ஞாயிறு, 10 டிசம்பர், 2023

ஒரு புத்தகம் அப்படி என்னதான் செய்துவிடப் போகிறது? - மகாராசன்

ஒரு புத்தகம் என்ன செய்துவிடப் போகிறது? எனப் பலரும் நினைக்கலாம். நான் எழுதிய புத்தகங்களும்கூட என்ன செய்துவிடப் போகின்றன? என நானும் நினைத்திருக்கிறேன்தான். ஆனாலும், நாம் சொல்ல வருவதையெல்லாம் எழுத்துகளின் மூலமாகப் புத்தகமாக வெளிக்கொண்டு வருவதே எம் கடமையென எழுத்துப்பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். 

அண்மையில் நான் எழுதிய 'மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து' எனும் நூலினை, சாதியப் பாகுபாட்டு உணர்வைத் தமது மாணவர் ஒருவரிடம் ஓர் ஆசிரியர் திணித்தபோது, 'எல்லோரும் சமம்தானே டீச்சர்' என, சமத்துவக் குரலை வெளிப்படுத்திய மாணவத் தம்பி முனீசுவரன் அவர்களுக்குத்தான் தளுகையாகப் படைத்திருந்தேன். அந்த மாணவத் தம்பியை முன்பின் பார்த்ததில்லை; இதுவரையிலும் எந்த அறிமுகமும் இல்லை. ஆனாலும், அந்த மாணவரின் சமத்துவக் குரல் எமக்குப் பிடித்திருந்தது. அதனால்தான், மாணவர்கள் தொடர்பான இந்நூலை அம்மாணவருக்கே படையலாகப் படைத்திருந்தேன். 

அந்த மாணவரின் சமத்துவக் குரல்போல பொதுசமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதையும் நூலின் இறுதிப் பகுதியில் விவரித்திருந்தேன். எனினும், இந்தத் தகவல் அம்மாணவருக்குத் தெரியாது. தொடர்பு விவரங்கள் ஏதும் இன்மையால், இதைத் தெரியப்படுத்த நானும் மெனக்கெடுக்கவில்லை. 

சமூக ஊடகங்களின் வாயிலாக இந்த நூல் சமூகத்தின் கவனிப்பைப் பரவலாகப் பெற்றிருக்கிறது. பல்வேறுபட்ட சமூகத் தரப்பினரும் இந்நூலினைப் பல தளங்களுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்நூலைப் படித்த பலரும் எம்மோடு தொடர்பு கொண்டு பேசினார்கள். வேறெந்த நூலுக்கும் இப்படியான சமூக உரையாடல்களும் வரவேற்பும் இருந்ததில்லை. 

அண்மையில், தூத்துக்குடியைச் சார்ந்த மீனவர் திரு டேவிட் அவர்கள் இந்நூலைப் படித்துவிட்டுத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவரும் எனக்கு முன்பின் அறிமுகமில்லை. ஆயினும், இந்நூலைப் பலருக்கும் வாங்கிக் கொடுத்திருப்பதோடு, இந்நூல் யாருக்குப் படையலாகப் படைத்திருக்கிறதோ அந்த முனீசுவரன் தம்பியிடமே அந்நூலைக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார் திரு டேவிட். 

தம்பி முனீசுவரன் படித்த பள்ளிக்குச் சென்று, அவரைப்பற்றி விசாரித்து, அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் முனீசுவரனின் தங்கையிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து, இந்தப் புத்தகத்துல உங்க அண்ணனைப் பத்தி எழுதியிருக்கு. அண்ணன்கிட்ட கொடுத்துக் காண்பிக்க வேண்டும். இந்தப் புத்தகத்த எழுதுனவருக்கிட்ட அண்ணனப் பேசச்சொல்லு பாப்பா எனச் சொல்லி அனுப்பி உள்ளார். கடந்த வாரம் தம்பி முனீசுவரன் தொலைபேசியில் வைகுநேரம் பேசினார். மிக நெகிழ்ச்சியான உரையாடல் அது.

இப்ப என்ன செய்யிற தம்பி? என்றேன் நான். குட்டி யானை வண்டி ஒன்னு லோன் போட்டு வாங்கியிருக்கேன் சார். வீட்டு வீட்டுக்கு அதுல தண்ணீர் சப்ள பண்ணிக்கிட்டு இருக்கேன் சார் என்றார். மேக்கொண்டு எதுவும் படிக்கலயா தம்பி என்றேன். எந்தக் காலேஜ்லயும் சேத்துக்க முடியாதுன்னுட்டாங்க. சேத்தாக்க, வேற எதுவும் பிரச்சனை வந்துரும்னு பயந்துக்கிட்டு யாரும் சேக்கல சார். அப்புறமாத்தான், ஐ.டி.ஐல சேந்து படிச்சேன். அம்மா அப்பாவுக்கு முடியல. ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. குடும்பத்தப் பாக்க வேண்டி இருந்ததால, தண்ணீர் சப்ளை வேல பாக்க வேண்டியதாப் போச்சு சார் என்றார். 

நான் எழுதிய புத்தகத்த ஒனக்குதான் படையலாகக் குறிப்பிட்டு இருக்கேன் தம்பி. புத்தகத்துல ஒன்னையப் பத்திதான் பெருமையாப் பாராட்டி எழுதி இருக்கேன். பாரு தம்பி என்றேன். ஆமா சார். தங்கச்சி காட்டுனா. நானும் பாத்தேன் சார் என்றார் நெகிழ்ச்சியாக. 

வீட்டுல இருந்தேகூட படிக்கிறதுக்கான வாய்ப்புலாம் இருக்கு தம்பி. தொலைதூரக் கல்வி மூலமாக்கூட கல்லூரிப் படிப்பு படிக்கலாம். படிக்க விருப்பம் இருந்தா சொல்லு தம்பி. அதுக்கான செலவ நானே பாத்துக்கிறேன்; எந்த உதவியா இருந்தாலும் கேளு; அடிக்கடி பேசுவோம் தம்பி என்றேன். சரிங்க சார் என்றார் முனீசுவரன்.

இன்று, தம்பி முனீசுவரனிடமிருந்து அழைப்பு வந்தது. வணக்கம் சார். நல்லா இருக்கீகளா? எங்களப் பாக்க டேவிட் அய்யா வந்திருக்காரு என்றார். டேவிட் அய்யாவிடம் செல்பேசியைக் கொடுத்தார். வணக்கம் சார். இன்னிக்கி கடலுக்குள்ள போகல. அதனாலதான், முனீசுவரன் வீட்டுக்கு வந்துட்டுப் போகலாம்னு புளியங்குளத்துக்கு வந்தேன் என்றார். வீட்டில் உள்ள எல்லோரிடமும் பேசச்சொல்லி அலைபேசியைக் கொடுத்தார். நானும் எல்லோரிடமும் பேசினேன். முனீசுவரன் குடும்பத்தையும், பிள்ளைகளோட படிப்பையும் நாமதான் சார் பாத்துக்கனும் என்றார். நானும் அவ்வாறே உறுதி அளித்திருக்கிறேன். தம்பி முனீசுவரன் குடும்பத்திற்கு உதவ விரும்பும் அன்பர்களும் தொடர்பு கொள்ளலாம்.

தம்பி முனீசுவரனையோ, அய்யா டேவிட் அவர்களையோ முன்பின் பார்த்தது இல்லை. ஆனாலும், ஒரு புத்தகம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறது. புதிய உறவுகளை இணைத்திருக்கிறது. 

டேவிட் அய்யாவுடன் தமது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படத்தை தம்பி முனீசுவரன் அனுப்பி வைத்திருந்தார். எனினும், சில பல காரணங்களுக்காகப் படத்தைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என அவர் வேண்டிக்கொண்டார்.

தம்பி முனீசுவரனுக்கும், அய்யா டேவிட் அவர்களுக்கும் மிக்க நன்றியும் அன்பும்.

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் இந்நூல், பலரது மனங்களோடு மிக நெருக்கமாக உரையாடிக்கொண்டிருப்பது பெரு மகிழ்ச்சிதான்.

வாய்ப்புள்ளோர் இந்நூலை வாசியுங்கள்.

ஏர் மகாராசன்

*

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து,
ஆசிரியர்: மகாராசன்,
முதல் பதிப்பு: செப்தம்பர் 2023,
பக்கங்கள்: 72
விலை: உரூ 90/-
வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 
ஆதி பதிப்பகம்
99948 80005.

அஞ்சலில் நூலைப் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக