மலைகளும்,காடுகளும்,வயல்களும்,கடலும்
கொண்ட பெரும்பரப்பில் மனித சமூகம் நிலைகொண்டு வாழ்வதற்கு உகந்த சூழலாய் அமைந்தது சமவெளி
எனும் நிலப்பகுதிதான். மலைகள், காடுகள், கடல்
எனும் இயற்கை வெளிகளை வாழ்விடங்களாகவும், வாழ்வாதாரங்களாகவும் கொண்ட மனிதக் குழுக்களைக்
காட்டிலும், சமவெளிப் பகுதிகளை வாழ்விடமாகவும், வாழ்வாதாரங்களாகவும் கொண்ட மனிதக் குழுக்களே
பெருங்குழுக்களாய் உருக்கொண்டு வந்துள்ளன.
இயற்கையின்
கடல் மற்றும் இதர நிலப் பகுதிகளைக் காட்டிலும் நிலைத்த வாழ்வுக்கான இயற்கை நில அமைப்பு,
உற்பத்திக்கான பெருநிலப்பரப்பு, கூட்டு உழைப்புக்கான மனிதப் பெருந்திரள், நிலம் – உழைப்பு
போன்றவற்றின் விளை பயனாய் அமைந்த உபரிச்செல்வப்
பெருக்கம் போன்றவற்றால் அமைந்துபோன வாழ்க்கைமுறை, வாழ்க்கைத்தரம், பண்பாடு, நாகரிகம்,
மொழி, கலை, இலக்கியம், அறிவுப்புலப்பாடு, கல்வி, அறம், சமூக உறவுகள், பண்டமாற்றுமுறை,
சமூகக் கட்டமைப்பு போன்ற இன்னபிற யாவும் பெருகி வளா்ந்தமைக்கான வாய்ப்புகளும் வசதிகளும்
சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த மக்களிடம்தான் அதிக அளவில் காணப்பட்டன. இவ்வாறான சமவெளிப்
பகுதிகளையும், மக்களையும் செழிப்பும் வளமும் நிறைந்ததாய் உருவாக்கியதில் பெரும்பங்கு
வகிப்பன இயற்கையின் ஒப்பற்ற கொடைகளுள் ஒன்றான ஆறுகள்தான்.
மலைகளில்
அரும்பி, காடுகளில் நுழைந்து சமவெளிகளில் முகம்
காட்டுகிற ஆறுகள் யாவும், விரிந்து கிடக்கும் பெரும்பகுதிச் சமவெளிகளைச் செழிப்பாக்குவதையே
கடமையாகக் கொண்டிருக்கின்றன. இன்னொரு வகையில்
சொல்வதானால் சமவெளிப் பகுதிகளில் கிளைபரப்பும் ஆறுகளை அந்நிலப் பரப்பில் வாழ்ந்த
மனிதக் குழுக்கள் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டன.
பருவங்களுக்கு ஏற்றாற்போன்று பெய்திட்ட
மழையும், அதை உள்வாங்கிப் பெருக்கெடுத்த ஆறுகளும் சமவெளி நிலப் பரப்பைச் செழிக்கச்
செய்ததில் பெரும்பங்காற்றியுள்ளன. இதனாலேயே ஆறுகள் பரந்த சமவெளிப் பரப்பில் நிலைகொண்டிருந்த
அத்தனை மனிதக் குழுக்களும் மற்ற நிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த மனிதக் குழுக்களைக்
காட்டிலும் உயா்த்திக்கொண்டன அல்லது உயா்த்திக் கொண்டதாக நினைத்துக்கொண்டன.
சிறு மற்றும் குறுங்குழுக்கள் பெருங்குழுக்களாகவும்,
பெருங்குழுக்கள் இனக்குழுக்களாகவும், இனக்குழுக்கள் இனங்களாகவும் உருவெடுத்து, பல்வேறு
சமவெளிப் பகுதிகள் சார்ந்த பெருஞ்சமூகங்களாய் வடிவமைத்துக் கொண்டன. இதனால்தான் ஆற்றங்கரைச் சமவெளிகளை நாகரிகம் செழித்த
நிலப்பகுதிகளாக வரலாற்றில் குறிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு
காலகட்டத்திய நிலையிலும் உருவாகி வந்த மனித சமூகங்கள் யாவும் தத்தமக்கான சமூக அமைப்புகளை
ஏற்படுத்திக் கொண்டன. அவ்வாறு கட்டமைக்கப்பட்ட சமூக அமைப்புகள் தான்தோன்றித்தனமாக இயங்கிடவுமில்லை;
இயக்கப்படவுமில்லை. ஒவ்வொரு சமூகக் குழுக்களும்
தமக்கான அறங்களையும், அதிகாரங்களையும் கட்டமைப்பு செய்து கொண்டன. சமூகக் கட்டமைப்பில் அறங்களும் அதிகாரங்களும் இணைந்தே
செயலாற்றும் தன்மை கொண்டன.
அறமும்,
அதிகாரமும் எல்லோருக்கும் பொது என்பதாக உருவாக்கப்படுவதில்லை. என்னதான் வட்டாரம், மொழி,
பண்பாடு, நிறம், இனம், நாடு, சாதி, சமயம் என ஏதாவது ஓா் அடையாளப்படுத்தலுக்குள் வாழ
நோ்ந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டிய வேறு ஒரு பிரிவினை மனித சமூகத்திற்குள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதுதான் வா்க்கப் பிரிவினை. உடைமை சார்ந்த பிரிவினா் ஒரு வா்க்கமாகவும், உடைமையற்ற
உழைக்கும் பிரிவினா் இன்னொரு வா்க்கமாயும் இருவேறு வா்க்ககங்கள் சமூக அமைப்பில் உள்ளடங்கியிருக்கின்றன.
இரு வேறு வா்க்கங்களுக்கிடையிலான பிரிவினையைப்
பேணும் வகையில் உருவாக்கப்பட்டவைதான் அறங்களும் அதிகாரங்களும். உழைக்கும் பெருந்திரள்
சமூகத்தைக் கீழ்நிலையில் இருத்தி, அறங்களையும் அதிகாரங்களையும் கட்டமைக்கும் உடைமை
வா்க்கப்பிரிவினா் ஆளுகை செலுத்திக் கொண்டிருப்பது காலங்காலமாய்த் தொடா்ந்து கொண்டிருக்கிறது.
குறுநில
அரசா்கள், சிற்றரசா்கள், பேரரசா்கள், பண்ணையார்கள், சமீன்கள், சேனாதிபதிகள், பாளையப்பட்டுகள்,
முதலாளிகள், வணிகநிறுவனங்கள், முதலாளித்துவ நாடுகள், ஏகாதிபத்தியங்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும்
அதிகார மையங்களும் உருவாகி வந்திருக்கின்றன.
இவ்வதிகார மய்யத்தோடு பிணைத்து கிடப்பவைதான் சாதி, சமயம், நிறம், இனம், பாலினம்,
நாடு சார்ந்த அதிகார முகங்களும்.
இவ்வாறு உருவாகிவந்த, உருவாக்கப்பட்ட
எல்லாக்காலத்திய அதிகார மையங்களும் சுரண்டல் வழிப்பட்ட செல்வக் குவிப்பை, அதற்குண்டான
அதிகாரப் பரப்பலையே முதன்மையாகக் கொண்டிருந்தன.
இன்றைய உலகச்சூழலில் பேரதிகாரம் செலுத்திக்கொண்டிருப்பவை ஏகாதிபத்திய நாடுகளும்,
அவற்றின் வளர்ப்பு மற்றும் வார்ப்பு நாடுகளும்தான்.
இன்றைய
காலகட்ட ஏகாதிபத்திய பேரதிகார நாடுகளைப் போன்ற அதிகார அமைப்புகள் பல்வேறு காலகட்டங்களில்
பல்வேறு நிலப்பகுதிகளில் நிலவி இருக்கின்றன. குறுநிலமன்னா்கள், சிற்றரசா்கள், பண்ணையார்கள்,
உடைமை வா்க்கம் சார்ந்த அதிகாரங்கள் யாவும் குறிப்பிட்ட வட்டாரம், இனக்குழு, இனம்,
மொழி, சாதி, சமயம், போன்ற ஏதாவது ஒருவகைக் குறுவழியிலான அல்லது குறும அளவிலான அதிகார
எல்கையை மட்டுமே கொண்டிருந்தன. ஆனால், மேற்குறித்த
குறுவழியிலான அல்லது குறும அளவிலான அதிகார எல்கையைத் தாண்டிய பெருவெளியிலான அதிகார
எல்லையை விரிவுபடுத்தும் நோக்கில் உருவான அதிகார மய்யங்களும் நிரம்ப உண்டு. அவைதான்
நில உடைமைக் காலத்தியப் பேரரசுகள். இத்தகைய பேரரசுகள் உருவாக்கம் சமவெளி நிலப்பரப்புகளில்தான்
முதலில் கருக்கொண்டிருக்கின்றன.
பேரரசுகள்
அதிகாரம் புரிந்த ஒவ்வொரு காலகட்டமும் பொற்காலங்கள் என்றே அதிகாரம் சார்ந்த வரலாறுகள்
எடுத்துரைக்கின்றன. இத்தகைய பொற்காலங்கள் யாவும் பேரரசுகளுக்கு வேண்டுமானால் பொற்காலங்களாக
இருந்திருக்கலாம். ஆனால், பேரரசு அதிகார எல்லைக்குள்
வாழநோ்ந்த உழைக்கும் ஏழை எளிய மக்களைப் பொருத்தவரையில் இருண்ட காலங்களாகவே இருந்திருக்கின்றன.
எல்லாக்காலத்திய
எல்லாப்பகுதிகளிலும் நிலவிய பேரரசுகளின் முதன்மை நோக்கம் விரிவாதிக்கம்தான்; ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்குப் போர்களை நிகழ்த்தியவைதான்; பெரும்திரள் மக்களை அடிமைப்படுத்திச் சுரண்டியவைதான்;
எளிய மக்களிடமிருந்த உடைமைகளைப் பறித்தவைதான்;
பண்பாட்டு அடையாளங்களைச் சிதைத்தவைதான்;
எளிய மக்களிடம் பெயரளவுக்கு இருந்திட்ட கையளவு நிலங்களைக்கூட பறித்தவைதான்;
தமது சொந்த சாதி, சமய, இனம், மொழி, வட்டாரம்,
நாடு சார்ந்தவா்களாக இருந்தாலும்கூட எளிய மக்களாய்- உழைக்கும் மக்களாய் இந்ததினாலேயே
எவ்விதப் பாகுபாடுகளும் இன்றி அவா்களிடம் இருந்த உடைமைகளைப் பறித்துக்கொண்டவைதான். அதேவேளையில், பேரரசுகளை உச்சிமுகா்ந்து சேவகம்
புரிந்த யாவராயினும் அவா்களுக்கு எல்லாவகைப்பட்ட இன்பத் துய்ப்புகளும் நிறைந்த வாழ்வுக்கும்,
செல்வக்குவிப்புகளுக்கும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அதையும் தாண்டி எளிய உழைக்கும் மக்களிடம் இருந்து
சுரண்டப்பட்ட, பறிக்கப்பட்ட நிலங்கள் உள்ளிட்ட செல்வங்கள் யாவும் அவா்களுக்குத் தானங்களாய்க்
கொடுக்கப்பட்டன. இவற்றினுடாக, பேரரசு அதிகார வெளியின் நலன் சார்ந்த அவா்கள்தான் அதிகாரத்தையே
செயல்படுத்தும் கங்காணிகளாய் இருந்திருக்கின்றனா்.
பேரரசுகள்
நிலவிய காலகட்டம் நிலவுடைமைச் சமூகக் காலகட்டமாகும். ஆகையால் நிலம்தான் அச்சமூகக் காலகட்டத்தின் முதன்மை
உற்பத்தி ஆதாரம். இத்தகைய நிலம் சார்ந்த உற்பத்திக் களங்கள் யாவற்றையும் நிலவுடைமைக்
காலத்திய பேரதிகார மையங்களே கையகப்படுத்தி வைத்துக்கொண்டன. நிலம் சார்ந்த உற்பத்திச்
செயன்மைகளில் நேரடியான உழைப்பைச் செலுத்திய சிறு குறு வேளாண் மக்களிடமிருந்து அதிக
அளவிலான வெவ்வேறு வகையிலான வரிகள் வசூலிக்கப்பட்டன. அவா்களிடமிருந்து பறிக்கப்பட்ட விளைநிலங்களை உழைப்புக்கும்,
உற்பத்திக்கும், நிலத்திற்கும் கொஞ்மேனும் தொடா்பில்லாத பேரதிகார ஒட்டுண்ணிகளுக்குப்
பெருமளவில் தானங்களாக வழங்கப்பட்டன. இதனால், கையளவு நிலத்தில் காலங்காலமாய் உழைத்தும்
உழன்றும் வந்தவா்கள், தங்களின் பூர்வீக நிலங்களில் இருந்தே அன்னியப்படுத்தப்பட்டனா். தங்களிடம் இருந்த நிலங்களிலேயே வெறும் கூலிகளாய்,
கொத்தடிமைகளாய் மீளவும் அமா்த்தப்பட்டனா்.
மேற்குறித்த நிலைமைகள்தான் எல்லா நிலப்பகுதிகளிலும் கால்கொண்டிருந்த நிலவுடைமைப்
பேரரசு காலகட்டங்களில் நிலவியிருந்தன. இதில்
தமிழ் நிலமும் விதிவிலக்கல்ல என்பது மறுக்க முடியாத உண்மையாக வரலாற்றில் புதையுண்டு
கிடக்கின்றது.
தமிழ்
நிலத்தின் சமவெளிப்பகுதிகளை வளப்படுத்தியதும் ஆறுகள்தான். அதனாலேயே தமிழ்நாட்டின் ஆற்றுப்படுகைப்
பகுதிகளும் ஆற்றுநீா் பாயும் சமவெளிப்பகுதிகளும் பேரரசு உருவாக்கம் பெறுவதற்கான சூழலைத்
தன்னகத்தே கொண்டிருந்தன. இத்தகைய சமவெளிப்பகுதிகளில்
அதிகாரம் செலுத்தியவா்களே பெருவேந்தா்கள், மாமன்னா்கள், பேரரசா்கள் என அழைக்கப்பட்டார்கள். உலகின் பிறபகுதிகளில் நிலைகொண்டிருந்த பேரதிகார
மையங்களைப் போலவேதான் தமிழ்நிலத்திலும் கால்பதித்திருந்த பேரதிகார மையங்களும் செயல்பட்டிருக்கின்றன.
உலகின் பிற பகுதிகளில் நிலங்களைப் பறிகொடுத்த வேளாண்குடிகளைப் போலவே இங்கும் நிலங்களைப்
பறிகொடுத்த வேளாண் குடிகளின் வரலாறு நிரம்ப உண்டு.
நிலத்தையும், உழைப்பையும் மட்டுமே உயிர்
ஆதாரமாகக் கொண்டிருந்த வேளாண் தொல் குடிமக்களிடமிருந்து இறைவரி போன்ற பல்வேறு வகையிலான
வரிகள் அதிகளவில் வசூலிக்கப்பட்டன. இவ்வரிகளைச்
செலுத்தாத-செலுத்த இயலாத செலுத்த மறுத்த வேளாண்குடிகள் மிகக்கடுமையான தண்டனைகளை எதிர்கொண்டனா். நிலத்தின் வருவாயில் முக்கால் பங்கு அதிகார மய்யங்களின்
கருவூலத்திற்கென்று வசூலிக்கப்பட்டன. ஒருகட்டத்தில்
வேளாண் குடிகளிடமிருந்த எஞ்சிய நிலங்கள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டன. பறிக்கப்பட்ட அந்நிலங்கள் யாவும் இறையிலி நிலங்கள்
என்பதாகக் கொண்டு பேரரசுகளைத் துதி பாடியவா்கள், சேவகம் புரிந்தவா்கள், கங்காணிகள்,
நலன்விரும்பிகள், வேள்வி யாகம் புரிந்தவா்கள், கூட்டிக்கொடுத்தவா்கள், காட்டிக்கொடுத்தவா்கள்
எனப் பல்வேறு தரப்பினா்க்கும் நிலத்தானங்கள் அள்ளிஅள்ளி வழங்கப்பட்டன.
நிலங்களைத் தானமாகப் பெற்றவா்களுக்கும் நிலத்திற்கும் உழைப்பிற்கும் துளியளவும் தொடா்பும் ஈடுபாடும் கிடையாது. ஆனாலும், தானமாகப் பெறப்பட்ட அந்நிலங்கள் பெரும் செல்வமாக - பெரும் சொத்தாக அவா்கள் கணக்கில் போய்ச்சேர்ந்தது. அதேவேளையில் மண்ணோடு மண்ணாகவும் மாடுகளோடு மாடுகளாகவும், உழைப்பையும் வோ்வையையும் குருதியையும் சிந்தி, வாழ்வின் பெரும்பகுதியைக் குடும்பத்தோடு சோ்ந்து உழைத்து காலம்காலமாக வேளாண் தொழிலையே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த வேளாண் தொழில் குடிகள் நிலங்களை இழந்து தவிக்க நேரிட்டது.
நிலத்திற்கும் தம் வாழ்விற்கும் உணா்வுப்பூர்வமான உயிர்த் தொடா்புடைய தொப்பூள்க்கொடி உறவைப் போன்ற பண்பாட்டு பிணைப்பைக்கொண்டிருந்த வேளாண் தொல்தமிழ்க் குடிகள் தங்கள் நிலத்தைப் பறிகொடுத்து நிலமற்ற ஏழைகளாக - வேளாண் கூலிகளாக - பண்ணை அடிமைகளாக ஆக்கப்பட்ட வரலாறு தமிழ்நிலத்திலும் உண்டு. சேர, சோழ, பாண்டிய மூவேந்தா்களின் வழித்தோன்றல்கள் எனச்சொல்லிக்கொள்ளும் வேளாண் தமிழ்க் குடிகள்யாவும் பெரும்வேந்தா்களிடம் நிலத்தைப் பறிகொடுத்த வேளாண் தமிழ்க் குடிகளின் எச்சங்கள்தான்.
நிலவுடைமைக் காலத்திய மன்னராட்சி அதிகார எல்கைகளில் நடைபெற்றுவந்த நிலப்பறிப்பும், நிலத்தைப் பறிகொடுப்பதுமான கொடூரமான நிகழ்வுகள் மக்களாட்சி எனும் பெயரில் நிலவுகிற இன்றைய காலத்திய அதிகார அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக அமைப்பிலும் தொடா்ந்து நீடிக்கத்தான் செய்கின்றன.
காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறவில்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத நிலைமைகள்தான் நீடித்துக்கொண்டிருக்கின்றன. நிலவுடைமைக் காலத்திய அதிகார அமைப்பான
மன்னராட்சியில் மன்னா்களைத் தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் இன்றைய மக்களாட்சி என்கிற அதிகார அமைப்பைத்
தெரிவு செய்வதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது.
உள்ளாட்சி அமைப்புக்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் போன்ற அதிகார அமைப்பை
உருவாக்குவதில் மக்களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஆயினும், வாக்களிக்கும் உரிமையைக்கொண்டு அதிகார
அமைப்பைத் தெரிவு செய்து உருவாக்கியபின்பு அத்தகைய அதிகார அமைப்புகளிலோ, அவற்றின் நோக்கங்களிலோ,
செயல்பாடுகளிலோ தலையிடுவதற்கான எந்தவகையிலான
உரிமைகளும் மக்களுக்குக் கிடையாது. மாறாக, அதிகார அமைப்பை உருவாக்கியவர்களே அதிகார
அமைப்புகளுக்கு இசைந்துபோக வேண்டும். கீழ்ப்படிய
வேண்டும்; வழிமொழிய வேண்டும்; நல்லனவோ கெட்டனவோ எதையும் தாங்கிக் கொள்ள வேண்டும்; சேவகம் செய்திட வேண்டும். இறுதியாக ஏதோ ஒருவிதத்தில் பலியாகப்
போகவேண்டும். இதுதான் இந்திய நாட்டில் நிலவுகிற மக்களாட்சி அதிகாரம்.
பெருந்திரள் மக்களால் வாக்களித்துத் தெரிவு
செய்யப்படுகிற அதிகார அமைப்பானது தம்மைத் தெரிவுசெய்த மக்களுக்கானதாகவும், மக்களுக்குச்
சேவகம் புரிந்திடும் அமைப்பாகவும் இருந்திடவேண்டும் என்கிற நிலையெல்லாம் பொய்த்துப்போனது. மன்னராட்சி
தொலைந்து வெள்ளையா் ஆட்சி துரத்தப்பட்டு மக்களாட்சி மலர்ந்தது.
இம்மக்களாட்சி மக்களுக்கானதாக இருக்கிறது என எந்தக் குடிமக்களாலும் மனமாரச்
சொல்லிக்கொள்ள முடியாத நிலைதான் இருந்து கொண்டிருக்கிறது. நிலவுடைமைக் காலத்திய மன்னராட்சிகள்கூட
நெல்லுக்குப்பாதி புல்லுக்குப்பாதி என்பதாய்த் தமக்குச் சேவகம் செய்தவா்களுக்கும் குடிமக்களுக்கும்
ஏதோ ஒரு வகையில் கூடக்குறைந்தளவில் சேவகம் புரிந்தன. ஆனால் இன்றைய மக்களாட்சி எனும் பெயரில் நிலவுகிற
அதிகார மய்யங்களின் நோக்கமும் செயல்பாடுகளும் சொந்த நாட்டு மக்களைப் பலிகொடுத்து அந்நியா்களுக்கே சேவகம் புரிவதைத் தலையாயக் கடமையாகக் கொண்டிருக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு முதலாளிகள்,
முதலாளித்துவ நாடுகள், ஏகாதிபத்தியங்கள் எனப் பொருளியல் மூலதனம் மற்றும் ஆயுதக் குவிப்பைக்
கொண்டிருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் உலகநாடுகளும் அவற்றைச் சார்ந்தவா்களும் தங்களின்
சுரண்டல் மற்றும் சந்தைப் பொருளாதார வலைக்குள் மூன்றாம் உலகநாடுகளையும் பின்தங்கிய
நாடுகளையும் சிக்கவைத்துள்ளனா். இனிப்பு தடவிய நஞ்சாக உருவாக்கப்பட்டுள்ள ஏதாதிபத்தியங்களின்
புதிய பொருளாதாரக் கொள்கை எனும் உலகமயமாக்கல் கொள்கையைத் தெரிந்தோ, தெரியாமலோ நெருக்கடிகள்
காரணமாகவோ ஏற்றுக்கொண்ட நாடுகள்யாவும் ஏகாதிபத்தியங்களின்
நலன்சார்ந்தே இயங்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதனால் சொந்த நாட்டு மக்களின் உற்பத்தி நலன்களைக்
காட்டிலும், ஏகாதிபத்தியங்களின் நலன்சார்ந்த
வணிக உற்பத்திக்குத் தரகுவேலை பார்ப்பதை மெனக்கெடுத்துச் செய்து கொண்டிருக்கின்றன. மேலும் உலகமயமாக்கலை ஏற்றுக்கொண்ட நாடுகள் யாவும்
தத்தமது நாடுகளில் தனியார்மயமாக்கலையும் தாராளமயமாக்கலையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமது சொந்த மக்களின் வாழ்வாதாரம் பற்றியெல்லாம்
எவ்விதக்கவலையும் கொள்ளாமல், ஏகாதிபத்தியங்கள் போன்றவற்றுக்கு எடுப்பு வேலைகளைச் செய்து
கொண்டிருக்கின்றன பல நாடுகள். இவற்றுள் வல்லரசுக்கனவு காணும் இந்தியாவும் ஒன்று.
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய வணிகச்
சந்தைக்களமாகவும், சுரண்டல் கூடாரமாகவும், ஏகாதிபத்தியங்களின் கங்காணியாகவும் செயல்படுகிற
இந்திய அதிகார மய்யம் பெயரளவில்தான் மக்களாட்சி அதிகார அமைப்பாகச் செயல்படுகிறதே ஒழிய,
உண்மையில் ஏகாதிபத்தியங்களின் கைப்புள்ளையாகவே செயல்பட்டு வந்திருக்கின்றது. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு முதலாளிகள்,
முதலாளித்துவ நாடுகள், ஏகாதிபத்தியங்கள் என சொந்த நாட்டைத் தவிர்த்துப் பிறநாடுகளைச்
சார்ந்த யாவரும், முதலாம் மற்றும் இரண்டாம் உலக நாடுகளில் காலாவதியாகிப்போன, பேராபத்துகள்
நிறைந்த, நோய்களைப் பரப்புகிற, சுற்றுச் சூழலைச் சீரழிக்கிற,மண்ணையும் மக்களையும் பாதிக்கிற,
இங்குள்ள தொழில், உற்பத்தி, வணிகம் போன்றவற்றை ஒழித்துக் கட்டுகிற, நுகா்வுக் கலாச்சார
வெறியைத் துாண்டுகிற வகையில் அமைந்திருக்கும் வணிகம், தொழில், உற்பத்தி எனும் பெயரில்
மேற்கொள்ளப்படும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் தங்கு தடையின்றி அனுமதி, இடவசதி, மின்சாரம்,
தண்ணீா், போக்குவரத்து, வரிவிலக்கு, சலுகைகள்
என அனைத்துவிதமான வாய்ப்புகளும் வசதிகளும் இந்திய அதிகார மய்யங்களால் செய்து கொடுக்கப்படுகின்றன.
இந்திய அதிகார மய்யங்களின் மேற்குறித்த
தரகுச் சேவகத்தால் பயனடைந்து கொண்டிருப்பன பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு முதலாளிகள், முதலாளித்துவ நாடுகள், ஏகாதிபத்திய
நாடுகள்தான். இவை தின்று போட்ட எச்சில் எலும்புகளைக்
கடித்துச் சுவைத்துப் பெருமைப்பட்டுக் கொள்கின்றன
இந்திய அதிகார மய்யங்கள். ஆனால் மக்களாட்சி
எனும் பெயரிலான இந்திய அதிகார மய்யங்களை உருவாக்கிய உழைக்கும் பெருந்திரள் மக்கள் யாவரும்,
ஒவ்வொருநாளும் ஏதாவது ஒருவகைக் காரணத்திற்காக இந்திய அதிகார மய்யத்திற்கோ, ஏகாதிபத்திய
அதிகார மய்யத்திற்கோ பலியாகிக்கொண்டிருப்பது தொடா்ந்து கொண்டிருக்கிறது; இன்னும் தொடரத்தான்
செய்யும்.
இந்தியா போன்ற நாடுகளில்தான் அனைத்துவகை
வளங்களும் கொட்டிக்கிடக்கின்றன. உழைப்புச்
சுரண்டல் உள்ளிட்ட அனைத்துவகைச் சுரண்டல்களும் தங்குதடையின்றி நடைபெறுவதற்கான திறந்தவெளிக்
கூடாரங்களாய் மாற்றப்பட்டுக் கிடக்கின்றன.
இதனால் மலைகள், காடுகள், கடல், ஆறுகள், நீா் ஆதார வளங்கள். சமவெளிப் பகுதிகள்,
வேளாண் விளைநிலங்கள், இதர இயற்கை வளங்கள், ஆற்றல் வளங்கள், மனித வளங்கள் என அனைத்து
வளங்களும் பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு முதலாளிகள், ஏகாதிபத்தியங்கள் போன்றவற்றால்
சுரண்டப்படுகின்றன; சூறையாடப்படுகின்றன; விலை
பேசப்படுகின்றன; பலியாக்கப்படுகின்றன.
இந்தியச் சூழலில் வாழும் பெரும்பான்மை
மக்களின் வாழ்வாதாரம் வேளாண்மைதான். நாட்டின்
பெரும்பங்கு உற்பத்தி வேளாண்மையோடு தொடா்புடையதாய் அமைந்திருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பு எனச் சொல்லப்படுகிற வேளாண்
தொழில் சார்ந்த அனைத்தும் இன்றைய சூழலில் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் உலகமயமாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பிருந்தே இத்தகைய
நெருக்கடிகள் நிலவிக்கொண்டுதான் இருக்கின்றன.
1965களுக்குப் பிந்தைய காலகட்டங்களில்
வேளாண்துறையில் புகுத்தப்பட்ட பசுமைப்புரட்சி எனும் பெயரிலான திட்டங்களும் நடைமுறைகளும்
வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கம் கொண்டவை என அரசுத்தரப்பு உள்ளிட்ட அனைத்தும்
சொல்லி வருகின்றன. ஆனால் அத்தகைய பசுமைப் புரட்சித்
திட்டங்களும் நடைமுறைகளும் வேளாண்தொழில் சார்ந்த அனைத்துத் தொழில்களையும் கடும் பாதிப்புகளுக்கு
உள்ளாக்கியுள்ளன. இயற்கைவழியில் அமைந்த பாரம்பரிய
வேளாண் முறைகள் யாவும் புறந்தள்ளப்பட்டுள்ளன;
புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாறாக செயற்கை
முறையிலான நவீன வேளாண் உற்பத்தி எனும் பெயரிலான திட்டங்களும் நடைமுறைகளும் தீவிரமாகச்
செயல்படுத்தும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒட்டுரக வீரிய விதைகள், மரபணுமாற்ற விதைகள்,
உரங்கள், களைக்கொல்லி மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற வேளாண் இடுபொருட்களால்
பெரும்பகுதி வேளாண் நிலங்கள் பாழ்பட்டுக்கொண்டிருக்கின்றன. வேதியியல் தன்மை நிறைந்த, நச்சுத்தன்மை கொண்ட வேளாண்
இடுபொருட்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தி வருவதால் வேளாண் நிலங்கள் யாவும் இயற்கைத்
தன்மையை இழந்து கொண்டிருக்கின்றன. மண்ணின்
உயிர்ச்சத்துக்கள் இழந்து, நீரைத் தக்க வைத்துக்கொள்ளும் தன்மை இழந்து, உப்புத் தன்மை மிகுந்த, கெட்டித்தன்மை
அதிகமாகி மலட்டுத் தன்மை கொண்டவையாகப் பெரும்பகுதி வேளாண் நிலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வேளாண் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக்கொண்ட
பெரும் பகுதி மக்கள் இவ்வகைப்பட்ட நிலத்தோடுதான் அல்லாட வேண்டியிருக்கிறது.
தங்கள் கைவசமிருக்கும் நிலத்திலிருந்து
எதையாவது பார்த்துவிட வேண்டும்; அதைக்கொண்டு வாழ்ந்தாகவேண்டும் என்பதற்காகத்தான் பெரும்பகுதி
மக்கள் இத்தனை காலமாய் நிலத்தோடு மாய்ந்துகொண்டு வருகிறார்கள்.
நிலத்தோடும்
உழைப்போடும் மன்றாடிக்கொண்டிருக்கும் வேளாண்தொழில் சார்ந்த பெரும்பகுதி மக்களுக்கு
வெளியுலகச் சுரண்டல்களும் மோசடிகளும் கூடியவிரைவில் தெரிந்துவிடுவதில்லை. தங்களிடமிருந்த
பாரம்பரிய விதைச் சேகரிப்பையும், பயிரிடுதல் முறைகளையும், நுட்பங்களையும், கருவிகளையும்
தொலைத்து விட்டார்கள். மாறாக விதைகள், இடுபொருட்கள்,
கருவிகள் என வேளாண்மை சார்ந்த அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களும் முதலாளிகளுமே தம்வசம்
வைத்திருக்கின்றனா். மேலும் நான்கில் மூன்றுபங்குச்
செலவினம் விதைகள், இடுபொருட்கள், கூலியாட்கள் போன்றவற்றுக்கு ஆகிப்போகிறது. இந்நிலையில்
எஞ்சுகிற கால்பங்கை வைத்துக்கொண்டுதான் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் நல்லதையும் கெட்டதையும்
பார்த்து வாழவேண்டி இருக்கிறது.
எந்தவொரு
குறு சிறு வேளாண்தாரரும் வேளாண்மைக்கான முதலீட்டுப் பணத்தைக் கையிருப்பாக வைத்திருப்பதில்லை.
மாறாக, நிலத்தையும் பொருட்களையும் அடமானம் வைத்தும் கடன்பட்டும்தான் வேளாண்தொழிலை மேற்கொள்கின்றனா். ஆனால் வேளாண் இடுபொருட்களுக்கு இருக்கின்ற நிலையைக்
காட்டிலும், பாடுபட்டு உழைத்திட்ட வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு மிகக்குறைந்த மிகமிகக்குறைந்த
விலையே நிர்ணயம் செய்யப்படுகிறது. தாங்கள் உழைத்து உற்பத்தி செய்த பொருட்களைத் தாங்களே
விலை நிர்ணயம் செய்து கொள்ளவும் முடிவதில்லை. வணிகா்களும் முதலாளிகளும் நிறுவனங்களும்
இடைத்தரகா்களுமே நிர்ணயம் செய்கின்றார்கள்.
உழுதவா்கள் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது
என்பது வேளாண்தாரா்களின் அனுபவம் தோய்ந்த சொலவடை. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்தான்
நிலத்தை நம்பியிருக்கும் வேளாண்தாரா்களின் வாழ்க்கை அமைந்திருக்கிறது. நிலத்தில் போட்ட தொகை முழுசாய்த் திரும்புவதில்லை.
நிலத்திற்காகப் பட்ட கடன் கொஞ்சமேனும் குறைந்ததுமில்லை. சுமைகளும், துயரங்களும் நாளுக்குநாள்
அதிகரிக்கவே செய்கின்றன.
ஒருகாலத்தில்
கடன்படாமலும் தற்சார்புடனும் தன்மானத்துடனும் வாழ்ந்துவந்த வேளாண் மக்கள் இன்றைய நிலையில்
கடன்பட்டும் கருமாயப்பட்டும் அவமானப்பட்டும் கூனிக்குறுகி நிற்கிறார்கள். மேலும் வேளாண் மக்களுள் பெரும்பாலோர் தற்கொலை செய்து
கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் மட்டும் கடந்த அய்ந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்திற்கும்
மேற்பட்ட வேளாண்தாரா்கள் வேளாண்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிக் காரணங்களுக்காகவே தற்கொலை
செய்து கொண்டிருக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்ளும்
வேளாண்தாரா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. வேளாண்தொழிலில் ஏற்பட்ட இத்தகைய நெருக்கடிகளுக்கும்
தற்கொலைச் சாவுகளுக்கும் அடிப்படைக் காரணம் பசுமைப்புரட்சி எனும் பெயரிலான திட்டங்களும்
நடைமுறைகளும்தான். இது ஒருபுறமிருக்க,
வேளாண்
தொழிலுக்கு அடிப்படையாய் அமைந்த நீா் ஆதாரங்களான ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள்,
ஓடைகள், ஊரணிகள், வடிகால் பகுதிகள் என அனைத்து நீா் ஆதாரங்களும் சீரமைக்ககப்படாமலும்,
ஆக்கிரமிக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் கிடக்கின்றன. அவற்றுள் பெரும்பகுதி காணாமல் போய்விட்டன. இந்நிலையில்
எஞ்சியிருக்கும் நீா் ஆதாரப் பகுதிகளும் அரசு மற்றும் தனியார் தரப்பினரால் வேளாண்மை
அல்லாத பிற தொழில்பயன்பாட்டிற்காகக் காவு கொடுக்கப்பட்டுள்ளன.
நீா் ஆதாரப் பகுதிகளை ஒட்டியே அனைத்துத் தொழிற்சாலைகளும் நிறுவப்படுகின்றன. இவைகளால் நிலத்தடி நீா் அளவுக்கதிகமாக உறிஞ்சப்படுகின்றது.
இதன் காரணமாய் நிலத்தடி நீா் மட்டமும் முற்றிலுமாகக்
குறைந்து போனது. இது மட்டுமல்லாமல் நிறுவப்பட்டுள்ள
பெரும்பான்மைத் தொழிற்சாலைக் கழிவுகளால் நீா் ஆதாரப் பகுதிகள் பெருமளவு சீரழிக்கப்பட்டுள்ளன,
நஞ்சாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிடைக்கவேண்டிய
ஆற்று நீா் உரிமைகளும் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனங்களால் பறிக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் பருவ மழைகளும் பொய்த்துக் கொண்டிருக்கின்றன. மேற்குறித்த காரணங்களால் நிலத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த
- நம்பிக்கொண்டிருக்கிற வேளாண் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கிப் போயிருக்கிறது.
இயற்கை உள்ளிட்ட அத்தனை சாபங்களையும் வேளாண் மக்கள் மட்டுமே தாங்கிக் கொண்டு வருகிறார்கள்.
எவ்வித
கைமாறுகளையும் எதிர்பார்க்காமல் நிலத்தில் பாடுபடுவதின் வழியாகத் தானும் உண்டு, இந்த
ஊா் உலக மக்களும் உண்டு வாழத் தம்மையே அா்ப்பணித்துக் கொண்டிருக்கும் வேளாண் மக்களின்
துயரங்களைக் கண்டுகொள்வதற்கோ அவா்களின் கண்ணீரைத் துடைப்பதற்கோ இன்றைக்கு எவருமில்லை. வேளாண்தொழிலும் வேளாண் மக்களின் வாழ்வியலும் ஒட்டுமொத்தமாகச்
சீரழிக்கப்பட்டுவிட்டன. மேலும் இன்றையச் சூழலில் புகுத்தப்பட்டுள்ள உலகமயமாக்கல் சார்ந்த
நடைமுறைகளுக்கும் வேளாண்மை சார்ந்த மக்களும் தொழிலும் நிலங்களுமே முதல் பலிகடாக்களாக
ஆக்கப்பட்டுள்ளனா்.
தொழில்
வளா்ச்சி எனும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள். முதலாளிகள், ஏகாதிபத்தியங்களால் நிறுவப்படுகிற
தொழிற்ச்சாலை வணிகம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றுக்கே இந்திய அதிகார மய்யம் முன்னுரிமை
அளிக்கின்றன. அவற்றுக்கே ஊக்கமளிக்கின்றன. இவை போன்ற தொழிற்சாலைகளுக்கான இடங்கள், தொழி்ற்பேட்டைகள்,
வளாகங்கள், குடியிருப்புக்கள், சாலை, தொடா்வண்டி, வான்வழிப் போக்குவரத்து, நகரவிரிவாக்கம்,
தொலைத் தொடா்பு, உல்லாசக் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட இதர வசதிகளும் நிரம்பிய சிறப்புப்
பொருளாதார மண்டலங்கள் போன்ற பல்வேறு தொழில் மற்றும் வணிகப் பயன்பாடுகளுக்குத் தேவைப்படும்
பெருவாரியான நிலங்களை அரசாங்கம் எனக் கருதப்படுகிற அதிகார மய்யங்களே தாராளமாய் கையகப்படுத்திக்
கொடுத்துக்கொண்டிருக்கின்றன.
வேளாண்தொழிலில் ஏற்பட்டுவரும் தொடா் நெருக்கடிகளைத் தாங்கமுடியாத ஒருபகுதி வேளாண்மக்களிடம்
இருந்த பெருவாரி விளைநிலங்களை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலாளிகளும்
சொற்ப விலைக்கு வாங்கி வளைத்துப் போட்டுவருகின்றனா். ரியல் எஸ்டேட் எனப்பெறும் விளைநிலத்தை விலை கொடுத்து
வாங்கும் நில விற்பனைத் தரகுத் தொழில் குக்கிராமங்கள்வரை நீண்டுகிடக்கிறது.
காலங்காலமாய்
நிலத்தை மட்டுமே நம்பியிருக்கிற, வேளாண்தொழில் மட்டுமே தெரிந்திருக்கிற, வேளாண்தொழிலையே
ஆதாரமாகக் கொண்டிருக்கிற, வேளாண்மையோடு ஒட்டி உறவாடுகிற ஆன்மாவைக் கொண்டிருக்கிற, வேளாண்
தொழிலையே தமது பண்பாட்டு அடையாளமாகக் கொண்டிருக்கிற, வேளாண் மக்கள் என்றும் நெல்லின்
மக்கள் என்றும் சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக்கொள்கிற, காலங்காலமாய் குடிவழிமரபாய்
வேளாண்தொழிலில் உழன்று வரும் வேளாண்குடிகளின் கனவும் வாழ்வும் மகிழ்வும் அமைதியும்
சிதைந்துகொண்டிருக்கின்றன. வேளாண்குடிகளின்
கையளவு நிலம்கூட அவா்களிடமிருந்து அரசாங்கத்தாலேயே பறிக்கப்படுகின்றன.
மலைகள், காடுகள், சமவெளிகள், கடல்சார்ந்த தொல்குடிகளின்
- பூர்வகுடிகளின் வாழ்வாதாரங்களையும் வாழ்விடங்களையும் பறிகொடுத்து நிற்கவேண்டிய சூழல்
இறுக்கம் பெற்று வருகின்றது.
நகரமயம்,
தொழில்மயம், வணிகமயம், நவீனமயம், உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என அத்தனை மயங்களும்
தானாய் உருவானவை அல்ல. திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.
மேற்குறித்த மயங்கள் பெருந்திரள் மக்கள் நலன் சார்ந்தவை அல்ல. மாறாக பொருளியல் வளத்தைப் பெருக்கிக்கொண்ட - பிறா்
உழைப்பைச் சுரண்டி உயா்த்திக்கொண்ட உடைமை வா்க்கத்தினரின் நலன் சார்ந்தவை. குறிப்பாக பன்னாட்டு முதலாளிகள்- ஏகாதிபத்தியங்களின்
நலன் சார்ந்தவை. இவற்றின் நலன்களைக் காக்கவே, நலன்களுக்காகவே தொல்குடி மக்களின் வாழ்வாதாரமான
விளைநிலங்களும், வாழ்விடங்களும் தொழில்வளா்ச்சிப்
பயன்பாடு எனும் பெயரில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வேளாண்
மக்களைக் குறித்தும் வேளாண் தொழிலைப் பற்றியும் எவ்விதக் கவலையும் அக்கறையும் கொள்ளாமல்
வேளாண் நிலங்களையும் வாழ்விடங்களையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிப் பிடுங்கிக் கொண்டு
வருகின்றன இந்திய அதிகார மய்யங்கள்.
மன்னா்கள் அதிகாரம் புரிந்த பேரரசுக் காலங்களில்கூட
நிலங்கள் பறிக்கப்பட்டாலும், அந்நிலங்களிலேயே உழவடை என்னும் பெயரில் வேளாண் உற்பத்தி
செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தன. நிலத்திற்கான
உரிமை வேண்டுமானால் பறிக்கப்பட்டிருக்கலாமே ஒழிய, நிலத்தோடு கொண்டிருந்த உறவு முற்றிலுமாகப்
பறிக்கப்பட்டிருக்கவில்லை.
இக்காலத்திய அதிகாரச் சூழலில், நிலத்திற்கும் உறவுக்கும் வாய்ப்பில்லை என்பதான
நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வேளாண்குடிகளின்
எதிர்கால வாழ்வு புதைகுழியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.
மலை, காடு, சமவெளி, கடல்வாழ் தொல்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் வாழ்விடங்கள்
பறிக்கப்படுவது கண்முன்னே நிகழ்கிறது. மக்களையும்
மண்ணையும் நேசித்த - இயற்கை வளங்களைப் பாதுகாத்த
- உலக மக்கள் உண்டு வாழத் தம் வாழ்வையே கரைத்துக் கொண்ட வேளாண் குடிகளின் ஒப்பாரிக்
குரல்கள் புதைகுழி மேட்டிலிருந்து ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
”இரவார்
இரப்பார்க்கு ஒன்றுஈவா் கரவாது
கைசெய்தான் மாலை யவா்”
என்பார் வள்ளுவா்.
உண்டு வாழ்வதற்காக யாரையும் சார்ந்திருப்பதுமில்லை. யாரிடமும் இரந்து நிற்பதில்லை. அதேவேளையில், பசியென்று
தம்மிடம் வந்தவா்க்கு வயிறாறச் சோறு போடுதலைப் பண்பாட்டு ஒழுகலாய்க் கொண்டிருந்த வேளாண்குடிகளின்
இயல்பை மேற்குறித்த குறளில் எடுத்துரைத்தார் வள்ளுவா். ஆனால் இக்காலத்தில் உழன்று தவிக்கும் வேளாண்குடிகளின்
பாடுகளில் தவிப்பும் துயரமும் வலியும் அழுகையும் நிரம்பிக்கிடக்கின்றன.
மரணித்தவா்கள் முன்பாகப் பாடப்பட்டுவந்த
ஒப்பாரி, மரணிக்கப் போகும் தங்களுக்கே தாங்களாகவே பாடப்படுவதாக மாறியிருக்கிறது. எண்ணற்ற
ஒப்பாரிக் குரல்களோடு கலந்துவிட்ட கிராமங்களுள் ஒன்றுதான் சின்னஉடைப்பு எனும் அழகிய
கிராமம்.
தமிழ்நாட்டின்
தொன்மை வாய்ந்த மதுரையைச் செழிப்பான மாநகராய் உருவாக்கியதில் அதனைச் சுற்றியுள்ள வேளாண்
கிராமங்களின் பங்களிப்பு நிரம்ப உண்டு. அதனால்தான் மற்ற நகரங்களைக் காட்டிலும் மதுரை
மட்டும் கிராமியத் தன்மையை மாற்றாமல் வைத்திருக்கின்றது. இத்தகைய மதுரையின் வரலாறும்
நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது.
மருத மரங்கள் செழித்து நின்ற நிலப்பரப்பின்
வயல்வெளி சூழ்ந்த பெரும்பகுதியே மருதம் எனப்பட்டிருக்கிறது. வயலும் வயல்சார்ந்த நிலப்பகுதியில்
மேற்கொள்ளப்பட்ட வேளாண்மை உற்பத்தி மருத நிலத்தை வனப்பும் வளமும் கொண்டதாக ஆக்கியிருக்கிறது. மருதம் என்பது வேளாண்மை சார்ந்த மக்களின் தொழில்,
வாழ்க்கை, பண்பாடு, ஒழுக்கம்,கலை, இலக்கியம், வழக்காறுகள் போன்றவற்றின் குறியீடு. மருதம் என்பதுதான் நாளடைவில் மருதை - மதுரை என்பதாக மாறியிருக்கிறது.
நெடுங்காலமாய்
நிலைத்திருக்கும் மதுரையின் வரலாற்றில் வேளாண் குடிகளின் வரலாறும் இரண்டறக் கலந்திருக்கிறது. அதாவது மருதநில வேளாண் குடிகளின் உழைப்பும் வியா்வையும்
குருதியும் கனவும் சோ்ந்த உருவாக்கம்தான் மதுரை.
வேளாண்குடிகள் மற்றும் வேளாண்குடிகள் சார்ந்த இதரக்குடிகளின் உருவாக்கத்தில்
செழித்ததுதான் மதுரை.
மல்லன்மூதுார் எனக் குறிக்கப்படும்
மதுரையின் வரலாற்றோடு வேளாண்குடிகளின் குருதி தோய்ந்த வரலாறும் புதையுண்டு கிடக்கிறது. மல்லன் மூதுாராம் மதுரையின் வரலாற்றின் கொடிய துயரங்கள்
நேற்றோடு முடிந்துவிடவில்லை. இன்னும் தொடரத்தான்
செய்கின்றது. துயரங்கள் சுமக்கும் எண்ணற்ற கிராமங்களுள் ”சின்ன உடைப்பு” எனும் கிராமமும்
ஒன்று.
மதுரையின்
தெற்கு நுழைவாயில் எல்கையில் அமைந்த முதல் கிராமம்தான் சின்ன உடைப்பு. இக்கிராமம் மதுரை
கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையின் மய்யப்பகுதியிலிருந்து 10 கி.மீ. தொலைவில்
அமைந்திருக்கிறது. வேளாண்தொழில் சார்ந்த குடிகளோடும்
இதரக் குடிகளோடும் காலங்காலமாய் நல்லுறவைப்பேணிவரும் இக்கிராமம் மதுரை மாவட்டம், மதுரை
தெற்கு வட்டம், அயன் பாப்பாகுடி பெருங்கிராமத்தைச் சார்ந்த உட்கடைக் கிராமம் ஆகும். தற்பொது மதுரை மாநகராட்சியின் எல்லை இக்கிராமத்தையும்
உள்ளடக்கியிருக்கிறது. இக்கிராமத்தில் வாழ்கிற மக்கள் யாவரும் வேளாண்தொல்குடிமரபு சார்ந்தவா்கள்.
கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்குள்ளன. மரபார்ந்த வேளாண்தொழில்தான்
பெரும்பாலோரின் முதன்மைத் தொழில்.
இக்கிராமத்தில் வாழும் இளம் தலைமுறையினா் யாவரும்
பள்ளி, கல்லுாரிகளில் பயின்று வருகின்றனா். இளங்கலை, முதுகலை, முனைவா் பட்டதாரிகளும்,
பொறியியல், தொழில் நுட்பம் சார்ந்த பட்டதாரிகளும், வழக்குரைஞா். ஆசிரியா், பேராசிரியா்கள்,
அரசு ஊழியா்கள் என நிறையப்போ் கல்வி மற்றும்அரசுப்பணிகளில் பங்கெடுத்துள்ளனா். இதுமட்டுமல்லாமல்
தனியார் நிறுவனங்களிலும், சுயமாகவும் தொழில் மேற்கொண்டும் வருகின்றனா். மேலும் அதிகளவிலான கொத்தனார்கள் இவ்வூரில் இருக்கின்றார்கள். பெண்களும் ஆண்களுமாய்ப் படித்துக்கொண்டும் வருகின்றார்கள்.
ஒரு நடுநிலைப்பள்ளி, கூட்டுறவுப் பயிற்சிக்
கல்லுாரி, கிராமிய இறையியல் நிறுவனம் போன்ற கல்வி நிலையங்களும் இங்கு அமைந்துள்ளன. பெரும்பகுதிப் பெண்களும் ஆண்களும் வேளாண்சார்ந்த
தொழிலையே மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் கிராமத்தின் மீது மட்டுமில்லாமல் சமூகத்தின்
மீதும் சமூக நீதியின் மீதும் அக்கறை கொண்டவா்களாக இக்கிராமத்தினா் இருக்கிறார்கள்.
அதனால்தான் சமூக நீதிக்காகப் போராடிய அம்பேத்கார் மற்றும் இம்மானுவேல் சேகரனார் ஆகியோரின்
முழுஉருவச்சிலைகள் இக்கிராமத்தின் நுழைவாயிலில் அமைத்திருக்கின்றனா்.
யாருக்கும் அடிமைப்படாத - யாரையும் அடிமைப்படுத்தாத
வகையில் தம்மைச் சுற்றியுள் அனைத்துக் குடிகளோடும் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனா் இக்கிராமத்தினா். இங்குள்ள பெருவாரியான இளைஞா்கள் சமூகச் செயல்பாட்டோடு
இணைத்துக் கொண்டிருக்கின்றனா். அம்பேத்காரிய
– பெரியாரிய – மார்க்சிய – தமிழியச் சிந்தனைகளின் தாக்கம் இவா்களிடம் அதிகம் காணப்படுகிறது.
சின்ன
உடைப்பு கிராமம் மட்டுமல்லாமல் இதனைச் சுற்றியுள்ள பா்பானோடை, பெருங்குடி, பரம்புப்பட்டி,
சம்பக்குளம், வலையபட்டி, கொம்பாடி, தொட்டியபட்டி, வலையன்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை,
கூடக்கோவில், பாரப்பத்தி, சோளங்குருணி, பிள்ளையார்பட்டி, குதிரைபத்தி, குசவன்குண்டு,
கோனார்பட்டி, தின்னாநேரி, இலந்தைக்குளம், செங்குளம், ஈச்சநேரி, இராமன்குளம்,பெத்தேல்கிராமம்,
அவனியாபுரம், நிலையூர், பறையன்பாறை, கூத்தியார்குண்டு, மண்டேலாநகா் எனப் பல்வேறு ஊா்கள்
சூழ்ந்த இப்பகுதியின் நிலப்பரப்பில் செம்மண்ணும் கரிசல்மண்ணும் விரவிக்கிடக்கிறது.
சின்ன
உடைப்பு உள்ளிட்ட மேற்குறித்த கிராமங்களின் வாழ்வாதாரம் நிலத்தோடு தொடா்புடைய வேளாண்தொழில்தான்.
இக்கிராமப் புறங்களில் நெல், கரும்பு, வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, தென்னை, பப்பாளி,
முருங்கை, வெண்டை, தக்காளி, கத்தரி, மிளகாய், வோ்க்கடலை, கம்பு, சோளம், மக்காச்சோளம்,
உளுந்து, பருத்தி, அவரை, துவரை, தட்டை, சீனிஅவரை, புடலை, பூசணி, பீர்க்கு, கறிவேப்பிலை, கீரைகள் உள்ளிட்ட உணவுப்
பயிர்களும் தானியப் பயிர்களும் பணப்பயிர்களும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன.
பூக்களில் மனமிக்கதாய் உலகெங்கிலும் புகழ்பெற்றிருக்கும் தற்போது புவிசார் குறியீடு
பெற்றுத் திகழும் மதுரை மல்லிகை இப்பகுதியில் பெருமளவில் விளைவிக்கப்படுகிறது. இத்தனைக்கும்
வைகையின் ஆற்றுப் பாசனம் முழுமையாகக் கிடையாது. அண்மையில் நிலையூர்க் கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் அதில் தண்ணீா் வருவதில்லை. கிணற்றுப் பாசனமும் கண்மாய்ப் பாசனமும்தான் இப்பகுதியின்
பாசனமுறை. மானாவாரியாய்ப் பெரும்பகுதி நிலங்களும் இப்பகுதியைச் சுற்றியுள்ளன. வேளாண்தொழிலுக்கு உகந்த வாகுவை இவ்வட்டார நிலங்கள்
கொண்டிருக்கின்றன. அதனால்தான் நிலத்தை விட்டுப் பிரியாமலும், நிலத்தைவிட்டுப் பிரிய
முடியாமலும் நிலத்தோடே இன்னும் மாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நிலத்தோடு தொப்பூள்க்கொடி உறவாய்க் கொண்டிருக்கிற
இப்பகுதி வேளாண்குடிகளை நிலத்திலிருந்து அறுத்தெறிந்து அந்நியப்படுத்தும் வேலைகளைத்தான்
இந்திய அதிகார மய்யங்கள் செய்து கொண்டிருக்கின்றன. இதற்குப் பலியாகிப்போன கிராமம்தான்
சின்உடைப்பு. பலியாகும் - பலியாகப்போகும் கிராமங்களின்
பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே செல்லவும் கூடும்.
தொழில்துறை
வளா்ச்சி எனும் பெயரில் பெரும்பாலான விளைநிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு
வருவதால் எண்ணற்ற வேளாண் கிராமங்கள் இருந்த சுவடே தெரியாமல் ஆகிக்கொண்டிருக்கின்றன.
இதன் இன்னொரு தொடா்ச்சிதான் மதுரை வானுார்தி நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காகப் பெரும்பகுதி
விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதுமாகும்.
ஒரு
பறவையைப் போன்ற இறக்கைகள் கொண்ட ஒரு பெரிய ஊா்தி வானில் பறந்து வந்து சின்னஉடைப்பு
கிராமத்தின் மானாவாரி நிலப்பரப்பில் இறங்கும்; ஆட்களை ஏற்றிக்கொண்டு மேலே பறக்கும்;
வேறெங்கோ ஆட்களை ஏற்றிவந்து இங்கிறக்கும் என்றவுடன் இவ்வூர்ப்பாட்டிகளும் பாட்டன்களும்
வியந்திருக்கிறார்கள். நம்ம ஊருக்கு வானுார்தி வந்து செல்லப்போகிறது; நம்ம ஊருக்குத்தான்
பேரும் பெருமையும் வரப்போகிறது. இதனால் நம்ம
ஊரு வளா்ச்சி அடையப் போகுது என நினைத்து இருப்பார்கள். இதனாலேயே 1940-களுக்கு முன்பே மதுரை வானுார்தி நிலைய உருவாக்கத்திற்காகத்
தமது பெரும்பகுதி வேளாண் புஞ்சை நிலங்களைச் சின்னஉடைப்புக் கிராமத்தினா் விட்டுக் கொடுத்தார்கள். அதற்கடுத்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கங்களின்
போதும் நிலங்களை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் மதுரை வானுார்தி
நிலையத்திற்குச் சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனாரின் பெயரை வைக்கச் சொல்லிப்
பலவாறும் போராடி வந்திருக்கிறார்கள். ஆயினும் இந்தக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமலேதான்
கிடப்பில் வைத்திருக்கிறது இந்திய அதிகார மய்யம்.
தம்
ஊரின் நிலப்பரப்பில் பறந்து வந்து செல்லும் வானுார்தியைப் பார்த்துப் பெருமையும் வியப்பும்
பட்டுக்கொண்ட இக்கிராமத்து மக்களுக்கு அவ்வானுார்திகளே குஞ்சுகளைத் தூக்கும் பருந்துகளாய்
மாறியிருக்கின்றன.
உள்ளூர்,
வெளியூர், உள்நாடு, வெளிநாட்டு முதலாளிகள், பணக்காரா்கள் போன்ற உடைமை வா்க்கத்தினரும்
நடுத்தர வா்க்கத்தினரும் வரவும் போகவுமான வான்வழிப் போக்குவரத்து வசதிகளுக்காக உருவாக்கப்படுபவைதான்
வானுார்தி நிலையங்கள். மதுரை வானுார்தி நிலையமும்
சின்னஉடைப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள வேளாண்மக்களோ அல்லது உழைக்கும் ஏழை எளிய மக்களோ
பயணம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல என்பதை இப்பகுதி மக்கள் புரிந்துகொள்வதற்கு
அரை நுாற்றாண்டுக்கும் மேலாகிப்போனது.
தற்போது
மதுரை வானுார்தி நிலையத்தைப் பன்னாட்டு வானுார்தி நிலையமாக ஆக்கிட வேண்டுமென்று உள்ளுா்,
வெளியூர், உள்நாடு, வெளிநாட்டு முதலாளிகளும் வணிக நிறுவனங்களும் ஏகாதிபத்தியங்களும்
பேரார்வம் காட்டுகின்றன. இவா்களின் வணிக மற்றும்
சுரண்டல் சந்தைக் களத்தை விரிவுபடுத்தவும் விரைவுபடுத்தவுமான வான்வழிப்போக்குவரத்து
மதுரைக்கும் தேவைப்படுவதாய் இவா்கள் கருதுகிறார்கள்.
உள்ளாட்சி தொடங்கி சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் வரையிலும் நீண்டு கிடக்கிற அதிகார
அமைப்பானது முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் சேவகம்
செய்யக்கூடிய அமைப்பாக மாற்றப்பட்டு உள்ளது. அத்தகைய சேவகத்தின் ஒரு நிகழ்வுதான் மதுரை
வானுார்தி நிலையத்தைப் பன்னாட்டு வானுார்தி நிலையமாக மாற்றும் திட்டம். இத்தகைய வானுார்தி நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காகத்தான்
கிட்டத்தட்ட 610 ஏக்கா் பரப்பிலான விளைநிலங்களும் வேளாண்குடிகளின் வாழ்விடங்களும் கையகப்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே வானுார்தி நிலைய உருவாக்கத்தின்போதும் அடுத்தடுத்த
விரிவாக்கத்தின்போதும் சின்னஉடைப்பு மற்றும் பரம்புப்பட்டி கிராமங்களைச் சார்ந்த கிட்டத்தட்ட
1000 ஏக்கா் பரப்பிலான விளைநிலங்களும் வாழ்விடங்களும் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இவையும் போதாதென்று பன்னாட்டு வானுார்தி நிலைய விரிவாக்கத்திட்டம் எனும் பெயரில் பெருவாரியான
விளைநிலங்களும் வாழ்விடங்களும் கையகப்படுத்துவதற்கான வேலைகள் மும்மரமாக நடந்துவருகின்றன.
வேளாண்தொழிலில்
ஏற்பட்டுவரும் தொடா் நெருக்கடிகளால் பல்லாயிரம் ஏக்கா் பரப்பிலான வேளாண் விளைநிலங்கள்
வணிக நிறுவனங்களிடமும், முதலாளிகளிடமும், நகரவாசிகளிடமும் மிகக் குறைந்தளவு விலைக்கு
விற்கப்பட்டு விட்டன. நிலங்களை விற்றுவிட்ட
பெரும்பாலோர் நகரங்கள் நோக்கிப் புலம் பெயா்ந்து கொண்டிருக்கிறார்கள். உதிரித்தொழிலாளா்களாய் மாறிப்போன அவா்களால் வாழவும்
முடியவில்லை, சாகவும்முடியவில்லை. நகரவாழ்க்கை நரகவாழ்க்கையாய் மாறிப்போயிருக்கிறது. இந்நிலையில்தான் சின்னஉடைப்பு, பாப்பானோடை. பாம்புப்பட்டி,
இராமன்குளம், செங்குளம், குசவன்குண்டு பகுதிகளைச் சார்ந்த விளைநிலங்களும் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. விளைநிலங்கள் மட்டும் அல்லாமல் காலங்காலமாய் வாழ்ந்து
வந்த வாழ்விடங்களும் கையகப்படுத்தும் பகுதிக்குள் வருகின்றன.
கிட்டத்தட்ட
1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையும் வரலாறும் கொண்டது சின்னஉடைப்பு கிராமம். தற்போது சின்ன உடைப்பு மற்றும் செங்குளம் கிராமங்களைச்
சார்ந்த குடிமக்கள் தங்களின் பூர்வீக வாழ்விடங்களையும் இழக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஊாராய் உறவுகளாய் குடும்பங்களாய் தொன்றுதொட்டு வாழ்ந்து
வந்த அவா்களின் பண்பாட்டு அடையாளங்கள் அனைத்தும் சிதைந்துபோவதைக் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மனுக்கள்
போட்டு நிர்வாகத்திடம் மன்றாடி; ஆர்ப்பாட்டம் நடத்தி, மறியல் செய்தெல்லாம் பார்த்தாயிற்று. குலசாமிகளிடமும் வேண்டிப்பார்த்தாயிற்று. நிலத்தை எடுக்க மாட்டார்கள்; ஊரை எடுக்க மாட்டார்கள்
என அரசை நம்பினார்கள். நிலத்தை எடுக்கக் கூடாது; ஊரை எடுக்கக் கூடாது என சாமிகளையும்
கும்பிட்டுப் பார்த்தார்கள். எல்லாம் எங்கள்
சாமிபார்த்துக் கொள்ளும் என்று நம்பிக் கிடந்தார்கள்.
ஆட்சி மாறினால் எல்லாம் நல்லதே நடக்கும் என்று
மாற்றி மாற்றி வாக்களித்துப் பார்த்தார்கள்.
ஆனாலும் நிலத்தை எடுப்பது உறுதியாகிப்போனது. ஊரை எடுப்பது உறுதியாகிப்போனது. சாமிகள் மீதும் அரசுகள்மீதும் ஆட்சிகள்மீதும் வைத்திருந்த
நம்பிக்கைகள் யாவும் பொய்த்துப்போயின.
மதுரை
வானுார்தி நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக வேளாண் விளைநிலங்கள் குடியிருப்பு மனைகள், காலிமனையிடங்கள் போன்றவை உள்ளடக்கிய 610 ஏக்கா்
பரப்பளவிலான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான கருத்துக்கேட்பு கூட்டங்கள் மதுரை மாவட்ட
ஆட்சியா் அலுவலகத்தில் பல ஆண்டுகளாய் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லா கருத்துக் கேட்புக்
கூட்டங்களிலும் சின்ன உடைப்பு மற்றும் சுற்று வட்டார வேளாண்மக்கள் தங்களுக்கு நேரப்போகிற
நெருக்கடிகளையும், இழக்கப்போகும் வாழ்வாதாரங்கள் குறித்தும் தங்களின் எதிர்கால வாழ்க்கை
கேள்விக்குறியாவதைப் பற்றியும் பலவாறாக எடுத்துரைத்து வந்துள்ளனா். ஆனாலும் அவா்களின் கோரிக்கைகள் குறித்துச் சிறிதளவும்
பரிசீலிக்கவில்லை; பரிசீலிக்கத் தயாராகவும் இல்லை. ஏனெனில் வானுார்தி நிலைய விரிவாக்கத்திட்டம் உள்ளுர்
நிர்வாகம் எடுத்த முடிவல்ல. மாறாக இந்திய அதிகாரம் எடுத்த முடிவு. இந்திய அதிகாரத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஏகாதிபத்தியங்கள்
எடுத்தமுடிவு. இதில் உள்ளூர் நிர்வாகமோ மாவட்ட நிர்வாகமோ என்ன செய்துவிட முடியும். தற்போது நிலம் கையகப்படுத்தும்
பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி
ஒரு கருத்துக் கேட்புக் கூட்டம் எனும் பெயரில் மாவட்ட நிர்வாகம் தனது முடிவை
அறிவித்தது. இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட சேதிகள்தான் வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சுவனவாக இருந்தன.
கடந்த
18.04.2013-ஆம் நாளில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில்
கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில்
சின்னஉடைப்பு, பரம்புப்பட்டி, பாப்பானோடை, பெருங்குடி, மண்டேலாநகா், செங்குளம், இரான்குளம்,
குசவன்குண்டு பகுதிகளைச் சார்ந்த பெரம்பாலோர் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில்தான் கையகப்படுத்தப்போகிற வேளாண்நிலங்கள்,
தரிசு நிலங்கள், குடியிருப்பு மனைகள், காலிமனையிடங்கள்
போன்றவற்றிற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட இருக்கிற இழப்பீட்டுத்தொகை குறித்த அறிவிப்பு
மாவட்ட நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்டது. அதன்படி
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சின்னஉடைப்பு சுற்றுவட்டாரம் சார்ந்த குடியிருப்பு மற்றும்
காலிமனையிடங்களுக்கான இழப்பீட்டுத்தொகை ஒருசெண்டு பரப்பிலான இடத்திற்கு ரூ.78.0000/-
(ரூபாய் எழுபத்தி எட்டாயிரம்) எனவும், வேளாண் விளைநிலங்களுக்கான இழப்பீட்டுத்தொகை ஒரு
செண்டு பரப்பிற்கு வெறும் ரூ.2,000/-(ரூபாய் இரண்டாயிரம்) எனவும் அறிவிக்கப்பட்டபோது
எண்ணற்ற வேளாண் மக்களுக்கு நெஞ்சாங்குழை வெடித்துச் சிதறியது போன்ற துயரநிலையே ஏற்பட்டது.
பலருக்கும் உடம்பெல்லாம் நடுங்கிப்போனது. எல்லோரது கண்களிலும் கண்ணீா் முட்டிக்கொண்டு
வந்தது. மனதுக்குள் ஏதோ ஒரு வகையான வலி நிரந்தரமாய்க்
குடி கொண்டது.
ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாய் தலைமுறை தலைமுறையாய் கையளவு நிலத்தை நம்பி வாழ்ந்து வந்த வேளாண்குடிகளின்
வாழ்வுக்கும் வாழ்விடத்திற்கும் வாழ்வாதாரமான நிலத்திற்குமான இழப்பீட்டுத்தொகை வெறும்
இரண்டாயிரம் ரூபாய்தான் எனும்போது வலியும் அழுகையும் வராமலா இருக்கும்? இந்த இழப்பின் வலிகளை எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும்
கோடிகள் கொடுத்தாலும் துடைத்திட இயலுமா ?
உயிரோடு
உயிராய், உறவோடு உறவாய், உணா்வோடு உணா்வாய்,
நிலத்தோடும் வாழ்விடத்தோடும் இரண்டறகலந்துவிட்ட வேளாண்மக்கள் தங்கள் நிலத்தை இழக்கும்போது
தங்கள் உடம்பில் ஓடுகிற உயிரின் சரிபாதியை உறுவி எடுப்பதைப்போன்றே உணா்கிறார்கள். தங்கள் உடலையும் உயிரையும் வெட்டி எடுப்பதைப்போன்றே
துடிக்கிறார்கள்.
”
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.”
”
சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
ஊழந்தும்
உழவே தலை.”
என்றெல்லாம் வள்ளுவா் பாடினார். வேளாண்குடிகளின் உழைப்பிலும் வேளாண்தொழிலாலும் மட்டுமே
இந்த உலகமக்கள் இன்னும் உயிரோடு இருந்துகொண்டு வருகிறார்கள். அதனால்தான் வேளாண்தொழிலும் வேளாண்குடிகளும் தலையாய
ஒன்றாகக் கருதப்பட்டன. வேளாண்குடிகள் தொழவேண்டிய
குடிகளாக மதிக்கப்பட்டன. ஆனால் நிகழ்கால சமூகமும்
சமூக நிகழ்வுகளும், அதிகார மய்யங்களும் தொழில்வளா்ச்சித் திட்டங்களும் வேளாண்குடிகளின்
வாழ்வாதாரம் குறித்தோ வேளாண்தொழிலைக் குறித்தோ கண்டுகொள்வதுமில்லை; கவலைப்படுவதுமில்லை. புதைகுழிக்குள் தள்ளப்பட்டிருக்கும் வேளாண்குடிகளைக்
காப்பாற்ற யாரும் முன்வரவுமில்லை.
சொற்பமான இழப்பீட்டுத்தொகை வழங்கி வேளாண்குடிகளை
அப்புறப்படுத்த நினைக்கிறார்கள். தங்கள் நிலங்களையும்
தங்கள் ஊரையும் இழந்து உறவுகளைப் பிரிந்து புலம்பெயர்ந்து வேறுவேறு ஊா்களுக்கும் நகரங்களுக்கும் பிழைப்புத்தேடிச்சென்று உதிரிகளாகவும் அனாதைகளாகவும்
அகதிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆகிப்போகிற நிலைமைதான் எஞ்சி இருக்கிறது. வழங்கப்போகிற சொற்பமான தொகையை வைத்துக்கொண்டு என்ன
செய்துவிட முடியும் ? எப்படி வாழமுடியும்?
சின்னஉடைப்பு கிராமத்தைச் சுற்றிலும் பல்லாயிரக்கணக்கான
காலிமனையிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முதலாளிகள், நகரவாசிகள் நடுத்தரவா்க்கத்தினா்,
வணிக நிறுவனங்கள் போன்றவற்றால் மிகக்குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட விளைநிலங்களே காலிமனையிடங்களாக
மாற்றப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் வேளாண்
விளைநிலங்களுக்கும் காலிமனையிடங்களுக்கும் இடைப்பட்ட இடைவெளி ஒருசாண் அளவுள்ள வரப்புகள்
மட்டும்தான்.
காலிமனையிடங்களில் ஊன்றப்பட்ட நான்கு நடுகற்களைத்தவிர
வேறு எந்தச்செடி கொடிகளும் அந்தப் பகுதிகளில் முளைக்கவில்லை; முளைக்கப்போவதுமில்லை. ஆனால், தண்ணீா், வியா்வை, குருதி, உழைப்பு, மூலதனம்
என அத்தனையையும் நிலத்தில் கொட்டி நிலத்தை மட்டுமே நம்பி வாழ்கிற வேளாண்குடிகளின் கையிருப்பாக
எஞ்சியிருக்கிற விளைநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வெறும் இரண்டாயிரம் ரூபாய்தான்.
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சின்னஉடைப்பு
சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருசெண்டு பரப்பிலான நிலத்தின் சந்தை மதிப்பு குறைந்த அளவு
மூன்று முதல் நான்கு லட்சம் வரை நிலவிக்கொண்டிருக்கிறது. அரசுத் துறைப் பத்திரப்பதிவு
அலுவலகங்களிலேயே இத்தகைய நிலவரம்தான். நிலமை இவ்வாறு இருக்கும்போது நிலத்தை மட்டுமே
வாழ்வாதாரமாகக் கொண்ட வேளாண்குடிகளின் ஆன்மாவாகத் திகழ்கிற விளைநிலங்கள் வெறும் இரண்டாயிரம்
ரூபாய்தானாம்.
காலிமனையிடங்களின் இழப்பீட்டுத்தொகையைக்
காட்டிலும் விளைநிலங்களுக்கான இழப்பீட்டுத்தொகை மிகமிகக்குறைவு. காலிமனையிடங்களை இழப்பதால்
ஏற்படும் பாதிப்புக்களைக் காட்டிலும் விளைநிலங்களை இழப்பதால் ஏற்படும் பாதிப்புக்களோ
அதிகம். இதர தொழில் பிரிவினரைக் காட்டிலும் வேளாண்குடிகள் எதிர்கொள்ளப்போகும் பாதிப்புக்களே
அதிகம்.
புதைகுழி மேட்டிற்குத் தள்ளப்பட்டிருக்கும்
வேளாண்குடிகளின் வாழ்வைக் காப்பாற்ற வேண்டுமானால் போராடும்
பயணத்தைத் தொடா்ந்தாக வேண்டும்.
மனித
வரலாற்றில் போராடிய சமூகங்களே வாழ்ந்திருக்கின்றன. போராடாத, போராடத்தயங்குகிற சமூகங்கள்
புதைகுழியில் வீழ்ந்திருக்கின்றன. பிறக்கின்ற எவருக்கும் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் அந்த மரணத்தைப் பிறா் தருதல் கூடாது. மரணம் ஒருமுறைதான். போராடி மரணித்தவா்கள் இன்னும் வாழ்ந்துகொண்டுதானே
இருக்கிறார்கள்.
நன்றி: தமிழர் பெருவெளி இதழ்,சனவரி-மார்ச்
2015
வலி தோழா்...
பதிலளிநீக்குஉழவனின் குருதியை காயமின்றி உடலையே இறுக்கிப்பிழிந்து வாயின் வழியாகவும் ஆசனவாயின் வழியாகவும் வெளியேற்றும் செயலே இது தோழா்...
தலையைக்கொடுப்போம் தோழா்