வியாழன், 12 அக்டோபர், 2023

திராவிடம், முன் திராவிடம் : ஐரோப்பியர்களின் விளக்கங்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணானவை; தெளிவற்றவை; கற்பனையானவை. ❍ அறிஞர் ம.சோ.விக்டர்.



கிரேக்கம் - இலத்தீன் - செமிட்டிக் ஆகிய மொழிகளுக்கான முன்மொழி (Proto Language) எதுவெனத் தெரியவில்லையென ஐரோப்பியர் கூறிய நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் நிகழ்கால ஆய்வுகள், அந்த முன்மொழி தமிழே என்பதை, செமிட்டிக் இலக்கியங்கள் வாயிலாகவே நிறுவ இடமளிக்கின்றன. கடந்த காலங்களில் மொழிகளைப் பற்றி ஆய்வுகள் மேற்கொண்ட ஐரோப்பியர்கள், தமிழ்மொழியைப் பற்றிய சிந்தனைகள் இல்லாமலிருந்தனர். 

மொழியியல் வரலாற்றின் தொடக்கத்தை அவர்கள் தொடவேயில்லை. ஒரு வரலாற்றின் இடையில் புகுந்த ஐரோப்பியர்களால் தெளிவான முடிவுகள் எடுக்கப்படாமல் போனதற்கு இதுவே காரணமாகும். 

செமிட்டிக் குடும்ப மொழிகளிலும், இந்திய - ஐரோப்பிய மொழிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் பொதிந்து கிடப்பதை தமிழரே கூட அறிந்திருக்கவில்லை. மேற்கண்ட மொழிகளிலிருந்து கண்டறியப்பட்ட இலக்கியங்களும், தமிழ்ச் சூழல்களையே கொண்டிருப்பதை ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. 

தமிழ்மொழி பற்றிய தவறான வரலாற்றைத் தந்த ஐரோப்பியர்களின் மொழிக் கொள்கையை நம்பியிருந்த தமிழறிஞர்களுக்கும், தமிழே முதன்மொழி என்ற உண்மை விளங்கவில்லை. தமிழின் தொன்மையையுணர்ந்த சில ஆய்வாளர்கள் கூறிய செய்திகளை, மொழியைப் பற்றி எதுவுமே தெரியாத சில தமிழ்ப் பகைவர்கள், தமிழை முதன்மொழி என்று சொல்வதை ஒரு வழக்காகவே கொண்டிருக்கின்றனர் எனக் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். தமிழரைத் தவிர்த்த பிற மொழிக்காரர் எவரும் தம் மொழியே உலகின் மூத்த மொழி, முதன் மொழியென்று சொல்ல முன்வருவதில்லை. அவ்வாறு சொல்வதற்கான அடிப்படையும், மொழி அடிப்படையும், மொழி அறிவும் அவர்களுக்கு இருப்பதுமில்லை.

இந்நிலையில் இந்திய மொழிகளை ஆய்வு செய்த ஐரோப்பியர், சமற்கிருதமே இந்தியாவின் மூத்த மொழியென்றும், தமிழ் உள்ளிட்ட மொழிகள் அனைத்தும் சமற்கிருதத்தின் கிளை மொழிகளே எனக் கூறி வந்தனர். அவ்வாறு கூறியவர்களும் சமற்கிருத மொழியின் தோற்ற காலம், அதன் வளர்ச்சி பற்றிய வரலாறு எதனையும் தெளிவுபடுத்தவில்லை. 

சமற்கிருத மொழியின் நிலைப்பாடு, சிந்துவெளி நாகரிகம் வெளிப்பட்டபோது தளர்ந்து போயிற்று சமற்கிருத மொழி உருவாவதற்கு முன்பே, இந்தியாவில் தொன்மையான நாகரிக மாந்தர் வாழ்ந்திருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில், தமிழைப் பற்றிய சிந்தனை மேலோங்கியது. இச்சூழலில்தான் இந்தியாவின் வடக்கே சமற்கிருதம், தெற்கே தமிழ் என்ற இரு மொழிக் குடும்பங்கள் இருந்தன என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

வட இந்தியாவில் பேசப்பட்டு வரும் இந்தி, பஞ்சாபி, காஷ்மீர், வங்காளி, உருது போன்றவை சமற்கிருதத்தினின்றும் கிளைத்தவைகளாகக் கூறினர். தென்னிந்திய மொழிகள் பற்றிய கருத்தை வெளிப்படுத்தும்போது, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு போன்ற மொழிகள் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவை என்று கருதினர். வட இந்திய மொழிகளுக்கு சமற்கிருதம் முன்மொழி என்று கூறியவர்களால், தென்னிந்திய மொழிகளுக்கு முன்மொழி எதுவென அவரால் கூற இயலவில்லை அல்லது தெரியவில்லை. 

இச்சூழலில்தான் தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்றும், இதற்கான முன் மொழி திராவிடம் என்றும் கால்டுவெல் கூறினார். திராவிட மொழிகளில் தமிழும் ஒரு மொழியாகக் கருதப்பட்டது. திராவிட மொழிகளில் முதன் மொழியை அறிய இயலாத ஐரோப்பியர், அம்மொழியை முன் திராவிடம் (Proto - Dravidian) என்றனர்.

திராவிடம் என்ற சொல்லே குழப்பான பொருளைத் தருவதாக உள்ளதை அறியாமல், திராவிடம் என்ற ஒரு மொழியிருந்ததாகக் கற்பனை செய்து கொண்டு, அதனை முன் திராவிடம் என்றனர். ஆய்வு செய்து அறியத் தெரிந்திராத மூத்த மொழியை முன்மொழி என்று சொல்லிவிடுவது ஐரோப்பியரின் உத்திகளில் ஒன்றாகும். 

திராவிடம் என்ற மொழியே இல்லாத போது முன் திராவிடம் என்ற மொழி எங்கிருந்து வந்தது? இதுவரை எவரும் இதற்கான விளக்கத்தை அளிக்க முன்வரவில்லை இந்த அடிப்படையில் சிந்துவெளியில் வாழ்ந்திருந்தவர்கள் திராவிடர்களே என்று கூறி, அவர்கள் பேசிய மொழியே திராவிடம் என்றும் கூறினர்.

 திராவிடம் என்ற சொல்லே, தென்னிந்தியப் பகுதிகளையே குறிப்பதாகக் கூறும் சமற்கிருத விளக்கங்களுக்கு மாறாக, சிந்துப் பகுதியில் குடியிருந்தவரை எவ்வாறு திராவிடர் என அழைத்தனர். சிந்துவெளி நாகரிகம் அறியப்பட்ட காலத்தில், தென்னிந்தியாவில் மக்கள் வாழ்ந்திருந்தனரா? அப்படி வாழ்ந்திருப்பின் அவர்களுடைய மொழிக்கு என்ன பெயர் இருந்தது? இந்தியா முழுவதுமே ஓரின மக்களே வாழ்ந்திருந்தனர் எனக் கருதினால், அவர்களை திராவிடர் என்று அழைப்பது பொருத்தமற்றதாக உள்ளது என்பது பற்றியெல்லாம் ஐரோப்பியர்கள் சிந்திக்கவில்லை. லெகோவரி போன்றவர்கள், திராவிடர்களின் தாயகம் மெசபத்தோமியாவே என்று கூறினார். மெசபத்தோமியாவில் வாழ்ந்திருந்தவர்களை திராவிடர் என்று எந்த இலக்கியமாவது சுட்டுகிறதா?

திராவிடம், முன் திராவிடம் என்றவாறு ஐரோப்பியர்கள் அளித்த விளக்கங்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணானவை, தெளிவற்றவை, கற்பனையானவை என்பதை, திராவிடம் என்ற சொல்லுக்கு சமற்கிருத மொழி இலக்கியங்கள் தரும் விளக்கங்களே சான்று அளிக்கக் கூடியவை. 

தென்னிந்திய மொழிகளுக்குத் தாய்மொழி தமிழே என்ற உண்மையையாவது ஐரோப்பியர் புரிந்திருக்க வேண்டும். திராவிடம், திராவிடர், திராவிட மொழியென மேலை நாட்டார் தந்த விளக்கங்கள், தமிழை முதன்மைப்படுத்திக் கூறப்பட்டவைகளே என்பதையும், தமிழர், தமிழ்மொழி என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தியிருந்தால், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம் என்பதையும் புரிந்து கொள்ளலாம். 

இக்குழப்பமான நிலையைத் தவிர்க்கும் வகையில்தான் எல்லிஸ் துரைமகனார், தென்னிந்திய மொழிகள் என்று குறிப்பிட்டார். ஆனால் கால்டுவெல், திராவிட மொழிகள் எனக் குறிப்பிட்டது, தமிழின் வரலாற்றையே திசை திருப்பி விட்டதோடு, பிற்கால ஆய்வாளர்கள் அனைவரும் திராவிடம் என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டனர். பலமுறை சொல்லப்பட்டது உண்மையாகிவிடும் என்பதைப் போல, திராவிடம் என்ற இல்லாத மொழி இருந்ததாகக் காட்டப்பட்டது. 

பஞ்ச திராவிடம் என்ற அமைப்பில் தமிழ் இடம் பெறாத போது, மகாபாரதம் தமிழ்நாட்டைத் திராவிடமாகக் காட்டாத போது, திராவிடம் என்பது இடத்தைக் குறித்ததேயன்றி, மக்களையோ மொழிக் குழுவையோ குறிக்கவில்லை என்று சமற்கிருத மொழியிலேயே காணப்படும் விளக்கங்களை மீறி, திராவிடம் என்ற சொல்லுக்குப் புதிய விளக்கத்தைக் கொடுத்தவர்கள், பிற்காலத்தில் தமிழ்ப் பகைவர்கள் வாயை மெல்லுவதற்குத் தீனி போட்டுவிட்டார்கள் என்பதே உண்மை நிலையாகும்.

தமிழைத் தவிர்த்த தென்னிந்திய மொழிகள் கி.மு.1500 ஆண்டுகளுக்குப் பிறகே கிளைத்தன என்பதற்கான சான்றுகள்உள்ளன. கி.மு.2000 ஆண்டுகளில் எழுதப்பட்ட (இதுவும்கூட குறைக்கப்பட்ட கால அளவே) தமிழ் எழுத்துப் பதிவுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இக்கால அளவில்கூட இந்தியாவின் எந்த மொழிக்கான குறிப்புகளும் கிடைக்கவில்லை. 

கி.மு.2000 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் தமிழே பேசப்பட்டது என்ற உண்மையை ஐரோப்பியர்களே ஏற்றுக் கொள்கின்றனர். இக்கால அளவில் சமற்கிருதமோ, தென்னிந்தியாவின் பிற மொழிகளோ அறியப்படவில்லை என்பதையும் மொழி ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 

இந்நிலையில், இந்தியாவின் மூத்த மொழி சமற்கிருதம் என்றும், தென்னிந்தியாவின் முன்மொழி திராவிடம் என்றும் எவ்வாறு கூறத்துணிந்தனர். சிந்து வெளியில் பேசப்பட்டது திராவிடமே என்று கூறினால், அங்கு கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகள் பேசும் மக்கள் இருந்தனரா? அதற்கான சான்றுகள் உள்ளனவா என்பதைப் பற்றியெல்லாம் ஆய்வாளர்கள் சிந்திப்பதில்லை.

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,

தொகுப்பாசிரியர்: மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை,

முதல் பதிப்பு: டிசம்பர் 2022,

பக்கங்கள்: 128,

விலை: உரூ 150/-

*

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:

செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக