திங்கள், 14 டிசம்பர், 2015

திணைமொழி எடுத்துரைப்புகள் :- மகாராசன்

திணைமொழி  எடுத்துரைப்புகள்                 
 :  மகாராசன்


தமிழினத்தின் தொன்மைச் சிறப்புகள்,  செழுமையான வாழ்க்கை முறைகள், வளமையான பண்பாட்டுக் கூறுகள், பொதுமை நோக்கிய அறிவுப் புலப்பாடுகள் போன்ற இன்ன பிறவற்றையும் எடுத்துரைக்கும் சான்றுகளாக இலக்கியப் பதிவுகளும் திகழ்கின்றன.
   வாய்மொழி மரபிலும் எழுத்து மரபிலும் செழித்து வளா்ந்து கொண்டிருக்கும் பாங்கை, தமிழ் கொண்டிருக்கிறது. அயலவா்களின் அதிகாரம், குடியேற்றம், மற்றும் பண்பாட்டுப் படையெடுப்புகளால் சிதைந்து போகாமல் எண்ணற்ற பண்பாட்டுக் கோலங்களைத் தம்மகத்தே கொண்டிருக்கும் மொழியாகத் தமிழ் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
   வரலாற்றுத் தொன்மையும் பண்பாட்டுச் சிறப்பும் கொண்ட மொழிகளுள் தனியிடமும் சிறப்பிடமும் பெற்றுத் திகழ்கிறது தமிழ்.  செந்தமிழாகவும் செழுந்தமிழாகவும் சிறந்து விளங்கும் தமிழின் முதன்மை அடையாளமாக ஒளிவீசும் தன்மை கொண்டிருப்பது பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்தான். தமிழ் இலக்கிய வரலாற்றின் ஆணிவேராகவும் முதுகெலும்பாகவும் பலவகைப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் திகழ்ந்தாலும் தமிழ் இலக்கிய மரபின் தலைநிமிர்வாய்த் திகழ்வது பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்தான்.
   ஒருகாலத்தில், தமிழ் இலக்கியம் என்றாலே புராணங்களும் இதிகாசங்களும் பக்திப்பாடல்களும் சிற்றிலக்கியங்களும்தாம் என்கிற நினைப்பும் போக்கும் எஞ்சியிருந்தன.  இவைமட்டும் அல்லாது தமிழ்மொழி சமக்கிருத மொழியிலிருந்து தோன்றியது;  தமிழால் தனித்தியங்க முடியாது;  அய்ந்தெழுத்தால் ஆன ஒரு பாடை என்றெல்லாம் எழுதப்பட்டதையும் சொல்லப்பட்டதையும் தமிழா்களே காலங்காலமாய் நம்பியும் வந்த காலத்தில்தான்,  தமிழ் திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்; தமிழ் தனித்து இயங்கக் கூடியது; சமக்கிருதம் வேறு;  தமிழ் வேறு; தமிழ் செவ்வியல் தன்மை கொண்டிருப்பது என்கிற உண்மைகளை உலகுக்கு உரத்துச் சொன்னவர் அறிஞா் கால்டுவெல்.
   இந்திய ஒன்றியத்தின் நிலப்பகுதி வரலாற்றுத் தொடக்கத்தை வடக்கிலிருந்து சொல்லி வந்த நிலையில், மனிதகுலத் தோற்றத்தின் வரலாற்றையே இந்திய ஒன்றியத்தின் தென்கோடியில் இருந்து தொடங்க வேண்டும்;  உலக மாந்தா் தோன்றிய நிலப்பகுதி குமரிக்கண்டம்;  உலக மாந்தா் முதலில் பேசிய மொழி தமிழ் என்பதையெல்லாம் தெளிவுபடுத்த முனைந்தவா் அறிஞா் பாவாணா்.  இவ்வாறாக கால்டுவெல், பாவாணா் போன்றோரின் எடுத்துரைப்புகளுக்கு வலுசோ்க்கும் சான்றுகளாய் அமைவன பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்தான். இவற்றுள் பெரும்பாலானவற்றைத் தொகுத்தும் பதிப்பித்தும் வெளிக்கொணர்ந்தவர் அறிஞர் உ.வே.சா. ஆவார்.
   பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நுால்கள் அனைத்தும் திணை எனப்பெறும் நிலம்சார் பண்பாட்டு வாழ்வியல் மரபை எடுத்துரைக்கும் இலக்கியங்களாய் அமைந்திருக்கின்றன.  தொல் தமிழ் இலக்கியத்தின் மரபே திணை  என்னும் மரபுதான். ஒட்டுமொத்தத் தமிழினத்தின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கவில்லை என்றாலும், ஏதோ ஒருவகையிலான வரையறுப்பு வெளிகளுக்கு உட்பட்ட தமிழரின் அகவாழ்வையும் புறவாழ்வையும் திணை என்னும் மரபின் வழியே எடுத்துரைக்கும் பாங்கு பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் வெளிப்பட்டிருக்கிறது. இத்தகையச் சிறப்பு வாய்ந்த பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும் ‘சங்க இலக்கியம்’ எனப் பொத்தாம் பொதுவாய் அழைக்கும் மரபு பெரும்பாலோரின் சிந்தனை மரபுகளில் படிந்திருக்கிறது.
   பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும் பொருண்மை நோக்கில் பெயரிட்டு அழைப்பதுதான் அவ்விலக்கியங்களுக்கான மதிப்பு இருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றின் மரபுகளையும் பொருண்மைகளையும் முழுமையாய் அறிந்தவா்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இலக்கியங்களைத் ”திணை இலக்கியங்கள்” என்றே சுட்டுவா்.  திணை இலக்கியம் என்னும் சொல்லாடல்தான் சரியான சொல் வழக்காகவும் அழகியலாகவும் இருக்கமுடியும்.  இத்தகைய திணைசார் இலக்கியங்கள் வெறுமனே மரபு இலக்கியங்களாக மட்டுமே நின்றுவிடாமல், இன்றைய நவீன காலத்திய இலக்கியம் வரையிலும் பயணித்துக்கொண்டிருக்கும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றன.
   மண்ணுக்குள் புதைந்திருக்கும் விதையானது மழை பெய்யும் காலம் வரையிலும் காத்திருந்து, மழைபெய்த பின்னால் சில்லென்று முளைத்துக் கிளம்பி காடு, மேடு எல்லாம் பச்சை போர்த்தி, சிலிர்த்துக் கிளைத்து,  பூத்துக் குழுங்கி, காய்த்துக் கனிந்த பின்பு, மீண்டும் விதையாகி மண்ணுக்குள் புதையுண்டுபோகும் விதைபோல, திணைசார் கவிதைகள் யாவும் அவை தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை புதையுண்டு புதையுண்டு முளைத்துக்கொண்டிருக்கும் தாய்மைப் பண்பைக் கொண்டிருக்கின்றன.
   ஒரு காலகட்டத்திய ஒருசார் மக்களின் புலப்பாடாக வெளிப்படும் ஓா் இலக்கியம் அல்லது கவிதை, பலகாலம் கடந்தும் பல தலைமுறைக்கும் வந்து சோ்வதில்தான் அதன் உயிர்ப்பும் ஆற்றலும் உள்ளடங்கி இருக்கிறது.  ஓா் இலக்கியம் அல்லது கவிதை காலந்தோறும் தலைமுறைதோறும் பயணிக்கும்போது பல்வேறு வகையிலான புரிதலுக்கும் வாசிப்புக்கும் நுகா்வுக்கும் இடமளிக்கும் வகையில் அமையும்.  அவ்வகையில் திணைசார் கவிதைகளும் அன்றைய காலகட்டத்திலிருந்து இன்றைய நவீன காலகட்டம் வரையிலுமாகப் புதிய புதிய வாசிப்புக்கும் நுகா்வுக்கும் உரிய வாயில்களை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக, அகத்திணைக் கவிதைகள் யாவும் மழைபெய்யும் போதெல்லாம் முளைக்கும் விதைபோல் வாசிக்கும் போதெல்லாம் புதிய நுகா்வை, புதியதான பொருண்மையை, புது மாதிரியான அழகியலைத் தரும்படியாகப் பல உள்ளீடுகளைக் கொண்டிருக்கின்றன.  அதாவது,  திணைசார் கவிதை மொழியானது மரபின் ஆணிவேராகவும் புதைந்து இருக்கிறது;  நவீனத்தின் கிளைகளாகவும் படர்ந்திருக்கிறது.
   மொழி என்பதே குறியீடுகளின் தொகுப்பாகத்தான் அமைந்திருக்கிறது. சொற்கள் நிரம்பிக் கிடக்கும் மொழியைச் செதுக்கிச் செதுக்கித்தான் கவிதை உருவாக்கப்படுகிறது.  புறநிலையில் ஒரு பொருளாக்கத்தையும் புதைநிலையில் வேறு வேறு பொருளாக்கத்தையும் கொண்டிலங்கும்  கவிதையை, வாசிப்புக்குத் தகுந்தாற்போலப் பொருள்கோடல் செய்வதற்கு வாய்ப்புகள் நிரம்ப உண்டு. அதேபோல, திணை என்னும் சொல்லாடலே செதுக்கப்பட்ட சிலைபோல அமைந்திருக்கின்றது. குறிப்பாக, திணைசார் கவிதைகள் செதுக்கப்பட்ட கோயில் சிலைபோல இருப்பதாகச் சுட்டுவா். 
   திணை என்பதற்கு நிலம், ஒழுக்கம், வாழ்வியல் எனப் பல பொருண்மைகள் வழங்கப்படுவதைப்போல, அழகான கோவில் சிலை என்பது முதலில் ஒருகல்; பிறகு அழகான சிலை; அதன்பிறகு வழிபடுவதான ஒன்று என்பதைப்போலத் திணைசார் கவிதைகளும் பலவகையான பொருண்மைகளைக் கொண்டுள்ளன.   கோயில் சிலையைக் கல்லாகப் பார்ப்பவா்களும் உண்டு; அழகான சிலையாகப் பார்ப்பவா்களும் உண்டு;  தெய்வம்  என்பதாகப் பார்ப்பவா்களும் உண்டு.  இதே போலத்தான் கவிதை பயில்வோருக்கு ஏற்றாற்போலப் பல பொருண்மைகளும் திணைசார் கவிதைகளுக்குள் புதைந்து கிடக்கின்றன. 
   மொழி என்பது ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் சொற்களின் தொகுப்புதான் என்றாலும், அவ்வாறான சொற்கள் கொண்டு செதுக்கப்படுவதாய்த்தான் கவிதை பிறக்கின்றது. வெறும் கல்லாய் கிடப்பதைச் சிலையாய் வடிப்பது போலவே, மொழியில் பரவிக்கிடக்கும் சொற்களை அனுபவம் எனப்பெறும் நுகா்வு வெளிப்பாட்டிற்குத் தகுந்தாற்போல, பொருண்மையையும் அழகியலையும் ஒருங்கே வெளிப்படுத்துவதற்குத் தோதாய்ச் செதுக்கிச் செதுக்கி உருவாக்கப்படுவதுதான் கவிதை. அதாவது, தாம் வாழ்கிற இச்சமூகத்தாலோ அல்லது சொந்த நுகா்வுகளாலோ பெறப்படுகிற உணா்வுகள் உள்ளக் கிடங்கில் அமிழ்ந்து கிடந்து ஒரு சமயத்தில் மொழியைத் துணை சோ்த்துக்கொண்டு புறத்தே வந்து விழுவதுதான் கவிதை.
   ஒரு படைப்பாளி  சொல்ல வந்ததைத் தாண்டியும் அல்லது அதனில் இருந்து விலகிப் போவதற்கும் கவிதை இடமளி்க்க வேண்டும். அதாவது, ஒரு பனுவலுக்குள் பல பனுவல்கள் நுழைவதற்கான பல வாயில்களைத் திறந்து விட்டிருப்பதாய் ஒரு கவிதை அமைந்திருக்க வேண்டும்.
   கவிதை குறித்த மேற்குறித்த குறிப்புகள், கவிதை பற்றிய புனிதத் தன்மையைக் கட்டமைக்க முயல்வதாகத் தோன்றலாம். மேற்குறித்த விவரிப்புகள் அகம்சார் கவிதைகளுக்கே பொருந்தி வரக்கூடியவை. சமூகம்சார் அல்லது நிகழ்சார் கவிதைகள் புறம் என்பதாய்ப் பதிவாகி விடுகின்றன. அதாவது, புறம்சார் பதிவுகள் வரலாறு என்பதோடு நெருக்கமுடையதாகி விடுகின்றன. அகம்சார் நிகழ்வுகளும் ஒரு காலத்திய மனிதர்களின் வாழ்வியலில் புலப்படும் உளவியல் கோலங்கள்தான். இத்தகைய உளவியல் கோலங்களும் வரலாற்றில் பதியக் கூடியவைதான். அதேவேளையில், அகம்சார் பதிவுகள் வரலாறு என்பதிலிருந்து விலகி நிற்கின்றன அல்லது  வரலாறாய் மாறத் தயங்குகின்றன.
   அகம் சார்ந்ததாகவோ அல்லது புறம் சார்ந்ததாகவோ அல்லது எழுத்து மரபு சார்ந்ததாகவோ அல்லது வாய்மொழி மரபு சார்ந்ததாகவோ உருவாக்கம் பெறுகிற கவிதை அல்லது இலக்கியம் என்பது எந்தக் காலத்திலும் நுாற்றுக்கு நுாறு வீதம் நேரடியான சமுதாயச் சித்திரம் அன்று. புற உலகை அதாவது காட்சிகளையும் அனுபவங்களையும் எழுத்தாளர் அப்படியே சொல்லில் வடிப்பதில்லை. அனுபவ முழுமையிலிருந்து தற்செயலான, மேம்போக்கான அம்சங்களையெல்லாம் நீக்கிவிட்டு, அடிப்படையான சாராம்சத்தை அக உணா்வில் உரைத்து வகைமாதிரிக்குப் பொருத்தமான வடிவத்தில்  உருவாக்குகின்றனர். இன்னொரு விதமாய்க் கூறுவதாயின், ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள் புறநிலைப்பட்ட எதார்த்தத்தை அகநிலைப்பட்ட எதார்த்தமாக மாற்றியமைக்கின்றனா். மனிதனின் சமூக வாழ்க்கையே கலை இலக்கியம் அனைத்திற்கும் ஒரே அடிப்படையாய் இருப்பினும், அவை உருவாக்கிக் காட்டும் வாழ்க்கை கண்ணாரக் காணும் வாழ்க்கையைவிட வளமிக்கதாயும் உயிர்த் துடிப்புள்ளதாயும் அமைந்து விடுகிறது.  வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் உள்ள சிறப்பான உறவு இதுதான்.
   கவிதை உள்ளிட்ட எந்தவோர் இலக்கிப் படைப்புக்கும் உருவாக்கத்திற்கும் உள்ள நெய்திடும் உறவு இதுதான்.  ஆக,  அகம் சார்ந்தோ அல்லது புறம் சார்ந்தோ உருவாக்கம் பெறுகிற கவிதை அல்லது இலக்கியமானது வாழ்வியல் சார்ந்தது எனினும், நடப்பியல் சார்ந்தோ அல்லது புனைவு சார்ந்தோ வெளிப்படுத்தப்படுவது என்றாலும்,  மொழியால் ஒப்பனை பெறுகிற கலை வடிவமாகவே முகம் காட்டுகிறது எனலாம்.  இந்நிலையில்,  புறம் சார்ந்த அல்லது நிகழ் நடப்பியல் சார்ந்த கவிதைகளைக் காட்டிலும்,  அகம் சார்ந்த கவிதைகள்தான் மொழியின் சொற்களால் அதிகளவு ஒப்பனைக் கோலங்கள் பூண்டு கிடக்கின்றன.  தமிழின் திணைசார் கவிதைகளில் குறிப்பாக.  அகத்திணைக் கவிதைகளில் மொழியின் ஒப்பனைக் கோலங்களையும் பன்முக வாழ்வியல் கோலங்களையும் வேறுவேறான பொருண்மைக்  கோலங்களையும் அதிகளவு காண முடியும்.
   ”வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்பதான வெளிக்குள் பலவகை நில அமைப்புகள், இயற்கைச் சூழல், மக்கள் வாழ் நிலைகள், தொழில் முறைகள், பண்பாட்டுக் கோலங்கள் எனப் பன்மைத் தன்மை பரவிக்கிடக்கிறது. தமிழ் நில வெளியின் இத்தகைய பன்மைத் தன்மைகளைப் பன்மைத் திணைகளாகவே புலப்படுத்தியுள்ளன  திணைசார் கவிதைகள்.  அதாவது, நிலம் மற்றும் பண்பாட்டு வெளிகளின் எடுத்துரைப்புகளாகவே திணைசார் கவிதைகள் அமைந்திருக்கின்றன. பன்மைத் திணை நிலைகளைப் புலப்படுத்தும் பன்மைத் திணை மரபே தமிழின் மரபாய் உறுப்பெற்று இருக்கிறது.
   தமிழின் திணைசார் கவிதைகள் பன்மைத் தன்மைகளைக் கொண்டிருப்பதைப் போலவே, பன்மை வாசிப்பு நுகர்வுகளைத் தருகிற பனுவல்களாகவும் அமைந்திருக்கின்றன. ”சுட்டி ஒருவா் பெயா்கொளப் பெறாஅர்” என்னும் அகத்திணை மரபு, பன்மை நுகர்வைப் பலரும் பல காலத்திலும் பலவகைக் கோணத்திலும் உள்வாங்கச் செய்யும் ஓா் உத்திதான்.  மேலும் உள்ளுறை, இறைச்சி போன்ற உத்திகள் பன்மை நுகர்வைப் பெற்றுக் கொள்வதற்கானவைதான்.
   பெருமரத்தின் தளிர் நுனிக்கும், மண்ணுக்குள் புதைந்திருக்கும் வோ்களின் நுனி முடிச்சுகளுக்கும் ஒரு தொடுப்பு இருப்பதைப்போல, மரபுக்கும் நவீனத்திற்கும் தொடுப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் மொழியே வளப்பமுடன் செழிக்கும்.  அவ்வகையில் மரபுக்கும் நவீனத்திற்கும் ஊடாடிப் பயணிக்கும் ஒளிக்கதிர்களாய் திணைநிலைக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. 
   ஒரு கவிதை காலங்கடந்து மட்டும் அல்ல; பல்வேறு நுகர்வுகளுக்கும் வாசிப்புகளுக்கும் எடுத்துரைப்புகளுக்கும் இடம் தருவதாய் அமைந்திருக்க வேண்டும்.  அந்தவகையில், தமிழின் அகத்திணைக் கவிதைகள் பெரும்பாலும் பன்முக எடுத்துரைப்புகளுக்கு  வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன.  சான்றாக, குறுந்தொகையில் உள்ள  ”செம்புலப் பெயல் நீரார்” இயற்றிய கவிதையை அனுகலாம்.  ஆய்வாளா்களாலும் கவிதை நுகா்வாளா்களாலும் பரவலாக எடுத்தாளப்பெறும் இக்கவிதை, பல்வேறு எடுத்துரைப்புகளுக்கு இசைவாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளீா்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீா் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. (குறுந்தொகை,40)

என்னும் இக்கவிதை, சுட்டி ஒருவா் பெயா் கொளப் பெறாஅா் எனும் பொது மரபுச் சட்டகத்தைப் புலப்படுத்தும் அதே வேளையில், இந்தக் கவிதையை வெளிப்படுத்திய புலவா் பெயா் இன்னதென்று தெளிவிக்காமல் அமைந்திருக்கிறது.

   மேற்குறித்த கவிதையின் முதல் பனுவல், அக்கவிதையை இயற்றிய புலவரின் உள்ளத்திற்குள் புதைந்திருக்கக் கூடியது.   என்ன சூழலில், எந்தக் காலத்தில், என்ன நோக்கத்தில், என்ன பெயரில் இந்தக் கவிதையை எழுதினார் எனத் திட்டவட்டமாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதாவது, இந்தக் கவிதையின் முதலாவது பொருன்மைப் பனுவல் யாருக்கும் தெரியாமல் புலவரோடு மட்டும் உறவாடக் கூடியதாக அமைந்து விடுகிறது. 

   உள்ளத்திற்குள் நிகழ்ந்த அல்லது நுழைந்த ஓா் அனுபவம் எனும் நுகர்வு, அவ்வுள்ளத்திற்குள்ளே நோ்ந்துவிட்ட முதல் நுகர்வாகவே அமிழ்ந்துவிடக் கூடியது. இந்த நுகர்வை மொழியாக்கி நடுகையில், அது வேறொரு நுகர்வாக மாறி விடுகிறது.  மொழியில் முளைத்த இந் நுகர்வை வாசிக்கும்போது வேறு ஓர் நுகர்வு கிடைக்கின்றது.  மொழியின் சுருக்கு முடிச்சுகளாகப் பரவிக்கிடக்கும் சொற்களின் குறியீட்டுத் திசைகளில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவங்களாய் விரிந்து கொண்டிருக்கும் தன்மையை மேற்குறித்த கவிதை கொண்டிருக்கிறது.

   இனக்குழு வாழ்க்கை முறைக்கு உட்பட்டிருந்த ஒரு சமூக அமைப்பில், வெவ்வேறு இனக்குழுவைச் சார்ந்த ஒரு பெண்ணும் ஓர் ஆணும் காதல் உறவாடிய நிலையை இக்கவிதை காட்டுவதாய் கொள்வது ஒருவகை எடுத்துரைப்பு.

   இனக்குழுக் கட்டுப்பாடுகள் பலவகைப் பண்பாட்டுக் கூறுகளாய் நிரம்பி வழிந்த ஒரு சமூக அமைப்பில் - சமூகக் காலகட்டத்தில், பண்பாட்டுக் கோடுகளைத் தாண்டிய இரு மனங்களின் சங்கமத்தை மேற்குறித்த கவிதையில் காணமுடியும். சாதி, மதம், இனம், மொழி, நிலம், பண்பாடு கடந்து காதல் கொள்ளும் இரு மனங்களின் கூட்டுப் பதிவாய் அக்கவிதை அமைந்து இருப்பதாய் உணர வைப்பது ஒருவகை எடுத்துரைப்பு.

   இரு மனங்களின் சங்கமத்தைச் ”செம்புலப் பெயல் நீராய்” உவமித்துச் சொல்வதின் வாயிலாகப் பெண் மனதுள் ஆணும், ஆண் மனதுள் பெண்ணும் ஊடுறுவி இருப்பதை உணா்த்துவதாகக் கொள்ளலாம்.  மழை நீரின் தன்மையைச் செம்மண்ணும் செம்மண்ணின் நிறத்தை-தன்மையை மழை நீரும் அடையும் தன்மையைச் ”செம்புலப் பெயல் நீர்” எனும் சொல்லாடல் குறிப்பதாய்க் கொள்ளலாம். அதாவது, நிலம் அசையாமல் ஓரிடத்தில் நிலையாய்க் கிடந்து கொண்டிருப்பது.  அசைவுத் தன்மையை – நகா்வுத் தன்மையை நிலம் கொண்டிருப்பது இல்லை. நிலத்தின் தன்மை இவ்வாறு இருக்க, மழைநீா் என்பதற்கோ தனியாக நிறம் இல்லை. மழை நீரானது நகா்வுத் தன்மையைக் கொண்டிருக்கக் கூடியது. மேலிருந்து கீழே விழுவதும் உருண்டோடும் தன்மையதுமாய் நகா்வுத் தன்மை கொண்டது.  இப்போது நிலத்தில் மழைநீா் விழுகிறபோது நிலத்தின் நிறத்தை மழைநீா் பெறுகிறது.  நகராத நிலத்தின் துகள்கள் மழைநீரோடு கலந்து நகா்வுபெற்று உருண்டோடுகிறது.  மழைநீரின் நகா்வை மண்ணும், மண்ணின் நிறத்தை மழை நீரும் பெறுகின்றன. இந்நிகழ்வுதான் பெண்ணும் ஆணும் மனதால் கலந்துவிட்ட நிகழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டதாய் ஆகிப்போகிறது. இதைச் செம்புலப் பெயல் நீராக அக்கவிதை காட்சிப்படுத்துவதாகக் கொள்வது ஒருவகை எடுத்துரைப்பு.

   மேற்குறித்த எடுத்துரைப்பானது, பெண்ணுக்கும் ஆணுக்குமான களவு வாழ்க்கையில் இரு மனங்களுக்குள் நிகழ்ந்த ஒரு நுகர்வாய் விரித்துரைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஆனால் அந்த நிகழ்வைக் கடந்து, உள்ளங்களாலும் உடல்களாலும் இணைந்துவிட்ட நிகழ்வைக் குறிப்பதாகவும் இக்கவிதையில் பொருள் கோடல் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கொள்வது வேறுவகை எடுத்துரைப்புதான்.

   காதல் வற்றிப்போகக் கூடாது. பெண்ணுக்கும் ஆணுக்குமான களவு மற்றும் இல்லற வாழ்வுக்குக் காதல் ஊறிக்கொண்டே இருக்கவேண்டும்.  செம்புலத்தில் பெய்த மழைநீா் தேங்கி இருக்கும் வரையில் மண்ணின் நிறத்தைக் கொண்டிருக்கும். மழைநீா் வற்றிப்போகக் கூடியது.  இத்தன்மை காதலுக்கு உவமையாக வருகையில் பொருத்தம் இல்லாமல் அமைந்து இருப்பதாய் எண்ணத் தோன்றுகிறது.  ஆகையால், செம்புலப் பெயல் நீரைக் களவு நிலையில் இரு மனங்கள் மட்டும் கலந்துவிட்ட ஒரு நிகழ்வாய்ப் பார்க்கக் கூடாது; அதையும் கடந்து இரு உடல்களுக்கு இடையில் நிகழ்ந்த பாலியல் துய்ப்பின் நுகர்வைச் சுட்டுவதாக இக்கவிதை அமைந்திருப்பதாகப் பார்க்கும் வேறுவகை எடுத்துரைப்பும் இருக்கின்றது.  அதாவது, செம்மண் என்பது பெண் உடலாகவும், பெயல் நீா் என்பது ஆண் உடலாகவும் குறியீட்டு நிலையில் பொருளுரைப்பதாகக் கொள்ளலாம்.

   மேற்குறித்த எடுத்துரைப்பு நிலைகளைக் கடந்த இன்னொருவகைப் பொருள்கோடலுக்கும் இடம் தருவதாய் அக்கவிதை அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
      
   பெண்ணும் ஆணும் உடல்களால் இணை சோ்வதற்கு முன்பாக - பாலியல் துய்ப்புக்கு முன்பாக உள்ளங்கள் இரண்டும் கலந்தாக வேண்டும். இருவா் உள்ளங்களிலும் இருவா் மீதான ஈா்ப்பும் காதலும் உருவாகவேண்டும். உருவாகும் அந்த ஈா்ப்பை முதலில் காதலாக வெளிப்படுத்த வேண்டும்.  வெளிப்படுத்திய அந்தக் காதலை அந்தக் காதலுக்கு உரியவா் ஏற்றுக் கொண்டாக வேண்டும். காதலை ஏற்றுக்கொண்டதாய் உரியவா்  உரியவரிடம் வெளிப்படுத்துகிறபோது மனதில் பூக்கிற உணா்வுக் கோலங்கள்தான் இக்கவிதையில் புலப்படுவதாய்ச் சுட்டுவோரும் உண்டு.

   பொதுவாக, பெரும்பாலான எடுத்துரைப்புகள் ”செம்புலம்” என்பதற்குச் ”செம்மண்” என்பதாகவே பொருள் கோடல் செய்துள்ளன.  ஆனால் ‘செம்புலம் என்பது செம்மண் நிலப்பகுதியைக் குறிப்பதல்ல;  மாறாக வானம் பார்த்த மானாவாரி நிலப்பகுதியைக் குறிப்பதாகவும் பொருள் கோடல் செய்யப்படுகிறது.

   மழை இல்லாமல் வறட்சியில் விரிவோடி வாய்பிளந்து கிடந்த மானாவாரி நிலப்பகுதியில் திடுதிப்பென கனமழை பொழிகிறது. வெகுகாலம் கழித்துப் பெய்திட்ட கனமழையால் நிலத்திற்குள் புதையுண்டிருந்த எண்ணற்ற மரம், செடி, கொடி, புல், பூண்டு என அத்தனை வகையான பயிர் பச்சைத் தாவர உயிர்களும், அவற்றைத் தொடர்ந்து பூச்சிகள், வண்டுகள், பறவைகள் போன்ற பலவகை விலங்கினங்களும் முகம் காட்டத் தொடங்கி விட்டன. காய்ந்து கிடந்த நிலப் பகுதி யாவும் பச்சைப் பசேலென்கிற சேலை உடுத்திக் கிடக்கிறது.  இலைகளும் தழைகளும் பூக்களும் பிஞ்சுகளும் கனிகளும் படையலாய்ப் பரவிக் கிடக்கின்றன.  விரிப்போடிய நிலமெங்கும் இறுமாப்பாய்ப் பசுமை பூத்துக் கிடக்கிறது.  செழிப்பும் சிலிர்ப்பும் நிலம் முழுவதிலும் பரவிக் கிடக்கிறது.
  
   இயற்கைக்குள் நடக்கிற இந்நிகழ்வெல்லாம் மழைநீா் மண்ணுக்கு வந்துவிட்ட பிறகுதான். மழை இல்லையெனில் மண் சிலிர்க்க முடியாது. மண்ணைச் சிரிக்கச் செய்வதும் சிலிர்க்கச் செய்வதும் மழைதான். இந்நிகழ்வைப் போலத்தான் வெறுமையாய் - தனியராய் அலைந்து திரியும் ஒருவருக்குள் இன்னொருவா் நுழைந்து அன்புமழை  பெய்விக்கிறபோது  உள்ளமெல்லாம் சிலிர்க்கும்; வாழ்வெல்லாம் பூக்கும்; எல்லாமும் மகிழ்ச்சியில் திளைக்கும்.

   மண்ணில் பெய்திட்ட மழைநீருக்குப் பின்னால் ஏற்படும் மாற்றங்களைப் போலவும் சிலிர்ப்பைப் போலவும், ஒருவா் உள்ளத்திற்குள் இன்னொருவரின் வருகை அல்லது செல்கையானது வாழ்க்கையைச் செழிப்பாக்குகிறது; சிலிர்க்கச் செய்கிறது.  இந்த நுகர்வைத்தான்  ”செம்புலப் பெயல் நீா்” எனும் உவமை கொண்டு சொல்வதாகக் கொள்ளும் எடுத்துரைப்பையும் பொருத்தமானதாகக் கருதலாம். ஆக, ஒரே கவிதை ஒவ்வொரு காலத்திய அல்லது வாசிப்புக்கு ஏற்றாற் போன்ற பலப்பல எடுத்துரைப்புகளுக்கும் வழிகோலியிருக்கும் பனுவலாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

   குறுந்தொகையின் மேற்குறித்த கவிதை, நவீன காலத்திய வாழ்க்கையினூடாகக் கடந்து செல்கையில் வேறுவகைப் பொருள் கோடலையும் எதிர்கொள்கிறது.

உனக்கும் எனக்கும் ஒரே ஊா்
வாசுதேவ நல்லுார். 
நீயும் நானும் ஒரே மதம்
திருநெல்வேலிச் சைவ பிள்ளைமார் வகுப்பும்கூட.
உந்தன் தந்தையும் எந்தன் தந்தையும்
சொந்தக்காரர்கள்; மைத்துனன்மார்கள்.
எனவே
செம்புலப் பெயல் நீா்போல
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே.

என்கிற மீராவின் கவிதைவரிகள், குறுந்தொகைக் கவிதையின் இன்னொரு வகையிலான எடுத்துரைப்புதான். கால ஓட்டத்தில் கரைந்துபோன காதல், சாதி சமயக் கோலங்களின் துணைதேடிக் கிடப்பதை அங்கதக் தொனியில் வெளிப்படுத்துவதாய் இக்கவிதை அமைந்திருப்பினும், இது குறுந்தொகைச் சாயல் கொண்ட கவிதை எடுத்துரைப்புதான்.
  
   திணைசார் கவிதைகள் குறித்து நவீன எடுத்துரைப்புகளை முன்வைத்துள்ள நுால்களுள் சங்கச் சித்திரங்கள் ஒன்றாகும்.  ஜெயமோகன் எழுதிய அந்நுாலில் மேற்குறித்த குறுந்தொகைக் கவிதையினையே மரபு சிதையா புதிய சாயலில் எடுத்துரைப்பு செய்யப்பட்டுள்ளது.

எனது தாயும் உனது தாயும்
யாரென்று நாமறியவில்லை.
எனது தந்தைக்கும்
உனது தந்தைக்கும்
என்ன உறவென்றும்
தெரியவில்லை.
நானும் நீயும்
முன்பு கண்டதுமில்லை.
பாலை மண்ணில்
மழை நீா்போல
அன்புடைய நெஞ்சங்கள்
ஒன்றாய்க் கலந்தன.

என்பதாய் நவீனம் கோத்துக் கவிதையாகியிருக்கிறது குறுந்தொகைக் கவிதை.
 
   உரையாசிரியர்கள், மரபுசார் மற்றும் நவீனத் திறனாய்வாளா்கள், படைப்பாளிகள், வாசிப்பாளா்கள் போன்றோருக்குத் தகுந்த மாதிரியான எடுத்துரைப்புகளுக்கும் பொருள் கோடல்களுக்கும் வாய்ப்பைத் தந்திருக்கும் மேற்குறித்த குறுந்தொகைக் கவிதையைப் போல, திணைசார் கவிதைகள் தொடங்கி நவீனக் கவிதைகளும் தமிழ் மரபில் நிரம்ப உண்டு.  அவ்வாறான கவிதைகளே வெகுகாலம் உயிர்ப்புடன் உலாவிக் கொண்டிருப்பனவாகும்.

பார்வை நுால்கள்:

1.   உ.வே. சாமிநாதையா், குறுந்தொகை  மூலமும் உரையும், 1947,
கபீா் அச்சுக்கூடம், சென்னை.
2.   ஜெயமோகன்,  சங்கச் சித்திரங்கள், 2010, தமிழினி வெளியீடு, சென்னை.
3.   கோ. கேசவன்,  மண்ணும் மனித உறவுகளும், 2001,
சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
4.   மீரா, ஊசிகள், 2008,  அகரம் வெளியீடு, தஞ்சாவூர்.



3 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. திணை சார் கவிதைகளின் பொருள் மட்டுமல்ல நவீன கவிதைகளின் பொருளும் படிப் போரின் அகக் கண்களின் வாயிலாகவே பார்க்கப்படுகின்றன. மலைப்பரப்பில் குவிந்து கிடக்கும் பூக்காடு போல உங்கள் சொல்லாதிக்கம்.. மலை ஏறுதல் கடினம்தான் ஆனால் உங்கள் பூக்காட்டை அனுபவிக்க எதுவும் செய்யலாம் .. கட்டுரை அருமை..

    பதிலளிநீக்கு
  3. கட்டுரையின் உணர்வோடும் உயிரோடும் பயணித்தமைக்கு நன்றி.உங்கள் மதிப்புரையும் கவித்துவ மணம் பரப்புகிறது. தொடர்ந்து படியுங்கள்; எழுதுங்கள்; பயணிப்போம்.

    பதிலளிநீக்கு