ஊற்று நீர், மணல் நனைத்து நனைத்து நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம்... எவ்வளவு அற்புதமானது..! போலான ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அங்கவை யாழிசை. கொடியசைத்துத் தொடங்கி வைத்திருக்கிறார் தோழர் ஏர் மகாராசன். தோழர், ஏற்கனவே எழுதி இணைய இதழ்களில் வெளிவந்துள்ள வாசிப்பனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து தொகுப்பாக்கி உள்ளார். அச்சு உலகில் முதல் பயணம். பேரன்பு வாழ்த்துகள்.
6 நூல் குறித்த 6 கட்டுரைகள். வறீதையா, தமிழ்மகன், தீபச்செல்வன், ஜெயமோகன், சோ.தர்மன் மற்றும் முத்துநாகு ஆகியோரின் நூல்கள் குறித்தவை. வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கையறு நதி நூல் மனப்பிறழ்வு அடைந்த மகளுக்கும் தந்தைக்குமிடையே உள்ள அரவணைப்பு குறித்துப் பேசுகிறது. மனப்பிறழ்வு அடைந்த பெண்ணாக தன்னை நினைத்துக்கொள்ளும் அளவுக்கு நூல் தனக்குள் உண்டாக்கிய பாதிப்புகள் குறித்து வாசிப்பு அனுபவத்தை முன்வைத்துள்ளார். நிறைவைத் தரும் எழுத்து. இன்னும் கொஞ்சம் நூல் குறித்து எழுதியிருக்கலாமோ என எண்ண வைக்கிறது. “மனம் மாயம் செய்யும் கருவி. நம்மால் செய்ய முடிந்தவையும் செய்ய முடியாதவையும் நம் மனம் நிர்ணயிப்பது தான். மனதை ஆளவும் கற்றுக்கொள்ள வேண்டும். அடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று உளவியலாளர் போல எழுத்தைப் பேச வைத்திருக்கிறார் நூலாசிரியர்.
தமிழ்மகன் எழுதிய படைவீடு நூல் ஆட்சி அதிகாரத்தை இழந்த கடைசி தமிழ்ப் பேரரசன் சம்புவராயன், மகன் ஏகாம்பரநாதன், அவரது மகன் மல்லிநாதர் ராசா நாராயணர் ஆட்சிக் காலம் பற்றிப் பேசுகிறது. விஜயநகரப் பேரரசு தமிழ் மண்ணில் காலூன்ற காஞ்சி பிராமணர்களின் போதிப்பான சாதிக்கொரு புராணம் எந்தளவுக்கு எடுபட்டு தமிழ்ப் பேரரசைத் தூக்கி எறிய உதவியது என்பதைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். சாதிப் பிரிவுகளையும், சாதி வன்மங்களையும் இப்போதுதான் பிறந்த சிக்கல் என்று எண்ணிக்கொண்டிருந்ததாக தோழர் குறிப்பிட்டுள்ளார். வர்ணாசிரமம் இங்கு எப்போது வந்தது என்பதைக் கணக்கிட்டாலே அதற்கு விடை கிடைத்துவிடும். நூலாசிரியரின் தந்தையும் தோழருமான ஏர் மகாராசன் மாணவர்கள் குறித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கட்டுரை நூலில் சொன்னவாறு தாழ்த்தப்பட்ட சாதி, உயர்த்தப்பட்ட சாதி என்ற சொல்லை தாழ்ந்த சாதி, உயர்த்த சாதி என்று சொல்ல வைத்ததன் பின்னணியில் இருந்தும் சாதியின் ஆதியைத் தேடிக் கண்டடையலாம்.
தீபச்செல்வன் எழுதிய நடுகல் குறித்த வாசிப்பனுபவம் ஈழத்தை, அதன் வலிகளை, கண்ணீர்க் கதையை, வீரம் செறிந்த போர்க்களக் காட்சிகளை, விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, பல்வேறு நாடுகளின் துரோகங்களை கண்முன் கொண்டு வந்துவிட்டது. ஒரு துயர் கனவு போல நினைவைவிட்டு அகற்றிவிட்டு இன்று அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். மீளாய்வு செய்வதற்குக் கூட அவசியமற்ற ஒரு நிகழ்வாக ஈழப்போர் பெரும்பான்மையோருக்கு அமைந்துவிட்டது ஒருபுறம். அதை மறக்கடிக்கும் ஊடகம் ஒருபுறம். மண்ணையும் மக்களையும் உரிமைகளையும் மீட்டெடுக்க நிகழ்ந்த போரை அசாதாரணமாகக் கடந்துவிட முடியாது. அந்தப் பணியை, நடுகல் செய்கிறது. வீர மரணம் அடைந்துவிட்ட மகனின் புகைப்படம் கூட கையில் இல்லாமல் அவனின் நினைவுகளை மட்டுமே நடுகல்லாகச் சுமக்கும் தாய் பற்றிய நூல் என்கிறார் நூலாசிரியர். நூலை வாசிக்கத் தூண்டும் கட்டுரை.
ஜெயமோகனின் புறப்பாடு குறித்த கட்டுரை. அவருடைய எழுத்தைச் சிலாகித்துப் பேசுகிறார் நூலாசிரியர். அவர் குறிப்பிடும் ஒப்புமைகள் சிலவற்றையும் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். ஓரிடத்தில், “இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில் கூட, ஒரு பொருளின்மீது கூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக்கொண்டார் போலும்” என்பது உட்பட. சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும்போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன என்று கூறியுள்ள நூலாசிரியர், இதை இப்படியே வைத்திருக்கும் அதிகார மையம் குறித்து ஜெயமோகன் போன்றவர்கள் பேசாமலிருப்பதையும் சக மனிதன் குறித்து, எழுத்தாளர்கள் குறித்து, சமூகம் குறித்து இவ்வுலகின் அனைவருக்கும் மேலான ஓரிடத்தில் நின்று பேசும் அவருடைய வார்த்தைகளை கூர்ந்து நோக்கத் தொடங்கினால் அவர் யாரெனப் புரியும். புறப்பாடு வாசிக்கும்போது ஜெயமோகனின் பிம்பம் மீண்டும் மீண்டும் வந்து தொலைக்கிறது. இதற்கு நூலாசிரியர் என்ன செய்ய முடியும்...
சோ.தர்மனின் சூல், விவசாயம், அது சார்ந்த மக்கள், யாரிடம் அது இருந்தது, அது எப்படியெல்லாம் அதிகாரத்தின் கைகளில் சென்று சேர்ந்தது என்பது போன்ற பல்வேறு புதிய தகவல்களைத் தருகிறது என்பது மறுக்கவியலாத உண்மை. மாடுகளைக் கொன்று மாமிசம் உண்டவன், ஒரு கால்நடையைப் போலவே நடக்க நேரிடும், ஊர்க் கண்மாயை விரோதம் காரணமாக உடைப்பவன் பிள்ளை ஊமையாகப் பிறக்கும் இப்படிப் பல நம்பிக்கைகள் உண்மையில் அப்படியே நடந்திருக்கின்றன என்கிறார் நூலாசிரியர். நல்ல விசயத்தைப் பாதுகாக்க, எதையாவது சொல்லிப் பயம்காட்டி வைத்திருப்பது என்பது நடந்திருக்கும். அதற்காக எல்லாவற்றையும் நல்லது என்பதை நம்புவதும் தவறு. பயம் காட்டுவதும் தவறு. மாட்டுக்கறி தின்ன இறந்த மாடுகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்பது போல உள்ளது நூலாசிரியர் கருத்து. மாடுகளைக் கொன்று சாப்பிடுபவன் ஒரு கால்நடையைப் போலவே நடப்பான் என்பதை எப்படி அறுதியிட்டுக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. கண்மாய் வைத்து அரசியலாடும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் யாருமிங்கே ஊமையாகப் பிறக்கவில்லை என்பதையும் நாம் பார்க்கவேண்டும். இதில் பாதிக்கப்படும் மக்கள் அதிகாரம் அற்றவர்கள் மட்டுமே. இது சமகாலத்தில் அரசியல்வாதியைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடவேண்டும் என்பதற்காகப் பயன்படுத்திய உத்திபோல இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விவசாயம் உரியவர்களிடம் போய் சேராததால் இங்கு உழைப்பவனிடம் ஒன்றுமில்லாமலும், பண்ணையிடம் எல்லாம் கூடுதலாக நிறைந்திருப்பதையும் இன்றும் காண்கிறோம். அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இங்கு விவசாயத்தினை துச்சமாக நினைத்துத்தான் தொடங்குகிறது. அதன்பலனை வருங்காலம் எப்படித் தாங்குமோ தெரியவில்லை. சூல் வாசிக்க வேண்டிய நூல்.
முத்துநாகு எழுதிய சுளுந்தீ நூல் குறித்த வாசிப்பனுபவம், தனது துறை சார்ந்திருப்பதால் நூலாசிரியர் பேரார்வத்துடன் எழுதியது போலிருக்கிறது. கதைச் சுருக்கத்தையும் அருமையாகக் கூறித் தொடங்குகிறார். எவ்விதம் தனது துறையில் இந்நூல் உதவுகிறது என்பதையும் கூறுகிறார். தமிழரின் மருத்துவப் பண்பாட்டியலை விவரிக்கும் வரலாற்றுக் கதை என்ற தலைப்பு பொருத்தமே. சித்த மருத்துவத் துறையில் பயின்று வரும் நூலாசிரியருக்கு தகுந்த சமயத்தில் இந்நூல் கிடைத்ததை சித்தர்கள் அருளால் தான் கிடைத்தது என்று நூலாசிரியர் கூறுவதை எப்படி ஏற்பது எனத் தெரியவில்லை. இருந்தபோதிலும் சுளுந்தீ என்பது வாசிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.
நூலின் பக்கங்கள் மற்றும் விலையையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொழிநடை அருமையாகக் கூடி வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். அரசியல், முற்போக்கு இரண்டின் போதாமை பல இடங்களில் தெரிகிறது. இதைக் குற்றமாகக் கருதாமல் ஆலோசனை என்ற அளவில் எடுத்துக்கொள்ள தோழரிடம் கேட்டுக்கொள்கிறேன். எழுத்தோடு எந்நேரமும் உறவாடிக் களித்திருக்கும் தந்தையின் கரம் பற்றுங்கள். அதேசமயம் உங்கள் வழியில் பயணம் செய்யுங்கள். சிறப்பான தொடக்கம். வாழ்த்துகள் தோழர்.
கவிஞர் யாழ் தண்விகா,
கல்வி மற்றும் இலக்கியச் செயல்பாட்டாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம், பெரியகுளம்.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு:
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.
அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.