ஞாயிறு, 26 நவம்பர், 2023

புலித்தடம் பதியக் காத்திருக்கும் நிலம் - மகாராசன்

 

கடல்சூழ் வனத்தைப் போர்த்தி
விரிந்து கிடந்த நிலப்புழுதியில்
எமையொத்தச் சாயலுடன் முகம் காட்டி
எம் கிட்டத்திலேயே சூழ்கொண்டு
முளைத்துக் கிளைத்திருந்தது
குலக்கொடியொன்று.

ஈரநெப்பு கசிந்த மண்ணை
இறுகப் பற்றிக்கொண்ட வோ்கள்
ஆழஆழப் பதிந்ததில்
நிறைந்து செழித்து வளம் கொழித்தன
மனிதப் பச்சையங்கள்.

பஃறுளியும் குமரிக்கோடுமாய்
மூதாதை நிலம் பரவிக் கிடந்தது.

காலமும் கடல்கோளுமான ஊழ்வினை
உப்புநீர் தெளித்து
அங்குமிங்குமாய் வாழத் தள்ளிவிட்டது.  
பரிணாமக் காலங்களை
உறிஞ்சியெடுத்த உயிரினச் சுழற்சியில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
விழுந்த வித்துகள்
சிம்படித்துக் கிளைத்திருந்தன.  

கிளை பரப்பிச் சிலிர்த்துச்
சிரித்திருந்த பேரினத்திற்கு
தாய் மடிகள் இரண்டிருந்தன.
இரு நிலமானாலும் ஓரினம் என்பதாக
காலம் இசைத்த நெடும்பாடல்
உலகத்தின் காதுகளில்
நிரம்பி வழிந்திருந்தது.

பெருமரத்தின் வித்துகள்
காற்றில் பரவி நிலத்தை நிறைத்தன.
விழுந்த திசையின் மண்ணின் வாகும்
பருவ நேக்கும் சுழல் காலமும்
உயிர்ப் படிமலர்ச்சியாய்
வேறு வேறு முகங்களை
தந்துவிட்டுப் போயின.

பூர்வத்தின் வேர்நுனி மணத்து
தாய்நிலத்து மண்ணைப் பூசிக்கொண்டு
பேருரு அடையாளத்தில்
மினுத்திருந்தது இவ்வினம்.

அயல்நிலப் பருந்துகளின் கொத்தல்களிலிருந்து
குஞ்சுகளைக் காக்க
மூர்க்கமாய்ப் போராடின
இரு தாய்க்கோழிகள்.

அறுந்துவிட்ட தொப்பூழ்க்கொடியிலிருந்து
உயிர்க்கொடிச் சிம்புகள்
அத்துப் போகாமலும் இத்துப் போகாமலும்
உயிர்ப்பித்துக் கொண்டிருந்தன.

முந்நிறத்துக் கொடியாலும்
முப்புரி நூலாலும்
இறுகக் கட்டிய தொரட்டிகளால்
இந்நிலத்துக் கிளைகள் முறிக்கப்பட்டன.
சுணக்கம் கொண்டு
சுருண்டு போயின வேர்கள்.

ஆணியும் சல்லியுமாய் உள்ளிறங்கிய
அந்நிலத்து வேர்கள்
மூதாதைச் செந்நிலத்தின்
உயிர்ச்சத்தை உறிஞ்சி
பெருவனத்தை வரைந்திருந்தது.

மறப்பாய்ச்சலில் தேர்ந்திருந்த புலிகள்
வன்னி நிலத்தில் அறம் பாடித் திரிந்தன.

கரு நாகங்களின் துரோகத்தை
கக்கத்தில் ஒளித்துக்கொண்டு
புலிகளின் அரத்தம் தோய்ந்த
சிங்கக் கூர்வாளை
ஏந்திச் சிரித்தான் புத்தன்.

தப்பிப்போன புலிகளின்
கால்த்தடம் பதியக் காத்திருக்கிறது
ஒரு நிலம்.

ஏர் மகாராசன்
26.11.2023

வியாழன், 16 நவம்பர், 2023

தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாகச் சுட்டுவது, தமிழைச் சிறுமைப்படுத்துவதாகும் - மகாராசன்


தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும் குறுக்கிப் பார்த்தல் கூடாது. 

*


இந்தக் கல்வி ஆண்டின் பொதுத்தேர்வு அட்டவணையைக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அந்த அட்டவணையில், தமிழ்ப் பாடம் என்பதற்குப் பதிலாக மொழிப்பாடம் (Language) என்றே குறிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் கல்விக்கூடங்கள் அனைத்திலும் முதன்மை மொழிப் பாடம் ஒன்றும், இரண்டாவது கட்டாய மொழிப் பாடமாக ஆங்கிலமும் வைக்கப்பட்டுள்ளன. பயிற்றுமொழி எதுவாக இருப்பினும், தெரிவுப் பாடங்கள் எதுவாக இருப்பினும் பகுதி 1 இல் தாய்மொழிப் பாடமும், பகுதி 2இல் ஆங்கிலப் பாடமும் கட்டாயம் படித்தாக வேண்டும். 

தமிழ்நாட்டின் ஆகப் பெரும்பாலான பள்ளிகளில் முதன்மை மொழிப் பாடமாகத் தமிழ்ப்பாடம்தான் கற்பிக்கப்படுகிறது. மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் மட்டும்தான் பிற தாய்மொழிப் பாடங்கள் முதன்மை மொழிப் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரின் தாய்மொழியாகத் தமிழ்தான் இருக்கின்றது. பெரும்பான்மையோரின் முதன்மைத் தாய்மொழிப் பாடமாகத் தமிழைத்தான் கற்பிக்கின்றனர்; கற்கின்றனர். அந்தவகையில், பகுதி 1 இல் தமிழ்மொழிப் பாடம்தான் இருக்கின்றது. தமிழ்மொழி குறித்த உணர்வும், தமிழ்மொழி அறிவும், தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களும், தமிழ் வரலாற்றுத் தொன்மைப் பெருமிதமும், தமிழ் அறமும், தமிழ் இலக்கண இலக்கிய அறிவும், கற்றலுக்கு உகந்த மொழியறிவும், சிந்தனைத் திறனை வெளிப்படுத்தவும், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும் தமிழ்ப் பாடம்தான் அடிப்படையாகவும் அவசியமானதாகவும் இருந்து கொண்டிருக்கிறது. பகுதி 1 இல் இருக்கும் இத்தகையத் தாய்மொழிப் பாடமான தமிழ்ப்பாடத்தைத் தமிழ்ப் பாடமாக அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, வெறுமனே மொழிப் பாடம் என்பதாகத்தான் அடையாளப்படுத்திக் குறிக்கும் வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இது, தமிழ்மொழிப் பாடத்தைக் குறுகிப் பார்க்கும் வெளிப்பாடாகும். அதுமட்டுமல்லாமல், தமிழ்மொழிப் பாட அடையாளத்தை மறைப்பதும் ஆகும்.

தமிழ் போல ஆங்கிலமும் ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்பிக்கப்படுகிறது. ஆயினும், அது ஆங்கிலம் என்பதாகவே சுட்டப்படுகிறது. அதேவேளை, தமிழ்ப்பாடத்தை வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும்தான் கல்வித்துறையின் அறிவிப்புகளிலும் சுற்றறிக்கைகளிலும் வெளியீடுகளிலும் தேர்வு அட்டவணைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. 

இது, தமிழ்ப்பாடத்தை முதன்மை மொழிப் பாடமாகக் கற்கும் மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுவதாகும். தாம் பயிலும் தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாகத்தான் குறுகிப் பார்க்க வேண்டும்; தமிழ்ப் பாடத்தை அடையாளப்படுத்துவது அவமானம் எனும் உளவியல் மாணவர்களின் ஆழ்மனதில் பதிந்து போகும். தமது தாய்மொழிப் பாடமான தமிழ்ப் பாடத்தைப் பெருமிதமாகக் குறிப்பதற்குப் பதிலாக, வெறும் மொழிப் பாடமாகக் குறுகிப் பார்க்கச் சொல்வது, தமிழ்மொழி குறித்த தாழ்வு எண்ணத்தையும், தமிழ் அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் எனும் அவமான உணர்வையும் ஏற்படுத்துவதாகும். இதேபோலத்தான், தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தமிழ் அடையாள மறைப்பு அவமானத்தையும் உண்டாக்குவதாகும்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதெனில், தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாக மட்டும் குறிப்பதென்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களையும், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்களையும் தாழ்வெண்ணத்திற்குத் தள்ளும் முயற்சியாகும்; தமிழ் மொழி அடையாளத்தை மறைப்பதாகும்; மறுப்பதாகும்.

தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படும் தமிழ்ப் பாடம் என்பதை, வெறும் மொழிப் பாடம் என்பதாகச் சுட்டுவது, தமிழ் எனும் அடையாளத்தைத் தரவிறக்கம் செய்வதாகும். ஆகவே, தமிழ்ப் பாடம் என்பதைத் தமிழ்ப் பாடம் என்றே அடையாளப்படுத்திட வேண்டும். பிறமொழிகளை முதன்மை மொழிப் பாடமாகக் குறிக்கும்போதும், அந்தந்த மொழிகளின் அடையாளத்தையே குறிப்பிடவும் வேண்டும். 

தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாக மட்டும் குறுகிச் சுட்டும் போக்கைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை/உயர்கல்வித் துறை தவிர்க்க வேண்டும்.

தமிழ்மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்வியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் படைப்பாளிகளும் ஆசிரியர்களும் குரல் கொடுத்தல் வேண்டும். கல்வித் துறை அதிகாரிகளும் இதைக் குறித்துக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். 

ஏனெனில், தமிழ்மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும்கூட.


ஏர் மகாராசன்

16.11.2023

சனி, 11 நவம்பர், 2023

தீப ஒளித்திருநாள்:தமிழர் மரபு வேறு; ஆரிய மரபு வேறு - மகாராசன்



சூழ்ந்திருக்கும் இருளை விலக்கி, பொருள் இதுவென்று விளக்கிக் காட்டும் ஒளிப்பொருளை விளக்கு எனச் சுட்டுவதும், விளக்கேற்றுதலை வளமைப் பண்பாட்டு நடத்தைகளின் குறியீடாகவும் புலப்படுத்தி வந்துள்ளனர் தமிழ் முன்னோர். 

மழைக்காலக் கார்காலத்தின் மாலைப்பொழுது விரைவாகவே இருட்டத் தொடங்கிவிடும். இருளும் குளிரும் மிகுந்திருக்கும் கார்காலப் பெரும்பொழுதின் மாலைச் சிறுபொழுதை விளக்குகள் ஏற்றி, இருளையும் குளிரையும் விலக்கி வைக்கும் பண்பாட்டு நடத்தைகள் தமிழர் வழக்கில் இருந்திருக்கின்றன. அத்தகைய விளக்கேற்றும் பண்பாட்டு நடத்தையே மா ஒளித்திருநாளாக - தீப ஒளித்திருநாளாகக் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது. அதுவே கார்த்திகை மாதத்துத் தீப ஒளித் திருநாள் விழா. 

கார்த்திகை மாத ஒளித்திருநாள் வழக்கம் இன்னும்கூட இருக்கத்தான் செய்கிறது. ஆயினும், அத்தகையப் பண்பாட்டு நடத்தைகளுக்குச் சமூக முக்கியத்துவம் அளிக்கவில்லை. சூழலியல் அடிப்படையில் உருவான ஒளித்திருநாளுக்குப் பதிலாக, புராணக் கற்பிதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீபாவளி தமிழர் பண்பாட்டில் திணிக்கப்பட்டிருக்கிறது.

பிற்காலத்தில் விசயநகரத் தெலுங்கின ஆட்சியாளர்களின் காலகட்டத்தில்தான்,  ஆரியத்தின் புராணக் கற்பிதங்களால் உருவாக்கப்பட்ட தீபாவளி முன்னிலைப்படுத்தப்பட்டது. 

தமிழர் மரபின் ஒளித் திருநாள் விழாக்களை முன்னெடுப்பதும், ஆரியப் புராணத் தீபாவளிகளைப் புறக்கணிப்பதும்தான் தமிழர் பண்பாட்டு மீட்பாகும்.

தமிழரின் தீப ஒளித்திருநாள் குறித்து நான் எழுதிய விரிவான கட்டுரையும், அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது கட்டுரையும் கீழ்க்காணும் இணைப்பில் உள்ளன.

https://maharasan.blogspot.com/2016/12/blog-post_41.html

https://aerithazh.blogspot.com/2018/11/blog-post_4.html

ஏர் மகாராசன்.

வெள்ளி, 10 நவம்பர், 2023

தமிழ் நாட்டிற்குள்ளாகத் திராவிடம் பேசுவது, தமிழ்ப்பற்றையும் தமிழ்நாட்டுப் பற்றையும் பாழ்படுத்துவதாகும்: கி.ஆ.பெ.விசுவநாதம்.


தமிழ் என்பது ஒரு நல்ல தமிழ்ச் சொல். திராவிடம் என்பது அழுத்தமான வடமொழிச்சொல். திராவிடம் என்ற சொல்லே திரிந்து ‘தமிழ்’ என்று ஆயிற்று என்பது தமிழ்ப் பற்றாளர் சிலரது கூற்று. இது அவரவர் மொழிப்பற்றைக் காட்டுமேயன்றி, உண்மையைக் காட்டாது. பழைய சங்க காலத்திய தமிழ் நூல்கள் அனைத்திலும் ‘திராவிட’ என்ற சொல் ஒன்றுகூட இல்லை. சங்க காலத்திற்குப் பின்னும், 700 ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றிய இன்றும் இருக்கும் எந்த நூலிலும் திராவிடம் என்ற சொல் இல்லை.


650 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வரலாற்றுக் காலத்தில்தான் வரலாறு எழுதிய ஆங்கிலேயரும், ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆரியரும் தமிழரை - தமிழ் நாட்டை - தமிழ்மொழியை மட்டுமல்லாமல், தமிழ் இனத்தையும் - தமிழ் இனத்தின் மொழிகளையும் சேர்த்துத் ‘திராவிடம்’ எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர். 

தமிழருக்கும், தமிழ் இனத்தாருக்கும் திராவிடர் எனப் பெயரிட்டு, வரலாறு எழுதிய ஆங்கிலேயருக்கு அறிவித்தவர்கள் அக்காலத்தில் நன்கு கற்றறிந்த ஆரியர்களே! ‘தமிழ்’ என்ற தமிழ்ச் சொல்லிற்கு தம்மிடத்தில் ‘ழ்’ ஐ உடையது (தம் + ழ்) என்பது பொருள். ‘திராவிடம்’ என்ற வடசொல்லிற்குக் குறுகிய விடம் என்றும், திராவிடர் என்ற சொல்லிற்குக் குறுகியவர் அல்லது குறுகிய புத்தியுள்ளவர் என்றும் பொருள் (திராவி - அற்பம், குறுகல்).

தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டை மட்டுமே குறிக்கும். திராவிட நாடு என்பது ஆந்திரா, மலையாளம், கன்னடம், துளுவ நாடுகளையும் சேர்த்துக் குறிக்கும். தமிழ்நாடு என்று ஒரு தனி நாடும்; தமிழ் மொழி என்று ஒரு தனி மொழியும் உண்டு. திராவிட நாடு என்று ஒரு தனி நாடும், திராவிட மொழி என்று ஒரு தனி மொழியும் இல்லை. தமிழ்நாடு, தமிழ் மொழி எனக் கூறலாம். ஆனால் திராவிட நாடு, திராவிட மொழி எனக் கூற இயலாது. திராவிட நாடுகள், திராவிட மொழிகள் என்றே கூறியாக வேண்டும். 

தமிழ்நாட்டு எல்லை வரையறுத்துக் கூறப்பட்டிருக்கிற ஒன்று. திராவிட நாட்டின் எல்லை இதுவரை எவராலும் வரையறுத்துக் கூறப்படாத ஒன்று. ஒரு நாள் இந்திய மலை வரையில், மற்றொரு நாள் அசாம் வரையில், வேறொரு நாள் இந்தியா முழுவதுவமே ‘திராவிட நாடு’ கூறப்பட்டதும் உண்டு..

தமிழ் என்றால் திராவிடம்தான்; திராவிடம் என்றாலும் தமிழ்தான். தமிழர் என்றால் திராவிடர்தான்; திராவிடர் என்றாலும் தமிழர்தான். தமிழ்நாடு என்றால் திராவிட நாடுதான்; திராவிட நாடு என்றாலும் தமிழ்நாடுதான் - ‘அந்தக் கருத்தில்தான் அப்படிச் சொல்லப்பட்டு வருகிறது’ என்பதில் புரட்டு இருக்குமே தவிர, உண்மை இருக்காது. 

தமிழர் என்று எழுதி (திராவிடர்) என்று கூட்டுக்குள் போடுவதும், தமிழ்நாடு என்று எழுதி (திராவிட நாடு) என்று கூட்டுக்குள் போடுவதும், பிறகு திராவிடர் (தமிழர்) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும், திராவிட நாடு (தமிழ் நாடு) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் தவறான எழுத்தாகுமேயன்றி நேர்மையான எழுத்தாகாது.

தமிழ்நாட்டைத் தாய்நாடாகக் கொண்டு, தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, தமிழ்ப் பண்பைத் தாய்ப்பண்பாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் தமிழரே என்பது ஜாதி பேதமற்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால், திராவிடர் யார்? என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலே இருந்து வருகிறது. ஒரு நாள் மகாராஷ்டிரரும் திராவிடர் என்றும், மற்றொரு நாள் வங்காளிகளும் திராவிடர் என்றும், வேறொரு நாள் ‘ஆரியர் தவிர அனைவரும் திராவிடரே’ என்றும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. 

தமிழ்மொழி ஒன்று மட்டுமே தனித்து நிற்க, எழுதப்பேச இயங்க ஆற்றலுடையது. இத்தகைய ஆற்றல் தமிழ் ஒழிந்த திராவிட மொழிகளில் எதற்கும் இன்று இல்லை. திராவிட மொழிகள் பலவும், வடமொழியோடு சேரச் சேர பெருமையடைகின்றன! தமிழ்மொழி ஒன்று மட்டுமே வடமொழியிலிருந்து விலக விலகப் பெருமையடைகிறது!

தமிழ்நாடு ஒன்று மட்டுமே பிரிந்து வாழும் தகுதியையும் சிறப்பையும் பிற அமைப்பையும் உடையது. திராவிட நாடுகளில் எதுவும் இத்தகைய நிலையில் இன்று இல்லை. தமிழ் மக்களுக்கு மட்டுமே வட நாட்டிலிருந்து பிரிந்து தனித்து வாழ வேண்டும் என்ற உணர்ச்சி இருந்து வருகிறது. இத்தகைய உணர்ச்சியில் சிறிதளவாவது பிற திராவிட மக்களிற் பலரிடத்திலும் காண முடியவில்லை. 

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது தமிழ் மக்களின் பிறப்புரிமையாக இருக்கும். ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்பது வேண்டாதவர்களுக்கும், விரும்பாதவர்களுக்கும் சேர்ந்து கூப்பாடு போடுவதாக இருக்கும். 

திராவிட நாட்டினர்களில் பலர் தமிழ் மக்களில் எவரையும் அறிவாளி என்று ஒப்பியதுமில்லை; ஒப்புவதுமில்லை. தமிழர்களில் எவரையும் தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டதுமில்லை. ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. 

திராவிட மக்களில் பலரும் தமிழர்களிடமிருந்து பிரிந்து வாழவே ஆசைப்படுகிறார்கள். குறை கூறுகிறார்கள். வைகிறார்கள். மனிதனை மனிதனாகக்கூட மதிப்பதில்லை. இக்கூற்றை மெய்ப்பிக்க திராவிடத்தின் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளுகிறவர், வீர உணர்ச்சியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களை ‘அதுகள்; இதுகள்’ என அஃறிணைப்படுத்தி வைதும், செல்லுமிடமெல்லாம் தமிழ்நாட்டுத் தலைவர்களை -அறிஞர்களை இழிவுபடுத்தி வைவதுமே போதுமான சான்றாக இருந்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது, திராவிடம் என்பதே தமிழ்ப் பகைவர் பேச்சாக இருக்குமோ என்ற ஐயம் உண்டாகிறது. 

10 ஆண்டுகளாகத் திராவிடப் பேச்சு, பிரச்சாரம், பத்திரிகை, கிளை அமைப்பு, பண வசூல், சுற்றுப் பிராயணம், கமிட்டி, தொண்டர்கள், உண்டியல்கள், ஆகிய 9உம் தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்று வருவதால், அதைத் தமிழ்நாட்டுக் கழகம் எனச் சொன்னாலும் சொல்லலாமே ஒழிய, திராவிட நாட்டுக் கழகம் எனச் சொல்லுவது உண்மைக்கு மாறானதாகும். 

தமிழ் நாட்டிற்குள்ளாகத் திராவிடம் பேசுவது, தமிழ் இளைஞர்களின் தமிழ்ப்பற்றை -தமிழ் நாட்டுப் பற்றை - வீர உணர்ச்சியை வேண்டுமென்றே வீணாக்கிப் பாழ்படுத்துவதாக இருந்து வரும். 

காலம் செல்லச் செல்ல திராவிட நாடுகளுக்கும் சென்று, அங்கும் பிரச்சாரம் செய்து, அவர்களுக்கும் உணர்ச்சி ஊட்டி விடலாம் என்று எவரேனும் கூறுவதானால், அவ்வாறு கூறுகிற அவர், தமது ஆற்றலைத் தவறாகக் கருதுகிறவர் என முடிவு கட்டிவிட வேண்டும். 

திராவிடர் எவரும் விரும்பாத திராவிட நாட்டை, திராவிடர் எவரும் உறுப்பினரில்லாத திராவிடர் கழகத்தை, திராவிடர் எவரும் ஒப்புக் கொள்ளாத திராவிடத் தலைவர், அரசியல் கழகமல்லாத ஒரு கழகத்தைக் கொண்டு ‘அடைந்தே தீருவேன் திராவிட நாடு’ என்றால், அது இல்லாத ஊருக்குப் போகாத பாதையைத் தெரியாத மனிதனிடம் புரியாத விதமாகப் பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும். அப்படியே பிரிவதாக இருந்தாலும் திராவிடக் கூட்டாட்சியில் தமிழ் மொழி அரசியல் மொழியாக இருக்குமா? அதனைத் திராவிட நாட்டார்கள் அனைவரும் ஒப்புவரா? என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நலமாகும். 

அப்படியே ஒப்பினாலும், கூட்டாட்சியில் உறுப்பினராக இருக்கும் வடமொழிப்பற்றும், வடசார்பும் உள்ள ஆந்திரர், மலையாளி, கன்னடியர், துளுவர் ஆகிய நால்வருக்கும் எதிராக தமிழ் மொழிப்பற்றும் சார்பும் உள்ள ஒருவன் இருந்து தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன்களை வளர்க்க முடியுமா? முடியாவிட்டாலும் பாதுகாக்கவாவது முடியுமா? என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். 

அவ்விதமே முடிந்தாலும், அந்தக் கூட்டாட்சிக்கு உறுப்பினனாகத் தமிழ் நாட்டின் தலைவனைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டாமா? தேர்ந்தெடுக்க தமிழ்நாடு முழுவதும் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டாமா? அத்தகைய அமைப்பு திராவிடத் தலைவருக்குப் போட்டியாகவும், அமைப்பை அமைக்கத் தொண்டு செய்பவர்கள் பித்தலாட்டக்காரர்களாக, அயோக்கியர்களாகத் தோன்றவும் காரணம் என்ன? என்பவைகள் அரசியல் அறிஞர்களால் ஆராய வேண்டியவைகளாகும்.

தமிழ் வாழ்க என்று கூறி, தமிழ்நாடு தமிழருக்கே என அலறி, தமிழர் கழகத்தைத் தோற்றுவித்துத் தமிழர் மாநாடுகளைக் கூட்டி, தமிழ்க்கொடியை உயர்த்தி, இந்தி எதிர்ப்பை நடத்தி, பண முடிப்புகளைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவைகளை அடியோடு ஒழித்துவிட்டு திராவிடம் வளர்க எனக் கூறி, திராவிட நாடு திராவிடருக்கே என அலறி, திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்து, திராவிட மாநாடுகளை நடத்தி, திராவிடக் கொடிகளை உயர்த்தி, திராவிடர்க்குப் போராட வேண்டிய அவசியமும் அவசரமும் என்ன? என்பதற்குத் திராவிடம் இதுவரை பதில் கூறவேயில்லை. தமிழ் வேறு; திராவிடம் வேறு என்பதற்கும், இரண்டும் ஒன்றல்ல என்பதற்கும் இதுவும் போதுமான சான்றாகும்.

தமிழ்ப் பெரியார் என்றும், தமிழ்த் தாத்தா என்றும், தமிழ்நாட்டுத் தலைவர் என்றும், தமிழ்நாட்டுத் தனிப்பெருந்தலைவர் என்றும், தமிழ் மக்கள் அனைவரும் இந்தி எதிர்ப்புக் காலத்தில் அழைத்தும் சொல்லியும் வரலாற்றில் எழுதியும்கூட, அவர் தன்னைக் கன்னடியர் என்று நினைக்கிற நினைப்பும், முனைப்புமே இம்மாற்றத்திற்குத் காரணம் என்பதை அவர் இன்றுவரை மறுக்க முன்வராததால், அது உறுதி செய்யப்பட வேண்டியதேயாகும். 

இதுகாறும் கூறியவைகளைக் கண்டு, தமிழ் எது? திராவிடம் எது? தமிழர் யார்? திராவிடர் யார்? தமிழ்நாடு எது? திராவிட நாடு எது? தமிழ் மக்களுக்கு வேண்டுவது எது? என்ற இவையும், இவை போன்ற பிறவும் ஒருவாறு விளங்கியிருக்கும் என எண்ணி உண்மையை விளக்க இவை போதும் என நம்பி இத்தோடு நிறுத்துகிறோம். 

மகாராசன் தொகுத்த 'திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்' நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,

தொகுப்பாசிரியர்: மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை,

முதல் பதிப்பு: டிசம்பர் 2022,

பக்கங்கள்: 128,

விலை: உரூ 150/-

*

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:

செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506


திங்கள், 6 நவம்பர், 2023

சமூகத்தின் சுய பரிசோதனையை வலியுறுத்தும் நூல்: மணி மீனாட்சி சுந்தரம்


தமிழக பள்ளி மாணவர்கள் வகுப்பறையிலும் பொதுச் சமூகத்திலும் நடந்துகொள்ளும் நெறிபிறழ் நடத்தைகள் அண்மைக்காலத்தில் அதிகரித்தபடியே உள்ளன.இவற்றைக் கண்டும் காணாமலும் கடந்துபோகும் தமிழ்கூறும் நல்லுலகைக் கைப்பிடித்து நிறுத்தி, அவை குறித்து விவாதிக்கவும் மாற்றத்தை முன்னெடுக்கவும் வற்புறுத்துகிறது இச்சிறு நூல்.

மாணவர்களின் தம்மதிப்பற்ற செயல்களுக்கும்,நெஞ்சைப் பதற வைக்கும் வன்முறைகளுக்கும் முக்கிய காரணம், கல்வி பற்றிய அவர்களின் அக்கறையின்மையே என்றாலும்,அந்த அக்கறையற்ற மனோநிலையை வளர்த்தெடுக்கும் கூறுகளை முன்வைத்து இந்நூல் பேசுகிறது.

மேல்நிலைக் கல்வியில்,போட்டித் தேர்வுகளை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள கடினமான பாடத்திட்டமும் தேர்வுமுறையும், மெல்லக் கற்கும் மாணவர்களைக் கற்றலில் இருந்து விலக்கி சமூக உதிரிகளாக மாற்றும் ஆபத்தை விளைவிப்பதை விரிவாகப் பேசுகிறது முதல் கட்டுரை.

இரண்டாவது கட்டுரை,நாங்குநேரியில் சக மாணவனை வெட்டி வீழ்த்திய சாதிய மனோநிலையின் அடிப்படைக் காரணிகளை ஆராய்கிறது.

பிஞ்சு மனங்களில் நஞ்சைக் கலக்கும் சாதி வெறிகொண்ட சமூகம், ஆசிரியர்,பெற்றோர்,சாதிச் சங்கங்கள்,அரசியல்வாதிகள் என குற்றத்திற்குத் துணைபோகும் அனைவரையும் சுய பரிசோதனைக்கு அழைக்கிறது இந்நூல்.

மதுப்பழக்கத்தினால், வளர்ந்த பெரியவர்கள் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ; அவர்களை விட வேகமாக, வளரிளம் பருவத்து மாணவர்கள் போதைப் பழக்கத்தினால் வீழ்ந்துகொண்டிருக்கும் பேராபத்தையும் பேசுகிறது இந்நூல்.

சமூகத்தின் எதிர்காலமான மாணவரைச் சிறந்தவராக,அற உணர்வு கொண்டவராக உருவாக்க வேண்டிய பள்ளிகள், அதற்குரிய போதாமைகளை வளர்த்துக்கொண்டே போவதை எச்சரிக்கின்றது இந்நூல்.

தமிழ்ச்சமூகம்,பண்பாடு, வரலாறு தொடர்பான கட்டுரை நூல்களைத் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் 'ஏர்' மகாராசனின் இந்நூல், கல்வியின் மீதும், சமூகத்தின் மீதும்,மாணவர்களின் எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்ட எவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.

கட்டுரையாளர்:
மணி மீனாட்சிசுந்தரம்,
ஆசிரியர் மற்றும் இலக்கியச் செயல்பாட்டாளர்,
மதுரை.

*
நூலின் பெயர் : 
மாணவர்கள் சமூக உதிரிகளாகும்
பேராபத்து.
நூல் வகை : கட்டுரை 
நூலாசிரியர் : மகாராசன்.
முதற்பதிப்பு : செப்டம்பர் '2023
பக்கங்களின் எண்ணிக்கை : 72
விலை : ரூபாய்.90/-
வெளியீடு : ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை - 606806.
பேச: 99948 80005.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்
90805 14506.

செவ்வாய், 31 அக்டோபர், 2023

மழைவளச் சடங்குகளும் மழைத் தெய்வ வழிபாடும்: மகாராசன்



மழை இல்லாத கோடைக் காலங்களிலும், வறட்சியான காலங்களிலும் தென்மாவட்டங்களின் சிற்றூர்ப் புறங்களில் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு பெண்கள் முன்னெடுக்கும் ஒரு சடங்கு, மழைச் சோறு சடங்கு எனவும் மழைக் கஞ்சிச் சடங்கு எனவும் நிகழ்த்தப்படுகிறது.  பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று, ஊரார் தருகின்ற அரிசி, கம்பு, கேழ்வரகு, சோளம் என எந்தவகைத் தானியங்களாக இருந்தாலும் சேகரித்து, ஊர் மந்தையிலோ அல்லது கண்மாய்க் கரையிலோ ஒரே வட்டகையிலோ அல்லது பானையிலோ கஞ்சியாகச் சமைத்து ஆக்கப்படுகிறது. இது மழைக் கஞ்சி எனப்படுகிறது. 

அன்னந் தண்ணிக்கி வழியில்ல 

கம்மாக் கரையில தண்ணி இல்ல

ஆட்டு மாட்டுக்குத் தண்ணி இல்ல

தவிச்ச வாய்க்குத் தண்ணி இல்ல

பச்சப் பிள்ளைக்குப் பாலுமில்ல 

எனப் பெண்களும் குழந்தைகளும் ஒப்பாரியாய்ப் பாடியபடியே, மழை பெய்ய வேண்டும் என வானத்தை நோக்கி வழிபடுகின்றனர். 

ஊரார் அனைவரும் மழைக் கஞ்சியைப் பகிர்ந்து குடிக்கும் இந்தச் சடங்கானது, மழை வேண்டுதலை நோக்கமாகக் கொண்டது. ஊரார் பலரும் இதில் கலந்து கொண்டாலும், பெண்களே இத்தகையச் சடங்கை முன்னெடுக்கின்றனர். பெண்களும் நிலமும் உயிரின உற்பத்தியின் வளமை அடையாளங்களாக இருப்பதால்தான், நிலத்தின் மழை ஏக்கத்தை - நிலத்தின் மழைத் தவிப்பை - நிலத்தின் மழை வேண்டுதலைப் பெண்கள் முன்வைத்து நிகழ்த்துகிறார்கள். 

நிலம் மட்டுமல்ல, நிலம் சார்ந்து வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மழைநீர் அடிப்படைத் தேவை. மழை இல்லாவிட்டால், வறட்சியும் வறுமையும் பஞ்சமும் ஏற்படும். மழை இல்லாமல் போனால், உயிர் வாழ்வுக்கும் உணவுக்கும் கையேந்தும் நிலை உருவாகும் என்பதை மழைத் தெய்வத்துக்கு முன்னுணர்த்தும் போலச் செய்தல் சடங்குதான் மழைக் கஞ்சிச் சடங்காகும். மக்கள் துயர் கண்டு அல்லது மக்கள் துயர்நிலை அடையாமல் இருக்க, மழைத் தெய்வமானது மழையைப் பொழியும் என்கிற நம்பிக்கையோடும் வேட்கையோடும் வேண்டுதலோடும்தான் இத்தகையச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

மழையை எதிர்நோக்கியும் மழைத் தெய்வ வழிபாட்டையும் உள்ளீடாகக் கொண்ட மழைக் கஞ்சிச் சடங்கைப் போலவே, தமிழ்நாட்டின் தென்பகுதியில் மழைச்சோறு சடங்கு என்பதாகவும் ஒரு சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது. முகவை (இராமநாதபுரம்) மாவட்டத்தில் உள்ள சிற்றூர்ப் புறங்களில் ஆண்டுதோறும் மழை இல்லாத காலகட்டங்களில் மழைச் சோறு சடங்கானது இன்றளவிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இச்சடங்கையும் ஊரில் உள்ள பெண்களே முன்னெடுக்கிறார்கள். 

பெண்களும் சிறுமிகளும் மட்டுமே இச்சடங்கில் பங்கேற்கிறார்கள். பெண்களும் சிறுமிகளுமாகச் சேர்ந்து, ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று, வீட்டார் தருகின்ற சமைத்த உணவு எதுவாயினும் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேகரித்துக் கலந்து, சோற்று உருண்டைகள் பிடித்து, சடங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் சோற்று உருண்டைகள் சாப்பிடக் கொடுக்கின்றனர். பெண்கள் நோன்பிருந்து நிகழ்த்தப்படும் இச்சடங்கில் கும்மிப் பாடல்களும் ஒப்பாரிப் பாடல்களும் பாடப்படுகின்றன. இந்தப் பாடல்கள் யாவும் மழைநீரை மய்யமிட்டதாகவே - மழைத் தெய்வ வழிபாடாகவே அமைந்திருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இத்தகைய மழைவளச் சடங்கு பற்றி பா.அரிபாபு முன்வைத்திருக்கும் கள ஆய்வுத் தரவுகள், மழைத் தெய்வ வழிபாட்டு மரபில் உள்ள இந்திர வழிபாட்டுச் சடங்கின் நீட்சியாக இருப்பதை அடையாளப்படுத்துகின்றன. மழைச் சோறு சடங்கு பற்றி அவர் முன்வைத்திருக்கும் விவரிப்புகள் வருமாறு.

மழைச் சோற்றுச் சடங்கானது, பெரும்பாலான தென்கிராமங்களில் தனித்த குழுவினர் அல்லது ஒரு சாதியினர் மட்டுமே வாழும் ஊர்களில் முன்னெடுக்கப்படுகின்றன. மழைச் சோற்றுச் சடங்கானது மிக எளிமையாக நடத்தப்படினும், நுட்பமாக ஆராய்ந்தால் ஒரு குழுவினர் அல்லது ஒரு சாதிக் குழுவினர் மட்டுமே பங்கெடுப்பது தெரிய வருகிறது. 

ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தெ.அண்டக்குடி, சத்திரக்குடி, இலந்தைக்குளம், பனையடி ஏந்தல் ஆகிய ஊர்களில் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமே வாழ்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். பல சாதிகள் வாழும் கிராமங்களில் மழைச் சோற்றுச் சடங்கினைச் சேர்ந்து செய்வதில்லை. தனித்தனியாகவே செய்கிறார்கள். இங்கு ஊரின் நன்மை பொதுவாக இருப்பினும், சடங்கு நிலையில் சாதிவாரியாகச் சடங்குகளை நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்க உண்மையாகும். 

மழைச் சோறு எடுக்கும்போது எல்லா வீடுகளிலும் சோறு வாங்குகிறார்கள். கிராமங்களில் சாதாரணமாக ஒரு வீடு இன்னொரு வீட்டில் அன்னம் தண்ணீர் புழங்குவது இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லா வீட்டுச் சோறும் ஒரு ஓலைப் பெட்டியில் வாங்கப்படுகிறது. காலம் காலமாகக் கை நனையாது இருத்தல் அல்லது சோறு சாப்பிட மாட்டேன் என்று கூறுகிற பகை உணர்வில் வந்த தீட்டுப் பார்க்கும் நிலை இங்கு மங்குகிறது. 

ஏனெனில், கிராமங்களில் பகையாளி வீட்டுச் சோற்றை எக்காரணம் கொண்டும் சாப்பிடமாட்டார்கள். மழைச் சோற்றுச் சடங்கில் இயல்பாக ஒன்றாகிறது. தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வில் தீட்டுப் பார்ப்பது இல்லை. உருண்டையாக உருட்டிக் கொடுக்கும்போது யாரும் மறுப்பதும் இல்லை. பகை உணர்வின் உச்சத்தைப் பாதுகாக்கும் சோறானது, இங்கு தன்னிலைப்படுத்தப்படுகிறது. ஊரின் பொது நன்மைக்காக இது ஒரு சாதிக்குள் மட்டுமே தற்காலிகமாகச் சாத்தியமாகிறது. 

மழைச் சோற்றுச் சடங்கில் பெண்கள் பாடும் பாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பாடல் வழியாக மழையையும் கடவுளையும், மழை இல்லாமல் தங்களுக்கு ஏற்படும் வாழ்வியல் துன்பத்தையும் எடுத்துரைக்கின்றனர். பாடல்களைப் பாடி வரும்போது இடையிடையே அம்ம மாரி! அம்ம மாரி! என்று திரும்பத் திரும்ப அழைப்பதும், குலவையிட்டு ஒரே மாதிரியாக வணங்குவதும் மழையை வருவிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் காட்டுகிறது. 

மழைச் சோற்றுச் சடங்கின் கடைசியில் ஒப்பாரி வைப்பது முக்கியமானது. போலியான ஒப்பாரிதான். ஆனால், பெண்களும் சிறுமிகளும் இயற்கையாக அழுவதுபோல நடிப்பார்கள். இது இறப்பிற்கான ஒப்பாரி இல்லை. மழையில்லாமல் வாழ்க்கை கடினமாக மாறி விட்டதே என்று புலம்பும் ஒப்பாரி. இதிலும் ஊரின் நன்மையே மையமாகிறது. எல்லா நாட்டுப்புறச் சடங்குகளும் ஊரின் பொது நன்மையை முதன்மைப்படுத்தி எதனையும் செய்யத் துணிகிறது. 

மக்களின் விருப்பம், மழை பொழிவதை மையமாகக் கொண்டிருந்தாலும், இன்னலை (வறட்சி) எதிர்கொள்ளும்போது மக்கள் அனைவரும் அந்த ஆண்டில் ஏற்பட்ட பகை உணர்வுகளை மறந்து ஒன்று சேர்கின்றனர் என்பதும், பெரும் குழுவாகச் சேர்ந்து செயல்படுவதன் மூலம் சமூக ஒருங்கிணைவையும் எதிர்பார்ப்புகளையும் எட்ட முடிகிறது என்பதும் திருவிழாவழி வெளிப்படுகிறது என்று கூறுவார் பக்தவத்சல பாரதி. 

மழை பெய்தால் பயிர்கள் விளையும்; உணவுக்குப் பஞ்சம் இருக்காது; ஆநிரைகளுக்குத் தண்ணீரும் உணவும் கிடைக்கும்; மக்களுக்கு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு; ஊரை விட்டுச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதே நிலையில், மழை பெய்யாவிட்டால் மேலே சுட்டிக்காட்டிய அனைத்தும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், கிடைக்க வேண்டியே - மக்கள் எது நடக்கப் போகிறதோ அதை நிகழ்த்திக் காட்டி இயற்கையைப் பணிய வைக்க விரும்புகிறார்கள். பஞ்சம் பிழைக்க ஊரு விட்டு ஊரு போகப் போகிறோம் என்பதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். 

சோறு ஒரு ஏக்கமாக மாறுகிறது. இந்தச் சோறு இந்த வருடம் கிடைக்காமல் தவிக்கப் போகிறோம் என்றவாறு சோற்றுப் பெட்டியைத் தலையில் சுமந்து சிறுமிகளோடு ஊரை விட்டுச் செல்வதாக நிகழ்த்திக் காட்டித் திருப்தியடைகிறார்கள். இங்கு விளைச்சல் பொருளாதாரப் பலனாகும். 

இச்சடங்கில் பெண்களே மையம் கொள்கிறார்கள். ஆண்களுக்குச் சிறு பங்களிப்புகூட இல்லை. சோறு வாங்குவது, பாடல் பாடுவது, கும்மியடிப்பது, ஒப்பாரி வைப்பது, பரதேசம் போவது என அனைத்து நிகழ்வுகளிலும் பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படுவதைப் பார்க்க முடிகிறது. சோறு சமைத்தல், வீட்டில் நிலவும் வறுமை, பாடல்களைப் பாடும் தொழில் மரபு, வீடு, புழங்கு வெளி, விவசாய உற்பத்தியை உருவாக்குதல் என, பெண்களின் பங்களிப்பு நிரம்பி வழிவது வரலாறாகும். 

இங்கும் மழைச்சோறு சடங்கை நிகழ்த்தி வளமையை நோக்கி அல்லது மழையை மன்றாடுகிறார்கள் என விவரிக்கும் பா.அரிபாபு,

யானையது யான, அய்யனார் தந்த யான! 

யானைகளைப் பார்த்தா, மேகங்க போல! 

யானை கண்ணுகளப் பார்த்தா, முத்துருண்ட போல! 

யானை காதுகளப் பார்த்தா, சிறு சொளகு போல! 

யான வந்து இறங்கவே, அல்லி அக்கா நாட்டவே!

சேனை வந்து இறங்கவே, 

அண்டக்குடி செல்வம் பொழியுதுன்னு 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

புத்துப் புத்து நாகரே! பூமிக்கும் உடையவரே! அம்ம மாரி!

ஒலக்கம்பு போல நாக்கை நீட்டும் நாகரே! அம்ம மாரி! 

பச்சரிசி போல பல்லிருக்கும் நாகரே! அம்ம மாரி!

சிறு சொளகு போல படமெடுக்கும் நாகரே! அம்ம மாரி! 

தேச ராசாருக! தெய்வேந்திர மன்னருக! 

மம்பட்டிய தோள்ல வச்சு மடை திறக்க வாராக!

மஞ்சள் நீராடி மடையத் தொறந்துவிடு! 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

வட்டிக்கு நெல் வாங்கி வயல வெதச்சு வச்சோம்! அம்ம மாரி! 

வட்டி வளருதையா! வஞ்சாவி ஆகுதையா! அம்ம மாரி!

மானத்து ராசாவே! மேகத்துரை மகனே! 

மேகங்கள ஓடிவந்து ஒரு மழைய எறங்கச் சொல்லுங்க! 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

என்பதான மழைச் சோறு சடங்குப் பாடலையும் பதிவு செய்கிறார். 

வேளாண்மை உழவுத் தொழில் மரபினரால் நிகழ்த்தப்படும் மழைச் சோற்றுச் சடங்கானது, மழைத் தெய்வ வழிபாட்டை உள்ளீடாகக் கொண்டிருப்பதோடு, அத்தகைய மழைத் தெய்வமாக இந்திரனையே - தேவேந்திரனையே அடையாளப்படுத்தும் வழக்காற்று வாய்மொழிப் பாடல்களைச் சடங்கியல் தன்மையோடு புலப்படுத்துகின்றன. இந்திர குலத்தார் எனும் உழவுத் தொழில் மரபினரே இத்தகையச் சடங்குகளை நிகழ்த்தி வருகின்றனர். இதுபோன்ற மழை வளச் சடங்குகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்டும் வருகின்றன.

இடி இடிக்க மழை பொழிய இருகரையும் தண்ணி வர 

பாசி போல மின்னல் மின்ன பவளம் போல உதயமாகி 

ஊசி போல மின்னல் மின்ன உதயம் போல கால் இறங்கி 

சட்டம் போல வாய்க்கால் வெட்டி பாசி போல மின்னல் மின்ன 

பொன்னான மண் வெட்டிகள எடுத்து வந்தார் தேவேந்திரரு!

பொன்னால கொழுவுகள எடுத்து வந்தார் தேவேந்திரரு!

பொன்னால கலப்பைகள கொண்டு வந்தார் தேவேந்திரரு!

எனும் கும்மிப் பாட்டு, மழை வேண்டும் சடங்கில் பாடப்படும் மந்திரப் பாடலாகச் சுட்டுகிறார் தே.ஞானசேகரன். 

வடக்கே மழை கருக்கவே! வாய்மடை எல்லாம் சங்கு புரளவே!

தண்டொதுங்கி தடியொதுங்கி வருகுதாங் காவேரி!

தாழை மடலொதுங்கி வருகுதாங் காவேரி!

கெண்டை மீன் வாய்திறந்து வருகுதாங் காவேரி!

அத்துணைக் காவேரியை - நம்ம 

தேவேந்திரரு ராசதண்ட மாலையிலே தடுத்தொதுங்கி வாராங்கோ!

சேரக் குலவையிடுங்க தேவேந்திரக் கன்னியெல்லாம்! 

எனும் ஏர்வலப் பாட்டையும், மழை வேண்டும் மந்திரப் பாடலாகவே தே.ஞானசேகரன் எடுத்தாள்கிறார். 

மேற்காணும் இரு பாடல்களைக் குறித்து தே.ஞானசேகரன் கூறும்போது, இங்கே மழை வேண்டி ஒரு மாய மந்திரப் பாடல் பாடப்படுகின்றது. அதாவது, மழையின் மைந்தனான இந்திரரை அவரின் மக்கள் வேண்டி விரும்பிப் பாட, அவர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மழை பொழியச் செய்கிறார். அதன் பின்னால், மண்வெட்டி தருகிறார். கழனி உழக் கொழு தருகிறார். கலப்பை தருகிறார். விதைக்கப் பெரும்பாலான நெல்களையும் தருகிறார். உழுவதற்கு மாடு கொண்டு வருகின்றார். இதோடல்லாமல், காவேரியின் வெள்ளத்தில் மீன், சங்கு, நத்தை, தவளையெல்லாம் உண்டாக்கி மருத நிலத்தைச் செழிப்பாக்குகிறார் தேவேந்திரர் என்று இப்பாடல்கள் குறிப்பிடுகின்றன என்கிறார். 

இத்தகைய மழைத் தெய்வ வழிபாட்டை - மழை வேண்டுதலை மய்யப்படுத்திய மழைவளச் சடங்கை நிகழ்த்தும் உழவுத் தொழில் மரபினரைக் குறித்துப் பள்ளு நூல்கள் கூறும்போது,

மாரிப் பொருட்டாய் வரங்குறித்து மள்ளரெல்லாம்

சேரிக் குரவையெழத் தெய்வநிலை போற்றினரே…

காவுக்கு இறைவனாம் இந்திரன்

ஏவல் பண் கொண்டெழுந்தான்

என்கிறது முக்கூடல் பள்ளு. 

அதேபோல, மழைத் தெய்வ வழிபாட்டுச் சடங்கைப் பற்றித் திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு கூறும்போது, 

கழை வேண்டி முத்து ஒளித்த கல்லக நல்நாட்டில் எதிர்

குழை வேண்டிப் பாயும் கொழுங்கண் கடைசியர்கள்

இழை வேண்டிப் பூரித்து எழுமுலைநோய் மள்ளர் எல்லாம்

மழை வேண்டித் தெய்வம் வரம் கேட்கச் சென்றாரே

என்கிறது. 

இதேபோன்ற மழைத் தெய்வ வழிபாட்டுச் சடங்கை மோரூர் நல்ல புள்ளியம்மன் பள்ளு சுட்டும்போது,

செந்நெல் செழித்தோங்கத் தென்மாரியும் பொழிய 

வண்ணமிகும் மள்ளரெல்லாம் வந்து தெய்வம் செய்தனரே

என்கிறது. அதேபோல, மழை வேண்ட தேவேந்திரன் எனும் இந்திரன் மழை பெய்வித்தான் என்பதை,  

தேவேந்திரன்கை விடைகொண்டருளி ஆகாயந்தன்னில் பரவியே 

சேந்து குரவை நீரில் படிந்து மேய்ந்து கருக்கொண்டேகியே 

எனக் கட்டிமகிபன் பள்ளுவின் பாடல் கூறுகிறது. 

இவ்வாறு, மழைத் தெய்வமாக இந்திரனையே வழிபட்டிருப்பதையும், அத்தகைய இந்திரத் தெய்வ வழிபாட்டை மள்ளர் எனும் உழவுத் தொழில் மரபினரே முன்னெடுத்திருக்கின்றனர் என்பதையும் மேற்காணும் பள்ளுப் பாடல்கள் எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக, மேற்காட்டிய தரவுகள் யாவும் மழைத் தெய்வ வழிபாட்டு நீட்சியையும், மழைத் தெய்வ அடையாளமாக இந்திரனையுமே உள்ளீடாகவும் குறியீடாகவும் விளக்கப்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக, ஆரியத்தின் வழிபாட்டுச் சடங்கியலோடும் மரபோடும் அடையாளத்தோடும் தொடர்பில்லாத வகையில், தமிழரின் தனித்த வழிபாட்டு மரபில் காணலாகும் இந்திரத் தெய்வ வழிபாட்டு மரபின் நீட்சியாகவே - மழைத் தெய்வ வழிபாட்டின் பண்பாட்டு நீட்சியாகவே இருந்து வருவது புலனாகிறது.

மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் நூலில் இருந்து…

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை-76

விலை: ரூ.250.

நூல் வேண்டுவோர்

தொடர்புக்கு: 

9080514506.

வெள்ளி, 20 அக்டோபர், 2023

பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்: பாண்டியா


ஒரு மாணவன் சமூக உதிரியாக மாறுவதற்குக்  கடினமான பாட நூல்களும் காரணம் ஆகும்.
அந்தக் கடினத் தன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்,  எவையெல்லாம் எளிதாகக் கிடைக்குமோ  அவைகளைக் கையில் எடுத்துக் கொள்கிறான்.  குறிப்பாக, பீடி, சிகரெட், மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை எளிதாகப் பழக்கப்படுத்திக் கொள்கிறான். அப்பழக்கத்தைச் சினிமாத்துறையும் கற்றுத் தருகிறது.

போதைப் பழக்கத்தோடு சேர்த்து  சாதி வெறியையும் சாதி  வெறியர்களால்  ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள் மாணவர்கள். 

ஆகவே, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்  பாடத்திட்டங்களை  வகுத்துக் கொடுப்பது  அரசின் கடமையாகும் என்று இடித்துரைக்கிறார் தோழர்.


மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறிப்போவதற்கு  முக்கிய காரணியாக விளங்குவது  சாதி. சாதி என்ற பெயரில்  ஒருவன் கல்வியைப் பறிப்பதும்,  அவன் பொருளாதாரத்தை அழிப்பதும்,  அவன் உரிமைகளைத் தடுப்பதும்,    பாலியல் வன்கொடுமை செய்வதும்,  காதல் செய்தால் ஆணவக் கொலை செய்வதுமாகச் சாதிய ரீதியாகத் தொடரும் அவலங்கள் ஏராளம்.  சாதியால் ஒரு மனிதனை இழிவுபடுத்தும்  சாதி வெறியர்களைத்  தன் எழுத்துக்களால்  ஓங்கி உதைத்து இருக்கிறார் தோழர் ஏர் மகாராசன். 


அதேபோல்!  உயர்த்திக்கொண்ட சாதியில் பிறந்த ஒருவர்,  சாதி மறுத்துச் சமத்துவம் பேசுவதையும்  தோழர் ஏர் மகாராசன்  பாராட்டத் தயங்கவில்லை. 

 

அரசியல், சினிமா, கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில்  சாதிகள் அறவே துறந்து, சமத்துவத்தையும் மனித நேயத்தையும்  வளர்த்தெடுக்க நாம் அனைவரையும்  போராட வலியுறுத்துகிறார் தோழர் ஏர் மகராசன்.


அனைத்து வீடுகளிலும் பெற்றோர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. அனைத்துப் பள்ளிகளிலும்  ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

ஆசிரியர்களும் காலத்திற்கு ஏற்ப மாணவர்களின் நலன் கருதி  தங்களை அப்டேட் செய்துகொள்வது அவசியம்.

கற்றுக் கொடுக்கும்  ஆசிரியர்களாக இல்லாமல்,  கற்றுக்கொள்ளும் மாணவராகவும் இருப்பதே சிறப்பு. 


ஒரு மனிதனுக்கு  மனசு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒரு நெடுஞ்சாலையில்  டூவீலரில் பயணம் செய்யக்கூடிய யார் எவர் என்றே தெரியாத ஒருவரை, அவர் என்ன மதம்?  அவர் என்ன சாதி? அவர் எந்த ஊர்? அவர் பெயர் என்ன!?  என்பதையெல்லாம் கேட்டறியாமல், உடுக்கை இழந்தவன் கைபோல   "சைடு ஸ்டாண்ட எடுத்துவிட்டு வண்டி ஓட்டுப்பா" என அறிவுறுத்தும் அந்த மனிதநேயக் குரலும் மனசும் அனைவரிடத்திலும்  இருக்க வேண்டும்; அனைத்துக் காரியங்களுக்காகவும் எதிரொலிக்க வேண்டும்.  

 

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் இந்நூல் அருமையான படைப்பு; வாசிக்க வேண்டிய புத்தகம் ஆகும்.

பாராட்டப்பட வேண்டியவர் தோழர் ஏர் மகாராசன்.


'மாணவர்கள் சமூக

உதிரிகளாகும் பேராபத்து' 

என்ற நூலை எழுதிய தோழர் ஏர் மகாராசன் அவர்களுக்குச்  சிறப்பு நன்றிகளும் வாழ்த்துகளும். ஏனெனில், இந்நூலை   எழுதுவதற்குத் தனி தைரியம் வேண்டும். 


யாரையும் அவர் விட்டு வைக்கவில்லை. இச்சமூகச் சீரழிவுக்கு  நாம் அனைவருமே காரணம் என்கிறார்.  அதைச் சரி செய்வதற்கும்  நாம்தான் பொறுப்பெடுக்க வேண்டும் என்கிறார்.  


நன்றியும் வாழ்த்துக்களும் தோழர்.  


கட்டுரையாளர்:

பாண்டியா,

கவிஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்.

பெரியகுளம்.


*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.


வியாழன், 12 அக்டோபர், 2023

பள்ளி வகுப்பறையில் இருந்து, பொது சமூகத்திற்கு ஒரு அவசரத் தந்தி: பரத்ராம் முத்தையா.

“ஆசிரியர்களை வெறும் பதிவேற்றம் செய்யும் இயந்திரமாக மாற்றிய போதே ஆசிரியருக்கும் - மாணவருக்குமான உறவுச் சங்கிலி உடையத் துவங்கி விட்டது.” – ஆசிரியரும் கல்விச் செயற்பட்டாளருமான தோழர் உமா மகேஸ்வரி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். 

கற்றல், கற்பித்தல் முறையில் இருந்து கல்வியானது வெறும் மதிப்பெண் எடுக்கும் போட்டியாக மாறிவிட்ட காலத்தில் நின்றுகொண்டு சீரழியும் மாணவர்களை காப்பாற்றும் பொறுப்பை அரசு செய்யாது, சமூகம் செய்யாது, வீடுகள் செய்யாது, ஆனால் வாழ்கையின் சிக்கலான பதின்மப் பருவத்தில் இருக்கும் மாணவர்களை மேற்பார்வை செய்யவும், நெறிமுறைப்படுத்தவுமான பொறுப்பை ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் தலையில் சுமத்திவிட்டு, பிரச்சனை நிகழும்போதெல்லாம் அனைத்து விரல்களும் அவர்களை நோக்கியே நீளுகிறது என்றால் கல்விமுறையில் மட்டுமல்ல, சமூக ஒழுங்கிலும் புற்றுநோயாக ஏதோ ஒன்று பீடித்துப் போய் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டு, அதனைச் சரிசெய்யும் மருத்துவத்தை நாம் தொடங்க வேண்டும் என்பதைத் தோழர் ஏர் மகராசனின் "மாணவர்கள் சமுக உதிரிகளாகும் பேராபத்து" நூல் தெளிவுப்படுத்துகிறது.

நூலில் மாணவர்களைக் குறிவைத்துத் தாக்கும் அகச்சூழல் மற்றும் புறச்சூழல்களை வரிசையாகப் பட்டியலிட்டு அதற்கான தீர்வினைத் தனது அனுபவத்தில் இருந்து முடிந்தவரை கொடுத்திருக்கும் விவரிப்பில் ஆசிரியரின் சமூகப் பொறுப்பினைக் காட்டுகிறது. ஆசிரியரின் கட்டுரைத் தொகுப்பில் பள்ளிக் கல்வியின் சீர்கேடுகள், நாங்குநேரி சாதி ஆணவ வெறித் தாக்குதல், சமூக உதிரிகளாகும் மாணவர்கள் ஆகிய கட்டுரைகள் முக்கோண வடிவில் ஒன்றை ஒன்று எவ்வாறு பிணைக்கிறது என்பதை ஒரு சாமானியனாக உணரமுடிகிறது.

பள்ளிக்கல்விப் பாடமுறையில் மேம்படுத்துதல் தேவையா? என்றால் தேவை தான் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

ஆனால், அந்த மேம்பாட்டைச் செய்யும் பள்ளிக்கல்வி அல்லது பாடத்திட்டக் குழுவில் சமூகம் சார்ந்து சிந்திக்கும் மாணவர்களைப் பள்ளிக்கூடம் நோக்கி நகர்த்தும் சிந்தனைகள், உரையாடல்கள் செய்யும் செயற்பாட்டாளர்கள் இருக்கின்றனரா? என்றால் இருக்கின்றனர். 

இவர்களின் பரிந்துரைகளை அரசு ஏற்கின்றனரா? என்றால், இதற்கான பதிலாக “எங்களால் முடிந்தது இதுதான், அரசை நிர்பந்திக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அரசு, தான் கொண்டிருக்கும் கொள்கைவழி அல்லது தேசியக்கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறே தனது முடிவுகளை எடுக்கிறது” என்கின்றனர் குழுவில் இருந்த, இருக்கும் கல்வியாளர்களும் செயற்பட்டாளர்களும். 

சமூகத்தின் மிக முக்கியமான பிரிவினருக்கான வழிக்காட்டும் கொள்கையைக்கூட சமகால சமூகத்தின் விளைவுகளில் இருந்து தீர்மானிக்கத் தயாராகாத பள்ளிக்கல்வித் துறையைத் தான் நாம் பெற்று இருக்கிறோம்.

ஒன்பதாம் வகுப்புவரை முழுமையான தேர்ச்சியைக் கொடுத்துவிட்டு, அடுத்த மூன்று ஆண்டுகளிலும் பொதுத்தேர்வினைத் தொடர்ச்சியாக வைத்து மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் முறையால் இடைநிற்றல், தேர்வுக்கு வராமை போன்றவைகள் மாணவர்களிடம் அதிகரிக்கிறது. BLUE PRINT முறையை நீக்கியிருப்பது சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்குத் தேர்வுமுறை ஒரு சுமையை உருவாக்கியுள்ளதும், இவர்களையும் உள்ளடக்கி 100 விழுக்காடு தேர்ச்சியடைய வைக்க பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும் ஒரு வகுப்பறையில் நிகழும் அகச்சூழல் சார்ந்த பிரச்சனையால், மாணவர்கள் மிக எளிதாகக் கல்வியை வெறுக்கும் அல்லது பயங்கொள்ள வைக்கும் நிலை தான் கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.

நவீன யுகத்தில் எதுவெல்லாம் மனிதனின் ஆற்றலை மிச்சப்படுத்தும் வண்ணம் கண்டுபிடிக்கப்பட்டதோ அவையெல்லாம் இளம்தலைமுறைக்கு எதிராக தனது பரிணாமத்தை எடுக்கிறது. அலைபேசி இன்றைய சூழலில் மாணவர்களுக்குக் கேடாய் மாறிவிட்டதை ஆசிரியர் தனது கையறுநிலையாகக் குறிப்பிடுகிறார்.

Whataspp, Facebook, Instagram போன்ற சமுக வலைதளங்கள்தான் மாணவர்கள் சீர்கெடும் ஊற்றாக உள்ளது. சாதிப் பெருமைக்காக ஒரு குழு, பக்கம், REELS போன்றவைகள் பதின்மப் பருவ மாணவர்களிடம் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களிடம் அதிகம் பகிரப்பட்டு சாதிய உணர்வையும், பகைமையும் உண்டாக்கி இளம் தலைமுறையினரிடம் சாதிக் கயிறு, சாதிச் சங்க லோகோ, சாதிச் சங்கத் தலைவர்கள் படங்கள், பொதுத் தலைவர்களைச் சாதித் தலைவராக மாற்றுவது, விளையாட்டு உடையிலும் சாதிக் குறியீடுகள், சாதி சார்ந்த சேர்க்கைகள் அதிகரிக்கக் காரணமாகி உள்ளது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு, சாதி ஆணவமாக வயதானவர்கள் இருந்தனர். சமுகத்தின் TOXIC Characterகளான இவர்களிடம் இருந்து இவர்களின் சுற்றத்தாரை விலக்கிவைப்பதும், இவர்களின் பங்களிப்பைச் சிறிது சிறிதாய் ஒதுக்கித்தள்ளும் பணியைச் சமூக அறிவியலாக முன்னெடுத்துச் சென்றது படித்த இளைஞர்கள். 

ஆனால், தற்போது TOXIC Characterகளின் செயலைக் கச்சிதமாகச் செய்வது படித்த, தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களே. “நான் கடினப்பட்டுப் படுச்சுட்டேன், வேலைக்குப் போய்ட்டேன், வசதியாக மாறிவிட்டேன்” என்று இந்தச் சமூகம் தனக்குக் கொடுத்ததைச் சமூகத்திடம் திருப்பித் தராமல், தான் சார்ந்த சமூகத்தின் வாழ்வியலை விட்டுவிட்டு கிராமங்களைக் காலிசெய்து நகரத்தில் குடியேறிய நமக்கு முந்தைய தலைமுறை செய்த அலட்சியமே இன்றைய சமூகம் முன்பை விடக் கொடூரமாக, மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், அடுத்தவன் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடையாமல், சாதியைத் தூக்கிக்கொண்டு சீர்க்கேட்டின் பாதையில் பயணிக்கிறோம் என்பதை ஆசிரியரின் வரிகளில் இருந்து உணரமுடிகிறது.

உண்மையில் ஒரு பள்ளி ஆசிரியராக, குழந்தைக்குத் தகப்பனாக, சக நண்பனாக, சமூகத்தின் உறுப்பினராக, தோழராகத் தனது கோபத்தையும் இயலாமையையும் மட்டும் சொல்லிவிட்டு நகராமல், மாணவர்களின் சீர்க்கேடான போக்கிற்கு நாம் அனைவரும் தான் காரணம் என்றும், இன்னும் நமக்கான வாய்ப்புகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் நமது பங்களிப்பினைத் தர வேண்டும் என ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நம்பிக்கையாக விடுக்கும் பேரழைப்பாகவே இந்த நூல் உள்ளது.

 "ஏன்னா, எல்லாரும் சமம் தானே டீச்சர்!"

கட்டுரையாளர்:
பரத்ராம் முத்தையா,
வழக்குரைஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்,
தமிழ்த்தேச மாணவர் இளைஞர் இயக்கம்,
ஈரோடு.
*



மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.

திராவிடம், முன் திராவிடம் : ஐரோப்பியர்களின் விளக்கங்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணானவை; தெளிவற்றவை; கற்பனையானவை. ❍ அறிஞர் ம.சோ.விக்டர்.



கிரேக்கம் - இலத்தீன் - செமிட்டிக் ஆகிய மொழிகளுக்கான முன்மொழி (Proto Language) எதுவெனத் தெரியவில்லையென ஐரோப்பியர் கூறிய நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் நிகழ்கால ஆய்வுகள், அந்த முன்மொழி தமிழே என்பதை, செமிட்டிக் இலக்கியங்கள் வாயிலாகவே நிறுவ இடமளிக்கின்றன. கடந்த காலங்களில் மொழிகளைப் பற்றி ஆய்வுகள் மேற்கொண்ட ஐரோப்பியர்கள், தமிழ்மொழியைப் பற்றிய சிந்தனைகள் இல்லாமலிருந்தனர். 

மொழியியல் வரலாற்றின் தொடக்கத்தை அவர்கள் தொடவேயில்லை. ஒரு வரலாற்றின் இடையில் புகுந்த ஐரோப்பியர்களால் தெளிவான முடிவுகள் எடுக்கப்படாமல் போனதற்கு இதுவே காரணமாகும். 

செமிட்டிக் குடும்ப மொழிகளிலும், இந்திய - ஐரோப்பிய மொழிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் பொதிந்து கிடப்பதை தமிழரே கூட அறிந்திருக்கவில்லை. மேற்கண்ட மொழிகளிலிருந்து கண்டறியப்பட்ட இலக்கியங்களும், தமிழ்ச் சூழல்களையே கொண்டிருப்பதை ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. 

தமிழ்மொழி பற்றிய தவறான வரலாற்றைத் தந்த ஐரோப்பியர்களின் மொழிக் கொள்கையை நம்பியிருந்த தமிழறிஞர்களுக்கும், தமிழே முதன்மொழி என்ற உண்மை விளங்கவில்லை. தமிழின் தொன்மையையுணர்ந்த சில ஆய்வாளர்கள் கூறிய செய்திகளை, மொழியைப் பற்றி எதுவுமே தெரியாத சில தமிழ்ப் பகைவர்கள், தமிழை முதன்மொழி என்று சொல்வதை ஒரு வழக்காகவே கொண்டிருக்கின்றனர் எனக் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். தமிழரைத் தவிர்த்த பிற மொழிக்காரர் எவரும் தம் மொழியே உலகின் மூத்த மொழி, முதன் மொழியென்று சொல்ல முன்வருவதில்லை. அவ்வாறு சொல்வதற்கான அடிப்படையும், மொழி அடிப்படையும், மொழி அறிவும் அவர்களுக்கு இருப்பதுமில்லை.

இந்நிலையில் இந்திய மொழிகளை ஆய்வு செய்த ஐரோப்பியர், சமற்கிருதமே இந்தியாவின் மூத்த மொழியென்றும், தமிழ் உள்ளிட்ட மொழிகள் அனைத்தும் சமற்கிருதத்தின் கிளை மொழிகளே எனக் கூறி வந்தனர். அவ்வாறு கூறியவர்களும் சமற்கிருத மொழியின் தோற்ற காலம், அதன் வளர்ச்சி பற்றிய வரலாறு எதனையும் தெளிவுபடுத்தவில்லை. 

சமற்கிருத மொழியின் நிலைப்பாடு, சிந்துவெளி நாகரிகம் வெளிப்பட்டபோது தளர்ந்து போயிற்று சமற்கிருத மொழி உருவாவதற்கு முன்பே, இந்தியாவில் தொன்மையான நாகரிக மாந்தர் வாழ்ந்திருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில், தமிழைப் பற்றிய சிந்தனை மேலோங்கியது. இச்சூழலில்தான் இந்தியாவின் வடக்கே சமற்கிருதம், தெற்கே தமிழ் என்ற இரு மொழிக் குடும்பங்கள் இருந்தன என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

வட இந்தியாவில் பேசப்பட்டு வரும் இந்தி, பஞ்சாபி, காஷ்மீர், வங்காளி, உருது போன்றவை சமற்கிருதத்தினின்றும் கிளைத்தவைகளாகக் கூறினர். தென்னிந்திய மொழிகள் பற்றிய கருத்தை வெளிப்படுத்தும்போது, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு போன்ற மொழிகள் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவை என்று கருதினர். வட இந்திய மொழிகளுக்கு சமற்கிருதம் முன்மொழி என்று கூறியவர்களால், தென்னிந்திய மொழிகளுக்கு முன்மொழி எதுவென அவரால் கூற இயலவில்லை அல்லது தெரியவில்லை. 

இச்சூழலில்தான் தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்றும், இதற்கான முன் மொழி திராவிடம் என்றும் கால்டுவெல் கூறினார். திராவிட மொழிகளில் தமிழும் ஒரு மொழியாகக் கருதப்பட்டது. திராவிட மொழிகளில் முதன் மொழியை அறிய இயலாத ஐரோப்பியர், அம்மொழியை முன் திராவிடம் (Proto - Dravidian) என்றனர்.

திராவிடம் என்ற சொல்லே குழப்பான பொருளைத் தருவதாக உள்ளதை அறியாமல், திராவிடம் என்ற ஒரு மொழியிருந்ததாகக் கற்பனை செய்து கொண்டு, அதனை முன் திராவிடம் என்றனர். ஆய்வு செய்து அறியத் தெரிந்திராத மூத்த மொழியை முன்மொழி என்று சொல்லிவிடுவது ஐரோப்பியரின் உத்திகளில் ஒன்றாகும். 

திராவிடம் என்ற மொழியே இல்லாத போது முன் திராவிடம் என்ற மொழி எங்கிருந்து வந்தது? இதுவரை எவரும் இதற்கான விளக்கத்தை அளிக்க முன்வரவில்லை இந்த அடிப்படையில் சிந்துவெளியில் வாழ்ந்திருந்தவர்கள் திராவிடர்களே என்று கூறி, அவர்கள் பேசிய மொழியே திராவிடம் என்றும் கூறினர்.

 திராவிடம் என்ற சொல்லே, தென்னிந்தியப் பகுதிகளையே குறிப்பதாகக் கூறும் சமற்கிருத விளக்கங்களுக்கு மாறாக, சிந்துப் பகுதியில் குடியிருந்தவரை எவ்வாறு திராவிடர் என அழைத்தனர். சிந்துவெளி நாகரிகம் அறியப்பட்ட காலத்தில், தென்னிந்தியாவில் மக்கள் வாழ்ந்திருந்தனரா? அப்படி வாழ்ந்திருப்பின் அவர்களுடைய மொழிக்கு என்ன பெயர் இருந்தது? இந்தியா முழுவதுமே ஓரின மக்களே வாழ்ந்திருந்தனர் எனக் கருதினால், அவர்களை திராவிடர் என்று அழைப்பது பொருத்தமற்றதாக உள்ளது என்பது பற்றியெல்லாம் ஐரோப்பியர்கள் சிந்திக்கவில்லை. லெகோவரி போன்றவர்கள், திராவிடர்களின் தாயகம் மெசபத்தோமியாவே என்று கூறினார். மெசபத்தோமியாவில் வாழ்ந்திருந்தவர்களை திராவிடர் என்று எந்த இலக்கியமாவது சுட்டுகிறதா?

திராவிடம், முன் திராவிடம் என்றவாறு ஐரோப்பியர்கள் அளித்த விளக்கங்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணானவை, தெளிவற்றவை, கற்பனையானவை என்பதை, திராவிடம் என்ற சொல்லுக்கு சமற்கிருத மொழி இலக்கியங்கள் தரும் விளக்கங்களே சான்று அளிக்கக் கூடியவை. 

தென்னிந்திய மொழிகளுக்குத் தாய்மொழி தமிழே என்ற உண்மையையாவது ஐரோப்பியர் புரிந்திருக்க வேண்டும். திராவிடம், திராவிடர், திராவிட மொழியென மேலை நாட்டார் தந்த விளக்கங்கள், தமிழை முதன்மைப்படுத்திக் கூறப்பட்டவைகளே என்பதையும், தமிழர், தமிழ்மொழி என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தியிருந்தால், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம் என்பதையும் புரிந்து கொள்ளலாம். 

இக்குழப்பமான நிலையைத் தவிர்க்கும் வகையில்தான் எல்லிஸ் துரைமகனார், தென்னிந்திய மொழிகள் என்று குறிப்பிட்டார். ஆனால் கால்டுவெல், திராவிட மொழிகள் எனக் குறிப்பிட்டது, தமிழின் வரலாற்றையே திசை திருப்பி விட்டதோடு, பிற்கால ஆய்வாளர்கள் அனைவரும் திராவிடம் என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டனர். பலமுறை சொல்லப்பட்டது உண்மையாகிவிடும் என்பதைப் போல, திராவிடம் என்ற இல்லாத மொழி இருந்ததாகக் காட்டப்பட்டது. 

பஞ்ச திராவிடம் என்ற அமைப்பில் தமிழ் இடம் பெறாத போது, மகாபாரதம் தமிழ்நாட்டைத் திராவிடமாகக் காட்டாத போது, திராவிடம் என்பது இடத்தைக் குறித்ததேயன்றி, மக்களையோ மொழிக் குழுவையோ குறிக்கவில்லை என்று சமற்கிருத மொழியிலேயே காணப்படும் விளக்கங்களை மீறி, திராவிடம் என்ற சொல்லுக்குப் புதிய விளக்கத்தைக் கொடுத்தவர்கள், பிற்காலத்தில் தமிழ்ப் பகைவர்கள் வாயை மெல்லுவதற்குத் தீனி போட்டுவிட்டார்கள் என்பதே உண்மை நிலையாகும்.

தமிழைத் தவிர்த்த தென்னிந்திய மொழிகள் கி.மு.1500 ஆண்டுகளுக்குப் பிறகே கிளைத்தன என்பதற்கான சான்றுகள்உள்ளன. கி.மு.2000 ஆண்டுகளில் எழுதப்பட்ட (இதுவும்கூட குறைக்கப்பட்ட கால அளவே) தமிழ் எழுத்துப் பதிவுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இக்கால அளவில்கூட இந்தியாவின் எந்த மொழிக்கான குறிப்புகளும் கிடைக்கவில்லை. 

கி.மு.2000 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் தமிழே பேசப்பட்டது என்ற உண்மையை ஐரோப்பியர்களே ஏற்றுக் கொள்கின்றனர். இக்கால அளவில் சமற்கிருதமோ, தென்னிந்தியாவின் பிற மொழிகளோ அறியப்படவில்லை என்பதையும் மொழி ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 

இந்நிலையில், இந்தியாவின் மூத்த மொழி சமற்கிருதம் என்றும், தென்னிந்தியாவின் முன்மொழி திராவிடம் என்றும் எவ்வாறு கூறத்துணிந்தனர். சிந்து வெளியில் பேசப்பட்டது திராவிடமே என்று கூறினால், அங்கு கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகள் பேசும் மக்கள் இருந்தனரா? அதற்கான சான்றுகள் உள்ளனவா என்பதைப் பற்றியெல்லாம் ஆய்வாளர்கள் சிந்திப்பதில்லை.

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,

தொகுப்பாசிரியர்: மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை,

முதல் பதிப்பு: டிசம்பர் 2022,

பக்கங்கள்: 128,

விலை: உரூ 150/-

*

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:

செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506