ஞாயிறு, 4 மார்ச், 2018

சொல்நிலம் : வஞ்சிக்கப்பட்ட, வாழ்வு தந்த நிலங்களின் அவலக் குரல்களாகச் சொற்கள் :- பிரபாகரன்

மிக சமீபத்தில் நண்பர் ஒருவரின் “அம்மா” தவறிவிட்டதால், அவரைக் காண மார்த்தாண்டம் வரை சென்றிருந்தோம். அவரது வீட்டுக்கு போன பின், அவரது குடும்பத்தார்களை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக தோன்றியது. அவர்கள் “அம்மா” இல்லாமல் அனைவரும் ஒரு கையை இழந்தது போல, மிகவும் ஒடிந்து போய் காணப்பட்டனர். அவர்களை பார்க்கும் போது இரண்டு நாட்கள் அழுது விட்டு மூன்றாம் நாள் இயல்பாக அவரவர் வேலைகளை பார்க்கப் போய் விடுவர் என்று தோன்றவில்லை. அவரது “அம்மா” விட்டு விட்டு போன நினைவுகள் அவ்வளவு வலிமையானது.
சரியாக அன்றுதான், சொல்நிலத்தின் முதல் கவிதையை வாசிக்கத் தொடங்கிருந்தேன். அவரது அம்மாவின் இறப்புச் செய்தியை கேட்டதும் நினைவில் வந்தது, “கருச்சொல்” கவிதைதான்.

தமிழ்ச்சமூகத்தில், எந்தவொரு நிகழ்வைத் தொடங்கினாலும் மங்களகரமாக, தெய்வங்களையோ இயற்கையையோ தொழுது ஆரம்பிக்கும் வழக்கம் நீண்ட காலமாக உண்டு. அது போலத்தான், “சொல்நிலம்” கவிதை தொகுப்பும். இங்கும் மகாராசன் அவர்கள் அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஒரு நிலத்தை குறித்து, அதன் வலிகளை குறித்து எழுதி விடுவதோ, அல்லது பாடிவிடுவதோ அவ்வளவு எளிதானது அல்ல. அது அந்த நிலத்தின் வலிகளை முழுதும் இயல்பாகவே உணர்ந்தாலொழிய, அவ்வளவு சுலபமாக செய்து விட முடியாது. நாம் விழுந்த இடமாகிய ஈழத்தில், நடந்த இன அழிப்பிற்கு மௌன சாட்சிகளாக இருந்த நம்மை நோக்கி கேள்விகேட்கும் “இனம் அழுத நிலம்”மும், இங்கிருந்து பறந்து போன குருவிகள் மீண்டு மீண்டும் வரும் என ஒரு சிறு நம்பிக்கைக் கீற்றை முன்வைக்கும் “ஈழப்பனையும் குருவிகளும்” ஆகிய கவிதைகள் புத்தன் பெயரால், அங்கு நடந்த படுகொலைகளின் பெரும்துயரை நினைவுபடுத்தி செல்கையில், நம்மை ஒரு நிமிடம் இருத்தி சிந்திக்க வைக்கிறது.

அதே போன்ற படுகொலைகள் நெய்தல் நிலத்திலும் நடந்தேறியது. ஆனால் இந்த முறை மனித மிருகங்களால் அல்லாமல், ஒப்பிட முடியாத இயற்கையின் கரங்களால். நம்மால் படைக்கப்பட்ட இவர்களே இப்படி ஒருவருக்கொருவரை அழித்தொழிக்கும் போது, நாமும் ஏன் அமைதியாக இருக்க வேண்டும், என்று இயற்கை நினைத்ததோ என்னவோ, ஆழியால், அது சூழ் உலகை அழித்து குதியாட்டம் போட்டது. “ஆழி முகம்” கவிதையும் “அலை நிலத்து அழுகை” கவிதையும் அதையே கூறிச் செல்கின்றன.

இப்போது மருத நிலத்து துயரம். இன்று கதிராமங்கலம், நெடுவாசல், தஞ்சை போன்ற நிலங்களில் அரசின் அராஜகத்தால் அழுது புலம்பும் மக்களின் வலியை “நிலப்படுகொலை” வழியும், நீங்கள் பசியால் அழுது கொண்டிருந்தாலும் என்னை உழுது கொண்டு இருங்கள் என நம் காலில் விழுந்து கெஞ்சும் நிலத்தின் அவலத்தை “துயர் படலம்” வழியும், ஆறுகளெல்லாம் வற்றிப்போய், குலங்களெல்லாம் சீமைகருவேலமரங்கள் முளைத்து, கலப்பையெல்லாம் கழுமரமாய், வயிரெல்லாம் பத்திக்கிட்டு எறுஞ்சாலும் மண்ணை வாரி தூத்தி போகவும் மனசில்லேயே என அவர்கள் கெஞ்சுவது நமது காதிலும் விழத்தான் செய்கிறது “கழு நிலம்” வழியாக.

தம் இனத்திற்காக சமீபத்தில் தீக்கிரையான விக்னேசு போன்றோர்களை, உசுப்பேற்றி, உணரவேற்றி செய்ய வைத்தார்கள் என எள்ளி நகையாடும் வாய்கள், களம் கண்டு குரல் கொடுத்திருந்தால் அவர்கள் தீக்கிரையாகாமல் இருந்திருப்பார்கள் என “அறத்தீ மனிதர்கள்” கூறும் அரசியல் நூற்றுக்கு நூறு உண்மையே.

சுவாதி கொலை வழக்கில் மறைந்திருக்கும் சாதி, அதிகார, பூநூல் அரசியலை பேசி…..
இறுதியாக இராம்குமாரை கொலை செய்ததும், ஆம், “இதுவும் ஒரு ஆணவப் படுகொலை” தான்.

மிகப்பெரிய கேலிக்கூத்தான, கருப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், எளியவர்கள் படும் பாட்டை அவர்களின் நிலத்தின் வழியாகவே சொல்லுகிறது, “செல்லாக் காசுகளின் ஒப்பாரி”.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்தும் வலி நிறைந்த நிலத்தின் வலியை, அந்த நிலத்தில், பால்ய கால வாழ்வின் நினைவுகளை அசைபோட்டு, அந்த வாழ்வே வாழ்வு என, இப்போது நாம் வாழும் நகர வாழ்க்கையை கண்டு நம்மை எள்ளி நகையாடுவதாய் அமைந்துள்ளது.

“நனவிலும் கனவிலும்
பாடாய்ப் படுத்தும்
நினைவுகள்,
இப்படியான
கவிதைகளில் தானே
செழித்து நிற்கின்றன.” போன்ற வரிகளும்,

“கார்காலத்துச் சொற்கள்
இப்போதெல்லாம்
காய்ந்தே தான் கிடக்கின்றன.” போன்ற வரிகளுமே அதற்கு சான்று.

என்னய்யா இது? கவிதை நூல் என்று கூறிவிட்டு வெறும் வன்முறைகளையும் இழந்த காலங்களையும், கொலைகளையும் மட்டுமே சொல்லி இருக்கின்றீர்களே? உங்கள் கவிதையில் சிரிப்பே இல்லையா? மகிழ்ச்சியான நிலமே பாடப்படவில்லையா?

ஏன் இல்லை? இருக்கே. மகிழ்ச்சியான, பச்சை பசேலென இருக்கும், எப்போதும், சிரித்துக் கொண்டிருக்கும் நிலமும் இங்கு உண்டு. அந்த நிலம்தான் “மனிதனின் காலடி படாத நிலம்.” மேலும் இங்கு காதல் கவிதைகளும் உண்டு. அவையும் நிலத்தோடு தொடர்புடையவைகளாகவே இங்கு பாடப்பட்டுள்ளன.

வெறும் அழகியலை மட்டும் பாடுவதோ, எழுதுவதோ மிக எளிதாக, யார் வேண்டுமானாலும் செய்து விடலாம். அவை அழகானவை மட்டுமே. ஆனால் இது போன்ற, நிலத்தின் அரசியல் கலந்த கவிதைகள், படைப்புகள் மட்டும்தான் இப்போது மட்டுமல்ல எப்போதும் ஆரோகியமானவை.

இந்த நூல் இன்னும் சிறிது நாள் கழித்து வெளி வந்திருந்தால், அதில் கேரள படுகொலையும், விழுப்புரம் படுகொலையும், சிரிய படுகொலைகளும் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஏனென்றால், தமிழர்களாகிய எங்கள் ஓலங்கள் மற்றவர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ, மற்றவர்களின் அவலக் குரல்கள் தமிழர்களாகிய எங்கள் காதுகளில்  விழுந்து கொண்டேதான் இருக்கும். நாங்கள் எப்போதும் அதற்காக செவி கொடுப்போம்…

#மகாராசன் அவர்களுக்கு வாழ்த்துகள்..

அன்புடன் பிரபாகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக