ஞாயிறு, 3 மார்ச், 2024

அங்கவை யாழிசை: நம்பிக்கை ஒளிக்கீற்று - லட்சுமி.ஆர்.எஸ்


தோழர்கள் அம்சம் - ஏர் மகாராசன் தம்பதிகளின் புதல்விதான் அங்கவை யாழிசை. சென்னை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை சித்த மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார். (19 வயதிருக்கலாம்). முதலில் அந்தச் சின்னஞ்சிறு குருத்திற்கு அன்பும் வாழ்த்தும் பாராட்டும்..

சிறு பிள்ளைகள் இலக்கிய உலகிலே சிறகடித்துப் பறப்பது எத்தனை ஆனந்தத்தையும் நெகிழ்வையும் தருகிறது தெரியுமா...? மகிழ்வோடு கண்ணில் நீர் பெருகுகிறது மகளே அங்கவை… தமிழ்த்தாயும் இந்நூலைக் கரங்களில் ஏந்தி மகள் அங்கவையை வாரியணைத்து ஆசிர்வதிப்பாள்.

அலைபேசியில் முடங்கி இருக்கும் இளைய தலைமுறையினரை, சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடக்கும் இளைய தலைமுறையினரை, அழகு நிலையங்களில் திரண்டு நிற்கும் இளையதலைமுறையினரை, திரையரங்குகளில் முதற்காட்சியில் கதாநாயகனுக்கு பல அடி கட்அவுட் வைத்து பாலபிஷேகம் செய்யும் தலைமுறையினரைப் பார்த்த கண்களுக்கு… அங்கவை போன்ற தங்கங்கள் தென்படுகையில், நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகிறது, எம் தமிழ் இனி மெல்லச்சாகாது, தழைத்தோங்கி வளருமென…

கண்மணி அங்கவை, உன் வாசிப்பு உன் பெற்றோரால் அங்கீகரிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் என்ற மாயவலையில் உன்னைச் சிக்கவைத்துப் பணம் குவிக்கும் இயந்திரமாக உன்னை மாற்றாது போனதற்காக என் பேரன்பு அவர்களுக்கு…

நீ தேர்ந்தெடுத்த 6 நூல்களுமே உன் ரசிப்புத் தன்மையை, உன் இலக்கியத் தேடலை, உன் மனது நகரும் திசையை, உன் அறிவு நீட்சியை அடிக்கோடிட்டுக் காட்டி நிற்கின்றன எனச் சொன்னால் மிகையாகாது…

வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் “கையறு நதி “ பற்றி எழுதுகையில் நீ இப்படி எழுதுகிறாய் …

//வாழ்க்கை எனும் தண்டவாளம் எவ்வளவு மோசமாகப் பிறழ்வுண்டாலும், அதன்மீது பயணித்தாக வேண்டும். எங்கு அழைத்துச் செல்கிறதோ, எதைக் காண்பிக்கிறதோ, அதை எப்படி நாம் காண்கிறோமோ, எப்படிப் புரிந்து கொள்கிறோமோ, பார்த்துக் களித்துச் செல்ல வேண்டியதுதான். எப்படியானாலும் பயணித்தே ஆக வேண்டும் என்பதைத்தான் இந்தப் புத்தகம் உணர்த்துகின்றது//

எவ்வளவு கனமான வார்த்தைப் பிரயோகங்கள்! உளவியற் சிந்தனை நிறைந்த ஓர் ஞானியின் அடியொற்றிய காலடித் தடங்களின் அச்சுப் பிரதிகள்!

பிராய்டு கூறிய "முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும், உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது" என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.

தமிழ் மகன் அவர்களின் படைவீடு நூல் உன்னை ஈர்த்ததில் எனக்கு எந்த ஆச்சர்யமுமில்லை.. நாட்டின் மீதும் மொழியின் மீதும் தீராக் காதல் கொண்ட உன்னால் இந்த நூலை நேசிக்க இயலவில்லை என்றால் அதுதான் வியக்க வைக்கும். 

இந்தப் பற்றை நான் எப்படி அறிந்து கொண்டேன் தெரியுமா? இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயம் படிக்கின்றபோது நீ இப்படி எழுதுகிறாய், 

//இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயத்தைப் படிக்க மட்டும் எனக்கு ஒரு நாள் தேவைப்பட்டது. அந்தளவிற்குப் பதைபதைப்பை அது தந்தது. அவர்கள் வெல்லவில்லை, தமிழர்கள் தோற்றுப் போவார்கள் என்று தெரிந்தும் மனம் அதை ஏற்கவில்லை. தமிழர்கள் வீழ்ந்தார்கள், வீரம் குறைந்ததால் அல்ல; துரோகம் நிறைந்ததால்//

உலக சரித்திரத்தில் துரோகம் என்பது புதிதில்லையே கண்மணி?? இப்போதுதானே எழுத வந்திருக்கிறாய். இன்னும் நிறைய வாசிக்கையில், இன்னும் நிறைய எழுதுகையில் அதிகமாக அறிவாய், துரோகங்கள் குறித்து..

தென் அமெரிக்காவின் செவ்விந்திய “இன்கா“ பெரும் பழங்குடியினர் எப்படி ஸ்பானிஷ்காரர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை நேரம் கிடைக்கையில் படித்துப் பார்… 

யூதர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்திய ஹிட்லர் ஆடிய கொலை வெறி ஆட்டத்தைப் பற்றிய புத்தகங்கள் படித்துப் பார்….

இயேசுகள் இல்லாவிட்டாலும், அற்ப காசுகளுக்குக் காட்டிக்கொடுக்கும் யூதாசுகள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதைப் படிக்கும் புத்தகங்களிலிருந்து உணர்வாய்..

இறுதியாக, 

சித்த மருத்துவத்தை ஆராயும் உனக்கு முத்து நாகு அண்ணனின் சுளுந்தீ நாவல் பிடித்துப் போகத்தான் போகும். பெரிய புதினத்தை உன்னளவிற்குச் சுருக்கி அதன் தன்மை மாறாமல், கதாப்பாத்திரங்களை விளக்கியது மிக அழகு..

ஒரு பத்தி எழுதுவதற்கு நான்கு ஐந்து மாதங்கள் யோசித்தேன் என அண்ணன் சொன்னது நினைவிற்கு வருகிறது. அத்தனை பென்னம் பெரிய உழைப்பே சுளுந்தீ. சித்த மருத்துவராக இந்த நூல் உன் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தையும் இடத்தையும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை..

மருத்துவனின் குணத்தை மட்டுமல்ல, மருந்து அரைப்பவனின் குணத்தைக்கூட பேசியது திருக்குறள். 

தமிழர்களின் மரபுச்செல்வங்கள் மறைக்கப்படும்போது அல்லது அவர்களிடமிருந்து பிடுங்கப்படும் போது எழுந்த வரலாற்று வேதனையே சுளுந்தீ..

உலகெலாம் வெடி மருந்தை மூங்கிலிலும் காகிதத்திலும் சேர்த்து வான வேடிக்கைக்கோ போருக்கோ பயன்படுத்தும்போது அதை உலோகக் குப்பியில் அடைத்து, வெள்ளையருக்கு எதிரான போரில் உலகின் முதல் ஏவுகணையாய்ப் பயன்படுத்தியவன் திப்பு சுல்தான். அந்தப் போரின் ஓவியத்தை வைத்து அழகு பார்க்கிறது நாசா. அதை வெளிக் கொணர்ந்தவர் அப்துல் கலாம். அந்த வெடி மருந்தை ஆக்கித் தந்தவன் நம் தமிழ்ப்பாட்டன். நாம் மறந்ததை நாசா நினைவில் வைத்துள்ளது.

எங்கே தமிழினம் தன் மரபுகளை மறந்து விடுமோ என ஐயுறுகையில் அங்கவை போன்ற தளிர் வளைக்கரங்கள், இரும்புக் கரங்களாய் அதை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை இந்தப் புத்தகத்தின் வாயிலாய்த் தோன்றுகிறது..

தமிழ் கூறும் நல்லுலகே, இலக்கியப் பிதாமகர்களே, ஆன்றோர்களே, எங்கள் வீட்டுப் பெண்ணொருத்தி அங்கவை யாழிசை, "எழுத்துலகம்: அகமும் புறமும்" என்ற நூலை, தன் முதல் நூலாக இந்தத் தமிழ் உலகிற்குப் படைக்கிறாள். 

அவள் எழுத்து ஒவ்வொன்றும் அறிவின் கணைகள்; தமிழ் காக்கும் போர் முரசு. நாளைய உலகின் வழிகாட்டி..

கட்டியம் கூறி வரவேற்போம்.

வா மகளே வா!
தரணி போற்ற தமிழ் காப்பாய்!
தமிழர் நோய் தீர்ப்பாய்!
பரவட்டும் உன் புகழ் .

கட்டுரையாளர்:
லட்சுமி ஆர்.எஸ்,
எழுத்தாளர்&ஆசிரியர்,
மதுரை.

*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.
அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக