகாவும் அ.வெண்ணிலாவும். 
       பண்பாட்டுக் கட்டமைப்பின் வழியாகப் பெண் ஒடுக்குண்டு கிடக்கிறாள். ஆண் மூலமாக அதிகாரம் உள்ளிட்ட அனைத்து வன்முறைகளும் பெண்மீது திணிக்கப்படுகிறது. பெண்ணின் உடைத் தேர்வுகூட ஆண்களால் தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக மாறியிருப்பதைக் கோபத்தோடு முன்வைத்தார் வெண்ணிலா. குடும்பம் என்ற நிறுவனம் எப்படி பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அமைப்பாக இருக்கிறது என்பதையும் அவற்றின் காயங்கள் வலிகள் பெண்மொழியாக உருக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. அதோடு ‘மார்க்சியமும் படைப்பிலக்கியமும்’, ‘வெகுசன மார்க்சியம்’ போன்ற அமர்வுகள் பார்வையாளர்களுக்கு இடையே நிறைய கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பிவிட்டன.
      உரையாடலில் பங்கேற்றுப் பேசிய சிலர் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். தனக்குத் தெரிந்தவை மட்டுமே மார்க்சியம் என்று முன்வைப்பது உணர்வு நிலையிலிருந்து வரக்கூடியவை. அதேபோல, மார்க்சியம் என்பதை ‘மார்க்ஸ்’ சொன்னவற்றை மட்டும்தான் குறித்து நிற்கிறதா? ஏங்கெல்சு, லெனின், ஸ்டாலின், மாவோ... என மார்க்சுக்கு அடுத்து வந்தவர்கள் மார்க்சியத்தைச் செழுமைப்படுத்தியவர்கள்தான். மேற்சொன்னவர்களின் கருத்தாடல்களும் மார்க்சியத்திற்குள் அடங்காதா? மார்க்சிய ஆசான்கள் மொழிந்தவை யாவுமே மார்க்சியம்தானே?

உரையாடலில் பங்கேற்ற பலரும் அந்தோணியா கிராம்சி, அல்தூசர், பெர்பெக்ட் மார்க்சு... என மார்க்சிய விமர்சகர்களைப் பற்றிய உரையாடல் மார்க்சிய உரையாடல்தானா? அவர்கள் குறித்துப் பேசுதல் தவறல்ல; அவர்களைப் பற்றி மட்டுமே பேசுதல் என்பது? இம்மாதிரியான போக்கு அறிவுலக வளர்ச்சிப் போக்காக இருப்பினும், மக்களிடமிருந்து மார்க்சியத்தை அந்நியப்படுத்தவே செய்யும். இனிவரும் உரையாடல்கள் முழுமையான மார்க்சிய அறிதலுக்கு வழிவகுக்க வேண்டும். ‘பண்பாட்டு மார்க்சிய உரையாடல்’ தத்துவத் தளத்தில் நல்லதொரு விவாதப் புள்ளிகளை காண்பித்துக் கொண்டிருக்கிறது. இம்மாதிரியான சிந்தனைப் போக்குகளுக்கு வடிவம் கொடுக்கும் பேரா.முத்துமோகனுக்குப் பாராட்டு சொல்லியே ஆக வேண்டும்..
      சி.பி.அய்., சி.பி.எம், கட்சிகள் முன்வைப்பதுதான் மார்க்சிய அரசியல் என்பதைத் தாண்டி, திறந்த மனநிலையோடு மார்க்சியம் குறித்த உரையாடலாகப் ‘பண்பாட்டு மார்க்சிய உரையாடல்’ தொடர்ந்தால் சமூக மாற்றத்திற்குப் பேருதவியாக இருக்கும். எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டேயிருக்கிறது எல்லோருக்குள்ளும். 
   நன்றி: புதிய காற்று இதழ், ஆகசுடு 2006, கீற்று.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக