மலைகளும், காடுகளும், வயல்களும், கடலும் கொண்ட பெரும்பரப்பில் மனித சமூகம் நிலைகொண்டு வாழ்வதற்கு உகந்த சூழலாய் அமைந்தது சமவெளி எனும் நிலப்பகுதிதான். மலைகள், காடுகள், கடல் எனும் இயற்கை வெளிகளை வாழ்விடங்களாகவும், வாழ்வாதாரங்களாகவும் கொண்ட மனிதக் குழுக்களைக் காட்டிலும், சமவெளிப் பகுதிகளை வாழ்விடமாகவும், வாழ்வாதாரங்களாகவும் கொண்ட மனிதக் குழுக்களே பெருங்குழுக்களாய் உருக்கொண்டு வந்துள்ளன.
இயற்கையின் கடல் மற்றும் இதர நிலப் பகுதிகளைக் காட்டிலும் நிலைத்த வாழ்வுக்கான இயற்கை நில அமைப்பு, உற்பத்திக்கான பெருநிலப்பரப்பு, கூட்டு உழைப்புக்கான மனிதப் பெருந்திரள், நிலம் – உழைப்பு போன்றவற்றின் விளை பயனாய் அமைந்த உபரிச்செல்வப் பெருக்கம் போன்றவற்றால் அமைந்துபோன வாழ்க்கைமுறை, வாழ்க்கைத் தரம், பண்பாடு, நாகரிகம், மொழி, கலை, இலக்கியம், அறிவுப் புலப்பாடு, கல்வி, அறம், சமூக உறவுகள், பண்டமாற்றுமுறை, சமூகக் கட்டமைப்பு போன்ற இன்னபிற யாவும் பெருகி வளா்ந்தமைக்கான வாய்ப்புகளும் வசதிகளும் சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த மக்களிடம்தான் அதிக அளவில் காணப்பட்டன. இவ்வாறான சமவெளிப் பகுதிகளையும், மக்களையும் செழிப்பும் வளமும் நிறைந்ததாய் உருவாக்கியதில் பெரும்பங்கு வகிப்பன இயற்கையின் ஒப்பற்ற கொடைகளுள் ஒன்றான ஆறுகள்தான்.
மலைகளில் அரும்பி, காடுகளில் நுழைந்து சமவெளிகளில் முகம் காட்டுகிற ஆறுகள் யாவும், விரிந்து கிடக்கும் பெரும்பகுதிச் சமவெளிகளைச் செழிப்பாக்குவதையே கடமையாகக் கொண்டிருக்கின்றன. இன்னொரு வகையில் சொல்வதானால் சமவெளிப் பகுதிகளில் கிளைபரப்பும் ஆறுகளை அந்நிலப் பரப்பில் வாழ்ந்த மனிதக் குழுக்கள் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டன.
பருவங்களுக்கு ஏற்றாற்போன்று பெய்திட்ட மழையும், அதை உள்வாங்கிப் பெருக்கெடுத்த ஆறுகளும் சமவெளி நிலப் பரப்பைச் செழிக்கச் செய்ததில் பெரும்பங்காற்றியுள்ளன. இதனாலேயே ஆறுகள் பரந்த சமவெளிப் பரப்பில் நிலைகொண்டிருந்த அத்தனை மனிதக் குழுக்களும் மற்ற நிலப்பரப்பில் நிலைகொண்டிருந்த மனிதக் குழுக்களைக் காட்டிலும் உயா்த்திக்கொண்டன அல்லது உயா்த்திக் கொண்டதாக நினைத்துக்கொண்டன.
சிறு மற்றும் குறுங்குழுக்கள் பெருங்குழுக்களாகவும், பெருங்குழுக்கள் இனக்குழுக்களாகவும், இனக்குழுக்கள் இனங்களாகவும் உருவெடுத்து, பல்வேறு சமவெளிப் பகுதிகள் சார்ந்த பெருஞ்சமூகங்களாய் வடிவமைத்துக் கொண்டன. இதனால்தான் ஆற்றங்கரைச் சமவெளிகளை நாகரிகம் செழித்த நிலப்பகுதிகளாக வரலாற்றில் குறிக்கப்படுகின்றன.
உலகில் தோன்றியிருக்கும் எல்லா நாகரிகங்களுமே ஆற்றங்கரைகளில்தான் தோன்றி இருக்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க நாகரிகங்களாகக் கருதப்படுகிற எகிப்து நாகரிகம் நைல் ஆற்றங்கரையிலும் , சுமேரிய நாகரிகம் யூப்ரடீசு டைகரீசு ஆற்றங்கரையிலும் , சீன நாகரிகம் குவாங்கோ ஆற்றங்கரையிலும் தோன்றியவைதான். இவை போலவே , சிந்து என்னும் ஆற்றங்கரையில் தோன்றிய நாகரிகமே சிந்து வெளி நாகரிகம்.
இந்த, 'நாகரிகம்' என்னும் சொல்லே கூட 'நகரம்' என்னும் சொல்லில் இருந்து உருவானது தான். மலை நிலத்தைக் காட்டிலும், காட்டு நிலத்தைக் காட்டிலும், கடல் நிலத்தைக் காட்டிலும், ஆறுகள் வழிந்தோடிய சமநிலைப் பகுதிகளில்தான் நகரங்கள் உருவாகி இருக்கின்றன. அதாவது, நிலையான குடியிருப்புகள், அதிகளவிலான ஊர்ப் பெருக்கம், பலவகைப்பட்ட தொழில் வாய்ப்புகள், பல்வேறு சமூகப் பிரிவினர்களின் கூட்டுறவு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்துகள், வணிகம், கலை இலக்கியப் பண்பாட்டு வெளிப்பாடுகள், பல்வேறு சமூகங்களுக்கு இடையே நடைபெற்ற கொள்வினை கொடுப்பினை, ஆடை, அணிகலன், உணவு போன்ற வாழ்வியல் புலப்பாடுகள் அனைத்துமே ஒரு திருந்திய நிலையை அடைந்திருப்பதையே நகர வாழ்க்கை என்றழைக்கப்படுகிறது. நகரங்கள் சார்ந்த இத்தகைய திருந்திய வாழ்க்கை முறையைத்தான் நாகரிகம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
நகரங்கள் சார்ந்து உருவான இத்தகைய நாகரிக வாழ்க்கை நம் நிலப்பரப்பிலும் செழித்து வளர்ந்திருக்கிறது. இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 4700 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நகர நாகரிகம் இருந்திருப்பதை அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நிலப்பரப்பில் நடைபெற்ற அகழாய்வுகள் எடுத்துரைக்கின்றன.
கட்டிட நுணுக்கங்கள் மிகுந்த பெருங்குளம், சுட்ட செங்கற்களால் நேர்த்தியாகக் கட்டப்பட்ட வீடுகள், மண்டபங்கள், விதைக் களஞ்சியம் போன்றவை நகர உருவாக்கம் சிறப்பாக நடைபெற்று இருப்பதை உணர்த்துகின்றன.மேலும், குளத்திலிருந்து அழுக்கு நீர் வெளியேறுவதற்கான தனிக் கால்வாய் அமைக்கப்பட்டு இருந்துள்ளன. வீட்டுக் கழிவுநீரானது மூடப்பட்ட சரிவான சிறு கால்வாய் வழியாகத் தெருவிலுள்ள பொதுக் கால்வாயில் இணைந்திருந்தன. இவையெல்லாம், பயன்பாட்டு அறிவியல் தொழில் நுட்பங்கள் அந்தக் காலத்திலேயே நடைமுறையில் இருந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.
சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் கடல்வழி வாணிகம் செய்து உலோகங்கள், விலை உயர்ந்த கற்கள், அணிகலன்கள் மற்றும் பல்வேறு பயன்பாட்டுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்திருக்கின்றனர். குழந்தைகள் விளையாடும் சுடுமண் பொம்மைகள், கிளிஞ்சல், பித்தளை, செம்பு, வெள்ளி, தங்கம் முதலியவற்றால் செய்யப்பட்ட பல விளையாட்டுப் பொருட்களும் அணிகலன்களும் சிந்து வெளியில் கண்டறியப்பட்டுள்ளன.
காளைகள், வண்டி, புறா, படகுகள் போன்ற சுடுமண் முத்திரைகளும் சிலைகளும் சிந்து வெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், பறவைகள், விலங்குகள், பெண் ஆண் உருவங்கள் போன்றவையும், வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் சிலையும் கண்டறியப்பட்டுள்ளன. ஆக, சிந்து வெளியில் நடைபெற்ற அகழாய்வுகள் சிறப்புடன் திகழ்ந்த ஒரு நகர நாகரிகத்தை வெளி உலகத்திற்குக் காட்டியிருக்கின்றன.
சிந்து வெளியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிட அமைப்பு, அவற்றின் நுணுக்கங்கள், சுடுமண் பொருட்கள், அணிகலன்கள், சிலைகள், எழுத்துப் பொறிப்புகள், தொழில், சிற்பம் போன்ற கலை வெளிப்பாடுகள் யாவுமே திருந்திய நகர நாகரிகத்தின் வெளிப்பாடுகளையே கொண்டிருக்கின்றன. இத்தகைய சிந்து வெளி நாகரிகம்தான் திராவிடர் நாகரிகம் எனப்படுகிற தமிழர் நாகரிகம் என அசுகோ பர்போலோ போன்ற ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிறது.
சிந்து என்னும் பெயர் குறித்துப் பாவாணர் கூறியிருக்கும் கருத்தும் நோக்கத்தக்கது. ஆரியர் வருமுன்னர் தமிழரே வடநாட்டிற் குடியேறியிருந்தமையாலும், குமரிமலை முழுகி அரபிக்கடல் தோன்றியபின், சிந்துவெளி வழியாகவே தமிழர்அல்லது திராவிடர் மேலை ஆசியாவிற்கும் அதன்பின் ஐரோப்பாவிற்கும் சென்றிருப்பராதலாலும், சிந்து என்னும் ஆற்றுப்பெயர் தமிழர் இட்ட தமிழ்ப் பெயராகவேய இருக்கலாம்.
சிந்துதல் = சிதறுதல். சிதறுதல் நீர்ப்பொருளையும் கட்டிப்பொருளையும் சிறுசிறு பகுதியாக வீழ்த்துதல். மழை துளித்துளியாகப் பெய்தலின், மழை பெய்தல் துளி சிதறுதல் என்று சொல்லப்படும்.
'தாழிருள் துமிய மின்னித் தண்ணென
வீழுறை யினிய சிதறி யூழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெருவான்' (குறுந்.120)
என்பது முகில் துளி சிதறுதலையும்,
'அருவி யன்ன பருவுறை சிதறி
யாறுநிறை பகரு நாடனை' (குறுந்.121)
என்பது ஆறு துளி சிதறுதலையும் குறித்தன. முகில் துளி சிந்தியே மக்கட்குக் கீழ்நீரும் மேல்நீரும் ஆற்றுநீரும் கிடைத்தலால், சிந்து என்னுஞ் சொற்கு நீர் (பிங்.), ஆறு (பிங்.)என்னும் இருபொருளும் ஏற்பட்டன.
இனி, சிந்துதல் என்னும் வினைச்சொற்குத் தெளித்தல் என்பதனொடு ஒழுகுதல் என்னும் பொருளுமிருத்தலால், சிந்து என்னுஞ் சொல் ஓர் ஆற்றின் பெயராவதற்கு முற்றும் பொருத்தமானதே. வடமொழியில் இச்சொற்கு மூலமில்லை. மானியர் உவில்லியம்சு தம் சமற்கிருத-ஆங்கில அகரமுதலியில், ஒருகால் சித் (sidh) என்பது மூலமாயிருக்கலாம் என்று ஐயுறவாகக் குறிப்பர். அச்சொற்குச் செல்லுதல் (togo) என்னும் பொருளே உள்ளது. மேலும், இருக்கு வேதத்தில் சிந்தாற்றிற்குச் சரசுவதியென்னும் பெயரே வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது என, தமிழர் வரலாறு நூலில் விளக்கப்படுத்துகிறார் பாவாணர். ஆக, சிந்து வெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் எனத் தெளியலாம்.
இந்திய ஒன்றியத்தின் வடமேற்குப் பகுதியில் சீரும் சிறப்புமாய் இருந்திருந்த சிந்து வெளி நாகரிகத்தைப் போலவே, அதனை ஒத்துப் போகும் ஒரு நகர நாகரிகம்தான் தற்போது தமிழ்நாட்டின் தென்பகுதியில் கண்டறியப்பட்டிருக்கிறது.
மதுரை என்னும் சொல்கூட வரலாற்றுத் தொன்மங்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்களைப் புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறும், மொழி உயிர்ப்பும் இன்னும் வலுவுடன் திகழும் தொல் நிலமாய் மதுரை மண் பரந்து கிடக்கிறது. மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் புதிய வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளன. அவ்வகையில், கீழடி எனும் சிற்றூரில் நடைபெற்று வந்த தொல்லியல் அகழாய்வுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் தடயங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்ட எல்கை, மதுரை நகரிலிருந்து அண்மைத் தொலைவிலிருக்கிறது கீழடி. மதுரையை அடுத்த சிலைமான், அதையடுத்த பசியாபுரம் சிற்றூர்களைத் தாண்டியே கீழடி எனும் சிற்றூர். இவ்வூரின் பள்ளிவாசலுக்கு எதிரே போகும் வண்டிப் பாதை, பரந்திருக்கும் தென்னந்தோப்புக்குள் நுழைகிறது. வண்டிப் பாதையின் தடம் மட்டுமல்லாமல் தோப்பின் வாய்க்கால் வரப்புகள் புழுதிகள் யாவற்றிலுமே கூட பழங்காலப் பானையோடு சில்லுகள் தான் முகம் காட்டிக் கிடக்கின்றன.
பசியாபுரம், கீழடி, கொந்தகை, பாட்டம் போன்ற சிற்றூர்களைச் சேர்ந்த 110 பேருக்குச் சொந்தமான 81 ஏக்கர் நிலப்பரப்பில் வைகையின் ஆற்றுப்படுகையில்தான் அத் தென்னந்தோப்பு அமைந்திருக்கிறது. தோப்பில் உள்ள மரங்களே நூறாண்டுக்கும் மேலான பழமையைச் சொல்லியபடி அசைந்து கொண்டிருகின்றன.
அரப்பா என்னும் சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதைந்த நகரம் என்று பொருள். அதே போல மண்ணுக்குக் கீழே - மண்ணுக்கு அடியிலே நகரமும் நாகரிகமும் வரலாறும் புதைந்து இருப்பதைத் தான் கீழடி என்னும் ஊரின் பெயரே உணர்த்தி நிற்கிறது.
பொய்யாக் குலக்கொடி எனப் புலவர்களால் புகழப்பட்ட வைகை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகள், தமிழர்களின் நகர நாகரிகத்தை உலகறியச் செய்துள்ளன எனச் சொல்வதில் வியப்பில்லை. மதுரை நகர உருவாக்கத்தையும் நாகரிக வாழ்வையும் உருவாக்கியதில் வைகை ஆற்றுக்கும் பெரும் பங்கு இருந்திருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் வருசநாடு மேகமலை தொடங்கி இராமநாதபுரம் அழகன்குளம் வரையிலும் பயணிக்கிற வைகை ஆற்றின் இரு கரையோரப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 293 தொல்லியல் அடையாளப் பகுதிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. கல்வெட்டுகள், கோயில்கள், நினைவுச் சின்னங்கள், புதைமேடுகள் எனப் பல்வேறு வகையான தொல்லியல் அடையாளங்கள் கண்டறியப்பட்டாலும், பழங்கால மக்களின் வாழ்விடம் எனும் பகுதியாகக் கண்டறியப்பட்டிருப்பது கீழடிதான்.
திருவிளையாடல் புராணமும், இறையனார் அகப்பொருள் உரையும், சில கல்வெட்டுக் குறிப்புகளும், மதுரை அருகே பெருமணலூர் என்னும் நகரம் பாண்டியர் தலைநகராக இருந்திருப்பதைப் பதிவு செய்திருக்கின்றன. தற்போது, கீழடி பள்ளிச் சந்தைப் புதூரிலும் மணலூர்க் கண்மாய்க் கரையிலும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் புதைந்து போன மணலூர் நகரத்தை அடையாளப்படுத்தும்படியாகவும் அமைந்திருக்கின்றன.
கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய சங்க கால மக்களின் தொல்லியல் எச்சங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. பழந்தமிழ் இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்கள் குறிப்பிடுகிற அணிமணிகள் ஏராளமானவை இங்கு கிடைத்திருப்பதாகத் தொல்லியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
முத்து மணிகள், பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லுகள், தாயக் கட்டைகள், சதுரங்கக் காய்கள், குழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் போன்றவை கிடைத்துள்ளதையும் காண முடிகிறது.
சங்க கால இலக்கியமான பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறை கேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதிகளவில் செங்கல் வீடுகளும், வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டு இருந்ததையும் காண முடிகிறது. வீடுகள், வீடுகள் தோறும் குளியலறைகள், கழிவுநீர்க் குழாய்கள், தண்ணீர்த் தொட்டிகள் போன்றவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இப்போதைய நகர வளர்ச்சியின் நாகரிக அடையாளங்கள் எனச் சொல்லப்படுகின்றவை எல்லாம், கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழந்தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்களில் செழித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தோப்பில் உள்ள எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல் ஆங்காங்கே சதுரக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட எல்லாச் சதுரக் குழிகளிலும் பல்வேறு வகையிலான தொல்லியல் தடயங்கள் புதைந்திருப்பது வெளித் தெரிகின்றன.
கீழடியில் சாம்பல் நிறத்திலான மண்ணுக்கடியில் பெருநகரமே புதைந்திருப்பதற்கான தடயங்கள் வெளிப்பட்டுள்ளன. சுடுமண் கிணற்று உறைகள், குழாய்கள், வடிகால்கள், வாய்க்கால்கள், மூடிய நிலையிலான சாக்கடை வழிப்பாதைகள், குளியலறை, கழிவுக் குழிகள், சிற்றறைகள், தாழிகள், மண்பாண்டங்கள், இரும்பு உலைக் குழிகள், அணிமணிகள், காசுகள், கருவிகள் எனப் புதையுண்டிருந்த பழங்காலத் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றுத் தடயங்கள் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டுள்ளன. பண்பட்ட வாழ்வும் வரலாறும் வாழ்நிலமும் மண்ணில் புதைந்து கிடப்பதைக் காணுகையில் பெரு வியப்பும் பெருமிதமும் பெருஞ்சோகமும் ஒன்று கூடிக் கவ்விக் கொள்கிறது.
கீழடியில் கண்டறியப்பட்டிருக்கும் நகரம், மதுரையின் தலைநகராக மட்டும் இருந்திருக்க வாய்ப்பில்லை. வெளிநாட்டு வணிகத் தொடர்புக்கான பெரு நகரமாகவும் விளங்கி இருப்பதையும் உணர முடியும். சூது பவளமணிகள், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மண்கல ஓடுகள் இங்கு கிடைத்திருப்பதன் மூலம், பிற நாடுகளுடன் வணிகத்தொடர்பு இருந்திருப்பதை உறுதி செய்ய முடிகிறது.
மேலும், கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பானை ஓடுகளில் பழங்காலத் தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட பலவகைப் பெயர்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஆதன், இயனன், திசன், மடைச்சி போன்ற பெயர்கள் பொறித்த பானையோடுகள் அக்காலத்தியக் கல்வி மற்றும் எழுத்தியல் வளர்ச்சியைச் சொல்லி நிற்கின்றன.
புதைந்து போன அந் நகரத்தில் நெசவுத் தொழில் இருந்தமையை அங்கு கிடைத்திருக்கும் தக்களி என்னும் நூற்புக் கருவி மூலம் அறிய முடிகிறது. அதேபோல சிறு சிறு நீர்த்தொட்டிகள், கழிவுநீர்க் கூம்புக் குழாய்கள், மண்பாண்டக் கலன்கள் போன்றவை அங்கு சாயப்பட்டறை இருந்திருப்பதையும் கூறுகின்றன.
கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பானையோடுகளில் பொறிக்கப்பட்ட பெரும்பாலான பெயர்கள் ஆண்பால் பெயர்களைத்தான் குறிக்கின்றன. ஆனால், இதிலிருந்து விலகிய ஒரு பெயர் மடைச்சி என்பது. இது ஒரு பெண்ணின் பெயரைக் குறித்ததாகவும் இருக்கிறது. அதிலும் எளிய குடிமக்களின் பெண் பெயராகவும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக வேளாண்மை உழவுக்குடிப் பெண்ணின் பெயராகவும் இருக்கிறது.
மடைச்சி என்னும் பெயர் வேளாண்மையோடு தொடர்பு கொண்ட ஒரு பெண்ணின் பெயர். வேளாண்மைக்கு மிக முக்கியமான ஆதாரம் நீர்தான். இந்த நீர் ஆதாரங்கள்தான் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஊரணிகள், ஆறுகள் போன்றவை. இத்தகைய நீர் ஆதார வளங்களை முறைப்படுத்தியும் பாதுகாத்தும் புனரமைத்தும் வந்தவர்கள்தான் மடையர்கள். நீர் ஆதாரங்களில் உள்ள மடைகளின் வழியே நீர் நிர்வாகத்தைப் புரிகின்றவர்கள் எனும் அடிப்படையில், மடையர்கள் என்று அழைக்கப்பட்டவர்களே நீர் மேலாண்மையைச் செய்து வந்தவர்கள் ஆவார்கள். இத்தகைய நீர் மேலாண்மை எனப் பெறும் மடைத் தொழில் மரபினரையே மடையர்கள் என்று சமூகம் குறித்து வைத்திருக்கிறது. அத்தகைய மடையர் என்பதன் பெண்பால் பெயராகத்தான் இந்த மடைச்சி எனும் பெயர் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழங்காலம் முதற்கொண்டு இக்காலம் வரையிலும் நீர் மேலாண்மை செய்து வருகின்ற வேளாண் குடிகள் மடைச்சி, மடையர், மடையளவக்கார், மடை வேலைக்காரர், நீராணிக்கர், நீராணியம் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். மேலும், அகழாய்வு நடைபெற்று வரும் நிலப்பகுதியை அவ்வட்டாரப் பெரியவர்கள் பள்ளுச் சந்தைத் திடல் என்றே அழைக்கின்றனர். பள்ளு என்பதும் வேளாண் குடிகளைக் குறிக்கும் சொல்லாகவே அமைந்திருக்கிறது . அகழாய்வில் புதைபொருட்கள் நிறையக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே, அவ்வட்டாரப் பெரியவர்களிடமும் வாய்மொழி வழக்காற்றுத் தரவுகள் நிரம்பிக் கிடக்கின்றன.
பள்ளுச் சந்தைத் திடல் இருக்கும் இப்பகுதியில் மிகப் பழமையான ஊர் ஒன்று இருந்ததாகவும், பழங்காலமாக மக்கள் வாழ்ந்து வந்தபோது பகாசுரன் என்பவரின் இடையூறுகள் இருந்ததினால் குந்திதேவியின் வழிகாட்டல் படி பக்கத்து ஊருக்குப் புலம் பெயர்ந்து குடியேறியதாகவும், குந்தவை தேவியின் நினைவாகவே அவ்வூர் அழைக்கப்பட்டு இப்போது கொந்தகை என மருவி அழைக்கப்படுவதாகவும், கொந்தகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏகத்துக்கும் தாழிப் பானைகள் புதைந்து கிடப்பதாகவும் வாய்மொழித் தரவை வழங்கினார் அப்பகுதிப் பெரியவர் திரு ஆண்டி அவர்கள்.
அகழாய்வில் கண்டறியப்பட்ட தொல்லியல் தரவுகளின்படி, முற்காலப் பாண்டியர்களின் தலைநகரான மணலூர் எனும் நகரமே கீழடியில் புதைந்திருப்பதாகக் கருத முடிகிறது. ஊர் என்பது மருத நிலத்துப் பேரூரைக் குறிக்கும் சொல்லாகும். மணலூரும் மருத நிலத்துப் பேரூராய் இருந்திருக்க வாய்ப்புண்டு. கீழடியைச் சுற்றியுள்ள பசியாபுரம், கொந்தகை, பாட்டம், விரகனூர், சிலைமான், அய்ராவதநல்லூர் போன்ற ஊர்களுக்கும் கீழடிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பிருக்க அதிகம் வாய்ப்புண்டு. கீழடியைச் சுற்றியுள்ள பகுதி வேளாண் குடிகளிடம் இன்னும் நிலவிக் கொண்டிருக்கிற வாய்மொழி வழக்காறுகள், வழிபாட்டு மற்றும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், பண்பாட்டு வெளிப்பாடுகள், தொன்ம அடையாளங்கள் போன்றவற்றையும் கீழடி அகழாய்வுகளோடு ஒப்பு நோக்கியும் இணைவித்தும் பார்க்கும் போதுதான் வரலாறு முழுமை பெறுவதற்கு வாய்ப்புண்டு.
கீழடி போன்றே வெகு காலத்திற்கு முன்பாக ஆதிச்சநல்லூரிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கீழடி அகழாய்வில், அந்நிலத்தில் வாழ்ந்த மடைச்சிக்கும், ஆதிச்ச நல்லூர் அகழாய்வில், அங்கு விளைந்திருந்த நெற்கதிருக்கும், இரு நிலத்திலும் வாழ்ந்த வேளாண்மை உழவுக் குடிகளுக்கும் ஏதோ ஒருவகையில் தொடர்பு உண்டு. ஏதோ ஒரு காரணத்தால் மூன்றுமே வீழ்ச்சியை அல்லது வீழ்த்தப்பட்டதைக் குறிக்கும் குறியீடுகளாகவே இப்போது இருந்துகொண்டிருக்கின்றன. அதாவது, புதிய தடயங்கள் நிறைந்த ஆதிச்ச நல்லூர் நிலத்து அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவேயில்லை. அதேபோல, கீழடி அகழாய்வு அறிக்கையும் அது போல் முடங்கிப் போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், கீழடி அகழாய்வை இன்னும் தொடராமல், பெயரளவுக்கு மூன்றாம் கட்ட அகழாய்வோடு நிறுத்திக் கொண்டது இந்தியத் தொல்லியல் துறை.
எனினும், இதுவரையிலான அகழாய்வின் வழியாக, ஒரு நகரத்தில் புழங்கி இருக்கும் ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடுகள், புதைந்து போன பழங்காலத்திய நகரத்திலும் சிறப்புற்றுத் திகழ்ந்திருப்பதைத் தான் கீழடி நாகரிகம் நமக்கு உணர்த்திக் காட்டுகிறது.
ஒரு காலம்
ஒரு வாழ்க்கை
ஒரு நகரம்
ஒரு நாகரிகம்
ஓர் இனம்
ஒரு நிலத்துக்குக்
கீழே
அடியிலே
புதைந்து இருப்பதனால் தான் கீழடி என்னும் பெயர் அந்நிலத்திற்கு வழங்கி இருக்கலாம்.
கீழடி என்னும் ஊர்ப்பெயர்ச் சொல்தான் அதன் வரலாற்றுத் தடயம் வெளித்தெரியக் காரணமாய் இருந்திருக்கிறது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே தான்.
வரலாறு மீண்டிருப்பதைப் போலவே, வரலாறு எழுந்து நிற்கவும் செய்யும். அவ்வரலாற்றை நேர் செய்வது தமிழர் கடமை.