வியாழன், 12 அக்டோபர், 2023

பள்ளி வகுப்பறையில் இருந்து, பொது சமூகத்திற்கு ஒரு அவசரத் தந்தி: பரத்ராம் முத்தையா.

“ஆசிரியர்களை வெறும் பதிவேற்றம் செய்யும் இயந்திரமாக மாற்றிய போதே ஆசிரியருக்கும் - மாணவருக்குமான உறவுச் சங்கிலி உடையத் துவங்கி விட்டது.” – ஆசிரியரும் கல்விச் செயற்பட்டாளருமான தோழர் உமா மகேஸ்வரி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். 

கற்றல், கற்பித்தல் முறையில் இருந்து கல்வியானது வெறும் மதிப்பெண் எடுக்கும் போட்டியாக மாறிவிட்ட காலத்தில் நின்றுகொண்டு சீரழியும் மாணவர்களை காப்பாற்றும் பொறுப்பை அரசு செய்யாது, சமூகம் செய்யாது, வீடுகள் செய்யாது, ஆனால் வாழ்கையின் சிக்கலான பதின்மப் பருவத்தில் இருக்கும் மாணவர்களை மேற்பார்வை செய்யவும், நெறிமுறைப்படுத்தவுமான பொறுப்பை ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் தலையில் சுமத்திவிட்டு, பிரச்சனை நிகழும்போதெல்லாம் அனைத்து விரல்களும் அவர்களை நோக்கியே நீளுகிறது என்றால் கல்விமுறையில் மட்டுமல்ல, சமூக ஒழுங்கிலும் புற்றுநோயாக ஏதோ ஒன்று பீடித்துப் போய் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டு, அதனைச் சரிசெய்யும் மருத்துவத்தை நாம் தொடங்க வேண்டும் என்பதைத் தோழர் ஏர் மகராசனின் "மாணவர்கள் சமுக உதிரிகளாகும் பேராபத்து" நூல் தெளிவுப்படுத்துகிறது.

நூலில் மாணவர்களைக் குறிவைத்துத் தாக்கும் அகச்சூழல் மற்றும் புறச்சூழல்களை வரிசையாகப் பட்டியலிட்டு அதற்கான தீர்வினைத் தனது அனுபவத்தில் இருந்து முடிந்தவரை கொடுத்திருக்கும் விவரிப்பில் ஆசிரியரின் சமூகப் பொறுப்பினைக் காட்டுகிறது. ஆசிரியரின் கட்டுரைத் தொகுப்பில் பள்ளிக் கல்வியின் சீர்கேடுகள், நாங்குநேரி சாதி ஆணவ வெறித் தாக்குதல், சமூக உதிரிகளாகும் மாணவர்கள் ஆகிய கட்டுரைகள் முக்கோண வடிவில் ஒன்றை ஒன்று எவ்வாறு பிணைக்கிறது என்பதை ஒரு சாமானியனாக உணரமுடிகிறது.

பள்ளிக்கல்விப் பாடமுறையில் மேம்படுத்துதல் தேவையா? என்றால் தேவை தான் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

ஆனால், அந்த மேம்பாட்டைச் செய்யும் பள்ளிக்கல்வி அல்லது பாடத்திட்டக் குழுவில் சமூகம் சார்ந்து சிந்திக்கும் மாணவர்களைப் பள்ளிக்கூடம் நோக்கி நகர்த்தும் சிந்தனைகள், உரையாடல்கள் செய்யும் செயற்பாட்டாளர்கள் இருக்கின்றனரா? என்றால் இருக்கின்றனர். 

இவர்களின் பரிந்துரைகளை அரசு ஏற்கின்றனரா? என்றால், இதற்கான பதிலாக “எங்களால் முடிந்தது இதுதான், அரசை நிர்பந்திக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அரசு, தான் கொண்டிருக்கும் கொள்கைவழி அல்லது தேசியக்கல்விக் கொள்கைக்கு ஏற்றவாறே தனது முடிவுகளை எடுக்கிறது” என்கின்றனர் குழுவில் இருந்த, இருக்கும் கல்வியாளர்களும் செயற்பட்டாளர்களும். 

சமூகத்தின் மிக முக்கியமான பிரிவினருக்கான வழிக்காட்டும் கொள்கையைக்கூட சமகால சமூகத்தின் விளைவுகளில் இருந்து தீர்மானிக்கத் தயாராகாத பள்ளிக்கல்வித் துறையைத் தான் நாம் பெற்று இருக்கிறோம்.

ஒன்பதாம் வகுப்புவரை முழுமையான தேர்ச்சியைக் கொடுத்துவிட்டு, அடுத்த மூன்று ஆண்டுகளிலும் பொதுத்தேர்வினைத் தொடர்ச்சியாக வைத்து மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் முறையால் இடைநிற்றல், தேர்வுக்கு வராமை போன்றவைகள் மாணவர்களிடம் அதிகரிக்கிறது. BLUE PRINT முறையை நீக்கியிருப்பது சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்குத் தேர்வுமுறை ஒரு சுமையை உருவாக்கியுள்ளதும், இவர்களையும் உள்ளடக்கி 100 விழுக்காடு தேர்ச்சியடைய வைக்க பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடியும் ஒரு வகுப்பறையில் நிகழும் அகச்சூழல் சார்ந்த பிரச்சனையால், மாணவர்கள் மிக எளிதாகக் கல்வியை வெறுக்கும் அல்லது பயங்கொள்ள வைக்கும் நிலை தான் கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது.

நவீன யுகத்தில் எதுவெல்லாம் மனிதனின் ஆற்றலை மிச்சப்படுத்தும் வண்ணம் கண்டுபிடிக்கப்பட்டதோ அவையெல்லாம் இளம்தலைமுறைக்கு எதிராக தனது பரிணாமத்தை எடுக்கிறது. அலைபேசி இன்றைய சூழலில் மாணவர்களுக்குக் கேடாய் மாறிவிட்டதை ஆசிரியர் தனது கையறுநிலையாகக் குறிப்பிடுகிறார்.

Whataspp, Facebook, Instagram போன்ற சமுக வலைதளங்கள்தான் மாணவர்கள் சீர்கெடும் ஊற்றாக உள்ளது. சாதிப் பெருமைக்காக ஒரு குழு, பக்கம், REELS போன்றவைகள் பதின்மப் பருவ மாணவர்களிடம் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களிடம் அதிகம் பகிரப்பட்டு சாதிய உணர்வையும், பகைமையும் உண்டாக்கி இளம் தலைமுறையினரிடம் சாதிக் கயிறு, சாதிச் சங்க லோகோ, சாதிச் சங்கத் தலைவர்கள் படங்கள், பொதுத் தலைவர்களைச் சாதித் தலைவராக மாற்றுவது, விளையாட்டு உடையிலும் சாதிக் குறியீடுகள், சாதி சார்ந்த சேர்க்கைகள் அதிகரிக்கக் காரணமாகி உள்ளது.

அரை நூற்றாண்டுக்கு முன்பு, சாதி ஆணவமாக வயதானவர்கள் இருந்தனர். சமுகத்தின் TOXIC Characterகளான இவர்களிடம் இருந்து இவர்களின் சுற்றத்தாரை விலக்கிவைப்பதும், இவர்களின் பங்களிப்பைச் சிறிது சிறிதாய் ஒதுக்கித்தள்ளும் பணியைச் சமூக அறிவியலாக முன்னெடுத்துச் சென்றது படித்த இளைஞர்கள். 

ஆனால், தற்போது TOXIC Characterகளின் செயலைக் கச்சிதமாகச் செய்வது படித்த, தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களே. “நான் கடினப்பட்டுப் படுச்சுட்டேன், வேலைக்குப் போய்ட்டேன், வசதியாக மாறிவிட்டேன்” என்று இந்தச் சமூகம் தனக்குக் கொடுத்ததைச் சமூகத்திடம் திருப்பித் தராமல், தான் சார்ந்த சமூகத்தின் வாழ்வியலை விட்டுவிட்டு கிராமங்களைக் காலிசெய்து நகரத்தில் குடியேறிய நமக்கு முந்தைய தலைமுறை செய்த அலட்சியமே இன்றைய சமூகம் முன்பை விடக் கொடூரமாக, மனித உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், அடுத்தவன் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியடையாமல், சாதியைத் தூக்கிக்கொண்டு சீர்க்கேட்டின் பாதையில் பயணிக்கிறோம் என்பதை ஆசிரியரின் வரிகளில் இருந்து உணரமுடிகிறது.

உண்மையில் ஒரு பள்ளி ஆசிரியராக, குழந்தைக்குத் தகப்பனாக, சக நண்பனாக, சமூகத்தின் உறுப்பினராக, தோழராகத் தனது கோபத்தையும் இயலாமையையும் மட்டும் சொல்லிவிட்டு நகராமல், மாணவர்களின் சீர்க்கேடான போக்கிற்கு நாம் அனைவரும் தான் காரணம் என்றும், இன்னும் நமக்கான வாய்ப்புகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் நமது பங்களிப்பினைத் தர வேண்டும் என ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நம்பிக்கையாக விடுக்கும் பேரழைப்பாகவே இந்த நூல் உள்ளது.

 "ஏன்னா, எல்லாரும் சமம் தானே டீச்சர்!"

கட்டுரையாளர்:
பரத்ராம் முத்தையா,
வழக்குரைஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்,
தமிழ்த்தேச மாணவர் இளைஞர் இயக்கம்,
ஈரோடு.
*



மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக