ஞாயிறு, 11 ஜனவரி, 2026

தமிழர் மரபில் மீளும் பண்பாட்டு வரலாறு - கு.தமிழ்வேந்தன்




பூமி என்ற ஒரு கோளில் மலைகள், காடுகள், கடல்கள் ஆகியன மூன்றும் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாகி நிலைபெற்று உருமாற்றம் பெற்றதும், ஒரு செல் உயிரியிலிருந்து பரிணாம வளர்ச்சி நிலைகளை அடைந்து அடைந்து,  ஆறறிவு பெற்ற வளர்ச்சியுடைய முழுமையை அடைந்தது மனித இனம். தம்மைச் சூழ்ந்திருக்கும் புற உலகையும் வாழ்வையும் ஆளுமை செய்கிற சமூக உயிரியாகவும் பரிணமித்தது மனித இனம்தான். அதனால்தான், உயர்ந்த பண்புள்ள விலங்கு என மனித இனம் குறிக்கப்படுகிறது.

இயற்கையானது மூன்று நிலங்களை உருவாக்கி வைத்திருந்தது. அந்நிலங்களில் வாழ்ந்த தாவரங்களையும் விலங்குகளையும் மட்டுமல்லாது, சூழல், பொழுது போன்ற இன்னும் பிறவற்றையும் கையாளப் பழகிக்கொள்கிறது மனித இனம். இந்தப் பழக்கத்திலும் உழைப்பிலும்தான் வேளாண்மை செய்வதைக் கற்றுக் கொள்கிறது. அந்த வேளாண்மைக்கு உகந்த புதிய நிலத்தை உருவாக்கிக் கொள்கிறது. அதாவது, அடர்ந்த மலை மற்றும் வன நிலப் பகுதிகளை வேளாண்மைக்கான நிலமாக மாற்றி, உழவு நிலத்திற்கேற்ற மண்ணாக மாற்றி, வேள் எனும் நிலத்தை ஆளும் தொழிலால் வேளாண்மை செய்து தன்னிறைவு காண்கின்றது. 

ஒரு நிலத்தை வேளாண்மைக்கு ஏற்றதான நிலமாக மாற்றுவதைப் ‘பண்படுத்துதல்’ என்பர். நிலத்தைப் பண்படுத்தினால் மட்டுமே வேளாண்மை செழித்தோங்கும். ஒரு நிலத்தை ஆழ அகல உழுது, விதை விதைத்து, நடவு செய்து, நீர் பாய்ச்சி, களையெடுத்து,  அறுவடை செய்து, கதிர் அடித்து, நெல் குவித்து, அவித்து, அரிசியாக மாற்றுவர். இத்தகைய நெல் உற்பத்தியில் நீண்ட கால உழைப்பு மட்டுமே பொதிந்திருக்கவில்லை. இது தனி மனிதர் மட்டும் சார்ந்ததில்லை. தொழில்சார் குழு மனிதர்களின் பங்கேற்பும் கூட்டுழைப்பும் மட்டுமல்ல; பழக்கத்தாலும் உழைப்பாலும் பயில்முறை அனுபவங்களாலும் பெற்றிருந்த தொழில்நுட்ப நுணுக்கங்களின் அறிவும்தான் அதைச் சாத்தியமாக்கியது. நெல் மட்டுமல்ல; வேளாண்மை உற்பத்தியின் - இதர உணவுப் பயிர் உற்பத்தியின் அனைத்து நிலைகளும் நிலத்தைப் பண்படுத்துவதால் உருவாகி நின்றவை ஆகும். 

நிலத்தைப் பக்குவப்படுத்திப் பண்படுத்தும் - ஒழுங்கமைக்கும் பண்பால் வேளாண்மை வளர்ந்தோங்கி வந்திருக்கிறது. அதேபோல, மனித வாழ்வில் பக்குவப்பட்டும் பண்பட்டும் ஒழுங்கமைந்தும் வந்திருக்கும் பண்பைப் ‘பண்பாடு’ எனக் குறிப்பர். இந்தப் பண்பாடு, மனிதப் புலன்களினாலும், மனித உழைப்பினாலும், மனிதக் கூட்டிணைவினாலும் பண்பட்டும் பக்குவப்பட்டும் ஒழுங்கமைந்தும் வடிவமைந்து வந்திருப்பதாகும். அதனால்தான், சங்க காலக் கலித்தொகைப் பாடலானது, ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்கிறது. 

பாடு எனில், பாடுபடுதல் - உழைத்தல் - உற்பத்தி செய்தல் - உருவாக்குதல் என்பது பொருள். மனித வாழ்வின் அடிப்படை நியதியும் இதுதான். அவ்வகையில், மனிதர்களின் பாடறிந்து ஒழுகிய - பாடறிந்து ஒழுகும் மனிதப் பண்பே பண்பாடாக மலர்ந்திருக்கிறது. இத்தகையப் பண்பாட்டுப் புலப்பாடுதான் பண்பாட்டறிவு, பட்டறிவு ஆகும். இவ்வாறமைந்த ‘பண்பாட்டறிவு’ மொழி, கலை, இலக்கியம், நடத்தை, தொழில், வழக்காறு, வழிபாடு, சடங்குகள் போன்ற யாவற்றிலும் படிந்திருக்கிறது. 

ஒழுங்கு வடிவமைக்கப்பட்ட நிலத்தோடு இயைந்த மனித வாழ்வின் கூறாக இருந்தது வேளாண்மை மட்டுமல்ல; மனித சமூகப் பண்பாடும்தான். இந்நிலையில், பண்பட்டு வந்திருக்கும் மனித சமூகம், தமது பண்பாட்டறிவைத் தொடர்ந்து புழங்குவதாலும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் பகிர்ந்தளிப்பதாலும் சமூக மதிப்பளிக்கப்பட்டுப் பேணப்படுகின்றன. அதாவது, மனித இன உயிரியல் பண்பறிவும், மனித சமூகப் பண்பாட்டறிவும் காலம், தலைமுறை கடந்தும் தொடர்ந்து வருவது அல்லது தொடரச் செய்யும் நோக்கில் பின்பற்றப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமான மரபார்ந்த நியதிகள் ‘மரபு’களாய் முகம் கொள்கின்றன. 

ஒழுங்கமைந்த இசை வடிவத்தைப் ‘பண்’ எனும் சொல்லால் சுட்டுவது வழக்கம். பண்பட்டிருக்கும் அல்லது பண்படுத்தும் இசைமைத் தன்மையின் வடிவம்தான் பண் என்பதாகும். இந்தப் பொருண்மையில் நோக்கும்போது, மனித வாழ்வியலின் ஒழுங்கமைந்த நியதிகள் பண்பாட்டு இசைமைத் தன்மையும் அறிவும் ஒருங்கே கொண்டிருப்பதாகும்.

மரபார்ந்த உயிரியல் பண்புகளும், மரபார்ந்த சமூகப் பண்புகளும் பண்பாட்டு மரபுகளாய்ச் சமூகத்தில் தம் இருப்பைக் காட்டியிருக்கின்றன; காட்டிக்கொண்டிருக்கின்றன. அதாவது, மரபு என்பது பண்பட்ட சமூகம் தொடர்ந்து புழக்கத்தில் பயன்படுத்தி வரும் அறிவாகும். இத்தகையப் பண்பாட்டறிவு மனித சமூகத்தோடு தொடர்புடையதாகும். 

மனிதர்கள் கண்டுபிடித்ததில் ஆகச் சிறந்தது மொழிதான். மொழிதான் மனிதரின் சமூக வாழ்வுக்கு முதலில் தேவைப்பட்டது. சமூக வரலாற்றுப் பின்புலத்தோடு அணுகும்போது மொழி என்பது மனித வாழ்வியலில் முதன்மையான கருவியாகத் திகழ்ந்திருக்கிறது. இத்தகைய மொழியின் மூலமாகவே மனித வாழ்வியலின் பொருண்மைகள் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்கிறது தொல்காப்பியம். இந்தப் பின்புலத்தில் நோக்கும்போது, ஒவ்வொரு பண்பாட்டு அசைவுக்குப் பின்பும் ஒரு பொருண்மை இருக்கிறது என்பதையும் அறிய முடியும். 

இந்தப் பண்பாட்டுப் பொருண்மைகள் மரபார்ந்து நின்று மரபாய் நிலைத்திருக்கின்றன. கால மாற்றத்தில் மரபுகள் பல மறைந்திருக்கின்றன. வாழ்வு மாற்றத்திற்கு ஏற்ப மரபுகளும் மாற்று மரபாய் மாறியிருக்கின்றன. மனித வாழ்வின் இருப்பையும் அடையாளத்தையும் தற்காத்துக்கொள்ளும்போதும், ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் கிளர்ந்தெழும்போதும் உருவாக்கப்படும் எதிர்நிலை அல்லது எதிர்ப்பு நிலை வடிவங்களைப் போல, பண்பாட்டு வடிவங்களும் எதிர் மரபுகளாய் உருவாகி நின்றிருக்கின்றன. மனித சமூக வாழ்வு பன்முகம் கொண்டது. அவ்வகையில், பண்பாடு என்பதும் பன்முகத்தைக் கொண்டிருப்பதாகும். மனித சமூக வாழ்வின் அனைத்துப் புலப்பாடுகளிலும் பண்பாட்டுத் தன்மை உள்ளடங்கி இருக்கிறது. 

தமிழ்ச் சமூகமானது தமது மொழி, கலை, இலக்கியம், இலக்கணம், வழக்காறுகள், பொருட்கள் போன்ற யாவற்றிலும் பண்பாட்டுத் தன்மையை வெளிப்படுத்தி வந்திருப்பதை அறிய முடியும். இந்நிலையில், தமிழ்ச் சமூகத்தின் புலப்பாடுகளுக்குப் பண்பாட்டு நோக்கிலான எடுத்துரைப்புகளைத் தமது எழுத்துகளின் மூலமாகத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருப்பவர் மகாராசன் ஆவார். 

மகாராசன் அவர்களது எழுத்துகளின் மையமே நிலம்தான். நிலம்தான் எல்லாவற்றுக்குமான உறவுப் பாலாமாகத் திகழ்கிறது. நிலமும், நிலம் சார்ந்த மனித வாழ்வும், மொழியும், கலையும், இலக்கியமும், பண்பாடும்தான் அவரது எழுத்துகளில் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கின்றன. இவ்வுரையாடல்கள் தமிழ்ச் சமூக வரலாற்றின் பண்பாட்டு அசைவியக்கங்கள் மீதான புதிய பொருண்மைகளைத் தந்துகொண்டிருக்கின்றன. 

தமிழ்ப் பண்பாட்டியலின் மரபுகளையும், மாற்று மரபுகளையும், எதிர் மரபுகளையும் புரிந்துகொள்வதற்குத் துணை நிற்கின்றன. அவ்வரிசையில், மகாராசனின் மற்றுமொரு நூல்தான் ‘தமிழ்ப் பண்பாட்டியல்: மரபு - மாற்று மரபு - எதிர் மரபு’ எனும் இந்நூலாகும்.

இந்த நூலிலுள்ள இருபத்தியொரு கட்டுரைகள் மொழி, வேளாண்மை,  இலக்கியம், கலைகள், கல்வி, மருத்துவம், வழிபாடுகள், வழக்காறுகள், அரசியல் போக்குகள், மனித ஆளுமைகள், நூல்கள், பெயர் அடையாளங்கள் மற்றும் இதழ் சார்ந்து வெவ்வேறு பொருண்மைகளில் எழுதப்பட்டுள்ளன. எனினும், எல்லாக் கட்டுரைகளும் தமிழ்ப் பண்பாட்டியலின் வெவ்வேறு பொருண்மை முகங்களை அடையாளப்படுத்துவதில் ஒன்றிணைகின்றன. தமிழ்ப் பண்பாட்டியல் பொருண்மைகளில் காணப்படுகிற மரபுகளையும், மாற்று மரபுகளையும், எதிர் மரபுகளையும் எல்லாக் கட்டுரைகளும் அதனதன் தளத்தில் எடுத்துரைக்கின்றன. 

தமிழர் மரபில் மீளும் பண்பாட்டு வரலாற்றுக்கான தரவுகளை இந்நூல் வழியாகத் தந்திருப்பதோடு, தமிழ்ப் பண்பாட்டியல் சார்ந்த புதிய கண்ணோட்டங்களையும் பொருள்கோடல்களையும் முன்வைத்திருக்கும் ஆய்வாளர் மகாராசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

தோழமையுடன்
கு. தமிழ் வேந்தன்,
கவிஞர் மற்றும் ஆய்வாளர்.


*

தமிழ்ப் பண்பாட்டியல்: மரபு - மாற்று மரபு - எதிர் மரபு (கட்டுரைகள்),
மகாராசன்,
பக்கங்கள் 192,
முதல் பதிப்பு, திசம்பர் 2025,
விலை: உரூ 200/-
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506.



ஏர் இதழ் நோக்கமும் இலக்கும்: முன்னத்தி ஏர் - தலையங்கம் - மகாராசன்




அறமும் மறமும் நிறைவாகக் கொண்டிருந்த தமிழ்ப் பேரினத்தின் வாழ்வுப் பாடுகளும், வரலாற்றுத் தடங்களும், பண்பாட்டு நடத்தைகளும்,  இலக்கியம், இலக்கணம் உள்ளிட்ட மொழிவழிப் புலப்பாடுகளும், இசை, கூத்து உள்ளிட்ட நிகழ்த்துக் கலை வடிவங்களும், ஓவியம், சிலை, கட்டடம் உள்ளிட்ட நுண்கலை வடிவங்களும், இன்னபிற ஆக்கங்கள் பலவும் தொன்மையும் அழகியலும் பட்டறிவும் சார்ந்த உயிர்ப்பைக் கொண்டிருந்தவை. இத்தகைய மரபுத் தொடர்ச்சியைத்தான் அறிவுச் செயல்பாடாகக் கருதி, பயின்றும் பயிற்றுவித்தும் வந்திருக்கிறது தமிழ் இனம். 

தமிழ் நிலத்தின் சூழலியல் அமைவுகள் பன்முகம் கொண்டிருப்பதைப் போலவே, பல்வேறு நிலச் சூழல்களில் வாழ்ந்த தமிழ் இனத்தின் வாழ்வியல் கோலங்கள், உற்பத்தித் தொழிற்பாடுகள், பட்டறிவுப் புலப்பாடுகள், பண்பாட்டு வழக்காறுகள் யாவும் பன்மைத் தன்மை கொண்டிருக்கக் கூடியவை. திணை நிலங்கள் வேறுவேறாக இருந்தாலும், வாழ்க்கைப்பாடுகளும் தொழிற்பாடுகளும் பண்பாட்டு வழக்காறுகளும் வேறு வேறாக இருந்தாலும், வேறு வேறு தொழிற் குலங்களாக - தொழிற்குடிகளாக இருந்தாலும், எல்லோரையும் - எல்லாவற்றையும் இணைத்த - இணைக்கும் ஆறாவது புலனாக இருந்ததும் இருப்பதும் மொழிதான்; அது தமிழ்தான். 

அதனால்தான், தமிழ் இனத்தின் அறிவுச் செயல்பாடுகள் யாவும் பன்மைத்துவ அழகியலும் அறமும் அரசியலும் கொண்டதாய் வடிவமைந்து வந்திருக்கின்றன. அதாவது, பன்மைத்துவ அறிவு மரபுதான் தமிழினத்தின் தனித்துவ மரபாகக் காலந்தோறும் நீட்சி அடைந்து வந்திருக்கிறது. அத்தகையத் தனித்துவ மரபுதான் பன்முகத் திணை மரபாகத் தமிழில் முகம் காட்டியிருக்கிறது. அவ்வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் திணைகள் பன்முக அறிவு மரபின் பன்முகக் குறியீடுகளாகும். 

பல்வேறு திணை நிலங்களுக்குள்ளும், திணைசார்ந்த தொழில் குலங்களுக்குள்ளும் அறிவுச் செயல்பாட்டுப் பகிர்வுகள், உரையாடல்கள், அரங்கேற்றங்கள், வெளியீடுகள், ஆவணப்படுத்தல்கள், நிகழ்த்தல்கள், ஆக்கங்கள் போன்றவை காலந்தோறும் நடந்திருக்கின்றன. இத்தகையப் பகிர்தலும் ஆவணப்படுத்தலும்தான் தமிழ் மரபைச் செழுமைப்படுத்தியிருக்கின்றன.

இலக்கியங்கள், இலக்கணங்கள், கலை வடிவங்கள், புழங்கு பொருட்கள், வாய்மொழி வழக்காறுகள், பண்பாட்டு நடத்தைகள் போன்றவற்றின் மூலமாக வெளிப்பட்டிருந்த அறிவுச் செயல்பாடுகள் யாவும் பன்மைத்துவங்களை அடையாளப்படுத்தியிருப்பதோடு, பன்மைத்துவ உரையாடல் வெளிகளையும் அதற்கான வாய்ப்புகளையும் உள்ளீடாகக் கொண்டிருந்தன. அதேவேளையில், பன்முக உரையாடல்களாக இருப்பினும் - பன்முகக் குரல்களாய் வெளிப்பட்டிருந்தாலும், தமிழ் எனும் அடையாள வேர்களில் இருந்தே எழும்பியிருக்கின்றன; தமிழ் என்னும் பேரடையாளத்தையே முன்னிலைப்படுத்தி இருக்கின்றன. அவ்வகையில், பன்மைத்துவ மரபுகளின் கூட்டிணைவாகத் தமிழ் மரபின் தனித்துவம் உயிர்ப்படைந்து வந்திருக்கிறது. அதுதான், தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபாய்ப் பரிணமித்திருக்கிறது.

தமிழ் அடையாளத்தின் தனித்துவ வேர்களும், தமிழ் அறிவுச் செயல்பாடுகளின் மரபுத் தொடர்ச்சியும் கால மாற்றத்திற்கு ஏற்பப் புதுமையும் நீட்சியும் பெற்றிருந்த நெடிய வரலாற்றையும் இருப்பையும் தக்க வைத்திருந்தன. இத்தகையத் தமிழ் அடையாள வேர்களின் - தமிழ் அறிவுச் செயல்பாடுகளின் தனித்துவ மரபானது, மானுடம் முழுமைக்குமான - மானுடம் வாழும் நிலப்பரப்பு முழுமைக்குமான - உலக உயிரினங்கள் முழுமைக்குமான வாழ்வறத்தையே பண்பாட்டு அடையாளமாகக் கொண்டிருந்தது. தமிழின் இத்தகையத் தனித்துவ மரபின் வேர்களும் விதைகளும் பல்கிப் பெருகி வளர்ந்திருக்க வேண்டியவை; இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவை. ஆனால், அப்படியான சூழல் தமிழ் நிலத்திற்குள் நெடுங்காலமாய் வாய்த்திருக்கவில்லை.

அயலகத்தாரின் படையெடுப்புகளாலும், ஆட்சி அதிகாரப் பறிப்புகளாலும், நிலப் பறிமுதல்களாலும், அயலினக் குடியேற்றங்களாலும், அயலகப் பண்பாட்டுத் திணிப்புகளாலும் தமிழ் இனமும் நிலமும் வளமும், ஆட்சி அதிகாரக் கட்டமைப்புகளும், மொழி உள்ளிட்ட கலை இலக்கியப் பண்பாட்டு அடையாள மரபுகள் யாவும் கொடுந்தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிட்டிருக்கின்றன. ஆயினும், தமிழ் அடையாள வேர்கள் தமது தனித்துவத்தை இழந்து விடாமல் ஓர் எதிர் மரபைத் தம்மகத்தே வைத்துக்கொண்டு செயலாற்றிக் கொண்டேதான் வந்திருக்கின்றன. 

தமிழ் அடையாளத்தின் இத்தகைய எதிர் மரபு, பன்னெடுங்காலமாய் நீடித்து வந்திருக்கின்றது. தமிழ் அடையாளங்களைச் சிதைப்பதிலும், திரிப்பதிலும், தன்வயப்படுத்துவதிலும், அழிப்பதிலும், மறைப்பதிலும், மறப்பதிலும் பல்வேறு அயலக மரபுகள் மற்றும் அதிகார அமைப்புகள் தீவிரமாய்ச் செயல்பட்டிருப்பது, நிகழ்காலம் வரையிலும் நீண்டிருக்கிறது. ஆயினும், தமிழ் அடையாள வேர்களின் தனித்துவத்தைப் பேணும் எதிர் மரபுச் செயல்பாடுகள், எல்லாக் காலத்திலும் மட்டுமல்லாது நிகழ்காலம் வரையிலும் உடனிருந்தே வந்து கொண்டிருக்கிறது. கூடவே, கால மாற்றங்களுக்கும் வாழ்வியல் மாற்றங்களுக்கும் ஏற்ப மாற்று மரபுகளை உருவாக்கிக்கொண்டும், நிகழ்காலப் புதுமைகளை ஏற்றுக்கொண்டும் செழுமைப்பட்டு வந்திருக்கிறது தமிழ் அடையாளம். அவ்வகையில், மரபும், எதிர் மரபும், மாற்று மரபும், புது மரபும் உள்ளடக்கிய செயல்பாட்டு மரபுதான் தமிழ் அடையாளத்தின் அறிவுச் செயல்பாட்டு மரபாகும்.

இத்தகையத் தமிழ் அடையாள அறிவுச் செயல்பாட்டு மரபை உள்ளார்ந்த உயிர்ப்போடும் உண்மையான வேட்கையோடும் உயரிய நோக்கத்தோடும் புலப்படுத்தும் அறிவுச் செயல்பாடுகளுள் இதழ்வழி உரையாடல்களை முன்னெடுப்பதும் ஒன்றாகும். கொஞ்ச காலத்திற்கு முன்பு ஏர் இதழும் அத்தகைய முன்னெடுப்பைத் தொடங்கி, சிறிது காலம் ஆக்கப்பூர்வமாக வெளிவந்திருந்தது. ஆனாலும், பல்வேறு அக மற்றும் புறக்காரணிகளால் தொடர்ச்சியாக ஏர் இதழைக் கொண்டுவர முடியாமல் போயிற்று.

நிகழ்காலத் தமிழ்ச் சமூகத்தின் போக்குகள் நவீனத்தை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆயினும், நவீன வகைப்பட்ட அறிவியல் தொழில்நுட்ப வசதிகள், மெய்நிகர் சமூக ஊடகங்களின் பெருக்கங்கள் போன்றவை சமூக உரையாடல் வெளிகளைப் பரவலாக்கிக் கொண்டிருந்தாலும், சிற்றிதழ்கள் எனும் மாற்று இதழ்கள் முன்னெடுத்திருந்த உரையாடல் மரபும், அச்சு இதழ் வடிவத்திலான செயல்பாட்டு மரபும் நிகழ்காலத்திற்கும் உரிய தேவையாக இருந்துகொண்டிருக்கின்றன. 

தமிழ் அடையாளத்தின் குரலை, இருப்பை, வாழ்வை, தொன்மையை, நிலத்தை, வளத்தை, வரலாற்றை, அரசியலை, அதிகாரத்தை, வாதத்தை, உரிமையை, அறிவு மரபை, இன்னும் இது போன்ற பிறவற்றைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உரையாடுவதற்கும் ஆய்வு செய்வதற்கும் இதழ்கள் வழியான தேவைகள் நிறைய இருக்கின்றன. கலை, இலக்கியம் மட்டுமல்லாமல், சமூகத்தின் மீதான வாசிப்பும் விவாதமுமான கருத்தாடல் பகிர்வுகள் மாற்று இதழ்களின் வழியாகவும் நடத்தப்பட்டிருக்கின்றன. 

குறிப்பாக, சமூகப் பொது நீரோட்டத்தில் மாற்று உரையாடல்களையும் விரிவான மதிப்பாய்வுகளையும் முன்வைக்க வேண்டிய தேவை இன்னும் இருக்கவேதான் செய்கிறது. ஆயினும், இதழ்கள் வழியிலான அத்தகைய முன்னெடுப்புகள் குறைவாக உள்ள நிகழ்காலச் சூழலில், குறிப்பாக, அச்சு இதழ்கள் வழியிலான முயற்சிகள் மிகமிகக் குறைவாக இருக்கும் சூழலில், ஓர் இதழ் வழியாகச் சமூக உரையாடல்களையும் ஆய்வுகளையும் படைப்பாக்கங்களையும் முன்னெடுக்கும்  வகையில்தான் ஏர் இதழ் மீளவும் வெளிவருகிறது. 

நவீனகாலப் பயணத்தில்  வாசிப்பதற்கும் காண்பதற்கும் மின்னிதழ்கள், மெய்நிகர் மற்றும் சமூக ஊடக வடிவங்கள் முன்வந்துவிட்ட போதிலும், அச்சு இதழுக்கான தேவைகள் இன்னும் குறைந்துவிடவில்லை. அதனாலேயே, அச்சு இதழ் வடிவத்திலேயே பன்முக உரையாடல் முன்னெடுப்புகளை உள்ளடக்கமாகக்கொண்டு புதுப் பொலிவுடன் அரையாண்டு இதழாக  வெளிவருகிறது ஏர் இதழ். 

தமிழ் அடையாளத்  தடத்திலிருந்து ஏர் இதழ் சற்றும் விலகியதில்லை. தீவிர இலக்கிய மரபை மட்டுமே பேசும் இதழாக என்றுமே  முகம் காட்டியதுமில்லை.   தமிழ் நிலத்தின் - தமிழ் இனத்தின் பண்பாட்டு அரசியலைத்தான் உள்ளீடாகக்கொண்டு வெளிவந்திருந்தது. பல்லாண்டுகள் கழித்து மீளவும் புதியதாய் வெளிவரும் ஏர் இதழானது, தொடர்ந்து அந்தத் தடத்திலேயும் களத்திலேயும்தான் எழுத்துழவை மேற்கொண்டு வெளிவருகிறது.  

அகமாகவும் புறமாகவும் தமிழ்ச் சமூகம் இன்று பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சாதிய மேலாதிக்கமும் ஆரிய மதவாத மேலாதிக்கமும் மட்டுப்படாமல் மேலெழுந்து கொண்டிருப்பதோடு, அலை அலையாகப் பரவி மிகப்பெரும் சமூகத் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஆரிய மதவாத மேலாதிக்க அரசியல் போக்கைத் தமிழகத்தில் நிலைநிறுத்தவும், அதற்குத் துணை நிற்கும் சாதிய மேலாதிக்கத்தைத் தக்க வைக்கவுமான முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. அதேவேளையில், ஒடுக்குண்ட உழைக்கும் சமூகங்கள் சாதிய வன்மத்திற்குப் பலியாகி உருக்குலைந்து கிடக்கின்றன. 

அதுமட்டுமல்லாமல், அரசு மற்றும் சமூக நிறுவனக் கொலைகளும், கூலிப்படுகொலைகளும், பாலியல் வல்லுறவுகளும், சாதி ஆணவப் படுகொலைகளுமாய்த் தலைவிரித்தாடுகின்றன. மேலும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் வரை மாணவத் தலைமுறைகளிடம் நுழைந்திருக்கும் குடி மற்றும் போதைக் கலாச்சார நடத்தைகள், அவர்களைச் சமூக உதிரிகளாய் மாற்றிக் கொண்டிருக்கின்றன.  

இவை ஒருபுறம் இருக்க, தமிழ் நிலத்தின் அடையாள அழிப்பு திட்டமிட்டு நிறைவேற்றப்படுவதையும் கவலையோடு முன்வைக்க வேண்டியிருக்கிறது. வட இந்தியப் பகுதியிலிருந்து பெருவாரியான மக்கள் உதிரித் தொழிலாளர்களாகப் பல இலட்சக்கணக்கில் தமிழ்நாட்டிற்குள் குடியமர்த்தப்படுகிறார்கள். இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் இருப்பதைப் போன்ற உள்நுழைவு அனுமதிச் சீட்டு ஏதுமின்றி தமிழ்நாட்டிற்குள் பெருவாரியாக உள்நுழைந்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் பெரும்பாலான பெரு மற்றும் சிறு நகரங்கள் வட இந்தியத் தொழிலாளர்கள் நிரம்பி வழியும் நகரங்களாக  மாறிக்கொண்டிருக்கின்றன. பிழைப்புரிமை மற்றும் வாழ்வுரிமையோடு வாக்குரிமை நோக்கியும் அவர்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகையப் போக்குகள் தொடருமானால், இன்னும் பத்தாண்டுகளுக்குள் தமிழ் நிலப்பரப்பின் ஆட்சி அதிகாரத்தைத் தன்வயமாக்கும் பேராபத்து நிகழத் தொடங்கும்.  தமிழ்ச் சமூகத்தின் வாழ்நிலம் மற்றும் பண்பாட்டுப் பரப்புகளை இந்தியமயமாக்கும் வெளிப்பாடுதான் இத்தகைய வடவர் குடியேற்றங்களாகும்.

இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் நிலவிய - நிலவுகிற ஆட்சி அதிகாரக் கட்டமைப்புகள் யாவும் தமிழ் நிலத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல், தமிழ் இனத்தின் உரிமைகள் பறிபோதல், தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்படுதல், தமிழரின் தொன்மை அடையாளங்கள் மறைக்கப்படுதல் குறித்தெல்லாம் அக்கறைப்பட்டதாக - அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.  மாறாக, தமிழ் நிலத்தின் மீதும் இனத்தின் மீதும், பண்பாட்டு அடையாளங்கள் மீதும் திணிக்கப்பட்ட ஆரியமயமாக்கலைப் போல - இந்தியமயமாக்கலைப் போல,  திராவிடமயமாக்கமும் இங்கு தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

இந்தச் சூழ்நிலையில்தான், மாற்றத்திற்கான எழுத்துழவு எனும் நோக்கக் குரலை உள்ளீடாகக்கொண்டு, தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாக ஏர் இதழ் வெளிவருகிறது. குறிப்பாக, மிக மிக முக்கியமான பாடுபொருள்கள்  அடங்கிய படைப்புகளுடன் வெளிவருகிறது ஏர் இதழ். நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் மதிப்புரைகள் போன்ற மொழிசார் வடிவங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவுசார் உரையாடலை - எழுத்துழவை இந்த இதழ் வழியாக முன்வைத்திருக்கிறது ஏர். 

ஏர் இதழை மீண்டும் அச்சு வடிவில் கொண்டுவருவதற்கான அறிவிப்பையும் வேண்டுகோளையும் மனதார வரவேற்றனர் தமிழ்ச் சமூக உறவுகள். அவ்வகையில், பல தரப்பினரின் பங்களிப்போடுதான் ஏர் இதழ் உருவாக்கம் நிகழ்ந்திருக்கிறது. 

தமிழ் நெடுங்கணக்கு எனும் எழுத்தியல் மரபில் அகரம் எனும் எழுத்தே முதல் எழுத்தாகும். னகரம் எனும் எழுத்தே இறுதி எழுத்தாகும். இதனை, ‘எழுத்தெனப் படுப அகர முதல் னகர இறுவாய்’ என்கிறது தொல்காப்பியம். தமிழ் மறையாம் திருக்குறளில் ஓரிடத்தில்கூட தமிழ் எனும் சொற்பதம் இடம்பெற்றிருக்கவில்லை. ஆயினும், திருக்குறள் தமிழ் மரபின் பின்புலத்திலிருந்து உருவான நூல் என்பதை உள்ளார்ந்து முன்வைத்திருக்கிறார் வள்ளுவர்.  

திருக்குறளின் முதற் குறள் அகரத்தில்தான் தொடங்குகிறது. இறுதிக்குறள் னகரத்தில்தான் முடிகிறது. அவ்வகையில், அகர முதலாய் னகர இறுவாய் என்பதே தமிழ் மரபின் உள்ளீடு ஆகும். தமிழ் மரபின் உள்ளீட்டின் வாயிலாகப் புலப்படும் எழுத்து மரபை - அறிவு மரபை - உரையாடல் மரபை - படைப்பாக்க மரபை இதழ் வழியாகப் புலப்படுத்த முனைந்திருக்கும் ஏர் இதழ், அகரத்தையும் னகரத்தையும் உள்ளீடாகக் கொண்ட ஓவியத்தை முகப்பாகக் கொண்டு வெளிவருவதில் பெருமை கொள்கிறது. 

படைப்புகளை வழங்கியும், ஒப்புதல் கொடுத்தும், உதவிகள் செய்தும் ஏர் இதழ் வெளிவருவதற்குப் பலரும் உதவியிருக்கிறார்கள். தமிழ் மரபின் தனித்துவ இதழாய் வெளிவந்திருக்கும் ஏர் இதழுக்குத் துணை நிற்கும் அனைவருக்கும் பேரன்பும் நன்றியும்தான் கைம்மாறு ஆகும். 

தமிழ் உறவுகளின் வரவேற்பும் வழிகாட்டலும் பங்கேற்பும்தான் ஏர் இதழை இன்னும் வளப்படுத்தும் என நம்புகிறேன்.  

தோழமையுடன்                                                                                      

மகாராசன்

 

**

ஏர் இதழ்.

மாற்றத்திற்கான எழுத்துழவாக..

அரையாண்டு இதழாக இப்போது வெளிவருகிறது..

தமிழ் அறிவுச் செயல்பாட்டு மரபின் தொடர்ச்சியாக, மிக மிக முக்கியமான பாடுபொருள்கள்  அடங்கிய படைப்புகளுடன் தற்போது முதல் பருவத்தின் இதழாக (சூலை- திசம்பர் 2025) வெளிவருகிறது ஏர் இதழ். 

நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் மதிப்புரைகள் போன்ற மொழிசார் வடிவங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்கான அறிவுசார் உரையாடல்களை முன்னெடுத்திருக்கிறது ஏர் இதழ்.

இதழ் உள்ளடக்கம்:

முன்னத்தி ஏர்.

- மகாராசன்

வாழ்த்துச் சொற்கள்.

- பாவலர்கள் காசி ஆனந்தன் மற்றும் அறிவுமதி.


படைப்புகள் நிலத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்க வேண்டும்: சோ.தர்மன் நேர்காணல்.

- பா.ச.அரிபாபு.


தமிழகப் பள்ளிக்கூடங்கள்: அதிகாரம் - கண்டிப்பு - தண்டனை.

- பூவிதழ் உமேஷ்.


தமிழ் ஓலைச்சுவடிகள்: திட்டமிட்ட அழிப்பு எதற்காக?

- நாக.இளங்கோவன்.


கள்: தடை நீக்குவதற்கான போராட்டங்களும் அதன் மீதான விமர்சனங்களும்.

- லிங்கம் தேவா.


‌தமிழரின் பூர்வீகப் பகுதிகளைத் தன்னாட்சி (யூனியன்) பிரதேசமாக

மாற்ற வேண்டும்.

- ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.


கல்வியில் போதாமைகள்: பெற்றோர்கள்-குழந்தைகள்- பள்ளிகள்-ஆசிரியர்கள்.

- சு.உமா மகேஸ்வரி.


பஞ்சமி நிலம்: 

ஒரு வரலாற்றுப் பார்வை.

- குணா


வெள்ளாமை - சிறுகதை

- மு.மகேந்திர பாபு.


மரபுவழி உற்பத்தியும் மேய்ச்சல் தொழிலும்.

- கதிர்நம்பி.


ஈழ நிலமும் தாய்மன நினைவுகளும்.

- மகாராசன்.


சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாகக் குரல் உயர்த்துவோம்.

- அருண் முத்துநாயகம்.


நாவிதர் சமூக வாழ்வும் ஆற்றுநீர்ப் போக்கும்.

- மு.அம்சம்.


கங்கும் நெருப்பும்: வழக்காறுகளும் பதிவுகளும்.

- மா.ச.இளங்கோமணி.


கிடை இதழ் - அறிமுகம்.

- வெற்றிச்செல்வன்.


கண்ணாமூச்சி - சிறுகதை

- தங்கேஸ்.


அபூர்வமான நிலவியலும் அதிசயமான மானுடரும்.

- சா.தேவதாஸ்.


செம்பச்சை நூலகம் - அறிமுகம்.

- மகாராசன் - அம்சம்.


சில்லறைக் காசுகள் - சிறுகதை.

- அய்யனார் ஈடாடி.


குமரிக்கண்டத் தமிழரின் தொன்ம வரலாறு.

- மு.களஞ்சியம்.


‌‌ஓ மேற்குக் காற்றே உனக்கொரு பாடல் - ஷெல்லி கவிதை மொழிபெயர்ப்பு.

- தங்கேஸ்.


‌எங்கள் ஊர்த் தோட்டங்களில் வேலிகள் இருந்தன: சூழலியல் பண்பாடும் வாழ்வியல் பின்புலமும்.

- சு.வேணுகோபால்.


தமிழ்த் திரைப்படங்களில் நிலக் காட்சிகள்.

- ச.தயாளன்.


‌ஆண் பெண் சமத்துவம் சாத்தியமே.

- அமரந்த்தா.


குமார் அம்பாயிரம்: திணை நிலத்தின் மேய்ச்சல்காரன்.

- யவனிகா ஸ்ரீராம்.


கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் விளிம்புநிலை மனிதர்கள்.

- ந.இரத்தினக்குமார்.


பண்பாடுகளை மறுவாசிப்புச் செய்யும் பெண் தொன்மங்கள்.

- இரா.வெங்கடேசன்.


தமிழ்ப்பேழை: ஒருங்கிணைந்த மின்னகராதியின் எதிர்காலவியல்.

- தமிழ்ப்பரிதி மாரி.


வர்மப் பொன்னூசி: சித்த மருத்துவத் தொன்மையும் மடைமாற்றமும்.

- அருள் அமுதன்.


பழங்குடிகளின் நாளை மற்றுமொரு நாளே!

- டி.தருமராஜ்.


தஞ்சைப் பெரியகோவில்: நுட்பமும் மொழியும்.

- மா.மாரிராஜன்.


திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் - நூல் பரிந்துரை.

- சீமான்.

‌கவிதைகள்:

சி.மோகன் | தீபச்செல்வன் |  வெய்யில் | கூடல்தாரிக் | பித்தன் கனவன் | செ.தமிழ்நேயன் ‌| கோமதி | இளையவன் சிவா | அரங்க மல்லிகா | மகாராசன் | சாத்தன் குன்றன் | நெகிழன் | இராசரத்தினம் கேசுதன்.


முதன்மை ஆசிரியர்:
மகாராசன்.

ஆசிரியர் குழு:
பா.ச.அரிபாபு, 
தமிழப்பரிதி மாரி, 
அய்யனார் ஈடாடி, 
மு.மகேந்திர பாபு, 
அ.ம.அங்கவை யாழிசை, செ.தமிழ்நேயன்.

பதிப்பாளர்:
அ.ம.அங்கவை யாழிசை.

வடிவமைப்பு:
நெகிழன்.
முகப்போவியம்:
இயல்.
இதழ் அளவு 18X24 செ.மீ
(டபுள் கிரவுன்),
பக்கங்கள் 224,
விலை உரூ 300/-
இதழ் பெற :
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு,
பேச: 9080514506

திங்கள், 29 செப்டம்பர், 2025

இரமேசு பிரேதன்: இனிமையும் நீர்மையும் வலியும் சுமந்த தமிழ் - மகாராசன்


எழுத்தாளர் இரமேசு பிரேதன், செப்தம்பர் 27இல் காலமாகி விட்டார். ஆய்வு, புனைவு, கவிதை, நாடகம் எனப் பன்முகப் படைப்பாளியாக முகம் காட்டியவர். நான் ஆய்வு மாணவராக இருந்தபோது, அண்ணன் பூமிச்செல்வம் அவர்கள்தான் அவரது நூல்களையெல்லாம் எமக்கு அறிமுகப்படுத்தி வாசிக்கச் சொல்வார். அப்போதிலிருந்து இப்போதுவரை இரமேசு பிரேதன் அவர்களின் எழுத்துகள் எமது வாசிப்புக்குள்ளும் ஆய்வுகளுக்குள்ளும் மொழிப் புலப்பாட்டுக்குள்ளும் ஊடுபாவியிருக்கின்றன. 

ஈ-ழ*ம் குறித்தும்,    பு*லி-க*ள் குறித்தும், தே*சி-ய*த்      த*லை-வ*ர் குறித்தும் பெரு மதிப்பையும் பேரன்பையும் வெளிப்படையாக அறிவித்துக் கொண்டதோடு, தம் எழுத்துகளிலும் அதைப் பதிவு செய்திருப்பார். அதன் பின்புதான் அவர் மீதும் அவரது எழுத்துகள் மீதும் எமக்குப் பெருமதிப்பும் நெருக்கமும்  ஏற்பட்டன.

அண்மையில் வெளிவந்த எமது நூல்களையும், புதியதாக வந்த ஏர் இதழையும் அனுப்பி வைத்திருந்தேன். நூல்களையும் ஏர் இதழையும் பார்த்துவிட்டுப் பெரு மகிழ்ச்சியோடு அழைத்துப் பேசினார். “தமிழர் நிலம், அவர்தம் பண்பாடு குறித்து ஆய்வுத் தரவுகளோடு செறிவான கட்டுரைகள் அடங்கிய இதழ். ஆண்டுக்கு ஈரிதழ் என்பதைக் காலாண்டிதழாகக் கொண்டுவரலாம். ஆசிரியர் குழுவிற்குப் பாராட்டும் வாழ்த்தும்” எனப் பதிவு செய்து, ஏர் இதழ் நோக்கத்தையும் இலக்கையும் கொண்ட பதிவைப் பகிர்ந்திருந்தார். 

எமது நூல்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு மகிழ்ந்தார்; மனதார வாழ்த்தினார். நான் தொகுத்திருந்த ‘திராவிடம் குறித்த மீளாய்வு கருத்தாடல்கள்’ எனும் புத்தகத்தைத் தற்போது படிப்பதற்காக எடுத்து வைத்திருப்பதாகக் கூறினார். 

எங்கள் இருவருக்குமான உரையாடலில் அவர் தோழர் என்றுதான் எம்மை அழைப்பார். நான் அண்ணா என்றுதான் அவரை அழைப்பேன். பொருளாதார உதவி ஏதும் எம்மிடம் அவர் கேட்டதில்லை. ஆயினும், எம்மால் இயன்ற உதவியை அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். தம்பியின் சின்னதாய் ஒரு கைமாறு. தமிழில் நீங்கள் இன்னும் எழுத வேண்டும். தம்பி எப்போதும் துணை நிற்பேன் என்ற பதிவை மட்டும் அனுப்பியிருந்தேன். என்ன சொல்வது என்றே தெரியவில்லை மிக்க நன்றி தோழர் என்கிற அன்புச் செய்தியை அனுப்பியிருந்தார். 

விசுணுபுரம் இலக்கிய விருது அறிவிக்கப்பட்டவுடன் அவரது எழுத்துக்கள் பரவலாகக் கவனிக்கத் தொடங்கியது நடந்து கொண்டிருந்தது. மதுரை புத்தகக் கண்காட்சியில் அண்மையில் வெளிவந்திருந்த அவருடைய புத்தகங்களை யாவரும் பதிப்பக அரங்கில் வாங்கி வந்திருந்தேன். முகநூலில் அவரது பதிவுகள், நேர்காணல்கள் போன்றவற்றை அவ்வப்போது பகிர்ந்து வந்திருந்தேன். 

இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் என்கிறது பிங்கல நிகண்டு. இரமேசு பிரேதனின் சொற்கள் யாவும் மரபும் நவீனமும் கலந்த இனிமையும் நீர்மையும் கொண்டிருப்பவை. அதேபோல, தனிப்பட்ட தம் வாழ்விலிருந்தும், தனித்துவிடப்பட்ட தனிமையிலிருந்தும், நோவுகளைச் சுமந்து கொண்டிருந்த உடலிலிருந்தும் வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர். அந்த வலிமிகு நுண் உணர்வுகளையும் தம் எழுத்துகளில் பதிவு செய்திருப்பார். அதனாலேயே அவரது தமிழ் இனிமையும் நீர்மையும் வலியும் கலந்த நவீனத் தன்மையோடு முகம் காட்டியிருக்கின்றன. 

அடுத்த ஏர் இதழக்குக் கதையோ கவிதையோ அல்லது கட்டுரையோ ஏதாவது ஒன்று தர வேண்டும் அண்ணா என்று கேட்டிருந்தேன். கேட்ட மறுநாளே இரண்டு சிறுகதை அத்தியாயங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார். இரண்டு அத்தியாயங்களையும் படித்து முடித்து விட்டேன் அண்ணா. நாவாய்ச் சொற்களில் மிதந்து மிதந்து, கடலுக்குள் நுழைந்து மிதந்து, கழு மரங்களின் கொலைக்களம் தாண்டி, மொழியின் வாசம் நுகர்ந்தேன். தமிழ்ச் சோறு மணக்கிறது. மிக மிக அருமை அண்ணா எனப் பதில் போட்டிருந்தேன். இதயக் குறியைப் பதிலாக அனுப்பி இருந்தார். அனேகமாக அவர் கடைசியாக எழுதி அனுப்பியது ஏர் இதழுக்கானதாகத்தான் இருக்கும். ஏர் இதழில் அவரது கதைகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்ள நினைத்திருந்த வேளையில், அவரைப் பற்றிய நினைவஞ்சலிக் கட்டுரையும் வெளியிட வைத்திருக்கிறது காலம். 

தமிழ்,
தனது இன்னொரு மகனை
இழந்திருக்கிறது.

வலி மிகுந்த 
இந்த வாழ்விலிருந்தும்
இந்த உலகத்திலிருந்தும்
விடுதலை அடைந்திருக்கும்
நவீனத் தமிழ் எழுத்தாளர்
இரமேசு பிரேதன்
காலத்தில் கரைந்திருக்கிறார்.
ஆயினும்,
நவீனத் தமிழின் 
காலத்தில் நிலைத்திருப்பார்.

இரமேசு பிரேதன் மறைவுக்குப்
புகழ்வணக்க அஞ்சலி.

மகாராசன்,
ஏர் இதழ் ஆசிரியர்.

செவ்வாய், 3 ஜூன், 2025

கன்னடம் என்பது, கருநடம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு : அறிஞர் தேவநேயப் பாவாணர்.


மலையாளத்திற்கு அடுத்துத் தமிழோடு தொடர்புள்ளது கன்னடம். கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. இது முதலாவது கன்னட நாட்டைக் குறித்து, பின்பு அங்கு வழங்கும் மொழியைக் குறித்தது. இதன் பழைய வடிவங்கள், கருநாடு, கருநாடகம் என்பன. 

கன்னட நாட்டார், கருநாடார் என்றும் கருநடர் என்றும் அழைக்கப்பட்டனர். கருநடம் அல்லது கருநாடகம் என்னும் சொல்லுக்கு இரு பொருள்கள் கூறப்படுகின்றன. அவை 1. கரியநாடு, 2. கருங்கூத்து என்பன. கன்னட நாட்டின் பெரும்பகுதி கரிசல் நிலமாய் இருப்பதால் கரிய நாடு என்று பொருள் கொண்டனர் குண்டெட் பண்டிதரும், கால்டுவெல் கண்காணியாரும்.

மிகப்பழமையான அநாகரிக அல்லது கண்மூடிப்பழக்கத்தைப் பழைய கர்நாடகம் என்பர். இங்கு கர்நாடகம் என்பது பழமையான அநாகரிகத்தைக் குறிக்கலாம். ஆகவே, கருநடம் அல்லது கருநாடகம் என்னும் பெயர் கருங்கூத்து நிகழும் நாடு என்னும் பொருள் கொண்டதாய் இருக்கலாம். 

ஆயினும், கருநடரை கருநாடர் என்னும் வழக்கும் உண்மையானும் கூத்தாகிய காரணத்தினும், நிலவகையாகிய காரணம் பெயர்ப் பேற்றிற்குச் சிறந்தலானும், கரிசற்பாங்கான நாடு என்று பொருள் கொள்வதே பொருத்தமாம். 

சேர நாடு கடைக்கழகக் காலத்திலேயே குடமலைக்கு (மேற்குத் தொடர்ச்சி மலை) மேற்பால் வேறும், கீழ்பால் வேறுமாகப் பிரிந்து போயிற்று. கீழ்பால் நாடு, மீண்டும் தெற்கில் கொங்கு நாடும், வடக்கில் கங்க நாடும், இடையில் அதிகை நாடு, துவரை நாடு, முதலியனவுமாகப் பிரிந்துவிட்டது. அதிகை நாடு தகடூரை (இன்றைய தர்மபுரியை) தலைநகராகக் கொண்டு அதிகமான் மரபினர் ஆண்டுவந்தது. கங்க நாடு அதன் வடக்கில் கங்க மரபினர் குவலாலபுரத்தை (கோலார்) தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இது கங்கபாடி என்று கல்வெட்டுகளில் கூறப்படும்.

இக்கங்க மரபைச் சேர்ந்தவனே பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தவனும், அமராபரணன் ஸ்ரீமத் குவலாலபுர பரமேசுவரன் கங்கருலோர்பவன் என்று தன் மெய்க்கீர்த்திகளில் பாராட்டப்பெறுபவனும் பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூலை ஆக்குவித்தவனுமாகிய சீயகங்கன் என்பவன். இவன் ஒரு தமிழ் இலக்கணத்தை இயற்றுவித்ததினாலும், நன்னூற் சிறப்புப்பாயிரம்

‘குணகடல் குமரி குடகம் வேங்கடம்

எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள்’

என்று கூறுவதாலும், மைசூர்நாட்டின் வேங்கட நேர் எல்லை வரை பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரையுமாவது தமிழ் தவிர வேறு ஒரு மொழியும் வழங்கவில்லை என்பது இதனால் அறியப்படும். 

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*

தமிழர் அடையாளம் எது?:

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,

தொகுப்பாசிரியர்: மகாராசன்,

யாப்பு வெளியீடு, சென்னை,

முதல் பதிப்பு: டிசம்பர் 2022,

பக்கங்கள்: 128,

விலை: உரூ 150/-

*

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:

செந்தில் வரதவேல்,

யாப்பு வெளியீடு, சென்னை.

பேச: 90805 14506


திங்கள், 12 மே, 2025

கண்ணகிக் கோட்டம்: பறிபோகும் தமிழர் அடையாளம் - மகாராசன்

கண்ணகி கோயில் வழிபாட்டுத் தளம் முழுவதுமாகக் கேரள அரசு எந்திரங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பெற்ற தாயை சொந்த நாட்டிற்குள் பார்ப்பதற்குக்கூட ஓர் அகதி அல்லல்படும் உணர்வுகளே இன்று எமக்கும் இருந்தது. 

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும், வரலாறும், வழிபாட்டு உரிமையும் முழுவதுமாகக் காவு கொடுத்திருக்கிறோம் என்பதாகவே உணர்கிறேன். தமிழர் நிலமும், வழிபாட்டு அடையாளமும், சடங்குகளும் கேரளமயமாகி இருப்பதோடு, அவை தமிழர்களிடமிருந்து முழுவதுமாகப் பறிபோயிருக்கிறது என்றே தெரிகிறது.  

கேரள அரசு எந்திரங்களின் அதிகாரத்திற்குள் தமிழ்நாட்டு அரசு எந்திரங்கள் மவுனித்துக் கிடக்கின்றன. தமிழ்நாட்டு அரசு எந்திரங்கள் எதுவும் செய்திட முடியாத அளவுக்குக் கேரள அரசு எந்திரங்களின் அதிகாரப் பலமும் வாய்ப்பும் உரிமையும் மேலோங்கியேதான் இருக்கின்றன.

வரும் காலங்களில், கண்ணகிக் கோட்டத்தைத் தமிழர்க்குச் சொந்தமாக்குவதே தமிழர் அடையாள மீட்பின் முதல் வேலையாகும். இந்தக் குரலையும் உணர்வையும் கண்ணகிக் கோட்டத்திற்குப் பயணப்பட்டு வழிபடும் தமிழர்கள் உணர்ந்ததும் உரைத்ததும் ஆகும். 

கண்ணகி கோயிலுக்குச் சென்று வந்தவர்கள் அத்தனை பேரும் சமூக ஊடகங்களில் இதனைப் பேசுபொருளாக ஆக்கிட வேண்டும். அப்போதுதான், அந்த நிலத்தையும், கோயில் தளத்தையும், வழிபாட்டு உரிமையையும் மீட்டெடுக்க முடியும். இல்லையெனில், கொஞ்சமேனும் இருக்கிற வாய்ப்புகளும் உரிமையும் விரைவில் பறிபோகும்.


ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்,

12.05 2025

கண்ணகித் தாய்ச்சி - மகாராசன்

காலத் தடங்களின் கங்குகளை
சுமந்திருந்த பெருங்காட்டில்
பொசுங்கிய வாழ்வு நினைத்து
கால்கள் பொசுக்க நடந்த 
கண்ணகியின் கண்களில் 
நீர்முட்டக் கசிந்த
காத்திருந்த வாழ்வின் 
தனிப் பொழுதுகள்
மலைமேட்டில் அலைகின்றன.

பிஞ்சுக் காலடி படாத வீடும்
தாலாட்டு கேட்காத மனத்தொட்டிலும்
நினைப்பில் வந்து வந்து போயிருக்கும்.

கண்களில் வழிந்த சுடு நீரும் 
அவள் ஆழ்மனத் தீயைக்
அணைத்திருக்கவில்லை.

- மகாராசன்.

Bearing the cinder of time's passage,  
a vast towering forest stands.  
Recalling her perished life,  
she walks through it with sore feet.
Within Kannagi’s* eyes, 
tears shed overflowing.
The solitary moments of her lonely life,
now wandered through the hills.  

A house where young feet never tread  
and lullabies never graced her heart,  
must’ve haunted her thoughts
now and again.

With tears hot and streaming,  
her subconscious mind’s fire still burning,
remains unquenched.

* Kannagi: Kannagi is a legendary Tamil woman and the central character of the ancient Tamil epic Silappathikaaram.

Author: Maharasan.

Translated by : Padma Amarnaath.

புதன், 23 ஏப்ரல், 2025

அன்னா: தாய்மன நினைவுகளும் ஈழ நிலமும் - மகாராசன்.

மனித வாழ்வின் கதைப்பாடுகளைப் பல்வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ் இலக்கிய மரபு, புதிய புதிய கதைகூறல் முறைகளையும் உள்வாங்கிப் புலப்படுத்தும் பாங்கைக் கொண்டிருக்கக் கூடியது.  அதற்கான அண்மைய இலக்கியச் சான்றாவணம்தான் திரு வாசு முருகவேல் எழுதிய ‘அன்னா’ எனும் குறுங்கதை நூல். 

‘இலக்கியம் என்பது கருத்துக்களைத் தெரிந்து கொள்ளுதல் இல்லை. கற்பனை செய்தல். சொற்கள் வழியாக ஒரு மெய்யுலகைக் கற்பனை செய்து, அந்த மெய்யுலகிலே சென்று வாழ்ந்து, உண்மையாகவே வாழ்ந்த வாழ்க்கைக்கு நிகரான அனுபவங்களையும் புரிதல்களையும் அடைவதற்குப் பெயர்தான் இலக்கியம்’ எனும் சொற்களைத் திடமாக நம்பியிருக்கும் வாசு முருகவேல், தமது ‘அன்னா’ படைப்பின் வாயிலாக அதனை மெய்ப்பித்தும் காட்டியிருக்கிறார்.

படைப்பென்னும் கற்பனையுலகத்திற்குள் நிஜமென்னும் மெய்யுலகைக் காண்பித்து விவரிக்கும் கதை கூறல் மொழியும் நடையும் புதியதான வாசிப்பு உணர்வைத் தந்திருக்கின்றன. கதையுலகும் கவிதையுலகும் கலந்திருக்கும் படைப்பாக்க வடிவம் மிக நேர்த்தியாய் வாசகரின் வாசிப்புலகத்தை எட்டியிருப்பதோடு, கதையுலகின் மெய்யுணர்வை மிக ஆழமாகவே புலப்படுத்தி இருக்கிறது அன்னா.

தமிழ் இலக்கிய மரபில், ஈழ நிலத்தின் வாழ்வும் வலியுமான படைப்புகள் உயிர்ப்பு மிக்கவையாகத் திகழ்வதற்கான அடிப்படைக் காரணம், அதன் படைப்புலக மெய்யுலகின் உண்மைத் தன்மைதான். அரை நூற்றாண்டு கால ஈழ நிலத்தின் மனிதப் பாடுகளை நினைவுக் குதிர்களுக்குள்ளிருந்து சொற்தானியங்களைச் சிந்தாமல் சிதறாமல் படைப்புமொழிக்குள் தூவிச் செல்லும் பெரும் பணியை ஈழத்துப் படைப்பாளிகள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். அவ்வகையில், வாசு முருகவேல் அண்மையில் எழுதியிருக்கும் ‘அன்னா’வும் ஈழ நிலத்தின் வலியைப் பெண் வலியாய்ப் பதிவு செய்திருக்கும் படைப்பாய் வெளிவந்திருக்கிறது.

‘2009ஆம் ஆண்டு ஈழப் போரின்போது, ஈழத்தின் தலைநகராக அதிகாரப்பூர்வமாக இயங்கி வந்த கிளிநொச்சி நகரைக் கைவிடவேண்டிய நெருக்கடியான சூழல் போராளிகளுக்கு ஏற்பட்டது. கிளிநொச்சியை ஒருபோதும் போராளிகள் கைவிடமாட்டார்கள் என்றே அனைவரும் நம்பினார்கள். ஆனால், நடந்தவை அதற்கு முற்றிலும் வேறாகவே இருந்தன. 

இலங்கை அரசின் படைகள் அங்கு நுழைந்தபோது கிளிநொச்சி வெறிச்சோடிக் கிடந்தது. போராளிகள், பொதுமக்கள் அனைவரும் தாங்கள் கொண்டுபோக முடிந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு அந்த நகரை விட்டு ஏற்கனவே முற்றிலும் வெளியேறி இருந்ததால், இராணுவம் பலத்த ஏமாற்றம் அடைந்தது. பாரிய யுத்தத்தை எதிர்கொள்ளப் போகும் நகராக விளங்கிய கிளிநொச்சி அனைவருக்கும் பலத்த ஏமாற்றத்தையே தந்தது. அதற்கு இலங்கை இராணுவமும் விதிவிலக்கல்ல. 

யாருமற்ற அந்தச் சூனியமான ஓர் இரவில் தனிமைப்பட்டு நின்ற அன்னாவின் இரத்தமும் சதையுமான நினைவுகளும் குரல்களுமே இந்த நாவலின் மையமாகும். போரில் இவையெல்லாம் சாத்தியமா என்ற கேள்வியைப் போரில் வென்றவர்களும் - தோற்றவர்களும் எழுப்புவதில்லை. அசாத்தியங்களால் நிரம்பியதுதான் போர். 

இந்தக் குறுநாவலின் மையமாகப் பெண்ணே இருக்கின்றார். மனித வாழ்க்கையில் மட்டுமல்ல, போராட்டங்களிலும் பெண்கள்தான் மையமாக இருந்திருக்கின்றார்கள். அதனால் பேரிழப்புகளையும் அவமானங்களையும் சந்திப்பதும் பெண்கள்தான் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை’ எனக் கதைக்களத்தின் பின்புலத்தைத் தமது முன்னுரையில் பதிவு செய்து விடுகிறார் வாசு முருகவேல்.

‘போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுதுகொண்டே இருந்தது…’ எனத் தொடங்கும் தமிழினி கவிதைக்குள் உலவும் தாய் மனத்தின் நினைவுகள்தான் அன்னாவில் சொற்களாய் விரிந்து கிடக்கிறது.

அரை நூற்றாண்டுகால ஈழ விடுதலைப் போராட்டத்தில் களத்தில் நின்று சண்டை செய்த போராளிகளின் ஈகத்துக்கு நிகரானது ஈழத்துத் தாய்மார்களின் ஈகமும். விடுதலை வாழ்வுக்காக ஒரு தாயக நிலம் எவ்வளவு கனவுகளையும் துன்பங்களையும் வலிகளையும் இழப்புகளையும் பேரழிவையும் சந்தித்ததோ, அதே கனவுகளையும் துன்பங்களையும் வலிகளையும் இழப்புகளையும் தவிப்பையும் ஏமாற்றத்தையும் ஈழத்தின் தாய்மார்கள் இன்னும் நினைவுகளில் சுமந்தலைகிறார்கள்.

சொற்களில் விவரிக்க முடியாத துயர் கவ்விக் கிடக்கும் வலிகளை நினைவுகளின் கூடாரத்துக்குள் எத்தனை காலம்தான் அடைத்து வைத்திருக்க முடியும்? நினைவுத் துயரங்களை இறக்கி வைக்கவும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அத்துயரங்களைக் கைமாற்றிக் கைமாற்றிக் கடத்துவதற்குப் பின்னால் வெறும் ஆறுதல் மட்டும் அடைவது நோக்கமல்ல; தாயக நிலத்தின் தவிப்பையும் உயிர்ப்பையும் தக்க வைக்கும் வேட்கையும் கூடவே சேர்ந்திருக்கிறது. அதனால்தான், புலம்பெயர் வாழ்க்கையினூகப் புலப்படும் ஈழத் தமிழ்ப் படைப்புகள் யாவும் தாயக நிலத்தை நினைவுச் சொற்களால் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

தாயக நிலத்திற்கான விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களிக்கும் போராளிகளைத் தலைமைகள் மட்டுமே உருவாக்கி விடுவதில்லை; தமிழ் இளைஞர்களும் இளைஞிகளும் தாமாகவும் மட்டும் போய் இணையவுமில்லை. தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும் தேவைகளையும் உணர்ந்த ஒவ்வொரு தாய்மாரும் தம்மளவிலான பங்களிப்புக் கைமாறினை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். அதனால்தான் மிக நீண்ட நெடியதொரு போராட்டத்தை புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொரு தாய்மார்களின் உளப்பூர்வமான ஒத்துழைப்போடும் உதவியோடும் உத்வேகத்தோடும் உறுதியோடும்தான் ஒவ்வொரு போராளியும் களம்நோக்கி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். 

இன்னும் கூடுதலாக, போராளிகளைப் போன்று தத்தமதளவிலும் தத்தமது ஊர்களிலும் களப்பணிகள் பலவும் மேற்கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் படைக்கான ஆட்சேர்ப்பு, இயக்கத்தின் மறைமுகப் பணிகளுக்கான அடைக்கலம், போராளிகளைப் பராமரித்தல், இயக்கத்திற்கான வேவு பார்த்தல், படையணி ஆட்சேர்ப்புக்கான பரப்புரை எனப் பல்வேறு வேலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுத்துக்கொண்ட எண்ணற்ற தாய்மார்களுள் அன்னா, அன்னம்மா, அன்னத்தா என அழைக்கப்பட்டவரும் ஒருவராவார்.

இறுதிப் போர்க் காலகட்டத்தில் போராளிகள் மற்றும் பொதுமக்கள் யாவரும் கிளிநொச்சியைக் கைவிட்டு நகர்ந்துபோன பின்னாலும், கிளிநொச்சி நிலத்தை விட்டுப் போகாமல் அங்கேயே உலவித் திரிகிறார் அன்னா. 

‘காடளந்த புலியின் நிதானத்துடன் அடி எடுத்து வைத்து ஊரை வலம் வந்தாள் அன்னா. விலங்குகள் காட்டில் உலவுவது உணவுக்காக மட்டுமல்ல; அதுதான் அதன் வாழ்வின் சாரம். இருண்ட ஊரில் இவளுக்கு மட்டும் இரண்டு கண்களிலும் ஒளி இருந்தது. வெறிச்சோடிக் கிடக்கும் தெருக்களில் கொஞ்சம் கண்களை மூடியும் நடந்து பார்த்தாள். அங்கும் ஒளி இருந்ததுதான். காலத்தின் இருள் மட்டும் மிச்சலனமாக நிறைந்திருந்தது. 

இயக்கத்தின் கணக்குப்படி இராணுவம் இப்போதே கிளிநொச்சிக்குள் அடியெடுத்து வைத்திருக்க வேண்டும். நகரத்தில் யாரும் இல்லை. அனைவரும் இயக்குத்துடன் வெளியேறி விட்டார்கள் என்ற செய்தியை யாராவது அறிவித்திருக்கலாம். ஆனாலும், இராணுவம் விடியும் வரை காத்திருக்கும் என்று அன்னா நம்பினாள். அவள் ஒருத்தி இன்னும் அந்த நிலத்தில்தான் நிற்கிறார் என்பதை இயக்கம் கூட நம்பும் என்று அவள் நம்பவில்லை’ எனத் தொடங்குகிறது அன்னாவின் நினைவு அத்தியாயங்கள்.

இருளும் வெறுமையும் தோல்வியும் இழப்பும் தழுவிய ஓர் இரவுப் பொழுதில் அன்னாவின் கால் நூற்றாண்டு கால நினைவுகள் கசிந்து கசிந்து போராட்ட காலங்களை மறு சுழலுக்குள் தளிர்க்கச் செய்துகொள்கின்றன. எந்தச் சலனமும் சஞ்சலமும் இல்லாமல் தானும் இயக்கத்தினோடு ஏதோ ஒரு தொடர்பில் இருந்துகொண்டு, போராளிகளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவிக்கொண்டு, தமது கணவரையும் இரண்டு பிள்ளைகளையும் இயக்கத்திற்கு அனுப்புவித்து, அவர்களையும் வீரச்சாவுக்கு ஒப்புக்கொடுத்து, ஊரில் உள்ள மற்ற பிள்ளைகளையும் இயக்கத்தில் சேர்க்கும் பரப்புரைப் பணியையும் மேற்கொண்டிருந்த அன்னாவின் நினைவுகளில் வடிந்திருந்த மெய்யுலக வாழ்வைக் குறுங்கதை அத்தியாயங்களில் எழுதியிருக்கும் வாசு முருகவேல், கால் நூற்றாண்டு கால ஈழப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கத்தின் உயிர்ப்பை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தாயக நிலத்தின் உணர்வோட்டத்தையும், தாய்மார்களின் உளப்பூர்வ வகிபாகத்தையும் கதையுலகிற்குள் மெய்யுலகாய்க் கட்டமைத்திருக்கிறார்.

மிகக் குறைவான பக்கங்கள், குறுங்குறு அத்தியாயங்கள், கூல் கிளிண்டன், முகமூடிராசன், லீலா, கபிலன், பாலு என மிகக் கொஞ்சமான கதைப் பாத்திரங்கள் என்றாலும், சிங்கள இராணுவத் தாக்குதல்கள், புலிகள் இயக்கத்தின் போராட்டப் பங்களிப்பு, போர்கள், வீரச்சாவுகள், மாத்தையாவின் துரோகப் பின்புலம் தொடங்கி, பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீதான இராணுவத் தாக்குதல், தலைவரைப் பாதுகாத்தலுக்கான சண்டைகள், இறுதிப் போர் நிலவரம் எனப் பலவும் அன்னாவின் நினைவுச் சொற்களில் விரிந்திருக்கும் கதையுலகானது, ஈழ நிலத்தின் ஆத்மாவையும், ஈழத்துத் தாய்மார்களின் ஆத்மாக்களையும் படைப்புலகில் உயிர்ப்பித்துக் காண்பித்திருக்கிறது. 

நிலத்தைத் தாயாகவும், தாயை நிலமாகவும் உருவகிக்கும் தமிழ் மரபில், ஈழ நிலத்தையும் - அந்நிலத்துத் தாய்மார்களின் தனிமையையும் வெறுமையையும் பெண் வலியோடும் மொழியோடும் நினைவுகளினூடாகச் சொல்லும் அன்னாவானது, ஈழத்தின் தவிப்பை மொழியில் சுமந்திருக்கும் இலக்கிய சாட்சியுமாகும். அன்னாவைப் போன்ற எண்ணற்ற தாய்மார்களின் வலியும் மொழியும் தமிழில் இன்னும் இன்னும் பதியத்தான் போகிறது. அவற்றின் வலியும் மொழியும் ஈழத் தாயகத்தின் வேட்கையை அணையாமல் பார்த்துக் கொள்ளத்தான் போகின்றன. 

வயிற்றிலும் மார்பிலும் மடியிலும் தோள்களிலும் மட்டுமல்லாது, நினைவுகளிலும் பிள்ளைகளைச் சுமக்கும் தாய்களின் கனவைப் போலவே, தாயக நிலத்தை மொழியில் சுமந்தலையும் அன்னா போன்ற படைப்புகளைத் தோளேந்தி ஆறுதல் படுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் தமிழர் கைமாறாகும். அன்னம்மாக்களின் ஆத்ம நினைவுகளைப் புதியதான கதைகூறல் வடிவத்தில் தந்திருக்கும் வாசு முருகவேல் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் அன்பும்.

நூல் குறிப்புகள் :
அன்னா (குறுங்கதை), 
வாசு முருகவேல், 
பக்கங்கள் 72, 
விலை:உரூ 130/- 
முதல் பதிப்பு, சனவரி 2025, 
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. 
தொடர்புக்கு: 942511302.

கட்டுரையாளர்:
முனைவர் ஏர் மகாராசன்,
தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.
maharasan1978@gmail.com

நன்றி :
வாசகசாலை இணைய இதழ்
https://vasagasalai.com/112-article-anna/

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

கல்விச் சூழலும் சாதியச் சூழலும் குறித்து விவாதிக்கும் அழுத்தமான நூல் - ம.பரிமளா தேவி


மகாராசன் எழுதிய ‘மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து’ எனும் இந்நூலில், இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

1.மெல்லக் கற்கும் மாணவர்களைக் கைவிடும் கல்விச் செயல்பாடுகள்: புதிய பாடத்திட்டம் உள்ளிட்ட கல்வி அகச்சூழல்.

2.மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து: சமூகப் புறச் சூழலும் மாணவர்களின் பிறழ் நடத்தைகளும்.

சமகாலத்தில் அதிகமாக இருக்கும் இந்த இரண்டு பிரச்சினைகளையும் குறித்துத் தன்னுடைய ஆழமான மற்றும் விரிவான கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார் எழுத்தாளர் மகாராசன்.

மாணவர்கள் கையில் கத்தி எடுக்கின்ற கலாச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவல நிலை இருக்கின்றது. அவற்றைத் தடுப்பதற்கான வழி என்ன? அவர்கள் கையில் கத்தி எடுப்பதற்கு என்ன காரணம்? பின்னணி என்ன? புறச்சூழலை மட்டும் வைத்துத் தீர்வு காண முடியுமா? அகச் சூழலையும் பார்க்க வேண்டாமா? என்கிறார்.

கல்விசார் கலைத்திட்டம் என்பது மாணவர்களை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாகும். அவ்வாறெனில், மீத்திறன் மாணவர்கள், சராசரி மாணவர்கள், மெல்லக் கற்கும் மாணவர்கள் என்று மூன்று வகைப்பட்ட மாணவர்களுக்காகவும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதா?

மெல்லக் கற்கும் மாணவர்களை உள் நுழைய விடாமலும் அச்சுறுத்தும் விதமாகவும் இப்போதைய புதிய பாடத்திட்டம் உள்ளது. 

குறிப்பிட்ட மாணவத் தரப்பினரை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, அந்தத் தரப்பினர் மட்டுமே பங்கேற்கும்படியான வாய்ப்புகளை மட்டுமே வழங்கும் சூழலைப் புதிய பாடத்திட்ட உருவாக்கமானது உருவாக்கித் தந்திருக்கிறது என்னும் குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார்.

ஒரு காலத்தில் சக மனிதர்களைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் தீண்டாமையைச் சாதியை வைத்து நடைமுறைப்படுத்தினர். இப்போதும் சக மனிதர்களைக் கல்வியில் இருந்து விலக்கி வைக்கும் நவீனத் தீண்டாமையை இன்றைய பாடத் திட்டங்களும் தேர்வு முறைகளும் கையாளப்படும் சூழலில் இருக்கின்றன. 

மீத்திறன் மாணவர்கள் மட்டுமல்லாது, மெல்லக் கற்க மாணவர்களையும் கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது கட்டாயம்.

மெல்லக் கற்கும் மாணவர்களை அன்னியப்படுத்துவதும், தனிமைப்படுத்துவதும், விலக்கி வைப்பதுமான கல்விச் செயல்பாடுகள் தொடருமானால், அவர்கள் உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளும் - வேலை வாய்ப்புகளும் ஏதுமின்றிச் சமூக உதிரிகளாக மாறத் தொடங்குவர். 

இந்நிலையில், கல்விச் சூழலைச் சீரமைப்பது எப்படி?

1.எல்லா வகுப்புகளிலும் - எல்லாப் பாடங்களிலும் பாடப் பொருண்மைகளின் அளவைக் குறைத்திடல் வேண்டும்.

2.பதினொன்றாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.

3.வினாத்தாள் மதிப்பெண் பகுப்பு முறை (Blue Print) புதிய பாடத்திட்ட உருவாக்கத்தின் போது நீக்கப்பட்டது. அதனை மீண்டும் இணைக்க வேண்டும். இதனால் மெல்லக் கற்கும் மாணவர்களைத் தேர்ச்சி நோக்கிப் பங்கேற்க வைக்க முடியும். 

4.ஆசிரியர்களைக் கற்பித்தல் செயல்பாடுகளில் மட்டுமே பங்கேற்கச் செய்திடல் வேண்டும்.

5.மாணவர்களின் ஒழுங்கீனச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் நல்வழிப்படுத்தவும் ஆசிரியர்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

6.கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும்.

7.கற்றல் கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் உள்ளக் குரலை மனம் திறந்து கேட்கவும், அதன் நியாயங்களை உணர்ந்து கொள்ளவும் கல்வித்துறை அதிகாரிகள் முன் வருதல் வேண்டும். 

மேற்கூறிய கருத்துக்கள் முதல் கட்டுரையின் சாரம் ஆகும். ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் இதுவாகும்.  

பள்ளிக்கூடப் பணியில் சேர்ந்த முதல் நாளிலிருந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டம் எனக்குச் சற்று அயற்சியாகவே இருந்தது. விரிவான கூடுதல் பாடத்திட்டமாகவே இருந்தது. கல்லூரியில் பணியாற்றிய அனுபவத்தைக்கொண்டு சொல்கிறேன், இளங்கலையில் மாணவர்கள் படிக்கின்ற நிறைய பாடங்களைத்தான் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.  

மீத்திறன் மாணவர்களும் பங்கேற்கும் வகையான பாடத்திட்டங்களும் வினாத்தாள் வடிவமைப்பும் பயிற்சிகளும் வேண்டும்தான். மீத்திறன் கொண்ட மாணவர்களுக்குப் புதிய பாடத்திட்டம் பயனுள்ளதாகத் தோன்றினாலும், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டத்தில் பயன் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாகப் பயம்தான் இருக்கிறது. படிக்கவில்லை என்று மாணவர்களை மட்டும் குறை கூற முடியாது. அதற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும்.

அனைவருக்குமான பாடத்திட்டமென்று பலர் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்ததனால்தான் புதிய பாடத்திட்டம் உருவாகியுள்ளது. அதில் மொழிப் பாடத்திற்கான கருத்துக்களை மட்டும் இங்கு பதிவிடுகின்றேன்.

மொழிப் பாடம் என்பது சுவையாகவும் பண்படுத்துபவையாகவும் இருக்க வேண்டும். சுமையாக இருக்கக் கூடாது. தேடித் தேடிப் படிக்கும் ஆர்வத்தை மாணவர்களுக்குத் தூண்டுவதாக இருக்க வேண்டும். பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கியம் முழுவதையுமே அறிமுகப்படுத்திவிட வேண்டுமா? பரிசீலனை செய்ய வேண்டும். விழுமியங்களுக்குள் பாடங்களை வைப்பதினால் கூடுதல் சுமையாக மாறி உள்ளதோ? 

மொழிப்பாட ஆசிரியர்களுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், தமிழில் மாணவர்கள் அனைவரும் ஏன் தேர்ச்சி அடையவில்லை? ஆங்கிலத்தில்கூட தேர்ச்சி அடைந்து விடுகிறார்கள். தமிழில் ஏன் தோல்வியைத் தழுவுகிறார்கள்? என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப அதிகாரிகள் கேட்கின்றார்கள். ஆசிரியர்கள் சொல்கின்ற காரணங்கள் அவர்களுக்குப் போதுமானதாகவும் இருக்கவில்லை. ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் தொடர்ந்து விவாதிப்போம். மாணவர்களின் நலன் மட்டுமே நமக்குப் பிரதானம்.

வருகின்ற ஆண்டில் மாற்றம் வரும் என்று நம்புவோமாக. வரும் கல்வி ஆண்டு முதல் 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மெல்லக் கற்கும் மாணவர்களும் ஈடுபடும் வகையில் பயிற்சிகளும் வினாத்தாள்களும் இருக்கின்றனவா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நூலின் இன்னொரு கட்டுரை, மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து: சமூகப் புறச் சூழலும் மாணவர்களின் பிறழ் நடத்தைகளும் என்பதாகும்.

தமிழ்ச் சமூகம் ஒரு முன்னேறிய பண்பாட்டு வாழ்க்கை முறைக்குச் சொந்தமுடையது என ஒரு புறம் சொல்லிக் கொண்டிருந்தாலும், தமிழ்ச் சமூகத்தின் மீது அவ்வப்போது கறை படிந்து கொண்டுதான் இருக்கின்றது? 

ஆம், தமிழ்ச் சமூகத்தின் படிக்கட்டுகள் முழுக்க மனிதம் சிந்தி இருக்கும் அரத்தக் கறை பெரும்பாலும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் மீது அவரது வீட்டுக்குள்ளே புகுந்து கொடிய ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கிய சக மாணவர்களின் ஆணவக் கொலை வெறிச் செயல் பெரும் அதிர்வுகளையும் அச்சத்தையும் சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது என்று எழுதிய இந்நூல் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் கொலை வெறித் தாக்குதல் என்னும் செய்தியைப் பார்த்தபோது மனம் சமநிலை இழந்து போயிற்று .

மாணவன் சின்னத்துரையின் மீது முதல் முறையாகக் கொலைவெறித் தாக்குதல் நடந்தபோது அங்கு உண்மையிலேயே என்ன நிகழ்ந்தது என்று கண்டறிந்து எழுதப்பட்ட நூல்தான் இது. அதற்கான காரணங்களையும் பதிவு செய்துள்ளார். 

கணவனால் கைவிடப்பட்ட அம்பிகாபதியின் மூத்த மகன்தான் சின்னத்துரை. வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், படிப்பதைத் தாண்டியும் அவரது நடவடிக்கைகள் அத்தனையும் வாஞ்சையாக இருந்துள்ளன. அதனால் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் சின்னத்துரை மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாக மாணவர் சின்னத்துரை பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்திருக்கிறார். இதை அறிந்து அவரது தாயார் ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று சின்னத்துரையிடம் கேட்டிருக்கிறார். தன்னை வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறும், இல்லையென்றால் சென்னைக்கு ஏதாவது வேலைக்கு அனுப்பி வைத்து விடுமாறும் கூறி இருக்கிறார். ஆனால் அவருடைய அம்மா ஒப்புக்கொள்ளவில்லை.

தம்முடன் அதே பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் இருவர் சாதி ரீதியாகவும் ஆபாசமாகவும் இழிவுபடுத்திப் பேசி வருவதாகவும், தமது பணத்தையும் பிடுங்கிக் கொள்வதாகவும், புகையிலைப் பொருள் வாங்கி வரச்சொல்லி அடிப்பதாகவும், தம்மைப் பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்துவதாகவும், தேர்வுகளில் தாம் எழுதுகிற விடைத்தாள்களை வாங்கி அதைப் பார்த்து எழுதுவதாகவும் கூறியிருக்கிறார் சின்னத்துரை.

மாணவன் சின்னத்துரையின் மீது நடத்தப்பட்டு வந்த சீண்டல்களைக் குறித்துத் தலைமை ஆசிரியரிடம் கொடுத்த புகார் கடிதத்தின் சாரம் இதுவாகத்தான் இருந்திருக்கிறது.

இந்நிலையில், அன்று இரவு யாருமே எதிர்பார்க்காத அந்தக் கொடிய சம்பவம் நடந்தது. வீடு முழுவதும் இரத்தக் குவியலாகவும் சகதியாகவும் கிடக்கிறது. எங்களுக்கு எதிராகப் புகார் கொடுப்பியா என்று கூறி அரிவாளால் சின்னத்துரையின் கழுத்திலும் தலையிலும் வெட்ட முயற்சி செய்ய, தனது கைகளைக் கொண்டு சின்னத்துரை தடுத்து இருக்கிறான். இதனால் இரண்டு கைகளின் எலும்புகளும் அரிவாளால் வெட்டப்பட்டு நொறுக்கப்பட்டுள்ளது. தோள்பட்டையிலும் தொடையிலும் அரிவாள் வெட்டு. 

அண்ணன் வெட்டப்படுவதை அறிந்த சந்திரா செல்வி தடுக்க முயற்சி செய்ய, அந்த 13 வயது குழந்தையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். வெட்டியவர்கள் அனைவரும் மாணவர்கள். உடன் படிக்கின்ற 16 மற்றும் 17 வயதுடையவர்கள். இதை இப்போது எழுதும் பொழுதும் மனம் பதறுகிறது.

சாதி ஒருவனை மரணத்தின் விளிம்பில் தள்ளி இருக்கிறது. சிலரை அரிவாள் எடுக்க வைத்து, கொலைப் பசியை ஏற்படுத்தி இருக்கிறது .

மரணத்தில் விளிம்பில் இருந்து பிழைத்து வந்து அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அன்று பலரும் பதிவிட்டோம். 

இந்நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், முறையான விசாரணைகள் இன்றி கடுமையான நடவடிக்கைகள் இன்றி மெத்தனத்துடன் கையாளும் போக்குகள் குறித்து விரிவாகவே பதிவு செய்திருக்கின்றார் ஆசிரியர்.

மாணவர்களின் மணிக்கட்டில் கயிறுகளாக இருந்த சாதி அடையாளம் இன்று அரிவாளாக மாறி இருக்கிறது. தென் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள் சாதிக் களமாகவே காட்சி அளிக்கின்றனர். அவை பள்ளிக்கூடங்களாக இல்லாமல் சாதி வன்கொடுமைக்கூடங்களாக உருவாகி வருவது கவலை அளிக்கிறது. தன் மீது நடந்த கொடுமையை ஆசிரியரிடம் கூறியதற்காக கொலை வெறியுடன் அரிவாள் தூக்குகிறார்கள் என்றால், இவர்கள் எந்த விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள் என்கிறார் கதிர்.

பள்ளி மற்றும் கல்லூரியில் சாதி வன்முறையில் ஈடுபடுபவர்கள் உடனடியாகப் பள்ளியில் இருந்தும் கல்லூரியில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். அவர்களுக்கு வேறு எந்தப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இடம் தரக்கூடாது என அவசரக் கல்விச் சட்டம் ஒன்றையே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்கிறார். 

சாதிய மதவாத வன்முறையாளர்கள் பொது சமூகக் கல்வி அமைப்புகளின் வழியாகக் கல்வி கற்பதிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அவ்வாறு தனிமைப்படுத்துவதுதான் அவர்களுக்கான தண்டனை மற்றும் பாடமாக மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கான பாடமாகவும் அமையும்.

பாதிக்கப்பட்டவர்களின் கல்விச்செலவை ஏற்பது மட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வும் அல்ல. அதுவே அவர்களுக்கான பாதுகாப்பானதும் அல்ல என்பதை அரசும் ஆட்சியாளர்களும் உணர வேண்டும். இழப்பீடு வழங்குவதோடு அரசின் கடமை முடிந்து விட்டதாக நினைக்கக் கூடாது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், கல்வி, உடைமை, உரிமைகள் பாதுகாப்பதில் துணை நிற்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் சக மனிதர்களைப் போல அவர்கள் நிம்மதியாக வாழ வழி அமைத்துக் கொடுப்பதைத்தான் வேண்டி நிற்கிறார்கள். இந்த வேண்டுதலை நிறைவேற்றுவதுதான் ஆட்சியாளர்களின் அரசுகளின் தலையாயக் கடமையாகும்.

இந்நூலில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்னும் சொல்லாடலையே பிழை என்கிறார் ஆசிரியர். ஒரு சாதி எப்படி தன்னையே தாழ்த்திக் கொள்ளும் என்னும் கேள்வியையும் முன் வைக்கின்றார். மற்ற சாதியினரால் தாழ்த்தி நடத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட காரணத்தினால் தாழ்த்தப்பட்ட சாதியினர் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியினர் எனும் சொல்லாடல்கள் புழக்கத்தில் பரவின. அதேவேளை, பிறப்பிலேயே உயர்ந்த சாதியாக யாரும் பிறப்பதும் இல்லை; தன்னை மேல் சாதியாகப் பாவித்துக் கொண்டவர்களும் - உயர் சாதியாக நினைத்துக் கொண்டவர்களும்தான் உண்டே தவிர, உயர்சாதியாகவோ - மேல் சாதியாகவோ யாரும் பிறந்ததில்லை; பிறக்கப் போவதுமில்லை என்கிறார்.

மேல் சாதியினர், உயர் சாதியினர், ஆதிக்க சாதியினர் எனும் சொல்லாடல்களைப் பயன்படுத்தும்போது பிறப்பிலேயே ஒரு தரப்பினர் மேல் சாதியாக, உயர் சாதியாக, ஆதிக்க சாதியாகப் பிறந்து இருக்கிறார்கள் எனும் கற்பிதம் உண்மையானது என நம்ப வைக்கின்றன. அதுவே இயல்பானது என்பது போன்ற சமூகத் தோற்றத்தைக் கருத்தியல் ரீதியாக மனித சமூக மூளைக்குள்ளும் சமூகப் படிமங்களுக்குள்ளும் பதிய வைக்கின்றன.  

நூலில் சாதிய வன்கொடுமைக்கான காரணங்களையும் தீர்வுகளையும் நிறைய முன்வைத்திருக்கின்றார்.

இந்நூலில் உள்ள உரையாடல்களைக் குறித்து பொது சமூக மனிதர்களும் தம் உரையாடல்களை முன் வைக்க வேண்டும்.

திருநெல்வேலியில் சாதி இல்லை.. இப்பெல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க? இட ஒதுக்கீடு தேவையா? அம்பேத்கர் யாருக்கான தலைவர்? மாணவர்களிடத்தில் மட்டுமா சாதி உள்ளது ? தொடரும் ஆணவக் கொலைகளுக்கு எது காரணம் ?

இந்தச் சமூகத்தில் இருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும்தான் சாதி மாணவர்களிடம் கடத்தப்படுகின்றதா? மாணவர்கள் சமூக உதிரிகளாக மாறிப் போனதற்குப் பள்ளிச் சூழல் மட்டுமே காரணமா?

சாதிகள் இல்லையடி பாப்பா; தீண்டாமை ஒரு பெரும் குற்றம், அது மனிதநேயமற்ற செயல் எனப் பள்ளிப் புத்தகத்தில் படித்திருப்போம். ஆனால், பள்ளி கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்களை எப்போது நீக்குவது? பள்ளி கல்லூரிகளில் சாதி பார்த்து வேலையைக் கொடுப்பது ஏன்?

சாதிச் சங்கங்கள், சாதி வாட்ஸ் அப் குழுக்கள், கட்சிகள் என்ன செய்கின்றன என்று கண்காணிக்கப்படுகின்றனவா?சமூகத்தில் சாதியை வேரோடு எடுத்து விட முடியுமா?

சாதிய வன்கொடுமைகளைக் குறைப்பதற்கான வழியை நோக்கித்தான் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம். சாதி இல்லை எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல், அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டும். 

இப்போதெல்லாம், பெரும்பாலானவர்களிடம் சாதிய உணர்வு மேலோங்கி இருக்கிறது. அது வெளிப்படும் விதம் மறைமுகமாக உள்ளது. எல்லோரும் கத்தி எடுக்குறது இல்ல. பெரும்பாலோர் பிறப்பு முதல் இறப்புவரை சாதி அடையாளத்தோடுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஊர் கூடி நின்றால் மட்டும்தான் தேர் இழுக்க முடியும். சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும் சாதிய உணர்வுகளுக்கும் - சாதிய வன்கொடுமைக்கும் எதிராக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்நூல் மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

தொடர்ந்து உரையாடுவோம்.


**

நூல் குறிப்புகள் :

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு :              
ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.

தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.
அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506
**
கட்டுரையாளர்:
ம.பரிமளா தேவி,
முதுகலை ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
திருப்பத்தூர் மாவட்டம்.


செவ்வாய், 4 மார்ச், 2025

தமிழ்மொழிப் பாடத்தை, மொழிப் பாடமாகச் சுட்டுவது, தமிழை அவமதிப்பதாகும் - மகாராசன்


தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறையின் இந்தக் கல்வி ஆண்டுக்கான மேல்நிலை வகுப்பு (12 மற்றும் 11) பொதுத்தேர்வு நேற்றிலிருந்து நடைபெறத் தொடங்கியுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நுழைவுச் சீட்டில், மாணவர்கள் எழுதக்கூடிய பாடங்கள் மற்றும் தேர்வு நாள்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அதில் தமிழ்ப் பாடம் என்பதாகக் குறிப்பிடவேயில்லை. அந்த அட்டவணையில், தமிழ்ப் பாடம் என்பதற்குப் பதிலாக மொழிப்பாடம் (Language) என்றே குறிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் கல்விக்கூடங்கள் அனைத்திலும் முதன்மை மொழிப் பாடம் ஒன்றும், இரண்டாவது கட்டாய மொழிப் பாடமாக ஆங்கிலமும் வைக்கப்பட்டுள்ளன. பயிற்றுமொழி எதுவாக இருப்பினும், தெரிவுப் பாடங்கள் எதுவாக இருப்பினும் பகுதி 1 இல் தாய்மொழிப் பாடமும், பகுதி 2இல் ஆங்கிலப் பாடமும் கட்டாயம் படித்தாக வேண்டும். 

தமிழ்நாட்டின் ஆகப் பெரும்பாலான பள்ளிகளில் முதன்மை மொழிப் பாடமாகத் தமிழ்ப்பாடம்தான் கற்பிக்கப்படுகிறது. மொழிச் சிறுபான்மைப் பள்ளிகளில் மட்டும்தான் பிற தாய்மொழிப் பாடங்கள் முதன்மை மொழிப் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டின் பெரும்பான்மையினரின் தாய்மொழியாகத் தமிழ்தான் இருக்கின்றது. பெரும்பான்மையோரின் முதன்மைத் தாய்மொழிப் பாடமாகத் தமிழைத்தான் கற்பிக்கின்றனர்; கற்கின்றனர். அந்தவகையில், பகுதி 1 இல் தமிழ்மொழிப் பாடம்தான் இருக்கின்றது. தமிழ்மொழி குறித்த உணர்வும், தமிழ்மொழி அறிவும், தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களும், தமிழ் வரலாற்றுத் தொன்மைப் பெருமிதமும், தமிழ் அறமும், தமிழ் இலக்கண இலக்கிய அறிவும், கற்றலுக்கு உகந்த மொழியறிவும், சிந்தனைத் திறனை வெளிப்படுத்தவும், படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தவும் தமிழ்ப் பாடம்தான் அடிப்படையாகவும் அவசியமானதாகவும் இருந்து கொண்டிருக்கிறது. பகுதி 1 இல் இருக்கும் இத்தகையத் தாய்மொழிப் பாடமான தமிழ்ப்பாடத்தைத் தமிழ்ப் பாடமாக அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, வெறுமனே மொழிப் பாடம் என்பதாகத்தான் அடையாளப்படுத்திக் குறிக்கும் வழக்கம் இருந்து கொண்டிருக்கிறது. இது, தமிழ்மொழிப் பாடத்தைக் குறுகிப் பார்க்கும் வெளிப்பாடாகும். அதுமட்டுமல்லாமல், தமிழ்மொழிப் பாட அடையாளத்தை மறைப்பதும் ஆகும்.

தமிழ் போல ஆங்கிலமும் ஒரு மொழிப் பாடமாகத்தான் கற்பிக்கப்படுகிறது. ஆயினும், அது ஆங்கிலம் என்பதாகவே சுட்டப்படுகிறது. அதேவேளை, தமிழ்ப்பாடத்தை வெறுமனே 'மொழிப் பாடம்' என்பதாக மட்டும்தான் கல்வித்துறையின் அறிவிப்புகளிலும் சுற்றறிக்கைகளிலும் வெளியீடுகளிலும் தேர்வு அட்டவணைகளிலும் குறிப்பிடப்படுகின்றன. 

இது, தமிழ்ப்பாடத்தை முதன்மை மொழிப் பாடமாகக் கற்கும் மாணவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளுவதாகும். தாம் பயிலும் தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாகத்தான் குறுகிப் பார்க்க வேண்டும்; தமிழ்ப் பாடத்தை அடையாளப்படுத்துவது அவமானம் எனும் உளவியல் மாணவர்களின் ஆழ்மனதில் பதிந்து போகும். தமது தாய்மொழிப் பாடமான தமிழ்ப் பாடத்தைப் பெருமிதமாகக் குறிப்பதற்குப் பதிலாக, வெறும் மொழிப் பாடமாகக் குறுகிப் பார்க்கச் சொல்வது, தமிழ்மொழி குறித்த தாழ்வு எண்ணத்தையும், தமிழ் அடையாளத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் எனும் அவமான உணர்வையும் ஏற்படுத்துவதாகும்.  இதேபோலத்தான், தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கும் தாழ்வு மனப்பான்மையையும் தமிழ் அடையாள மறைப்பு அவமானத்தையும் உண்டாக்குவதாகும்.

ஒட்டுமொத்தமாகக் கூறுவதெனில், தமிழ்ப் பாடத்தை மொழிப் பாடமாக மட்டும் குறிப்பதென்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் மாணவர்களையும், தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெரும்பான்மைத் தமிழர்களையும் தாழ்வெண்ணத்திற்குத் தள்ளும் முயற்சியாகும்; தமிழ் மொழி அடையாளத்தை மறைப்பதாகும்; மறுப்பதாகும்.

தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படும் தமிழ்ப் பாடம் என்பதை, வெறும் மொழிப் பாடம் என்பதாகச் சுட்டுவது, தமிழ் எனும் அடையாளத்தைத் தரவிறக்கம் செய்வதாகும். ஆகவே, தமிழ்ப் பாடம் என்பதைத் தமிழ்ப் பாடம் என்றே அடையாளப்படுத்திட வேண்டும். பிறமொழிகளை முதன்மை மொழிப் பாடமாகக் குறிக்கும்போதும், அந்தந்த மொழிகளின் அடையாளத்தையே குறிப்பிடவும் வேண்டும். 

தமிழ்மொழிப் பாடத்தை, வெறுமனே மொழிப் பாடமாக மட்டும் குறுகிச் சுட்டும் போக்கைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை/உயர்கல்வித் துறை தவிர்க்க வேண்டும்.

தமிழ்மொழி அடையாளத்தை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்வியாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் படைப்பாளிகளும் ஆசிரியர்களும் குரல் கொடுத்தல் வேண்டும். கல்வித் துறை அதிகாரிகளும் இதைக் குறித்துக் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். 

ஏனெனில், தமிழ்மொழி என்பது வெறும் பாடம் மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமும்கூட.


ஏர் மகாராசன்

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

ஏழ்திணைக் காதல் - மகாராசன்


வெறுமை மண்டியிருக்கும் வாழ்நிலத்தில்
கூந்தல் சூடத் தவிக்கின்றன
கைக்கிளைப் பூக்கள்.

பறவையின் வரவுக்காய்
கிளைக்காம்பில் காத்திருக்கின்றன
பெருந்திணைக் கனிகள்.

மும்முலைத் தாயவளின் 
குறள் கசிந்த நிலத்தில் 
வான்முலைத் தாய்ச்சியின்
மழைப்பால் குடித்துத் தவழ்கிறது
ஐந்திணைச் செவல் காடு.

எழுதிணைக் காமத்தின்
இன்பத்தில் திளைக்கிறது ஏழ்பிறப்பு.

- மகாராசன்.

In emptiness -filled
habitat lands
longing to adore the hair
stands the flowers of one-sided love*.

Fruits of an elderly love*
alone on the branch it stands,
awaiting the bird's visit.

On land spilled with Kural*  
by a mother with three breasts,  
the red soil fields, 
rich with five kinds of love*,  
drink the milk that showers  
from the breast of the rain mother,  
as they crawl.

All seven births  
remain immersed in ecstasy,  
with seven types of cultural love and lust*.

* One-sided love: Unreciprocated sexual love, as one-sided. It is called Kaikkilai in Tamil. 

*Five kinds of love: The Love between a man and a woman is depicted through five distinct situations, each associated with one of the five tracts of land in Tamil culture.These are Kurinji, Mullai, Marutham, Neithal and Paalai. These five expressions of love are collectively known as Anbin Ainthinaigal in Tamil, representing the harmonious blend of nature and human emotions in Tamil literature.

* Elderly love: An inappropriate sexual relationship is called Perunthinai in Tamil.

*Kural: The ancient Tamil moral literature text Thirukkural consisting of 1330 short couplets of seven words each in kural venba form, wtitten by Thiruvalluvar. The book is divided into three sections Aram, Porul, Inbam. Considered one of the world’s greatest works on morality, this book is known for its generality and secular nature.

*Seven types of cultural love and lust: Ancient Tamil literature divides the life of the Tamils of that era into two broad categories:Internal life (Agathinai) and External life (Purathinai). Internal life refers to the intimate relationship between a man and a woman who live together in love and harmony. These inner emotions and experiences, which occur within the individual or between the couple, are collectively termed as Agathinai in Tamil. The ancient Tamil grammer text Tholkaappiyam divides the Agathinai into seven sections. These are: Kaikkilai, Kurinji, Mullai, Marutham, Neithal, Paalai, Perunthinai. Each of these sections represents specific aspects of love and emotions.

Poem by: Maharasan
Translated from Tamil by:
Padma Amarnaath.

ஓவியம்: கார்த்திகேயன்

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025

POEMS ARE TRULY BASED ON THE LAND :Review Note By Writer THANGES


Poet Maharasan's  'Words Sprouted in the Land'   after receiving good attention in Tamil, now  translated into English by the translator Padma Amarnaath. we can  say that the translator was fair enough in her work of  translation as she has made  the piece of literary work as a memorable one with her splendid talent of  translation.

All the fifty five poems in the text, originally written in tamil language are truly based on the land of this people who  inherited this land with all its ancient  civilization and with all its superior culture. To these people this land is the very important factor from which only all the branches of creation emerged out in the society.
Before entering in to Maharasan’s poetry we must make ourselves familiar with the Sangam Tamil literature to understand the core of his poems. People in this ancient  soil categorized this land as  Thinai and  Pozhuthu. This is called the Mudharporul, the  base of   sangam literature. There are five Thinais in sangam literature  called  Kurinji (mountainous regions), Mullai (pastoral forests), Marutham (riverine agricultural land), Neithal (coastal regions), and Paalai (arid regions). 
As well as we must know about the Perumpozhudhu sufficiently because this is perumpozhudhu  denotes the season in the  Sangam  Tamil literatue.   During  the perumpozhudhu seasons only the poetic  events occur  in Marutham thinai. Thus  this  perumpozhudhu is divided in to six periods, respectively  called Kulir kaalam, Kaar kaalam, Munpani kaalam, Pin pani kaalam, Ilavenir kaalam and Mudhuvenir kaalam.
These Thinai and Pozhuthu are very important factors in sangam literature with which one could easily identify the life, economy and the profession of the native people.  
So, the land and time are called the Mudharporul in sangam tamil literature. Apart from these there are other two aspects which are  included in  the sangam literature to understand the core of the verses.
They are called as Karupporul and Uripporul. The people, animals, birds, plants, music and musical instruments and God are called  Karuporul meaning the gist or the lives of the Thinai. 
The subject of the poems is called the Uripporul, meaning the base characteristic of the poems. Hence in Marutham thinai, the  infidelity of the hero and the resentment of the heroine is the Uriporul.
The primary objects and secondary objects are well interwined in sangam literature in Tamil. Before read any poem one should be thoroughly aware of all thes descriptions. Each  Thinai has unique feature of its own.
In a broad way the sangam literature was divided in to two major catagories respectively Aham (Inner) and Puram (Outer).
Aham (Inner): It is a type of Sangam literature in which the abstract discussion on human aspects is done. It signifies emotions and sentiments in the form of love, sexual relations, sensuality, etc. Aham poetry has additional categories, such as Ain-tinai (mutual love), Kaikkilai (one-sided love) and Perunthinai (unsuited love). Aham poetry uses metaphors and imagery. 
Puram (Outer): It is a type of Sangam literature related to exploits and heroic achievements in the form of Human experiences. Puram is a direct form of poetry. It signifies heroism, customs, social life, ethics, philanthropy, etc. About three-fourths of Sangam poetry is Aham-themed, while one-fourth is Puram-themed. Puram poetry also has categories based on activities like Vetchi (cattle raid), Vanchi (war preparation), Kaanchi (tragedy) and Paataan (elegy and praise) etc. Puram poetry is more direct and includes names and places.
Maharasan's poems sings all these five Thinais in the modern context in the modern form. Even though he depicts all the five Thinais in day to day life, he gives much importance to Marutham thinai. Marutham thinai  refers to the paddy fields and adjoining lands. It gets its name from the flowering Marutham tree which grows in farmlands. The  people once  living in this land  were  involving  in agriculture. 
People worked in fields, sowing, weeding and cultivating. The occupation of the people is mainly agricultural. Water buffalo, crocodiles, crabs, lotus, water lilies, herons, fish, pelicans live in the agricultural lands and they find their place rightly in Marutham thinai poems. Water bodies such as wells, ponds, rivers and streams could be seen in marutham land. Vanji, Kanji and Marutham trees grows here. These make the karuporul of marutham thinai poems.
Maharasan comes in the same heretity as he never forgets to record all these features in his poem in the modern time. He  carefully gives us the present reality that how far we people are diverted from this blessed life. The people of this heredity, today has almost, lost the legacy handed over to them by their forefathers. They should have inherited all these possessions from their forefathers. 
The unforgettable pain that aches his heart is poignantly reflected in every poem. The success of his being a poet is well reflected in this aspect. He is also able to transcend the same feelings to the readers. He begins as  
Words, soaked and flowing like liquid, 
nurture the land, helping  it grow green. 
Like a pregnant woman 
bearing a child in her womb, 
words carry soul 
that caresses the land.
To him  a word is not a mere tool for doing mere communication. He posses it as a child that carry the breath of its mother. Nothing could escape from his searching eye when he begins to depict the present  nature  in his poem. 
A small plant seen beneath a temple tower called his attention and he  immediately  describes  
beneath the temple tower’s shadow, 
the fig plant remains spying.   
The fig plant might be a mere plant or it might also be your good old culture. Because at present  no one comes forward  to save a race which was so superior  in knowledge and civilization once upon a time. He writes 
Within the sanctum, 
the hidden God 
as always and even now,
has no plans to step out. 
My village‘s sacred folk history 
remains unwritten till lost.  (verse 2)              It kindles the pathos of the present time. When you forget a village to focus, quite naturally you forget your own civilization.
Another remarkable aspect of this poet is he always reminds us the good old days  of  good old Tamil race which was so superior in its state once upon a time in the world.  
There is an inseperable umblical cord that binds Tamilians and Srilankan Tamils together. The brutal killing of  the innocent child Balachandran was poignantly  depicted in a poem that the small boy's last breathing  portrayed by the poet arise  uncontrollable pathos in the readers hearts.
When you read these four lines you can definitely come to conclusion that how worst the world is going now in the name of racism.
Aware of his fate of getting killed,
he sits  on the altar of racism,
innocently gazing, 
Balachandran’s eyes wander unknowingly. (verse 7)
In the good old past, on the mountains of Kurinchi thinai, a well disciplined communal society was built up by our ancestors and  that lasted for a long time. It taught the world the real civilization, humanism and the legacy of nature.
Like a deep green tent, 
The Mountain mother lies stretched out,
her human children 
were sent down gradually.
In the tribe’s land, the immigrants 
claimed the forest as their own, 
asending slowly step by step (verse 11)
This is how the native of the people were sent away from their lands by the immigrants once upon a time. 
Again and again the poet concentrates on  depicting the lives of poor people. They are giving their utmost  labour in the  field but in return gaining nothing as  profit  in a  modern society like this. 
We cannot cross them without feeling  much guilty conscience. For example in the  18th poem the opening lines begin like this 
Faded labour, 
innocent lives
and green - hued lands 
now resemble tattered  clothes, 
worn out and  decayed.
Similarly in 20th poem a poignant picture of peasant life is  captured.
Once who laboured to feed the world, 
now stand as a crowd 
begging with hands stretched.
for one mouthful of food,
the land was humiliated. 
Above all in verse number 21, the poet finishes his  lines like this
All faith once held on the land 
by this entire clan and crowd,
suffer and die now, on that same land.
Such is the destiny, 
this crowd has bought. 
The unending  pathos continues in the following lines when he writes like this 
Hands once filled 
with sweet -scented paddy grains,
generously given and donated,
now beg for a grain of cooked rice. (verse 22) 
When he describes about the paddy fields, we feel an immense pleasure piercing through our hearts. Because it reminds us the  good old days of our people. As everything  is gone now, we could  see the ashes of the dream only  now. In 27th poem he finishes the last Stanza as
In paddy grains and spoken words 
she lived like a folklore epic in the village- 
the farmer woman, now buried in the soil.
Had she seen today's barren lands,
her heart would ache and weep at this fate.
Similary in verse number 28th the poet’s heart is longing for the land to be cultivated for it’s own pleasure.
The dry rugged lands,
never touched by the plough’s share
yearn for furrows,
lying barren with dry, sticky grass. (verse 29)
Whether it is love or lust our life is chiefly associated with the land in which we are leading our lives. With out seeing the shadows of the Nature, one cannot imagine Maharasan’s poetry ever existed on the text.
The memories of heart is floating over in day to day life as it is well picturised in  the opening lines of poem number 31.
The memories of milky white  morning,
bursts in summer 
like Kapok cotton, 
basking in sunlight, 
drifting in a gentle breeze 
and  roams through.
The ecstacy of praising Nature continues in the next poem also as he captures a scene in the sunlight in the morning. 
Bathing in sunlight 
and smeared with turmeric 
the dry brown leaves 
swim drifting in the air 
arrive, kissing  the soil 
as they fall to the ground beneath the tree. (verse 32)
The pain that aching them cannot be felt every one as they feel because they are given the life with the agriculture.
Amidst the mushy land, heat and rain 
only the rolling and toiling farmers 
could feel the sorrow and pain 
of losing their land
and witnessing their plants die (verse 35)
A few poems only could go away from the traditional track of this line and they too  give us remarkable pleasure.
When he writes in poem number 37 and in poem 53 like this we are able to enterin to a different  show of  urban culture.
All  the empty cups 
get marked with lip prints, 
heaping tea’s  philosophy. 
Lingering  dreams 
flow like pleading imaginations, 
stay awake,yet untouched by sleep.
The Neithal thinai (about sea) is well expressed in the following lines in the poem 41. 
Foaminng with the sounds of the tide, 
she tunes and sings 
a lullaby of  life, 
smiling always- 
the sea mother.
If we start to quote the favourite lines they are so close to our hearts, then we will start to quote all the lines of the text. But before closing it reasonably, we should not forget to quote the ending lines of this text in poem 55. 
The life blooming
with weight of  wings 
and scent of blossoms 
remain sweet forever.
So I can say that the weight of Maharasan’s words, the aesthetic creation of its  blossoms get mingled in our memories and remain there more sweeter for a long long time there.
Equally I  am bound to appreciate the translator Padma Amarnaath for her extra ordinary effort for getting this remarkable translation.
Those readers who have the fortune of reading both the original text in tamil and  its translation in English will definitly feel that all the literary devices of original  text have been well translated in English  along with its  literary taste. I wish her to have a bright future as a talented  translator.
Here again I appreciate poet Maharasan  whole heratedlly and wish him to get a tremendous success for this creation in both languages.
                                                   With love,                                    Thanges,
Writer & translator.
*
WORDS SPROUTED IN THE LAND,
Author: MAHARASAN,
Translated from Tamil by:
PADMA AMARNAATH,
First Edition, January 2025, Pages 120,
Rs. 100/- 
Published by:
YAAPPU VELIYEEDU, 
Chennai - 600076, 
Cell: 9080514506.