இயற்கையைக்
கையகப்படுத்தும்
பெண்மொழி
லதாவின் கவிதைகளை முன்வைத்து
:
மகாராசன்
தனித்த ஒரு பனுவல் எனும் வாசனையைத் தாண்டி, ஒரு
பனுவலுக்குள் இயங்கும் பல பனுவல்களோடு ஒன்றிக்கொள்ள இன்றைய கவிதைமொழி பல வாசல்களைத்
திறந்து விட்டிருக்கிறது. ஒரு படைப்பாளி சொல்ல
வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் இன்றைய கவிதை பொறுப்பேற்றுக்
கொள்கிறது. அதுமட்டுமல்லாமல், படைப்பாளியின்
மனவெளிக்குள் கவிதையின் ஊடாக வாசகரை அழைத்துச் செல்வதற்கும் இன்றைய கவிதைமொழி தன் பயணத்தை
நீட்டித்திருக்கிறது.
ஒரு பனுவலுக்குள் இயங்கும் பல பனுவல்களின் வெளிகளுக்குள்
அரசியல், பொருளியல், சமூகம், உற்பத்தி, உறவு,
பண்பாடு, மொழி என எல்லாமும் விரவிக் கிடக்கின்றன.
சொற்களைக் கொண்டு கொலுவாக்கும் படிமங்களின் சலனங்கள், சொற்களற்ற மவுனத்திலிருந்து
எழும்படிப் பண்ணுகின்றன. ஒவ்வொரு கவிதையின்
வெளியிலிருந்தும் சட்டெனத் தரையிறங்க முடியாத நிலையினையும், நெருங்க முடியாத தளத்தின்
பக்கம் ஒட்டி நின்று பார்க்கும்படியாகவும் கவிதைகள் தளம் அமைக்கின்றன. இவற்றின் பக்கங்களில்
எல்லாம் அலுப்படையாமல் மிக இலகுவாகக் கைகோர்த்துக்கொண்டு திரிவதற்கு லதாவின் கவிதைமொழி
இடம் கொடுத்திருக்கிறது.
வாழ்வின்
சகலத்திலும் அரும்புகளைப் பழக்கி அதை அதனதன் இயல்பென்று விடுகிற உயிரியல்ல மனிதர்.
மனித வாழ்வின் மாற்றத்திலிருக்கும் பல தளங்கள் அணுக முடியாத புகைச் சுருள்களாக மாறுகின்றன. தளங்கள் அனைத்தும் மனிதமயமாகிப் பேசிக்கொண்டிருக்கின்றன. மவுனத்தோடு உணர்வுகளை எழுப்பும் உறவுகளைத் துலக்கிக்
கொண்டிருக்கின்றன. நம்மோடு தொடர்புகொள்ள வைக்கப்பட்டவையோடுதான் நாம் நமக்கான பொருள்கோடலைக்
கொண்டிருக்கிறோம் என்பதும், பல தளங்களை மறுத்துவிட்டு ஒரு தளத்தோடு நின்றுபோவதில் செழுமையான
– உயிரோட்டமுள்ள வாழ்வின் நாலாவிதத்திலும் பாய்ந்துவிடக்கூடிய கற்றை இல்லை என்பதுவுமாக
அவிழ்கின்றன பெண்ணின் கவிதைப் புலப்பாடுகள். அவ்வகையில், லதாவின் பாம்புக் காட்டில்
ஒரு தாழை எனும் கவிதைத் தொகுப்பு அமைந்திருக்கிறது.
புதிய இடமாற்றத்திற்கான துய்ப்புகள் சீக்கிரமே வழிந்து
விடுகிறது. பழைய இடமே மனதில் உறைந்து போவதுண்டு. இங்கே ‘இடம்’ என்ற சொல்லை எடுத்துவிட்டுப் பலதோடும்
பொருத்திப் பார்க்கலாம். நகரத்து உணவு மேசையில் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கும்
பனுவல், புதிய ஈர்ப்பையும் ஈர்ப்புக்குப் பின்னாலான வலியின் அவதிகளையும் அசிங்கத்தையும்
சகித்துக் கொள்ள முடியாத நெருக்கடியையும் படரவிட்டுவிடுகிறது. முழுமையும் ஆண் ஆளுமையைப் பற்றிக்கொள்ள ஏங்கப் பண்ணுவதாய் முயற்சிக்கிறது.
முழுமையைப்போலத் தென்பட்டதெல்லாம் சாய்ந்துவிடாத வண்ணம் எவரையும் பிடரிதொட விரட்டிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மனிதரையும்
குறைந்த அளவு இகழ்ச்சியோடும், அதே அளவு புகழ்ச்சியோடும் சந்திக்கவோ பழக நேரவோ தயாரிக்கப்பட்டுவிடும்
மன அமைப்பில் மனதை அதன் தன்மையுடன் புரிந்து கொள்வதற்கு “எதிர்பாராத பொழுது” கவிதை உதவும்.
