திங்கள், 11 டிசம்பர், 2023

கனகர் விசயரைத் தோற்கடித்த செங்குட்டுவனின் வெற்றிக்கு யார் காரணம்? - மகாராசன்



கண்ணகிக் கோட்டம்.

கனக விசயர்தம் முடித்தலை நெறித்து...

சேரன் செங்குட்டுவனின் வெற்றிக்குக் காரணம் யார்?

*

சிலப்பதிகாரத்தில் வரும் எல்லாத் திருப்பங்களுக்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் மாதவிதான். மாதவி எனும் கதாப்பாத்திரத்தால்தான் கோவலன் கண்ணகி பிரிவு, கோவலன் மாதவி பிரிவு, கோவலன் கண்ணகி மதுரைப் பயணம், கோவலன் கொலை, கண்ணகி நீதி கேட்டல், பாண்டியன் நெடுஞ்செழியன் மறைவு, மதுரை தீப்பற்றி எரிதல், கண்ணகி பெருஞ்சாபம், கண்ணகியின் மலைப் பயணம், கண்ணகியைத் தெய்வமாய்ப் பழங்குடி மக்கள் வழிபடல், சேரன் செங்குட்டுவன் படையெடுப்பு, கனகன் விசயன் தோற்கடிப்பு, இமயத்தில் கல்லெடுப்பு, கண்ணகிக் கோட்டம் அமைத்தல் என அத்தனை நிகழ்வும் மாதவியால்தான் நடந்தன என்பார் இளங்கோவடிகள்.

சேரன் செங்குட்டுவன், கனகர் விசயனைத் தோற்கடித்த நிகழ்வுக்கு மாதவிதான் காரணம் என்கிறார் அவர். அதாவது, மாதவி எனும் ஒருவர் இல்லையென்றால், கோவலன் கண்ணகி பிரிவு நிகழ்ந்திருக்காது. அதனால், கோவலன் கொல்லப்பட்டிருக்க மாட்டார். கண்ணகிக்குக் கோயில் கட்ட சேரன் செங்குட்டுவன் வடவர் மீது படை தொடுத்திருக்கவும் மாட்டார்.

 ஆகையால்தான், சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்று கனக விசயரைத் தோற்கடித்து, போரில் வெற்றி அடைந்திருப்பதற்குக் காரணம் மாதவிதான். மாதவி எனும் ஒருவர் இருந்திருக்காவிட்டால், கனகர் விசயரைத் தோற்கடிக்கும் சூழல் எழுந்திருக்காது எனும் வகையில் இளங்கோவடிகள் பதிவு செய்திருப்பார். இதுகுறித்துப் பேசும்போது, சேரன் செங்குட்டுவன் வெற்றிக்கு மாதவிக்கு வாழ்த்துச் சொல்வார் இளங்கோவடிகள்.

அதைத்தான்,

"வாழிய எங்கோ மாதவி மடந்தை       காதற் பாணி கனக விசயர்தம்     முடித்தலை நெறித்து " 

என்கிறார் இளங்கோவடிகள்.

தமிழ், தமிழர், தமிழ் நிலம் என்றாலே ஒவ்வாமை கொள்பவர்களுக்கு, சிலம்பின் மொழி தெரிய வாய்ப்பில்லைதான்.

ஏர் மகாராசன் 

மக்கள் தமிழ் ஆய்வரண்.

3 கருத்துகள்:

  1. பெயரில்லா12/12/23, 10:27 PM

    மிகசிறப்பு

    பதிலளிநீக்கு
  2. செல்லை.தமிழ்ச்செல்வன்12/12/23, 10:28 PM

    மிகசிறப்பு

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா23/4/24, 1:51 PM

    மிகச் சிறப்பு ஐயா.
    கனக விசயரின் முடித்தலை
    நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன்
    இமயம் வரையிலும் மீன்கொடி
    ஏந்தி இசைபட வாழ்ந்தான்
    பாண்டியனே என்ற பாடல்தான்
    நினைவுக்கு வருகிறது..

    பதிலளிநீக்கு