வெள்ளி, 31 டிசம்பர், 2021

வேளாண் மரபில் பவுத்த அடையாளம் : மகாராசன்

இந்திர அடையாளத்தைப் பவுத்த சமயத்தோடு அடையாளப்படுத்துகிறார் அயோத்திதாசர். அதாவது, மக்களுள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறிகளை அவித்து, காமனை வென்றார்கள் என்னும் பெண்ணிச்சையை ஒழித்தவர்களை ஐந்திரர் என்றும், இந்திரர் என்றும் அழைக்கப் பெற்றார்கள். மக்களுள் ஆதியாய் இந்திரியங்களை வென்றவரும், ஐந்தவித்த வல்லபத்தால் ஆதி இந்திரர் என்னும் பெயர் பெற்று, அவர் ஞானவருள் பெற்ற தேவர்களால் வானவர் கோமனாகக் கொண்டாடப்பெற்றவரும் புத்தபிரானேயாம் எனக்கூறும் அயோத்திதாசர், இந்திரரைப் புத்தராக அடையாளப்படுத்துகிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, சூளாமணி, வீரசோழியம், பிங்கல நிகண்டு போன்றவற்றிலிருந்தும் இதற்குச்  சான்றுகள் காட்டுகிறார். 

மேலும், இந்திரம் என்னும் மொழி ஐந்திரம் என்னும் மொழியின் திரிபாம். அதாவது, மகத நாட்டுச் சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்திச் சக்கிரவர்த்தியவர்கள் கல்லாலடியில் வீற்று, ஐம்பொறிகளை வென்ற திரத்தால் ஐந்திரர் என்று, ஐ - இ ஆகத் திரிந்து இந்திரர் என வழங்கி, அவரது சங்கத்தோர் நிலைத்த இடங்களுக்கு இந்திர வியாரமென்றும், அவரது உற்சாகம் கொண்டாடும் காலத்திற்கு இந்திர விழா நாள், இந்திர விழாக் கோல் என்றும், இந்திர விழாக் கொண்டாடும் காலங்களில் எல்லாம் மழை பெய்வதின் அனுபவம் கண்டு, மழைக்குமுன் காட்சியாகும் வான வில்லிற்கு இந்திரத் தனுசு என்றும், அவரை எக்காலும் சிந்தித்துக் கொண்டாடும் கூட்டத்தோருக்கு இந்தியர்களென்றும், இந்தியர்கள் வாசம் செய்யும் தேசத்திற்கு இந்தியமென்றும், இந்திரமென்றும் வழங்கி வந்தார்கள்… எனத் தொடங்கும் இந்திர தேச சரித்திரத்தில், இந்திரர்களின் பூர்வீக வரலாற்றையும், வேடதாரிப் பிராமணர்களால் இந்திரர்கள் வீழ்த்தப்பட்டதன் ஆதி வரலாற்றையும் மிக விரிவாக எடுத்துரைத்துள்ளார் அயோத்திதாசர்.

மேலும், வேளாண் வளமைச் சடங்குகளுள் ஒன்றான பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கை, பவுத்த சமய மரபைப் பின்பற்றி ஒழுகிய வேளாளர்கள் செய்த வேளாண் சடங்குகளாகக் கூறுகிறார் அயோத்திதாசர். இதுகுறித்து அவர் எடுத்துரைக்கும்போது, பௌத்தருள் வேளாளத் தொழில் செய்வோர் யாவரும், சங்கறர் அந்திய புண்ணிய காலமாகும் மார்கழி மாதக் கடையிலும் தை மாதம் முதலிலும், தங்கள் தங்கள் வயல்களில் விளைந்த தானியங்களைப் பொங்கலிட்டு, இந்திரராம் புத்த பிரானைப் பூசிப்பதுடன், மாடுகளைச் சுத்தம் செய்து அவைகளையும் கொண்டாடி, மறுநாள் வேளாளத் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவரைக் காணும் பொங்கல் என வழங்கி சந்தித்துக் கொள்வார்கள். 

காணும் பொங்கலுக்கு மறுநாள் அதிகாலையில் எழுந்து, பொன் தகடு வேய்ந்த ஏரினைக் கொண்டுபோய், வெண்ணெருதுகள் பூட்டி, உத்திர முகம் என்னும் வடக்குத் திக்கு நோக்கி, சரணாகதி என்னும் இரு கரத்தைச் சிரமேற் கூப்பி, உத்தரகுருவாம் புத்தபிரானைச் சிந்திப்பது இயல்பாம். 

இத்தகைய சிந்தனைக்கும் மூல காரணர் சமண முனிவர்களே ஆகும். அறப் பள்ளிகளில் உள்ள ஞான சாதனர்கள், புத்தபிரான் அரசமரத்தடியில் வீற்று, உத்திரமுகம் நோக்கி சித்த சுத்தி செய்து, இந்திரியத்தை வென்று பற்றற்ற நிருவாணம் பெற்றது போல், தாங்களும் பெற்று நித்தியானந்தம் அடைவதற்கு, உத்திர முகம் நோக்கி சாதனை புரிந்து வருவதை நாளுக்கு நாள் கண்டு வரும் வேளாளத் தொழிலாளர்களும் தங்களது வேளாண் மெய் விருத்தி பெற வேண்டி, பொன்னேர் பூட்டி போதி நாதனைச் சிந்தித்து வந்தார்கள். 

அத்தகையச் சிந்தனையாலும் நீதிநெறி ஒழுக்கத்தாலும் மாதம் மும்மாரி பெய்யவும், வரப்புயரவும், நீர் நிரம்பவும், பயிறு பெருகவும், குடிகள் சுகிக்கவும், கோன் உயரவுமாயச் செயலுற்றிருந்தது என்கிறார். 

தமிழரின் இந்திர வழிபாடு குறித்த அயோத்திதாசரின் கருத்தொற்றி விவரிக்கும் மயிலை சீனி.வேங்கடசாமி, தமிழ் மரபில் அடையாளப்படும் இந்திரனை, ஆரிய மரபிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதோடு, வேந்தன் வழிபாட்டுத் தொடர்ச்சிதான் இந்திர வழிபாடு எனத் தெளிவுபடுத்துகிறார். 

அதாவது, தமிழர் ஏற்றுக்கொண்டு வழிபட்ட இந்திரன் பௌத்த இந்திரனாகத் தெரிகிறான். கடைச்சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் நடைபெற்ற இந்திர விழாவிலே, இந்திரன் யாகம் செய்து பூசிக்கப்படவில்லை. திருவிழா செய்து பூசிக்கப்பட்டான். அந்த இந்திர விழாவில் பெளத்தருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்திர விழாவை, ஒரு ஆண்டு சோழ அரசன் நிறுத்தினபடியினாலே, பௌத்தத தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் சினம் கொண்டு நகரத்தை அழித்தது என்று மணிமேகலை என்னும் பெளத்த நூல் கூறுகிறது. எனவே, தமிழ்நாட்டில் தமிழர் பிற்காலத்தில் வழிபட்ட இந்திரன், வைதீக மதத்து ஆரிய இந்திரன் அல்லன் என்பது தெரிகிறது. 

பௌத்த மதத்தில் இந்திரனுக்கு முக்கிய இடமுண்டு. இந்திரன் பௌத்த மதத்தையும் பௌத்த தர்மத்தையும் உலகத்தில் நிலை நிறுத்துகிறான் என்பது பௌத்த கொள்கை. மணிமேகலை முதலிய சிறுதெய்வங்களை உலகத்திலே ஒவ்வொரு இடத்தில் அமர்த்தி, பௌத்த மதத்தை அவன் காத்து வருகிறான் என்று பௌத்த மத நூல்கள் கூறுகின்றன. பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று ஆரிய மதங்களுக்கும் உடன்பாடாகிய இந்திரன், பிற்காலத்தில் தமிழ்நாட்டில் வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டு வழிபடப்பட்டான் என்பதும், ஆனால் அவன் பௌத்த மத இந்திரனாகக் கருதப்பட்ட போதிலும், ஆரியக் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர், தமிழர் வணங்கிய மருதநிலக் கடவுள் வேந்தன் என்று பெயர் பெற்றிருந்தது என்பது தொல்காப்பியத்தில் இருந்து தெரிகிறது என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.

அவ்வகையில், வேளாண் மரபின் பண்பாட்டு நீட்சியாக - வழிபடு தெய்வமாகக் குறிக்கப்பட்டு வருகிற இந்திர அடையாளம், பிற்காலத்தியச் சமயங்களான ஆசீவகத்தோடும் பவுத்தத்தோடும் தொடர்புடையதாய் இருந்திருக்கிறது. தமிழ் நாட்டிலுள்ள பெரும்பாலான கோயில்கள், குறிப்பாக, பெருஞ்சமயம் என்பதாகக் கருதப்படும் கோயில்கள் யாவும், இந்திர அடையாளத்தை உள்ளீடாகக் கொண்ட ஆசீவக அல்லது பவுத்த சமயக் கோயில்களாக இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற்காலத்திய ஆரிய வைதீகச் சமய மரபுகளின் நுழைவாலும் மேலாதிக்கத்தாலும் தமிழரின் வழிபாட்டு மரபுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வகையில், வேளாண்மைத் தொழில் மரபிலும், ஆசீவக மற்றும் பவுத்த சமய மரபிலும் அடையாளப்பட்டிருந்த இந்திர வழிபாட்டு அடையாள மரபு சிதைக்கப்பட்டிருக்கிறது; புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 

மகாராசன் எழுதிய 'வேளாண் மரபின் தமிழ் அடையாளம்' எனும் நூலில் இருந்து... 

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,
மகாராசன்,
முதல் பதிப்பு, அக்டோபர் 2021,
பக்கங்கள் 224,
விலை: உரூ 250/-
10% கழிவு விலை: உரூ 225/-
அஞ்சல் செலவு: பதிப்பகமே ஏற்கும். 
தொடர்புக்கு
யாப்பு வெளியீடு : 
9080514506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக