வியாழன், 24 டிசம்பர், 2015

இருத்தல் உளவியல் : முல்லைப் பாட்டை முன்வைத்து… : மகாராசன்

 இருத்தல் உளவியல் :
 முல்லைப் பாட்டை முன்வைத்து…          :  மகாராசன்

   மக்களின் வாழ்வியல் வழக்கங்களிலும் புழக்கங்களிலும், வாய்மொழி மரபிலும் நிகழ்த்து மரபிலும் தமிழ் செழித்து நின்ற அதேவேளையில், சங்கம் வைத்துத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பெருமளவு இயற்றப்பட்டு எழுத்து மரபிலும் தமிழ் தழைத்து வளா்ந்தது.  அந்தவகையில் தமிழின் மணிமுடியாகத் திகழ்பவை பாட்டும் தொகையுமாகும். இவற்றைச் சங்கப் பாடல்கள் எனப் பொதுவாகச் சுட்டுவா்.
   சங்கப் பாடல்கள் எனப்பெறும் பாட்டும் தொகையுமாய் அமைந்த திணைசார் பாடல்கள் தோன்றிய காலம் வேறு; தொகுக்கப்பட்ட காலம் வேறு. தோன்றிய காலம் முதல் தொகுக்கப்பெற்ற காலம் வரையில் தெரிவு செய்யப்பட்ட பாடல்களின் தொகுதியே பாட்டும் தொகையுமாகும். அடியை அளவாகவும், அகத்தையும் புறத்தையும் எல்லையாகவும், பா ஒப்புமையை வரம்பாகவும் கொண்டு தொகை தொகையாக வகை செய்தனா்.  மேலும், அவற்றைக் குறைந்த அடிகளைக் கொண்டவை; நீண்ட அடிகளைக் கொண்டவை எனத் தனித்தனியாகத் தொகுத்தனா்.  இத்தொகுப்பையே பதினெண் மேற்கணக்கு  எனச் சுட்டுவா். தமிழின் இலக்கிய மரபை அறிந்தவர்கள், பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களைத் திணை இலக்கியங்கள் என்றே குறிப்பிடுவர்.
   பதினெண் மேற்கணக்கு நுால்களில் ஒரு பிரிவு பத்துப்பாட்டு. பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் உள்ள முல்லைப் பாட்டு என்னும் அய்ந்தாவது பாட்டு, முல்லைத்திணை பற்றிய அகப்பொருள் பாட்டாக அமைந்திருக்கிறது. பண்டைத் தமிழ் இலக்கியப் பாடுபொருள் மரபானது அகப்பொருளையும் புறப்பொருளையுமே வெளிப்படுத்துகின்றது.  இவற்றுள்,  அகமானது ஒத்த அன்பினராகிய தலைவியும் தலைவனும் தம்முள் கூடுகின்ற காலத்தில் உள்ளத்து உணா்வால் துய்க்கும் இன்பம். அவ்வின்பம் இன்ன தன்மையுடையது எனப் புறத்தார்க்குக் கூற இயலாத அகத்துணர்வு உடையதாகையால் அகப்பொருள் எனப்படும் என்பர் சான்றோர்.
   தொல்காப்பியம் ஏழுவகையான அகப்பொருள் திணைகளைக் குறிப்பிடுகின்றது. அவற்றுள் அன்பின் அய்ந்திணைகளாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைத் திணைகள் குறிக்கப்படுகின்றன. குறிஞ்சி  முதலிய குறியீடுகள் அந்தந்த நிலத்திற்குரிய மலர்களின் பெயர்களே என்றும்;  இப்பெயர்கள் பின்னர் உரிப்பொருளைப் புலப்படுத்தும் குறியீடுகள் ஆயின என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனா்.   இந்நிலையில், முல்லை என்பது முல்லைப்பூ அல்லது முல்லைக் கொடியைக் குறிக்கும்.  முல்லையின் மிகுதி அல்லது சிறப்பு குறித்து முல்லை வளரும் நிலத்திற்குப் பெயராகி அந்நிலத்து நிகழும் ”ஆற்றியிருத்தல்” என்னும் ஒழுக்கத்தையும் இச்சொல் குறிக்கிறது. ஆயின், முல்லை என்பதன் பொருள் ”இருத்தல்” என்றும், விளக்கு ஆகிய சுடர் இருந்த இடம் விளக்கு என்று சொல்லப்படுவது போல, இருத்தலாகிய ஒழுக்கம் நிகழும் இடமும் முல்லை எனப்படும் என்கிறார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்.
     ”வஞ்சிதானே முல்லையது புறனே”  எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது.  முல்லை என்னும் அக ஒழுக்கத்திற்கு இயைவுடைய புற ஒழுக்கம் வஞ்சியாகும். ஓா் அரசர் பகையரசா் நாட்டினைக் கைப்பற்றப் படையெடுத்தல் வஞ்சியாகும் என மரபிலக்கணங்கள் குறிப்பிடுகின்றன.
   தலைவி தமது தலைவனைப் பிரிந்து இல்லத்திலே இருப்பது போல, தலைவனும் தமது தலைவியைப் பிரிந்து பாசறையில் இருப்பான்.  தலைவி, தலைவனைப் பிரிந்து இருக்கும் மனையானது காடுசூழ் உலகமாகும். அதேபோல, தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனின் பாசறையும் காடுசூல் உலகத்தே அமைக்கப்படுகின்றது.  ஆகையால், வஞ்சித் திணை முல்லைத் திணைக்குப் புறனாவது பொருந்தும்.  இந்நிலையில், முல்லைத் திணையை விரித்துச் சொல்லும் முல்லைப்பாட்டு, முல்லைத் திணையோடு தொடா்புடைய வஞ்சித் திணையையும் கூறிச் செல்கிறது. அதாவது,  எடுத்துரைக்கும் பொருளுக்கு மாறுபாடு இல்லாமல், வேறொரு பொருளை உட்செருகி, மேற்கொண்ட பாடலின் தொடா்பு அறுபடாமல் திறம்படவும் நுட்பமுடனும் எடுத்துரைக்கிறது முல்லைப்பாட்டு.
மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவா் பெயா்கொளப் பெறாஅா்.
என, தொல்காப்பியம் அகப்பொருள் மரபைக் குறித்து விளக்குகிறது.  இத்தகைய அகப்பொருள் மரபிற்கேற்ப, பத்துப்பாட்டுள் முல்லைப்பாட்டு ஒன்று மட்டுமே பாட்டுடைத் தலைவரைக்  குறிக்காமல் அகப்பொருள் மரபுத் தடத்தில் பயணிக்கிறது.  ஆனால், தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியனையே முல்லைப்பாட்டு குறிப்பதாகச் சிலா் சுட்டுவா்.  அதாவது, பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டுக்கு அடுத்து உள்ள மதுரைக் காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைத் தலைவனாகக் கொண்டிருத்தலால், அவற்றுக்கு முன்னுள்ள முல்லைப்பாட்டும் அவனையே தலைவனாகக் குறிக்கிறது என்ற கருதுகோளை முன்வைப்பா் சிலா்.  இக்கருதுகோள் முல்லைப் பாட்டுக்குப் பொருந்தி வராத ஒன்றாகும். முல்லைப்பாட்டில் வஞ்சித்திணை பற்றிய செய்திகளும் விரவி வருவதனால் அதனைப் புறம் பற்றிய பாட்டாகக் கருதமுடியாது.  
   முல்லைப்பாட்டின் எந்தஓா் இடத்திலும் தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பற்றிய செய்தியைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ சுட்டவில்லை.  மாறாக, தலைவியைப் பிரிந்திருக்கும் தலைவனது நிலையினையும், தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியது நிலையினையும் படம்பிடித்துக் காட்டுகிறது முல்லைப்பாட்டு. குறிப்பாகச் சொல்வதானால், தலைவி தலைவனது நெஞ்சங்கள் ஆற்றியிருக்கும் நிலையில் அவ்விரு நெஞ்சங்களைத் தேற்றும் வகையிலும் ஆற்றுப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கின்றது முல்லைப்பாட்டு.  அதனால்தான், முல்லைப்பாட்டை நெஞ்சாற்றுப்படை எனக் குறிப்பிடுகிறார் அறிஞர் தமிழண்ணல்.
