திங்கள், 25 டிசம்பர், 2023

தீயில் மடிந்த செந்நெல் மனிதர்கள் - மகாராசன்


வயல் நீர் வற்றி 
பசுந்தாளெல்லாம் 
பழுத்து நின்ற 
நெற்கதிர் அறுத்து களம் சேர்த்த 
கருத்த மனிதர்களின் கவலைகள், 
ஊமணி எழுப்பிய ஓசை போல் ஊருக்குக் கேட்காமலே 
ஒட்டிக் கிடந்தன வாழ்வில்.

வியர்வையில் கலந்த 
கரிப்புச் சுவையாய் 
நிலமும் உழைப்புமாய்க் கிடந்தாலும், 
விதை நெல் பாவும் காலம் முளைக்குமெனக் 
காத்துக் கிடந்தன சீவன்கள்.

வம்பாடு சுமந்த இடுப்பிலும் 
காய்த்துப்போன கைகளின் 
கக்கத்திலும் கசங்கிக் கிடந்த 
துண்டுத் துணியைத் 
தூக்கி எறிந்து, 
செந்நிறத்திலொரு துண்டை எடுத்துத் தோளில் போட்டன 
உழைத்துக் காய்த்த கைகள். 
நிலத்தில் கிடந்த
அதிகாரத்தின் வேர் முடிச்சுகள் 
அவிழத் தொடங்கின.

சாதிய வெறியும் 
நிலவுடைமைச் சதியும் 
சகதி மனிதர்களைச் 
சாவடிக்கக் காத்துக் கிடந்தன.
அய்யா சாமீ ஆண்டே எனக் 
கால் பிடித்துக் கதறி அழுது, 
வயிற்றுப் பாட்டுக்காய்க் 
கூடக் கொஞ்சம் கொடுங்களேன் 
எனக் கேட்டிருந்தால், 
போதுமடா போ போவென்றே 
பதக்கு நெல்லைக் கொடுத்திருக்கலாம் 
பழைய தோரணையோடு.

நெல்லை விதைத்தவர்கள் 
சொல்லை விதைத்தார்கள் 
கூடவே தன்மானம் சேர்த்து.

அரைப்படி நெல்மணி 
கூடக் கேட்டாரென, 
நெருப்பின் ஒரு துளி விதையைக் 
குடிசைக்குள் எரிந்து விட்டுப் போனார்கள்.

அகலின் நெய் குடித்துத் தூண்டிய சுடர் 
இருளைக் கிழித்து 
வெளிச்சம் தெளித்துக் கொண்டிருந்த 
இரவுப் பொழுதில், 
பெருந்தீ எழும்பியது குடிசையில்.

பொங்கிடும் 
எரிமலைக் குழம்பின் எச்சத்தை 
எச்சிலைத் துப்பியதுபோல 
உமிழ்ந்து போனது 
ஆண்டை அதிகாரம்.

வடுக்களோடும் வலிகளோடும் வயிற்றுப்பாட்டோடும் 
நெருப்பையும் சுமந்து 
சாம்பலாகிப் போனார்கள் 
வெண்மணி வயலின் 
செந்நெல் மனிதர்கள்.

வெண்மணி ஈகியருக்கு
வீரவணக்கம்.

ஏர் மகாராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக