திங்கள், 14 பிப்ரவரி, 2022

உழுகுடிப் பண்பாட்டரசியலின் புதிய ஆவணம் : வேளாண் மரபின் தமிழ் அடையாளம் - மீனாசுந்தர்

 


மானிடப் பண்பாட்டியல் கூறுகள் எண்ணிறந்தவை. அவற்றை மேலும் செழுமைப்படுத்தவும் நிகழ்கால வாழ்வியலில் புதிய முகங்களுடன் பரிமாணம் பெற்றுள்ள அதன் பல்வேறு உட்கூறுகளைக் கண்டறிந்து அடையாளப்படுத்தவும்  சமூகவியலாளர்கள் பண்பாட்டியல் ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வேளாண் வாழ்வியல். என்ற பண்பாட்டியலாய்வு அண்மைக் காலமாக அசுர வேகமெடுத்துள்ளது. இதுவரை பார்த்த பார்வையினின்று விலகி அது காத்திரமாகப் புதிய எழுச்சியைப் பெற்றுள்ளது. மரபுசார் வேளாண்மை குறித்தும் அதில் காலங்காலமாக நேரிடையாக ஈடுபட்டு வரும் மக்கள் குறித்தான செய்திகளும் தற்சமயம் பெரும் பேசுபொருளாகி வருகின்றன. தமிழர் வாழ்வின் ஆணிவேராக விளங்குவது திணை வாழ்வியல். திணை வகைமைகள் நிலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அதனால் தான் முதற்பொருளெனக் காலத்துடன் இணைத்து அது தொல்தமிழில் குறிக்கப் பெறுகின்றது. கருப்பொருள்கள் யாவும் முதற்பொருளை அடிப்படையாகக் கொண்டே வரையறை செய்யப்பட்டுள்ளன. சங்ககாலத் தமிழ் மண்ணில் சாதி, சமய அடையாளத்திற்கான எந்த நேரடிச் சான்றும் உறுதியாக இதுவரை கிட்டவில்லை. கிடைத்திருக்கும் அனைத்தும் பண்பாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பது தமிழர் மேன்மையை உலகிற்கு உரத்துச் சொல்கிறது. பண்பாடு என்றளவில் ஐவகை திணைகளிலும் வாழ்ந்த குடிகளும் அவர்தம் தொழிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. நாகரிகச் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு வயல்சார் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட மருதத்திணையின் பங்கு பெருமிதம் கொள்ளத்தக்கது. இதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.  


நிகழ்கால வாழ்விற்கேற்ப தம் பரிமாணத்தைப் புதுப்பித்துக் கொண்டே வரும் வேளாண்மையும், எத்தனையோ ஏற்ற இரக்கங்களுக்கு நடுவிலும் தமக்குப் பேராண்மையை வழங்கும் ஒன்றாகக் கருதிப் பூர்வீகத் தொழிலான வேளாண்மையை விட்டு விடாத வேளாண் குடிகளும் என்றும் நன்றியோடு வணங்கத் தக்கவர்கள். சுழன்றும் ஏர் பின்னது உலகமென்கிறார் வள்ளுவர். இதிலிருந்தே உழவின் முக்கியத்துவம் அறியலாம். உலகம் முழுமையும் நிறைந்து கிடக்கும் தொழிலாளர் குழுமத்திற்குள் உழுகுடிகளின் விழுக்காடு மிக அதிகம். அவர்களின் உடல் வன்மையும் மரபார்ந்த தொழில் நுட்ப அறிவும் மற்றவரெவரும் போட்டியிட முடியாத அளவிற்கு  மேம்பாடுடையவை. அதனால் தான் ஏர்த் தொழிலும் போர்த் தொழிலிலும் அவர்கள் ஒரே நேரத்தில் ஈடுபட்டு பல்வேறு வெற்றிகளை பழந்தமிழகத்தில் ஈட்ட முடிந்தது.  


தமிழ்நாட்டின் உழுகுடிகளுக்கு நீண்ட வரலாறும் நெடிய பண்பாட்டுத் தொடர்ச்சியும் உண்டு. எனினும் அவர்கள் மற்றவர்களின் பார்வையில் எந்தத் தகுநிலையில் வைத்துப் பார்க்கப்படுகிறார்கள்? இந்தப் பார்வைப்பிழை எப்படி ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? அதிலிலுள்ள நுண்ணரசியல் எப்படி வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது? இவை ஆழ்ந்து யோசிக்கத் தக்க அம்சங்கள். ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டு செய்ய முனைவதற்கும் பன்னெடுங்காலம் பூர்வீகக் குடிகளாய் அம்மண்ணிலேயே தலைமுறைகள் மட்க நிலை கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உலக உயிர்களுக்கு உணவு வழங்கும் புனிதத் தொழிலைச் செய்யுமவர்கள் ஒட்டுமொத்தக் குடிகளின் தலைமக்களாய் பார்க்கப்பட வேண்டியவர்கள். ஆனால்  தலைகீழாய்ப் பார்க்கப்படும் விபத்து எங்ஙனம் நிகழ்ந்தது? உண்மையில் அவர்கள் யார்? அவர்கள் ஆளுமையின் திரட்சியென்ன? ஒவ்வோர் உழுகுடி மாந்தனும் ஒரு நடமாடும் வேளாண்மைப் பல்கலைக்கழகம்மெனச் சொல்லுமளவிற்கு நீரியல் மேலாண்மையை அவர்கள் எங்கிருந்து கற்றார்கள் போன்ற பல வினாக்களின் தரவுக் களஞ்சியமாக விங்குகிறது "வேளாண் மரபின் தமிழ் அடையாளம் - உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்" என்னும் இந்நூல். தமிழகமறிந்த மக்கள் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான முனைவர் மகாராசன் மிகுந்த சிரத்தையுடன் இந்நூலைத் தமிழ்ச் சமூகத்திற்குப் படைத்தளித்திருப்பது மிகப் பொருத்தமாகப் படுகிறது. ஏனெனில் உழுகுடிகளின் அடையாளமான ஏரையே தான் நடத்திய இதழிற்குப் பெயராக வைத்து ஏர் மகாராசன் எனச் சிறப்பிக்கப்படுபவர் அவர்.


வேளாளர் என்பவர் யார்? அது சாதிப் பெயரா? பண்பாட்டியல் பெயரா? சாதிப் பெயரெனில் அதில் பல்வேறு உட்பிரிவுகள் எங்ஙனம் வந்தன? உட்பிரிவுகள் அனைத்தும் இணையாகக் கருதப்படுகின்றனவா? போன்ற மனத் தெறிப்புகளை உண்டாக்கும் முதற்பகுதி நூலிற்குள் நுழையவும் தெளியவும் அகன்ற வாயிலைத் திறந்து விடுகின்றது. இது குறித்த ஆய்வுகள் தமிழ் சூழலில் பரந்த அளவில் முன்னெடுக்கப்படாத கவலையை ஆய்வாளர் அறிமுகப் பகுதியிலேயே பதிவு செய்து விடுகிறார். அவர் மொழியில் கூறுவதெனில், "எல்லாக் காலத்திலும் எல்லா வகையிலும் எல்லாத் தரப்பினராலும் வஞ்சிக்கப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற, ஒடுக்கப்படுகின்ற இழப்புகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்கிற வேளாண்மை குறித்தும் வேளாண் மக்களைக் குறித்தும் மய்யப்படுத்திப் பேசப்படுவதும் எழுதுவதுமான ஆய்வுச் செயல்பாடுகள், கலை இலக்கிய படைப்பு உருவாக்கங்கள், அரசியல் உரையாடல்கள் மிக அதிக அக்கறைடனும் அதிகமாகவும் முன்னெடுக்கப்பபட வேண்டும்" இந்த வார்த்தைகள் மிக முக்கியமானவை. கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவரின் பார்வைக் குறைபாட்டைப் போலக் கண்களை இடுக்கி, கண்டதே காட்சி கொண்டதே கோலமெனப் பார்க்கும் பொதுச் சமூகம் இனி எத்திசை நோக்கிப் பயணப்பட வேண்டுமென்பதை தொடக்கத்திலேயே ஆணியறைந்து அறிவிக்கிறார் ஆசிரியர். நூலெழும் தேவையை ஆசிரியர் வாயாலேயே சொல்லக் கேட்பது நமக்குள் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. 


வேளாண்மை என்பதற்கு ஈகை என்று பொருள் தருகிறார் வள்ளுவர். உழவின் அடிப்படைப் பண்பே மற்றவர்களுக்கு உணவை ஈதல் என்ற நிலையில் உழவுக்கு அப்பெயரே வழங்கி வருவது மிகப் பொருத்தம். இன்னொரு வகையில் அதன் வேர்ச் சொல்லை ஆராய்கையில் வேள்,  ஆண்மை என்று இரண்டாகப் பிரித்தால் வேள் என்பதற்கு  நிலமென்றும் ஆண்மை என்பது ஆளுதல் என்றும் பொருள்படுகின்றன. வேள், ஆள் வேளாண்மையை ஆளும் ஆள் வேளாள் என்றாகிறது. ர் விகுதி தமிழில் மாண்பின் பின்னொட்டாக விளிப்பது மரபு. ஆகவே வேளாண்மையை தொழிலாகக் கொண்டவர் வேளாளர் ஆகிறார். இது தொழிற் பண்பாட்டினடிப்படையில் எழுந்த பெயர். தொழிலை மையப்படுத்திய சாதி உருவாக்கத்தின் போது இது சாதியாக உருமாற்றம் பெறுகிறதென்ற வகையில் ஆய்வாளர் சான்றினடிப்படையில் ஒவ்வொன்றையும் நிறுவுகிறார். இதற்குச் சங்க இலக்கியம் தொடங்கி, நிகண்டுகள் கடந்து மறைமலையடிகள், தேவநேயப்பாவாணர் உள்ளிட்ட ஆழங்கால்பட்ட தமிழாளுமைகளின் கருத்துகள் வரை எடுத்துக் கையாள்கிறார். இதன் மூலம் தமிழ் மண்ணில் வேளாண்மைப் பூர்வீகக் குடிகள் யாரென்ற வினாவை அழுத்தமாகக் எழுப்புகிறார். இன்று வரை அத்தொழிலை உயிர் மூச்சாகக் கருதி சேற்றுக்கால் உழவராக விளங்குபவர் யாரோ அவரே வேளாளர் என்ற விளக்கம் இயல்பாய் நம்மனத்தைப் பற்றிக் கொள்கிறது. நம்மை அறத்தின் பக்கம் இருத்திச் செல்கிறார் மகாராசன். .இவ்விடத்தில் கருங்களமர், வெண்களமர் என்ற இருவகை வேளாண்குடிகளை முன்வைப்பது விரிவான புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.


வேளாண்குடிகளின் தொன்மங்கள், அவர்களின் மழைச்சடங்குகள், இந்திர வழிபாடு, அவர்களுக்கும் ஆசிவக வழிபாட்டு மரபுக்குமான தொடர்பு, உழவுப் பண்பாட்டின் அகமும் புறமும் போன்ற பலவும் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. இந்திரன் பெயர்க்காரணம், தமிழர், ஆரியர் இந்திர வழிபாடுகளின் வேறுபாடு, சிந்து நதியின் மூலம் மற்றும்  சிந்துதல் (மழை) என்னும் வினைச் சொல்லிலிருந்து கிளைத்திருக்கும் இந்திரம், பின் சங்க காலம், காப்பியக் காலமென விரிவதைத் தரவுகளுடன் கொடுக்கிறார். சிலப்பதிகாரத்தில் கொண்டாடப் பெறும் இந்திர விழா உள்ளிட்ட எண்ணற்ற தகவல்களை அள்ளியள்ளி தருகிறார். இந்திரன் என்பதற்கு ஆய்வறிஞர் கா.சு.பிள்ளை குறிப்பிடும் கருத்தைப் பொருத்தமாக எடுத்துக் கையாள்கிறார்.  வயலுக்கு நீர் இன்றியமையாமை என்பதால் இன் திறன் என்பது இந்திரனாக மருவிற்று என்று அறிவுப் பாய்ச்சல் நிகழ்த்துகிறார் கா.சு. பிள்ளை.  மேலும் ஆரிய இந்திர வழிபாடு இறைச்சி வேண்டுவதையும் தமிழர் இந்திர வழிபாடு அதை மறுப்பதையும் சுட்ட வேண்டிய மிக முக்கியச் செய்தி.


வேளாண் மரபினரின் நீரறுவடைப் பண்பாடு என்னும் நிறைவு இயல் இந்நூலின் சிகரம் எனச் சொல்லத் தோன்றுகிறது. நாகரிகங்கள் ஆற்றங்கரைகளில் தான் ஊற்றெடுத்தன என்கிறது வரலாறு.  ஆற்றங்ரைகளில் வாழ்ந்தவர்கள் உழுகுடி மக்கள் என்று விளக்கத் தேவையில்லை. இன்றும் அவர்களின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள் அவ்வாறே அமைந்துள்ளன. அவர்கள் பெற்றிருந்த நீரியல் அறிவாண்மையை இயல் முழுவதும் மிக விரிவாகப் பேசுகிறார் மகாராசன். தமிழகத்தின் ஆற்றுப் பாசனங்களை முழுவதுமாகப் பதிவு செய்வதுடன் நீர் சேமிப்பு முறைகளை, சேமிக்கும் இடங்களை, மரபு சார்ந்த அவற்றின் காரணப் பெயர்களை, நீராதாரப் பகுதிகளைக் காத்திரத்துடன் பதிவு செய்கிறது நூல். நீர் மேலாண்மையைக் கைக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு அடையாளப் பெயர்கள் நீர்ப்பாய்ச்சி, நீராணிக்கம், நீர்க்கட்டி, மடைக்குடும்பன் என்பவை. அவ்வாறு வழங்கப் பெறுவதை ஒரு சேரத் திரட்டித் தருவது மிகச் சிறப்பு. இதன் நீட்சியை அவர் நீரறுவடைப் பண்பாடாக விரித்துச் செல்கிறார். அதில் குறிப்பிடப் பெறும் உள்ளூர் தன்னாட்சியெனும் தனித்த பண்பு நீராளும் மரபினரின் அறிவு மேன்மையை புலப்படுத்துகிறது. நீரியல் மேலாண்மை சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய உலகில் திரும்பவும் பழைய நிலையை நாம் மீட்க விரும்பினால் என்னென்ன பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதைக் கற்பித்துச் செல்லும் பொருண்மை மிக்க பகுதி இது.

நெல்லின் வகைகள், நீர் தேக்குமிடங்களின் பெயர்கள், நீரில் துள்ளும் மீன்களின் வகைகள், பருவ காலங்களின் கணக்கீட்டு முறைகள், உழுகருவிகள் மற்றும் அதைக் கொண்டு நிகழ்த்தப் பெறும் சடங்குகளின் வகைகள், உழவு மாடுகளின் வகைகள், அவர்களுக்கும் மாடுகளுக்குமான தொழிற்புனித உறவு, பழந்தமிழ் ஆலயங்களில்  அவர்களுக்கிருந்த முக்கியத்துவம், உழுகுடியினரை மையப்படுத்திய பொங்கல் விழா என அத்தனைக்கும் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தும் கல்வெட்டுகள், செப்பேடுகள், வாய்மொழி மரபு போன்றவற்றிலிருந்தும் சான்றுகளைப் போதும் போதுமென்கிற அளவிற்கு எடுத்து இணைக்கிறார் ஆசிரியர். உழுகுடி மரபினரின் இத்தனை சான்றுகளை ஒருசேரப் பார்க்கையில் நமக்குப் பெருமூச்செழுகிறது. போர்க்களத்திலும் ஏர்க்களத்திலும் ஒருசேர நின்று களமாடியவர்கள் என்பதற்கான அரசவகைச் சான்றுகளையும் காலத்துடன் இணைத்துக் கொடுத்திருப்பது மிகச் சிறப்பு.

யாப்பு வெளியீடாக அழகிய வேலைப்பாட்டுன் வந்திருக்கிறது இந்நூல். நாற்று முடியில் குங்குமப் பொட்டுடன் காட்சிதரும் அட்டைப்படம், கட்டமைப்பு கவர்கின்றன. மகாராசன் தொடர்ச்சியான மானுட இயக்கம் கொண்டவர். களத்தில் நிற்பவர். புறக்கணிக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட, விளிம்புநிலை மாந்தர்கள் மீது கரிசனமும் செயலூக்கமும் கொண்டவர். திருநங்கைகள் பெரும் பேசுபொருளாக ஆகாத காலக் கட்டத்திலேயே அவர்கள் குறித்த பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகளை சமூக ஆவணமாக அக்கறையோடு தொகுத்தளித்தவர். அஃது ஏற்படுத்திய அதிர்வலைகள் பற்பல. அந்நூல் திருநங்கையியம் குறித்துப் பிறகு பல நூல்கள் எழவும், பொதுச் சமூகத்தின் முன் அவர்கள் குறித்துக் கூச்சமின்றி உரையாடவும் அகன்ற வாயிலைத் திறந்து விட்டதெனில் மிகையன்று. 

“வேளாண் மரபின் தமிழ் அடையாளம்” எனும் இந்நூல் உழவுப் பண்பாட்டரசியலின் புதிய ஆவணமாகத் திகழ்கிறது. இதற்காகப் பன்னெடுங்காலம் அவர் கடும் உழைப்பைச் செலுத்தியிருப்பதைக் குறிப்பிடப்பட்டிருக்கும் சான்றாதாரங்கள் நிறுவுகின்றன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் சோ.தருமனின் அணிந்துரை நூலிற்கு மகுடமாகத் திகழ்கிறது. "வேளாண்மையைப் பூர்வீகத் தொழிலாகக் கொண்டவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள்" என்ற அவரின் வார்த்தைகள் ஒட்டுமொத்த வேளாண் சமூக மக்களின் ஒப்புதல் வாக்குமூலம். குற்றச் செயல்கள் நாளும் பெருகுவதைக் கண்டு செய்வதறியாது திகைத்திருக்கும் இச்சூழலில், யாவரும் இவ்வார்த்தைகள் சொல்லும் நுட்பமான கற்பிதத்தை உணர்ந்தால் போதும். பிரச்சினைகள் தீர்ந்து விடும். மரபுசார் உணவும், உழவும், உழுகுடியினர் மீதான கவனமும் ஒருசேரக் குவிந்துவரும் இவ்வேளையில் இந்நூல் அவற்றின் மீதான புதிய வெளிச்சத்தை பாய்ச்சி உயர்ந்தெழுகிறது. வேளாண்மை சார்ந்த கல்வி நிலையங்கள் அத்தனையிலும் புதிய தலைமுறையினர்க்குப் பாடமாக வைக்கத்தக்க உயர் பொருண்மையைக் கொண்டு இலங்குகிறது  “வேளாண் மரபின்  தமிழ்  அடையாளம்”  என்னும்  இந்நூல்.

வேளாண் மரபின் 
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு, 
5 ஏரிக்கரைச் சாலை, 
2 ஆவது தெரு, சீனிவாசபுரம், கொரட்டூர், 
சென்னை 76. 
தொடர்புக்கு 9080514506   

*

கட்டுரையாளர்:
மீனாசுந்தர், தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்
தொடர்புக்கு:
7010408481



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக