ஞாயிறு, 17 மார்ச், 2024

ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்: மகாராசன் - அம்சம்


பெருங்கனவோடும் பேரன்போடும் செந்தமிழ் உணர்வோடும் வளர்ந்துவரும் அன்பு மகள் அங்கவை யாழிசை அவர்கள், சிறு வயதிலிருந்தே எழுத்து, பேச்சு, கலை எனப் பன்முகத் திறன்களோடு உறவாடி வருபவர். எமது கல்வி, சமூகம் மற்றும் எழுத்துச் செயல்பாடுகள் யாவற்றுக்கும் மகளாகவும் தோழியாகவும் இருந்து அருந்துணை புரிந்துகொண்டிருப்பவர். 

குழந்தையாக இருக்கும்போதுகூட புத்தகங்கள்தான் அவரின் விளையாட்டுப் பொருட்களாக இருந்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் செம்பச்சை நூலகப் புத்தகங்கள் யாவற்றிலும் அவரின் கண்களும் கைகளும் பட்டிருக்கும் என்றே கருதுகிறோம். பள்ளிக்கூடப் புத்தகங்கள் என்பதையெல்லாம் தாண்டி வேறுவேறு புத்தகங்களைப் படிப்பதில் எப்போதுமே நாட்டம் கொண்டிருந்தார். அவர் வாசித்த புத்தகங்கள் குறித்து எம்மிடம் மிக விரிவாகவே பேசிடுவார். 

தொடர்ச்சியான புத்தக வாசிப்புதான் அவரது பன்முகத்திறனுக்கும் பெருந்துணை புரிந்திருக்கிறது. பேச்சு, கட்டுரை, ஓவியம், நாட்டியம், கைவினை எனப் பலவகைப்பட்ட திறன்வெளிப்பாட்டிற்காகப் பரிசுகள் பலவற்றையும் பெற்றிருக்கிறார். 

புத்தக வாசிப்பில் பெருவிருப்பத்தோடும் உள்ளார்ந்தும் அவர் பயணப்படுவதை அருகிலிருந்து பார்த்துப் பெருமைப்பட்டிருக்கிறோம்; வியந்திருக்கிறோம். ஒரு புத்தகத்தை எடுத்தால், அது எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும்கூட ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவார்.

இப்படியே மற்ற மற்ற புத்தகங்களையெல்லாம் படித்துக்கொண்டிருந்தால், அவரது பள்ளிப் படிப்பில் தொய்வு ஏற்பட்டுவிடுமோ என்றுகூட நாங்கள் நினைத்தது உண்டு. இதைக் குறித்த எண்ணத்தை அவரிடம் வெளிப்படுத்தியபோது, இந்தப் புத்தகங்கள் படிக்கும்போது பள்ளிப் புத்தகங்கள் எல்லாம் மிக எளிது என்றே கூறினார். அவர் சொன்னவாறே பள்ளிப் படிப்புகளிலும் தேர்வுகளிலும் உயர்மதிப்பெண்களைத்தான் பெற்று வந்தார்.

தமிழின் மீதும் புத்தகங்கள் மீதும் தமது ஈடுபாட்டை அதிகப்படுத்திக் கொண்டிருந்ததோடு, வாசிப்புச் செயல்பாட்டையும் தீவிரப்படுத்தியிருந்தார். ஒரு கட்டத்தில், கல்லூரியில் நான் தமிழ்ப் பாடம் எடுத்துப் படிக்கட்டுமா என்றார். ஏன் இந்த முடிவு? எனக் கேட்டபோது, தமிழ் மீது அவ்வளவு பற்றும் உணர்வும் இருப்பதாகவும், தமிழுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் எனவும் கூறினார். அம்மாவும் அப்பாவும் தமிழ் படித்திருக்கிறோம். தமிழ் ஆசிரியராய் இருக்கிறோம். நாங்கள் தமிழ் குறித்துப் பேசுவதைக் காட்டிலும், அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் பயணிப்பவர்கள் தமிழ் குறித்துப் பேசினால் அதற்குச் சமூக முக்கியத்துவம் இருக்கும். தமிழுக்கு ஏதாவது செய்திட வேண்டுமானால், பிற துறைகளில் பயணித்துத் தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும்; அங்கிருப்பதைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் தமிழை நவீன உலகுக்குக் கடத்த முடியும் என்றோம். 

அப்படியானால், நான் என்ன படிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்று எம்மிடமே கேட்டார். குடும்ப உறவுகள் பலரும் மருத்துவர்கள் என்பதால், மருத்துவம் படிக்கலாம் என்றபோது, அலோபதி மருத்துவமெல்லாம் படிக்க விருப்பமில்லை. சித்த மருத்துவம் படிக்கவே விரும்புகிறேன் என்றார். மருத்துவப் படிப்புகூட தமிழோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்றே கருதினார். அந்தளவுக்கு அவரது தமிழ் ஈடுபாடு தீவிரப்பட்டிருந்தது.

புத்தகங்கள் அவரது அறிவுலகத்தை மேலும் மேலும் வளப்படுத்தின. புத்தகங்களை வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், வாசிக்கும் ஒவ்வொரு புத்தகத்தைக் குறித்தும் பேசுவதோடு மட்டும் நிறைவடைந்துவிடாமல், வாசிக்கிற புத்தகங்களைக் குறித்து எழுதவும் முயற்சிக்க வேண்டும் என அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருந்தோம். அவ்வப்போது அவர் வாசித்த புத்தகம் குறித்து அவரது உணர்வுகளையும் அனுபவங்களையும் எழுதிக் காண்பிப்பார். அவர் எழுதிய கட்டுரைகளில், எழுத்துலகம் குறித்த அகத்தையும் புறத்தையும் மட்டுமல்ல, எழுத்துலகம் குறித்த அவரது அகத்தையும் புறத்தையும் காண முடிந்தது. 

பல்வேறு புத்தகங்களை அவர் வாசித்திருந்தாலும், கையறு நதி, சூல், படைவீடு, நடுகல், புறப்பாடு, சுளுந்தீ ஆகிய பெருங்கதை நூல்களைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பல்வேறு இணைய இதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளிவந்தன. 

தமிழ்கூறும் நல்உலகம், எம் மகள் அங்கவை யாழிசை அவர்களின் எழுத்துகளை வரவேற்றும் பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்ந்தன. அக்கட்டுரைகள் யாவும் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளன. அங்கவை யாழிசை அவர்களின் முதல் நூல் இது. 

தமிழ் சார்ந்தும், சித்த மருத்துவம் சார்ந்தும் இன்னும் நிறைய எழுதுவார் எனும் நம்பிக்கை எமக்கிருக்கிறது. தமிழ் உம்மை வாழ வைக்கும்; மிளிரச் செய்யும். 

தமிழ் உறவுகள் வாழ்த்தி வரவேற்பதோடு வழிகாட்டுங்கள்; வழி நடத்துங்கள். இன்னும் வளம் பெறுவார்.

எழுத்துலகில் பயணப்படும் அன்பு மகளுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்
அப்பாவும் அம்மாவுமான
மகாராசன் - அம்சம்.

*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


1 கருத்து: