வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

திருக்குறளை ஆரியத்தின் குரலாகக் கட்டமைக்கும் பெரியாரியவாதிகளின் இப்போதையக் குரல் ஆரியத்திற்குத் துணை செய்யும் குரலே: மகாராசன்


திருக்குறளை ஆரியத்தின் குரலாகச் சுட்டும் காட்டாறு பதிவு பின்வருமாறு:

//..தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாயக் கேடு நீக்கலுக்கும் அய்ந்து பேர்கள் எதிரிகளாவார்கள்.

1.வள்ளுவன், 2. தொல்காப்பியன், 3. கம்பன், 4. இளங்கோவன், 5. சேக்கிழார். இந்த அய்ந்து பேர்களுக்கும் பகுத்தறிவில்லை என்பதோடு இவர்கள் இனஉணர்ச்சி அற்ற இனவிரோதிகளாக ஆகி விட்டார்கள்.

...வள்ளுவன் அறிவைக் கொண்டு ஒரு நூல் (குறள்) எழுதினான் அதில் மூடநம்பிக்கை, பெண்ணடிமை, ஆரியம் ஆகியவை நல்லவண்ணம் புகுத்தப்பட்டிருக்கின்றன. குறளுக்கு மதிப்புரை கொடுத்தவர்களில் சிலர் “குறள் வேத, சாஸ்திரங்களின் சாரம்” என்று கூறியிருக்கிறார்கள். குறளை ஊன்றிப் பார்த்தால் அது உண்மை என்று புலப்படும்.

...தமிழனுக்கு வேண்டியது மானம், அறிவு, இனஉணர்ச்சி ஆகியவைகளேயாகும். இவற்றிற்கு மேற்சொன்ன திருவள்ளுவன், தொல்காப்பியன், கம்பன், இளங்கோவன், சேக்கிழார் ஆகிய அய்வரும் - இவர்களது நூல்களான குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய அய்ம்பெரும் இலக்கியங்களும் எந்த அளவுக்குப் பயன்படும் என்று சவால் விட்டுக் கேட்கிறேன்.
- தோழர் பெரியார், விடுதலை 90 வது பிறந்தநாள் மலர் .

குறளைத் தூக்கி எறிய வேண்டியது தான்!
...தமிழனின் வாழ்வு முறைக்குக் குறள்தான் என்று சொல்வார்கள். நாம் காட்டு மனிதனாக இருந்த வரை குறள் சரி. நாட்டு மனிதனான பின், பெண்களுக்குத் தான் அதில் கற்பு நீதி சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஆண்கள் கற்பு நீதி பற்றி அதில் ஒன்றுமில்லை. குறளைத் தூக்கியெறிய வேண்டியது தான். - தோழர் பெரியார் - விடுதலை, 15.06.1968

வள்ளுவன் படத்தைத் தூக்கி எறியுங்கள்!
...நம் அறிஞர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்குக் குறளைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனைவிடக் கொஞ்சம் பரவாயில்லை என்பதுதானே யொழிய, அவன் தான் எல்லாவற்றிற்கும் என்பது பொருந்தாதது. நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதி தாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். பாரதி தாசனைப் போல சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்ல நம் புலவர்கள் முன்வர வேண்டும். - தோழர் பெரியார் - விடுதலை - 06.08.1968

...நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர்கூட அதை (குறள்) ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்ன கேட்டார். குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக் கிட்டாரு. இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தையது குறள். அதை அப்படியே இப்பவும் ஏத்துக்கணும்னா?
- தோழர் பெரியார், கலைமகள் ஏடு, பிப்ரவரி 1973 //.

இப்பதிவைக் குறித்த எம் கண்ணோட்டம் வருமாறு:

ஆரிய மரபுகள் அரசியல் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், குறளைக் குறித்த பெரியாரியத்தின் குரலாக இப்போது உயர்த்திப் பிடிப்பதன் நோக்கம் என்ன? இந்தக் குரல் யாருக்குச் சேவகம் செய்யப் போகிறது?

தமிழரின் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் மரபையும் ஆரியத்திற்கு எதிராகக் கட்டமைக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருந்து கொண்டிருக்கும் சூழலில், தமிழ் மரபுகளில் காணலாகும் ஆரியத்திற்கு எதிரான குரலையும் கலகத் தன்மைகளையும் முன்னெடுப்பதை விடுத்துவிட்டு, ஆரியத்திற்கு எதிராக நிற்கும் தமிழர் மரபுகளையெல்லாம் ஆரியத்தின் பக்கமே தள்ளி விடுவது என்பது, தமிழர் மரபுகளைத் தன்வயப்படுத்தத் துடித்தும் காத்தும் கொண்டிருக்கிற ஆரியத்திற்கு வலு சேர்க்கும் நோக்கத்தையே உள்ளீடாகக் கொண்டிருப்பதாகும்.

தமிழர் வரலாறு, பண்பாடு, அறம், அரசியல், அறிவு, கலை, இலக்கிய மரபுகளைக் குறித்த வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு அணுகுவதே பகுத்தறிவு ஆய்வு முறையியல் ஆகும்.

ஆரியத்திற்கான எதிர்மரபையே குறள் கட்டமைத்திருக்கிறது. திருக்குறளை ஆரியத்தின் பக்கம் தள்ளி விடுகிற சூழ்ச்சி இது. வைதீகத்திற்கு எதிராக இருந்த நாட்டுப்புற மரபுகளையெல்லாம் ஆரியத்தின் பக்கம் தள்ளி விட்டது போல, குறளையும் ஆரியம் தன்வயப்படுத்த உதவும் கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் இது.

குறளை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. விமர்சனத்தோடு நம் வசப்படுத்தி வைக்க வேண்டியது தமிழர் கடமை.

பெரியாருமே 'நான் சொன்னதையே இன்னும் 50 வருடம் கழித்தும் நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் நீங்கள் இன்னும் முன்னேறவில்லை என்று பொருள். எனது கருத்தையே தூக்கிச் சுமந்து கொண்டிருக்காதீர்கள். தேவையானதை ஏற்று தேவையற்றதை ஒதுக்கிவிட்டுச் செல்லுங்கள்' என்றார்.

"நான் சாதாரணமானவன்; என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லவில்லை; ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்; மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என் மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத் தன்மை பொருங்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால், மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.
- "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்; நான் சொல்லுவது வேதவாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகி விடுவீர்கள் - "
என்று - வேதம், சாத்திரம், புராணம் கூறுவது போலக் கூறி, நான் உங்களை அடக்கு முறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்து வராவிட்டால் தள்ளி விடுங்கள்."
"ஒருவனுடைய எங்தக் கருத்தையும் மறுப்பதற்கு, யாருக்கும் உரிமை உண்டு; ஆனால், அதனை வெளியிடக் கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது." பெரியார் கூறியிருக்கும் இந்தக் கருத்துகளைப் பெரியாரியவாதிகளாகக் கருதுபவர்கள் கவனிக்க மறந்து போவது மட்டுமல்ல; கவனிக்கவும் மறுக்கிறார்கள்.

குறளைக் குறித்துப் பெரியார் அன்று சொன்னதையே இப்போதும் சொல்ல வேண்டியதில்லை. அவரது கருத்துமேகூட மீள் வாசிப்புக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. வள்ளுவமும் விதிவிலக்கல்ல.

குறளை விமர்சியுங்கள். பெரியாரும் விமர்சித்திருக்கிறார். விமர்சனம் எனும் பேரில் குறளை ஆரியத்தின் பக்கம் தள்ளுவதுதான் ஆரியத்திற்கு மறைமுகமாக உதவும் போக்காகப் படுகிறது.

வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் தமிழ் மரபுகளை அணுகுங்கள் என்பதே எம் வேண்டுகோள். கொச்சைப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆய்வை முன்வைப்பது பகுத்தறிவு அல்ல. நட்பு முரண்களைப் பகை முரணாகக் காட்டுவதும் அறமும் அல்ல.

திருக்குறளை ஆரியத்தின் குரலாகக் கட்டமைக்கும் பெரியாரியவாதிகளின் இப்போதைய குரல் அறமற்றது மட்டுமல்ல; இப்போதைய அவசியமும் அற்றது.

3 கருத்துகள்:

  1. தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர் என பதிவிடுவது சரியாய் இருக்கும். எல்லா பெரியாரியல்வாதிகளும் அப்படி அல்ல.
    விமர்சனம் என்பது சில குறள்களின்மீது முன் வைக்கலாம். அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன் இதை எதிர்பார்ப்பதும் தவறே.
    குறளை ஆரியக்குரல் என எதிர்ப்பது தவறான நிலை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தோழர். காட்டாறு குழுவினர் தம்மைப் பெரியாரியவாதிகளாகவே சுட்டுகின்றனர். இந்தப் பதிவு காட்டாறு குழுவினரின் பதிவுக்கான பதில் மட்டுமே. பெரியாரியத்தை விமர்சிப்பதல்ல எம் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வலைப்பதிவு தலைப்பு இதில் பெரியாயரியல்வாதிகள் அனைவரையும் ஒரே பட்டியலில் சேர்ப்பது போல் பொருள்படுகிறது.
      பெரியாரை முழுமையாக அல்லாமல் சுயமரியாதை,சாதிஒழிப்பு, இட ஒதுக்கீடு என ஒவ்வொன்றுக்காகவும் அவரை ஏற்று மதிக்கும் தமிழர்களைப் போல திருக்குறளை விமர்சனப் பார்வையுடன் அணுகுவதே பகுத்தறிவு.

      நீக்கு