வெள்ளி, 1 மே, 2020

அன்பான தமிழக இடதுசாரிகளுக்கு... மகாராசன்


கேரளத்தில், இடதுசாரி அரசியல் அமைப்பால் அரசாளும் நிலத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காகவே, அவர்களின் சந்தர்ப்பவாதங்களுக்கும் திரிபுவாதங்களுக்கும் வன்மங்களுக்கும் எள்ளல் பகடிகளுக்கும் துணை நிற்காதீர்கள்.

அவர்கள் வெளிப்படுத்தும் சொற்கள், ஒருவரைக் கூட காயப்படுத்துவதாகவோ அவமதிப்பதாகவோ இருந்தால் அதைக் கண்டியுங்கள். தவறுகளைத் திருத்திக்கொள்ளச் சொல்லுங்கள். புரிதலை ஏற்படுத்துங்கள். மன்னிப்புக் கோரச் சொல்லுங்கள். இது எதுவுமே நடக்காத பட்சத்தில் அவர்களின் சார்பாக நீங்கள்கூட மன்னிப்புக் கோருங்கள்.

ஓர் இனத்தின் பெரும்பான்மைத் திரளால் மதிக்கப்படும் ஒரு போராட்ட இயக்கத்தின் தலைவரை அவமதிப்பது என்பது, அவ்வினத்தை அவமதிப்பது என்பதை உணருங்கள். அவர்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களைக் சுயவிமர்சனத்தோடு அணுகுங்கள். அவர்கள் மீதான விமர்சனத்தை உங்கள் மீதான விமர்சனமாகத் தரித்துக் கொள்ளாதீர்கள்.

தமிழ் நிலத்தின் நியாயமான கோரிக்கைகளையும், தமிழ் மக்களின் நியாயமான உணர்வுகளையும் செவிமெடுத்துக் கேளுங்கள். தமிழர்களின் உணர்வுப்பூர்வமானவற்றுக்கு மதிப்பளியுங்கள். தமிழர் தரப்பில் நின்று ஆதரவுக் குரல் கொடுங்கள். தமிழ்நாட்டில்தான் தமிழ் மக்களிடம்தான் அரசியல் களப்பணி செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதையேனும் ஒத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் தமிழக இடதுசாரிகள்.
தமிழர்களின் குரலைத்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டும். மாறாக, அவர்களது குரலையே உயர்த்திப் பிடிப்பதே உங்களது நிலைப்பாடு என்றால், இனி கேரள இடதுசாரிகள் என்று அழைத்துக் கொள்ளுங்கள். தமிழர்களின் வாக்குகள் தேவையில்லை என்று புறக்கணியுங்கள்.

ஒரு இனத்தை, இயக்கத்தை, அரசியலை விமர்சிக்கலாம்; மறுக்கலாம்; எதிர்க்கலாம். தமிழர் அரசியல் மீது விமர்சிக்கவும் தவறுகளைச் சுட்டிக்காட்டவும் அத்தனை உரிமைகளும் இடதுசாரிகளாகிய உங்களுக்கும் உண்டு. ஆனால், அவமதிப்பது என்பது வன்மம் நிரம்பியவர்களின் நோய்க்கூறு.
ஒரு மனிதரை அவமதிப்பது இடதுசாரிகளின் பண்பும் அல்ல என்பதைத் தெளியுங்கள்.

ஒரு வீட்டு நாய்க்குட்டிக்கு பினராயி விஜயன், நம்பூதிரிபாட், சேகுவேரா, மார்க்சு, லெனின், பெரியார், அம்பேத்கர், கருணாநிதி என எவரது பெயர் வைத்தாலும் அல்லது சாதியின் பெயர் வைத்தாலும் கோபம் வர வேண்டும். அந்தக் கோபம்தான் உண்மையானது. இந்தக் கோபம்தான் பிரபாகரன் எனப் பெயர் வைக்கும்போதும் வந்திருக்கிறது. இந்தக் கோபத்தை நீங்கள் ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை. தமிழர்களின் இந்த நியாயமான கோபத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள் அனைவரையும் இடதுசாரிகளின் எதிரிகளாகப் பாவிக்காதீர்கள்.

தமிழர்களுக்கு ஆதரவாக நிற்காவிட்டாலும் பரவாயில்லை; தமிழர்களின் உணர்வுகளை வஞ்சிக்காதீர்கள்.

இன்னும், தமிழக இடதுசாரிகளை நட்பு சக்திகளாகவேதான் தமிழர்கள் கருதுகிறார்கள். தமிழர்களின் இந்த நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிடாதீர்கள்.

தோழமையுடன்
ஏர் மகாராசன்
27.04.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக