செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நீர்த்தீ அறம் விதைத்தவன்.


நீர்த் தடம் தேடி
நிலத்துள் பரவும்
வேர்களைச் சுமக்கும் 
பெருமரமாய்த்
தளிர்த்திருக்கலாம் நீ.
கிளைகளும் இலைகளும்
பூக்களும் பிஞ்சுமாய்
காயும் கனியுமாய்ப்
பல்கிப் பெருகி
தன்னல நிழல் போர்த்தி
வாழ்வைச்
சுவைத்திருக்கலாம் நீ.
சாதியும் உறவுகளும்
வரைந்த கோட்டுக்குள்
வசமாய் அகப்பட்டு
பெண்டு பிள்ளைகளோடு
பெருவாழ்வு
வாழ்ந்திருக்கலாம் நீ.
பொழுது சாய்ந்தால்
கொஞ்சம் அரட்டை
பொக்கைச் சவடால் எனப்
போதை கரையக் கரையக்
குடித்தும் படுத்தும்
கவலைகள் இன்றி
களித்து மகிழ்ந்திருக்கலாம் நீ.
அதிகாரக் குத்தகை
வகையறாக்களின்
உடன்பிறப்பாகவோ
இரத்தத்தின் இரத்தமாகவோ
பல்லக்குத் தூக்கியும்,
கூன் ஒடியப்
பணிந்து வணங்கியும்
பதவிகளும் பணங்காசும்
குவித்திருக்கலாம் நீ.
இந்தியம் பேச
நேர்ந்துவிட்ட இடதுகளின்
தோழனாய் இருந்தாலாவது,
பன்றிகளின்
தொழுவத்தில் நுழைந்து,
வாக்குப் பொறுக்கிப் புரட்சியில்
அலுங்காமல்
அய்க்கியமாகி இருக்கலாம் நீ.
இதுவும் இல்லையென்றால்,
உரிமைகள் இழந்து
கொடுமைகள் சகித்து
அடையாளம் மறந்து
மனிதம் பேசியே
வாழ்ந்து நொந்து
மெல்லச் செத்திருக்கலாம் நீ.
ஆனாலும்,
சிறுமை கண்டு பொங்கினாய்,
கொடுமை கண்டு கொதித்தாய்.
விடலையின் உணர்வெல்லாம்
தலைதூக்கும் வயதில்
இன மானத்தை
நீ நுகர்ந்தாய்.
சாதி சாதியாய்ச்
சகதியாய்க் கிடக்கும் நிலத்தில்
எளிதாய்ச் சாதி கடந்து
தமிழரெனும்
பேருரு காட்டினாய்.
வாழத் தெரியாத
வாழ முடியாத கோழை எனத்
தூற்றுவோர் முகத்தில்
எச்சிலுக்குப் பதிலாகச்
சாவைக் காரி உமிழ்ந்தாய்.
இனத்தின்
நீர்த் தாகம் தணியவே
நெருப்பை நீ அள்ளிக் குடித்தாய்.
நீருக்கு அழுத கண்ணீர்
நீரிலே கரையுமென்றா
நீரிலே
நெருப்பெழுதிப் போனாய் ?
உணர்வற்று
இருளில் தவிக்கும்
இனத்தின் மீது
வெளிச்சம் படரத்தானா
நெஞ்சில் மூண்ட நெருப்பை
உன்னுடலில்
ஏந்திக் கொண்டாய் ?
உசுப்பேத்தி
உணர்வேத்தி
தட்டேத்திப் பாடையிலேற்றியதாய்ச்
சொற்புணர்ச்சிப் பகர்வோரெல்லாம்
வாய்பொத்தி நிற்காமல்
பெருங்களம்
கண்டிருந்தால்,
நீ
செத்திருக்க மாட்டாய் தான்.
உனக்கென்று
உடலும் உயிரும்
உணர்வும் அறிவும்
ஆசையும் கனவும் மனமும்
இருக்கத்தானே செய்தன?
அத்தனையும்
துச்சமாய் எரித்து
நீர்த் தீ அறமாய்
தமிழ் நிலத்தில்
நீ படர்ந்தாய்.
சிறு நிலத்தில்
பெருங்கொலையே நடக்க
வேடிக்கை பார்த்த பேரினம்,
உன் உயிர்க்கொடையை
ஏந்தவா போகிறது ?
அப்துல் இரவூப்
முத்துக்குமார்
பள்ளபட்டி இரவி
செங்கொடி என
உயிர்த் தீ விதைத்து
அறம் வளர்ந்த மண்ணில்
நீயும்
நீர்த் தீ
ஆகிப் போனாய்.
தன்னை அழித்து
முளைக்கும் விதை போல்
உம்மைக் கொளுத்தி
அறத் தீ
முளைக்கச் செய்தாய்.
உனது சாவில்
இனத்தின் விழிப்பை
உயிர்ப்பித்திருக்கிறாய்.
ஆனாலும்
தம்பி விக்னேசு ,
தீ விழுங்கி
நீ செத்திருக்கக் கூடாது தான்.
உன்
தீச் சாவு தந்த
வலியைக் காட்டிலும்,
உன் சாவுமேல் எறிந்த
சொல்லடிகளே
எம்மைக்
காயப்படுத்துகின்றன.
கூடவே,
உனது சாவு மறக்கப்படவே
இராம்குமாரின் சாவையும்
தந்திருக்கிறது அதிகாரம் .
நீர் குடித்து
விதைகள் முளைக்கும்.
நெருப்பைக் குடித்து
அறமாய் நீ முளைத்தாய்.
உயிர்த் துளிக்காய்
துளி உயிரைத்
தீக்குத் தந்து
உயிர்ப்பாய் மடிந்த உமக்கு
எம் வீர வணக்கம்.

சனி, 10 செப்டம்பர், 2016

இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலி .


இம்மானுவேல் சேகரனைப்
போலச் செய்திருந்த கபாலி .
திரை மொழியில் விரியும் சமூக ஆளுமை.


 அண்மையில் வெளியான கபாலி படம் குறித்து த.தருமராசு ( Dharmaraj Thamburaj )அவர்களின் முகநூல் பதிவுகள் குறித்துக் காட்டமான பதிவுகள் இரு தரப்பிலும் வெளிப்பட்டன. போதாக்குறைக்கு நானும் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தேன்.
கபாலி படம் தமிழ்த் தேசிய அரசியலையும் பேசவில்லை , தலித் அரசியலையும் பேசவில்லை. இரஞ்சித் இயக்கத்திலும் தாணு தயாரிப்பிலும் இரசினி நடித்த ஒரு வணிகப் படம் அவ்வளவே. ஆயினும் , தமிழ்த் திரையில் காட்டப்படாத காட்சிகளும் பேசப்படாத உரையாடல்களும் பதிவு செய்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதில் ஏன் இத்தனைத் தயக்கம் ? என்பதான பதிவை இட்டதோடு நான் நிறைவடைந்து விட்டேன்.

இப்போது தான், த.தருமராசு அவர்களின் "நான் ஏன் தலித்தும் அல்ல?" நூலைப் படித்து முடித்திருக்கிற நிலையில், கபாலி படம் குறித்து வேறு விதமான உரையாடல்கள் தோன்றுகின்றன. பொதுவெளியில் இவை விவாதிக்கப்பட வேண்டியவை என்றே கருதுகிறேன்.

கபாலி படம் வணிகப் படம் தான். ஆனால், அது கற்பனையான கதை மட்டும் அல்ல. சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடியதால் படுகொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரனைக் குறித்த பதிவுதான் வேறு மாதிரியாய் வணிகப் படமாய்த் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

 கபாலி படத்தின் கதைக் களம் மலேசியா என்பதற்குப் பதிலாகத் தமிழ் நாடாய் இருந்திருந்தால் கபாலி கதைப் பாத்திரம் யாராக அடையாளப்பட்டிருக்கும் ? சாதிய ஆணவத் திமிர்க் கதைப் பாத்திரங்களை எதிர்க்கும் கபாலி  பாத்திரமானது இமானுவேல் சேகரனைப் போலச் செய்தல் பாத்திரமாகத் தான் அமைந்திருக்கும்.

கல்வியின் வாசம் நுகர்ந்து, தான் சார்ந்த மக்கள் கூட்டத்திற்குப் பாடுபட வேண்டும் என்பதை வாழ்க்கை இலக்காக அமைத்துக் கொண்ட அல்லது அந்த நிலைக்குத் தள்ளப்பட்ட கபாலி பாத்திர உருவாக்கமும் உரையாடல்களும் இமானுவேல் சேகரனை உருவகப்படுத்தக்கூடியவை. இன்னும் சொல்லப்போனால் , நான் முன்னுக்கு வருவது தான் உனக்குப் பிரச்சினையின்னா உழைப்பேன்டா, கோட் சூட் போடுவேன்டா, கால் மேல் கால் போடுவேன்டா என்பது போன்ற உரையாடலை இந்தச் சமூகத்தில் நிகழ்த்திக் காட்டிய மனிதப் பனுவலாய் வரலாற்றில் பதிவாகி இருப்பது இம்மானுவேல் சேகரன் தான்.

தமிழ்நாட்டின் பதற்ற நிலமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் முகவை மாவட்டம், சாதிய மேலாதிக்கச் சீண்டல்களைத் தொடுப்பதும், அதே சாதிய மேலாதிக்கச் சீண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்து களம் காண்பதுவுமாகக் கலகம் பூசிக் கிடந்தது. இந்நிலையில், உயர்த்திக் கொண்ட சாதிய மேலாதிக்கத்தை அசைத்தும் எதிர்த்தும் பார்த்த ஒரு நிகழ்வு தமிழ் மண்ணில் நடந்திருக்கிறது.

எடுப்பு வேலைகளும் ஏவல் வேலைகளும் செய்ய வேண்டும், காடு கழனிகளில் பண்ணை வேலை செய்திட வேண்டும், அந்த வட்டாரத்தில் ஆளுமை செய்திடத் துடித்த ஒரு குறிப்பான சாதியினருக்கு அடிமைப்பட்ட வாழ்க்கையை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்பவை போன்ற சாதிய ஒடுக்குமுறை நினைப்புகளுக்கும் நிகழ்வுகளுக்கும் எதிராக இம்மானுவேல் சேகரன் தொடர்ச்சியாகக் களப்பணி ஆற்றி இருக்கிறார். அதாவது, சாதிய மேலாண்மைக்கு முன்பாக இருந்த ஒரு பெரும் சவாலாகவே இருந்திருக்கிறார்.

இரு தரப்பின் முற்றிய முரண்பாடு ஒரு கட்டத்தில் வெடித்திருக்கிறது. 1957 இல் முதுகுளத்தூரில் நடைபெற்ற அமைதிக்கான பல சமூகப் பேச்சுவார்த்தை நிகழ்விற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இம்மானுவேல் சேகரன் அழைக்கப்பட்டிருக்கிறார். பேச்சுவார்த்தை அரங்கினுள் இன்னொரு தரப்பினரின் ஆளுமை உள்நுழைந்த போது, அங்கிருந்த எல்லோருமே எழுந்து நின்று மரியாதை செய்ததாகவும், இம்மானுவேல் சேகரன் மட்டும் எழுந்திருக்காமல் நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்ததோடு மட்டுமல்லாமல், இன்னொரு தரப்பினரின் ஆளுமைக்கு முன்பாகவே கால் மேல் கால் போட்டும் உட்கார்ந்திருக்கிறார். அதோடு, அங்கேயே அவர் முன்பே புகையும் பிடித்திருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பின்னாலேதான் சாதிய ஆதிக்கத்தினரால் பரமக்குடியில்  படுகொலை செய்யப்படுகிறார் என்றே இம்மானுவேல் சேகரனைக் குறித்த பதிவுகள் தெரிவிக்கின்றன.
இம்மானுவேல் சேகரனின் இந்தச் செய்கையைப் போலச் செய்தலாகவும் திரும்பச் செய்தலாகவும் தான் இந்தச் சமூகம் பார்த்தது.

சாதியம் அப்பிக்கிடந்த களத்தில் நிகழ்ந்த இம்மானுவேல் சேகரன் எனும் வரலாற்றுப் பாத்திரத்தைத் தான் கபாலியாகப் போலச் செய்திருக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.

இம்மானுவேல் சேகரன் குறித்த அண்மைக்கால நிகழ்வுகள் திருப்பிச் செய்யும் நிகழ்வாகச் சாதியச் சமூகம் புரிந்து வைத்திருப்பதனால் தான் இருதரப்பினரிடையே மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதனால் தான், இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்த கபாலியின் களம் மலேசியாவாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் தமிழ் நாட்டின் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தலைவராக(கேங் லீடராக) இருந்த இம்மானுவேல் சேகரனைத் தான் மலேசியத் தோட்டத் தொழிலாளர் தலைவராக (கேங் லீடராக)ப் போலச் செய்திருக்கிறார்கள். இது திட்டமிட்ட போலச் செய்தல் தான். ஆனால், இதைக் குறித்துப் பேச மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள்.

கபாலி படத்திற்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு உரையாடல்கள் இயக்குநர் இரஞ்சித்தை மய்யமாகவே வைத்தே நகர்ந்தன. படைப்பின் வழியிலான போலச் செய்தலாய் வெளி வந்த கபாலி, இம்மானுவேல் சேகரனை நினைவுபடுத்தும் திரை மொழி என்பதான உரையாடல் வெளிப்பட்டிருந்தால் இரஞ்சித், இரசினி ஆதரவாளர்களால் மட்டுமல்ல, இன்னொரு தரப்பினராலும் கூட இன்னும் அதிகமாகவே தூக்கிக் கொண்டாடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதே வேளையில், மிகக் கடுமையான எதிர்ப்பையும் கபாலி சந்தித்திருக்கும். ஏனெனில், இம்மானுவேல் சேகரன் எனும் குறியீடு சாதியத்திற்கு எதிரான திருப்பிச் செய்தல் குறியீடாய் இன்னும் இருப்பதனால், இம்மானுவேல் சேகரனைப் போலச் செய்திருந்த கபாலியும் திருப்பிச் செய்த கலைப் படைப்பாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். அதனால் தான், கபாலி -போலச் செய்தல் படம் தான் என்பதையே இரஞ்சித்தும் அவரது ஆதரவாளர்களும் நிறுவ முயல்கிறார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பது அதன் வணிகத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

 பொதுவாகவே, போலச் செய்தல் நிகழ்வும் படைப்பும் சாதியச் சமூகத்தின் எதிர்ப்பைப் பெறுவதில்லை. அதேவேளையில், திருப்பிச் செய்யும் நிகழ்வும் படைப்பும் எதிர்ப்பைச் சந்திக்க நேர்பவை என்பதைச் சமூக ஆய்வுகள் சுட்டுகின்றன. இந்தப் பின்னணியில் கபாலி படம் குறித்து உரையாடல்கள் தொடர வேண்டும்.

போலச் செய்தல் - திரும்பச் செய்தல் குறித்து த.தருமராசு (நூலாசிரியர் தம்மை டி. தருமராஜ் என்றே பதிவு செய்கிறார்)அவர்களின் நான் ஏன் தலித்தும் அல்ல ? எனும் நூலில் மேலதிகத் தரவுகளும் உரையாடல்களும் உள்ளன.

மாறுதிணை - கவிதை



பெரு மரம்
துப்பிய எச்சிலாய்
நிழலடியில்
முளைத்துக் கிடந்தன
செடிகள்.

கிளைகளில் துளிர்த்து
மண்ணில் இறங்கிய
விழுதுகளைப்
பற்றிப் படர்ந்தன
கொடிகள்.

உதிர்ந்த சருகுகளை
உரமாக்கித் தின்று
முனை காட்டின
புற்கள்.

இதழ் விரித்த
பூக்களின்
மகரந்தத் தடம் பிடித்து
வந்து சேர்ந்தன
பூச்சிகளும் வண்டுகளும் .

முற்றிய
கிளைச் செதில்களுக்குள்
வேர் விட்டு
கீழ் மண் பார்த்துத்
தாவியாடின
தொத்துக் கொடிகள்.

கிளை விரித்த
இடுக்குகளில்
கூடுகள் வேய்ந்தன
பறவைகள்.

நம்மின்
காலடி படாத
நிலமெங்கும்
பச்சைப் பசும் பசேல்.

மனித
நிழல் போர்த்திய
நாடுதான்
வெயிலில்
வெந்து சாகிறது.

எட்டிய
காட்டுக்குள்ளிருக்கும்
மரங்களும் பூக்களும்
இப்போது
சிரித்துக் கொண்டிருக்கின்றன.

அறம் மறந்த கல்வி முறை

அறம் மறந்த கல்வி முறையும்
மனம் பிறழும்
இளம் தலைமுறையும்.

அண்மைக்கால  இளந்தலைமுறையினரின் வாழ்வுப் போக்குகள் கவலை அளிப்பதாக உள்ளன. மேட்டிமை மற்றும் நடுத்தர வர்க்க வாழ் நிலைப்பட்ட அனைத்துத் தரப்பினரின் நுகர்வுவெறிப் பண்பாடே இந்தச் சமூகத்தின் ஒட்டு மொத்தப் பண்பாட்டு வெளியாகக் கட்டமைக்கப்படுகிறது. ஆங்கில மேலாதிக்க மோகமும் நுகர்வுவெறிப் பண்பாடும் எளிய மக்களிடம் கூட திணிக்கப்படுவதை அண்மைக்காலச் சமூக நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.
கல்வி தான் ஒரு சமூகத்தை மாற்றியமைக்கும் சக்தியாய்ப் பார்க்கப்படுகிறது. இந்தியச் சூழலில் கல்வி வணிகமயமாகிப் போனது. உலக வல்லாதிக்க நிறுவனங்களுக்குச் சேவகம் செய்யும் அடிமை விசுவாசிகளை உற்பத்தி செய்யும் கூடாரங்களாய் இன்றைய கல்வி நிறுவனங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இருப்பதை மனப்பாடம் செய், கேள்விகள் கேட்காதே, தானாய்ச் சிந்திக்காதே, மதிப்பெண் மட்டுமே இலக்கு, பணம் மட்டுமே வாழ்க்கை என்கிற குறுகிய மனவெளியை இன்றைய கல்வி முறை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.
கல்வி என்பது வெறும் அறிவோடு மட்டும் தொடர்புடையது அல்ல. சமூக வெளியின் பொது அறத்தையும், வாழ்க்கையின் தனி மனிதருக்கான அறத்தையும் கல்வி தான் தந்து கொண்டிருந்தது. மனித வாழ்வின் இலக்கு இன்பம் தான். அந்த இன்பம் பொருள் சார்ந்ததுதான். ஆயின், அந்த இன்பமும் பொருளும் அறம்சார்ந்ததாய் இருத்தல் வேண்டும். அதைத்தான் தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. உலகின் பல மொழிகளிலும் காணப்படுகிற இலக்கியங்கள் அந்தந்த நிலம் சார்ந்த மக்கள் சார்ந்த அறத்தையே பேசுகின்றன.
அறிவு வளத்தையும் அறவாழ்வையும் ஒருங்கே செதுக்கும் கல்வி முறையே இந்தச் சமூகத்தை வளப்படுத்தும். ஆனால் , இங்குள்ள கல்விச் சூழலோ அறிவாளிகளைத் தான் உற்பத்தி செய்கின்றன. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அறம்சார் வகுப்புகளும் பாடத்திட்டங்களும் இப்போது இல்லை. அறம்சார் வாழ்வியலை எடுத்துரைக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கும் முதன்மை இல்லை. அவை வெறும் மொழிப் பாடங்களாக மட்டுமே சுருக்கப்பட்டு விட்டன. பள்ளிக்கல்வியில் மொழிப் பாடங்களில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே போதுமானது , மற்ற பாடங்களில் தான் உயர் மதிப்பெண் தேவை என்ற நிலையில் , உயர் கல்வி பயில்வதற்கு மொழிப் பாடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாத நிலை , உயர் கல்விப் பாடத்திட்டங்களில் மொழிப் பாடங்களே இல்லாத ஒரு நிலை என அறத்தை எவ்வளவு தூரம் ஒதுக்கி வைக்க முடியுமோ அந்தளவுக்கு ஒதுக்கி வைத்த பின்னால் , அறத்தை எங்கிருந்து தான் கற்றுக் கொள்வது?
அறத்தைப் புறந்தள்ளுகிற இன்றைய கல்வி முறையில் பயில்கிற இளந்தலைமுறை சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் பிறழக் காரணமாய் இருப்பது இன்றையக் கல்வி முறை தரும் பாடம் தான் காரணம்.
நட்பையும் காதலையும் வாழ்வையும் உறவுகளையும் சமூகத்தையும் ஒழுக்கத்தையும்  தன்னம்பிக்கையையும் தருகிற அறம்சார் கல்வியைப் பெறுவதற்கான சூழல் இல்லாமையே பெருங்குற்றங்கள், சீரழிவுகள், தற்கொலைகள், பாலியல் வன்முறைகள், சாதியக் கொடுமைகள், மனிதப் படுகொலைகள் நிகழக் காரணமாய் இருக்கின்றது.
மனதைப் பக்குவப்படுத்தாத கல்வி முறைதான் இளந்தலைமுறை தடம் பிறழக் காரணம். இது மாற்றப்படாத வரை  சமூகக் குற்றவாளிகள் உருவாகிக் கொண்டே தான் வருவார்கள் .

சனி, 20 ஆகஸ்ட், 2016

முரண் தொடைச் செய்யுள் - கவிதை

முரண் தொடைச் செய்யுள்.

சில்லரைக் குவியத்தின்
உச்சியில் நின்று
எகத்தாளம் விதைக்கிறாய்
உரக்கக் கூவியபடி.

ஆற்றின் ஓட்டத்தில்
வளையும் நாணல்
வேர்களை அள்ளித்
தானம் கொடுத்து
வாழ்வதில்லை.

வளையும் குணம்
அதன் இரத்தல் என்று
ஓங்கிய பனையின்
ஓலைக் கிளையிலிருந்தபடி ஒய்யாரம் பாடுகிறாய்.

வெயிலுக்குள் வராத
உன் வெளுப்பு மேனியில் வியர்வை வழியும் துளைகளில் கொப்பளங்கள் பூத்திட்டால்
ஏது செய்வாய்?

ஓடி ஓடி
கோடிகள் சேர்த்தாலும்
காலம் எழுதிச் செல்லும் கவிதைகளில்
நான் மட்டுமல்ல
நீயும் கூட
எச்சம்தான்.

இந்நேரம்
புலம்பித் தவிப்பாய்
எனை நினைத்து.

நான் நிம்மதியாய்
உறங்குவது தெரியாமலே.

நாடு போற்றுதும்? - கவிதை

"நாடு போற்றுதும்?"

அடுப்புத் தீயை
அணைத்தன
எந்திர பூதங்கள்.

பசித் தீ மூட்டி
கிடப்பில் தறிகள்.

சோறு கொடுத்த
நிலங்களில் முளைக்கும்
கோபுரங்கள்.

விளை நிலத்து மரங்களில்
தூக்கில் தொங்கும்
சம்சாரிகள்.

காசாய்ப் போயின கல்வி
கனவாய்ப் போனது வாழ்க்கை.

அடகுக் கடைகளில்
வட்டியாய்க் கிடப்பன
பண்டங்கள் மட்டுமல்ல
மானமும் தான்.

கோவணம் அவிழ்த்து
சுதேசிக் கொடி ஏற்றி
கஞ்சித்தொட்டி திற.

எங்கள் நாடு
இனிய நாடு.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

பட்ட மரம் - கவிதை

இரு மன
அழுகை ஓலங்களின் அதிர்வுகளில்
நால் விழிகள்
குளம்.
வேகம் சுருக்கி
மெல்லத் தவழும் காற்றைப்
பகையெனப் பதைபதைத்து
சுட்டியில் தவிக்கும்
சுடராய் நான்.
நீ
பிடித்துத் தந்த
நம்பிக்கை ஒளிக்கீற்றைத்
தோள் சேர்த்து,
என்னில் விரிந்த
கிளைகளை முறித்துத்
தனியே பயணம்.
தீர்ந்து போனது
வாழ்க்கை.

செவ்வாய், 19 ஜூலை, 2016

புறத்திணை - கவிதை



தூசுகள்
மண்டிய நகரங்களில்
அப்பிக் கிடக்கின்றன
வன்மங்கள்.

அங்குமிங்கும்
அலைந்து திரிகின்றன
முகமூடிகள் போர்த்திய
உடல்கள்.

உலர்ந்த எச்சிலை
உள்ளிழுத்து முழுங்கி
சூடேறிய மூச்சுக்காற்றை
வெளிவிட்டு மென்று
தொலை வானத்தை
வெறித்துப் பார்க்கின்றன
ஒளி மங்கிய கண்கள்.

தெருக்களின் மூலையில்
ஒடுங்கிக் கிடக்கின்றன
தோல் வற்றிய முகங்கள்.

கொளுத்தவர் வலுக்கவும்
இளைத்தவர் இறக்கவுமான
நிகழ் வெளியாய்ச்
சுருங்கிப் போனது
உலகம்.

எல்லா நாளும்
பொழுதுகள் விடிகின்றன.
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்.

மனிதர்கள் நோக
சில மனிதர்கள் வாழும்
இவ்வுலகம்
இருந்தாலென்ன
அழிந்தாலென்ன ?

செவ்வாய், 12 ஜூலை, 2016

கையறு நிலையும் கவிதை அஞ்சலியும்.

கையறு நிலையும்
கவிதை அஞ்சலியும்.
ஆனந்த ராசுக்காக....


நட்புகளின் வலிகளை
வழியவும்
வாரிக் கொண்டும்
வாஞ்சையுடனும்
சுமந்து திரிந்தாய்.

துளிர்க்க மனமில்லாது
முடங்கிக் கிடந்த
கொடிகள் எல்லாம்
சிம்புகள் வெடித்துப் படர்ந்திட
பற்றுக் கோடாய்த்
தோள் கொடுத்தாய்
பட்ட கம்பாய்
நீயிருந்தே.

உறவிலும் நட்பிலும்
முகங்கள் சிரித்திட
அகம் காயப்படக் காயப்பட
இழுத்துச் சென்றாய் வாழ்வை
யாருக்கும் தெரியாமலே.

அழுதவர்க்கெல்லாம்
அடைக்கலம் தந்து
வழிந்த கண்ணீரை
நீ துடைத்தாய்.
அரத்தம் கசிய
வலித்திட்ட கொடுவாழ்வை
உனக்குள்ளே
புதைத்துக் கொண்டாய்.

தொலைவிலிருந்த
நட்பையெல்லாம்
மனக் கூட்டில் அடை காத்தாய்.
குடும்ப வெளியில்
நீ பறக்கச்
சிறகின்றித் தவித்தாய்.

நட்பில் எல்லாம்
உயிரள்ளித் தெளித்தாய்.
இல்வாழ்விலோ
உயிர்ப்பின்றித் தவித்தாய்.

இடுக்கில் முளைத்த ஆலம்
பனையைச் சிதைத்தது போல்
புகுந்தகத்தின்
இரண்டகத்தால்
சிறுகச் சிறுகச் செத்தாய்.

உறவுகள் தந்த
ஏய்ப்புகளும் ஏமாற்றங்களும்
துரத்தத் துரத்த
ஓடியலைந்தாய்
ஒளிவிடம் தேடி.

எம்மில் எல்லாம்
நீ முளைத்திருக்க,
உன்னில் வாடிப் போனதே
வாழ்க்கை.

வாழுதல்
வாழ்க்கைதான்.
வாழ்வின்
கொடிய முகத்தோடும்
உறவாடிக் கிடந்தாய்.

வாழுதல் கொடிது.
இனி, வாழுதலும் கொடிது
என்றான பின்னே,
இனி
வாழவும் என்ன இருப்பதாய்
உன்னை நீயே கரைத்திட
எண்ணித் துணிந்தாய்.

காலம்
உன்னைத் தின்றது.
மீதியைத்
தின்னக் கொடுத்தாய்
காலனிடம்.

சிறைக்குளத்துள்
அகப்பட்ட சிறுமீனாய்ச்
சிக்கிக் கொண்டாய்
காலனிடம்.

சிக்கல் அருகிலிருக்கும்
சிறைக்குளம்
ஆனந்த ராசுவே!
பெயரளவுக்குக் கூட
ஆனந்தம்
நிலைக்காமல் போனதுவே.

வாழவும்
அதில் அழவும்
வலிகளையே சுமக்கவுமா
வாழ்க்கை?

வாழ்வைக் கசக்கி எறிந்து
காலனோடு சேர்ந்து
காலத்தில் கரைந்து விட்டாய்.

போய் வா
நட்பின் உருவே
போய் வா .
இடுகாட்டின் மண்ணுக்குள்
படுத்துறங்கு அமைதியாக.

ஆனாலும் நண்பனே ,
காலன் உன்னை
இப்படிக் கொன்றிருக்கக் கூடாது.

இந்த வாழ்வைத்
தொலைக்கத் தானா
இத்தனைத் தொலைவு
சென்றாய்.

பூ மாலை உனக்கிட்டு
காலடியில் நான் அழுது
என் கண்ணீரும்
உன்னோடு குழியில் விழ
கொடுத்து வைக்காத
இந்தக் காலமும்
கொடியது தான்.

என்னில் வழியும் தமிழை
சுவைத்து மகிழ்ந்த நட்பே!
எந் தமிழில்
ஒப்பாரி பாடுகிறேன்.
கேட்கத்தான்
நீ இல்லையே.

மண்ணில் புதைந்து
நினைவில் வாழ்வாய் நட்பே!
எம் நினைவில் வாழ்வாய்.
______
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றுப் புலத்தில் முதுகலை மற்றும் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டவரும், இராமநாதபுரம், கீழக்கரை வழியிலிருக்கும் சிக்கல் ஊரை ஒட்டிய சிறைக்குளம் எனும் ஊரைச் சார்ந்தவருமான திருமிகு ஆனந்தராசு அவர்கள் காலமானார். எனது வாழ்க்கையில் ஆகச் சிறந்த நண்பராகத் திகழ்ந்தவர். அவரின் இறப்பு என்னை மனதளவில் பாதித்திருக்கிறது. இறந்த நாள் எதுவென்று கூடத் தெரியாமல் யாருமற்றவரைப்  போல் இறந்து போனார். அவரைப் போன்ற நட்பை எவரிடத்தும் பார்த்ததில்லை, இனி பார்க்கப் போவதுமில்லை. அண்ணனுமாய் நண்பனுமாய் எனக்குள் ஊடுறுவி நிற்கும் ஆனந்தராசுவிற்கு எனது கண்ணீரும் கவிதையும் அஞ்சலி ஆகட்டும் .

ஞாயிறு, 10 ஜூலை, 2016

கீழடி: மடைச்சி வாழ்ந்த தொல் நிலத்தில் எம் காலடித் தடங்கள்.




கீழடி:
மடைச்சி வாழ்ந்த
தொல் நிலத்தில்
எம் காலடித் தடங்கள்.

மதுரை என்னும் சொல் கூட வரலாற்றுத் தொன்மங்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்களைப் புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறும், மொழி உயிர்ப்பும் இன்னும் வலுவுடன் திகழும் தொல் நிலமாய் மதுரை மண் பரந்து கிடக்கிறது.
மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் புதிய வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளன. அவ்வகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கீழடி எனும்  சிற்றூரில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் தடயங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்ட எல்கை, மதுரை நகரிலிருந்து அண்மைத் தொலைவிலிருக்கும் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறையின் 6 ஆம் அகழாய்வுப் பிரிவினர் முதல் கட்ட அகழாய் வைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகையத் தொல் நிலத்து அடையாளப் பதிவுகளைக் கண்ணுறும் நோக்கில் மக்கள் தமிழ் ஆய்வரண் சார்பாகப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியத் திருவாளர்கள் அன்பு தவமணி, முத்துக்கிருசுணன், இரவிச்சந்திரன் ஆகியோருடன் நானும் கடந்த 25.6.2016 இல் பெருங் களம் நோக்கிப் பயணமானோம்.
மதுரையை அடுத்த சிலைமான், அதையடுத்த பசியாபுரம் சிற்றூர்களைத் தாண்டியே கீழடி எனும் சிற்றூர். இவ்வூரின் பள்ளிவாசலுக்கு எதிரே போகும் வண்டிப் பாதை பரந்திருக்கும் தென்னந்தோப்புக்குள் நுழைகிறது. வண்டிப் பாதையின் தடம் மட்டுமல்லாமல் தோப்பின் வாய்க்கால் வரப்புகள் புழுதிகள் யாவற்றிலுமே கூட பழங்காலப் பானையோடு சில்லுகள் தான் முகம் காட்டிக் கிடந்தன.
பசியாபுரம், கீழடி, கொந்தகை, பாட்டம் போன்ற சிற்றூர்களைச் சேர்ந்த 110 பேருக்குச் சொந்தமான 81 ஏக்கர் நிலப்பரப்பில் வைகையின் ஆற்றுப்படுகையில் தான் அத் தென்னந்தோப்பு அமைந்திருக்கிறது. தோப்பில் உள்ள மரங்களே நூறாண்டுக்கும் மேலான பழமையைச் சொல்லியபடி அசைந்து கொண்டிருகின்றன.
தோப்பில் உள்ள எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல் ஆங்காங்கே சதுரக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட எல்லாச் சதுரக் குழிகளிலும் பல்வேறு வகையிலான தொல்லியல் தடயங்கள் புதைந்திருப்பது வெளித் தெரிகின்றன.
சாம்பல் நிறத்திலான மண்ணுக்கடியில் பெருநகரமே புதைந்திருப்பதற்கான தடயங்கள் வெளிப்பட்டுள்ளன. சுடுமண் கிணற்று உறைகள், குழாய்கள், வடிகால்கள், வாய்க்கால்கள், மூடிய நிலையிலான சாக்கடை வழிப்பாதைகள், குளியலறை, கழிவுக் குழிகள், சிற்றறைகள், தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு உலைக் குழிகள், அணிமணிகள், காசுகள், கருவிகள் எனப் புதையுண்டிருந்த பழங்காலத் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்கள் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டுள்ளன. பண்பட்ட வாழ்வும் வரலாறும் வாழ்நிலமும் மண்ணில் புதைந்து கிடப்பதைக் காணுகையில் பெரு வியப்பும் பெருமிதமும் பெருஞ்சோகமும் ஒன்று கூடிக் கவ்விக் கொண்டன.
வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாட்டு மலையிலிருந்து முடிவுறும் இராம நாதபுரம் வரையிலும் ஆற்றின் இருபுறங்களிலும் 280க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள், பழங்கால வாழிடத் தொல்லியல் நிலப்பரப்பாகக் கீழடி அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இப்போதைய நகர வளர்ச்சியின் நாகரிக அடையாளங்கள் எனச் சொல்லப்படுகின்றவை எல்லாம், கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்களில் செழித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ள மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. அவற்றுள், மடைச்சி என்னும் பெயர் தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட மண் கலயமும் ஒன்றாகும். இப்பெயர் வேளாண் குடிகளோடு தொடர்புடையது. பழங்காலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலும் நீர் மேலாண்மை செய்து வருகின்ற வேளாண் குடிகள் மடைச்சி, மடையர், மடையளவக்கார், மடை வேலைக்காரர் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மேலும், அகழாய்வு நடைபெற்று வரும் நிலப்பகுதியை அவ்வட்டாரப் பெரியவர்கள் பள்ளுச் சந்தைத் திடல் என்றே அழைக்கின்றனர்.  பள்ளு என்பதும் வேளாண் குடிகளைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்திருக்கிறது . அகழாய்வில் புதைபொருட்கள் நிறையக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அவ்வட்டாரப் பெரியவர்களிடமும் வாய்மொழி வழக்காற்றுத் தரவுகள் நிரம்பிக் கிடக்கின்றன.
பள்ளுச் சந்தைத் திடல் இருக்கும் இப்பகுதியில் மிகப் பழமையான ஊர் ஒன்று இருந்ததாகவும், பழங்காலமாக மக்கள் வாழ்ந்து வந்த போது பகாசுரன் என்பவரின் இடையூறுகள் இருந்ததினால் குந்திதேவியின் வழிகாட்டல் படி பக்கத்து ஊருக்குப் புலம் பெயர்ந்து குடியேறியதாகவும், குந்தவை தேவியின் நினைவாகவே அவ்வூர் அழைக்கப்பட்டு இப்போது கொந்தகை என மருவி அழைக்கப்படுவதாகவும், கொந்தகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏகத்துக்கும் தாழிப் பானைகள் புதைந்து கிடப்பதாகவும் வாய்மொழித் தரவை வழங்கினார் அப்பகுதிப் பெரியவர் திரு ஆண்டி அவர்கள்.
அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் தரவுகளின்படி, முற்காலப் பாண்டியர்களின் தலைநகரான மணலூர் எனும் நகரமே கீழடியில் புதைந்திருப்பதாகக் கருத முடிகிறது. ஊர் என்பது மருத நிலத்துப் பேரூரைக் குறிக்கும் சொல்லாகும். மணலூரும் மருத நிலத்துப் பேரூராய் இருந்திருக்க வாய்ப்புண்டு.  கீழடியைச் சுற்றியுள்ள பசியாபுரம், கொந்தகை, பாட்டம், விரகனூர், சிலைமான், அய்ராவதநல்லூர் போன்ற ஊர்களுக்கும் கீழடிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருக்க அதிகம் வாய்ப்புண்டு. கீழடியைச் சுற்றியுள்ள பகுதி வேளாண் குடிகளிடம் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிற வாய்மொழி வழக்காறுகள், வழிபாட்டு மற்றும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான  சடங்குகள், பண்பாட்டு வெளிப்பாடுகள், தொன்ம அடையாளங்கள் போன்றவற்றையும் கீழடி அகழாய்வுகளோடு ஒப்பு நோக்கியும் இணைவித்தும் பார்க்கும் போது தான் வரலாறு முழுமை பெறுவதற்கு வாய்ப்புண்டு. இத்ததைய வரலாற்று மீட்டுருவாக்கப் பணியில் தொல்லியல் துறையினருக்கு மட்டும் பங்கில்லை. நம் அனைவரின் சமூகக் கடமையும் கூட.
கீழடி போன்றே வெகு காலத்திற்கு முன்பாக ஆதிச்சநல்லூரிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிய தடயங்கள் நிறைந்த அந்நிலத்து அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவேயில்லை. கீழடி அகழாய்வு அறிக்கையும் அது போல் முடங்கிப் போகவும் கூடாது. கீழடியில் அகழாய்வு செய்து கொணரும் முதன்மையான பொருட்கள் யாவற்றையும் தமிழ்நாட்டின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் வைத்திருக்கும் போது தான் சிதையாமலும் திருடப்படாமலும் திருத்தப்படாமலும் இருப்பதற்கு ஓரளவு உறுதி சொல்ல முடியும்.
அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வரலாற்றைப் பாதுகாப்பதும், மீட்டமைப்பதும், நேர் செய்வதும் நம் எல்லோரின் கடமை.
ஒரு காலம்
ஒரு வாழ்க்கை
ஓர் இனம்
ஒரு நிலத்துக்குக்
கீழே
அடியிலே
புதைந்து இருப்பதனால் தான் கீழடி என்னும் பெயர் அந்நிலத்திற்கு வழங்கி இருக்கலாம்.
கீழடி என்னும் ஊர்ப்பெயர்ச் சொல்தான் அதன் வரலாற்றுத் தடயம் வெளித்தெரியக் காரணமாய் இருந்திருக்க வேண்டும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே தான்.

கீழடி அகழாய்வுக் களத்தில் தொல்லியல் சான்றுகள் குறித்து விளக்கப்படுத்திய அகழாய்வு உதவித் தகைமையர் திரு வசந்த் அவர்களுக்கு நன்றி.

வியாழன், 19 மே, 2016

‘மொழியில் நிமிரும் வரலாறு’ நூலுக்கான அணிந்துரை

மகாராசனின் ‘மொழியில் நிமிரும் வரலாறு’ நூலுக்கான அணிந்துரை:
பா.ச. அரிபாபு

தமிழ்ச் சமூகத்தின் விழுமியங்களும் மதிப்பீடுகளும் எக்காலத்தின் முன்னும் நிலைத்து நிற்கக் கூடியவைதான். எனினும், நவீன காலச் சமூக வெளியில் தமிழ் நிலத்தில் நடந்தேறிய பல்வேறு மாற்றங்களில் மொழி, நிலம், விவசாயம், உணவு, கல்வி, சிந்தனைப்போக்கு போன்றவை உருமாறத் தொடங்கி விட்டன.  இன்று தமிழ்ச் சமூகம் வந்தடைந்திருக்கும் காலத்தையும் போக்கையும் மதிப்பிட்டால், அதாவது தனி மனித நடத்தை தொடங்கி சமூக அரசியல் செயல்பாடுகளையும் சேர்த்துப் பார்த்தால் ஏமாற்றமும் வெறுமையும்தான் மிஞ்சக்கூடும்.
எவற்றையெல்லாம் நவீன காலத்தில் பேச எத்தனிக்கிறோமோ அவையெல்லாம் அழித்தொழிக்கப்படுவதும் அவமானப்படுத்தப்படுவதும் இக்காலத்தில்தான் நடக்கின்றன.  கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் முன்வைத்து இதுவரையிலும் உருவாகியுள்ள கலை, இலக்கியம், சமூக அரசியல் சார்ந்த அத்தனை நடவடிக்கைகளையும் மாற்றுத் தளத்தில் வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.  அவ்வகையில் ‘ஏர்’ மகாராசனின் ‘மொழியில் நிமிரும் வரலாறு’ பேசுவதற்குத் தயாராகிறது.
இப்பிரதி 12 கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வெளிப்பட்டாலும், உள்வாங்கியுள்ள பாடுபொருள்கள் மிகக் கூர்மையானவை.  மிகக் கராரான விசயங்களைக் கொண்டவர்களால்தான் இம்மாதிரியான விசயங்களை உண்மையிலேயே எழுத முடியும்.  மகாராசனின் இப்பிரதிக்குள் பொதிந்திருப்பது நிலம், மனிதர்கள், கலை, இலக்கியம், தமிழ்ச் சமூகத்தின் தற்காலப் போக்குகள் குறித்தான மதிப்பீடுகளே.  இதனை இந்நூலை வாசிக்கத் தயாராகும் அனைவரும் உணர்ந்துகொள்ள இயலும்.
பெண்ணைக் கொண்டாடுகிற தமிழ்ச் சமூகம் பெண்ணுக்கான வரையறைகளை உற்பத்தி செய்து உறுதி செய்வதிலிருந்தே தொடங்குகிறது  அதனுடைய உள் அரசியல். என்றுமே கலை இலக்கியப் பிரதிகளில் பெண்ணின் இருப்பு தடை செய்யப்பட்டே வந்துள்ளது.  ஆனால், ஆண்களின் பாடுபொருளாக அவர்கள் வெவ்வேறு விதங்களில் சமைக்கப்பட்டிருக்கிறார்கள்.  ஆனாலும் அவர்களின் மன உலகங்களின் நுண்ணிய அடுக்குகள் பதிவு செய்யப்படாமல் தனித்தே கிடக்கின்றன.  இதனை, தொடர்ந்து எழுதப்பட்டுள்ள தமிழ் இலக்கிய வடிவப் போக்கை மதிப்பிடும் எந்தச் சாதாரண வாசகரும் மிக எளிதாக அவதானிக்க இயலும்.
நவீன காலம் பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கியிருக்கிறது.  ஆண்களுக்கு நிகராகப் பெண்களின் இடம் நீண்டு கிடக்கிறது என்றாலும், வெவ்வேறு வடிவங்களில் பெண்களின் சுயம் அழிக்கப்படுதல் நடந்து கொண்டேயிருக்கிறது.  ஆக, பெண்கள் தங்களை உணர்ந்து கேள்வி கேட்பதிலிருந்தே துவங்குகிறது அவர்களுக்கான அரசியல், கலை, இலக்கியம் எல்லாமே. அவ்வகையில், தொண்ணூறுகளுக்குப்பின் எழுச்சியாய் எழுத வந்த பெண் படைப்பாளிகளின் பட்டியல் அதிகம். அவர்கள் எடுத்தாண்ட கருப்பொருள்களை எதிர்கொள்ளத் திராணியற்ற தமிழ்ச் சமூகம்தான் ஒழுக்கம் குறித்தான அதே பழைய பாணியிலான தடுப்பரண்களைக் கட்டி எழுப்பியது.  எனினும், அரண்கள் எல்லாம் காணாமல் போனதுதானே வரலாறு.
இங்கு, ஒரு விசயத்தைக் குறிப்பிட வேண்டும். பெண் கவிஞர்களை மதிப்பிடத் துணிகிறேன் என்று பலர் வம்புக்கிழுப்பார்கள்; துதிபாடுவார்கள். வம்புக்கிழுப்பதும் துதிபாடுவதும் எவ்வகையிலும் திறனாய்வு நேர்த்தி என்று சொல்லிவிட முடியுமா என்ன? பெண்ணைப் பற்றிய சுயமான மதிப்பும், இயங்கியல் குணமும் கொண்ட வாசகரால்தான் பெண்களையோ அவர்களின் படைப்பின் வீரியத்தையோ மதிப்பிடுவது சரியாக இருக்க முடியும்.  அவ்வகையில் மிகச் சரியானவர் இப்பிரதியாளர்.  பெண்மொழி குறித்தான காத்திரமான ஆய்வை நிகழ்த்தியவரும் இவரே.  ஆகையால் இப்பிரதிக்குள் பெண் படைப்பாளிகளைக் குறித்தும், அவர்களது படைப்புக்கள் குறித்தும் அணுகும் முறையானது மிகச் சரியானதாக வெளிப்படுகிறது.
இப்பிரதியின் பிற்பகுதி தமிழ் நிலத்தின் ஆன்மா சம்பந்தப்பட்ட விசயங்களைப் பேசுகிறது. இரண்டு கட்டுரைகள் நவீன நாடகத்தின் மிக முக்கிய முகமான ச.முருக பூபதியின் ‘குற்றம் பற்றிய உடல்’, ‘மிருக விதூசகம்’ குறித்துப் பேசுகின்றன.  பொதுவாக, தமிழ் நாடகப் பார்வையாளர்கள் முருக பூபதியின் நாடகம் புரியவில்லை என்றே வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். வசனங்களால் நிறைந்திருக்க வேண்டும் என்றே ஆசைப்படுபவர்கள்தானே இங்கு அதிகம்.  ஆனால், அவர் படைப்பாக்கத்தில் உருவாக்கியுள்ள கருப்பொருட்கள் அனைத்துமே தொல்குடிகளின் மரபுகளை, இழப்புகளைக் காத்திரமாகக் குறியீட்டு மொழியில், இசைகளோடு நடிகர்களின் உடல்மொழியின் துணையினால் படைத்தளிக்கிறார்.  தமிழ்த் திறனாய்வு உலகில் நாடகத்திற்கு விமர்சனம் எழுதுவது பெரும்பாலும் இல்லை.  ஆனால், முருக பூபதியின் நாடகங்களுக்குக் கட்டுரையாளர் தந்துள்ள வாசிப்பு கூரானது.  மகாராசனிடம் இயல்பாகத் தங்கியுள்ள நிலம், மனிதர்கள்,  பண்பாட்டு வேர்கள் பற்றியான தெளிவான பார்வையோடே இப்பிரதியை வாசித்திருக்கிறார்.  குறிப்பாக, ‘கோமாளி’ பற்றிய விளக்கத்தை இவ்வளவு நுட்பமாகவும் விரிவாகவும் எழுதியிருப்பது சிறப்பானதாகும்.
  நகத்தைக் கடித்து மிகச் சாதாரணமாகத் துப்புவது போல, எல்லாவற்றையும் மிக இயல்பாகக் கடந்து போகப் பழக்கப்பட்டு விட்டோம். அதனால்தான் சமகாலத்தில் கண்முன்னே நடந்த ஈழப்படுகொலைகளை - வன் குடியாதிக்கத்தைக் கடக்கத் துணிந்து விட்டோம்.  இதனை யார் பேசுவது? அரசியல்வாதிகளா? அவர்களின் புகைமூட்ட அரசியலைத்தான் நாம் பார்த்து விட்டோமே.  பிறகு எப்படித்தான் இந்தத் துயரத்தைக் கடத்துவது? படைப்பின் வழியாகத்தான்.
போர் என்றால் வன்முறை; உடல் அழிப்பு. எந்த உடல் ஆணுடலா? பெண்ணுடலா? அதிகம் சிதைக்கப்படுவதும் பாதிக்கப்படுவதும் பெண்ணுடலே. அதிக விதவைகள் வாழும் நிலமாக ஈழநிலம் ஏன் மாறிப்போனது?  விதைகளை விருட்சங்களாக்க வேண்டியவர்கள் விதவைகளாகிப் போனது எவ்வளவு பெரிய சோகம். கடத்த முடியாத பெரிய வலியை முருகபூபதி தன் படைப்புவழி கடத்துகிறார் என்றால், மகாராசன் அவருக்கே உரிய அரசியல் புரிதலோடு இன்னும் வலியோடே அணுகுகிறார்.
இதனை ஒட்டியே இன்னுமொரு கட்டுரை ‘புதைகுழி மேட்டிலிருந்து வேளாண் குடிகளின் ஒப்பாரி’. தன் ஆதிமையின் வேரும், பண்பாட்டுப் புழங்கு வெளியும் அழியப்போகிறது நியாயமாரே.. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார் சொந்த மண்ணிலிருந்து. சமூக அரசியலைப் பெரும் முதலாளிகளும் வியாபாரிகளும் இயக்குகிறார்கள். அவர்களுக்கு மண்ணைப் பற்றி கவலை என்ன?  நவீன நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம், சந்தை விரிவாக்கம் போன்றவை யாரின் தலையை முதலில் கொய்கிறது? விவசாயிகளையும் விவசாயிகளின் விளை நிலங்களையும்தான்.
நமது சமூகம் அகதிகளின் வலியை ஏறா முகத்தோடு எப்படி அணுகுகிறதோ அதே போலத்தான் விவசாய மக்களின் துயரத்தையும் அணுகும்.  யோசித்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது.  இன்னும் கொஞ்ச காலத்திற்குள் பெரும்பாலான விவசாய நிலப்பகுதிகள் முழுக்க பாழாகப் போகிறது. இவர்கள் எங்கோ துரத்தப்படுவார்கள்.  சிறு கோழிக் குஞ்சுகளைத் தூக்குவதற்குக் கழுகுகள் வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. கழுகு இறங்கி கூர் நகங்களால் தூக்கும் வேளையில் குஞ்சின் கதறல் கேட்கும்; பின் அடங்கும்.
நிலத்தை இழக்கும் வலியை நிலத்தோடு பிணைந்திருப்பவரால்தான் மொழிப்படுத்த முடியும். நிலத்தை விட்டு அந்நியமாகாமல் விவசாயத்தோடு இன்னும் பிடிப்பு கொண்டிருப்பதால்தான், நிலம் பற்றிய தவிப்பை மகாராசனால் புலப்படுத்த முடிகிறது. நிலம் பற்றிய பதிவுகளைத் திரும்பவும் வாசிக்கும் போது ஒட்டுமொத்த விவசாயக் குடிகளின் துயரத்தை நினைவுபடுத்தியபடியே இருக்கின்றன.
இப்பிரதியில் காணலாகும் இன்னொரு பகுதி இலக்கியம் தொடர்பானது. தமிழின் மரபிலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரையிலுமான வாசிப்பு மகாராசனின் எழுத்தை வலுப்படுத்துகிறது. பிரதியினுள்ளே இலக்கண இலக்கிய மரபுகள் குறித்த கட்டவிழ்ப்புகளும், பொருள்கோடல்களும், எடுத்துரைப்புகளும் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. குறிப்பாக, இருத்தல் உளவியல், திணைமொழி, தொல்லியல் குறித்தான கட்டுரைகள் புதிய கருத்துப் படிமங்களைத் தருகின்றன.  
பிரதியில் சில இடைவெளிகள் இல்லாமல் இல்லை.  கட்டுரைகளின் சில இடங்கள் மாற்று உரையாடலுக்குத் தயாராவதுபோலத் துவங்கி, தகவலாக நின்று விடுகின்றன. சில கட்டுரைகளின் நீட்சியைக் குறைத்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.  ஆயினும், அனைத்துமே காத்திரமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். குறிப்பாக, நிமிர்ந்தெழும் உணர்வுப் புலப்பாடுகளை உரக்கப் பேசும் இன்னொரு நூலாக ‘மொழியில் நிமிரும் வரலாறு’ வருவதில் மகிழ்ச்சி.
நூலாசிரியர் தொடர்ந்து இயங்குவார் என்று பொத்தாம் பொதுவாய் நம்பிக்கையளிக்கும் முகமாகச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில், ‘ஏர்’ மகாராசனின் உழைப்பு, வாசிப்பு, எழுத்து, இயங்குதல் திட்டமிட்டு நகர்ந்து கொண்டே இருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.. வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
பா.ச. அரிபாபு
arivusallo@gmail.com
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
அமெரிக்கன் கல்லூரி

மதுரை.

சனி, 23 ஏப்ரல், 2016

மொழியில் நிமிரும் வரலாறு : நூலுக்கான முன்னுரை

மொழியில் நிமிரும் வரலாறு :
நூலுக்கான முன்னுரை
..............................................................................................................................
முன்னத்தி ஏர்
  அழுதுக்கிட்டு இருந்தாலும் உழுதுக்கிட்டு இருக்கனுமுடா என்று எம்மிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் அப்பா. ஒழைக்காம ஒக்காந்து சாப்பிடறது ஒடம்புல ஒட்டாது; ஒட்டவும் கூடாதுடா என எப்போதோ எம்மிடம் சொல்லி வைத்தார்  அம்மா. அப்பாவிடமிருந்தும் அம்மாவிடமிருந்தும் அவ்வப்போது வெளிப்பட்ட வாழ்க்கைப்பாடுகள் சுமந்த சொற்கள் எமக்குள் விதையாய்ப் புதைந்திருந்து இப்போதும் முளைத்துக் கொண்டிருப்பதாகவே படுகிறது.
  நிலம் - உழைப்பு - எளிய வாழ்நிலை சார்ந்த குடும்பச் சூழ்நிலையில் கடைக்குட்டியாய்ப் பிறந்த எம்மை, படிப்பின் உச்சம்வரை ஏற வைத்தவர்கள்; அதையே தம் வாழ்க்கைக் கனவாய்த் தூக்கிச் சுமந்தவர்கள்; அதற்காகவே சலிக்காமல் உழைத்தவர்கள் எம் அம்மாவும் அப்பாவும்தான். அவர்களின் வியர்வையும் அரத்தமும்தான் கல்விக்கான திசைவெளிகளில் எம்மைப் பயணிக்க வைத்தன.
  கல்வித் தேடல்களுக்கும் அவை சார்ந்த செயன்மைகளுக்கும் உந்து சக்தியாய் அவர்கள் இருந்ததினால்தான், சமூகம் சார்ந்த எமது பங்கேற்பும் செயன்மைகளும் ஆய்வுகளும் எழுத்துப் பணிகளும் இலகுவாய்த் தொடர்கின்றன. எதிர்ப்போ மறுப்போ காட்டாது  எமது இயங்குதலுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பும் ஊக்கமும் தந்த அவர்கள் நினைவில் வாழும் மனிதர்களாகிப் போனார்கள்.  ஆனாலும், எமது இயங்குதல் நின்றுவிடவில்லைதான்.
  கல்வி, சமூகம், ஆய்வு, எழுத்து என நீள்கிற எமது அனைத்துச் செயன்மைகளும்   இன்றைக்கும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அலைதலும் தொலைதலும் நிரம்பிய வாழ்க்கைச்சுழல் பயணத்தில் தவிப்புகள் இல்லாமல், முன்னைக் காட்டிலும் கூடுதலாய்ச் செயலாற்றுவதற்கான நல்வெளியை - மனவெளியை உருவாக்கிக் கொடுப்பதோடு, எண்ணம், எழுத்து, செயல் யாவற்றிலும் உயிர்ப்பிக்கும் ஆற்றலைத் தரும்படியான வாழ்வைத் தந்துகொண்டிருப்பவர் வாழ்க்கைத் துணைவி அம்சம் அவர்கள்தான். இதுபோன்ற சமூகப் பங்கேற்புகளையும் கடமைகளையும் அன்னாரின் பெரும்பகுதி உதவியோடுதான் செய்துகொண்டிருக்கிறேன். மேலும், இல்லறத்தின் நல்லறமாய்த் திகழும் எம் குழந்தைகளும் பேருதவி புரிந்திருக்கிறார்கள். அவர்களது புழங்குவெளியில் எமக்கான இயங்குவெளியை ஒதுக்கிக் கொடுப்பதோடு, எல்லாவற்றிலும் தோள்கொடுக்க முனைகிற மகள் அங்கவை யாழிசை, மகன் அகரன் தமிழீழன் ஆகியோர் வாழ்வின் மகிழ்வான பக்கங்களைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல, குடும்பவெளியின் அரவணைப்பாய் இருந்து தோள் கொடுக்கும் அண்ணன் பாலன், மைத்துனர் சுந்தர் சூரியன் ஆகியோரின் உதவிகளும் நினைக்கத் தக்கவை.
  நிலம் சார்ந்த வாழ்வியல் சூழலோடு பினைந்து கிடந்ததால் பதின்பருவக் காலத்திலேயே இயல்பாய் முளைவிட்டிருந்த தமிழ் மொழி - இனம் - சமூகம் மீதான பற்றுதலை வளர்த்தெடுத்தவர்கள் எமது ஊர்மக்களும் சேக்காளிகளும்தான். ஊரில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளிலும் எம்மைப் பேசச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள் பெரியவர்கள் உட்பட. அந்தவகையில்,  எமது ஊரும் மக்களுமே சமூகப் பங்கேற்புக்கான முதல் களம். கல்விக்கான தேடல்களில் படிப்பின் பொருட்டு யான் பயின்ற கல்விப் புலங்களின் பங்கு மகத்தானது.   பள்ளி ஆசிரியர்களும், கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரும் மரபார்ந்த திசைவெளிகளில் பயணிக்கத் துணை புரிந்திருக்கிறார்கள். இந்நிலையில், எமது பார்வை, வாசிப்பு, புரிதல், புலப்பாடு, பங்கேற்பு போன்றவற்றில் புதியதான வெளிச்சம் பாய்ச்சியவர்கள் பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சிய - தமிழ்த்தேசிய இயக்கங்கள் சார்ந்த தோழர்கள்தான். குறிப்பாக, மார்க்சியப் படிப்பு வட்டத் தோழர்கள்தான் சமூகப் புரிதலையும் புலப்பாடுகளையும் ஆழமாகக் கற்பதற்கும் புலப்படுத்துவதற்கும் உதவியவர்கள்.
   கற்றதையும் பெற்றதையும் எழுத்து வழியிலான ஊடகத்தில் புலப்படுத்துவதற்கு ‘ஏர்’ இதழை நடத்தியபோதுதான் இன்னும் கூடுதலான பக்குவத்தைப் பெற முடிந்தது. இதழைத் தொடர்ச்சியாகக் கொண்டுவர முடியாவிட்டாலும்  எழுத்துப் புலப்பாடுகளை நிறுத்திக் கொள்ளவில்லை. கல்விப்புலப் பங்கேற்புகளிலும் சமூக மாற்றச் செயன்மைகளிலும் சமூகப் புலப்பாடுகள் குறித்த கருத்தாடல்களைத் தொடர்ச்சியாக முன்வைத்துக் கொண்டிருந்தபோது, எழுத்து வெளியீட்டுப் பணிகளுக்குத் தோள் கொடுத்தவர்கள் மாற்று இதழாளர்களும் பதிப்பாளர்களும்தான். இவர்களின் உதவியினால் தொடர்ச்சியாகப் பல்வேறு நூல்களைக் கொண்டுவர முடிந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி எம் எழுத்துகளின் மீது நம்பிக்கை வைத்து நூல்களை வெளியிடுவதைத் தமது சமூகக் கடமையாகக் கொண்டுள்ள பதிப்பாளர்களின் ஒத்துழைப்பு போற்றத் தக்கது.
  கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் பயின்ற - பணியாற்றிய காலங்களில் வாசிக்கவும் எழுதவும் கற்கவும் பகிரவுமான சூழலும், மாணவ ஆசிரிய நட்பு வட்டங்களும் தோதாய் வாய்த்தன. கற்றல் கற்பித்தல் பணிச்சூழலுக்குள் இப்போது இருக்க நேர்ந்தாலும்கூட, பள்ளிப் பணிச்சூழல்  வேறுமாதிரியான படிப்பினைகளைத் தந்துகொண்டிருக்கின்றன. ஆனாலும், பள்ளிச்சூழலுக்குள்ளும் எமக்கான இயங்குவெளியைத் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
  சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை எனும் பழமொழியை வாழ்வின் பல பொழுதுகளில் உயிர்ப்பாய் உணர்ந்திருக்கிறேன். புலவர்களுக்குக் கிடைத்த புரவலர்களைப்போன்ற நட்புள்ளங்கள், யான் எழுதுகிற தீவிரத்தைக் குறையாமல் பார்த்துக் கொள்கின்றன. நல் மேய்ப்பரைப் போலப் பின்தொடரும் அய்யா கோவிந்தராசு போன்ற தோழமை உறவுகள், இதுபோன்று இன்னும் எழுத வேண்டும் என்கிற உணர்வுகளை உயிர்த்தெழச் செய்கின்றன.
  பகட்டும் பூடகமும் புனைவுகளும் இல்லாத எளிய மனிதர்களின் வாழ்வியல் கோலங்களைப் போலத்தான் எமது எழுத்துகளும். எளிய மனிதர்களின் அழகியல், கோபம், திடம், மானுட நேசிப்பு போன்றே எமது எழுத்துகளும் எளிமையானவை; எளிய மக்களுக்கானவை; எளிய மக்களின் பார்வையில் அமைந்தவை. வாழ்விலும் எழுத்திலும் எமக்குச் சரியென்று பட்டதையே வெளிப்படுத்துகிறேன். வெளிவந்திருக்கிற எமது பல்வேறு நூல்களும் கற்றலின் வெளிப்பாடுதான்; புதிய புதிய தேடல்களின் புலப்பாடுகள்தான். சமூகத்திடமிருந்து யான் கற்றுக்கொண்டதையே சமூகவெளியில் நூலாக ஒப்பளிக்கிறேன்.
  தமிழ்ச் சமூகப் புலப்பாடுகளுள் கலை, இலக்கியம், அரசியல், வரலாறு, பண்பாடு போன்றவற்றைக் குறித்துக் கல்விப்புலங்கள் மற்றும் சமூகப்புலக் கருத்தரங்குகளிலும் இதழ்களிலும் வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்ட கருத்தாடல்களைக் கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறேன். தமிழ்ச் சமூக நிமிர்வுக்கான உரையாடல் புள்ளிகளை மொழியில் விரியும்  கருத்தாடல்கள் தொடங்கி வைக்கும் என நம்புகிறேன். சமூக மாற்றச் செயன்மைகளுக்குப் பங்காற்றும் பெரும்பயணத்தில் தாகம் தணிக்கும் துளிகளாய் எமது நூல்கள் இருந்திருக்கின்றன. அவ்வகையில், ‘மொழியில் நிமிரும் வரலாறு’ என்கிற இந்நூலும் திகழும் என நம்புகிறேன். 
தீவிர வாசிப்பும் எழுத்துமாய்க் கிடந்தாலும் எம்மைக் குறித்தும் எழுத்தின் மீதும் அக்கறையும் மதிப்பும் கொண்டுள்ள தம்பி முனைவர் அரிபாபு அவர்கள் வாஞ்சையோடு அணிந்துரை வழங்கியுள்ளார்.
  களப்பணியினூடே பதிப்பின்வழியும் சமூகக் கடமையாற்றும் தோழர் பரமன்  அவர்கள், கைமாறு கருதாது பெருமகிழ்வோடு இந்நூலையும் வெளியிடுகிறார். இந்நூல் மட்டுமல்லாது, எமது எல்லா நூல்களுக்கும் முதல் வாசகராய் இருந்து ஒளியச்சு மெய்ப்புகளில் திருத்தங்கள் செய்தும் மதிப்பீடுகள் தந்தும் கொண்டிருக்கிற தோழர் கிட்டு, நூலைச் சிறப்பிக்கும் வகையில் நேர்த்தியான வடிவமைப்புச் செய்து கொடுத்த தோழர் குப்புசாமி ஆகியோரின் உதவிகள் இந்நூலின் சிறப்புக்குக் காரணமானவை.
  இதுபோன்ற முயற்சிகளுக்குத் தோள் கொடுத்து உதவிய - உதவுகிற யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நூலைக் குறித்த நேர்மையான மதிப்பாய்வைத் திறந்த மனதுடனே வரவேற்கிறேன். தொடர்ந்து பயணிப்போம்; பயணத்தில் இணைவோம்.



செவ்வாய், 1 மார்ச், 2016

புதைகாட்டில் மறைந்திருக்கும் தொல்லியல் தடயங்கள்: கல்வட்டங்கள், தாழிகள் குறித்த கள மேலாய்வுப் பதிவும் இலக்கியக் குறிப்புகளும் :- மகாராசன்

                                     







மதுரை அருகே கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 1ஆம் நூற்றாண்டுக்கு இடையிலான பழங்கால முதுமக்கள் தாழிகள் புதைந்திருக்கும் ஈமக்காடு கண்டறியப்பட்டுள்ளது.

  மதுரை மாவட்டம், தெற்கு வட்டம், அயன்பாப்பாகுடி உட்கிடையில் அமைந்திருக்கும் சின்னஉடைப்பு எனும் சிற்றூரின் கண்மாய் அருகே பழங்கால ஈமச் சின்னங்களான முதுமக்கள் தாழிகள் புதைந்திருப்பதைக்  கள மேற்பரப்பாய்வு மேற்கொண்ட மக்கள்தமிழ் ஆய்வரண் நிறுவனர் முனைவர் மகாராசன் கண்டறிந்துள்ளார். அதன் கள ஆய்வுப் பதிவறிக்கை பின்வருமாறு:
   மதுரையிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மதுரை வானூர்தி (விமான) நிலையம் அருகே அமைந்திருக்கும் ஊர் சின்னஉடைப்பு ஆகும்.  இவ்வூரின் கண்மாய் அருகே பழங்கால முதுமக்கள் தாழிகள், ஈமச் சின்னங்கள் நிறைந்த ஈமக்காடு எனப்படும் புதைமேடு கண்டறியப்பட்டுள்ளது.  
இறந்தவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைப்பது அல்லது எரியூட்டுவது என்ற முறையில் அடக்கம் செய்யும் வழக்கம் நம் சமூகத்தில் இருந்து வருகின்றது.  ஆனால், பழங்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைக்கும் முறையே பெருவழக்காக இருந்திருக்கிறது.  இதனைத் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்ற ஈமச்சின்னங்கள் குறித்த அகழாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  தற்போது சின்னஉடைப்பில் கண்டறியப்பட்டுள்ள ஈமச்சின்னங்களும் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.
இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் பண்பாட்டு வழக்கம் மிகப் பழமையான காலத்திலிருந்தே காணப்படுகின்றது.  இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்குப் பல முறைகள் கையாளப்பட்டுள்ளன.  அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று, ‘தாழி’ என்பதற்குள் இறந்தவர்களின் உடல்களை வைத்துப் புதைக்கும் பண்பாட்டு வழக்குமுறை ஆகும்.  இது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாகக் காணப்பட்டுள்ளது.
 ‘‘தாழியை ‘முதுமக்கள் தாழி’ எனவும் குறிப்பர்.  இத்தகைய முதுமக்கள் தாழியைத் தரை மட்டத்திற்கு மேல் எவ்வித அடையாளமும் இல்லாமல் நிலத்திற்குக் கீழே புதைத்து வைக்கும் வழக்கத்தைப் பழங்கால மக்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.  தாழியை மண்ணுக்கடியில் வைப்பதற்கு முன்பாக அதன் உருவத்திற்குச் சிறிதளவு பெரியதாக ஓர் ஆழமான குழியைத் தோண்டிய பின்னர் தாழியை உள்ளே வைத்து, அதன் பின்னர் குழியின் அரைப்பாகத்திற்குக் கீழே தாழியைச் சுற்றிலும் ஈமப் பொருட்கள், இறந்தவர்கள் பயன்படுத்திய புழங்கு பொருள்கள், அணிமணிகள், கருவிகள், இன்னும் சில இதர பொருட்களையும் வைத்ததற்குப் பின்பாகத் தாழி வெளியே தெரியாமல் மண்ணால் மூடப்படும்.  சிலவகையான தாழிகளில் மண் நிரப்பப்படுவதற்கு முன்பாகவே எலும்புகளும் மற்ற வகையான ஈமப் பொருட்களும் வைக்கப்படுவதுண்டு. இவ்வாறாக ஈமப் பொருட்கள் வைக்கப்பட்ட பின்னர், குழியில் குழிக்காகத் தோண்டிய மண்ணைக் கொண்டோ அல்லது வேறு இடத்திலிருந்து கொண்டு வந்த மண்ணைக் கொண்டோ குழி தரைமட்ட அளவிற்கு நிரப்பப்பட்டிருக்கும்.   இதைத்தான் தாழி அல்லது முதுமக்கள் தாழி எனச் சொல்லப்படுகிறது.
நிலத்தைத் தோண்டி ஓர் ஆழமான குழியை ஏற்படுத்தி, அக்குழிக்குள் தாழியுடன் ஈமப்பொருட்களை வைத்ததற்குப் பின்பாக மண்ணைக் கொண்டு மூடி, தரைமட்டத்திற்கு  மேலே மண்ணைக் குவியலாகக் குவித்து வைப்பர்.  இதனையே மண்குவைப் புதைமேடு என்பர். 
 தாழியை நிலத்திற்குள் புதைத்து மூடியதற்குப் பின்பாக மண்குவியலுக்குப் பதிலாகச் சல்லிக்கற்களைக் குவித்து வைப்பர்.  இதனைக் கற்குவைப் புதைமேடு என்பர்.
  இவையில்லாமல், ஒரு தாழியையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தாழிகளையோ நிலத்துக்கடியில் புதைத்துவிட்டு அதனைச் சுற்றிலும் வட்டமாகக் கற்களைக் கொண்டு நடுவர்.  இதனைக் கல்வட்டங்கள் அல்லது கல்திட்டைப் புதைமேடு என்பர்.  இவ்வாறான கல்வட்டங்கள் நடுவே அடையாளக் கல் வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. அடையாளக் கல் இல்லாமலும் கல்வட்டப் புதைமேடுகள் அமைக்கப்படுவதுண்டு. 
இறந்தோரைப் புதைப்பது தமிழர் மரபு. அவ்வாறு தமிழரைப் புதைத்த இடங்கள் பல அகழாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஈமக்குழிகள் என்பர். இவற்றைக் கற்பாறைகளைக்கொண்டு மூடிவைத்துப் பாதுகாக்கும் வழக்கம் இருந்துள்ளது. மூடப்படும் கல்லின் அளவு, மூடப்பட்ட விதம் ஆகியவற்றைக்கொண்டு இவற்றைக் கல்படை, கல் அறை, கல்குவை, கற்கிடை, கல்வட்டம், கல்திட்டை என்ற பெயர்களால் அழைக்கின்றனர். ஒருவகையில் இறந்தோர் உடலைப் பதுக்கி, மறைத்து, புதைத்து வைப்பதால் இவற்றைப் பதுக்கைகள் என்று பொதுப்பெயரால் சுட்டினர். கல்லால் பதுக்கப்பட்டதால் கல்பதுக்கை, கற்பதுக்கை என்றனர்.
பதுக்கைகள் பெருகிய பின்னர் அல்லது அவற்றில் புதர் மண்டுவதால் அவை இருந்த இடம் பற்றிய தெளிவுக்காக, அடையாளத்துக்காகப் புதிய பதுக்கைகளைத் தோற்றுவிக்கும்போது அவற்றின் அருகில் உயர்ந்த செங்குத்தான கல்லினை நிறுத்தினர். இதனை நெடுகல் என்றனர். ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ நெடுகல் நிறுத்தும் வழக்கம் இருந்துள்ளது” எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  
இறந்தவர்களின் உடல்களைத் தாழிக்குள் வைத்துப் புதைத்த பின்பு மண்குவை அல்லது கற்குவை அல்லது கல் வட்டங்கள் அமைக்கும் பண்பாட்டு வழக்கம் கி.மு.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.1 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களிடம் காணப்பட்டதாக வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.  இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், வரலாற்றில் பெருங்கற்காலம் எனப்பெறும் காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு வழக்கமாகக் கல்வட்டப் புதைமேடுகள் அமைந்திருக்கின்றன.  இத்தகையப் புதைமேடுகளை வரலாற்றுக்கு முற்பட்ட நிலப்பகுதி (pre Historical Site) எனக் குறிப்பிடுகிறது இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை. அவ்வகையில், பெருங்கற்கால மக்களின் வாழ்வியல் வழக்காறுகளையும் பண்பாட்டையும் வரையறுப்பதற்கான தொல்லியல் சான்றுகளைக் கொண்ட வரலாற்றுக்கு முற்பட்ட நிலப்பகுதியாக இங்கு கண்டறியப்பட்டுள்ள புதைமேடு அமைந்திருக்கிறது.
சிறியதும் பெரியதுமான மண்குவை அல்லது கற்குவை அல்லது கல்வட்டங்களைக் கொண்ட புதைமேடுகள் பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டிய நிலப்பரப்பிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஆற்றுப் படுகைகள், கண்மாய் ஓரங்கள், ஓடை மருங்குகள் என நீர் நிலைகளை ஒட்டியே தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன.  சில பல பகுதிகளில் தாழிகள் புதைக்கப்பட்ட இடங்களைச் சுற்றிலும் கல் குவியல் அல்லது மண் குவியல் அல்லது கல் வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது சின்னஉடைப்பு அருகே கண்டறியப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள், கல் வட்டங்கள் மற்றும் கற்குவியல் நிறைந்த புதைமேடானது, நீர் நிலைகளை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கிறது.  சின்னஉடைப்பு கண்மாயின் மறுகால் வடிநிலப்பகுதி, அய்த்திரும்புக் கண்மாய் ஓடையின் வடிநிலப் பகுதி, கூடல் செங்குளம் கண்மாயின் மேட்டுப் பகுதி என மூன்று நீர்நிலைகள் சூழ்ந்த ஒரு மேட்டுப் பகுதியில்தான் இத்தகையப் புதைமேடு அமைந்திருக்கிறது.  குறிப்பாக, இந்நிலப்பகுதி முழுவதும் செம்மண் நிரம்பியதாய்க் காணப்படுகின்றது.  
இப்புதைமேடானது, வைகையாற்றுப் படுகையிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இவ்விடத்திலிருந்து 10 கி.மீ தொலைவில்தான்  திருப்பரங்குன்றம் மலையும், மீனாட்சி கோயிலும் அமைந்திருக்கின்றன. இவ்விடத்தின் அருகாமைத் தொலைவில்தான் பழங்கால நகரம் புதையுண்டிருக்கும் கீழடி என்னும் சிற்றூர் அமைந்திருக்கிறது.
வரலாற்றுப் பழமையும், பண்பாட்டு வளமையும், கலை இலக்கியச் செழுமையும், நாகரிக வாழ்வியலையும் கொண்ட பேரூராய் மதுரை திகழ்ந்து வருகின்றது.  தொன்மையின் உறைவிடமாகத் திகழும் மதுரையின் வரலாற்றை வலுப்படுத்தும் சான்றுகளுள் ஒன்றாக இங்கு கண்டறியப்பட்டுள்ள புதைமேடு திகழவிருக்கிறது. 
மதுரையின் பல பகுதிகளில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  தே.கல்லுப்பட்டி(1976-77), அனுப்பானடி(1887), மாடக்குளம் கோவலன் பொட்டல்(1980), துவரைமான்(1887), பறவை(1887) ஆகிய ஊர்களில் தொல்லியல் அகழாய்வுகள் பல்வேறு காலங்களில் பல அறிஞர்களின் முயற்சியால் நடைபெற்றுள்ளன.இப்போது கீழடி(2015-16)யிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இவ்விடங்களில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருட்கள் யாவும் பெருங்கற்கால மக்களின் வாழ்வியல் நிலைமைகளை எடுத்துரைக்கும் சான்றுகளாய் அமைந்துள்ளன.  அந்தவகையில், தற்போது இங்கு கண்டறியப்பட்டுள்ள ஈமக்காடு எனும் புதைமேடும், இப்பகுதியில் சிதைந்த நிலையில் வெளித்தெரியும் முதுமக்கள் தாழிகளும் பெருங்கற்கால வரலாற்றை அறிய உதவும் தரவுகளைப் புதைத்து வைத்திருக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளன.  ஏற்கனவே அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலப்பகுதிகளும், தற்போது கண்டறியப்பட்ட புதைமேட்டு நிலப்பகுதிக்கு அண்மைத் தொலைவுகளில்தான் அமைந்திருக்கின்றன.  ஆகையால், அந்நிலப்பகுதி வரலாற்றோடு இந்நிலப்பகுதியின் வரலாறும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.  
சின்னஉடைப்பில் கண்டறியப்பட்டுள்ள ஈமக்காட்டில் அகழாய்வுகள் மேற்கொள்வதின் மூலமாகத்தான் இதன் வரலாற்றைத் திட்டவட்டமாக வரையறுக்க இயலும்.  எனினும், கல்வட்டங்கள் கொண்ட ஈமக்காடானது பெருங்கற்காலத்தைச் சார்ந்தது என உறுதியாகக் கூற இயலும். ஏனென்றால், கல்வட்டப் புதைமேடு அமைக்கும் வழக்கம் பெருங்கற்கால வகையைச் சார்ந்தது எனத் தமிழ்நாட்டின் கல்வட்டப் புதைமேட்டு அகழாய்வுகள் தெரிவிக்கின்றன.
   சின்னஉடைப்பில் கண்டறியப்பட்டுள்ள ஈமக்காடு மற்றும் தாழிகள் குறித்து இப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இந்நிலப் பகுதியைத் ‘தால வைத்தான் காடு’ எனவும், ‘தாட வைத்தான் காடு’ எனவும் குறிப்பிடுகின்றனர்.  இவை ‘தாழி வைத்தான் காடு’ அல்லது ‘தடம் வைத்தான் காடு’ அல்லது ‘தடயம் வைத்தான் காடு’ என்பதன் திரிபாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.  இம்மேட்டுப் பகுதிக்கு ஆடுமாடுகள் மேய்க்கச் செல்லும்போது ஆந்தைகள் மட்டுமே கள்ளி மரங்களில் அலறிக் கொண்டிருக்கும் எனவும், இந்தப் பகுதிக்கு ஆட்கள் வருவதற்கே அஞ்சுவர் எனவும் குறிப்பிடுகின்றனர்.  சின்ன உடைப்பில் வாழும் சில முதியவர்கள் ‘இந்தப் பகுதியில் பெரிய குளுமைகளில் (தாழி போன்றே இருக்கும் தானியக் குதிர்) உணவுத் தானியங்கள் இருந்ததாகவும், அவற்றை வீட்டிற்கு அள்ளி வந்ததாகவும், நிறைய ஓட்டைக் காசுகளைப் பொறுக்கி வந்ததாகவும் இளவயது அனுபவங்களை வெளிப்படுத்தினர்.

   ஒன்றிரண்டு கல்வட்டங்களைக் கொண்டிருக்கும் ஈமக்காட்டு அகழாய்வுகளின் மூலமே ஏகப்பட்ட தொல்லியல் பொருட்களை வெளிக்கொணர்ந்துள்ளனர் ஆய்வாளர்கள்.   தற்போது இங்கு கண்டறியப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள் புதைந்துள்ள ஈமக் காடானது 50க்கும் மேற்பட்ட கல்வட்டங்களைக் கொண்ட பெரும்பரப்பாய் அமைந்திருக்கிறது.  கிட்டத்தட்ட 40 முதல் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும்  இப்புதைமேடானது, அரசு புறம்போக்கு நிலத்திலும், தனியார் நிலத்திலும் பரவியிருக்கிறது.  இப்புதைமேட்டின் ஓரத்தில்தான் மதுரை-கன்னியாகுமரி நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது.  இந்நிலப்பகுதியின் பெரும்பாலான பரப்பும் இதனைச் சுற்றியுள்ள மற்ற பெரும்பரப்பும் மனையிடப் பகுதிகளாக ஆக்கப்பட்டுள்ளன.  பல கல்வட்டங்களும் தடயங்களும் அகற்றப்பட்டுள்ளன. 
     இந்நிலப்பகுதியின் தொல்லியல் தடயங்கள் குறித்து அயன்பாப்பாகுடி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், மதுரை தெற்கு வட்டாட்சியர் ஆகியோரிடம் முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்களும் இந்நிலப்பகுதிக்கு வருகை தந்து கள நிலைமைகளைப் பார்வையிட்டுச் சென்றனர்.ஆயினும், இந்நிலப் பகுதியைப் பாதுகாப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகள் இதுநாள்வரையிலும் வெளிப்படவில்லை.
  புதர்களும் இண்ட முள்மரங்களும் கள்ளிகளும் சூழ்ந்த இவ் ஈமக்காடு, பெருங்கற்காலத் தொன்மையின் அடையாளப் பதிவாய் அமைந்திருக்கிறது.  மழைநீர் அரிப்பால் பத்துக்கும் மேற்பட்ட தாழிகளின் மேற்பகுதி வாய்ப்பகுதிகள் வெளித்தெரிகின்றன; சிதைவுகளுக்கும் உள்ளாகி வருகின்றன. இந்நிலப்பகுதி மனையிடப்பகுதிகளாக மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதால் பெரும்பாலான கல்வட்டத் தடயங்களும் முதுமக்கள் தாழிகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன.வரலாற்றுத் தடயங்கள் கண்முன்னே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற தொல்லியல் தடயங்கள்தான் வரலாற்று வளமையைப் பறைசாற்றக் கூடியவை  ஆகையால், வரலாற்றுத் தொல்லியல் நிலப்பகுதியாய் இதனைக் காக்க வேண்டியதும், இங்கு அகழாய்வு மேற்கொண்டு தொல்லியல் சான்றுகளை வெளிக் கொணர வேண்டியதும் அவசியமாகும். 
 நடுவண் அரசின் தொல்லியல்துறையும், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையும் இந்நிலப் பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என, மக்கள்தமிழ் ஆய்வரண் சார்பாக நாளிதழ்ச் செய்தியறிக்கை வாயிலாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
        கள மேற்பரப்பாய்வின் வழியாகக் கண்டறியப்பட்டுள்ள இப்புதைகாடும், இதில் காணலாகும் கல்வட்டங்களும், முதுமக்கள் தாழிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய பண்பாட்டு அடையாளப் பதிவுகளாகும். இவைபோன்ற பண்பாட்டு அடையாளப் பதிவுகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்தியுள்ளன.
       வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை
       திருந்துசிறை வளைவாய்ப் பருந்து இருந்து உயவும்
       உன்ன மரத்து துன்அருங் கவலை ( புறநானூறு 3 )  
இரும்பிடத்தலையார் இயற்றிய மேற்குறித்த பாடலில், போர்க்களத்தில் பலியான வீரர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் கற்குவியல்களால் அமைக்கப்பட்ட பதுக்கை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அதேபோல,
வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல்இடு பதுக்கை (அகநானூறு109 )
என,கடுந்தொடைக்காவினார் பாடிய பாடலிலும் பதுக்கை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. 
        இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரந் தேய்த்தார் பதுக்கை நினைத்த  (கலித்தொகை 12)
என, இடுமுற்களால் வேலிபோலச் சூழப்பட்டிருக்கும் ‘பதுக்கை’ பற்றிய குறிப்பைப் புலப்படுத்துகிறார்  பெருங்கடுங்கோ.

   சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் குறித்து ஐயூர் முடவனார் பாடிய புறப்பாடலில் தாழியைப் பற்றிய விரிவான பதிவுகள் காணப்படுகின்றன. தாழிகள் செய்யும் குயவரைப் பார்த்து
       கலம்செய் கோவே கலம்செய் கோவே
இருள்திணிந்தன்ன குரூஉத்திரள் பரூஉப் புகை
அகல் இருவிசும்பின் ஊன்றும் சூளை
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே
       ..........................
       கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
       தேவர் உலகம் எய்தினன் ஆதலின்,
அன்னோன் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின், எனையதூஉம் 
இருநிலம் திகிரியாப் பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே. (புறநானூறு 228)
என்கிறார் அப்புலவர். இப்பாடலில், கிள்ளிவளவன் இறந்த பிறகு அவ்வுடலைத் தாழியில் கவித்துப் புதைத்த பண்பாட்டு மரபைப் புலவர் பதிவு செய்கிறார்.   
       அக்காலத்தே இறந்த மக்களை நிலத்தில் புதைக்குமிடத்து அவர்மேல் பெரிய தாழியைக் கவித்துப் புதைப்பது மரபு.  கிள்ளிவளவனையும் தாழியில் கவித்து வைத்தனர். புலவரின் மனக் கண்ணில் கிள்ளிவளவனுடைய புகழைத் தாங்கிய உடலானது, நிலவுலகு முழுதும் பரந்து வானளாவ உயர்ந்து நிற்பதாய்த் தோன்றிற்று. அதற்கேற்ற தாழி வேண்டின் நிலவுலகை ஆழியாகவும் மேருமலையை மண் திரளாகவும் கொண்டு பெரியதொரு தாழி செய்ய வேண்டும் என எண்ணினார்.  குயவரை நோக்கி இவ்வாறு ஒரு தாழி செய்ய இயலுமோ என்பார்போல் இந்தப்பாட்டைப் பாடியுள்ளார். இப்பாடல், ஓர் அரசனைக் குறித்த விவரிப்பாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
        அரசர்கள் இறந்தால் தாழியைக் கவித்துப் புதைத்த அதேவேளையில், போர்க்களத்தில் இறந்த வீரர்களையும் தாழி கவித்தே புதைத்திருக்கிற வழக்கத்தைத் தனிமகள் புலம்பிய முதுபாலை எனும் புலவர் பாடிய பாடலில் காணமுடிகிறது.
       கலம்செய் கோவே,  கலம்செய் கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய 
சிறுவெண் பல்லிபோலத் தன்னொடு 
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்பொழில் ஈமத்தாழி 
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே (புறநானூறு 256)
“தனிமகள் ஒருத்தி, தன் காதல் கொழுநனுடன் சுரத்திடை வந்துகொண்டிருக்கையில், கொழுநன் ஆண்டு உண்டாகிய போரின்கண் விழுப்புண்பட்டு உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான். அதனால் தனிமையுற்றுக் கொழு கொம்பிழந்த கொடிபோல் வருந்தும் அவள், கலம் செய்யும் ஊர்க்குயவனை நோக்கி “வேட்கோவே, சிறப்புண்டாகப் போரிடை மாண்டாரை ஈமத்தே தாழி கவித்து வைப்பது குறித்து வேண்டும் தாழியாகிய கலத்தைச் செய்பவனாதலின் நின்பால் வேண்டுவதொன்றுண்டு. இப்போது என் கொழுநனைக் கவித்தற்குத் தாழியொன்று வேண்டியுள்ளது. நின்பால் இருப்பது ஒருவரைக் கவித்தற்குரிய அகலமுடையது. சக்கரத்தினுள்ள ஆர்க்காலைப் பொருத்தியிருக்கும் பல்லியொன்று அவ்வார்க்காலை நீங்காமல் பற்றிக் கொண்டு வருவதுபோல யானும் என் கொழுநனைத் தொடர்ந்து வந்துள்ளேன்.  என்னையும் சேர்த்து ஒருங்கே கவிக்கக்கூடிய அகலமுடையதாக என்பால் அருள்கூர்ந்து செய்வாயாக” என வேண்டுவதாகத் தனிமகள் புலம்பிய முதுபாலை எனும் பெண் புலவரின் கூற்றால் அப்பாடல் அமைந்திருக்கிறது.
       பாடியவர் பெயர் குறிப்பிடாத நற்றிணைப் பாடலொன்று தாழி கவித்தல் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது.
மலைவிரி நிலவிற் பெயர்புபுறங் காண்டற்கு
மாயிருந் தாழி கவிப்பத்
தாவின்று கழிகஎற் கொள்ளாக் கூற்றே.   (நற்  271.)
“விரிந்த நிலவிலே சென்று பின்னே போய்க் காணும்படியாகவிட்ட இதற்கு முன்னாலேயே, என்னைப் பெரிய கரிய தாழியிலிட்டுக் கவிக்கும்படி என்னுயிரைக் கொண்டு போகாத கூற்றமானது,   தான் வலியிழந்து தன்னை அந்தத் தாழியிலிட்டுக் கவிக்கும்படி இறந்தொழியக் கடவதாக’’ என நற்றாய்ப் புலம்பலாக அமைந்திருக்கிறது அப்பாடல். 
       தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்ட தலைவியாகிய தன் மகளை நினைத்துப் புலம்பித் தவிக்கும் நற்றாய், தலைவியின் உடன்போக்கை மனதுக்குள் ஒருவாறு ஏற்றுக்கொண்டாலும் ஊராரின் பழிசொற்களுக்கு அஞ்சுகிறார்.  ஏதிலார் கூறும் பழிமொழி பொறாளாய் மயங்கி,  முன்னமே என்னுயிரைக் கொண்டு போகாது இப்பொழுது ஏதிலாளன் பின்சென்ற என்மகளைப் பின் சென்று தேடி அலர்கூறுதலை யான் கேட்டிருக்குமாறு என்னை இதுகாறும் விட்டொழிந்த கூற்றும் தானே கெடுவதாக என்று மருண்டு கூறுவதாக பாடப்பட்ட பாடலில் மேற்குறித்த குறிப்பு காணப்படுகின்றது. மனிதர்கள் மட்டுமல்ல, மரணம் என்னும் கூற்றம்கூட தாழி கவித்துப் புதைந்து போகவேண்டும் என்கிறது அப்பாடல். 
       ஆக, அரசர் இறந்தாலும் சரி, வீரர்கள் இறந்தாலும் சரி, குடிமக்களுள் பெண் இறந்தாலும் சரி, ஆண் இறந்தாலும் சரி, அக்காலத்திய மனிதர்கள் எவர் மாண்டாலும் தாழி கவித்தே புதைத்த பண்பாட்டு மரபு வழக்கம் நிலவியிருப்பது மேற்குறித்த மூன்று பாடல்களின் புலப்பாடுகளிலிருந்தும் தெரிய வருகின்றது.
       கொடைத் தன்மை குறித்தத் தமிழ் விவரிப்புகளில் கடையேழு வள்ளல்கள் பற்றிய பதிவுகளே முதன்மை பெறுகின்றன. அவர்களுள் பறம்பு மலைப் பாரி குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். பற்றிப் படர்வதற்கு எந்தப் பற்றுக்கோடும் இல்லாமல் ஏதுமின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தம் தேரை நிறுத்திச் சென்றார் பாரி.  கொடை மடத்திற்கு இவரும் ஒரு சான்று. இத்தகைய குறுநில மன்னனான பாரியைப் பேரரசப் படைகள் போர்க்களத்தில் கொன்றுவிடுகின்றன. பறம்புமலைச் சுற்றத்து உறவுகள், உடைமைகள், உற்றார், தாய் தந்தையர், அதிகாரம், படைகள்,எதிர்காலம் என அத்தனைகளையும் இழந்து தவித்து,
         அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
         எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
         இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
         வென்றுஎறி முரசின் வேந்தர் எம் 
         குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே (புறநானூறு 112 )
என,நாட்டையும் வீட்டையும் உறவுகளையும் பறிகொடுத்துத் துடித்தழுத அங்கவை சங்கவை என்போரின் தந்தையர்தான் பாரி. படர்வதற்குப் பற்றுக்கோடு இல்லாமல் தவித்த முல்லைக்குக்கூட இரக்கப்பட்டார் பாரி.  ஆனால், வாழ்வதற்கான எந்தப் பற்றுகோடும் இல்லாமல் தனியர்களாய் ஏதிலிகளாகப் பாரிமகளிர் நின்றபோது இரக்கப்பட எவருமில்லை. மாறாக, கபிலர் எனும் புலவர் மட்டும்தான் இரக்கப்பட்டுத் துணை நின்றார். 
      பாரியின் பிரிவால் துயர்கொண்ட கபிலர் வடக்கிலிருந்து உயிர்நீக்கத் துணிந்து அவ்வாறே உயிர் நீத்தார் என்றே கருதப்படுகிறது. பாரியை நினைந்து நினைந்து கபிலரின் நெஞ்சம் துயரத்தால் புண்பட்டிருக்கிறது.  ‘வடக்கிருத்தலை மேற்கொண்டு உண்ணா நோன்பால் உயிர் துறந்து மறுமை உலகில் அவனைக்கண்டு கூடிப் பண்டேபோல் நட்புக் கிழைமையால் நல்வாழ்வு வாழ்தல் வேண்டுமென அவர் எண்ணினார். தென்பெண்ணையின் நட்டாற்றுத் துருத்தியில் ஓரிடங்கண்டு வடக்கிருக்கலானார்.  இன்றும் கோவூர்க்கருகில் தென்பெண்ணையாற்றில் கபிலக்கல்லென ஒரு கல்லிருந்து, கபிலர் வடக்கிலிருந்த செய்தியை நினைவுறுத்திக் கொண்டு நிற்கிறது என்கிறார் ஔவை துரைசாமி. இதுபோன்ற கற்களை நெடுகற்கள் என இலக்கியங்கள் குறிக்கின்றன.
        ஏறுடை இனநிரை பெயர, பெயராது
        செறிசுரை வெள்வேல் மழவர் தாங்கிய
        தறுகணாளர் நல் இசை நிறுமார்
        பிடி மடிந்தன்ன குறும்பொறை மறுங்கின்
        நட்ட போலும் நடாஅ நெடுங்கல் ( அகநானூறு 269 )
மதுரை மருதன் இளநாகனாரின் மேற்காணும் பாடலில் நெடுகல்லைப் பற்றிய குறிப்பு காணப்படுவதைப் போலவே, எயினந்தை மகன் இளங்கீரனார் பாடலிலும் காணப்படுகின்றது.
       சிலை ஏறட்ட கணைவீழ் வம்பலர்
       உயர்பதுக்கு இவர்ந்த அதர்கொடி அதிரல்
       நெடுநிலை நடுகல் (அகநானூறு 289 )
என்கிறது அப்பாடல். தாழிகள் புதைக்கப்பட்ட நிலத்தில்-பதுக்கையைச் சுற்றியோ அல்லது அதன் நடுவிலோ நடப்படும் இந்நெடுகல் நடப்படும் வழக்கத்திலிருந்தே நடுகல் வழிபாட்டு மரபு கிளைத்திருக்க வேண்டும். 
        பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
        மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
        அணிமயில் பீலிசூட்டி பெயர் பொறித்து
        இனி நட்டனரே கல்லும் ( புறநானூறு 264 )
என்ற இளம்பொன் வாணிகனார் பாடல், பதுக்கையில் நடப்பட்ட நெடுகல்லை நடுகல்லாய் வழிபடும் மரபைச் சுட்டுகிறது. இக்காலத்திய வழக்கிலுள்ள குலசாமிகள் மற்றும் பட்டசாமிகள் வழிபாட்டு மரபுகளும், சுமைதாங்கிக் கற்களும் நடுகல் வழிபாடு எனும் பண்பாட்டு மரபின் நீட்சியாகத்தான் இருக்க  வேண்டும்.இறப்புக்குப் பின்பான மனித வாழ்வியலின் இருப்பை இவைபோன்ற தொல்லியல் தடயங்கள்தான் வரலாறாய் எடுத்துரைக்கின்றன.
      தாழிகள் பதைக்கப்பட்ட ஈமக்காடு அல்லது புதைமேட்டைப் ‘பெருங்காடு’ எனக்குறிக்கிறார் கூகைக் கோழியார் எனும் புலவர்,
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பலவேர்
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத் 
தாழிய பெருங்காடு எய்திய ஞான்றே ( புறநானூறு 364)
என்கிறார்.  அதாவது, முதுமரப் பொந்திலிருந்து கூகைக்கோழி கூவும் இடுகாட்டின் இயல்பை விவரிக்கிறது இப்பாடல்.அதேவேளையில், ஈமக்காட்டை முதுகாடு எனக் குறிக்கிறது தாயங்கண்ணனாரின் பாடல்.
        களரி பரந்து கள்ளி போகி
        பகலும்கூவும் கூகையொடு பிறழ்பல்
        ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
        அஞ்சுவந் தன்று இம்மஞ்சுபடு முதுகாடு (புறநானூறு 356 )
என்கிறது அப்பாடல். அதேபோல, இப்பெருங்காட்டைப் பற்றிய குறிப்பைப் பரணர் கூறும்போது
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே ( பதிற்றுப்பத்து 44)
என்கிறார். இறப்புக்குப் பின்புகூட மனிதர்கள் வாழ்கிறார்கள் எனும் நம்பிக்கையையே இவைபோன்ற புதைகாட்டுத் தடயங்கள் புலப்படுத்துகின்றன. 
    புதைகாட்டைப் பற்றிய மேற்குறித்த பாடல்கள் விவரிக்கும் அதே சூழல்தான், சின்ன உடைப்பு கண்மாய் அருகே அமைந்திருக்கும் புதைகாட்டிலும் இன்றும் நிலவிக்கொண்டிருக்கிறது. காலம் இதன் தடயங்களையும் வரலாற்றையும் வெளிக்கொணரும் எனும் நம்பிக்கை மட்டும்தான் இப்போதைக்கு இருக்கின்றது.

கட்டுரையாக்கத்திற்குத் துணை நின்றவை:

1. புறநானூறு மூலமும் உரையும், ஔவை சு.துரைசாமி, கழக வெளியீடு, சென்னை, மறுபதிப்பு,1962.
2. பதிற்றுப்பத்து மூலமும் உரையும், ஔவை சு.துரைசாமி, கழக வெளியீடு, சென்னை, இரண்டாம் பதிப்பு,1955.
3. நற்றிணை நானூறு மூலமும் உரையும், பின்னத்தூர் அ.நாராயணசாமி, கழக வெளியீடு, சென்னை, முதல்பதிப்பு,1952.
4. கலித்தொகை மூலமும் உரையும்,  நச்சினார்க்கினியர், கழக வெளியீடு,   சென்னை, மூன்றாம் பஆதிப்பு,1949.
5.  அகநானூறு மூலம், மர்ரே அண்டு கம்பெனி, சென்னை, முதல் பதிப்பு,1958.
6.  திரு.தங்கதுரை (காப்பாட்சியர், தஞ்சை மாவட்ட   அருங்காட்சியகம்)  அவர்களின் நேர்முகத் தரவுகள்.
7.  வாழ்வியல் களஞ்சியம், தொகுதி   , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு,
8.   கள ஆய்வில் வாய்மொழித் தரவுகள் மற்றும் உதவி: திருவாளர்கள் 
   நா.பாலன்,                                          சு.மகாலிங்கம், கூ.சின்னச்சாமி, நா.புசுபம், பெ.மூக்குச்சாமி,                    மு.பாலசுப்பிரமணியன் - சின்ன உடைப்பு, மதுரை.

நன்றி 
தினமலர் நாளிதழ்
தி இந்து தமிழ் நாளிதழ்