எழுத்து என்பது மனித அறிவின் புலப்பாடாகப் பரிணமித்த ஒன்றாகும். தமிழ் எழுத்தும் தமிழர் அறிவு மரபைப் புலப்படுத்தும் மொழி வெளிப்பாட்டுக் கருவியாய்ச் செயலாற்றி வந்திருக்கிறது. இத்தகையக் கலை, இலக்கியம், இலக்கணம் உள்ளிட்ட எழுத்துச் செயல்பாடுகளை ‘உலகம்’ எனும் சொல்லால் குறித்துவிட்டுத் தொடங்குதல், தமிழரின் எழுத்துப் பண்பாட்டு மரபாகவே கருதப்பட்டிருக்கிறது.
தமிழர்கள் தமது சிந்தனை மரபை உலகளாவிய கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர். உலகியல் வழக்கோடும் உலக மேன்மைக்காகவும் பரந்த கண்ணோட்டத்தோடு தமது சிந்தனை மரபை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால்தான், தமிழில் தோன்றிய பெரும்பாலான இலக்கியங்கள் ‘உலகம்’ என்னும் சொல்லை முதலாகக் கொண்டு அமைந்துள்ளன.
உலகச் சொல்லுடன் நூலைத் தொடங்குதல் தமிழ் மரபாய் இருந்திருக்கிறது. இதைக் குறித்து உ.வே.சாமிநாதர் கூறுகையில், நூல்களின் முதலில் மங்கல மொழிகளுள் உலகம் என்பதைத் தனித்தேனும் அடைமொழியுடன் சேர்த்தேனும் அமைத்தலும், அதன் பரியாய மொழிகளை அவ்வாறே அமைத்தலும் மரபு என்கிறார்.
பலர் புகழும் சூரியனைக் கடலில் இருந்து எழும் போது கண்டவர்களைப் போல, உலகம் மகிழ்ச்சி அடையும்படியாக இமைப் பொழுதும் நீங்காமல் உயரத்தில்
சுடர்விடுகிறது ஒளி எனும் பொருள்தரும்படி,
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது பத்துப் பாட்டுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை.
உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப்
பலர்புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்குஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன்நின்று
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது மணிமேகலைக் காப்பியம்.
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது கம்பராமாயணக் காப்பியம்.
உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது பெரியபுராணக் காப்பியம்.
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்து மாண்
திலகம் ஆய திறல்அறிவன் அடி
வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும்
தொழுவல் தொல்வினை நீங்குக என்று யான்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது வளையாபதிக் காப்பியம்.
உலகம் மூன்று மொருங்குணர் கேவலத்து
அலகிலாத அநந்த குணக் கடல்
என, உலகம் எனும் சொல்லைக் கொண்டு தொடங்குகிறது யசோதர காவியம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என, உலகு எனும் சொல்லைக் கொண்டுதான் திருக்குறளின் முதல் குறளும் முடிகிறது.
உலகம், உலகு என்பதைத் தலைச்சொல்லாக - முதல் சொல்லாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களைப் போலவே, உலகம் என்பதை அடைமொழியாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்களும் தமிழில் இருக்கின்றன.
நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல்
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான முல்லைப்பாட்டு.
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான முதுமொழிக் காஞ்சி.
மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது சீவக சிந்தாமணிக் காப்பியம்.
மலர்தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும்
பரிதியின் ஒருதான் ஆகி
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது நன்னூல் சிறப்புப் பாயிரம்.
மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை
பெருந்திணை என எழு பெற்றித்து ஆகும்
என, அடைமொழியோடு உலகம் எனக் குறித்துத் தொடங்குகிறது நம்பி அகப்பொருள் இலக்கண நூல்.
உலகம் என்பதைக் குறிக்கும் வேறு சொற்களைக் கொண்டும் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.
மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே
என, உலகத்தைக் குறிக்கும் மாநிலம் என்கிற சொல்லில் தொடங்குகிற பாரதம் பாடிய பெருந்தேவனாரின் வாழ்த்துப் பாடலோடுதான் எட்டுத்தொகையின் நற்றிணைப் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது.
வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி
புலம் பெயர் புலம்பொடு கலங்கி
என, உலகத்தைக் குறிக்கும் வையகம் என்கிற சொல்லில் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான நெடுநல்வாடை.
மணி மலைப் பணைத் தோள் மாநில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல
செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று
என, உலகத்தைக் குறிக்கும் மாநிலம் என்கிற சொல்லாலும் அடைமொழியாலும் தொடங்குகிறது பத்துப்பாட்டுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை.
இவ்வாறாக, உலகம் அல்லது உலகைக் குறிக்கும் சொல்லைக் கொண்டு எழுத்துச் செயல்பாட்டை மேற்கொண்ட தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபைக் காண முடிகிறது.
இலக்கியம் உலகப் பொதுவானது; எனவே, தனிப்பட்டவற்றைக் கருத்தில் கொள்ளும் வரலாற்றைவிட இது தத்துவரீதியானது எனக் குறிக்கிறார் அரிசுடாட்டில். இலக்கியம் என்பது உலகளாவியது என்பதே தமிழ்ப் படைப்பாளிகளின் கருத்தும் நோக்கமுமாக இருந்து வந்திருக்கிறது எனத் தமிழண்ணல் கூறுகிறார். ஒப்பிலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான இப்போலைட் தெயின் கூறும்போது, ஒப்பியல் இலக்கியம் இறுதியில் உலக இலக்கியக் கோட்பாட்டிற்கு எம்மை இட்டுச் செல்ல வேண்டும் என்கிறார். அவ்வகையில், இலக்கியத்தின் உலகப் பொதுமையை நிலை நிறுத்தும் மரபு அடிப்படையிலேயே தமிழ் இலக்கியமும் கால்கொண்டிருப்பதாக அறிஞர்கள் சுட்டுவர்.
இலக்கியத்தை மனித இனப் பண்புடையதாக ஆக்க வேண்டும் அல்லது மனித இனத்திற்குப் பயன்படச் செய்ய வேண்டும். காலத்தை வென்று வாழும் இலக்கியமனைத்தும் என்றும் இன்பம் தருகின்றன. தம் இனத்தது, பிற இனத்தது என்ற வேறுபாடின்றி, இவை மக்கள் அனைவரின் இலக்கியமாய்த் திகழ்கின்றன. மனித இனத்தார் அனைவராலும் படைக்கப்பட்ட எல்லா இலக்கியமும் மனித இனம் அனைத்திற்கும் பொது உரிமையாகும். அம் மனித இனப் பொதுமையைக் கண்டறிய உதவும் முதன்மை வாய்ந்த கருவியும் இலக்கியங்களே ஆகும்.
இலக்கிய வெளிப்பாடு உலக மனித இனம் அனைத்தினது பொதுவியல்புகளின் வெளிப்பாடு. காலக்கோட்பாடும் நாட்டெல்லையும் மொழித்தடையும் கடந்து இலக்கியம் ஒருமையுடையதாய்க் காட்சி அளிப்பதற்கு, மனித இன ஒருமைப்பாடே காரணமாகும் என இலக்கிய ஒருமைப்பாடு குறித்துக் கருத்துரைக்கிறார் தமிழண்ணல். அவ்வகையில், உலகுக்கு அல்லது உலகை முதல் பொருளாகக் கருதும் மரபுத் தொடர்ச்சியின் நீட்சிதான் ‘உ’ என்பதாகும். நமது முன்னோர் அவ்வாறே கருதினர்.
உலகைக் குறித்துப் பொதுவாகத் தொடங்குதல் எழுத்துப் பண்பாட்டியலின் வெளிப்பாடு மட்டுமல்ல; தமிழர்களின் மக்கள் பெயர்களும், தமிழர்கள் வாழ்கிற ஊர் இடப்பெயர்களும், தமிழர்களின் வழிபடு தெய்வங்களின் பெயர்கள்கூட ‘உலகம்’ எனும் சொல்லைக்கொண்டு குறிக்கும் பண்பாட்டு வழக்காறுகள் இன்றளவிலும் நிலவி வருகின்றன.
உலகம், உலகம்மை, உலக மணி, உலகமா தேவி, உலக மாமணி, உலக மாமதி, உலக மாமயில், உலக மாலை, உலகமுடையாள், உலக முத்து, உலக வாணி, உலகத் தாய், உலக நங்கை, உலக நதி, உலக நாயகி, உலக மங்கை, உலக மதி, உலக முதல்வி, உலகோவியம்.. முதலிய பெண்பால் தமிழ்ப் பெயர்கள் உலகு / உலகம் என்கிற சொல்லைக் கொண்டு அமைந்திருக்கின்றன.
உலகக்கடல், உலகக்கதிர், உலகக்கனல், உலகக்காவலன், உலகக்கிழான், உலகக் கிள்ளி, உலகக்கிளி, உலகக்கீரன், உலகக்குடிமகன், உலகக்குமரன், உலகக் குரிசில், உலகக் குளத்தன், உலகக்குன்றன், உலகக்கூத்தன், உலகக் கேள்வன், உலகக் கொடி, உலகக்கோ, உலகக் கோமான், உலகக் கோவன், உலகக்கோன், உலகச் சான்றோன், உலகச்சீரன், உலகச்சுடர், உலகச் சுடரோன், உலகச் செம்மல், உலகச் செல்வன், உலகச் செழியன், உலகச்சென்னி, உலகச் சேந்தன், உலகச்சேய், உலகச் சேரன், உலகச் சோலை, உலகச் சோழன்..
உலகண்ணல், உலகத்தம்பி, உலகத்தலைவன், உலகத் தனையன், உலகத் தானையன், உலகத்திண்ணன், உலகத்திருவன், உலகத் தோன்றல், உலக நம்பி, உலக நல்லன், உலக நல்லோன், உலக நன்னன், உலக நாகன், உலக நாடன், உலக நிலவன், உலக நிலவு, உலக நெஞ்சன், உலக நெறியன், உலக நேயன், உலக நேரியன், உலகப் பரிதி, உலகப்பன், உலகப்பாண்டியன், உலகப்பாரி, உலகப்பாவலன், உலகப்பிள்ளை, உலகப்பிறை, உலகப்புகழன், உலகப் புலவன், உலகப்பூவன், உலகப் பெரியன், உலகப்பேகன்..
உலகப்பொருநன், உலகப்பொருப்பன், உலகப்பொழில், உலகப் பொழிலன், உலகப் பொறை, உலகப் பொறையன், உலகம், உலக மகன், உலகமணி, உலகமதி, உலக மருதன், உலக மல்லன், உலகமலை, உலக மலையன், உலக மழவன், உலக மள்ளன், உலக மறவன், உலக மாண்பன், உலக மாறன், உலக முகன், உலக முகிலன், உலக முத்தன், உலக முத்து, உலக முதல்வன், உலகமுதன், உலக முரசு, உலக மெய்யன், உலக மேழி, உலக மைந்தன், உலக மௌவல், உலகரசன், உலகரசு, உலகருவி, உலக வண்ணன், உலக வரம்பன், உலக வலவன், உலக வழுதி, உலக வள்ளல், உலக முடி, உலக வளத்தன், உலக வளவன், உலக வாணன், உலக வாரி, உலக வீரன், உலக வெற்பன், உலகவேள், உலக வைகை, உலகழகன், உலகவெற்றி, உலகவேங்கை, உலக வேல், உலக வேலன், உலகவேலோன், உலகழகு, உலகறவோன், உலகறிஞன், உலகறிவன், உலகறிவு, உலகுழவன், உலகூரன், உலகூரான், உலகெரியன், உலகெழிலன், உலகெழிலோன், உலகெழினி, உலகேந்தல், உலகேந்தி, உலகையன், உலகொலி, உலகன், உலகொளி, உலகொளியன், உகோவியன்.. முதலிய ஆண்பால் தமிழ்ப் பெயர்கள் உலகு / உலகம் என்கிற சொல்லைக் கொண்டு அமைந்திருக்கின்றன.
இவை மட்டுமல்லாது, தமிழர்களின் வாழ்விட ஊர்ப் பெயர்களும் உலகம் எனும் சொல்லில் அமைந்திருக்கின்றன. கிருசுணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரத்தில் உலகம் எனும் பெயரிலேயே ஒரு சிற்றூர் இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் உலகாணி, உலகநேரி, உலகுப்பிச்சன் பட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு அருகே உலகம்பட்டி எனும் ஊர் இருக்கிறது. இதே பெயரில் சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகில் ஓர் ஊர் இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் உலகம் காத்தான், உலகிய நல்லூர் (உலகில் வலிய நல்லூர்), உலகானத்தம், உலகுடையாம்பட்டு, உலகலப்பாடி எனும் ஊர்கள் உள்ளன. அதே மாவட்டத்தில் உலகலாம் பூண்டி எனும் சிற்றூரும் உண்டு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உலகம்பட்டு எனும் ஊர் உண்டு. அதே மாவட்டத்தில் உலகமாபுரம், உலகஞ்சேரி எனும் ஊர்களும் உள்ளன.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் உலகபுரம் எனும் ஊர் இருக்கிறது. திருச்செங்கோடு அருகில் ஓர் ஊரின் பெயர் உலகப்பம்பாளையம். விருதுநகர் மாவட்டம் கமுதி அருகில் உலகநடை எனும் ஊர் உண்டு. திருவள்ளூர் மாவட்டம் மரக்காணம் அருகே உலகாபுரம் எனும் ஊர் இருக்கிறது. பரமக்குடியில் ஒரு பெருந்தெருப் பெயரொன்று உலக நாதபுரம் எனும் பெயரில் உள்ளது. மேற்குறித்த ஊர்களைப் போன்று உலகம் என்கிற சொல்லோடு தொடர்புடைய பல ஊர்ப் பெயர்கள் தமிழ்நாட்டில் இருக்கக் கூடும்.
உலகம் எனும் சொல்லோடு தொடர்புடைய வாழ்விட ஊர்ப்பெயர்களைப் போலவே, தமிழர்களின் வழிபாட்டு வழக்காறுகளோடு தொடர்புடைய குலசாமிகள், வழிபடு தெய்வங்கள், கோவில்கள் போன்றவையும் உலகம் என்கிற சொல்லோடு தொடர்பு கொண்டதாயும் இருக்கின்றன.
சான்றாக, தாமிரபரணி ஆறு தோன்றும் பாபநாசத்தில் உள்ள கோயிலில் வழிபடு தெய்வத்தின் பெயர் உலகம்மை ஆகும். திருநெல்வேலி வண்ணாரப் பேட்டைக்கு முன்பாகவும் உலகம்மன் கோவில் உள்ளது. சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகிலுள்ள உலகம்பட்டியில் உலகம்மன் கோவில் உள்ளது. அதேபோல, காரைக்குடிக்கு அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் உலகநாயகி அம்மன் கோயில் இருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உலகம்மன் கோவில் உள்ளது. இராமனாதபுரத்தில் உள்ள ஒரு தெருவில் உலகம்மா கோவில் சிறியதளவில் இருக்கின்றது. அதேபோல, திருவாடானை அருகாமையில் கடம்பாகுடியில் உலகம்மா கோவில் உள்ளது. தேவிபட்டினத்திலும் உலகமாதேவி கோவில் உள்ளது. மேலும், திருக்கோயிலூரில் உலகளந்த பெருமாள் கோயில் இருக்கின்றது. மதுரை மாவட்டம் கருமாத்தூரில் ஒச்சாண்டம்மன் கோயிலில் உள்ள காவல் தெய்வத்தின் பெயர் உலகநாதன் ஆகும்.
இவ்வாறாக, தமிழரின் எழுத்துப் பண்பாட்டு மரபிலும் வாழ்வியல் வழக்காற்று மரபிலும் உலகம் என்கிற சொல் இரண்டறக் கலந்திருக்கிறது. உலகம் மதிக்கத்தக்கது; வணக்கத்திற்குரியது; போற்றுதலுக்கு உரியது. மனித வாழ்க்கை உலகு தழுவியது; மனித அறிவும் உலகத்திற்கானது என்கிற உலகப் பொதுமை அறம் தமிழர்களிடம் மேலோங்கி இருந்திருக்கிறது. இதன் வெளிப்பாடே உலகைச் சுருக்கமாகக் குறிக்கும் ‘உ’ எனும் எழுத்துக் குறியை எழுத்துச் செயல்பாடுகளின் தொடக்கத்தில் பண்பாட்டு அடையாள மரபாகக் குறித்து வந்துள்ளனர்.
இது, சமயக் குறியாகவோ அதிகாரக் குறியாகவோ பாகுபாட்டுக் குறியாகவோ அல்லாமல், உலகப் பொதுமையைக் குறிக்கும் பொதுமைப் பண்பாட்டுக் குறியாகவும் பயிலப்பட்டு வந்திருக்கிறது. அவ்வகையில், தமிழின் ‘உ’ எனும் எழுத்துக் குறிக்கு இவ்வகைப்பட்ட எழுத்துப் பண்பாட்டு விளக்கமே பொருத்தமுடையதாய் இருக்கும் எனக் கருதலாம்.
ஆக, ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் குறிக்கப்படும் பிள்ளையாரும் பிள்ளையார் சுழி என்பதான ‘உ’ எனும் கிரந்த எழுத்துக் குறியும் வேறு; தமிழர் வழிபாட்டு மரபில் இடம்பெறும் பிள்ளையாரும், தமிழ் எழுத்துச் செயல்பாட்டில் குறிக்கப்படும் பிள்ளையார் சுழி என்பதான ‘உ’ எனும் தமிழ் எழுத்துக் குறியும் வேறு ஆகும் எனலாம்.
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,
ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005