வெள்ளி, 15 மே, 2020

தாழ்த்தப்பட்டோர் எனும் அடையாளப்படுத்தலும், பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையும்: மகாராசன்

நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தாழ்த்தப்பட்டவர்களா? எனக் கோபம் கொப்பளிக்கும் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார் தயாநிதி மாறன்.
ஆணவத்தோடு சிரித்துக்கொண்டே இருக்கிறார் டி.ஆர்.பாலு.
கூடவே, தலையசைத்துக் கொண்டிருக்கிறார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.

மூவருமே இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள். சமூக நீதி பேசும் திராவிட இயக்கத்தின் அங்கத்தினர்கள்கூட.

ஓர் அரசுத்துறை அதிகாரியோடு நிகழ்ந்த சந்திப்பில் ஏற்பட்ட அவமானத்தைப் பொறுத்துக்கொள்ளவும் சகித்துக்கொள்ளவும் முடியாமல், குமுறி அழும் உணர்வோடு நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தாழ்த்தப்பட்டவர்களா? என அவர்கள் கொட்டித் தீர்த்தவை வெறும் சொற்கள் அல்ல. இந்திய/தமிழகச் சாதியச் சமூகத்தின் ஒட்டுமொத்த உளவியலின் வெளிப்பாடு அது.

இழிவானவர்கள்; மூன்றாம் தர மக்கள் என்போரே அவமானத்திற்கும் அசிங்கப்படுத்துவதற்கும் உரியவர்கள். அந்த இழிவுக்கும் அவமானத்திற்கும் உரியவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான். அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் வெகுகாலமாகவே அவமானத்திற்கு உள்ளாகிக் கிடப்பவர்கள். அந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டே இன்னும் அதற்குள் முடங்கிக் கிடப்பார்கள். இடஒதுக்கீடே அந்த இழிவான தாழ்த்தப்பட்ட மக்களுக்குத்தான் எனும் தோற்ற மாயப் போர்வை அவர்கள் மீது போர்த்தப்பட்டிருக்கிறது. ஆகையால், தாழ்த்தப்பட்ட மக்களைத்தான் இழிவுபடுத்த வேண்டும்; அவமானப்படுத்த வேண்டும். இழிவுக்கும் அவமானத்திற்கும் உரியவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான்.
அந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் இப்போது எஸ்.சி எனப்படுகிறார்கள். அரிசன், தலித், தாழ்த்தப்பட்டவர், ஒடுக்கப்பட்டவர், பட்டியல் சமூகத்தினர், அட்டவணைச் சாதியினர், பூர்வக்குடியினர் என எப்படி வேண்டுமானாலும் அவர்கள் சொல்லிக்கொள்வார்கள். ஆனாலும், சமூகத்தின் பார்வையில் அவர்கள் எஸ்.சிக்கள்தான்; தாழ்த்தப்பட்ட மக்கள்தான்; அவமானத்திற்கு உரிய சாதியினர்தான் என்கின்றவை போன்ற சாதியாதிக்க உளவியல்தான், சாதியச் சமூகத்தின் பொதுப்புத்தியாய் உறைந்து கிடக்கிறது. அதைத்தான் தயாநிதி மாறன்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சாதியாதிக்க உளவியலின் இந்தக் கூற்றானது, சமூக நீதி பேசுகிற திராவிட இயக்கத்தின் குரலாகவும், இந்திய நாடாளுமன்றத்தின் குரலாகவும்தான் அமைந்திருக்கிறது. அதாவது, இழிவுக்கும் அவமானத்திற்கும் உரியவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எனும் கருத்துப்பொருள் தொனியே அக்கூற்றின் சாரம்.

ஒரு அதிகாரியோடு, ஒரு சிறு நிகழ்வில், சில மணிப் பொழுதில், சிறிதான அவமதிப்பைக்கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல், நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? தாழ்த்தப்பட்டவர்களா? எனக் கொதிக்கிறார்கள்.

ஆனால், காலங் காலமாக அவமானத்தையும், இழிவையும், அடிமைத்தனத்தையும், சுரண்டலையும், வறுமையையும், ஏமாற்றத்தையும், வன்முறைகளையும், இழப்புகளையும், விரட்டியடிப்புகளையும், நிலப் பறிப்புகளையும், உடைமைப் பறிப்புகளையும், அடையாள இழப்புகளையும், பூர்வக் குடி வரலாற்று அழிப்புகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும், சனநாயக மறுப்புகளையும், கல்வி வேலை வாய்ப்பு இழப்புகளையும் தாங்கிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களாய் அடையாளப்படுத்தப்பட்டு எஸ்.சி எனும் பிரிவிலே எழுபதுக்கும் மேற்பட்ட சாதியினர் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களும் முன்னேற்றங்களும் வளர்ச்சியும் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் சமூக நீதிக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் இன்னொரு புறம் இருந்தாலும், கல்வி, வேலை வாய்ப்புகளால் முன்னேறிய பல்வேறு சமூகப் பிரிவினர் நவீனப்பட்ட வாழ்க்கைச் சூழலைத் தகவமைத்துக் கொண்டது ஒருபுறம் இருந்தாலும், அறிவியல், தொழில்நுட்பம், நகரமயம், தொழில் உற்பத்தி, ஊடகம், உலகத் தொடர்புகள் போன்ற உலகமயமாக்கல் சூழல் இன்னொருபுறம் இருந்தாலும், சாதியம் குறித்தும், ஒவ்வொரு சாதியினர் குறித்தும் நிலவுகிற பெரும்பான்மைச் சமூகத்தின் பொதுப்புத்தி என்பதெல்லாம், உயர்த்திக்கொண்ட சாதியினரால் அவமானத்திற்கு உள்ளாகும் அல்லது உள்ளாக்கப்படும் சாதியினர் என்போர் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்கிற சாதியாதிக்கக் கருத்தாக்கம் இந்தச் சமூகத்தின் அடி ஆழம் வரை பரவிக் கிடக்கிறது.

என்னதான், கல்வி, வேலைவாய்ப்புகள், நவீன வாழ்க்கை வசதிகள், அறிவு, திறமை, தொழில் முனைப்பு எனப் பொதுச் சமூகவெளியில் தமது இருப்பை அடையாளம் காண முற்பட்டாலும், தாழ்த்தப்பட்டோர் எனும் பிரிவான எஸ்.சியாக அதை எதிர்கொள்ளும்போது, தயாநிதி மாறன்களுக்கு நேர்ந்த கொஞ்ச நேர அவமானமும், அவமதிப்பும், இழிநடத்தையும், புறக்கணிப்பும்தான் வாழ்நாள் முழுக்கவும் தலைமுறை தலைமுறையாகவும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

எஸ்.சி எனும் இடஒதுக்கீட்டுப் பிரிவு அவமானமானது இல்லை; அது அந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதும் அல்ல என்பது, அந்தப் பிரிவில் இருக்கும் எல்லாச் சாதியினருக்கும் தெரிகின்ற ஒரு புரிதல்தான். ஆனால், பிற சமூகங்களின் புரிதல் வேறாக இருக்கிறது. அதாவது, காலங்காலமாக அவமானத்திற்கும் இழிவுக்கும் தீண்டாமைக்கும் உள்ளான சாதியினர்தான் எஸ்.சி பிரிவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்றுதான் பிற சாதியினர் புரிந்து வைத்திருக்கின்றனர்.

சாதியச் சமூகத்தில் பெருமாற்றங்கள் நிகழ்ந்திராத சமூகச்சூழலில், எஸ்.சி பிரிவில் இருக்கும் சாதியினரையே இழிவுக்கும் அவமானத்திற்கும் தீண்டாமைக்கும் உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன சாதியாதிக்க உணர்வுடைய உயர்த்திக் கொண்ட சாதிகள்.

இந்நிலையில்தான், எஸ்.சி பிரிவில் இருக்கும் சாதிகளை, அவமதிப்புக்கும் இழிவுக்கும் உள்ளாக்கப்படும் சாதிகளாகக் கருதும் சாதியாதிக்கவாதிகளின் ஆளும்வர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கும் அவமதிப்புக்கும் எதிராகத் திரளத் தொடங்கியுள்ளன எஸ்.சி பிரிவில் இருக்கும் சில சாதிகள்.

எஸ்.சி பிரிவில் இருப்பதை, அந்தப் பிரிவில் இருக்கும் மக்களைத் தாழ்த்தப்பட்டவர்; அவமானத்திற்கு உரியவர்; இழிவுக்குரியவர் என நவீன வகைப்பட்ட தீண்டாமையால், சாதியாதிக்க ஒடுக்குமுறையால், இடஒதுக்கீடு ஏமாற்றுமுறைகளால் பல காலமாக வஞ்சிக்கப்பட்டதாக/ அவமானப்படுவதாக அந்தப் பிரிவில் இருக்கும் பல சாதியினர் உணர்ந்து வருகின்றனர்.

தாழ்த்தப்பட்டோரை இழிவாகக் கருதுகிற இதுபோன்ற நவீனப்பட்ட தீண்டாமை ஒடுக்குமுறையைப் பல சாதியினர் எதிர்கொண்டு வரும் சூழலில், அத்தகைய அவமானத்திற்கு எதிராகவும், சாதியாதிக்கத்திற்கு எதிராகவும், நவீனத் தீண்டாமைக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்து, எஸ்.சி எனும் பட்டியலை விட்டே வெளியேற முனைந்து கொண்டிருக்கிறது ஒரு சமூகம். குறிப்பாக, பள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் சாதியினர், எஸ்.சி பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களின் எஸ்.சி பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை என்பது, அவர்களது சுயமரியாதை தொடர்பானது. எஸ்.சியில் இருப்பதாலேயே அந்தச் சமூகத்தினர் இழிவுக்கும் அவமானத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாவதாகக் கருதுகின்றனர். இதனால், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு, பொதுப் புழங்கல்களில் அந்நியப்படுவதாகவும் அந்நியப்படுத்துவதாகவும் உணர்கின்றனர். ஆகையினாலேதான், எஸ்.சி எனும் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றி அல்லது வெளியேறி, தங்கள் சாதியினரின் மக்கள்தொகை அடிப்படையில் பி.சி பிரிவிலோ அல்லது எம்.பி.சி பிரிவிலோ அல்லது தனி அடையாளத்துடன் கூடிய பிரிவிலோ இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தாழ்த்தப்பட்டோரை அவமானமாகக் கருதும் இந்தச் சமூக அமைப்பிலிருந்து, தாழ்த்தப்பட்டோர் என எஸ்.சி பிரிவில் வரையறுக்கப்பட்டிருக்கும் ஒரு சாதியினர், இனியும் இந்த அவமானத்தைத் தாங்கிக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் சகித்துக்கொண்டும் அந்த அடையாளத்துடன் இருப்பதில் உடன்படாமல், அந்தப் பிரிவில் இருந்தே வெளியேற்றக் கோரும் அல்லது வெளியேற நினைக்கும் இந்தக் கோரிக்கை, சாதியாதிக்க உளவியலுக்கு எதிரான சமத்துவம் மற்றும் சுயமரியாதை சார்ந்த கோரிக்கைதான்.

இட ஒதுக்கீடு எல்லாச் சாதியினருக்கும் இருக்கின்ற ஒன்றுதான். ஆனால், எஸ்.சி பிரிவினருக்கு மட்டும்தான் இடஒதுக்கீடும் சலுகைகளும் இருப்பதுபோல மற்றவர்கள் கருதுகிறார்கள். பி.சி, எம்.பி.சி போன்ற இடஒதுக்கீட்டுப் பிரிவுகளும் இருக்கின்றன. இங்குள்ள பெரும்பாலான சாதியினர் பி.சி; எம்.பி.சி போன்ற இடஒதுக்கீடுகளைப் பயன்படுத்தித்தான் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். ஆனால், எஸ்.சி இடஒதுக்கீடு மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகையாகப் பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருப்பினும், பல்வேறு நிலைகளிலும் பல்வேறு வகைகளில் அவமானப்பட்டு அவமானப்பட்டு தாழ்த்தப்பட்டோர் எனும் இடஒதுக்கீட்டைப் பெறுவதில் இனியும் விருப்பம் இல்லை; சுயமரியாதையே முக்கியம் என்பதே அச்சாதியினரின் பெரும்பான்மைக் கருத்தாக இருக்கின்றது.

அவர்களின் இந்தக் கோரிக்கை இடஒதுக்கீட்டு முறைக்கே எதிரான கோரிக்கை போலத் தோன்றும். உண்மை அதுவல்ல. எஸ்.சி எனும் பிரிவிலான இடஒதுக்கீட்டைத்தான் அவர்கள் வேண்டாம் என்கிறார்கள். அதேவேளையில், மற்ற பிரிவுகளில்தான் தங்களுக்கான இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். மற்ற பிரிவுகளில் இவர்களுக்கான இடம் கோருவதால், பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினர் தங்களது உரிமைகளும் வாய்ப்புகளும் பறிபோகும்; தங்களுக்குப் போட்டியாக வேறு ஒரு சாதியினர் தங்களது இடஒதுக்கீட்டை அபகரிக்க முயல்வதாகத் தோன்றும். அவர்களது எஸ்.சி பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை என்பது, பி.சி மற்றும் எம்.பி.சி இடஒதுக்கீடுகளை அபகரிக்கும் நோக்கம் கொண்டதல்ல. அவ்வாறு நினைப்பதும் சரியானதும் அல்ல. தாழ்த்தப்பட்ட சாதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட பல்வேறு சாதியினரின் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படியே எஸ்.சி பிரிவுக்கான இடஒதுக்கீட்டு சதவீதங்கள் வரையறுக்கப்பட்டன. இப்போது அந்தப் பிரிவிலிருந்து வெளியேற்றம் நிகழும்போது, அந்தச் சாதியினரின் இப்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டு சதவீதங்கள் எஸ்.சி பிரிவிலிருந்தும் வெளியேறுவது நிகழத்தானே செய்யும். அதாவது, எஸ்.சி பிரிவில் உள்ள இடஒதுக்கீட்டு சதவீதங்கள் குறைக்கப்படும்போது, மீதமாகும் அந்த இடஒதுக்கீட்டு சதவீதங்களை பி.சி பிரிவிலோ அல்லது எம்.பி.சி பிரிவிலோ சேர்த்துவிட்டால் பி.சி அல்லது எம்.பி.சி இடஒதுக்கீட்டு சதவீதங்கள் கூடத்தான் போகிறது. இதனால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

ஒரு இடஒதுக்கீட்டுப் பிரிவிலிருந்து வேறு இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு இந்தியாவில்/ தமிழகத்தில் உள்ள பல சாதிகள் இடம்பெயர்ந்திருக்கின்றன. இதுபோன்ற இடஒதுக்கீட்டுப் பிரிவு மாற்றங்களின் முன்நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டியும்தான் தங்களது கோரிக்கையை அவர்கள் அழுத்தமாக முன்வைக்கிறார்கள்.

பி.சி என்றும், எம்.பி.சி என்றும், எஸ்.சி என்றும் வரையறை செய்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளை உருவாக்கி, அதே பிரிவுக்குள் காலங்காலமாக அத்தனை சாதிகளும் அடைக்கப்பட்டு இருப்பது என்பது, இடஒதுக்கீட்டு அடிப்படையில் சாதியக் கட்டுமானத்தை மேலும் மேலும் இறுக்கமாக்கிக்கொண்டேதான் போகும். இடஒதுக்கீட்டுப் பிரிவுகள் மற்றும் அதற்குள் இருத்திவைக்கப்பட்டுள்ள சாதிகள் நிரந்தரமாக்கப்படாமல், அந்தப் பிரிவுகள் மற்றும் சாதிகள் போன்றவை சமூகப் பொருளாதார ஆய்வுகளின் அடிப்படையில் மறுவரையறையும் மறுசீரமைப்பும் செய்யப்படும்போதுதான் சாதியக் கட்டுமானம் மற்றும் சாதி சார்ந்த பொதுப்புத்தியில் மாற்றங்கள் நிகழும்.

அந்தவகையில், சாதியக் கட்டுமானத்திற்கு எதிராகவும், சாதிய அவமானத்திற்கு எதிராகவும், சாதியத் தளர்வுக்கான முன்நகர்வாகவும்தான் எஸ்.சி எனும் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேறி, வேறு இடஒதுக்கீட்டுப் பிரிவுக்குச் செல்லவேண்டும் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் என இழிவாகவும் அவமானமாகவும் மற்றவர்கள் கருதுவதும்,
எஸ்.சி பிரிவிலேயே தாழ்த்தப்பட்டோராகவே ஒரு சாதியினரை இருத்தி வைக்க வேண்டுமென நினைப்பதும் சாதியாதிக்க உளவியல்தான்.

சாதியாதிக்க உளவியலுக்கு எதிராக, எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றக் கோருவது, நேற்று இன்றல்ல; கால் நூற்றாண்டாகவே இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். அந்த மக்களின் இந்தக் கோரிக்கையை அந்த மக்களே பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்டிருப்பதை, நாங்குநேரி இடைத்தேர்தல் நிலவரங்களும் உணர்த்திக் காட்டியிருப்பதும், எந்த அரசியல் ஆளுமைகளின் தலையீடும் இன்றி, அந்தக் கோரிக்கையை அந்த மக்கள் தன்னெழுச்சியாய் வெளிப்படுத்தி இருந்தனர் என்பதும், அந்தக் கோரிக்கைக்கு அச்சமூகத்தினரின் பெரும்பான்மை ஆதரவு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையைப் போலவேதான், பெயர் மாற்றக் கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். குடும்பன், பள்ளன், காலாடி, மூப்பர், பண்ணாடி, தேவேந்திரகுலத்தான்,வாதிரியார் உள்ளிட்ட சாதியினரை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் எனும் பெயர் மாற்ற அரசாணை வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.

கடந்த காலங்களில் அவ்வாறு குறிக்கப்பட்டிருப்பதற்கான வரலாற்றுத் தொல்லியல் சான்றுகளை அவர்கள் முன்வைக்கிறார்கள். தொல்லியல் அகழாய்வுகள், கல்வெட்டுகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், கோயில் வழக்காறுகள், அரசாணைகள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்கள், சொத்துரிமை ஆவணங்கள் போன்ற பலவற்றுள்ளும் தேவேந்திரகுல வேளாளர் என்று அடையாளப்படுத்தப்பட்ட குறிப்புகள் நிறைய இருக்கின்றன. அவர்களது பழைய பெயர் அடையாளத்தையே இப்போது கேட்கிறார்கள். புதியதான பெயர் எதுவொன்றையும் அவர்கள் கேட்கவில்லை.

குறிப்பிட்ட சொல்லாடல்களால் ஒரு தரப்பினரைக் குறிக்கும்போது, இழிவு தருவதாகவும் அவமதிப்பதாகவும் அவர்கள் உணரும்போது, அவர்களை மதிப்புமிக்க சொல்லாடல்களால் மாற்றிக் குறிப்பதான அரசாணைகள் நிறைய வந்திருக்கின்றன.

ஊனமுற்றோர் என்போரை மாற்றுத் திறனாளி என்றும், அரவானிகளைத் திருநங்கை என்றும், துப்புரவுப் பணியாளர்களைத் தூய்மைப் பணியாளர்கள் என்றும் மதிப்புமிக்க சொல்லாடல்களால் குறித்திருப்பதைப் போன்றே, பல சாதியினருக்கும் மதிப்புமிக்க சொல்லாடல்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோலத்தான், தாங்களும் மதிப்புமிக்க சொல்லாடலால்/பெயரால் குறிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். இதுவும், அவர்களது சுயமரியாதை தொடர்பான கோரிக்கைதான்.

தாழ்த்தப்பட்டோர் எனும் எஸ்.சி பிரிவிலிருந்து வெளியேற்றி, வேறு மாற்றுப் பிரிவுகளில் சேர்க்க வேண்டும் எனவும், பெயர் மாற்ற அரசாணை வேண்டும் எனவும் கால் நூற்றாண்டாகப் போராடிவரும் அவர்களது இந்தக் கோரிக்கையானது நியாயமான சனநாயகக் கோரிகை மட்டுமல்ல; சமூகநீதிக் கோரிக்கையும் கூட.

சனநாயகத்தின் மீதும் சமூகநீதியின் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்கள், அவர்களின் இந்தக் கோரிக்கையை ஆதரிப்பதே சமூகக் கடமையாகும்.

இதுதொடர்பான உரையாடல்களைச் சமூக அக்கறையுடனும் நேர்மையுடனும் முன்வைக்க வேண்டுகிறேன்.

ஏர் மகாராசன்
15.05.2020.

5 கருத்துகள்:

  1. நான் தாழ்த்தப்பட்டவன் இல்லை எனும் கருத்து நியாயமானதே ஆனால் நான் தாழ்த்தப்பட்டவன் இல்லை என்பதற்கான அளவுகோலை சக ஒடுக்கப்பட்ட பிற சாதி மக்களை ஒப்பிட்டும்.நானும் அவனும் ஒன்னா..?என்றும் சொல்லும்படியான கருத்துருவக்கமாய் தான் பட்டியல் வெளியேற்றம் பேசும் பெரும்பான்மை பள்ளரிடத்தில் இருக்கிறது..

    சாதியை வைத்து பிழப்பு நடுத்தும் இந்துத்துவ ஆர்எஸ்எஸ் வால்களை பிடித்துக்கொண்டு பேசும் நிறைய பேர்வழிகள் ஏன் என் அண்ணன் உட்பட வெற்று சாதிய பெருமிதத்திலிருந்து பேசும் ஒரு கோரிக்கையை எப்படி ஆதரிக்க முடியும்..?

    பொருளாதார ரீதியாக பின்தங்கிய சாதிய ஒடுக்குமுறையை அதிகம் சந்திக்கும் மார்நாடு வட்டத்திலிருந்து வந்த எங்களின் குடும்பம் இந்த இடஒதுக்கீட்டுக்கு பின் தான் கல்வியையும் அரசு வேலையும் பெற்று சுயமரியாதையாகவும் கௌரவமாகவும் வாழ்கிறோம்.இன்னும் உழைக்கும் சக பள்ளர் மக்கள் கல்வியை பெறுவதற்கான எங்களால் முடிந்த வழிகாட்டுதலை தருகிறோம்..

    கல்வியறியாத வேலை இல்லாத ஏராளமான ஏழைகள் இன்னும் உள்ள இந்த சமூகத்தில் பிறந்து இடஒதுக்கீடு மூலம் கல்வி வேலைவாய்ப்பை பெற்று பொருளாதார நலன் அடைந்த நபர்கள் இந்த கோரிக்கையை அதிகம் பேசுவதன் காரணம் நீங்கள் சொல்கின்றபடியான ஜனநாயக கோரிக்கை அல்ல..பொருளாதார ரீதியாக நான் உயர்ந்துவிட்டேன் எனக்கு இடஒதுக்கீடு வேண்டாம் எனும் சுயநலம் தான்..

    ஏழைப்பள்ளர்களுக்கு இடஒதுக்கீடு பெறும் படியாகத்தான் இருக்கிறது.அதை முற்றிலுமாக புறந்தள்ளி எதற்குமே பயன்படாத வெற்றுசாதியப் பெருமிதத்தில் இருப்பது அரசியல்லற்ற லூம்பன்களை இந்த சமூகத்தில் உருவாக்கி கொண்டிருக்கிறது..

    பட்டியல் வெளியேற்ற மாற்றுக் கருத்துள்ள நபர்களை ,சொந்த சமூகத்தினரை கூட நாகரிகமற்று பேசுவதும் சமூக வலைதளங்களில் எழுதுவதும் எதைக் காட்டுகிறது..?

    பட்டியல் வெளியேற்றம் பேசும் நிறைய நபர்கள் ஆர்எஸ்எஸ் கூடாரத்தினரோடு உலவுவது எதைக்காட்டுகிறது..?

    பட்டியல் வெளியேற்றம் எனும் கோரிக்கையை பள்ளர்களின் கல்வி சமூக பொருளாதார காரணிகளை கணக்கில்கொண்டு பார்த்தால் தேவை இல்லாத ஒன்று தான்..

    பட்டியலிலிருந்து வெளியேறுவது விடுதலையல்ல..
    இந்து மதத்திலிருந்து வெளியேறுவது தான் விடுதலை சுயமரியாதை..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தோழர். தங்களது பின்னூட்டத்திற்கும் தோழமை அன்புக்கும் மிக்க நன்றி. அந்த மக்களைக் குறித்து நீங்கள் முன்வைத்திருக்கும் விமர்சனங்களில் பெரும்பகுதியை நானும் ஏற்கிறேன். எல்லாச் சமூகத்தினருக்குமே பெருமிதமான வரலாற்றுப் பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை எடுத்துரைப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் பக்குவமற்ற போக்கு அவர்களிடம் இருப்பதை நானும் சுட்டிக்காட்டி இருக்கிறேன். பள்ளர் சமூகத்தினர் இடஒதுக்கீட்டில் கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னேறினர் என்பது உண்மைதான். எஸ்.சி பட்டியலில் இருந்ததால் அந்த இடஒதுக்கீட்டில் பலன் அடைந்தனர். ஒருவேளை பி.சியிலோ அல்லது எம்.பி.சியிலோ இருந்திருந்தால்கூட அந்த இடஒதுக்கீட்டில் பலன் அடைந்திருப்பர். இவர்கள் மட்டுமல்ல; பிசி/எம்.பி.சியில் உள்ள மற்ற சமூகங்களும் இடஒதுக்கீட்டில்தான் பலன் அடைந்திருக்கின்றன. பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை என்பது எஸ்.சி எனும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைதானே தவிர, இடஒதுக்கீட்டையே மறுக்கும் அல்லது வேண்டாம் என்பதான கோரிக்கை அல்ல. இதிலிருந்து வெளியேறி வேறு ஒரு இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு உண்டான கல்வி வேலைவாய்ப்புப் பலன்களைப் பெறத்தான் போகிறார்கள். பொருளாதார ரீதியாக முன்னேறிக்கொண்ட மக்களின் கோரிக்கையல்ல இது. கல்வி கற்ற தலைமுறையின் சுயமரியாதை வேட்கையில் இருந்து அந்தக் கோரிக்கையை முன்வைக்கிறார்கள். இடஒதுக்கீடே வேண்டாம் என்று அவர்கள் யாரும் சொல்வது கிடையாது. 1923லிருந்து இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்து வந்திருக்கிறார்கள். 1923 க்கு முன்பாக அவர்கள் பி.சி பிரிவில்தான் இருந்திருக்கிறார்கள். அதே 1923க்கு முன்புவரை நாடார் சமூகத்தினர் எஸ்.சி பிரிவிலே இருந்திருக்கிறார்கள். 1933 வரை எஸ்.சி பட்டியலில் 111 சாதியினர் இருந்துள்ளனர். இப்போதைய பட்டியலில் 76 சாதிகள் மட்டுமே இருக்கின்றன. இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கத்தானே செய்தன. பட்டியல் வெளியேற்றக்கோரிக்கை அந்தச் சமூகத்தில் பெரும்பான்மைக் கோரிக்கையாக இருக்கிறது. இதை அரசியல் பிழைப்புவாதிகள் வேறு வழியின்றிப் பேசத்தொடங்கி உள்ளனர். கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்தக் கோரிக்கைையை அவர்கள் முன்வைத்து வருகின்றனர். இதை ஆதரிக்கும் சில அரசியல்வாதிகளின் கூடா நட்பை வைத்து அந்த மக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கைையையும் நிராகரிப்பது அறமல்ல. எஸ்.சி பட்டியல் வெளிேற்றமே முழு விடுதலை என்று சொல்லவில்லை. சுயமரியாைதைக்கான கோரிக்கைதான் அது. இதை தாங்கள் ஆதரிப்பதே அறமாகும். எனது முகநூல் பதிவில் உள்ள பின்னூட்டங்களைக் கவனியுங்கள். மிக கண்ணியமாகவும் சமூக அக்கறையோடும் கூடிய உரையாடல்கள் இருப்பது தெரியவரும். தாங்கள் இதுகுறித்து மீளாய்வு செய்திடுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் தோழர்!

    உங்களுடைய கருத்துக்களை மிக கண்ணியமான முறையில் வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. நீங்கள் உங்களுடைய பட்டியல் வெளியேற்றத்திற்கு ஒரு சில வரலாற்று பதிவுகளை நீங்கள் சான்றாக முன் வைத்தீர்கள், வரலாறு என்பது புனைவு கலந்தது என்பது தங்களுக்குத் தெரியாமல் இருக்காது, அதிலும் குறிப்பாக நீங்கள் கடந்த 200 வருட வரலாற்றை மட்டும் எடுத்துக் கொண்டு பேசினார்கள், அவர் பேசும்போது நீங்கள் உங்களுடைய சுய கருத்துக்களை இதில் எவ்வளவு ஏற்றி பதிவு செய்திருக்கிறீர்கள் என்பது படித்தவர்களுக்கு நன்கு புரிகிறது, ஏனென்று உங்களுக்கும் புரியும் படிக்கின்ற எங்களுக்கும் புரியும் ஏனென்றால் உங்களுக்கு எது தேவையோ நீங்கள் அதை நீ வரலாற்று நிகழ்வு ஓடு சேர்த்து பேசுகிறீர்கள்,ஏன் வரலாற்றை முழுமையாக பேசுங்கள், தமிழ் சமூகத்தின் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்ததற்கான எவ்வளவு சான்றுகள் உங்களால், இல்லை ஆதியில் தமிழ் சமூகத்தில் சாதி பிரிவுகள் இல்லை ஏற்றத் தாழ்வுகள் இல்லை, அப்படியானால் நீங்கள் முன்னெடுக்க வேண்டிய பேச வேண்டிய உண்மை இதுதானே, ஏன் மீண்டும் மீண்டும் இதனை மறுக்கிறீர்கள், அப்படியானால் உங்களுக்கு எது வசதியோ அதை நீங்களே முன் முடிவு செய்துகொண்டு அதை நீங்கள் பெற துடிக்கிறார்கள், நீங்கள் அட்டவணைப் பட்டியலில் இருப்பதைத்தான் இழிவாக கருதுகிறீர்கள் இந்த எண்ணம் ஒரு மாய நிலை, எங்கள் பட்டியல் வெளியேற்றத்திற்கு பிறகு உங்களை பிராமணனாக பார்க்கப் போகிறார்களா, இல்லை உங்களுக்கான மதிப்பு சமூகத்தில் கிடைத்து விடப்போகிறதா, சாதிய கட்டமைப்பு படிநிலைகள் அமைப்பு உருவாக்கம் இவற்றைப் பற்றி நீங்கள் முழுவதுமாக ஆராய்ந்து படித்தால், நிச்சயமாக நீங்கள் இந்து சமூகத்தில் எந்த சாதியில் எந்த பிரிவில் இருந்தாலும் நீங்கள் கீழானவர்கள் ஆகத் தான் உங்களை அவர்கள் நடத்துவார்கள் பார்ப்பார்கள், துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணியாளர் என்று மாற்றிக் கொண்டால் அவர்களின், மதிப்பு சமூகத்தில் கூடிவிடுகிறதா, இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன், அது அவர்களுக்கான ஒரு கண்துடைப்பு, நிச்சயம் நீங்களும் அதுபோன்ற ஒரு கண்துடைப்புக்காக மட்டுமே ஏங்குகிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

    பட்டியல் வெளியேற்றத்திற்கு பிறகு உங்களுக்கு உண்மையாகவே இந்து சமூக அமைப்பில் சுய மரியாதை கிடைக்காது. நீங்கள் பெருமை பேசிக் கொள்ளலாமே தவிர, இந்த சமூகம் உங்களை எப்பவும் போலத்தான் பார்க்கும்.


    சாதி என்பது ஒன்று இல்லை அது சரியா சதியால் உருவாக்கப்பட்டது, சாதியால் எந்த ஒரு மனிதனுக்கும் பெருமை இல்லை, எந்த ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையும் தனித்துவமும், இல்லை என்று உணரும் தருணத்தில், அவன் சாதி என்ற போர்வையைப் போர்த்திக் கொள்ள விரும்புகிறான் என்பது வெளிப்படை.


    உங்களுடைய போராட்டம் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் நன்றி.

    சாதி ஒழிப்பே! மனித விடுதலை!!


    பதிலளிநீக்கு
  4. தங்களது பின்னூட்டக் கருத்திற்கு நன்றி தோழர். சாதி ஒழிப்பே மனித விடுதலை எனும் முழக்கத்தில் எமக்கும் உடன்பாடுதான். அதை எவ்வாறு? எப்படி? எப்போது?என்ன முறையில் எட்டப்போகிறோம்? சாதி ஒழிப்பு என்பது நமது இலக்கு. அதே சமயத்தில், நிலவுகிற சாதிச் சமூகத்தில் ஒரு சமூகம் தனது சுயமரியாதை தொடர்பான கோரிக்கைையை/சீர்திருத்தக் கோரிக்கையை/ சட்டவாதக் கோரிக்கையை/ உடனடிக் கோரிக்கையை ஆதரிப்பதிலும், அதை நடைமுறைப்படுத்துவதிலும் சாதி ஒழிப்பு நடவடிக்கைக்கு என்ன பாதிப்பு வந்துவிடப்போகிறது? சாதி ஒழிப்புக்கு அந்த மக்கள் எந்த வகையில் தடையாக இருக்கப் போகிறார்கள்? இடஒதுக்கீட்டுப் பட்டியல் அமைப்பில் மாற்றங்களும் மறுசீரமைப்பும் ஏற்படவில்லை எனில், இதுவே சாதிகளைப் பாதுகாக்கும் சட்ட அமைப்பாகவே ஆகிவிடும் ஆபத்தும் இருக்கிறதுதானே. இதில் தளர்வும் மாற்றங்களும் ஏற்படும்போதுதான் சாதி அமைப்பிலும் தளர்வு ஏற்படும். எஸ்.சியாக இருப்பதும், அதை இழிவாகக் கருதுவதும் மாய நிலை என்கிறீர்கள். அது மாய நிலையாக இருந்தால், அந்தச் சமூகத்தின் பெரும்பான்மையோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்க மாட்டார்கள். ஒரு சமூகத்தின் அகச்சூழலையும் புறச்சூழலையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை. இவர்கள் எஸ்.சியை விட்டு வெளியேறிவிட்டபிறகு, பி.சி, எம்.பி.சி பிரிவினரை விட்டுவிட்டா சாதி ஒழிப்பு நடத்த முடியும்? ஒரு புரட்சிகர மாற்றத்திற்கு முன்பாக அது சார்ந்த சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொள்வதே / அனுமதிப்பதே சனநாயகம். சாதி ஒழிப்பு நடவடிக்கைக்கு எஸ்.சி பட்டியல் வெளியேற்றம் எந்த வகையிலும் தடையாக இருக்கப் போவதில்லை. ஒரு சமூகத்தின் சுயமரியாதை/சனநாயகக் கோரிக்கைையைப் பரிசீலிக்காமல், அந்த மக்களைச் சாதி ஒழிப்புக்குத் தயார்படுத்தவும் முடியாது. 1933 இல் 111 சாதிகள் எஸ்.சி பட்டியலில் இருந்தன. இப்போது 76 சாதிகள் மட்டுமே உள்ளன. 1923 க்கு முன்பாக எஸ்.சி பட்டியலில் இருந்தவர்கள் பி.சி பட்டியலுக்குச் சென்றார்கள். இடைக்காலத்தில் பி.சியில் இருந்து எம்.பி.சிக்குச் சிலர் சென்றனர். இப்போது கூட டிஎன்சியிலிருந்து டிஎன்டிக்கு சில சமூகங்கள் மாறி உள்ளன. இந்த மாற்றங்களையெல்லாம் அனுமதித்துவிட்டதனால் சாதி ஒழிப்புக்கு என்ன தடை வந்தது? அதேவேளை, இந்த மாற்றங்களால் அந்தந்த சமூகங்கள் ஏதோ ஒருவகையில் பயன் அடையத்தானே செய்தன. அருந்ததியர் உள்ஒதுக்கீடும், இனச்சுழற்சிமுறையில் அவர்களுக்கான முன்னுரிையும் அந்தச் சமூகத்திற்கு ஏதோ ஒருவகையில் பயன்படவேதான் செய்தன. அது போல, எஸ்.சி பட்டியலை விட்டு வேறுபிரிவுக்குப் போகக் கோரும் அந்த மக்களின் சமூக நிலையில் உடனடி மாற்றம் இல்லாவிட்டாலும் வருங்காலத்தில் மாற்றம் ஏற்படும் என்று அவர்கள் கருதுகிறார்கள். எல்லா மாற்றங்களையும் சனநாயகம் எனும் பேரில் அனுமதிக்கிறீர்கள். ஆனால், இவர்களின் கோரிக்கை மட்டும் சமூக விரோதமாகப் பார்ப்பதுதான் சமூக அநீதியாகப் படுகிறது. 1923 வரை இந்தச் சமூகம் பி.சி பட்டியலில் இருந்தது. அதற்குப் பின்பு எஸ்.சிக்கு மாற்றப்பட்டது. அந்த மாற்றம் சரி எனில், இப்போதைய மாற்றமும் சரிதான். சாதி என்பது மாயை அல்ல. எஸ்.சி என இழிவாகப் பார்க்கப்படும்; கருதப்படும்; அவமானப்படுத்தப்படும் அனுபவங்களை அவர்கள் நாள்தோறும் அனுபவித்துக் கொண்டிருப்பதால்தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கை தவறென்றால், ஒரு சமூகத்தைப் புரிந்துகொண்டதில் போதாமை இருப்பதாகவே கருத முடியும். இந்தக் கோரிக்கைையையே புரட்சிகர மாற்றமாக/சமூக மாற்றமாகவும் நான் கருதவில்லை. இந்தச் சீர்திருத்தமும் தேவை என்றே கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் தோழர்!

    எந்தவொரு தனி மனிதனின் சுய மரியாதைக்கும் எதிரானவர்கள் இல்லை நாங்கள் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

    பட்டியல் வெளியேற்றம் சாதி ஒழிப்பிற்கு எப்படி தடையாக இருக்கும் என்று உங்களுடைய கேள்வி எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. சாதி என்ற ஒன்று மனு தர்மத்தின் சூழ்ச்சி, என்று உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை, எனவே இயல்பாகவே அணைத்து மனிதர்களும் சமம் என்பதை நிறுவ, நாங்கள் மனு தர்மத்தின் சூழ்ச்சியான சாதி ஒழிப்பு ஆயுதத்தை (கொள்கையை) தூக்கி பிடிக்கையில், உங்களுடைய சாதிய தற்பெருமை அதற்க்கு நேர் எதிரானது தானே. நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை என்பது உங்களுடைய முழக்கம், இங்கு யாருமே தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை என்பது எங்களுடைய முழக்கம், சாதி மறுப்பு/ஒழிப்பு சவாலான பணி என்பது உண்மைதான் அதற்காக உண்மைய விட்டு விலகி சென்று விடாதிர்கள். சாதியின் அமைப்பு, தோற்றம், படிநிலைகள் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், சாதி என்ற அரக்கனின் வலியை உணர்ந்த உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், மற்றவர்கள் எவ்வாறு உணர்ந்து கொள்வார்கள்.


    தோழர் தற்போதைய நடைமுறை நன்கு கவனித்துப் பாருங்கள் அனைவருமே ஆண்ட சாதி என்று கூறிக் கொள்கிறார்கள், குறிப்பாக பட்டியலின சமூக மக்களும் சுய சாதி பெருமை பேச ஆரம்பித்து விட்டார்கள், அவர்கள் எல்லோருமே தங்களுக்கு என்று வரலாறுகளை உருவாக்கி கொள்கிறார்கள், இந்நிலை தொடர்ந்தாள் சாதி அமைப்பு வலுவடையுமே தவிர ஒழியாது.


    நாங்கள் ஒட்டுமொத்த ஆதிக்கத்திற்கு எதிராக நிற்கிறோம், நீங்கள் அதில் உங்களுக்கான வசதிகளை மட்டுமே பேசுவோம் என்கிறிர்கள், உங்களுடைய நிலைப்பாடு சாதி ஒழிப்பு என்ற எங்களுடைய நிலைப்பாடுகளுக்கு உடன்பட்டு செல்ல முடியாத நிலையிலே நாங்கள் இருக்கிறோம்.

    பெயர் மாற்றம் செய்வதால் எல்லாம் மாறிவிடும் என்று நீங்கள் நம்புவதால் கூறுகிறேன், அரவாணி = திருநங்கை இவ்வாறு பெயர் மாற்றம் செய்ததால் இவர்களுக்கு சமூகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்.

    உங்களுக்கு பட்டியல் வெளியேற்றம் கிடைக்க வாழ்த்துக்கள், சாதிய பெருமை பேச நீங்களும், சாதி ஒழிப்பில் நானும் தொடர்ந்து பயணிப்போம். நன்றி!!!

    பதிலளிநீக்கு