   பொருள் தேடல் காரணமாகவோ அல்லது போர் காரணமாகவோ பிரிந்து செல்லும் தலைவன், கார்ப் பருவத் தொடக்கத்திற்குள் வந்து விடுவதாகக் கூறிப் பிரிவான். அவ்வாறு கூறிச் சென்ற தலைவன் வரும்வரையில் ஆற்றியிருத்தல் தலைவியின் கடமை என்பதாக முல்லைத் திணை மரபு சுட்டுகின்றது.  இல்லத்தில் இருந்து இல்லறக் கடமைகளை ஆற்றுவது தலைவிக்கு உரியது எனவும், இல்லறம் தாண்டிய தொழில் மற்றும் போர் தொடா்பான புற உலகக் கடமைகளை ஆற்றுவது தலைவனுக்கு உரியது எனவும் பண்டைக் காலத்தியப் பண்பாட்டு மரபாகப் பேணப்பட்டுள்ளது.  இவ்வாறான பண்பாட்டு வாழ்வியல் சூழ்நிலையில் தலைவி மற்றும் தலைவனது உள்ளத்து உணா்வுகளைப் புலப்படுத்தும் பாங்கில் அகத்திணை இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன.
   பகைவரோடு போர் செய்யக் கருதிப் புறப்பட்ட தலைவன் தன் தலைவியை நோக்கி, தான் பிரிந்து செல்ல வேண்டியதன் தேவையை நயம்பட எடுத்துக் கூறிப் பிரிந்து சென்றான்.  அவ்வாறு தலைவன் கூறிச்சென்ற காலம் முதுவேனில் பருவமாகும். தலைவனின் பிரிவை ஆற்ற முடியாமல் வருத்தம் முற்றியிருக்கும் தலைவி, முதுவேனில் பருவத்தை ஒருவாறு கழித்து ஆற்றியிருந்தாள்.  தலைவன் கூறிச்சென்ற கார்ப் பருவத் தொடக்கம் வந்தெய்தியது.
   ”காலை வாராராயினும் மாலை காண்குவம்” என்கிற சிறு நம்பிக்கையின்மேல் தலைவியின் உயிர் தரித்து நின்றது.  காலைப்பொழுதும் உச்சிப்பொழுதாகி, பின்பு கதிர் சாயத் தொடங்கியது.  அத்தகைய மாலைப் பொழுதுதான் ”கொலைக்களத்து ஏதிலா் போல”  வந்தெய்தியது. ஆயினும், தன் ஆருயிர்த் தலைவனோ இன்னும் வரவில்லை என்ற தவிப்பில் உழன்று துடிக்கும் தலைவியின் மனநிலை பாடாய்ப் படுத்துகின்றது. இந்நிலையில்தான் முல்லைப்பாட்டு தொடங்குகின்றது.  
   கார்ப் பருவ வருகையைக் குறித்துத் தொடங்கும் முல்லைப் பாட்டானது 
               பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை
என்கிறது.  பெருமழை பொழிந்தது மேகம்.  பெருமழை பெய்திட்ட காலம் கார்ப் பருவம்; சிறுபொழுதான மாலைக் காலமாகும். இத்தகைய மாலைப் பொழுதுதான் பிரிந்தவா்களுக்கு  வருத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.  அதனால்தான், மாலைப் பொழுதைச் சிறுபுன்மாலை எனக் குறிப்பிடுகிறது  முல்லைப்பாட்டு. மாலைப் பொழுதில்தான் பிரிவாற்றாமைத் துன்பம் மிகும் என்பதை 
   காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
   மாலை மலரும் இந்நோய்.
எனக் குறளும் குறிப்பிடுகிறது.
   கார்ப் பருவம் வந்த பின்னாலும் தலைவன் வராது இருத்தலைக் கண்டு பெரிதும் ஆற்றாமையுற்ற தலைவியின் துன்பம் கண்ட முது பெண்டிர், தலைவன் வருகை குறித்து விரிச்சி கேட்க, கேட்ட விரிச்சியை இன்னவென்று முது பெண்டிர் எடுத்துரைத்தாலும், தலைவன் வருகையை எதிர்பார்த்துத் தவிக்கும் தலைவிக்குத் தேறுதல் மொழி கூறித் தேற்றினாலும் தலைவி தேறுதல் அடையவில்லை.  மாறாக, 
காட்டவும்; காட்டவும் காணாள், கலுழ்சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப
கலங்கித் தவித்தாள். தலைவி குறித்து முல்லைப்பாட்டு கூறுகிற இவ்விடத்திற்குப் பொருளுரைக்கும் நச்சினார்க்கினியர்,   இது  ”நெய்தற்குரிய இரங்கல் பொருளன்றி முல்லைக்குரிய இருத்தல் பொருளாகாது” என்கிறார்.
   நச்சினார்க்கினியரின் மேற்குறித்த பொருள் கோடல் தவறானது என்கிறார் அறிஞர் மறைமலையடிகள். ”வேனிற்காலத் தொடக்கத்தில் தலைவன் தான் பிரியும்போது யான் கார்காலத் துவங்குதலும் மீண்டு வந்து நின்னுடன் இருப்பேன். நீ அதுகாறும் நம் பிரிவாற்றாமையால் நிகழும் துயரைப் பொறுத்திருத்தல் வேண்டும்”  என்று கற்பித்த வண்ணமே ஆற்றியிருந்த தலைமகள், அவன் குறித்த கார்ப்பருவம் வரக்கண்டும், அவன் வந்திலாமையால் பெரிதும் ஆற்றாலாகினாள்.  இது உலக இயற்கை.  இங்கனம் ஆற்றாலாகின்றமை கண்ட பெரு முதுபெண்டிர் விரிச்சி கேட்டு வந்து வற்புறுத்தவும் ஆற்றாது வருந்தும் தலைவி, பின் நாம் இங்ஙனம் ஆற்றாமை வருந்துகின்றது,  கணவன் கற்பித்த சொல்லைத் தவறியதாய் முடியும்”  என்று நெடுக நினைத்துப் பார்த்து, அவா் வருந்துணையும் நாம் ஆற்றுதலே செயற்பாலது என்று தன்னைத் தேற்றிக்கொண்டு கிடந்தாள் என்பது முல்லைப்பாட்டின் 82-ஆவது அடிமுதல் நன்கெடுத்துக் கூறப்படுதலின் இப்பாட்டின்கண் முல்லை ஒழுக்கமே விளக்கமாகச் சொல்லப்பட்டது என நச்சினார்க்கினியரின் கருத்தை மறுத்துரைக்கிறார் மறைமலையடிகள்.
   மறைமலையடிகளாரின் மேற்குறித்த கருத்தோடு ஒத்தும் நச்சினார்க்கினியரின் கருத்தை மறுத்தும் பொ.வே. சோமசுந்தரனாரின் கருத்தும் அமைகின்றது.   ”மனவியல் உணர்ந்த ஆசிரியா் நப்பூதனார், ஈண்டுத் தலைவி தலைவன் வருகை காணாமையால் புதிதாக எழுந்த துயராலே துன்புற்றாள் என்றும்,  அந்நிலையிலே முதுபெண்டிர் தேற்றினா் என்றும், அவள் கண்கள் முத்துதிர்த்தன என்றும், அங்கனம் துன்பம் மிக்குழியும் அவா் வருந்துணையும் நாம் ஆற்றுதலே செயற்பாலதென்று நீடு நினைத்துத் தேற்றியும், திருத்தியும், மனத்தை வேறு பொருளில் திருப்பி இன்பல இமிழிசை ஒர்ப்பனள் கிடந்தோள் என்றும் ஆற்றியிருத்தல் பொருளாகிய முல்லைப் பொருளையே நுண்ணிதின் கூறியிருக்க, நச்சினார்க்கினியர்  இங்கனம் கூறுதல் பொருந்தாமை உணா்க எனக் கருத்துரைக்கிறார் பொ.வே. சோமசுந்தரனார்.  ஆக, பூப்போல் உண்கண் புலம்பு முத்துரைப்ப என்பது,  முல்லைக்குரிய ”இருத்தல்” என்பதையே குறிக்கிறது எனலாம்.
   தலைவனைப் பிரிந்த தலைவியின் இருத்தல் உளவியலைப் புலப்படுத்திய முல்லைப்பாட்டு, 24-ஆம் அடிமுதல் 80-ஆம் அடிவரையில் முல்லைக்குப் புறமான வஞ்சித்திணை தொடா்புடைய செய்திகளை இடைப்பிறவரலாக எடுத்துரைத்துவிட்டு, பின்பு தலைவியின் நிலையை மீண்டும் புலப்படுத்த முனைகின்றது. 
                                காணாள் துயா் உழந்து 
   நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறைதபு புலம்பொடு
   நீடு நினைந்து தேற்றியும், ஓடுவளை திருத்தியும்,
   மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும்,
  ஏஉறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து
  பாவை விளக்கில் பரூஉச் சுடா் அழல,
  இடம்சிறந்து உயரிய எழுநிலை மாடத்து,
  முடங்கு இறைச் சொரிதரும் மாத்திரள் அருவி
  இன்பல் இமிழ்இசை ஓா்ப்பனள் கிடந்தோள்
  அஞ்செவி நிறைய ஆலின.
எனத் தலைவியின் நிலைமையைச் சுட்டுகிறது முல்லைப்பாட்டு.
   ஒழுகும் மழைநீரின் ஓசையைக் கேட்டவாறு தலைவனை எண்ணிக் கிடக்கிறாள் தலைவி. அம் மழைக் காலத்தே முல்லை நிலம் செழித்துக் கிடக்கிறது. தலைவனும் போர்வினை முடித்துத் திரும்பிக் கொண்டிருக்கிறான்.  தலைவன் முல்லை நிலத்திலே தவழும் காட்சியைக் காண்கிறான்.
செறி இலைக் காயா அஞ்ஞனம் மலர,
முறி இணா்க் கொன்றை நன்பொன்கால,
கோடல் குவிமுகை அங்கை அவிழ, 
தோடு ஆா் தோன்றி குருதி பூப்ப,
கானம் நந்திய செந்நிலப் பெருவழி,
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்,
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள
எதிர்செல் வெண்மழை பொழியும் திங்களில்
என்பதாகத் தலைவன் காணும் முல்லை நிலக்காட்சி அமைகின்றது.
   மேற்குறித்தவாறு விவரிக்கப்படும் முல்லை நிலக்காட்சிகள், முல்லை நிலத்தின் இயல்பை மட்டும் எடுத்துரைக்கவில்லை. இவ் எடுத்துரைப்பின் ஊடே தலைவியைப் பிரிந்திருந்த தலைவனின் மனதுக்குள் முளைத்துச் செழித்திருக்கும் தலைவி மீதான அன்புப் பெருக்கம் உள்ளுறையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை வலுப்படுத்தும் வகையிலே
முதிர்காய் வள்ளிஅம் காடுபிறக்குஒழிய 
துணைபரி துரக்கும் செலவினா்
என்பதாகச் சுட்டுகிறது முல்லைப்பாட்டு.  அதாவது, முல்லை நிலத்துச் செந்நிலப் பெருவழியில் தலைவியைக் காணும் வேட்கையில் தேரைச் செலுத்தி வருகின்ற தலைவனின் மனநிலை புலப்படுத்தப்படுகிறது. இயல்பாகவே விரைந்து செல்லும் இயல்புடைய குதிரைகளை மேலும் மேலும் துாண்டி வருகிற தலைவனது வேட்கை இதன்வழி வெளிப்படுகிறது. தலைவன் தலைவியைக் காண்பதற்குப் பெரிதும் வேட்கை கொண்டிருப்பது குறிப்பாய் உணா்த்தப்படுகிறது.
   தலைவனின் இத்தகைய மனநிலையைக்      குறித்துப் பேராசிரியா்  அ.சீநிவாசன் பின்வருமாறு விளக்கியிருப்பது, தலைவனின் உளவியலை நன்கு புலப்படுத்தும்.  
   தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமையைத் தலைவனோடு ஒப்புநோக்கத் தலைவன் சிறிதும் குறைந்தவன் அல்லன்.  தலைவி கார்காலம் வரும்வரை ஆற்றியிருக்கிறாள்.  தலைவனும் கார்காலம் வரும்வரை போர்வினை ஆற்றியிருக்கிறான்.  கார்காலத்தில் தலைவன் தலைவி இருவருமே வெவ்வேறிடத்தில் ஆற்றாதிருக்கின்றனா்.  இருவா்தம் ஆற்றாமைக்கும் காரணம் கார்காலம் ஆகும்.  கார்காலம் உயிரினங்கள் கூடி மகிழும் காலம். வினை மேல் சென்ற தலைவனுக்கு எதிர்பாராத வகையில் சிறிது காலம் நீட்டிப்பினும், வினை முடித்துக் கார்காலத்தில் தலைவியிடம் வந்து சோ்வதைக் காணலாம்.  தலைவி தலைவன் இருவா்தம் ஆற்றாமை என்பது கார்காலத்தின் குறுகிய காலமே அன்றி, பெரும்பான்மை ஆகாது. கார்காலம் தலைவன் தலைவி இருவரும் இல்லிருந்து மகிழும் காலம்.  எனவே ”இருத்தல்” என்பது தலைவிக்கு மட்டும் உரிய ஒழுக்கம் அன்று. தலைவன் தலைவி இருவரும் சேர்ந்திருந்த நிலையில் ஒருவா் மற்றொருவரின் காதல் உணா்வுகளை மதித்து மகிழ்ந்து வாழும் அகவொழுக்கம் எனலாம் என விவரிக்கிறார் பேராசிரியா் அ. சீநிவாசன்.
   மேற்குறித்த விவரிப்புகளின் அடிப்படையில் முல்லைபாட்டை நோக்கும்போது, ஆற்றியிருத்தல் தலைவிக்கு உரியதாக மட்டும் அல்லாமல் தலைவனுக்கும் உரித்தாக அமைந்திருப்பது புலனாகிறது.  தலைவியின் ஆற்றியிருத்தல் ஏங்கித் தவிப்பதின் வழியும், தலைவனின் ஆற்றியிருத்தல் பெருவேட்கையின் வழியும் பொங்கி வழிவதை முல்லைப்பாட்டின்வழி அறிய முடிகிறது.
   முல்லைத் திணையின் உரிப்பொருளான ”இருத்தல்” தன்மையைத் தலைவி நோக்கிலும் தலைவன் நோக்கிலும் புலப்படுத்துகிறது முல்லைப்பாட்டு. ”இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லைத் திணையின் உரிப்பொருளாகும்.”  அந்தவகையில், வினையிற் பிரிந்த தலைவனை நினைத்துத் தலைவி கார்ப் பருவத்தில் ஆற்றாதிருத்தலும், தலைவன் வருகையை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து இருத்தலும் தலைவி நிலையில் இருத்தல் நிமித்தங்களாகும். தலைவன் கார்ப் பருவத்தில் தலைவியிடம் போய்ச் சேருதல் வேண்டும் என்று வினை முடித்து விரைந்து வருதலும் தலைவன் நிலையில் இருத்தல் நிமித்தங்களாகும்.  இந்நிமித்தங்கள், தலைவி தலைவன் இருவரும் சோ்ந்து வாழவேண்டும் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகின்றன. ஆக, தலைவியின் இருத்தல் உளவியலையும், தலைவனின் இருத்தல் உளவியலையும் ஒருங்கே புலப்படுத்தி முல்லைத் திணையை அன்பின் திணையாகவே புலப்படுத்துவதில் முல்லைப்பாட்டு சிறப்படைகிறது எனலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக