வியாழன், 1 மார்ச், 2018

சொல் நிலம் : சமரசமற்ற நேரடித் தாக்குதல் : - கதிர் மாயா கண்ணன்


சொல் நிலம்: சமரசமற்ற நேரடித் தாக்குதல்; தாக்கப்பட்டது நானும் தான். முனைவர் ஏர் மகாராசன் தனது 'சொல் நிலம்' கவிதை நூலை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். மஞ்சள் நிற முன் பக்க அட்டையில், சின்னப் பறவை ஓர் கிளையில் அமர்ந்திருக்கும் முகப்பு பக்கத்தை மேலோட்டமாய் பார்த்தபோது, நிலத்தைப் பற்றி சொல்லி இருக்கலாம் என்ற எண்ணத்தில் உட்புகுந்தேன். இந்த மண்ணில் என்ன நடந்தது? என்னவெல்லாம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது? என்பதை நியாயத்தின் பக்கம் நின்று அநியாயத்தை போட்டுத் தாக்கி உள்ளார்.
பத்திரப்படுத்த வேண்டிய கவிதைகளை, வரிகளை, வார்த்தைகளை கொடுத்துள்ளார். சொல்வதை துணிந்து சொல்வதோடு, சமரசமற்ற சொற்களை பயன்படுத்தி இருப்பது கவிதையின் வலி(மை)யை கூட்டுகிறது. சமூக அவலங்களை, அநீதிகளுக்கு எதிராய் சமரசமற்ற நேரடித் தாக்குதல் தொடுக்கின்றன கவிதைகள்.

''எப்போதோ
வீழ்ந்திருந்தாலும்
மேகத்தின்
உயிர்த் துளி குடித்து
மீண்டெழுகின்றன
புதைந்திருந்த விதைகள்''

-என ஆயுட்காலம் சொல்வதாகட்டும்

''நம்மின்
காலடி படாத
நிலமெங்கும்
பச்சைப் பசும் பசேல்.

மனித நிழல் போர்த்திய
நாடு தான்
வெயிலில்
வெந்து சாகிறது''

-என நிழல் வனம் பேசுவதாகட்டும்

''அழுது கொண்டிருந்தாலும்
உழுதுகொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்''

-என நிலத்தின் துயர்ப் படலம் பாடுவதாகட்டும், நிலத்தின் மீதான காதலும், மண் மீதான வன்முறைக்கு எதிரான சினமும் அப்பட்டமாய் வெளிப்படுகிறது.

சாதி, மத பேதமின்றி சுருட்டிச் சென்ற சுனாமி, சாதிய ஆதிக்கத்தால் வெண்மணியில் சாம்பலாகிப் போன செந்நெல் மனிதர்கள், பணம் மதிப்பிழப்பால் நேர்ந்த துயரங்கள், ஆணவப்படுகொலை, ஈழப் படுகொலை, போராளிகளை ஒடுக்க பயன்படுத்தப்படும் குண்டர் சட்டம் என சமரசமற்ற தாக்குதலை தொடுக்கிறார். ஒத்த கருத்து, ஒத்த சிந்தனையாளர்களிடையே இக்கவிதைகள் மனக் கிளர்ச்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
இராம்குமார் என்ற ஏழை இளைஞனை இந்த அரசு எப்படி படுகொலை செய்தது என்பதை, இதுவும் ஓர் ஆணவப் படுகொலையென உரைக்கிறது கவிதை. சுவாதி படுகொலை, இராம்குமார் மரணத்தை சிலம்பதிகாரத்தோடு ஒப்பிட்டு வரையப்பட்ட கவிதை அது.

''ஆணவப் படுகொலைகளுக்குக்
காரணங்கள் தேவையில்லை.
சாமானியராய் இருந்தாலே
போதுமானது.
...............
...............
இராம்குமார்கள் சாகடிக்கப்படும்
நாடுதானே இது!''

-என்று சொல்லும் போது நீதி யாருக்கு கிடைக்கும்? யாருக்கெல்லாம் மறுக்கப்படும்? என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறார்.

''பல்லக்குத் தூக்கியும்
கூன் ஒடியப்
பணிந்து வணங்கியும்
பதவிகளும் பணங்காசும்
குவித்திருக்கலாம்''

-என அறத்தீ மனிதர்களில், அறமற்ற மங்குனிகளையும் வசைபாடியுள்ளார். "பூநூலால் கோர்க்கப்பட்ட இந்திய வரைபடச் சாயங்களை அவ்வப்போது ஆறுகள் தான் அழிக்கின்றன" என நுட்பமான அரசியலை ஆழமாய், அழுத்தமாய் பதிவு செய்கிறார்.
மண்ணையும், மக்களையும் நேசிக்காமல் வடிக்கும் கவிதைகள் இனிமையை கொடுக்கலாம். ஆனால், வஞ்சிக்கப்படும் மனிதர்களையும், இனத்தின் அடையாளங்களையும் பதிவிடும்போது இனிமையை தேட முடியாது. பூந்தோட்டத்தில் வேண்டும் என்றால், மனம் குளிரும் காட்சிகள் கிடைக்கும். போர்க்களத்தில் இரத்தமும், சதைப் பிண்டங்களுமாய் இருதயம் பிளக்கும் காட்சிகளே விழிஎட்டும் வரை விரிந்து கிடக்கும். இந்நூல் போர்க்களத்தைக் விவரிப்பது. மண்ணோடும், மனிதர்களோடும், சமூக அவலங்களோடும் நிகழும் போரைப் பற்றியது. நமக்கு எதிராய் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரைப் பற்றிய நூல்.
நூலை வாசித்து முடித்தபின்பு, மீண்டும் அட்டையைப் பார்க்கும் போது, பறவை முகத்தின் படிந்த சோக ரேகைகள் மட்டுமே நேரடியாய் புலப்படுகிறது. இந்த சோகம் நமக்கும் சொந்தமானது. நூலும் அப்படியே!

87 கவிதைகளை கொண்ட இந்த நூலின் முதல் கவிதையின் முதல் வரி, 'அன்பின் உயிர் முடிச்சை'. கடைசி வார்த்தை 'மண்ணுக்குள்'. அன்பில் தொடங்கி மண்ணுக்குள் விதைத்துள்ளார். விதைகள் விருட்சமாகும். மேகத்தின் உயிர்த்துளி குடிக்காத விதைகளும், நம் இன மக்களின் இரத்தத் துளிகளில் குளித்து மீண்டெழும். அதன் வேர்களுக்கு இதுபோன்ற கவிதை நூல்கள் இரத்தம் பாய்ச்சிக் கொண்டே இருக்கும்.

பேரன்புடன்
கதிர்மாயா கண்ணன்

01-03-2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக