செவ்வாய், 31 அக்டோபர், 2023

மழைவளச் சடங்குகளும் மழைத் தெய்வ வழிபாடும்: மகாராசன்



மழை இல்லாத கோடைக் காலங்களிலும், வறட்சியான காலங்களிலும் தென்மாவட்டங்களின் சிற்றூர்ப் புறங்களில் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு பெண்கள் முன்னெடுக்கும் ஒரு சடங்கு, மழைச் சோறு சடங்கு எனவும் மழைக் கஞ்சிச் சடங்கு எனவும் நிகழ்த்தப்படுகிறது.  பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, ஊரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று, ஊரார் தருகின்ற அரிசி, கம்பு, கேழ்வரகு, சோளம் என எந்தவகைத் தானியங்களாக இருந்தாலும் சேகரித்து, ஊர் மந்தையிலோ அல்லது கண்மாய்க் கரையிலோ ஒரே வட்டகையிலோ அல்லது பானையிலோ கஞ்சியாகச் சமைத்து ஆக்கப்படுகிறது. இது மழைக் கஞ்சி எனப்படுகிறது. 

அன்னந் தண்ணிக்கி வழியில்ல 

கம்மாக் கரையில தண்ணி இல்ல

ஆட்டு மாட்டுக்குத் தண்ணி இல்ல

தவிச்ச வாய்க்குத் தண்ணி இல்ல

பச்சப் பிள்ளைக்குப் பாலுமில்ல 

எனப் பெண்களும் குழந்தைகளும் ஒப்பாரியாய்ப் பாடியபடியே, மழை பெய்ய வேண்டும் என வானத்தை நோக்கி வழிபடுகின்றனர். 

ஊரார் அனைவரும் மழைக் கஞ்சியைப் பகிர்ந்து குடிக்கும் இந்தச் சடங்கானது, மழை வேண்டுதலை நோக்கமாகக் கொண்டது. ஊரார் பலரும் இதில் கலந்து கொண்டாலும், பெண்களே இத்தகையச் சடங்கை முன்னெடுக்கின்றனர். பெண்களும் நிலமும் உயிரின உற்பத்தியின் வளமை அடையாளங்களாக இருப்பதால்தான், நிலத்தின் மழை ஏக்கத்தை - நிலத்தின் மழைத் தவிப்பை - நிலத்தின் மழை வேண்டுதலைப் பெண்கள் முன்வைத்து நிகழ்த்துகிறார்கள். 

நிலம் மட்டுமல்ல, நிலம் சார்ந்து வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் மழைநீர் அடிப்படைத் தேவை. மழை இல்லாவிட்டால், வறட்சியும் வறுமையும் பஞ்சமும் ஏற்படும். மழை இல்லாமல் போனால், உயிர் வாழ்வுக்கும் உணவுக்கும் கையேந்தும் நிலை உருவாகும் என்பதை மழைத் தெய்வத்துக்கு முன்னுணர்த்தும் போலச் செய்தல் சடங்குதான் மழைக் கஞ்சிச் சடங்காகும். மக்கள் துயர் கண்டு அல்லது மக்கள் துயர்நிலை அடையாமல் இருக்க, மழைத் தெய்வமானது மழையைப் பொழியும் என்கிற நம்பிக்கையோடும் வேட்கையோடும் வேண்டுதலோடும்தான் இத்தகையச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

மழையை எதிர்நோக்கியும் மழைத் தெய்வ வழிபாட்டையும் உள்ளீடாகக் கொண்ட மழைக் கஞ்சிச் சடங்கைப் போலவே, தமிழ்நாட்டின் தென்பகுதியில் மழைச்சோறு சடங்கு என்பதாகவும் ஒரு சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகின்றது. முகவை (இராமநாதபுரம்) மாவட்டத்தில் உள்ள சிற்றூர்ப் புறங்களில் ஆண்டுதோறும் மழை இல்லாத காலகட்டங்களில் மழைச் சோறு சடங்கானது இன்றளவிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இச்சடங்கையும் ஊரில் உள்ள பெண்களே முன்னெடுக்கிறார்கள். 

பெண்களும் சிறுமிகளும் மட்டுமே இச்சடங்கில் பங்கேற்கிறார்கள். பெண்களும் சிறுமிகளுமாகச் சேர்ந்து, ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று, வீட்டார் தருகின்ற சமைத்த உணவு எதுவாயினும் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேகரித்துக் கலந்து, சோற்று உருண்டைகள் பிடித்து, சடங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் சோற்று உருண்டைகள் சாப்பிடக் கொடுக்கின்றனர். பெண்கள் நோன்பிருந்து நிகழ்த்தப்படும் இச்சடங்கில் கும்மிப் பாடல்களும் ஒப்பாரிப் பாடல்களும் பாடப்படுகின்றன. இந்தப் பாடல்கள் யாவும் மழைநீரை மய்யமிட்டதாகவே - மழைத் தெய்வ வழிபாடாகவே அமைந்திருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இத்தகைய மழைவளச் சடங்கு பற்றி பா.அரிபாபு முன்வைத்திருக்கும் கள ஆய்வுத் தரவுகள், மழைத் தெய்வ வழிபாட்டு மரபில் உள்ள இந்திர வழிபாட்டுச் சடங்கின் நீட்சியாக இருப்பதை அடையாளப்படுத்துகின்றன. மழைச் சோறு சடங்கு பற்றி அவர் முன்வைத்திருக்கும் விவரிப்புகள் வருமாறு.

மழைச் சோற்றுச் சடங்கானது, பெரும்பாலான தென்கிராமங்களில் தனித்த குழுவினர் அல்லது ஒரு சாதியினர் மட்டுமே வாழும் ஊர்களில் முன்னெடுக்கப்படுகின்றன. மழைச் சோற்றுச் சடங்கானது மிக எளிமையாக நடத்தப்படினும், நுட்பமாக ஆராய்ந்தால் ஒரு குழுவினர் அல்லது ஒரு சாதிக் குழுவினர் மட்டுமே பங்கெடுப்பது தெரிய வருகிறது. 

ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட தெ.அண்டக்குடி, சத்திரக்குடி, இலந்தைக்குளம், பனையடி ஏந்தல் ஆகிய ஊர்களில் குறிப்பிட்ட ஒரு சாதியினர் மட்டுமே வாழ்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். பல சாதிகள் வாழும் கிராமங்களில் மழைச் சோற்றுச் சடங்கினைச் சேர்ந்து செய்வதில்லை. தனித்தனியாகவே செய்கிறார்கள். இங்கு ஊரின் நன்மை பொதுவாக இருப்பினும், சடங்கு நிலையில் சாதிவாரியாகச் சடங்குகளை நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்க உண்மையாகும். 

மழைச் சோறு எடுக்கும்போது எல்லா வீடுகளிலும் சோறு வாங்குகிறார்கள். கிராமங்களில் சாதாரணமாக ஒரு வீடு இன்னொரு வீட்டில் அன்னம் தண்ணீர் புழங்குவது இல்லாமல் இருக்கலாம். ஆனால், எல்லா வீட்டுச் சோறும் ஒரு ஓலைப் பெட்டியில் வாங்கப்படுகிறது. காலம் காலமாகக் கை நனையாது இருத்தல் அல்லது சோறு சாப்பிட மாட்டேன் என்று கூறுகிற பகை உணர்வில் வந்த தீட்டுப் பார்க்கும் நிலை இங்கு மங்குகிறது. 

ஏனெனில், கிராமங்களில் பகையாளி வீட்டுச் சோற்றை எக்காரணம் கொண்டும் சாப்பிடமாட்டார்கள். மழைச் சோற்றுச் சடங்கில் இயல்பாக ஒன்றாகிறது. தொடர்ந்து மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வில் தீட்டுப் பார்ப்பது இல்லை. உருண்டையாக உருட்டிக் கொடுக்கும்போது யாரும் மறுப்பதும் இல்லை. பகை உணர்வின் உச்சத்தைப் பாதுகாக்கும் சோறானது, இங்கு தன்னிலைப்படுத்தப்படுகிறது. ஊரின் பொது நன்மைக்காக இது ஒரு சாதிக்குள் மட்டுமே தற்காலிகமாகச் சாத்தியமாகிறது. 

மழைச் சோற்றுச் சடங்கில் பெண்கள் பாடும் பாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பாடல் வழியாக மழையையும் கடவுளையும், மழை இல்லாமல் தங்களுக்கு ஏற்படும் வாழ்வியல் துன்பத்தையும் எடுத்துரைக்கின்றனர். பாடல்களைப் பாடி வரும்போது இடையிடையே அம்ம மாரி! அம்ம மாரி! என்று திரும்பத் திரும்ப அழைப்பதும், குலவையிட்டு ஒரே மாதிரியாக வணங்குவதும் மழையை வருவிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் காட்டுகிறது. 

மழைச் சோற்றுச் சடங்கின் கடைசியில் ஒப்பாரி வைப்பது முக்கியமானது. போலியான ஒப்பாரிதான். ஆனால், பெண்களும் சிறுமிகளும் இயற்கையாக அழுவதுபோல நடிப்பார்கள். இது இறப்பிற்கான ஒப்பாரி இல்லை. மழையில்லாமல் வாழ்க்கை கடினமாக மாறி விட்டதே என்று புலம்பும் ஒப்பாரி. இதிலும் ஊரின் நன்மையே மையமாகிறது. எல்லா நாட்டுப்புறச் சடங்குகளும் ஊரின் பொது நன்மையை முதன்மைப்படுத்தி எதனையும் செய்யத் துணிகிறது. 

மக்களின் விருப்பம், மழை பொழிவதை மையமாகக் கொண்டிருந்தாலும், இன்னலை (வறட்சி) எதிர்கொள்ளும்போது மக்கள் அனைவரும் அந்த ஆண்டில் ஏற்பட்ட பகை உணர்வுகளை மறந்து ஒன்று சேர்கின்றனர் என்பதும், பெரும் குழுவாகச் சேர்ந்து செயல்படுவதன் மூலம் சமூக ஒருங்கிணைவையும் எதிர்பார்ப்புகளையும் எட்ட முடிகிறது என்பதும் திருவிழாவழி வெளிப்படுகிறது என்று கூறுவார் பக்தவத்சல பாரதி. 

மழை பெய்தால் பயிர்கள் விளையும்; உணவுக்குப் பஞ்சம் இருக்காது; ஆநிரைகளுக்குத் தண்ணீரும் உணவும் கிடைக்கும்; மக்களுக்கு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு; ஊரை விட்டுச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதே நிலையில், மழை பெய்யாவிட்டால் மேலே சுட்டிக்காட்டிய அனைத்தும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், கிடைக்க வேண்டியே - மக்கள் எது நடக்கப் போகிறதோ அதை நிகழ்த்திக் காட்டி இயற்கையைப் பணிய வைக்க விரும்புகிறார்கள். பஞ்சம் பிழைக்க ஊரு விட்டு ஊரு போகப் போகிறோம் என்பதை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். 

சோறு ஒரு ஏக்கமாக மாறுகிறது. இந்தச் சோறு இந்த வருடம் கிடைக்காமல் தவிக்கப் போகிறோம் என்றவாறு சோற்றுப் பெட்டியைத் தலையில் சுமந்து சிறுமிகளோடு ஊரை விட்டுச் செல்வதாக நிகழ்த்திக் காட்டித் திருப்தியடைகிறார்கள். இங்கு விளைச்சல் பொருளாதாரப் பலனாகும். 

இச்சடங்கில் பெண்களே மையம் கொள்கிறார்கள். ஆண்களுக்குச் சிறு பங்களிப்புகூட இல்லை. சோறு வாங்குவது, பாடல் பாடுவது, கும்மியடிப்பது, ஒப்பாரி வைப்பது, பரதேசம் போவது என அனைத்து நிகழ்வுகளிலும் பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்படுவதைப் பார்க்க முடிகிறது. சோறு சமைத்தல், வீட்டில் நிலவும் வறுமை, பாடல்களைப் பாடும் தொழில் மரபு, வீடு, புழங்கு வெளி, விவசாய உற்பத்தியை உருவாக்குதல் என, பெண்களின் பங்களிப்பு நிரம்பி வழிவது வரலாறாகும். 

இங்கும் மழைச்சோறு சடங்கை நிகழ்த்தி வளமையை நோக்கி அல்லது மழையை மன்றாடுகிறார்கள் என விவரிக்கும் பா.அரிபாபு,

யானையது யான, அய்யனார் தந்த யான! 

யானைகளைப் பார்த்தா, மேகங்க போல! 

யானை கண்ணுகளப் பார்த்தா, முத்துருண்ட போல! 

யானை காதுகளப் பார்த்தா, சிறு சொளகு போல! 

யான வந்து இறங்கவே, அல்லி அக்கா நாட்டவே!

சேனை வந்து இறங்கவே, 

அண்டக்குடி செல்வம் பொழியுதுன்னு 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

புத்துப் புத்து நாகரே! பூமிக்கும் உடையவரே! அம்ம மாரி!

ஒலக்கம்பு போல நாக்கை நீட்டும் நாகரே! அம்ம மாரி! 

பச்சரிசி போல பல்லிருக்கும் நாகரே! அம்ம மாரி!

சிறு சொளகு போல படமெடுக்கும் நாகரே! அம்ம மாரி! 

தேச ராசாருக! தெய்வேந்திர மன்னருக! 

மம்பட்டிய தோள்ல வச்சு மடை திறக்க வாராக!

மஞ்சள் நீராடி மடையத் தொறந்துவிடு! 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

வட்டிக்கு நெல் வாங்கி வயல வெதச்சு வச்சோம்! அம்ம மாரி! 

வட்டி வளருதையா! வஞ்சாவி ஆகுதையா! அம்ம மாரி!

மானத்து ராசாவே! மேகத்துரை மகனே! 

மேகங்கள ஓடிவந்து ஒரு மழைய எறங்கச் சொல்லுங்க! 

போடுங்க பெண்கா பொன்னால ஒரு குலவ... 

என்பதான மழைச் சோறு சடங்குப் பாடலையும் பதிவு செய்கிறார். 

வேளாண்மை உழவுத் தொழில் மரபினரால் நிகழ்த்தப்படும் மழைச் சோற்றுச் சடங்கானது, மழைத் தெய்வ வழிபாட்டை உள்ளீடாகக் கொண்டிருப்பதோடு, அத்தகைய மழைத் தெய்வமாக இந்திரனையே - தேவேந்திரனையே அடையாளப்படுத்தும் வழக்காற்று வாய்மொழிப் பாடல்களைச் சடங்கியல் தன்மையோடு புலப்படுத்துகின்றன. இந்திர குலத்தார் எனும் உழவுத் தொழில் மரபினரே இத்தகையச் சடங்குகளை நிகழ்த்தி வருகின்றனர். இதுபோன்ற மழை வளச் சடங்குகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்டும் வருகின்றன.

இடி இடிக்க மழை பொழிய இருகரையும் தண்ணி வர 

பாசி போல மின்னல் மின்ன பவளம் போல உதயமாகி 

ஊசி போல மின்னல் மின்ன உதயம் போல கால் இறங்கி 

சட்டம் போல வாய்க்கால் வெட்டி பாசி போல மின்னல் மின்ன 

பொன்னான மண் வெட்டிகள எடுத்து வந்தார் தேவேந்திரரு!

பொன்னால கொழுவுகள எடுத்து வந்தார் தேவேந்திரரு!

பொன்னால கலப்பைகள கொண்டு வந்தார் தேவேந்திரரு!

எனும் கும்மிப் பாட்டு, மழை வேண்டும் சடங்கில் பாடப்படும் மந்திரப் பாடலாகச் சுட்டுகிறார் தே.ஞானசேகரன். 

வடக்கே மழை கருக்கவே! வாய்மடை எல்லாம் சங்கு புரளவே!

தண்டொதுங்கி தடியொதுங்கி வருகுதாங் காவேரி!

தாழை மடலொதுங்கி வருகுதாங் காவேரி!

கெண்டை மீன் வாய்திறந்து வருகுதாங் காவேரி!

அத்துணைக் காவேரியை - நம்ம 

தேவேந்திரரு ராசதண்ட மாலையிலே தடுத்தொதுங்கி வாராங்கோ!

சேரக் குலவையிடுங்க தேவேந்திரக் கன்னியெல்லாம்! 

எனும் ஏர்வலப் பாட்டையும், மழை வேண்டும் மந்திரப் பாடலாகவே தே.ஞானசேகரன் எடுத்தாள்கிறார். 

மேற்காணும் இரு பாடல்களைக் குறித்து தே.ஞானசேகரன் கூறும்போது, இங்கே மழை வேண்டி ஒரு மாய மந்திரப் பாடல் பாடப்படுகின்றது. அதாவது, மழையின் மைந்தனான இந்திரரை அவரின் மக்கள் வேண்டி விரும்பிப் பாட, அவர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மழை பொழியச் செய்கிறார். அதன் பின்னால், மண்வெட்டி தருகிறார். கழனி உழக் கொழு தருகிறார். கலப்பை தருகிறார். விதைக்கப் பெரும்பாலான நெல்களையும் தருகிறார். உழுவதற்கு மாடு கொண்டு வருகின்றார். இதோடல்லாமல், காவேரியின் வெள்ளத்தில் மீன், சங்கு, நத்தை, தவளையெல்லாம் உண்டாக்கி மருத நிலத்தைச் செழிப்பாக்குகிறார் தேவேந்திரர் என்று இப்பாடல்கள் குறிப்பிடுகின்றன என்கிறார். 

இத்தகைய மழைத் தெய்வ வழிபாட்டை - மழை வேண்டுதலை மய்யப்படுத்திய மழைவளச் சடங்கை நிகழ்த்தும் உழவுத் தொழில் மரபினரைக் குறித்துப் பள்ளு நூல்கள் கூறும்போது,

மாரிப் பொருட்டாய் வரங்குறித்து மள்ளரெல்லாம்

சேரிக் குரவையெழத் தெய்வநிலை போற்றினரே…

காவுக்கு இறைவனாம் இந்திரன்

ஏவல் பண் கொண்டெழுந்தான்

என்கிறது முக்கூடல் பள்ளு. 

அதேபோல, மழைத் தெய்வ வழிபாட்டுச் சடங்கைப் பற்றித் திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு கூறும்போது, 

கழை வேண்டி முத்து ஒளித்த கல்லக நல்நாட்டில் எதிர்

குழை வேண்டிப் பாயும் கொழுங்கண் கடைசியர்கள்

இழை வேண்டிப் பூரித்து எழுமுலைநோய் மள்ளர் எல்லாம்

மழை வேண்டித் தெய்வம் வரம் கேட்கச் சென்றாரே

என்கிறது. 

இதேபோன்ற மழைத் தெய்வ வழிபாட்டுச் சடங்கை மோரூர் நல்ல புள்ளியம்மன் பள்ளு சுட்டும்போது,

செந்நெல் செழித்தோங்கத் தென்மாரியும் பொழிய 

வண்ணமிகும் மள்ளரெல்லாம் வந்து தெய்வம் செய்தனரே

என்கிறது. அதேபோல, மழை வேண்ட தேவேந்திரன் எனும் இந்திரன் மழை பெய்வித்தான் என்பதை,  

தேவேந்திரன்கை விடைகொண்டருளி ஆகாயந்தன்னில் பரவியே 

சேந்து குரவை நீரில் படிந்து மேய்ந்து கருக்கொண்டேகியே 

எனக் கட்டிமகிபன் பள்ளுவின் பாடல் கூறுகிறது. 

இவ்வாறு, மழைத் தெய்வமாக இந்திரனையே வழிபட்டிருப்பதையும், அத்தகைய இந்திரத் தெய்வ வழிபாட்டை மள்ளர் எனும் உழவுத் தொழில் மரபினரே முன்னெடுத்திருக்கின்றனர் என்பதையும் மேற்காணும் பள்ளுப் பாடல்கள் எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆக, மேற்காட்டிய தரவுகள் யாவும் மழைத் தெய்வ வழிபாட்டு நீட்சியையும், மழைத் தெய்வ அடையாளமாக இந்திரனையுமே உள்ளீடாகவும் குறியீடாகவும் விளக்கப்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக, ஆரியத்தின் வழிபாட்டுச் சடங்கியலோடும் மரபோடும் அடையாளத்தோடும் தொடர்பில்லாத வகையில், தமிழரின் தனித்த வழிபாட்டு மரபில் காணலாகும் இந்திரத் தெய்வ வழிபாட்டு மரபின் நீட்சியாகவே - மழைத் தெய்வ வழிபாட்டின் பண்பாட்டு நீட்சியாகவே இருந்து வருவது புலனாகிறது.

மகாராசன் எழுதிய வேளாண் மரபின் தமிழ் அடையாளம் நூலில் இருந்து…

*

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்,

மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை-76

விலை: ரூ.250.

நூல் வேண்டுவோர்

தொடர்புக்கு: 

9080514506.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக