ஞாயிறு, 11 மார்ச், 2018

பெண் விடுதலை அரசியல் :- ஏர் மகாராசன் நேர்காணல்.

மார்ச் 8 - உலக உழைக்கும் பெண்கள் நாளை முன்னிட்டு நியூசு 7 தமிழ் சமூக வலைத்தளத்துக்கு நான் அளித்துள்ள நேர்காணல். நேர்காணலில் பங்கேற்ற தோழி சண்முகப் பிரியா அவர்களுக்கும், ஆற்றுப்படுத்திய தோழர் பிரின்சு அவர்களுக்கும், நியூசு 7 தமிழ் ஊடக நிர்வாகத்திற்கும் எனது நன்றி.


 சண்முகப்பிரியா : 
சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவதற்கான காரணம் என்ன? 
இது கொண்டாடப்பட வேண்டியநாள்தானா?

ஏர் மகாராசன்: 
மனித குலத்தினுடைய சரி பாதி அங்கமாகத் திகழக்கூடிய பெண்கள், ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் வேண்டும் எனப் போராடி, வெற்றி பெற்ற நாள் தான் மார்ச் 8-ஆம் நாள். இது, பெண்கள் செய்த புரட்சியின் குறியீட்டு நாளாகவே கருதப்படுகிறது. பிரெஞ்சு புரட்சியின் போது 1789-ஆம் ஆண்டு, ஜூன் 14-ஆம் நாள் பெண்களுக்கான சுதந்திரம், சமத்துவம், பெண் பிரதிநிதித்துவம், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கான வாக்குரிமை என அனைத்துவகைப் பெண்ணடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் பெண்கள் போர்க்கொடி உயர்த்திப் புரட்சியில் ஈடுபட்டனர். 
இந்தக் கிளர்ச்சி உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. போராட்டக் கிளர்ச்சி தீவிரமடைந்த சூழலில், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும் அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுக்களில் பெண்களுக்கு இடமளிக்கவும் முன் வருகிறார் பிரான்ஸ் நாட்டின் புருஸ்லியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க். அவ்வாறு அரசாங்க உத்தரவு 1848-ஆம் ஆண்டு, மார்ச் 8-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 1910 இல், பணிக்குச்செல்லும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில்தான், பெண்கள் தங்கள் உரிமைகளைக் கோருவதற்கு உலகம் முழுவதும் ஒரு நாளை மகளிர் நாளாகக் கொண்டாடுவதன் அவசியத்தை, ஜெர்மனியின் சோசலிச ஜனநாயகக் கட்சியின் மகளிர் அணித் தலைவியான கிளாரா ஜெட்கின் என்பவர் முன்வைத்தார். பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புக்கொண்ட நாளான மார்ச் 8-ஆம் நாளையே, உலகப் பெண்கள் நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்கிற கருத்து பெரும்பாலான பெண்கள் இயக்கங்களின் விருப்பமாக இருந்தது. இதனால், 1921-ஆம் ஆண்டு முதல் மார்ச்  8-ஆம் நாள், உலகப் பெண்கள் நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்,இது கொண்டாடப்பட வேண்டிய நாள்தான்.


சண்முகப்பிரியா: 
பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான வரலாற்றுப் பின்னணி மற்றும் காரணிகள் என்ன?

ஏர் மகாராசன்: 
வரலாற்றின் முதல் வர்க்க ஒடுக்குமுறை என்பது, பெண் பாலை, ஆண் பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது என்கிறார் ஏங்கல்ஸ். மனித சமூகத்தின் இயங்குதலுக்கு அடிப்படையாக இருப்பது, பொருள் உற்பத்தியும், உயிரின மறு உற்பத்தியும்தான். உற்பத்தியிலும், மறு உற்பத்தியிலும் கட்டுப்பாடு இல்லாது, பெண்கள் ஈடுபட்டிருந்த நிலைமைகள் தாய்வழிச் சமூக அமைப்பில் இருந்திருக்கின்றன. இதற்குப்பின் தோற்றுவிக்கப்பட்ட ஆண்வழிச்சமூக முறைமையில்தான், பெண்களின் உற்பத்தி மற்றும் மறு உற்பத்திச் செயல்பாடுகள் ஆணின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு, சமூகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து பெண்கள் வெளியேற்றப்பட்டதால், அவ்வுற்பத்தி நடவடிக்கையின் மூலம் கொணரப்பட்ட சொத்துக்கள், செல்வங்கள், பொருட்கள், உடைமைகளுக்கு ஆண்களே உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டது. இதனால், பெண்கள், ஆண்வழிச் சமூகத்தைச் சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது மட்டுமல்லாமல், இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். ஆணின் உடலின்ப  வேட்கைக்குப் பலியான பெண்கள், கேவலம், குழந்தைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான கருவிகளாக மட்டும் ஆக்கப்பட்டனர். மேலும், பொருள் உற்பத்தித்தளம் ஆண்கள் வசம் இருந்ததால், ஆண்களின் சொத்துகளுக்கு வாரிசுரிமை கொண்டாடும் வகையில் சொத்துடைய ஆணின் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பணிக்குப் பெண்கள் ஒதுக்கப்பட்டனர். இக்குடும்ப அமைப்பில், ஒரு பெண், ஒரு ஆணுடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  ஆக, ஆணாதிக்கத்தின் பொருளியல் அடிப்படை என்பது, பெண்களின் உழைப்பு, சக்தி ஆகியவற்றின் மீது ஆண்கள் கொண்டுள்ள அதிகாரமே ஆகும். இதுதான், பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான வரலாற்றுப் பின்னணியாக நாம் கருதமுடியும்.

சண்முகப்பிரியா: 
பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் எது?

ஏர் மகாராசன்: 
தனிச்சொத்துடைமையும் உரிமையும்தான் ஆண்களுக்கான ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் வழங்கியிருக்கின்றன. இத்தகைய உடைமை வர்க்கச் சமூக அமைப்பை மாற்றக்கூடிய பாட்டாளி வர்க்க விடுதலைப் புரட்சியே பெண்களுக்கான முழு விடுதலையை அளிக்கக்கூடியது. அதாவது, உழைக்கும் வர்க்கத்துப் பெண்களின் விடுதலையில்தான் அனைத்து வகையான பெண்களின் முழு விடுதலையும் உள்ளடங்கியிருக்கிறது. 

சண்முகப்பிரியா: 
பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதா?

ஏர் மகாராசன்: 
ஒரு விடுதலைக் கோரிக்கையை, அதற்கான உரையாடலைக் கொண்டிருக்கும் எந்த ஒரு கோட்பாடும், ஆதிக்கத்துக்கும் அதிகாரத்திற்கும் எதிரானதாகத்தான் இருக்கும். பெண்ணியம் என்பதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடக்கும் பெண்களுடய விடுதலைக் குரலாகவே கருதப்பட வேண்டும். குறிப்பாகச் சொல்லப்போனால், பெண்ணியம் என்பது, ஆண்களுக்கு எதிரானது அல்ல; ஆணாதிக்கத்திற்கும், ஆண் அதிகார முறைகளுக்கும்தான் எதிரானது. 

சண்முகப்பிரியா: 
எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்து கொள்ளலாம் என்பதை இதுபோன்ற கருத்தியல்கள் கூறுகின்றனவா?

ஏர் மகாராசன் : 
எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்து கொள்வதைத்தான் பெண்ணியம் உள்ளீடாகக் கொண்டிருப்பதாகப் பெண்ணியத்தைச் சுருக்கிப் பார்க்கக் கூடாது. எப்படி வேண்டுமானாலும் கட்டற்று இருந்துகொள்வதே பெண்ணியம் என்பதாக முதலாளித்துவச் சமூக அமைப்பால் ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடிய ஒரு கருத்துப் பரவல். இது, முதலாளித்துவ மேட்டிமைச் சமூகத்தின் பெண்களது கோரிக்கைகள் அவ்வளவுதான். இதுபோன்ற வாதங்கள், பெண்ணை நுகர்வுப் பண்டமாக ஆக்கிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ நுகர்வுப் பண்பாட்டு நடைமுறைகளுக்குத்தான் சார்பாக அமைந்திருக்கின்றன. முதலாளித்துவச் சந்தை உற்பத்தியில், பொருட்களை ருசித்துவிட்டு எறிந்துவிட்டுச் செல்வதுபோல, பெண்ணின் உடலையும் ருசிப்புக்கான நுகர்வுப் பண்டமாக ஆக்குவதில் முதலாளித்துவச் சந்தைக் கூறுகள் அனைத்தும் தீவிரம் காட்டுகின்றன. இந்தத் தீவிரத்தின் வெளிப்பாடுகள்தான் கட்டற்ற பாலியல் சுதந்திரம், வரையரையற்ற பாலியல் புணர்ச்சி, கூட்டுக்கலவி போன்றவை முற்போக்கானவை எனக்காட்டும் வாதங்களும் நடவடிக்கைகளும் ஆகும். இதுவே கலாச்சாரப் புரட்சியாக மதிப்பிடப்பட்டாலும், இது முதலாளித்துவ நுகர்வுவெறிக் கலாச்சாரத்தின் இன்னொரு பிரதிபலிப்பாகத்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

சண்முகப்பிரியா: 
பெண் சுதந்திரம், பெண்ணியத்திற்காகப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர்கள் யார் யார்?

ஏர் மகாராசன்: 
பெண்ணுரிமை, பெண்ணியம், பெண் எழுத்து தொடர்பான ஆய்வுகளையும் உரையாடல்களையும் மேற்கொண்டவர்களின் பட்டியல் நீளமானது. எனினும், அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாக மேரி எல்மான், சிமோன் தி பொவாயர், எலைன் ஷோவால்டர், டோலிமர், ஆனிட் கோலோட்னி, மீரா ஜெலன், கேட் மில்லட், ராபின் லாக்கோப், ஜூலியா கிறிஸ்தவா, ஹெலன் சீக்சஸ், மேரி டாலி, வெர்ஜினியா ஊல்ப், கோரா கப்லான்,சுலாமித் பயர்ஸ்டோன் , அஸிஸா அல் ஹிப்ரி போன்றோரைக் குறிப்பிடலாம். மேலும், பெண் விடுதலைக்கான செயல்பாடுகளை அரசியல் இயக்கங்களாக வடிவமைத்து நடைமுறைப்படுத்தியவர்களுள் லெனின், கிளாரா ஜெட்கின், ஷீலா ரெளபாத்தம் போன்றோரைக் குறிப்பிடலாம். இந்தியச் சூழலில் பூலே, அம்பேத்கர் பெண்ணுரிமைச் செயல்பாட்டைத் தீவிரப்படுத்தியவர்களாவர். தமிழ்ச் சூழலில், பெண்ணுரிமைச் செயல்பாட்டை அரசியலாக முன்னெடுத்தவர் பெரியார்.பெண் விடுதலைச் செயல்பாட்டை மண் விடுதலையோடும் இன விடுதலையோடும் இணைவுபடுத்திப் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்து அவர்களைப் போராட்ட சக்தியாக ஈழத்தில் வார்த்தெடுத்தவர் தேசியத் தலைவர் திரு.பிரபாகரனார் அவர்கள் தான். ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

சண்முகப்பிரியா: 
1871-இல் தான் பெண்ணியம் என்ற விடுதலை கருத்தியல் உருப்பெறுகிறது எனில், அதற்கு முன்பாகப் பெண்கள் அவ்வளவு காத்திரமாகப் போராடவில்லையா?

ஏர் மகாராசன்: 
அப்படி இல்லை. பெண்களின் விடுதலைக்குரல் எல்லாக் காலத்திலும், எல்லா தேசத்திலும் ஒலித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறது. பெண்களுடைய விடுதலைக் குரலானது, எழுச்சியாகக் கிளம்பியதும், புரட்சியாக வெடித்ததும், இயக்கங்களாகப் பரவியதும் இந்தக் காலகட்டத்தில்தான். ஆகையால், இந்தக் காலகட்டத்திற்கு முன்பு, பெண்கள் குரல் எழுப்பவே இல்லையா என்றெல்லாம் பார்த்திட முடியாது. பெண்கள் குரல் எழுப்பியிருக்கிறார்கள். அதற்கான தடயங்களும் இருக்கின்றன. கண்ணகி, தன்னுடைய கணவனான கோவலன் கொல்லப்பட்டதை அடுத்து, பாண்டிய மன்னனை எதிர்த்துக் குரலிட்டு, மதுரையை எரித்துவிட்டுச் சென்றது பெண்ணினுடைய தனிநபர் நிகழ்ச்சியாக மட்டும் பார்த்துவிட முடியாது. ஒரு அதிகார அமைப்பை, பெண் எதிர்த்திருக்கிறாள். அவள், தன் உரிமைக்கான குரலை ஓங்கி ஒலித்திருக்கிறாள் என்பதையும் பார்க்க வேண்டும். அதேபோல, பெண்ணினுடைய தன்னிலை உரிமைக்குரல் தமிழ் மரபில் வெளிப்பட்டிருப்பதை நிறையப் பார்க்க முடியும். வெள்ளிவீதியார், ஔவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள், உத்திர நல்லூர் நங்கை, ஆவுடையக்காள் போன்றோருடைய கவிதைகளில், மிகப்பெரிய பெண் உரிமைக்கான குரல் பொதிந்திருப்பதைப்  பார்க்க முடியும். இதேபோல, எல்லாக் காலகட்டத்திலும் எல்லா நாடுகளிலும் பெண்கள் தம்முடைய உணர்வுகளையும், தங்களுக்கான உரிமைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். வரலாற்றில் அதற்கான சான்றுகள் இருக்கின்றன. இது எப்பொழுது தீவிர அரசியலாக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். அந்தப் பெண்ணுரிமைக் குரல், ஓர் அரசியலாகவும் இயக்கமாகவும் மாறியது 1871 காலகட்டங்களில்தான்.

சண்முகப்பிரியா: 
பெண்ணியத்தில் எத்தனை வகைகள் உள்ளன?

ஏர் மகாராசன்: 
பெண்ணியத்தில் நிறைய வகைகள் உள்ளன.ஆனால்,  அதனை மூன்று அடிப்படையான வகைக்குள்ளேஅடையாளப்படுத்துவர்.
மிதவாதப்பெண்ணியம் – சீர்திருத்தங்கள் மற்றும் சலுகைகளைக் கோருவது.
தீவிரவாதப் பெண்ணியம் – பெண்கள் ஒடுகப்படுவது ஆண்களால்தான். அதனால், ஆண்களுக்கு எதிராகத் தீவிரத் தன்மையுடன் இருப்பது. 
சமத்துவப் பெண்ணியம் – பெண் விடுதலையைப் புரட்சியின் அங்கமாக முன் வைப்பது. 

சண்முகப்பிரியா: 
இத்தனை வகைகளில், எந்த வகை பெண்ணியம் சரியான விடுதலைக்கான பாதையை முன்வைப்பதாக கருதுகிறீர்கள்?

ஏர் மகாராசன்: 
சமத்துவப் பெண்ணியம் என்று சொல்லக்கூடிய மார்க்சியப் பெண்ணியமே தெளிவான நோக்கத்தையும் பெண் விடுதலைக்கான வழிமுறைகளையும் செயல் திட்டங்களையும் கொண்டிருக்கிறது. ஆண்வழிச் சமூக உடைமை முறைமைகளில் இருந்தும், ஆதிக்கவெறி ஆண்களிடம் இருந்தும், இன்னும் எல்லா விதமான சுரண்டல் ஒடுக்குமுறைகளில் இருந்தும் பெண்கள் விடுதலை பெறுவதற்கான திட்டங்களையும், அரசியல் வழிமுறைகளையும், அதற்கான போராட்டங்களையும் மார்க்சியப் பெண்ணியமே எடுத்துரைக்கிறது. ஆகவே, மார்க்சியத்தின் வழிப்பட்ட சோசலிசம் எனப்படுகிற சமத்துவப் பெண்ணியமே சரியானது என்று நான் கருதுகிறேன்.

சண்முகப்பிரியா: 
தமிழ்ச் சூழலில் பெண்ணியம் சார்ந்த எழுத்துகள் எப்படி உள்ளன?

ஏர் மகாராசன்: 
1990-களுக்குப் பிறகு, தமிழ்ச் சூழலில் பெண் சார்ந்த பதிவுகள் நிறைய வெளிவந்துகொண்டு இருக்கின்றன. ஆண்களின் எழுத்து முறைகளில் இருந்தும் அனுபவப்பாடுகளில் இருந்தும் வேறுபட்டதான ஒரு புதிய எழுத்து முயற்சிகள் பெண்களால் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கவிதை, கட்டுரை, நாடகம், புனைகதை, கலை உள்ளிட்ட தமிழ் மரபின் அனைத்துத் தளங்களிலும் பெண்களின் வாழ்க்கைப்பாடுகளும், அறிவுப் புலப்பாடுகளும் பதியப்பட்டு வருகின்றன. எழுதுவதில் பெண்களுக்கு இருந்த தயக்கம் முற்றாக மறையத்தொடங்கி உள்ளது. அதேபோல, பெண் எழுத்துகளுக்கு இருந்த ஆண்களின் எதிர்ப்புகளும் கைவிடப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துச்சூழலில், பெண்களுக்கான இடத்தை அவர்களே உருவாக்கிக்கொண்டு இருப்பதும், தமிழை வளப்படுத்தக்கூடிய ஒன்றாக மாறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சண்முகப்பிரியா: 
ஒரு எழுத்தாளராக இந்தப் புலத்தில் உங்கள் படைப்புகள் குறித்துக் கூறுங்கள்.

ஏர் மகாராசன்: 
தமிழ்  மரபில் பெண் எழுத்துகளில் காணப்படக்கூடிய இயங்கியலை அடையளப்படுத்தும் வகையில், நான் மேற்கொண்ட பெண் மொழி பற்றிய ஆய்வு மிக முக்கியமானது எனக் கருதுகிறேன். தமிழில் பெண் மொழி மரபு  குறித்த எனது ஆய்வு  “பெண் மொழி இயங்கியல்” என்ற பெரு நூலாக வெளிவந்திருக்கிறது. அதற்கடுத்து, பெண் விடுதலை குறித்த மார்க்சிய உரையாடல்களைத் தொகுத்து, “ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்” என்னும் நூலாக எனது தொகுப்பில் வெளிவந்திருக்கிறது. இரண்டு நூல்களையும் தோழமைப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மேலும், பெண் எழுத்துகள் குறித்து அவ்வப்போது கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். எனது எழுத்துகள் யாவும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடக்கும் மக்களின் பக்கம்தான். அவ்வகையில், எனது எழுத்துகள் யாவும் பெண்ணின் பக்கம்தான்.

சண்முகப்பிரியா: 
தலித் பெண்ணியம் என்ற ஒன்று பொதுவாகப் புழக்கத்தில் இருக்கின்றது. சாதியம் சார்ந்த பெண்ணியத்தின் தேவைகள் என்ன?

ஏர் மகாராசன்: 
இந்தியச் சமூகத்தில், சாதியப் பாகுபாடுகளும் சாதிய ஒடுக்குமுறைகளும் வெகுகாலமாகவே நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நோய். சாதியத்தைப் பேசுபொருளாக்காமல், எவ்வகைப் புரட்சியும் இங்கு சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொள்வதற்கே வெகுகாலமாகிப் போயிருக்கிறது. இங்குள்ள உயர்த்திக் கொண்ட சாதிப் பெண்களின் வாழ்நிலையும் ஒடுக்குமுறைக்குள்ளான நிலைமைகளும் வேறு; ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் வாழ்நிலையும் ஒடுக்குமுறைக்குள்ளான நிலைமைகளும் வேறு. இருவேறு தரப்பினரின் நிலைமைகள் ஒரே மாதிரியாக அமைந்திருக்கவில்லை. இதில், அதிகமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிக் கிடப்பது ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள்தான். ஆகவே, ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களின் குரலை ஆதரித்துதான் ஆகவேண்டும். அவ்வாறான குரலை வரவேற்பதில் தவறில்லை. 

சண்முகப்பிரியா: 
லிபரல் பெண்ணியத்திற்கும் சோசலிசப் பெண்ணியத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஏர் மகாராசன் : 
நிலவுடைமைச் சமூகத்தில் பெண்களுடைய உழைப்புச் சக்தி என்பது மறுக்கப்பட்டது. முதலாளித்துவச் சமூக அமைப்பிலே, பெண்களின் உழைப்புச் சக்தி பறிக்கப்படுகிறது. இதைத்தான் உழைப்புச் சுரண்டல் என்று கூறுகின்றனர். முதலாளித்துவச் சமூக அமைப்பு, நிலவுடைமைச் சமூக அமைப்பில் இருந்து முற்போக்கானதாக கொண்டு போனாலும்கூட, அதன் உள்ளீடான நோக்கம், சுரண்டல் தன்மையைத்தான் கொண்டுள்ளது. ஆகவே, முதலாளித்துவப் பெண்ணியமோ, குட்டி முதலாளித்துவத்தின் சீர்திருத்தவாதப் பெண்ணியமோ பெண்களுக்கான முழு விடுதலையையும் கொண்டிருப்பதில்லை. மார்க்சிய வழிப்பட்ட சோசலிசப் பெண்ணியமே உழைக்கும் பெண்களது விடுதலையை உள்ளடக்கிய ஒன்றாக இருக்கிறது. 

சண்முகப்பிரியா: 
லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் இடையிலான பெண்ணியம் சார்ந்த விவாதத்தின் முக்கிய சாரம் என்ன?

ஏர் மகாராசன்: 
லெனின், ரசியப் புரட்சியின் பிதாமகனாகக் கருதப்படுகிறவர். கிளாரா ஜெட்கின் ஜெர்மனியைச் சேர்ந்தவர். சோசலிச ஜனநாயகக் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக இருந்தவர். லெனினுடன் புரட்சியில் பங்கெடுத்துக்கொண்டவர். லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் 1920 காலகட்டங்களில் நிகழ்த்திய உரையாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பெண் உடல் அரசியல் பற்றி நிறைய உரையாடியுள்ளனர். கட்டற்று இருக்கக்கூடிய பாலியல் சுதந்திரம் குறித்துக் கூறுமிடத்தில், முதலாளித்துவச் சமுதாயத்தின் குப்பை மேட்டில் அத்தனைச் செழிப்புடன் எடுத்துரைக்கப்படும் பாலுறவுத் தத்துவங்களிடம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஓயாமல் தனது உந்தியை நினைத்துத் தியானம் புரியும் இந்திய ஆண்டியைப் போல எந்நேரமும் பாலுறவுப் பிரச்சினைகளிலேயே முழு நாட்டம் கொண்டிருக்கும் இவர்களை நான் நம்புவது இல்லை. பெரும்பாலும், வெறும் கருதுகோள்களேயான, அதுவும் பல சந்தர்ப்பங்களில் தாந்தோன்றித் தனமான ஊகங்களேயான இந்தப் பாலுறவுத் தத்துவங்கள் அபரிமிதமாகி உள்ளதற்குச் சொந்தத் தேவைகளே காரணம். முறைகேடான அல்லது மட்டு மீறிய தமது பாலுணர்ச்சிக்கு முதலாளித்துவ நெறியின் முன்னால் நியாயம் கற்பிக்க வேண்டும்; தாம் கண்டிக்கப்படல் ஆகாது என வாதாட வேண்டும் என்ற விருப்பமே இந்தத் தத்துவங்களுக்குரிய மூல ஊற்றாகும். இதனைக் கலகத் தன்மை கொண்டதாகவும், புரட்சிகரமானதாகவும் தோன்றச் செய்யும் பொருட்டு எவ்வளவுதான் முயன்ற போதிலும், முடிவில் எப்படியும் இது முற்றிலும் முதலாளித்துவத் தன்மையாகவே இருக்கிறது . இது உழைக்கும் பெண்களது கோரிக்கையல்ல. மாறாக, முதலாளித்துவச் சமூக அமைப்பில் இருக்ககூடிய மேட்டிமை வர்க்கத்துப் பெண்களுடைய கோரிக்கைதான் என்று அவ்வுரையாடலில் சொல்லி இருக்கின்றனர். ஒரு கடையில் ஒரு கோப்பையில் தேனீரை வாங்கி, தேனீரைக் குடித்து முடித்தவுடன், அந்தக் குவளையைத் தூக்கி எறிந்துவிட்டுப் போவது மாதிரியானது கட்டற்ற பாலியல் செயல்பாடு என்று கருதப்படுகிறது. ஆனால், பாலியல் என்பதும் காதல் என்பதும் முழுவதுமாக அன்பு மற்றும் உறவு வயப்பட்டது. காதலற்ற முத்தங்கள் ஒரு கோப்பைத் தண்ணீர் போன்றது என விவரிக்கும்  அந்த உரையாடல்  பகுதிகள் முக்கியமானது. இவ்வாறு, பெண் விடுதலை பற்றிய மார்க்சியப் பார்வைகள் குறித்துதான் எனது தொகுப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கோப்பைத் தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் எனும் நூல் உணர்த்துகிறது.

சண்முகப்பிரியா: 
தமிழ்நாட்டில், பெண்ணியம் எப்பொழுது முதல் தீவிரமாக பேசப்படுகிறது?  தமிழ்ச்சூழலில் முக்கியமான பெண்ணியவாதிகள் என யாரையெல்லாம் சொல்லலாம்? 

ஏர் மகாராசன் : 
தமிழ்ச் சூழலில் பெண் விடுதலைக்கான குரலை அரசியலாய் முன்னெடுத்தவர்கள் தந்தை பெரியாரும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் தான். பெண் சார்ந்த உரையாடல்களைத் தமிழ்ச் சூழலில் வளப்படுத்தியும், வளப்படுத்திக் கொண்டும் இருப்பவர்களாக சிவகாமி, வ.கீதா, ஓவியா, அருள்மொழி, சரசுவதி, மாலதி மைத்ரி, அரங்க மல்லிகா, அம்பை, கனிமொழி, எம்.ஏ.சுசீலா, அ.மங்கை, ஜூவ சுந்தரி, பாலபாரதி, அஜிதா,  செல்வி, குட்டி ரேவதி, தேவதத்தா, வாசுகி,  நந்தினி, கவின்மலர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் நிறையச் செயல்பாட்டாளர்கள் பெண் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சண்முகப்பிரியா: 
பெரியாரின் பெண்ணியம் தீவிரமானதாகக் கருதப்படுகிறதே அது ஏன்?

ஏர் மகாராசன்: 
பெண்கள் ஆண்களிடம் அடிமைகளாக இருப்பதற்குக் குழந்தைப்பேறுக்குக் காரணமான அவர்களின் கர்ப்பப்பையே காரணம் என்கிறார் பெரியார். குழந்தையைப் பெற்றுப்போடக்கூடிய கர்ப்பப்பை இருப்பதனால்தான் பெண்களை ஆண்கள் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். ஆகவே, பெண்கள் தங்கள் கர்ப்பப் பையை அறுத்தெறியுங்கள் என்கிறார் பெரியார். அதனால்தான், பெரியாரின் இந்தக் குரல், தீவிரமானதாகப் பார்க்கப்படுகிறது.

சண்முகப்பிரியா: 
பெரியாரின் பெண்ணியத்திற்கும் சோசலிசப் பெண்ணியத்திற்குமான முக்கிய வித்தியாசம் என்ன?

ஏர் மகாராசன்: 
பெரியாருடைய பெண்ணுரிமைக் கருத்தியல்கள் தீவிரமானதாகக் கருதப்படுகிறது என்றாலும்கூட, உழைப்புச் சுரண்டலிற்கும், பாலியல் சுரண்டலிற்கும் உள்ளாகும் பெண்களின் சமூக அமைப்பை மாற்றுவது குறித்து அவை பேசவில்லை. நிலவுகிற சமூக அமைப்பில், பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, மறுமணம், சொத்துரிமை போன்ற சீர்திருத்த வடிவங்களையே வெளிப்படுத்தின. சோசலிசப் பெண்ணிய அரசியலானது, நிலவுகிற சமூக அமைப்பையே புரட்டிப்போடக்கூடிய புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ளது. எனினும், சீர்திருத்த நடவடிக்கை என்பது, புரட்சியின் முதல் கட்ட தொடக்கம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சோசலிச பெண்ணுரிமையின், ஒரு தொடக்கப் புள்ளியாகவே பெரியாரின் பெண்ணியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். 

சண்முகப்பிரியா: 
நவீன பெண்ணியம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? பெண்ணியம் எனும் கருத்தியலில் எதிர்காலத்தேவை, வீச்சு எப்படிப்பட்டதாக இருக்கும்?

ஏர் மகாராசன் : 
கட்டற்று இருப்பதுதான் பெண்களின் சுதந்திரம் என்கிற கருத்து, இந்தச் சமூகத்தில் உருவாக்கப்படுகிறது. மேட்டிமைப் பெண்களின் முன்னெடுப்புகளே நவீனப் பெண்ணியமாக முன்மொழியப்படுகிறது. பெண்ணியம் என்பது பெண்களால் மட்டுமே நடத்தப்படும் ஒரு விடுதலைப் புரட்சி  கிடையாது. அதேபோல, ஒரு வர்க்க விடுதலை என்பது, பெண்களை நிராகரித்து விட்டு அல்லது தவிர்த்துவிட்டு நடக்கக்ககூடிய ஒரு புரட்சியும் கிடையாது. உழைக்கும் பெண்களும், உழைக்கும் ஆண்களும் அணிதிரள்வதுதான் இங்குள்ள எல்லாவிதமான ஒடுக்குமுறைக்கும் ஒரே தீர்வு. அந்தப் புரட்சிதான் பாட்டாளி வர்க்கப் புரட்சி என்று அழைக்கப்படும். அந்தப் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் அணி சேர்வதன் மூலமாகத்தான் பெண் விடுதலையும் சாத்தியப்படும் என்கிற ஒரு புரிதலை நவீன பெண்ணியம் உள்வாங்கியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 

இன்றைய நவீனப் பெண்ணியவாதிகள், மார்சியத்தைப் புரிந்து கொள்வதிலும், மார்க்சியவாதிகள் பெண்ணியத்தைப் புரிந்து கொள்வதிலும் போதாமைகள் நிலவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மார்க்சியரும் பெண்ணியத்தை புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணியவாதியும் மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.  இதுவே நவீனப் பெண்ணியமாக உருக்கொள்ள வேண்டும். இதுவே இப்போதையத் தேவையும்கூட. 
 
சண்முகப்பிரியா: 
கம்யூனிசத்திற்கும் பெண் விடுதலைக்கும் அப்படி என்ன நெருக்கமான தொடர்பு இருக்கிறது?

ஏர் மகாராசன்: 
கம்யூனிசம் என்பது மனிதகுல விடுதலையை பற்றிப் பேசுகிறது. பெண்கள் மனித குலத்தின் சரிபாதி அங்கம். அதனால், கம்யூனிசம் பெண் விடுதலையை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது

3 கருத்துகள்:

  1. பெண்ணியப் புரிதலுடன் சிறந்து விளங்கும் நேர்காணல்

    பதிலளிநீக்கு
  2. ஆணும் பென்னும் சமம் எனும் கருத்து குழந்தைப் பருவத்திலேயே விதைக்கப்பட வேண்டும். பால் வேறுபாடு தாண்டிய சமத்துவத்தை குழந்தைகளிடம் வளர்ப்பதற்குரிய பொறுப்பு பெற்றோர்களுக்கே உண்டு. அதிலும் முக்கியமாகத் தாய்க்கே உண்டு. அடுத்த நிலையில் பள்ளிககும் கல்வித் திட்டத்திற்கும் உண்டு. நல்ல முறையான கல்வித் திட்டம் பால் வேறுபாடுகளைக் களையும் என்று நம்புகிறேன்' நண்பர் மகாராசனின் நேர்காணல் கருத்துகள் நுட்பம் வாய்ந்தவை.

    பதிலளிநீக்கு