பால்பேதம் சோர்வு
தரும் (ப.32) கவிதையில் மனம், காலம், பெண், ஆண், இயக்கம் என எல்லாமும் அடங்கியிருக்கிறது. “பிரிவுத் துயரில் உறையும் வெளி பற்றி, எவருக்கென்ன” எனும் வரிகளின்
இறுதியாகக் காலம் கடந்து, எதையும் கடந்து அனைத்துக்குமான உள்ளீட்டைத் தக்கவைத்துக்
கொண்டிருக்கிறது. மூர்க்கமும் மண்டியிடலும்
மீறிய இயக்கம் அல்லாத கருணை கல்லாகி விடுகிறது.
எவ்வுயிருக்கும் எது தேவையானது? அல்லது அவ்வுயிருக்கே உள்ள தனித்துவம் எது?
உன்னதமானது எது? என்கிற கேள்விகளுக்குக் ‘கரையும் கடலும்’ (ப.38) கவிதை
பதில் சொல்லலாம்.
நியாயம் மீறுகின்ற
அநியாயத்தின் நியாய தர்க்கங்கள் பிணைந்து கிடப்பதை
எங்கிருந்து அவிழ்க்கத் துவங்குவது என்பதை அவரவரிடமே கொடுத்து விடுகின்றன பல கவிதைகள். இருத்தல் குறித்த கேள்விகளையும் பதில்களையும் தருவித்துப்
பார்க்கிறபோது, தொலைந்துபோகும் அடையாளத்தைத் தொன்மம் வந்து தொட்டுத் துலக்குவதைப்போல
உளறிக் கொட்டுகிறது மொழி. நம் வாழ்நாளில் ஒவ்வொரு மழையும் நினைவுகளைக் கிளறிவிடப் போதுமானவையாக
இருந்தாலும், வெளியே காலத்தை வாரி இரைத்துத் தந்தாலும் கண்முன்னே தெரிகிற வெளி அழுகிக்
கொண்டிருப்பதைக் காப்பாற்ற முடியாததாகவும் இருப்பதை ‘வெளி’ (ப.52) கவிதை சொல்லிச் செல்கிறது.
உலகம் இயக்கத்தால்
ஆனது. உலகில் உள்ள யாவையும் இயங்குகின்றன.
இயற்கைக்குள் செயற்கையுமாக மனிதரின் மனமும் உடலும் இயங்கி இயங்கி வரலாற்றின்
மிகச்சிறு நுகர்வுப் புள்ளிகளையும் உண்டாக்குகிறது. வரலாற்றின் சந்ததிகள் அதே இயக்கத்தில்
மாற்றத்தைக் கோரும்போது இயக்கம் சூடு பிடிக்கிறது. இயக்கத்திற்கு அவசியம் மாற்றம்.
இயக்கத்தை விழிப்படையச் செய்வது மாற்றம். அதனால்தான், தலைமைகள் பின்வாங்குகின்றன; முரண்களைப்
பிழையென்றே வாதிடுகின்றன; மாற்றத்தை முடிந்தளவு ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. முரண்களில்
வெற்றி தோல்வி ஒருபுறம் இருந்தாலும், இயக்கத்தின் கவனிக்க முடியாத பக்கங்களைக் கவனிக்கக்
கூடிய வசீகரத்தைப் பெற்றுவிடுகிறது. அந்த வசீகரத்தில் தங்கள் முகத்தைக் காட்டிக் கொள்ள
எல்லா கொழுத்த நிழல்களும் கும்மியடிக்க வந்து விடுகின்றன. மாற்றம் என்ற புள்ளி மதத்தில் – இனத்தில் சுழலச்
செய்வதன் முற்சியாய் ‘மேய்ப்பன்’ (ப.56) கவிதை தெளிவான போக்கில்
மிகச் சிக்கலான பொறியைத் தட்டி விடுகிறது. உலகை இழுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லும்
எல்லாக் குதிரைகளுமே
‘இருப்பு மறுப்பு
/ பிளப்பு மரிப்பு /
கடந்து கடந்து
/ புதிய உயிர்ப்பு (ப.71)
என்பதற்குத் தலை கவிழ்த்துக் கொள்ள வேண்டும்.
காத்திருப்பதில்
நட்டமெதுவும் / பெரிதாய் இல்லை /
உயிர் வாழ்வதைகத்
தவிர (ப.62)
உயிர் வாழ்தலில்தான் காத்திருப்பு வாய்க்க முடியும். மரபிலிருக்கும்
தலைவி தலைவன் களவு முற்றிலும் நவீனத்தில் தகைவது, கூட்டை விட்டுவிட்டு வெளியே பறப்பதாகக்
கொள்ளலாம். மரபிலிருந்து மிகக் கணிசமாகப் பெற்றதை
அடுத்த கட்டப் பாய்ச்சலுக்காக அதன் மிளிரலை ஒளிரவிடுவது அழகு. ‘ஆற்றுப் பாடல்’ (ப.75) பாவத்தை
விடுவித்துக் கொள்கிற மனத்தின் நவீன களத்தின் துல்லியங்களைப் பார்வைக்கு வைக்கிறது.
கட்டுப்பாடுகளைக்
கொண்டது புனிதமெனச் சமைத்தெடுக்கிறபோது, அது
தன் வன்முறையை நியதிகளின்பாற்பட்டதாகத் தக்க வைப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு
எழும்பும் எதிர்மையைச் சாத்தானாகவே குறிக்கப் பெறுகிறது. போர்ட் கேனிங் கோட்டை வாசல் (ப.98) போல எத்தனையோ
கோட்டைகள் – எத்தனையோவற்றின் புதைகுழியிலிருந்து நம்மிடம் பேசுவதற்காக நின்றிருந்தாலும்,
ஆளும் திமிர் அதன் வாயைக் கட்டிப்போட்டு பிச்சை வாங்கும் யானையாய் மாற்றிவிட்ட பிறகு,
எங்கோ போய்க்கொண்டு இருக்கிறோம் என்பதை உறைய வைக்கிறது கவிதை.
‘பானையில் கரைகிறது
சூரியன்’ (ப.101).
இது நவீன மனவெளி மட்டுமல்ல; தடித்துத் தட்டையாகிக் கோணிக் கொண்டிருக்கும் நாசமான /
சாரமற்ற வாழ்வு வெளியும் இதுதான். பிழிந்தெடுக்கப்பட்ட
மக்களை, தோளில் கிழிந்துபோன துண்டாய்ப் போட்டபடி வரும் அரசியலை “கருப்புச்சாலை” கவிதை பல நகர்வுகளுக்குச்
சாத்தியமாக்குகிறது. உள்ளூரில் சாதியாகவும்
அயலில் தோல் நிறமாகவும் பார்க்கும் பேதத்தை ‘செப்டம்பர் 11’ (ப.92) கவிதை
வழியாக வரலாற்று அரசியலைத் தொட்டு உள்ளில் நிகழும் வாழ்வுப் போக்கினைப் பேசுகிறது.
பெண்மொழி, தன்
உடலின் மூலம் இயற்கை யாவற்றையும் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இயற்கையே பெண்ணாக
ஆகும்போது பெண்ணின் மொழியும் இயற்கையான ஒன்றாகிறது. செயற்கையாகிவிட்ட / வறட்சிமிக்க மொழிக்கு மாற்றாக
அது தன்னைப் பேசுகிறது. முதன் முதலாக அது தன்னிலிருந்தும் தனது சுயத்திலிருந்தும் பேசுகிறது. யோனியிலிருந்து தொப்பூள்க் கொடிக்கு நகரும் ஈரத்தை
மீண்டும் சிவப்பு ஈரத்துடன் மண்ணில் விதை கொண்டு எழச் செய்பவரின் மொழி ஆண்மொழியிலிருந்து
விலகித்தான் நிற்கும். காலத்தை உண்டு செரித்து
வலிகளைச் சுமக்கும் பெண்மொழி இயற்கையாகவே வித்தியாசப்பட்டுத்தான் நிற்கும். இயற்கையே பெண்ணுடல் என்பதற்குச் சிவற்றைச் சுட்டலாம்.
‘வலி ருசிக்கும்
அற்புதத்தை / அறிவாயோ என் பூவே’
‘அணுவைத்
துளைக்கத் / தாங்குமா என் சிறு பூ’ (ப.11)
‘தீயில் விறைத்து
நின்ற காலம் / நீர்த் தூவலில் வெடித்துச் சிதற
விழிகள் உயிர்பெற்று
விடை பெற்றன’ (ப.33)
‘வெளி எங்கும்
பாம்பு......./ மடல்களை உதிர்த்த தாழை
ஒற்றைத் தண்டுடன்
/ வளர்கிறது’ (ப.46)
மதம் முன்மொழிய
மனிதர்கள் வழிமொழியத் தொடரும் வரலாற்றில் புது முடிச்சுப் போடும் நிகழ் அசாதாரணமானது. ஆண்மைக்கு எதிராக நிலைபெறும் பெண்மை சரிக்குச் சரியாக
இருக்கிறதே தவிர, தாழ்வென்று கற்பிக்கும் ஆண்மொழிக் கருத்தியலைத் தகர்த்திட பெண் உடலும்
ஆயுதமாக முன்வந்து வரலாற்றினைப் புரட்டிப்போடத் தொடங்கியிருக்கிறது. லதாவின் எல்லாக் கவிதைகளிலுமே இத்தகையப் பெண்மொழிச்
சொல்லாடல்கள் முளைத்திருப்பதைக் கவனிக்கலாம்.
நன்றி : புதிய கோடாங்கி இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக