திங்கள், 4 மே, 2020

தமிழர் அரசியல்: ஆரிய எதிர்ப்பும் ஆரிய ஒத்தூதும் :- மகாராசன்

ஈழ ஆதரவு என்பதையும், திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்களின் மீதான விமர்சனம் என்பதையும், அதிமுக, பாசக உள்ளிட்ட ஆரியக் கூட்டணிக்கான ஆதரவு என்பதாகத்தான் திராவிட இயக்கத்தினரும் அதன் ஆதரவாளர்களும் அறிவுசீவிகளும் அடையாளப்படுத்தி வருகின்றனர்.

அவர்களைப் பொருத்தளவில், ஒன்று, காங்கிரசு உள்ளிட்ட திமுக தலைமையிலான திராவிடக் கூட்டணி அரசியல், மற்றொன்று, அதிமுக உள்ளிட்ட பாசக தலைமையிலான ஆரியக் கூட்டணி அரசியல் என்ற இரண்டே அரசியல் தளங்கள்தான் இருப்பதாகக் கருதுகிறார்கள்.

திராவிட அரசியல், ஆரிய அரசியல் அல்லாத மாற்று அரசியல் களமாகத் தமிழ்த் தேசிய அரசியல் களம் இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை, அவர்கள் கருத்தில் கொள்ள மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள்.

வாக்கு அரசியலில் பங்கேற்று, அதிகாரத்தில் பங்குபோடும் அவர்கள் நினைப்பதைப்போல, தமிழ்த் தேசிய அரசியல் என்பது இப்போதைய வாக்கு வங்கி அரசியல் அல்ல. ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கான அரசியல் அது.

இந்தியாவில், காசுமீர் உள்ளிட்ட தேசிய இனங்களின் விடுதலை அரசியல் போன்றே தமிழ்த் தேசிய அரசியலும் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரான அரசியலே ஆகும். அவ்வகையில், நிகழ்காலச் சமூக அரசியல் கோரிக்கையின் வெளிப்பாடாகவே தமிழ்த் தேசியக் கருத்தியல் எழுச்சியாக வடிவம் கொண்டு வருகிறது.

ஒரு தேசிய இனத்தின் வீறு கொண்ட எழுச்சி, அதன் அரை நூற்றாண்டுகாலப் போராட்டம், அதன் வலி, அதற்குக் கிடைத்த ஆதரவு, அதற்கு நிகழ்ந்த துரோகம், அதன் வெற்றி தோல்விகள், அதன் படிப்பினை, இனப் படுகொலைக்கான நீதி கோருதல், போன்றவற்றைப் பேசுவதும் ஆதரவாக நிற்பதும் என்பதெல்லாம், தமிழ்த் தேசிய அரசியலுக்கான படிப்பினை போன்றவற்றோடு உந்துதல் தரும் காரணிகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.

ஈழத்தை, ஈழப்போராட்டத்தை ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கான முன்மாதிரியாகவே பார்க்கிறது தமிழ்த் தேசிய அரசியல் களம்.

வெறுமனே, ஈழ ஆதரவை மட்டுமே தமிழ்த் தேசிய அரசியலாக முன் வைக்கவும் முடியாது; முன்வைக்கவும் கூடாது. தமிழ்த் தேசிய அரசியலின் ஓர் அங்கம்தான் ஈழ விடுதலை ஆதரவு என்பதும்.

இந்நிலையில், தமிழர் அடையாளம் என்று சொல்வதையெல்லாம் திராவிட அடையாளம் எனக் கட்டமைப்பதிலும், தமிழ்த்தேசியம், ஈழ ஆதரவு, திராவிட விமர்சனம் என்று சொல்வதையெல்லாம் ஆரிய ஆதரவுக்கான அடையாளம் என்பதாகக் கட்டமைப்பதற்குப் பின்னாலும் இருக்கும் நுண் அரசியல் என்பதெல்லாம், தமிழர் அடையாள அரசியலை, தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் கருத்தியலை, தமிழ்த் தேசிய இனத்தின் சனநாயகக் கோரிக்கையை, தமிழ்த் தேசிய இன விடுதலையை, தமிழினம் உள்ளிட்ட தேசிய இனங்களின் விடுதலையை மறுப்பதும் எதிர்ப்பதுமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

ஆரிய வைதீக மரபுகளும் அதன் அதிகாரங்களும் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ் நிலம், தமிழர் அடையாளம், தமிழர் பண்பாடு, தமிழர் உரிமை, தமிழர் அரசியல், தமிழர் விடுதலை போன்றவற்றை வன்மத்தோடும் பகையோடும்தான் பன்னெடுங்காலமாக அணுகி வருகின்றன. ஆரிய மரபுக்கும் தமிழர் மரபுக்குமான முரணும் மோதலும்தான் தமிழ்த் தேசிய அரசியலின் உள்ளீடு.

தமிழ்த் தேசிய அரசியல் கருத்தியல் உள்ளிட்ட தமிழ் மரபுகளை/ தமிழ்த் தேசிய எழுச்சியை / தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை ஆரியத்திற்கு எதிரான ஒன்றாகவே ஆரிய வைதீக அதிகார மரபுகள் கருதிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஆரிய வைதீக மரபின் அதிகாரக் கட்டமைப்பு என்பதெல்லாம் இந்திய வடிவிலான வல்லாதிக்கக் கட்டமைப்புதான். இந்திய வல்லாதிக்கக் கட்டமைப்பைப் பாதுகாக்கும்படியான அரசியல் வேலைகளைத்தான் காங்கிரசு, பாசக உள்ளிட்ட தேசியக்கட்சிகள் அதனதன் பாணியில் அதனதன் வேலைத்திட்டங்களோடு செய்துகொண்டிருக்கின்றன. அவைகளைப் பொருத்தளவில், இந்திய வல்லாதிக்கம் பரவலாக்கப்பட வேண்டும்; அது பாதுகாக்கப்பட வேண்டும் அவ்வளவுதான். இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக இருக்கும் எதனையும் அழித்தொழிப்பதையே அதன் அரசியல் அதிகார அறமாகப் பாவிக்கின்றன. அதனால்தான், ஈழம், காசுமீர தேசிய இனவிடுதலைப் போராட்டங்களை அழித்தொழிப்பதில் குறியாய் இருக்கின்றன.

இந்நிலையில், ஆரிய வைதீக எதிர்ப்பு என்பது, இந்திய வல்லாதிக்க எதிர்ப்பு என்பதாகத்தான் அமைந்திருக்கிறது. இந்திய வல்லாதிக்க எதிர்ப்பு என்பது, தமிழ்த் தேசிய இனம் உள்ளிட்ட தேசிய இனங்களின் விடுதலையில்தான் அடங்கி இருக்கிறது. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக் கோரிக்கை,
ஆரிய வைதீக அதிகார மரபுகளுக்கு எதிரானது; இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிரானது.

இந்நிலையில், ஆரிய எதிர்ப்பு பேசும் திராவிடக் கருத்தியலாளர்கள், ஆதரவாளர்கள், அறிவுசீவிகள் போன்றோர், தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக் கோரிக்கையை, அதன் அரசியலை, அதன் நிலைப்பாடுகளை ஆரியச் சார்பானது எனக் கட்டமைக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய அரசியலை ஆரிய வைதீக அதிகார மரபுகளும் எதிர்க்கின்றன. அதேவேளையில், ஆரிய எதிர்ப்பு எனக் கூறிக்கொள்வோரும் எதிர்க்கின்றனர் எனில், இவர்களின் ஆரிய எதிர்ப்பு என்பதெல்லாம் போலியானது மட்டுமல்ல; தமிழ்த் தேசிய அரசியலை மறுக்கும் அல்லது மறைக்கும் நோக்கத்தையே உள்ளீடாகக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலை மறுக்கும் அல்லது மறைக்கும் இந்த உள்ளீடுதான் ஆரியத்திற்குச் சார்பானது; ஆரியத்திற்குத் துணை நிற்பது என்பதாகும்.

தமிழ்த் தேசிய அரசியலை எதிர்ப்பதுதான், ஆரிய எதிர்ப்பு எனக் கட்டமைப்பதெல்லாம், ஆரிய வைதீக அதிகார மரபுகளுக்குப் பின் மறைந்திருக்கும் முற்போக்கு முகமூடிகளின் கருத்தியல் கட்டமைப்புதான்.

ஆரிய எதிர்ப்பு எனும் பேரில், தமிழ்த் தேசிய அரசியலை எதிர்த்துக்கொண்டிருக்கும் ஆரிய மரபுக்குப் பின்னாலிருக்கும் முற்போக்கு முகமூடிகளின் ஆரிய ஒத்தூதுக் கருத்தியலையும் தமிழ்த் தேசிய அரசியல் களம் அம்பலப்படுத்தியே தீரும்.

தமிழ்த் தேசிய அரசியலையும், ஈழ விடுதலை அரசியலையும் ஆதரிப்பதே உண்மையான ஆரிய எதிர்ப்பு என்பதாகும். மாறாக, தமிழ்த் தேசிய அரசியலையும், ஈழவிடுதலை ஆதரவையும் எதிர்ப்பது என்பதெல்லாம் ஆரிய ஒத்தூது ஆகும்.

ஏர் மகாராசன்
04.05.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக