சனி, 16 டிசம்பர், 2023

கல்வித்துறைக்குள் வாசிப்புப் பழக்கத்திற்கான தூண்டல்: மகாராசன்


அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறையைத் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கிறது. மாணவத் தலைமுறையைச் சமூகப் பொறுப்புள்ள மனிதர்களாக உருவாக்கும் மிக முக்கியமான தளமாக அமைந்திருப்பது பள்ளிகள்தான். அந்தப் பள்ளிகளை நிர்வகிக்கும் தலைமை ஆசிரியர்களுக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கின்றன. 

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பொதுமக்கள், தேர்வுகள், நிர்வாகக் கட்டமைப்புகள் எனப் பலவகைத் தளங்களில் தலைமை ஆசிரியர்கள் பணிபுரிந்தாக வேண்டியிருக்கிறது. குறிப்பாக, ஒரு கல்வி நிறுவனத்தின் நிர்வாகியாகவும் கல்வியாளராகவும் இருந்து இருவேறு தளங்களிலும் வழிநடத்தும் மிக முக்கியமான பணிச் சூழல்தான் தலைமை ஆசிரியர்களுடையதாகும்.

இன்றைய கல்வி மற்றும் சமூகச் சூழலில், தலைமை ஆசிரியர்களின் நிர்வாகத் திறன்களையும், கல்விசார் அடைவுத்திறன்களையும் வளர்த்துக்கொள்ளவும் வழிகாட்டவுமான தலைமைத்துவப் பயிற்சி முகாமாக வடிவமைத்து நடத்திக் கொண்டிருக்கிறது கல்வித்துறை. இதைத் திறம்பட வடிவமைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநரும் எனது நண்பரும் வகுப்புத்தோழருமான திரு ஜெயக்குமார் அவர்கள். 

மதுரை பில்லர் மையத்தில் மூன்றுநாள் நடைபெறும் உண்டு உறைவிடப் பயிற்சி முகாமில் பல்வேறு பொருண்மைகளில் ஆளுமைப் பண்பு வளர்ச்சி குறித்த வழிகாட்டல் வகுப்புகள் நடைபெறுகின்றன. அம்முகாமில் குறிப்பிடத்தக்க ஒரு பண்பை வளர்த்தெடுக்கும் நோக்கில், ஒவ்வொரு முகாமிலும் ஓர் அமர்வாக அமைந்திருப்பது புத்தக வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டல் தொடர்பானதாகும். 

தலைமை ஆசிரியர்களுக்கு வெறுமனே நிர்வாக ஆளுமைத் திறன்களை மட்டும் கற்பித்திடாமல், தலைமை ஆசிரியர்களையும் வாசிப்புப் பழக்கத்திற்கு உள்ளாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, தமிழில் வெளிவந்திருக்கும் கல்விசார் புத்தகங்கள், சமூகம், சூழல், மொழி, இலக்கியம் சார்ந்த மிக முக்கியமான புத்தகங்கள் குறித்த அறிமுகங்களும், புத்தகங்கள் குறித்தும் புத்தக வாசிப்பு குறித்தும் தூண்டல் உணர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முகாம் நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தலைமை ஆசிரியர்களையும் புத்தக வாசிப்பாளர்களாக ஆக்கும் முயற்சியில் பல எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் வரவழைக்கப்பட்டு தலைமை ஆசிரியர்களோடு உரையாட வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். 

இம்மாதிரியான திட்டமிடலைப் பெருங்கனவோடும் மிகுந்த எதிர்பார்ப்போடும் ஈடுபாட்டோடும் அக்கறையோடு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் திரு ஜெயக்குமார். 

தொடர்ந்து நடைபெற்று வரும் அம்முகாம்களில் நூல்கள் வாசிப்பு குறித்த உரையாடலை வழங்கிக்கொண்டிருக்கும் தோழர் கண்மணிராசா அவர்கள் இன்று உரையாற்றுவதாய் இருந்தமையாலும், தலைமை ஆசிரியர் நட்புகளைச் சந்திக்க வேண்டியமையாலும், இணை இயக்குநர் நண்பரைச் சந்திக்க இருந்தமையாலும் இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு நானும் துணைவியாரும் சென்றிருந்தோம்.

தலைமை ஆசிரியர்கள் அனைவரிடமும் எமது கல்வி மற்றும் எழுத்துச் செயல்பாடுகள் குறித்து அறிமுகப்படுத்தியதோடு, அவர்கள் மத்தியில் உரையாற்றவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இணை இயக்குநர் அவர்களிடம் இன்றைய கல்விச்சூழல் குறித்தும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் மிக விரிவாகப் பேச வாய்ப்புக் கிடைத்தது. 

அண்மையில், நான் எழுதிய 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூலையும் இணை இயக்குநரிடம் வழங்கி, இன்றைய மாணவர்களின் கல்வி மற்றும் சமூகச் சூழல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தமக்குக் கிடைத்திருக்கும் பணி வாய்ப்பை மிகுந்த பொறுப்புணர்வோடு திறம்படச் செயலாற்றிக்கொண்டிருக்கும் இணை இயக்குநரின் செயல்பாடுகள் தொலைநோக்கும் கனவும் நிரம்பியிருப்பவை. அந்த இலக்கும் கனவும் நிறைவேறும்; நிறைவேற வேண்டும் என்பதைத்தான் அவரது செயல்பாடுகள் கோடிட்டுக் காண்பித்திருக்கின்றன. மிகுந்த மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

முனைவர் ஏர் மகாராசன்

16.12.2023.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக