ஞாயிறு, 12 மே, 2019

ஆரிய மரபின் பிள்ளையார் சுழி வேறு; தமிழ் மரபின் பிள்ளையார் சுழி வேறு : மகாராசன்





பிள்ளையார் சுழியாகக் கருதப்படும் ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள  உயிர்க் குறில் எழுத்தாகிய ‘உ’ எனும் எழுத்துக் குறியை அடையாளப்படுத்துவதாகப் பெரும்பாலோர் கருதுவர். ஆரிய / வைதீகச் சமய மரபில்  அடையாளப்படுத்தப்படும் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எனும் எழுத்தைக் குறிப்பதாகக் கொள்ளமுடியாது. ஏனெனில், ஆரிய / வைதீகச் சமயத் தொன்மத்தில்  சுட்டப்படும் பிள்ளையாரின் எழுத்துச் செயல்பாடு வடமொழி எனும் சமக்கிருத மொழியோடு தொடர்புடையது. ஆரிய / வைதீகச் சமய மரபின் வழிபாட்டு மொழியாகக் கருதப்படுவதும் சமக்கிருத மொழிதான். சமக்கிருத மொழியிலும் ‘உ’ என்கிற ஒலி / எழுத்து உண்டு. ஆகவே,  பிள்ளையார் சுழி பற்றிய ஆரிய / வைதீகச் சமயத் தொன்மக் கதையாடலானது சமக்கிருத எழுத்துகளில் உள்ள ‘உ’ வரிவடிவம் பற்றியதாகவே இருந்திருக்க வேண்டும்.

சமக்கிருத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்திய எழுத்து வரிவடிவத்திற்குக் கிரந்தம் என்று பெயர். அத்தகையச் சமக்கிருதக் கிரந்த எழுத்துகளில் உள்ள ‘உ’ என்னும் எழுத்துக் குறியானது, தமிழ் நெடுங்கணக்கில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியைப் போலவே ‘உ’ என்ற வரி வடிவத்தையே கொண்டிருக்கிறது. ஆக, பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படும் எழுத்துத் தொன்மம் சமக்கிருதக் கிரந்தத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்துக் குறியையே அடையாளப்படுத்துகிறது; அப் பிள்ளையார் சுழியானது, தமிழின் ‘உ’ எழுத்தைக் குறிப்பது அல்ல எனவும் கருதலாம். மேலும், சமக்கிருத மற்றும் ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டு அடையாளத்தையே கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் பிள்ளையார் சுழி கொண்டிருக்கிறது எனலாம்.

ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் கிரந்த எழுத்து வரிவடிவத்தில் உள்ள ‘உ’ எனும் எழுத்தைப் பிள்ளையார் சுழியாகக் குறிக்கப்படுவதைப் போலவே, தமிழில் உள்ள ‘உ’ எனும் எழுத்தையும் பிள்ளையார் சுழி என்றே குறிக்கும் வழக்கமும் தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் இருக்கின்றது. ஆயினும், ஆரிய / வைதீகச் சமயச் சார்பான எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு; தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் உள்ள பிள்ளையார் சுழி என்பது வேறு ஆகும். ஏனெனில், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் இடம்பெறுகிற பிள்ளையாரும் அதைக்குறித்த சமயக் கதையாடல்களும், தமிழர் வழிபாட்டு மரபில் இடம்பெறும் பிள்ளையாரும் அதைக்குறித்த வழக்காறுகளும் வேறு வேறான நிலம், இனம், மொழி, பண்பாட்டு மரபுப் பின்புலங்களைக் கொண்டிருக்கின்றன.

பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் வழிபடு கடவுளாகக் கருதப்படுவதைப் போலவே, தமிழ்நாட்டுச் சிற்றூர்ப்புறங்களில் நிகழ்த்தப்படும் வழிபாட்டுச் சடங்குகளில் வழிபடு உருவமாகப் பிள்ளையார் இடம்பெறுவதைக் காண முடியும். பொதுவாக, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளிலிருந்து வேறுபட்டும் மாறுபட்டும் முரண்பட்டும் தனித்ததொரு பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டிருப்பதே தமிழர் நாட்டுப்புறச் சமய மரபாகும். அவ்வகையில், தமிழர் நாட்டுப்புறச் சமய மரபில் காணலாகும் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறுகிற பிள்ளையார், ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபுகளில் குறிக்கப்படும் பிள்ளையார் என்பதிலிருந்து வேறுபட்டதாகும்.

அதாவது, ஆரிய / வைதீகச் சமய வழிபாட்டு மரபில் பிள்ளையாருக்கு மனிதரும் விலங்கும் இணைந்த பேருருவ அடையாளம் வழங்கப்பட்டிருக்கிறது. யானை உருவும் எலி உருவும் பிள்ளையார் என்பதோடு தொடர்புபடுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய காதுகள், மனிதப் புருவங்களும் கண்களுடன்கூடிய மிகப்பெரிய வயிறு, இரண்டுக்கும் மேற்பட்ட கைகள் எனப் பிள்ளையாருக்கான அடையாளமாக ஆரிய / வைதீகச் சமய மரபு முன்வைத்திருக்கிறது. ஆனால், தமிழக  நாட்டுப்புறத் தமிழர் வழிபாட்டுச் சடங்கில் இடம்பெறும் பிள்ளையார், மனிதர் / விலங்கு என எவ்வித உருவமும் கொண்டிருக்காமல் அங்க அவயங்கள் எதுவுமின்றிச் சிற்றுரு வடிவில் உருவமற்றுக் காணப்படுகிறது.

தமிழக  நாட்டுப்புறத் தமிழர்கள் எந்தவொரு நல்ல செயல்களையும் தொடங்கும்போது, தமது வழிபாட்டுச் சடங்கில் மஞ்சளையோ சந்தனத்தையோ அரிசி மாவையோ களிமண்ணையோ மாட்டுச் சாணியவோ உள்ளங்கையில் பிடித்து வைத்து, அதன்மேல் அருகம் புல்லைச் சொறுகி வைப்பர். இதைப் பிள்ளையார் பிடித்தல் எனக் கூறுவது தமிழர் வழக்காகும். பயிர் நடவுத் தொடக்கத்திலும், பயிர் அறுவடை நிறைவிலும் பிடிப் பிள்ளையாரை வழிபாட்டுப் பொருளாக வைப்பது உண்டு. பெரும்பாலும், தமிழர்களின் நிலம் சார்ந்த உற்பத்திச் செயல்பாடுகளின் தொடக்கத்திலும் அவற்றின் நிறைவிலும் பிள்ளையார் பிடித்து வழிபடும் சடங்கானது, எளிய வழிபாட்டுச் சடங்காக இன்றளவிலும் பெருவழக்காய் இருந்து கொண்டிருக்கிறது.

அரிசி, மஞ்சள், மண், சந்தனம், சாணம், புல் போன்ற பொருட்கள் எளிய மக்கள் வாழ்வியலின் புழங்கு பொருட்களோடு தொடர்புடையவை. இவை வளமை சார்ந்த பொருட்களாகக் கருதப்படுகின்றவை. இந்தப் பொருட்களைக் கொண்டு பிடிக்கப்படும் பிள்ளையார், வளமை என்பதோடு மட்டுமல்லாமல் இளமை என்பதோடும் தொடர்புடையதாய் இருக்கின்றது.
மாற்ற அரும் சிறப்பின் மரபுஇயல் கிளப்பின்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று
ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே
என, இளமையைக் குறிக்கும் பெயர்களை வரிசைப்படுத்துகிறது தொல்காப்பியம்.

தமிழில் ‘பிள்ளை’ என்ற சொல், தென்னம் பிள்ளை என  இளம் தாவரங்களையும்; அணில் பிள்ளை, கீரிப் பிள்ளை என விலங்குகளின் இளங்குட்டிகளையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவது உண்டு. அதோடு, ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என மனித இனத்தின் இளங்குழந்தைப் பருவத்தைக் குறிக்கும் சொல்லாகவும் வழக்கத்தில் இருக்கின்றது.  நெல் நாற்று முடியைப் பிள்ளை முடி எனவும் உழவுத்தொழில் மரபினர் குறிப்பர். நெல் நடவுத் தொடக்கத்தில் பிள்ளை முடியை வணங்கிக் குலவையொலி எழுப்பிய பிறகு, பிள்ளை முடியிலிருக்கும் நெல் நாற்றையே தலை நாற்றாக - முதல் நாற்றாக நடவுப் பெண்கள் நடுகை இடுவது உழவுத்தொழில் மரபாக இருந்து கொண்டிருக்கிறது.

சிற்றூர்ப்புறங்களில் தமிழர்களின் எளிய வழிபாட்டு மரபில் இடம்பெற்றுள்ள பிள்ளையார் என்பது, வளமையோடும் இளமையோடும் தொடர்புடைய குறியீட்டு அடையாளமாகவே காட்சி தருவது கவனிக்கத்தக்கது. ஒரு செயலின் தொடக்கம் இளமை நிலையில் இருப்பது. அச்செயலானது நல்முறையில் வளர்ந்து வளம்பெற வேண்டும் என்பதைக் குறியீட்டு நிலையில் உணர்த்துவதன் வடிவமாகப் பிள்ளையாரைக் கருத முடியும்.

மேலும், மனிதர்களின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெறக்கூடியவை உலகமெனும் நிலத்தில்தான். இந்த நிலத்தில்தான் மனித இனம், விலங்கினம், பயிரினம் ஆகியன உயிர் வாழ்கின்றன. உயிரினங்களின் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாகவும் வாழ்வாதாரத் தேவையாகவும் அமைந்திருப்பது நிலம்தான். அதனால்தான், நிலமும் பொழுதும் முதல் பொருள் என்கிற வகையில்
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே
என்கிறது தொல்காப்பியம்.

உயிரினங்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அடிப்படையாகவும் முதல் பொருளாகவும் அமைந்திருக்கிற நிலம்தான் வளமைப் பொருளாக இருக்கின்றது. இவ் வளமைப் பொருளின்மீது நிகழ்கிற செயல்பாட்டுத் தொடக்கம் யாவும் இளமைதான். அவ்வகையில், நிலத்தையும் செயலின் தொடக்கத்தையும் வணங்குதல் பொருட்டே பிடிப் பிள்ளையார் உருவகப்படுத்தப்படுகிறது. அதாவது, அங்க அவயங்கள் எதுவுமின்றி உருவமற்றுப் பிடிக்கப்படும் பிள்ளையார் என்பது நிலம் என்னும் உருவத்தையே குறிக்கிறது. அதன்மேல் சொறுகப்படும் அருகம்புல் நிலத்தின்மேல் வாழ்கிற உயிரினங்களின் வளமையைக் குறிக்கிறது.

இந்நிலையில், சிற்றூர் நாட்டுப்புறத்து உழவுப் பாடலொன்று பிள்ளையார் பிறந்த கதையைப் பற்றிக் கூறுவது நோக்கத்தக்கது.
வடக்கே தெற்கே ஒட்டி
வலதுபுறம் மூரிவச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணிப் பிள்ளையாருக்கு
என்ன என்ன ஒப்பதமாம்!

முசிறி உழவிலே
முளைச்சாராம் பிள்ளையாரு.

ஒடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையாருக்கு,
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையாருக்கு,
இத்தனையும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணிப் பிள்ளையாருக்கு!
என, உழவுத்தொழில் மரபினரிடம் வழங்கி வருகிற இந்நாட்டுப்புறப் பாடலானது, உழவர்கள் உழுத புழுதி மண்ணிலிருந்து தோன்றியதாகப் பிள்ளையாரைக் குறிப்பிடுகிறது. நிலத்தோடும் மண்ணோடும் புழுதியோடும்தான் பிள்ளையார் தொடர்புபடுத்தப்படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

நிலமெனும் உலகமும், நிலத்துவாழ் உயிரினங்களும் வளமையோடு தழைத்திட வேண்டுகிற அல்லது வழிபடுகிற வகையில்தான் பிடிப் பிள்ளையார் ஒரு குறியீட்டு அடையாளமாக இடம்பெற்றிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நிலம் எனும் உலகை வணங்குவதன் மரபு அடையாளமாகவே தமிழர் வழிபாட்டுச் சடங்கில் பிள்ளையார் இடம்பெற்றிருக்கிறது எனலாம். அவ்வகையில்தான், எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கு முன்பாகப் பிள்ளையாரை வழிபட்டுத் தொடங்குதல் தமிழர் வழிபாட்டுச் சடங்கு மரபாகப் பின்பற்றப்படுகிறது. பிடிப்பிள்ளையார் என்பதைப் பிடி மண் எடுத்தல் என்பதோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வாய்ப்புண்டு.

தாம் வாழ்ந்த இடத்திலுள்ள தெய்வத்தின் பீடத்திலிருந்து / வாழ்ந்த நிலத்திலிருந்து / வாழ்ந்த ஊரிலிருந்து கொஞ்சம் கைப்பிடியளவு மண்ணை எடுத்துத் தாம் வாழப்போகும் இடத்திற்குக் கொண்டு செல்லுதலே பிடி மண் எடுத்தலாகும். இங்கு மண் என்பது வெறும் மண்ணை மட்டும் குறிப்பதல்ல. மாறாக, அந்நிலத்தில் / அம்மண்ணில் வாழ்ந்த முந்தைய தலைமுறைகளின் வாழ்வையும், இப்போதும் அதே நிலத்தில் / அதே மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிற தலைமுறையின் வாழ்வையும்,  வரும் காலங்களில் இதே நிலத்தில் / இதே மண்ணில் வாழப்போகும் தலைமுறைகளின் வாழ்வையும் வளப்படுத்திய / வளப்படுத்துகிற / வளப்படுத்தப்போகிற ஆற்றல் நிரம்பிய வளமையின் குறியீடாகவே உணரப்படுகிறது.

அவ்வகையில், வாழ்நிலத்துப் பிடி மண்ணைத் தெய்வம் உறைந்திருக்கும் பொருளாகப் பார்க்கப்படுவதில்லை. அந்த மண்ணேதான் தெய்வம் என்பதாகக் கருதப்படுகிறது. அதாவது, மனிதத் தலைமுறையினர் மட்டுமல்லாது விலங்குகள், மரம், செடி கொடி உள்ளிட்ட உணவுப் பயிர்கள் போன்ற அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் அடிப்படையான மண்ணை / நிலத்தை / உலகத்தை வளமையின் குறியீடாகக் குறிப்பதே பிடி மண் என்பதுமாகும். இத்தகையப் பிடி மண்ணும் பிடிப் பிள்ளையாரும் உலகத்தை / நிலத்தை / மண்ணையே குறித்து நிற்கின்றன.  ஆக, தமிழர் பண்பாட்டு மரபில் பிள்ளையார் என்பதும் உலகம் என்பதைக் குறிக்கும் குறீயீடாகவே கருதலாம்.

தமிழர்கள் தமது எழுத்துச் செயல்பாடுகளைப் பிள்ளையார் எனும் உலகத்தை வழிபட்டே தொடங்கி இருப்பதின் வெளிப்பாடாகத்தான்,  எழுதத் தொடங்குவதற்கு முன்பு ‘உ’ எனும் தமிழ் எழுத்துக் குறியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்வகையில், ‘உ’ எனும் எழுத்துக் குறியும் பிள்ளையார் சுழி என்றே தமிழ் எழுத்துப் பண்பாட்டு மரபில் வழங்கி வருகின்றது.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005

புதன், 8 மே, 2019

ஆரிய வைதீகச் சமய மரபும் பிள்ளையாரும் : மகாராசன்




உ’ எனும் எழுத்துக் குறியைப் பிள்ளையார் எனும் கடவுளோடு தொடர்புபடுத்தியும்,  பிள்ளையாரை ஆரிய / வைதீகச் சமயக் கடவுளராகக் முன்வைப்பதுமான சமய உரையாடல்கள் ஒருபுறம் இருப்பினும், தமிழ்ச் சமூக வரலாற்றிலும் ஆரிய / வைதீகச் சமய மரபிலும் பிள்ளையாருக்கான இடம், அதன் தோற்றப் பின்புலம், அதன் பரவலாக்கம் போன்ற சமூக மற்றும் சமயப் பண்பாட்டு  நோக்கிலான கருத்தாடல்களும் ஆய்வுகளும் வேறுவகையிலான செய்திகளை முன்வைக்கின்றன. அவ்வகையில், பிள்ளையாரைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’ எனும் நூல், பிள்ளையாரைப் பற்றிய சமயப் பண்பாட்டுத் தரவுகளைத் தந்திருக்கிறது.

ஆரிய / வைதீகச் சமய அடையாளமாகப் பிள்ளையார் கருதப்பட்டாலும், அச்சமய மரபில் குறிக்கப்படுகிற மற்ற கடவுள்களைப் போலான இடம் வழங்கப்படவில்லை. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்து சமயம் என்று அழைக்கப்பெறும் பிராமணிய சமயத்தில் இரண்டு வகையான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. பிரம்மன், விஷ்ணு, சிவன், முருகன் என மேல்நிலையில் உள்ள தெய்வங்கள் ஒருபுறமும், பரிவார தெய்வங்கள் என்ற பெயரில் அனுமன், சண்டேஸ்வரர் போன்ற தெய்வங்களும் வழிபாட்டில் உள்ளன. இவை இரண்டிலும் இடம்பெறாமலும், பிராமணிய சமயத்திற்கு வெளியிலுள்ள நாட்டார் தெய்வங்கள் வரிசையில் இடம்பெறாமலும், தனக்கெனத் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள தெய்வம் பிள்ளையார் ஆகும் என்கிறார்.

வைதீகச் சமயப் பெருங்கோயில்களில் மட்டுமின்றி, இவருக்கெனத் தனியாகவும் கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருக்கள், கூரையின்றி வெட்டவெளியிலும்கூட பிள்ளையார் இடம் பெற்றிருக்கிறார். இத்தகைய வழிபாட்டு மரபில் உள்ள பிள்ளையார் எனும் விநாயகரின் உருவம் மனிதன், விலங்கு, தேவர், பூதம் என்கிற நான்கின் இணைப்பாகக் காட்சி தருவதாகக் குறிக்கப்படுகிறது.

யானைத் தலையும் காதுகளும் தும்பிக்கையும் விலங்கு வடிவமாகவும், பேழை போன்ற வயிறும் குறுகிய கால்களும் பூதவடிவமாகவும், புருவமும் கண்களும் மனித வடிவமாகவும், இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் தேவ வடிவமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக, யானைத் தலையுடன் கூடிய இவரது உருவம் மனித விலங்கு உருவ இணைப்பாக அமைந்துள்ளது. இத்தகையப் பிள்ளையாருக்கு வடமொழிச் சுலோகங்கள் கூறி ஆகம முறையிலும் வழிபாடுகள் நிகழ்த்தப்படுவதால், அதன் அடிப்படையில் இவர் உயர்நிலைத் தெய்வமாகவே காட்சியளிக்கிறார். எனினும்,  வேதங்களிலும் பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம் பெறவில்லை என்று அமிதா தாப்பன் குறிப்பிடுகிறார். குப்தர் காலத்திற்கு முந்திய சிற்பங்களில் பிள்ளையார் வடிவம் இல்லை என்று கூறும் ஆனந்தகுமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகிறார் .

பிள்ளையாரின் தோற்றம் குறித்துப் பல்வேறு கதைகள் வழக்கில் உள்ளன. பிள்ளையாரின் தோற்றம் குறித்த புராணக் கதைகளில் அவர் ஏதாவது ஒரு வகையில் யானையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். யானை முகமும் மனித உடலும் இணைந்த பிரமாண்டமான உருவத்தை உடைய பிள்ளையார், எலி ஒன்றின் மீது வீற்றிருக்கிறார். இந்நிலையில், யானையுடன் பிள்ளையார் தொடர்புபடுத்துவதற்கான காரணத்தையும், எலியை வாகனமாகக் கொண்டிருப்பதற்கான காரணத்தையும் ஆ.சிவசுப்பிரமணியன் தமது நூலில் விளக்கப்படுத்தி இருக்கிறார். அது வருமாறு:

பிள்ளையார் வழிபாட்டின் தோற்றம் குறித்து அறிந்துகொள்ள கணபதி என்ற அவரது பெயர் உணர்த்தும் செய்தியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். கணபதி என்ற சொல்லின் பொருள் கணங்களின் கடவுள் என்பதாகும். கணா + பதி என்ற சொல்லைப் பிரித்து கணங்களின் தலைவன் என்று பொருள் கொள்வர். கணபதியின் மற்றொரு பெயரான கணேசன் என்ற சொல்லைக் கணா + ஈசர் என்று பிரித்து கணங்களின் கடவுள் என்று பொருள் கொள்வர்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான மந்திரர், கணநாயகா என்று பிள்ளையாரைக் குறிப்பிடுகிறார். கணத்தின் தலைவன் என்பது இச்சொல்லின் பொருள். ரிக் வேதத்தில் இடம்பெறும் கணபதி என்ற சொல், ஒரு குழு அல்லது படை அல்லது சபையின் தலைவனைக் குறிப்பதாக மோனியர் வில்லியம்ஸ் கருதுகிறார். கணபதி என்ற சொல்லுக்குக் கணங்களைப் பாதுகாப்பவர் என்று அந்நூலின் உரையாசிரியரான மஹிதார்  குறிப்பிடுகிறார்.

சில மக்கள் குழுவினர், குறிப்பாகப் பழங்குடிகள் தங்களை விலங்கு, தாவரம் போன்ற இயற்கைப் பொருட்களிடமிருந்தோ, புராண மூதாதையர்களிடம் இருந்தோ தோன்றியதாகக் கருதினர். இவ்வாறு தாம் கருதும் தாவரம் அல்லது விலங்கைத் தமது குலக்குறியாகக் கொண்டனர். இவ்வாறு விலங்குகள் தாவரங்கள் இயற்கை பொருட்கள் போன்றவற்றில் இருந்து குறிப்பிட்ட குலம் தோன்றியதாக நம்பியதன் அடிப்படையில் அதன் தோற்றத்திற்குக் காரணமான பொருள் ஒரு குலத்தின் குலக் குறியாக அமைகிறது. இவ்வாறு குலக்குறியானது குலத்தின் சமூக பண்பாட்டு வாழ்வில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

இனி, யானை எலி ஆகியன குலக்குறியாக விளங்கியதைக் காண்போம். மதங்கர்கள் என்ற வட இந்தியப் பழங்குடிகளின் குலக்குறி யானையாகும். மாதங்கி என்ற சொல் யானையைக் குறிப்பதாகும். குலக் குறியான யானையின் பெயராலேயே இக்குழு மதங்கர்கள் என்று பெயர் பெற்றது. வேத காலம் முடிவதற்கு முன்னரே இக்குழுவினர் ஒரு சாதியாக உருப்பெற்று மௌரியப் பேரரசுக்கு முன்னதாகவே அரசு அதிகாரத்தை நிலை நிறுத்தி இருந்தனர்.

லலிதா விஸ்தாரகா என்ற புத்த மத நூல், பசனாதி என்ற கோசல மன்னனை யானையின் விந்தில் இருந்து தோன்றியவனாகக் குறிப்பிடுகிறது.  இக்கருத்து குலம், குலக்குறியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டிய ஒன்று. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி வாழ்வின் எச்சமாகவே இதைக் கொள்ளவேண்டும்.

இதுபோன்று மூசிகர் என்ற பிரிவு தென்னிந்தியாவில் இருந்துள்ளது. இவர்களை வனவாசிகள் உடன் இணைத்து மகாபாரதம் குறிப்பிடுகிறது. மூஷிகம் என்ற வடமொழிச் சொல் எலியைக் குறிப்பிடுகிறது. இந்தியப் பழங்குடிகள் பலருக்கு எலி குலக்குறியாக உள்ளது. ஒரு குலக் குழுவினர் மற்றொரு குழுவினருடன் போரிட்டு வென்றால், தோல்வியடைந்த குலத்தின் குலக்குறி அழிக்கப்படும் அல்லது வெற்றி பெற்றதுடன் இணைக்கப்படும். ஆளும் குலமானது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தும்போது, பிற குலங்களின் குலக்குறிக் கடவுளர்களை இணைத்துக்கொண்டு தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் என்று தாம்சன் குறிப்பிடுவார். இக்கருத்தின் பின்புலத்தில் பின்வரும் முடிவுக்கு நாம் வரலாம்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலம் ஒன்று, எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றபோது, அவ்வெற்றியின் அடையாளமாக அக் குலக்குறியைத் தன் குலக் கடவுளின் வாகனமாக மாற்றியுள்ளது. யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடி ஒன்று, விரிவடைந்து அரசு என்ற அமைப்பை உருவாக்கியபோது அதன் குலக்குறியான  யானை கடவுளாக மாற்றமடைந்தது.  ஆயினும், பிராமணிய சமயம் இக்கடவுளை உடனடியாகத் தன்னுள் இணைத்துக் கொள்ளவில்லை. தமது தெய்வங்களுக்கு வெளியிலேயே அதை நிறுத்தி வைத்தது. நான்காவது வருணமான சூத்திரர்களின் கடவுளாகவே அவர் மதிக்கப்பட்டார்.

பல்வேறு பழங்குடி அமைப்புகளை அழித்துப் பேரரசு உருவாகும்போது, தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகத் தன் சமய வட்டத்திற்குள் பழங்குடிகளின் தெய்வங்களையும் இணைத்துக் கொள்ளும். அந்தவகையில், குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணிய சமயம், சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டது. இதன் விளைவாக விக்னங்களை உருவாக்கும் விநாயகர் விக்னங்களைப் போக்குபவராக மாறினார். பழங்குடிகளின் குலக்குறி என்ற தொடக்ககால அடையாளம் மறைந்து பிராமணிய சமயக் கடவுளர் வரிசையில் இடம் பெற்றார் எனப் பிள்ளையாரின் தோற்றப் பின்புலத்தைக் குறித்து விளக்கியுள்ளார் ஆ.சிவசுப்பிரமணியன்.

மேற்குறித்த தரவுகளின் அடிப்படியில் நோக்கும்போது, கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் வேறு வேறு குலக்குறி வழிபாட்டு அடையாளங்களாக இருந்தவை ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் எனும் வழிபடு கடவுளாகத் தோற்றம் கொண்டிருக்கிறது எனக் கருதமுடிகிறது. அதாவது, அக்கால வட இந்தியாவின் பெரும் பகுதியை உள்ளடக்கி இருந்த பகுதியை கி.பி 320 முதல் 551 வரை  ஆட்சி செய்தது குப்தப் பேரரசுதான்.  இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக அது இருந்திருக்கிறது.

குப்தர்கள் காலத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய உருவாக்கம் ஒரு நிறுவனத் தன்மையை அடைந்திருக்கிறது. குறிப்பாக, ஆரிய / வைதீகச் சமயத் தொன்மங்கள் உருவானது இக்காலகட்டத்தில்தான். மேலும், சமக்கிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்ததும் அதே காலகட்டம்தான்.

இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் சமக்கிருத மொழியில் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. அவ்வகையில், அதே காலகட்டத்தில்தான் ஆரிய / வைதீகச் சமய மரபில் பிள்ளையார் வழிபாடானது இந்தியத் துணைக் கண்டத்தின் வடபகுதியில் தோற்றம் கொண்டு நிலவி வந்திருக்கிறது எனக் கருதலாம்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வடபகுதியில் வழிபடு கடவுளராக இருந்த பிள்ளையாரோடு தொடர்புடைய மற்றொன்று சமக்கிருத மொழியாகும். ரிக், யசூர், சாமம், அதர்வனம் என்கிற நான்கு வேதங்களும் எழுதாக் கிளவியாக இருக்க, வியாசரின் மகாபாரதமே எழுதப்பட்ட கிளவியாக - அய்ந்தாவது வேதமாக எழுத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், வியாசரின் மகாபாரதம் சமக்கிருத மொழியில் எழுதப்பட்டதாகும். வியாசர் சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுதியதே மகாபாரதம் என்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,  பிள்ளையார் வழிபடு கடவுளாகத் தோற்றம் பெற்றதே கி.பி.3ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் எனும்போது, எழுதாக் கிளவியாக இருந்த சமக்கிருத மொழியில் பிள்ளையார் முதன் முதலாக  எழுதியதான காலமும் கி.பி.3ஆம் நூற்றாண்டு வாக்கில்தான்  இருந்திருக்க வேண்டும். ஆக, பிள்ளையாரும் சமக்கிருத மொழியும் இந்தியத் துணைக் கண்டத்தின் வட பகுதியைச் சார்ந்த ஆரிய / வைதீகச் சமயப் பண்பாட்டின் அடையாளங்கள் என்றே உறுதியாகக் கருத முடியும்.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு நூலில் இருந்து..

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு,
மகாராசன்,

ஆதி பதிப்பக வெளியீடு 2019,
விலை: உரூ 120,

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
பேச : 9994880005

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ஆரியத்திற்கும் வாக்கில்லை; துரோகத்திற்கும் வாக்கில்லை.

வாக்குரிமை என்பது,
வாக்கை அளிப்பதற்கான உரிமை என்பதோடு, வாக்களிக்க மறுத்தலையும் உரிமையாகக் கொண்டிருக்கிறது.

நிலவுகிற போலி சனநாயக அமைப்பிற்கான தேர்தல் என்பது சனநாயகத்திற்கான தேர்தல் என்பது போலத் தோன்றினாலும், உண்மையில் இத்தகையத் தேர்தல் மக்களின் சனநாயகத்திற்கானது அல்ல.

பேருக்கு வேண்டுமானால் எதிர் எதிர் அணிகள் போலக் காட்டிக் கொண்டாலும்,  பெரும் பெரும் பலத்தோடு நிற்கும் இந்திய தேசியக் கட்சிகள் யாவும் இந்திய வடிவிலான ஆரிய / பார்ப்பனிய - தரகு முதலாளித்துவ - ஏகாதிபத்தியக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அதைப் பாதுகாக்கவும் தான் முனைந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, பல்வேறு தேசிய இனங்களை அடக்கியும் ஒடுக்கியும் - அவற்றின் உரிமைகளைச் சிதைத்தும் - தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்தும் இந்திய நீரோட்டத்தில் கலக்கச் செய்வதற்கான முயற்சிகளுள் ஒன்றுதான் இந்தத் தேர்தல் முறைகளும்.

தேசிய இன விடுதலைக்கான செயல்பாடுகளை அரசியலாகக் கொண்டிருக்கும் இடதுசாரிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் பலவும் இப்போதைய போலி சனநாயகத் தேர்தல் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தும் வேலைமுறைகளைக் கைவிட்டிருக்கின்றன அல்லது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை நோக்கித் தடம் மாறியிருக்கின்றன.

தமிழர் / தமிழ் மரபின் பன்னெடுங்காலப் பகையான ஆரிய / வைதீக மரபின் நீட்சியாகப் பரவியிருக்கும் பாரதீய சனதா கட்சியின் சர்வதிகாரக் காவி பயங்கரவாதத்தையும், ஈழத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கத் துணை போன காங்கிரசின் துரோகத்தையும் வேறு வேறாகப் பார்க்க வேண்டியதில்லை. இரு பெரும் கட்சிகளுமே தமிழர் / தமிழ் மரபுக்கு எதிரான துரோகத்தையும் வன்மத்தையும் பகையையும் உள்ளீடாகக் கொண்டிருப்பவையே. இதில் எதிர்க்க வேண்டிய அணி என்றோ அல்லது ஆதரிக்க வேண்டிய அணி என்றோ என ஒன்றுமில்லை. இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டிய அணிகளே. இரண்டு அணிகளுமே இந்தியத்தைப் பாதுகாக்கும் அரசு எந்திரத்துக்கான தேர்தலைத் தான் எதிர்கொண்டுள்ளன.

இந்திய அரசதிகார வடிவம் என்பதும் இந்துத்துவம் எனப்பெறும் ஆரியத்தின் நவீன வடிவம்தான். இந்தியத் தேர்தல் நடைமுறைகள் யாவும் ஆரியத்தின் வேர்களைச் சட்டப்பூர்வ அரசு எந்திரமயமாக்கலின் இன்னொரு முயற்சிதான். ஆக, இந்தியத்தைப் பாதுகாக்கும் எந்தத் தேர்தலும் ஆரியத்திற்கான ஆதரவும் பாதுகாப்பும்தான்.

உண்மையிலேயே, ஆரிய எதிர்ப்பு என்பது இந்திய ஒன்றியங்களில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் தனித்த இறையாண்மை மிக்க அதிகாரத்தைப் பெறுவதில் தான் இருக்கிறது. அதை நோக்கிய அரசியல் செயல்பாடுகளைத் தான் புரட்சிகர / தமிழ்த் தேசிய / இடதுசாரிகள் முன்னெடுக்க வேண்டுமே ஒழிய, ஆரிய எதிர்ப்பு / சர்வதிகார எதிர்ப்பு எனும் பேரில் காங்கிரசை ஆதரிப்பது என்பது மட்டும் அல்ல.

பாரதிய சனதா அல்லது காங்கிரசு இவற்றுள் எதையாவது ஒன்றை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே இங்குள்ள மக்கள் திரள் அமைப்புகள் மட்டுமல்ல, புரட்சிகர இடதுசாரிகள் மற்றும் தமிழ்த் தேசியர்கள் கூட முன்னெடுக்க வேண்டும் என்கிற சந்தர்ப்பவாத நிலைப்பாட்டுக்குள் நிற்க வேண்டிய சூழலுக்கு அவை தள்ளப்பட்டிருக்கின்றன.

அவ்வகையில், இந்த முறை காங்கிரசு கூட்டணியை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்திருக்கின்றன இந்திய உளவு மற்றும் முதலாளித்துவ ஊடக நிறுவனங்கள். இவர்களின் இத்தகைய காங்கிரசு கூட்டணி ஆதரவு நிலைப்பாட்டை முன்னெடுப்பதற்கு ஆரிய எதிர்ப்பு என்று சொல்லிக் கொண்டாலும், பாரதிய சனதா கட்சியும் காங்கிரசும் வேறு வேறு என்றோ, அல்லது, காங்கிரசு கட்சியானது பாரதிய சனதா கட்சியிலிருந்து வேறுபட்டது என்பதற்கான வலுவான காரணங்களையும் ஆதாரங்களையுமோ இவர்களால் முன்வைக்க முடியவில்லை.

பெரும்பாலும், காங்கிரசும் பாரதிய சனதா கட்சியும் வேறு வேறல்ல என்கிற அரசியல் பார்வையும் தமிழ்த் தேசியர்களிடமும் இருக்கிறது. அவ்வகையில், தோழர் நலங்கிள்ளி அவர்களது பதிவு சில முக்கியமான உரையாடலை முன்வைத்திருக்கிறது.

"எவருக்கும் வாக்கில்லை எனத் தமிழ்த் தேசியர்கள் கூறுவது ஏன்?

2019 மக்களவைத் தேர்தலில் இந்திய அளவில் முதன்மையாக பாஜக தலைமையிலான கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் மோதுகின்றன.

இந்த மோதலில் இவ்விரு கூட்டணிகளில் இல்லாது போட்டியிடும் மாநிலக் கட்சிகளைக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் 545 பேர் இருக்கும் மக்களவையில் இந்தக் கட்சிகளின் வெற்றி சிறு அளவில் கூட தாக்கம் செலுத்தப் போவதில்லை. ஏனென்றால் சட்டத்தில் அடிப்படை மாற்றங்கள் செய்வதற்குக் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். மாநிலக் கட்சிகள் எவ்வளவு எட்டிப் பிடித்தாலும் இந்த அளவுக்கான இடங்களை வெல்லப் போவதில்லை.

எனவே நாம் பாஜக, காங்கிரஸ் ஆகிய  இரு கூட்டணிகளுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனப் பார்ப்போம்.

மோதி கடந்த 5 ஆண்டுகளில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஆட்சியையே தந்துள்ளார் என்றும்,  மீண்டும் மோதி ஆட்சிக்கு வந்தால், இதுவே கடைசித் தேர்தலாக இருக்கும் என்றும், இந்தியாவின் அனைத்துச் சனநாயக அமைப்புகளையும் மோதி நொறுக்கித் தள்ளி விடுவார் என்றும் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், நடிகர்கள், சிறு முற்போக்கு இயக்கதினர் எனப் பலரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஏதோ மோதி ஒருவர்தான் இந்தியாவின் பெருங்கேடர் போலவும், ராகுல் காந்தி வாயில் விரல் வைத்தால் கூட கடிக்கத் தெரியாத அப்பாவி போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

மோதி சனநாயக விரோதியா? பாசிஸ்டா? இந்துத்துவரா? சமூகநீதி மறுப்பாளரா? மத வெறுப்பரசியல் செய்பவரா? இத்தனைக்கும் ஆமாம் ஆமாம் என்பதே என் பதில். ஆனால் இதற்கு ராகுல் காந்தி எப்படி மாற்றாக முடியும்?

மோதியாவது நெருக்கடி நிலை போன்ற ஓர் ஆட்சியை நடத்தி வருவதாக காங்கிரஸ், திமுக ஆதரவாளர்களே கூறுகின்றனர். ஆனால் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி உண்மையான நெருக்கடி நிலைக் கொடுங்கோன்மை ஆட்சியை நடத்திக் காட்டியவர். இந்திராவின் அந்தக் கேடு கெட்ட ஆட்சியை அனுபவித்தவர்களைக் கேட்டால்,  மோதியின் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை என்பார்கள்.

ராகுலின் பாட்டி சரி, ராகுலின் அப்பா எப்படி? இந்திரா காந்தியைக் கொன்றது ஒரு சீக்கியர் என்பதற்காக ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட  சீக்கியர்களின் குருதியை புது தில்லி வீதிகளில் ஓட விட்டவர்கள் ராஜீவ் காந்தி கூட்டத்தினர். அதற்கு இன்று வரை ராஜீவ் குடும்பம் மன்னிப்புக் கேட்கவில்லை. ஒரு பெரும் மரம் சாயும் போது சிறு சிறு செடிகள் நசுங்கத்தான் செய்யும் எனத் திமிராகப் பேசினார் ராஜீவ் காந்தி. இது பாசிசச் செயல் இல்லையா?

வி. பி. சிங் மண்டல் குழுப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய போது, அதனை எதிர்த்து 2 மணி நேரம் மக்களவையில் பேசியவர் ராஜீவ். அவர் மகன் ராகுல் ஏழை இதர சாதியினருக்கு 10% ஒதுக்கீட்டை மோதி கொண்டு வந்த போது அதனை ஆதரித்தார். இவர்கள்தான் சமூகநீதிக் காவலர்களா?

காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மோதி நடத்தி வரும் இரத்தக் களரிக்குத் துணை நிற்பவர்தானே ராகுல்? அதைத்தானே ராகுல் ஆட்சிக்கு வந்தாலும் செய்யப் போகிறார்? அப்படியானால் மோதி இந்துத்துவர், ராகுல் இந்துத்துவர் இல்லை எனச் சொல்வதற்கு ஏதேனும் நியாயம் உண்டா?

சத்தீஸ்கரில் நடைபெற்று வரும் சல்வா ஜுடும் கொடூரத்துக்கு பாஜக, காங்கிரஸ் இரண்டுக்குமே சமப் பங்கு இல்லையா?

பசு மாட்டு கோமியத்துக்கு எனத் தொழிற்சாலை அமைக்கப் போவதாக மத்திய பிரதேச காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை சொல்லவில்லையா?

தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் மறுப்பதில், எழுவர் விடுதலை எதிர்ப்பில், ஐட்ரோ கார்பன், மீத்தேன் உறிஞ்சுவதில், நியூட்ரினோ திட்டத்தில், ஸ்டெர்லைட் நஞ்சு கக்குவதில், தமிழீழ இனக்கொலையில் தமிழகச் சுற்றுச் சூழல் அழிப்பில் மோதிக்கும் ராகுலுக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா?

மோதி எதிர்ப்பு நாடகத்தை அரங்கேற்றும் பலரும் திமுகவையும் சேர்த்துக் கொள்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையோ மத்திய அரசிடம் இதை வலியுறுத்துவோம், அதை வலியுறுத்துவோம் என ஒரே வலியுறுத்தல்கள் கதையாக இருக்கிறது (அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் வலியுறுத்தல் மயந்தான்). இந்த வலியுறுத்தல் அறிக்கையே எந்த அதிகாரத்தையும் நிறைவேற்றவியலாத நிலைமையை அம்பலப்படுத்துகிறது.

இந்தியைத் திணிக்கும் பிரிவு 17 பற்றி எல்லாம் பேச்சும் இல்லை மூச்சும் இல்லை. இதற்காகவா 1965இல் தீக்குளித்து உயிர் விட்டோம் என அன்று போராடிய வீரர்கள் இந்த அறிக்கையைப் படிக்க நேர்ந்தால் கொதித்துப் போவார்கள்.

இத்தனையும் மீறி பாஜகவை விட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஓரிரண்டு புள்ளிகளில் சிறந்து விளங்கலாம். ஆனால் ஒரு கட்சியை ஆதரிக்க இது போதாது. அந்த விஞ்சி நிற்கும் புள்ளி அடிப்படை மாற்றத்துக்கானதாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ் இதை எல்லாம் செய்யுமா?

•  தமிழ்நாட்டுக்குக் காவிரி தரும் வகையில் அதிகாரப் பல் உள்ள ஆணையத்தை அமைத்துத் தருமா?

• இந்தியைத் திணிக்கும் பிரிவு 17ஐ முற்றாக நீக்குமா?

• ஜம்மு காஷ்மீரிலிருந்தும் வடகிழக்கிலிருந்தும் இராணுவத்தைத் திரும்பப் பெறுமா?

• இனி இந்தியாவில் ஆள் தூக்கிச் சட்டங்களுக்கோ கறுப்புச் சட்டங்களுக்கோ வேலையில்லை என அறிவிக்குமா?

• மாநில எல்லைப் பிரிவினையில் நேரு சதி செய்து தமிழ்நாட்டிலிருந்து பிடுங்கிய தேவிகுளம், பீர்மேடு, திருவேங்கடம், கோலார் போன்ற பகுதிகளைத் தமிழர்களுக்கே மீட்டுத் தருமா?

• தமிழீழ இனக்கொலை குறித்து விசாரிக்க ஐநாவிடம் கோரிக்கை வைக்குமா?

• தமிழ்நாட்டில் நீதித்துறை, ஒன்றிய அரசு அலுவலகங்கள், கல்வித்துறை அனைத்தும் தமிழில் மட்டுமே இயங்க சட்டம் இயற்றுமா?

• சிபிஎஸ்இ, நவோதயா என எந்த மத்திய அரசு கல்வி வாரியம் எதற்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என அறிவிக்குமா?

• தமிழ்நாட்டிடமிருந்து இந்திரா களவாடிச் சென்ற கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றித் தருமா? 

இத்தகைய அடிப்படை மாற்றங்களை காங்கிரஸ் செய்து காட்டட்டும், அல்லது செய்து காட்டுவோம் எனத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கட்டும்.. பிறகு தமிழ்த் தேசியர்களும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை ஆதரிப்பது பற்றி யோசிக்கலாம்" என்கிற அரசியல் பார்வையை முன்வைத்திருக்கிறார் தோழர் நலங்கிள்ளி.

காங்கிரசு மீதான இந்த விமர்சனம் என்பதைக் கூட ஆரியச் சார்பானது; பாசிச ஆதரவானது எனப் பலவாறாகச் சொல்லவும் கூடும்.

தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில் ஆரியம் எப்போதுமே எதிரானது; நஞ்சானது; எதிர்க்கப்பட வேண்டியது. அதேபோல, தமிழர் நிலத்திற்கும் இனத்திற்கும் நலத்திற்கும் துரோகம் செய்த காங்கிரசும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். காங்கிரசுடன் விமர்சனமற்று கூட்டணி வைத்திருக்கும் எந்தக் கட்சிகளும் துரோகத்திற்குத் துணை போனவை என அம்பலப்படுத்த வேண்டியவைதான்.

ஆகவே, தமிழ் நிலத்தையும் இனத்தையும் மொழியையும் காத்திடும் பெரும் போராட்டக் களத்தில் ஆரியமும் துரோகமும் எதிர்க்கப்பட வேண்டியவையே என்பதை மக்களிடத்தில் திரும்பத் திரும்ப விதைத்துக் கொண்டே இருப்போம்.

ஏர் மகாராசன்
16.04.2019

திங்கள், 8 ஏப்ரல், 2019

பெண் குலசாமிகள் : மகாராசன்


நிலம் எனும் தாயவள் வலியை
எம் தாய்களே அறிவர்.

கத்திய கதறலும்
பீறிட்ட அழுகையும்
சிந்திய கண்ணீரும் மட்டுமல்ல;
துணிவான போராட்டங்களும்
வீண் போவதில்லை.

நிலத்தைக் காத்த
பெண்குலசாமிகள்
எதிரிகளையும் துரோகிகளையும்
பழிவாங்கியே தீருவர்.

அந்தக் கண்ணீர்
கற்களை மட்டுமல்ல;
காவியெனப் படரும்
சர்வதிகாரத்தையும்
பிடுங்கி எறியும்.

கொத்துக் கொத்தாய்
ஒரு நிலத்தையும் இனத்தையும் கொன்றொழித்த
அரத்தம் தோய்ந்த
கைகளையும் உடைத்தெறியும்.

நிலம் எனும் தாயவள் வலியை
எம் தாய்களே அறிவர்.

ஏர் மகாராசன்
08.04.2019.

ஓவியம்
தோழர் இரவி பேலட்
Ravi Palette

மீள் களம் : மகாராசன்

பகையெல்லாம்
நமைக் கொல்லக் காத்திருக்கிறது.
துரோகமெல்லாம் கூட்டு சேர்ந்து
பகை முடிப்போம் என்கிறது.

பகையின் காவியுருவங்களும்
துரோகத்தின் முகமூடிகளும்
கையேந்தி
மடிப்பிச்சை கேட்டலைகின்றன.

பகையின் பக்கமும் நாமில்லை;
துரோகத்தின் நிழலையும் நம்புவதாயில்லை.

இப்போதைய சனநாயகமெல்லாம்
போலியென ஒரு நாளும்,
இப்போதைய நிலைப்பாடெல்லாம்
சந்தர்ப்ப வாதமென ஒரு நாளும்
மீளவும் பேசும் காலம்.

துரோகத்தையும் பகையையும்
வேரறுத்து மீளும்
தமிழ் நிலம்.

ஏர் மகாராசன்
28.03.2019.

ஓவியம்:
Vishnu Ram

வியாழன், 4 ஏப்ரல், 2019

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு: புதிய தேடல்களைத் திறந்துவிட்டிருக்கிறது. :- கதிர் நம்பி, பொறியாளர், பேரா தொ.ப. வாசகர் வட்டம்.



எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
(குறள்:392). திருவள்ளுவர் ஆண்டு எனத் தோராயமாக நாம் ஏற்றுக் கொண்ட 2050 ஆண்டுகளுக்கு முன்பு இக்குறள் படைக்கப்பட்டிருக்கிறது. எண்ணையும் எழுத்தையும் மாந்தர்கள் தங்கள் உயிராகக் கொள்ள வேண்டும் என்பது பொருள். வள்ளுவர் காலத்தில் எழுத்திற்கு முதன்மை அளிக்கப்பட்டிருக்கிறதெனில் அந்த எழுத்தின் தோற்றம், படிநிலை வளர்ச்சி, பரவலாக்கம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டும். 2050 ஆண்டுகளுக்கு முன் எழுத்தை சரளமாக புழங்கிய மேம்பட்ட ஓர் குமுகத்தின் மொழியறிவு ஆய்விற்கு உரியது.

அப்படியொரு ஆய்வினை ஆசிரியர் மகாராசன் 'தமிழர் எழுத்து பண்பாட்டு மரபு' எனும் நூல் வழியே நிகழ்த்தியுள்ளார். பேச்சு  மற்றும் எழுத்தின் தோற்றம், தேவை, படிநிலை வளர்ச்சி, பரவலாக்கம் என விவரிப்பதோடு நிற்காமல் எழுத்து சாமானியர்கள் வாழ்வில் அது  ஆற்றிய பங்களிப்பையும் தொல்லியல் வழிப்பட்டதோடல்லாமல்  மானுட ஆய்வியல் அடிப்படையிலும் சான்றுகளோடு நிறுவுகிறார்.

1. மொழி என்பது ஒரு சிந்தனைக் கருவி
2. மொழி உயிரோடும் உணர்வோடும் இணைந்தது
மேற்சொன்ன இந்த அளவுகோள்களில் தான் மொழியை இந்த குமுகம் இனம் காண்கிறது. ஆனால் மொழி என்பது மானுட  பரிணாம வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்து வருகிறது. இயங்கியல் அடிப்படையில் அறிவியல் வழிப்பட்ட மொழியின் வளர்ச்சியை ஆசிரியர் தரவுகளோடு விளக்குகிறார்.

பேச்சின் தோற்றம் :

எழுத்து + பேச்சு = மொழி
'தேவையில்லாம பேசாதே' - இந்த சொல்லியத்தை இயல்பாக நாம் கடந்து வந்திருப்போம். உண்மையில் தேவையிலிருந்து தான் பேச்சு பிறக்கிறது. பேச்சு மானுட பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல்கல். உழைப்பு தான் மாந்தனை பேச வைத்திருக்கிறது. உணவு தேடி உழைப்புச் செலுத்தும் போது சக மாந்தனோடு ஏற்படுத்த வேண்டிய கருத்து பரிமாற்றத்தில் பிறக்கிறது பேச்சு. மாந்தனுக்கு சக மாந்தன் தேவைப்படுகிறான். இதைத் தான் ஏங்கெல்சு உழைப்பதற்கு முன்நிபந்தனையாக வைக்கிறார். கூட்டு உழைப்பின் மூலம் கூட்டுச் சிந்தனை மூலம் சங்கேத ஒலியாக, ஒழுங்கமைக்கப்படாத பேச்சொலியாக மொழி பிறக்கிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட சத்தத்திலிருந்து சொற்கள் பிறந்து மொழி உருவாகின்றது. குரங்கிலிருந்து பல லட்சம் ஆண்டுகள் கழித்து முன்னங்கால்களை கைகளாக பயன்படுத்தி முதுகெலும்பு நிமிர்த்தி குரல்வளை கொண்டு பேச்சை ஏற்படுத்தியதே மாந்தன் செய்த முதல் புரட்சி என ஏங்கெல்சின் மேற்கோள் காட்டி மொழியின் தோற்றத்தை மானுட பரிணாம வளர்ச்சியோடு மொழி வளர்ச்சி அடைகிறது என ஆசிரியர் விளக்குகிறார்.

எழுத்தின் தோற்றம் :

பேச்சை கேட்க முடிகிறது ஆனால் ஒலியை காண முடிவதில்லை. எழுத்தை காண முடிகிறது ஆனால் கேட்க முடியவில்லை. இவ்விரண்டு செயல்களையும் இணைப்பது தான் மொழி. எழுத்து தகவல் சேர்மையமாக விளங்குகிறது. எப்போது வேண்டுமானால் ஒரு கருத்தை வெளிப்படுத்த எழுத்து உதவுகிறது. எழுத்து உருவான பின் தான் மொழியின் இலக்கணம் பிறக்கிறது. எழுத்து தான் ஒரு மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. பேச்சை தாயெனக் கொண்டால் எழுத்தை சேய் எனக் கொள்ளலாம். தாயைக் காக்கும் சேயாக எழுத்து பரிணமிக்கிறது. எழும் ஒலியை எழுதுவதால் அது எழுத்தெனப்படுகிறது.

எழுத்தின் படிநிலை:

பேசுகின்ற பொழுது எழுந்த தகவல் பரிமாற்ற சிக்கலை ஓவியங்களாக வரைந்து தீர்த்தனர்.பாறைகளில் விலங்கை வேட்டையாடுவது போல ஓவியங்கள் வரைந்தால் அந்த விலங்கு வேட்டையில் நிறைய கிடைக்கும் என நம்பினர். இதை தோழர் ஆ.சி ஒத்த சடங்கு(similarity rituals) என சொல்கிறார். இவ்வாறாக ஓவியங்களாக வரைந்தவை பின்னர் எழுத்துகளாக உருப்பெறுகின்றன.
பாறை ஓவியம் - குறீயிடு - கருத்தெழுத்து - ஒலியெழுத்து என வளர்ச்சி அடைந்ததை ஆசிரியர் விளக்குகிறார்.

தமிழி × பிராமி :

பிராமி எனும் எழுத்து வடிவம் (writing system) அசோகர் கால கல்வெட்டுகளில் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை. ஆய்வாளர்கள் தென்னகத்தில் கிடைத்த எழுத்து சான்றுகளை தமிழ் பிராமி எனக் குறிக்கிறார்கள். ஆனால் பிராமியைப் போலவே தமிழி எனும் எழுத்து வடிவம் தனித்து இயங்கக் கூடியது(stand alone), பிராமியினை விட தமிழி மூத்தது என புலிமான் கோம்பை எனும் இடத்தில் கிடைத்த தொல்லியல் சான்றை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். பிராமிக்குள் தமிழி அடக்கம் என நிறுவும் முயற்சிகள் தவிடு பொடியாகின்றன. இந்தியாவில் கிடைத்த ஒட்டு மொத்த பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்பாண்டங்களின் எண்ணிக்கையை விட கொடுமணிலில் கிடைத்தவை அதிகம்.

எழுத்து வகைகள் :

கண்ணெழுத்து, சாதியெழுத்து, நாள் எழுத்து, யோனி எழுத்து, தன்மையெழுத்து என எழுத்து வகைகளைப் பற்றி நிறைய தகவல்கள் இந்நூலில் காணலாம்.

எழுத்து பரவலாக்கம் :

இந்த நூலின் மிக முதன்மையான பகுதி இது தான். அசோகர் காலத்து பிராமி எழுத்து அரச மரபெழுத்தாகவே கல்வெட்டுக்களில் உறைந்து கிடக்க தமிழி (தமிழ் பிராமி அல்ல!) எழுத்துகள் சாமானியர்களின் புழங்கு பொருட்களில் பொறிக்கப்பட்ட சான்றுகள் மூலம் தமிழி எழுத்து  சாதி/சமய வேறுபாடற்று பரவலாக்கப்பட்டதை உணர முடிகிறது. தமிழி அரச மரபில்  வட்டெழுத்தாகவும் குமுக பயன்பாட்டில் தமிழ் எழுத்தாகவும் விரவிக் கிடந்திருக்கிறது. இந்த எழுத்து இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது என்று சொன்னால் அது சாமானியர்கள் கையில் புழங்கியதால் தான் என ஆசிரியர் ஆணித்தரமாக விளக்குகிறார்.

இலக்கண நூல்களின் பங்கு :

தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கல காரிகை போன்ற இலக்கண நூல்கள் தமிழி எழுத்துகளை மொழியியல் கோட்பாட்டோடு அறிவியல் வழியில் எழுத்து வடிவங்களை விவரிக்கின்றதை மேற்கோளோடு விவரிக்கிறார் ஆசிரியர்.

'மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே' என தொல்காப்பியம் உயிர் மெய்யெழுத்துகளின் ஒலிப்பில் முதலில் மெய்யெழுத்து ஒலித்து பிறகு உயிரெழுத்து ஒலிக்கும் என ஒலியமைப்பை பேசுகிறது. தொல்காப்பியம், நன்னூல் இலக்கண விதிகள் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டவை எனும் செய்தி இன்னும் சிறப்பானது.

இன்னொரு புறம், பாட்டியல், வெண்பா மாலை போன்ற நூல்கள் எழுத்துகளை கடவுளர்களாகவும், வர்ணநிலை கொண்டவை களாகவும், சாதியமாகவும் பால் சார்ந்தவைகளாகவும்(ஆண்பால், பெண்பால், அலிபால்), தன்மை சார்ந்தனவையாகவும் பிற்போக்குத்தனமாக இலக்கணம் எழுதி தமிழ் எழுத்துகளை ஒரு பக்க சார்புடையனவாக ஆக்க முயற்சி செய்தவற்றை குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

பிள்ளையார் அரசியல் :

எழுதத் தொடங்குமுன் 'உ' போடுவது நம்மிடையே இருக்கும் வழக்கம். இதை பிள்ளையார் சுழி என சொல்கிறோம். ஆரிய/வைதீக மரபு இந்த வழக்கத்தை எவ்வாறு திரித்து தனதாக்கிக் கொண்டது என விளக்கி பிள்ளையார் வேறு! கணபதி வேறு! என காத்திரமான ஆதாரங்களோடு வைதீகத்திற்கு குட்டு வைக்கிறார் ஆசிரியர்.

உலகம் :

உலகம் எனத் தொடங்கும் இலக்கியப் பாடல்களையெல்லாம் சான்றாகக் கொண்டால் தமிழ் இலக்கியம் உலகப் பொதுமையை பேசியிருப்பது திண்ணம். உலகத்தை குறித்த பெயர்கள், ஊரின் பெயர்கள், இடங்களின் பெயர்கள், தெய்வங்களின் பெயர்கள் எல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது தமிழ் குமுகம் உலகப் பொதுமையை நேசித்தது விளங்கும். எழுதுவதற்கு முன் போடும்  'உ' உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும்  இளமையோடும் வளமையோடும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற குறீயிடாகத் தமிழ் குமுகம் கொண்டிருக்கிறது என சொல்லி ஆசிரியர் நிறைவு செய்கிறார்.

கைலாசபதி, ஆ. சி, ஏங்கெல்சு, ஜார்ஜ் தாம்சன் தொட்டு தொல்காப்பியம் சென்று பொருந்தல், கீழடி வரை தேடித்தேடி சான்றுகளை பகர்ந்து இந்நூலினை படைத்திருப்பதற்கு ஆசிரியருக்கு தமிழ் குமுகம் கடமைப்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்தை எழுதிக் கொண்டும்,தட்டச்சு செய்து கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.

இயல்களாக பிரித்து நூலினை அமைத்திருந்தால் படிப்பதற்கு இலகுவாக இருந்திருக்கும். பிள்ளையார் அரசியல் பற்றி பேசுகிற பொழுது விவரனைகளை குறைத்து இருக்கலாமே எனவும் தோன்றியது. ஏற்கனவே அண்ணன் சுதாகரன் சொன்னது போல அந்த பகுதி கத்தி மேல் நடக்கின்ற பகுதி என்பதாலோ ஆதியிலிருந்து தரவுகள் கொடுத்து விட்டார் ஆசிரியர். துறைசாராத என்னைப் போன்றோர் எளிதில் அணுகும் வண்ணம் நூல் அமைந்துள்ளது. துறை சார்ந்தவர்கள் இந்நூலின் ஏற்பன/மறுப்பன ஆய்ந்தறிந்து ஆரோக்கியமான விவாதம் ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும். எனக்குள் புதிய தேடல்களை திறந்துவிட்டிருக்கிறது இந்நூல் 'உ' போட்டு...

திங்கள், 1 ஏப்ரல், 2019

சுளுந்தீ : கதைக் களப் பயணங்களும் கதையின் நுண் அரசியலும்:- மகாராசன்




கடந்த ஓராண்டுக்கு முன்பாக முகநூல் வாயிலாகத் தோழர் முத்துநாகு அவர்களிடம் நட்பறிமுகம் இருந்தாலும், நேரிடையான அறிமுகமும் பழக்கமும் எம் இருவருக்கும் முன்பின் இருந்திருக்கவில்லை.

ஒரு நாள், உங்களைச் சந்திக்க வேண்டும் என்றார். நானும் வாருங்கள் என்றேன். வந்தவர், பெரிய அளவிலான  ஒளி அச்சுப் புத்தகத்தைக் கொடுத்து, இந்தக் கதையைப் படித்து விட்டு எப்படி வந்திருக்கிறது என்று சொல்லுங்கள் என்றார். நான் தயங்கியபடி, ஏறு தழுவுதல் பற்றிய இன்னொரு நூலுக்கான எழுத்துப் பணியில் இருக்கிறேன் தோழர். என்னால் இப்போதைக்குச் சொல்ல முடியாது. இருப்பினும், ஒரு இரண்டு மாதங்கள் கால அவகாசம் கொடுங்கள். படித்து விட்டுச் சொல்கிறேன் என்றேன்.அவரும் சரி என்றார்.

கதையைப் பற்றி ஆலோசனை சொல்ல ஏகத்துக்கும் ஆள் இருக்கையில, என்னய எப்படித் தேர்ந்தெடுத்தீங்க? என்று கேட்டேன். முகநூலில் உங்களது எழுத்துகளைக் கவனித்து வருகிறேன். நீங்க தான் இதப் படிச்சி சொல்றதுக்குச் சரியான ஆளுன்னு முடிவு பண்ணிட்டேன் என்றார். முகநூல் வித்தைகள் ஒருத்தரக் கொண்டாந்து சேத்துருக்கேன்னு உள்ளுக்குள் மப்பேறிக் கொண்டதை உணர்ந்தவாறே, மனசுக்கு என்ன படுதோ அத வெளிப்படையா பட்டுன்னு சொல்லிப் புடுவேன் தோழர். நல்லாச் சொல்லணும்னு மட்டும் நினைச்சுப்புடாதீங்க என்று சொன்னேன். அவரும் சரிங்க என்று சொல்லி விட்டுக் கிளம்பிப் போனார்.

நம்மளயும் ஒரு ஆளு நம்பி எதையோ ஒன்ன கொடுத்துட்டுப் போயிருக்கே என நினைத்துக் கொண்டு தான் அதைப் படிக்கத் தொடங்கினேன். அவராகவே  தமிழில் ஒளி அச்சு செய்திருந்ததால் எழுத்துப் பிழைகள் ஏகத்துக்கும் நிறைந்து கிடந்தன. ஆனாலும், ஒரு பத்துப் பதினைந்து பக்கங்கள் வாசித்துக் கடக்கையில் எழுத்துப் பிழைகளைக் காட்டிலும் வேறு ஏதோ ஒன்று இந்தக் கதைக்குள்ளும் இந்தப் புத்தகத்துள்ளும் ஒருவிதமான உயிரோட்டம் இருப்பதை உணரவும் உள்வாங்கவும் முடிந்தது.

படிக்க படிக்க எழுத்துப் பிழைகள் என்பதையெல்லாம் தாண்டி அதன் தரவுகள் என்னை மிரள வைத்தன. நான் இதுவரையிலும் படித்திராத கண்டிராத இந்த நிலத்தின் அரத்தமும் சதையுமான சமூக நிகழ்வுகளைக் கண் முன் நிறுத்தக்கூடிய கதைக்களமாக நூல் விரிந்து கொண்டே போனது.
மிகக் கனமாகவும் அடர்த்தியாகவும் தரவுகளாய் விரிந்து கொண்டே போனது நூல். ஒவ்வொரு பக்கத்தையும் திரும்பத் திரும்ப வாசித்து அதன் சொற்களோடும் கதையோடும் பயணித்துப் பயணித்து தான் அடுத்த பக்கத்திற்கு நகர்ந்தேன். பத்திக்குப் பத்தி, பக்கத்திற்குப் பக்கம் குறிப்புகள் போட்டுக் கொண்டே தான் வந்தேன்.

எந்த இடத்தில் என்ன சொல்ல வேண்டும்;சொல்லப்பட்டது சரியா; இந்த இடத்தில் போதவில்லை; இந்த இடம் தேவையில்லை. இந்தப் பகுதியில் முரண்பாடு இருக்கிறது; தகவல் பிழை, தரவுகள் சரிதானா. இந்தப் பகுதி அங்கு வர வேண்டும். இது இப்படி இருந்தால் சரி என்று எல்லாப் பக்கங்களிலும் குறிப்புகள் எழுதிக் கொண்டேதான் வந்தேன். ஒரு கட்டத்தில், நான் வெகுகாலமாக எந்த வரலாற்றை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேனோ அந்த வரலாற்றையே ஒரு கதைக்குள் இந்த மனுசன் கொண்டாந்துட்டாப்பளயே என்று மெய்சிலிர்த்துப் போனேன்.

உடல்நிலை சரியில்லாத நிலையிலும்கூட கிட்டத்தட்ட ஒரு ஆறு மாத காலம் இந்த நூல் குறித்த செப்பனிடுதல் பணிகளில் எம்மை முழுதுமாக ஒப்படைக்கும்படி இந்த நூல் கோரியதாகவே நான் உணர்ந்தேன். படித்துப் படித்து வியந்து போய் தோழர் முத்து நாகுவிடம் செல்பேசியிலும் நேரில் வரவழைத்தும் நிறைய நிறையப் பேசிக் கொண்டே இருந்தேன்.

வேறு எவரும் செய்யாத - செய்ய முடியாத - செய்ய விரும்பாத ஒரு வேலய நீங்க செஞ்சிருக்கீங்க தோழர். மிக நேர்மையாவும் உண்மையாகவும் இந்தக் கதைய வரலாறாகச் சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா இது பேசப்பட வேண்டிய புத்தகம். கண்டிப்பா இந்த நூல் பேசப்படும் என்று அடிக்கடி அவரிடம் சொன்னேன்.

இந்தக் கதைய நிறையப் பேத்துட்ட கொடுத்துப் படிக்கச் சொல்லி கருத்த கேட்டேன். பலரும் படிச்சாங்களா என்னான்னு தெரியல. எல்லாரும் நல்லா இருக்கு என ஒத்த வார்த்தையோட நிப்பாட்டிக்குவாங்க. நீங்க ஒருத்தருதான், இந்தப் புத்தகத்தப் பத்தி ரொம்ப சிலாகிச்சுப் பேசுறீங்க. நீங்க தான் இதக் கொண்டாடுறீங்க என்று சொன்னார்.

நூல் செப்பனிடுதலில் தலையிடலாமா தோழர் என்றவுடன், அவரும் மனமுவந்து நூலின் பல பகுதிகளைக் குறித்துத் திரும்பவும் மீளவும் திருத்தியும் சேர்த்தும் எழுதி எழுதிக் கொண்டு வந்து கொண்டே இருந்தார். கதைக்களம்-கதையோட்டம் - கதைமாந்தர்கள் என்பதற்கேற்ப அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் நூல் பெரும்பான்மையான செம்மை வடிவம் பெற்றது.

இதைப் பதிப்பகம் வாயிலாக அச்சில் நூல் வடிவமாகக் கொண்டு வரலாம் என்ற எனது விருப்பத்தைச் சொன்னேன். ரெண்டு மூணு பதிப்பகத்திடம் கொடுத்திருக்கேன். அவங்க ஒன்னும் சரியா ரெஸ்பான்ஸ் பண்ணல என்றார்.

என்னுடைய நூல்களை அண்மைக்காலங்களில் வெளியிட்டு வரும் தோழர் அடவி முரளி வாயிலாக நூலைக் கொண்டு வரலாம். அவருக்கு இது போன்ற கதைக்களம் பிடிக்கும் என்றேன். உடனே அனுப்பியும் வைத்தோம். தோழர் முத்துநாகு அவர்களை முரளி தோழருக்கு முன் பின் தெரியாது. எனினும், முரளி தோழரும் படித்து விட்டு ஆதி பதிப்பகம் மூலமாக  புத்தகமாகக் கொண்டு வந்திரலாம் என்றார். சென்னை புத்தகக் காட்சிக்குச் சாத்தியமா என்றேன். கண்டிப்பாகக் கொண்டு வந்திரலாம் என்று வேலைகள் மும்முரமாக நடந்து வந்தன. தோழர் முரளி நம்பியது என்னையவோ தோழர் முத்துநாகுவையோ அல்ல. அந்த நூலை மட்டுமே நம்பினார். அந்தளவுக்கு நூல் தரமாய் இருக்கிறது என்றார்.

இடையில், நூலின் மெய்ப்புத் திருத்தப் பணிகள் வேறு ஒருவர் செய்து கொடுப்பதாக இருந்தது. அவருக்கு உடல் நிலை சரியில்லாது போக, கடைசியில் நானே மெய்ப்பும் பார்த்தாக வேண்டிய நிலைக்கும் வந்துவிட்டது. நான் எழுதிய எந்தவொரு நூலுக்கும் கூட இப்படி மெனக்கெட்டது கிடையாது. அந்தளவுக்கு மனதுக்கு நெருக்கமாய் இந்த நூல் உள்நுழைந்து கொண்டது.

தோழர் முத்துநாகுவும் தோழர் முரளியும் இந்த நூல் செம்மையாகக் கொண்டு வருவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் அனுமதியையும் எமக்கு வழங்கியதால் நூலைச் செப்பனிட நானும் மெனக்கெட்டுப் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

மிகப் பெரிய நூலா வந்துருச்சே தோழர். இத எப்புடி கொண்டு போய்ச் சேக்குறது என்று தயங்கிச் சொன்னார் முத்துநாகு. வேறு எந்தப் பின்புலமும் படை பலமும் இல்லாது போனாலும், சமூக ஊடகங்கள் வாயிலாக இந்த நூலைக் குறித்த அறிமுகத்தைக் கொண்டு போக முடியும் என்று சொன்னேன். அதன்படியே அந்த நூலைக் குறித்து முகநூலில் பதிவொன்று எழுதினேன். அதில் உள்ள ஒரு சில பகுதிகளை நூலின் பின் அட்டையில் இடம் பெறச் செய்திருக்கிறார் தோழர் முரளி.

இந்த நூல் தமிழில் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் என்றே கருதினேன். அது இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பலரது வாசிப்புக்கும் கவனிப்புக்கும் உள்ளாகி வருகிறது.

மிக முக்கியமான - நல்லதொரு நூல் உருவாக்கத்தில் பங்கெடுத்தமைக்கு மனம் நிறைவடைந்திருக்கிறது.

சுளுந் தீ நூலைக் குறித்து
நான் எழுதிய பதிவு வருமாறு:

சுளுந்தீ:
தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று நுண் அரசியல் ஆவணம்.

வரலாற்றைக் கதையாகவும், கதையை வரலாறாகவும் பேசுகிற பாணியில், எழுத்தின் வாயிலான ஒரு பெருங்கதைக்குள் பல்வேறு குடிகளின் வாழ்வியலைப் பேசுகிற இனவரைவியல் மற்றும் நிலத்தின் வரைவியல் பேசுகிற தமிழின் மிக முக்கியமான பெரும் புனைகதைப் படைப்பிலக்கியமாக வெளிவரப் போகிறது சுளுந்தீ எனும் நூல்.

தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதவும் பேசவும் கூடியவர்கள் மறைத்த, மறந்த, மறுத்த ஒரு காலகட்டம் குறித்த வரலாற்றுத் தரவுகளை, மக்களின் வாய்மொழி, பண்பாடு, மற்றும் ஆவணக் குறிப்புகள் போன்ற வரலாற்றுக் குறிப்புகளோடு புனைகதையாகப் புலப்படுத்தி இருக்கிறார் தோழர் இரா.முத்துநாகு.

தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த தெலுங்கின நாயக்கர்களின் ஆட்சிக் காலத்தில், நிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த தமிழ் உழவுக்குடிகளிடமிருந்த வேளாண்மை நிலங்கள் பறிக்கப்பட்ட வரலாற்றை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

தமிழ்க் குடிகளுக்கும் தமிழ் அல்லாத குடிகளுக்குமான முரணும் பகையும் குறித்து மிக நுணுக்கமாகவும் ஆழமாகவும் விவரித்திருக்கிறது.

நாயக்கர் ஆட்சிக் காலத்தில் நிலவிய அதிகாரத்தின் கோர முகங்களையும், அவ் அதிகாரத்தை எதிர்த்து நின்ற பல்வேறு சமூகக் குடிகளின் வாழ்வையும் பேசுபொருளாகக் கொண்டிருக்கும் இந்நூல், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய தரவுகளை நிறையவே தந்திருக்கிறது.

இன்றைய சமூக அமைப்பில் விளிம்பு நிலைச் சமூகங்களாகக் கருதப்படுகிற பல சமூகக் குடிகள், அக்காலகட்டத்தில் அறிவும் திறமும் பெற்றிருந்த சமூக ஆளுமை மிக்கதாக இருந்த வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

குறிப்பாக, தமிழ் நிலத்தின் மருத்துவ அறிவும் நுட்பமும் முறைகளும் கற்றுத் தேர்ந்திருந்த சித்த மருத்துவப் பண்டுவர்களான நாவிதர் பற்றிய விரிவான விவரிப்புகள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் மட்டுமல்ல; தமிழில் இதுவரையிலும் பதிவாகாத செய்திகளும் கூட.

தமிழ் நிலத்தின் தமிழ்ப் பூர்வீகக் குடிகளைக் குறித்தும், வந்து குடியேறிய தமிழ் அல்லாத குடிகளைக் குறித்தும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் நேர்மையாகவும் இந்நூல் பதிவு செய்திருப்பதாகவே என் வாசிப்பில் உணர்கிறேன்.

தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவே இப்பெருங்கதை நிலைத்திருக்கப்போகிறது என்பதே இந்நூலின் சிறப்பாகும்.

இந்நூல், வெறும் கற்பனையோ அல்லது சிறுகச் சேர்த்த புனைவோ என்பதைக் கடந்து, கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேகரித்த மக்களின் வழக்காற்று ஆவணங்களே ஒரு பெருங்கதைக்குள் உலவித் திரிகின்றன. அவ்வகையில், மக்கள் வரலாற்றையும் வழக்காற்றையும் எழுத்தில் பதிவு செய்திருக்கும் தோழர் இரா.முத்துநாகு அவர்களின் தேடலும் உழைப்பும் ஒவ்வோர் எழுத்திலும் படிந்திருக்கிறது.

தோழர் முத்துநாகுவின் சுளுந்தீ, மக்கள் வரலாற்றியலின் தமிழ் அடையாளம் என்றே கருதலாம்.

படங்கள்:

சுளுந்தீ கதைக் களத்தின் மிக முக்கியமான இடங்களினை நேரிடையாகப் பார்க்க வேண்டும் என்றவுடன், ஒரு சில இடங்களுக்கு அழைத்துச் சென்று வரலாற்றுத் தடயங்கள் சிலவற்றைக் காட்டினார் தோழர் முத்துநாகு.

1. பாண்டியர்களின் பெரு வழிச்சாலையில்  (கன்னாபட்டி - செக்கா பட்டி) இருந்த சுங்கச் சாவடி மற்றும் வணிகச்சந்தையாக இருந்த கோட்டை. (குன்னுவராயன் கோட்டை).
2. பாண்டியர் காலக் கோயிலான விண்ணதிரப் பெருமாள் கோயில்.
3. சோழர் கால சிவன் கோயில்.
4. மஞ்சளாறு, வைகையாறு, மருதாநதி எனும் மருதையாறு ஆகிய மூன்று ஆறுகளும் சேர்கிற கூடுதுறை.







ஏர் மகாராசன்.

ஞாயிறு, 31 மார்ச், 2019

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு : தமிழ் மொழியியல் ஆய்வுலகிற்கு ஓர் நல்வரவு. :- வழக்கறிஞர் சுதாகரன். பேரா. தொ.ப வாசகர் வட்டம்.



“நான்கு கால்களில் நடந்து கொண்டிருந்த விலங்கு மனிதன்,  பரிணாமத்தில் பின்னாலிருக்கும் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பிக்கும் போது, நடக்கப் பயன்படாத முன் இரண்டு கால்களும் கையாகி சைகை எனும் புதுச் செயலைச் செய்யப் பயன்படுகிறது.

தொடர் பரிணாமம் நேரான முதுகிலிருந்து மூச்சுக் குழல் வழி ஒலியை எழுப்ப உதவுகிறது. நாளடைவில் அந்த ஒலிக்கு ஒலிவடிவம் கிடைத்து பேச்சாகியது. அந்தப் பேச்சு ஒரு நாள் சித்திரத்தையும் சித்திரம் ஒரு நாள் எழுத்தாகவும் ஆனது.”
இது தான் மனிதன் கண்டடைந்த முதல் மொழியின் எழுத்து வரலாறு. இதைதான் இந்நூலின் ஆசிரியர் மகாராசன், "சமூகத்தில் மொழியின் தோற்றம் என்பது தற்செயல் நிகழ்வல்ல” என்று தொடங்குகிறார்.

உழைப்பும் பேச்சும்தான் மனிதப் புலன்களின் வளர்ச்சிக்கும், மூளையின் படிப்படியான வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்திருக்கின்றன என்கிறார் மகாராசன். இதில் எனக்கு முழு உடன்பாடு. கணிணி மயமான இன்றைய காலத்திலும் இவ்விரு செயல்களே அடுத்தடுத்த பரிணாமங்களைத் தீர்மானிக்கின்றன.

திரு.ஜமாலன் அவர்களின் கூற்றுடன் ஒன்றுபட்டு, பேச்சொலிகளை முறைப்படுத்தும்போது மொழி பிறக்கிறது என்கிறார்.

ஆதி நிலைமைகளில், ஒவ்வொரு சமூகமும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், தனக்கென ஒரு சொந்த மொழியையோ அல்லது குல வழக்கையோ கொண்டிருக்கிறது.  இவ்வாறு, மனம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அனைத்தையும்  பேசிவந்த மனித இனம், அவற்றில் சிலவற்றை நிதானமாகச் சிந்தித்துப் பேசும்போது, அங்கு எழுத்து எனும் செயற்பாட்டிற்கான தேவை பிறக்கிறது.

முதலில் சித்திரம், பின் குறியீடு அதன் தொடர்ச்சியாக எழுத்து பிறந்துள்ளது. இதனை ஆசிரியர் மிக விரிவாக ஆராய்ந்து இந்நூலைப் படைத்திருக்கிறார்.

மகாராசன் தன் கடும் உழைப்பை இந்த நூலிற்குக் கொடுத்திருக்கிறார் என்பதற்குச் சான்று, அவர் இந்நூலின் இறுதியில் ஆறு பக்கங்களில் பட்டியலிட்டிருக்கும் பார்வை நூல்களே சாட்சி. மொத்தம் 56 நூல்களை வாசித்துள்ளார். கூடுதலாக 16 வலைத்தளக் கட்டுரைகள் மற்றும் நண்பர்கள் பட்டியல்.

புத்தகத்தின் நடுப்பகுதியாக, கிட்டத்தட்ட 40 பக்கங்களுக்கும் மேல், தமிழின் ஒட்டுமொத்த எழுத்து வரலாற்றையும் ஆய்வுக்குட்படுத்துகிறார். இந்தப்பகுதி என் போன்ற நபர்களுக்குப் புதிய தளம். மொழியியலில் போதிய அனுபவம் கொண்டோர் விரிவாக இது குறித்து விவாதித்தால் நலம்.

இறுதிப்பகுதியில் பேசியிருக்கும் பிள்ளையார் அரசியல் ஒரு புது அறிமுகம். சில சமயங்களில் மகாராசன் அந்தப்பகுதியைக் கையாண்டுள்ள விதம் கம்பி மேல் நடப்பதற்கு ஒப்பாக உள்ளது. மிகச்சரியாக ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் கருத்துகளைக் கையாண்டுள்ளார். கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ள  எழுத்துகளின் அட்டவணை மற்றும் குறியீடுகள் எல்லாம் ஒரு ஒப்புமை நோக்கிலான ஆய்வுக்கான தொடக்கமாக கருதலாம். ஏனெனில், மொழியியல், தொல்லியல், மானிடவியல் எனத் தனித்தனியாக உள்ள ஆய்வுகளையும் ஆவணங்களையும் ஒப்பீடு செய்து ஒரு comparative study ஐ மகாராசன் செய்துள்ளார்.

இதில் சிறப்பு என்னவென்றால், என்போன்ற துறைசாரா நபர்களுக்கும் புரியும் வண்ணம் நூல் அமைந்ததே. ஆய்வாளர்களும் ஆய்வு மாணவர்களும் வாசிப்புக்குட்படுத்தி இதன் சரிதவறுகளை விவாதித்தால் சிறப்பாக இருக்கும்.

என்னளவில், இந்நூல் தமிழ் மொழியியல் ஆய்வுலகிற்கு ஓர் நல்வரவு.

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு-
மகாராசன்
ஆதிப்பதிப்பகம்
விலை-ரூ.120

ஞாயிறு, 17 மார்ச், 2019

தமிழர் - தமிழர் அல்லாதோர் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வது எப்படி? : மகாராசன்


ஒரு தேசிய இனம் என்பதற்கான வரையறை என்ன? அதே தேசிய இனம் வாழ்கிற நிலப்பரப்பில் வாழ்கிற வேறு வேறு இனங்களை எவ்வாறு வரையறுப்பது? மொழிச் சிறுபான்மையினர், தேசிய இனச் சிறுபான்மையினர் என்போர் யார் யார் என்பதைக் குறித்தெல்லாம் பேசுவதும் எழுதுவதும் கருத்துரைப்பதும் இனவெறிவாதம் என்று பொத்தாம் பொதுவாக முத்திரை குத்துவது உண்டு.
மேற்குறித்த பொருண்மைகள் குறித்து மார்க்சிய ஆசான்களே தமது நூல்களில் திறம்படவும் தெளிவுடனும் விளக்கப்படுத்தி இருக்கிறார்கள்.
அவ்வகையில், மொழி குறித்தும் தேசிய இனம் குறித்தும் மார்க்சியம் அறிவியல்பூர்வமான விளக்கத்தை மிக விரிவாக முன்வைத்துள்ளது.
சமூகத்தின் இயங்குதலுக்கு மொழியின் இயங்கியல் குறித்து ஜே.வி.ஸ்டாலின் எழுதிய "மார்க்சியமும் மொழியியல் பிரச்சினைகளும்" எனும் நூல் முதன்மையானது. மொழியைக் குறித்து விவரித்த ஸ்டாலின் எழுதிய மற்றொரு நூல் "மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினைகளும் " என்பதாகும்.
மார்க்சியம் குறித்துப் பேசக்கூடியவர்களும் அறிவுலகத் தடத்தில் இயங்கக்கூடியவர்களும் திட்டமிட்டே கண்டு கொள்ளப்படாத அல்லது புறக்கணித்த நூல்கள் தான் மேற்குறித்த நூல்கள்.
வரலாற்றுக் கண்ணோட்டத்திலும் மார்க்சியத்தின் அடிப்படையிலும்தான் ஒரு தேசிய இனத்தின் அடையாளங்கள் வரையறுக்கப்படுகின்றன. அதே வேளையில், ஒரு தேசிய இனத்தோடு சமூக உறவு கொண்டிருக்கிற மற்ற இனத்தவரை - மொழியினரையும் எம்மாதிரியான வரையறுப்புக்குள் கொண்டு வருவது என்பதையும் மார்க்சியமே வழிகாட்டுகிறது. இந்தப் பின்புலத்தில் தான் தமிழர் என்கிற தமிழ்த் தேசிய இனம், தமிழ் அல்லாத மொழிச் சிறுபான்மையினர், தமிழர் அல்லாத இனச் சிறுபான்மையினர் பற்றிய கருத்தாடல்கள் அரசியல் வடிவம் பெற்று வருகின்றன. இது போன்ற கருத்தாடல்கள் தமிழ்ச் சமூக அறிவியலின் நீட்சியாகவும் வளர்ச்சியாகவுமே பார்க்கப்பட வேண்டும். இதை நேர்மையாகவும் திறந்த மனதோடும் வரலாற்றுப் புரிதலோடும் கருத்தாடுவதே மார்க்சியத்தின் பக்கம் நிற்பதாகும். எதன் காரணம் கொண்டும் இந்தக் கருத்தாடல்களை எதிர்ப்பதும் நிராகரிப்பதும் என்பது, மார்க்சியத்தை எதிர்ப்பதும் நிராகரிப்பதுமே ஆகும்.
இது போன்ற கருத்தாடல்களுக்கு உதவும் வகையில் மொழி குறித்தும் தேசிய இன விடுதலை குறித்தும் மார்க்சிய அடிப்படையிலான விளக்கத்தையும் புரிதலையும் தரக்கூடிய ஸ்டாலினின் நூல்களை விரிவான முன்னுரைக் குறிப்புகளுடன் தெளிவான உட் தலைப்புகளுடன் ஒரு சேரத் தொகுத்து
"மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சினைகளும்" எனும் தலைப்பிலான நூல் எனது தொகுப்பில் தோழமை  வெளியீடாய் வெளி வந்திருக்கிறது.
பின்னிணைப்பு:
தமிழர் தேசிய இன அடையாளம் குறித்த
தமிழர் முன்னணியின் வரைவறிக்கை.
தமிழர்கள், தமிழக தமிழீழத் தாயகங்களில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர். தனித்த மொழி, பண்பாடு, மரபு, கலை இலக்கியம், வரலாறு, சமயம், மெய்யியல் எனத் தனக்கான தனித்தன்மைகள், நாகரிகங்கள் கொண்ட மக்கள் சமூகம் தான் தமிழர்கள். இனங்களின் சமூகமான மாந்த சமூகத்தில் மூத்த இனங்களில் ஒன்றாகவும் மூல மரபினங்களில் ஒன்றாகவும் உள்ளனர். தமிழர்கள் அவர்களின் தாயகங்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகளைப் பார்த்தாலே நம் இனத்தைப் புரிந்துகொள்ள உதவும். பாவாணர் முன்வைத்த மாந்தம் பிறந்தகம் குமரிக்கண்டம் என்னும் ஆய்வும், இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை என்ற வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்பெறும் ராபர்ட் புரூஸ்பூட்டதால் அன்றைக்கு இருந்த சென்னை மாகாணத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த 459 பகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும் 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. இன்று சென்னையில் உள்ள பல்லாவரம்; திரிசூலம் மலைப்பகுதிளில் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கோடாரி களையும்; திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அருகே அத்திரப்பாக்கம் ஓடை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மனிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும் அவர்கள் வாழ்ந்த குடியம் குகையையும்,  திருநெல்வேலி மாவட்டம் தேரி பகுதியில் நுண் கற்காலக் கருவிகளையும் அதை உருவாக்கும் தொழிற்சாலைகளையும் கண்டு பிடிக்கப்பட்டது. இவர் சேகரித்த பழங்காலப் பொருட்கள் எல்லாம் திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி அருகே அருங்காட்சியகத்திலே உள்ளது.
தமிழர்கள் மூல மரபினங்களில் ஒன்று என்று அறிவுலகத்துக்கு ஒரு பிரிவினர் தங்கள் ஆய்வுகளை முன்வைத்துள்ளனர். இத்துணைக் கண்டத்தின் தொல்குடிகள் தமிழர்கள்தான் என்பதை நவீன மரபியல் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. அதையே அறிஞர் அம்பேத்கார் அவர்களும் தன் ஆய்வில் பதிவு செய்கிறார். தமிழர்களிடம் காணப்படக்கூடிய தாய்வீட்டில் தலைப்பிரசவம் என்ற மரபும்; சேய்வழி அழைத்தல் (பிள்ளையின் பெயர்கூறி அவரின் தந்தை என்று அழைப்பது) அப்பா பெரியப்பா சித்தப்பா என அனைவரையும் ஒரே மாதிரி அழைக்கும் வழக்கம், தமிழ் சமூகத்தில் காணப்படும் உறவு முறைகளும்; தாய்வழிச் சமூகத்தின் எச்சங்களாக, மக்களினங்கள் குறித்து ஆய்வு செய்த மார்கனும், பிரடெரிக் ஏங்கெல்சும் பதிவு செய்கின்றனர். இதன்மூலம் மனித குலத்தின் தொடக்கமான தாய்வழி சமூக நிலையிலிருந்தே தமிழர்கள் நீடித்து வருகின்றனர் என்பது உறுதியாகின்றது.
சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதை அங்கு கிடைத்த எழுத்துக்கள் சின்னங்கள் பிற ஆதாரங்களைக் கொண்டு அஸ்லோ பர்போலா உறுதிப்படுத்துகிறார். அசோகரின் சமகாலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் (கி.மு.250) கலிங்க மன்னர் காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு 113 ஆண்டுகள் தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பு நீடித்து வந்ததை சுட்டுகின்றது.
அதுபோலத் தமிழகத்தில் நடைபெற்ற அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர்..... அகழ்வாராய்ச்சிகள் இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், சுவடிகள், தமிழர்களின் தொன்மையையும் நாகரிகத்தையும் உறுதிப்படுத்துகின்றன.
நமக்குக் கிடைத்ததிலேயே மிகவும் பழைமையான தேர்ந்த செம்மையான சிந்தனை தொகுப்பாக உள்ள தொல்காப்பியம் அதன் வடிவத்திலேயே ( தமிழ் மொழி, தமிழ் எழுத்து, தமிழ் எண்) தமிழ் வளர்ச்சியின் அடையாளமாக உள்ளது. நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என உலகம் கடவுள் படைப்பு அன்று; தானே தோன்றியது, மண், நெருப்பு, தண்ணீர், காற்று, வானம் ஆகிய ஐந்து இயற்கைப் பொருள்களும் கலந்து உருவாகி இருப்பதே இவ்வுலகம் எனப்பாடும் தொல்காப்பியப் பாடல் இவ்வுலகத் தோற்றம் பற்றியும்,
ஒன்று  அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மன்னே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.
என உயிர்களின் அறிதல் வேறுபாடு குறித்த தொல்காப்பியர் பாடலும், சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்ற குறள் மூலம் உலகம் உருண்டை என்பதையும் அது சுழல்கிறது என்பதையும் சுட்டும் குறளும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்று பிறப்பால் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் குறளும் தமிழர்களின் அறிவு வளர்ச்சி மற்றும் உலகக் கண்ணோட்டம் குறித்த சான்றுகளாக உள்ளன.
""வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு'' என்ற தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்தின் மூலம் வட வேங்கடம் தென் குமரி தமிழ்உலகின் எல்லை என்பதையும், அதில் தமிழ் மொழி பேசப்படுகிறது என்பதையும், அதைப் பேசிய தமிழர்கள் அங்கு வாழ்ந்தனர் என்பதையும் தெளிவு படுத்துகிறது. இதையே பிந்தைய சங்க இலக்கியங்களும் தெளிவுபடுத்துகின்றன.
ஆறாம் நூற்றாண்டில் பாடப்பெற்ற தேவாரத்தில் உள்ள தமிழன் கண்டாய் ஆரியன் கண்டாய் என்ற வரி தமிழர்கள் இருப்பை உறுதி செய்வதோடு ஆரியரின் பரவலையும்; ஆரியர் தமிழருக்கு இடையிலான இனப்போராட்டத்தையும் உறுதிப்படுத்துகிறது.
செப்பு வினாவும் வழா அல் ஓம்பல் என்ற தொல்காப்பிய வரிக்கு 12‡ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய நச்சினார்க்கினியர் வினாவும் விடையும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக உன் நாடு எது என்று வினா எழுப்பினால் தமிழ்நாடு என்று கூறுவதே தெளிவான விடையாக இருக்கும் என விடையிறுக்கிறார். இதுவே தமிழ் மக்களின் வரலாறாக உள்ளது.
ஒருபுறம் தமிழர்கள் ஓரினம் என்ற நிலையில், அவர்களின் மொழி, மரபு, பண்பாடு, வரலாறு, கூட்டு நினைவு, பரஸ்பர உறவு, சார்பு என்பது பொது நிலையாகவும், மறுபுறம் அவர்களின் சமூக அரசியல் வாழ்வு பல்வேறு தேச நிலைகளில் கட்டப்பட்டு,  வேறுபட்ட நெருக்கடிகளையும் வேறுபட்ட சமூக அரசியல் அடிப்படைகளையும் கொண்டவர்களாக உள்ளார்கள். வரலாற்று வழியில் ஓர் இனம் என்ற வரையறுப்பு கொண்ட தமிழர்கள் அவர்களின் தேசிய சமூக அரசியல் இருப்பு நிலையைக் கொண்டு ஐந்து வகையாகப் பகுக்கலாம். 1. தமிழ்த்தேசிய இனம், 2. தேசிய இனச் சிறுபான்மையர், 3. மொழிச் சிறுபான்மையினர், 4. அகதிகள், 5. தேசங்கடந்து பணிபுரிவோர். முதல் இரண்டு நிலைகள் நிலைத்ததாகவும் மூன்றாவது நிலை ஒப்பீட்டளவில் நிலைத்ததாகவும், நான்கு மற்றும் ஐந்தாவது நிலைகள் தாயகத்தில் ஏற்படும் சமூக அரசியல் மாற்றங்களைச் சார்ந்தாகவும் உள்ளன.
ஒரு தேசியம், தேசிய இனம் என்பதற்கான தோழர் ஸ்டாலின் 1912இல் வகுத்தபடி 1. ஒரு பொதுமொழி, 2. பொது வரலாற்றுப் பிரதேசம், 3. பொதுப் பொருளாதாரத் தொடர்பு, 4. பொது மன இயல்பு ஆகிய வரைவிலக்கணங்களின்படியும் இதில் மாறுபட்ட, வேறுபட்ட இலக்கணங்களின்படியும் தமிழகத் தமிழர்கள் தமிழீழத் தமிழர்கள் தனித்த தேசிய இனத்திற்குரிய தகுதி நிலையில் உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரிசீயஸ், ரீ யூனியன், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, அந்தமான், கர்நாடகா, கேரளா, ஆந்திரத்தின் உள்ளகப் பகுதிகள் என பல தேசங்களில்  அத்தேசத்தின் தேசிய இனத்தை விட சிறுபான்மை எண்ணிக்கையில் உள்ளதால் இவர்கள் அத்தேசத்தில் தேசிய இனச் சிறுபான்மையினராக உள்ளனர்.
தமிழர்கள் தாயகத்தோடு கொண்டு கொடுத்தலையும் பொருளாதார உறவுகளையும் தனது தாயகத்தினையே நிலையானதாகக் கருதி வாழும் தேசங்களில் கலக்காமல் தன் மொழி இன அடையாளங்களைக் காத்துக் கொண்டு உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் மொழி இனச் சிறுபான்மையராக வரையறுக்கலாம்.
முதன்மையாக தமிழீழத்தில் நடந்த கட்டமைக்கப்பட்ட இனக்கொலையின் விளைவாக உலகம் முழுவதும் தஞ்சம் கோரி இன்றும் அந்நாடுகளில் குடியுரிமை பெறாத தமிழர்களை அகதி என்றும், இதே நிலையில் உள்ள வேறு தேசத் தமிழர்களையும் குறிக்கவும் இது பொருந்தும்.
தன் பிழைப்பிற்காக தேசம் கடந்து பணிபுரியும் தமிழர்களை தேசம் கடந்து பணிபுரிவோராக அழைக்கலாம்.
இனி ஒவ்வொரு நிலையாகப் பார்ப்போம்.
தமிழக தமிழ்த்தேசிய இனப் போராட்டம்
தமிழர்கள் உலகின் பல இன மக்களோடு வணிகம், அரசியல், பரிமாற்ற உறவுகளைக் கொண்டு இருந்தது போல், பிற இனத்தார்களும் தமிழகத்தோடு இவ்வுறவுகளைக் கொண்டிருந்தனர். இப்படி தமிழர்களும் தமிழகமும் உலகின் தனித் தீவாக இல்லாமல் உறவுகளோடு இருந்தாலும் தனக்கான தனித் தன்மைகளை உருவாக்கி வளர்த்து, பாதுகாத்துக் கொண்டு இருந்தனர். இவர்களோடு வேறுபட்ட எல்லாரோடும் உரையாடி உள்ளனர். இந்த உரையாடலில் சமணம் பவுத்தம், வேத மதத்தின ரோடான உரையாடல் முக்கியமானது. சமண பவுத்த வேத மதத்தினரோடான உரையாடலில் சிலவற்றை ஏற்றும் அடிப்படையில் மறுத்தும் உள்ளனர். வேத மதத்தைச் சேர்ந்த ஆரியர் குடியேற்றமும் அதன் செல்வாக்கும் பெருகும்போது அதற்கு எதிரான கருத்துப் போராட்டம் இனப்போராட்டமாகவும் மாறியது. 12ஆம் நூற்றாண்டு வரை கருத்தாக உலா வந்த ஆரிய பார்ப்பனியம், இசுலாமிய அரசுகளின் தெற்கு நோக்கிய பரவலுக்கு எதிராக ஆரிய பார்ப்பனிய தர்மங்களைக் கட்டிக் காக்க உருவாகிய விஜயநகரப் பேரரசிடம் தன் அரசதிகாரத்தை இழந்த தமிழ் இனமும் தமிழ் நிலமும் இன்றுவரை அரசதிகாரத்திற்காகப் போராடி வருகின்றன.
விஜயநகர ஆட்சி, நாயக்கர்கள் பாளையக் காரர்கள் ஆட்சியில் செழித்து வளர்ந்த பார்ப்பனிய அரசதிகாரத்திற்கு எதிராக இங்கு சித்தர் மரபுகள் தமிழர்களின் இனப்போராட்ட அடையாளமாக உள்ளன. தமிழகம் பிரிட்டிஷ் காலனியாக மாற்றப்பட்ட பிறகு எழுந்த பூலித்தேவன், மருதிருவர், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், குயிலி, வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா, சிங்காரவேலர், ஜீவா போன்றோரின் தாயக விடுதலைப் போராட்ட மரபும் இதே காலத்தில் உருவாகி வளர்ந்த ஆரிய பார்ப்பனிய இந்துமத உருவாக்கம், இந்திய உருவாக்கத்திற்கு எதிராக எழுந்த வள்ளலார் மரபும், தமிழ் பவுத்த மரபை முன்னிறுத்திய அயோத்திதாசப் பண்டிதர், நாத்திக பகுத்தறிவு மரபை முன்னிறுத்திய அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர், சி.தாமோதரம் பிள்ளை, உ.வே.சா. ஆகியோரின் தமிழ் நூல்கள் தொகுத்து பதிப்பித்த பணியும், தனித்தமிழ் மரபை முன்னிறுத்திய மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கமும், சாதி ஒழிப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சமூக ஜனநாயகத்தை வலியுறுத்திய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவு நாத்திக இயக்கமும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தமிழ் இஸ்லாமியர் உரிமை இயக்கங்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் விடுதலையையும், காலனிய எதிர்ப்பை முன்வைத்த பொதுவுடமை இயக்கமும் உருவாகி வளர்ந்தன.
வள்ளலார் தொடங்கி... ஈவெரா வரையிலான சமயம் மொழி சமூகத் தளத்தில் நடந்த இயங்குதலும் பூலித்தேவன் தொடங்கி பொதுவுடமை இயக்கங்கள் வரையிலான காலனிய எதிர்ப்பு இயங்குதலையும் தொகுத்து, பகுத்து சாரப்படுத்தினால் அன்று உருவாகி வந்த ஆரிய பார்ப்பனிய, இந்து, இந்திய எதிர்ப்பு என்ற பொதுத்தன்மையை வெளிப்படுத்துவதையும் பல்வேறு சிந்தனைப் போக்கின் முரண் இயக்கத்தில் தமிழ்த்தேசியம் வளர்ந்ததையும் காணலாம்.
இதன் வெளிப்பாடாக நவீன தமிழ்த்தேசிய விடுதலைக் கருத்தாக 1938இல் இந்தி எதிர்ப்பு இனப்போரில் அனைத்து போக்கினராலும் இணைந்து எழுப்பிய தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் பிறந்தது. இச்சசூழலையும் அதன் நவீன பொதுத்தன்மையையும் பற்றிப் பிடித்து முன் நகர்த்தியிருந்தால் காலனிய வெளியேற்றத்தின்போதே தமிழ்த்தேசம் மலர்ந்திருக்கும். ஒரு தேசிய இயக்கத்தின் மைய அச்சான தேசிய இன இயக்கம் இல்லாததன் காரணமாக அப்பொதுப்போக்கு அரசியல் அமைப்பு உருவாக்கம் நடந்தேறாமலே உருத்திரிந்தது. இப்பொதுப்போக்கின் துணைக்கூறுகளாக விளங்கிய சில சிந்தனைப் போக்கினரைத் தவிர பல்வேறு சிந்தனைப் போக்கினரும் பங்கு அரசியலில் மூழ்கியதும், திராவிடமாகவும், இந்தியமாகவும் திரிந்து போயினர்.
1942இல் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை முன்வைத்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு மக்களைத் திரட்டிய காங்கிரஸ் இயக்கம் பின்பு அதனைக் கைவிட்டது. காங்கிரஸ் தான் சொன்னபடி தேசிய இன அடிப்படையில் இந்தியாவை மறுசீரமைக்கத் தயாராக இருந்தால் தன்னுடைய பாகிஸ்தான் கோரிக்கையை கைவிடத் தயாராக இருந்தார் ஜின்னா. காங்கிரஸ் இக்கோரிக்கையை மறுக்கவே அரசியலாகவும் அமைப்பாகவும் மக்கள் திரட்டப்பட்டு இருந்ததால் பாகிஸ்தான் கோரிக்கை வென்றெடுக்கப்பட்டது. மற்ற இந்தியப் பகுதிகளில் தேசிய இனங்கள், தனித்தனியாக திரட்டப்படாததால் ஆளும், பிரிட்டிஷார் அன்று பல்வேறு அரசுகளாக இந்தியாவைப் பிரிக்கத் தயாராக இருந்தும் ஆரிய பார்ப்பன இந்து மத, இந்தி சக்திகளின் அரசியல், அமைப்பு செல்வாக்கும் நேரு பட்டேலின் தலைமையால், இந்து, இந்தி பெருமுதலாளிகளின் நலன்களுக்காக இந்திய தேசியம் உருவாக்கப்பட்டது.
இத்துணைக் கண்டத்தில் தேசிய இன வழிப்பட்ட பல தேசங்கள் முகிழ்ந்திருக்க வேண்டிய நிலையில் இந்து இஸ்லாமிய மத முரணைக் கட்டமைத்து, சாதி முரணைக் கட்டிக்காத்து ஆரிய பெருமையையும்? இந்தி பெரும்பான்மையையும் பயன்படுத்தி இன்று நிலவும் ஒற்றை ஆதிக்க இந்தியா கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் ஒற்றை ஆதிக்கக் கட்டமைப்பை தமிழத்தேசிய இனம் ஏற்றுக் கொண்டதா? 1947 ஆகஸ்ட் 15 (இந்திய விடுதலை நாள்) துக்க நாளாக அறிவிப்பு செய்தார் ஈவெரா இச்சூழலிலேயே தமிழகத்திற்கு சுய நிர்ணய உரிமையும் கூட்டாட்சியும் கோரினார் தமிழரசுக் கழகத்தைச் சேர்ந்த ம.பொ.சி. 1949இல் திராவிடநாடு கோரிக்கையோடு அண்ணா தலைமையில் திமுக தொடங்கப்பட்டு 1967 இல் ஆட்சியைக் கைப்பற்றியது. இதில் தமிழ்த் தேசிய இனத்தின் ஆற்றலே செயல்பட்டது. (திராவிட தத்துவம் மற்றும் அதன் தலைமையின் திரிந்த தன்மையும் இரட்டை குணாம்சமும் இன்றைய சரணாகதி அரசியலாக உள்ளது.) தட்சணப் பிரதேச எதிர்ப்புப் போராட்டம், தேசிய இன அடிப்படையில் தாயகத்தைத் திருத்தி அமைக்கக் கோரிய போராட்டம் ( மொழிவழி மாநில உரிமைக்கான போராட்டம், வடக்கு தெற்கு எல்லை மீட்புப் போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கனாரின் போராட்டம்,) தமிழரின: முகவரியாக மாறிப்போன பாவேந்தரின் வரிகளும், ஈ.வி.கே.சம்பத்தின் தமிழ்த் தேசியக் கட்சி உருவாக்கமும் சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி உருவாக்கமும், தேசிய மொழிக்கான உரிமைப் போராட்டம் (இந்தி எதிர்ப்புப் போராட்டம்) தேசிய இன சுயநிர்ணய உரிமையைக் கோட்பாட்டு அடிப்படையில் ஏற்ற இ.க.க (மா.லெ) கட்சி உருவாக்கமும், தனித்தமிழ்நாடு கோரிய பெருஞ்சித்திரனாரின் உலகத் தமிழின முன்னேற்றக் கழகமும், தமிழகத்தில் நடந்த அவசர நிலைக்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராட்டமும், தமிழ்நாடு விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு விடுதலைப்படை உருவாக்கமும் அதன் தொடர் செயல்பாடும், அவர்களின் ஈகமும், இந்தியப் படை தமிழீழத்தை ஆக்கிரமித்ததற்கு எதிராக தமிழகத்திலே எழுந்த ஈழ ஆதரவுப் போராட்டமும், சமூக நீதி, இட ஒதுக்கீட்டிற்கான போராட்டமும், அதன் பிறகு தமிழகத்தில் உருவான தன்னுரிமை, தமிழ்த்தேச விடுதலை, தமிழ்த்தேசிய விடுதலைப் புரட்சி ஆகிய லட்சியங்களோடு உருவான தமிழர் தேசிய இயக்கம், (தற்போது தமிழர் தேசிய முன்னணி) தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி (தற்போது தமிழ்த்தேசியப் பேரியக்கம்) தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ் தமிழர் இயக்கம் (தற்போது தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்) இப்படியாக இந்தியாவின் ஒற்றை ஆதிக்கத்தின் எதிர்ப்பு வரலாறாக தமிழகம் வினையாற்றியது. அதன் தொடர்ச்சியாக தற்காலத் தமிழகத்தில் நடைபெற்ற நடைபெறும் அணுஉலை, மீத்தேன், நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டங்கள், தமிழர் தாயகத்தில் தமிழர்கள் அனுமதி இல்லாமல் நடக்கும் இந்நாசகர திட்டங்களை தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம் என்றே போராடி வருகின்றனர். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நீர் உரிமைகளுக்கான போராட்டங்கள், தாயகத்துக்கு சேர வேண்டிய ஒவ்வொரு சொட்டு நீரும் தாயகத்தின் பகுதியே என்ற அடிப்படையில் நீர் உரிமைக்கான போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடக்கும் தமிழீழத்திற்கான ஆதரவு, இனக்கொலை எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர்கள் சார்ந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தமிழகமே தீர்மானிக்கும் என்ற அடிப்படையிலேயே போராட்டங்கள் நடைபெறுகின்றன. மூன்று தமிழர் மீதான தூக்கு, தமிழர் மீதான இந்தியாவின் தூக்காகவே கருதி, மரண தண்டனையை தமிழகம் முறியடித்தது. தமிழர்கள் அனைவரும் சம தகுதி உரிமை படைத்தவர்களே, அதற்கு மாறாக உள்ள பாகுபாட்டை ஒடுக்குமுறையை ஒழித்து சம தகுதி உரிமை உடைய சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்க வேண்டும் என்பதே இங்கு நடக்கும் சாதி ஒழிப்புப் போராட்டங்களின் சாரமாக உள்ளன. கச்சத் தீவு மீட்பு கடல் உரிமைப் போராட்டம்  என தற்போது தமிழக்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்துப் போராட்டங்களின் சாராம்சமும் தமிழர் தாயகப் பாதுகாப்பு, தேசிய இன உரிமைக்கான, தேசிய விடுதலைக்கான இனப் போராட்டங்களாகவே உள்ளன.
இந்தியக் கட்டமைப்பின் மூல ஆற்றலாக உள்ள ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி வகையறா தான் இன்று ஆட்சியைப் பிடித்து தங்களது ஆரிய ஆரிய, பார்ப்பன, பாசிச நோக்கங்களின் இறுதி அத்தியாயங்களை எழுதிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கெதிரான தமிழ்த்தேசிய இனத்தின் இனப்போராட்டத்தை தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமாகக் கட்டமைத்து முன் நகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசிய இனத்திற்கும் தமிழர்களுக்கும் அவர்களின் முன்னணி ஆற்றல்களாக விளங்கக் கூடியவர்களிடமுமே தங்கி இருக்கின்றது.
தமிழீழத் தமிழர்களின்
தேசிய இனப் போராட்டம்
தேசிய இன வரைவிலக்கணத்தின்படியும் ஈழத் தேசிய இனம் ஒரு தேசிய இனமாகவும் அதனைத் தன்னுணர்வுடன் முன்னெடுப்பதோடு வலியுறுத்தியும் நிற்கின்றனர். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகமும் தமிழீழமும் கடலால் பிரிக்கப்படுவதற்கு முன்பு ஒரே தாயக வரலாற்றையும் கற்கால, இடைக்கால மனித நாகரிகத்தையும் நிலம் கடலால் பிரிக்கப்பட்டாலும் குறிப்பான சில பண்புகளைத்தவிர இவர்கள் வரலாற்றில் இணைந்த பண்புகளைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.
தமிழகத்திற்கும் தமிழீழத்திற்குமான குறிப்பான வேறுபட்ட பண்பு இலங்கைத் தீவில் சிங்கள பவுத்தம் யீ தமிழர்கள் என்ற வகையில் ஒடுக்கும் இனமும் ஒடுக்கப்படும் இனமும் என முரண்பாடு அமைந்ததும், தன்னுடைய ஆரியப் பார்ப்பனிய இனச்சார்பை மறைத்து மழுப்பலாக பொதுவான அரசு எனக் காட்டிக்கொள்ளும் இந்திய அரசிலிருந்து வேறுபட்டு தான் ஒரு சிங்கள பவுத்த அரசு என்பதை இலங்கை அரசு வெளிப்படையாகக் கொண்டதும்தான் அவ்வேறுபாடு பிரிட்டிஷாரின் கிறித்துவப் பரப்பலுக்கு எதிராக சிங்களப் பகுதியில் உருவான சிங்கள பவுத்தப் பேரினவாதம், தமிழீழப் பகுதியில் உருவான தமிழ்ச்சமயத் தற்காப்பும்தான். இதன் காரணமாக இன முரண்பாடும் இனப் போராட்டமும் தெளிவாக முன்னேறியது. ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதை அது எப்போதும் பற்றி இருந்தது. (தமிழகத்தில் இருந்தது போன்ற பங்கு அரசியல், திரிந்த திராவிட இந்திய அரசியல் அங்கு இல்லை.)
இலங்கையை விட்டு வெளியேறிய பிரிட்டிஷாரிடம் தமிழர் தரப்பு 50:50 என்ற இன அடிப்படையிலான விகிதாச்சாரத்தை முன்னிறுத்தியதை. இனம் இரண்டென்றால் நாடு ஒன்று இனம் ஒன்றென்றால் நாடு இரண்டு என்ற கருத்தை அப்போதே முன் வைத்தது. ஆனால், சிங்கள் பேரினவாத சக்திகள் தன் கைக்கு அதிகாரம் மாறியபோது தமிழர்களின் தற்காப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டக் கூறுகளை நீக்கி தன் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புப் பணியைத் தொடங்கியது. தமிழர்களை மேலும் சிறுபான்மையினராக ஆக்கும் எண்ணத்தோடு மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து நாடற்றவர்களாக மாற்றி அதன் ஒரு பகுதியினரை இந்தியாவிற்குத் துரத்தியது. சிங்கள மொழிக்கு மட்டும் அரசதிகாரம், வாகனங்களில் ஸ்ரீ எழுத்துப் பொறிப்பு கட்டாயம், இன அடிப்படையில் கல்வியில் தரப்படுத்துதல் கொண்டு வந்தது. தமிழ்ச்சமய ஆலயங்களை அழித்தது, தமிழர் பகுதியில் சிங்கள வன்குடியேற்றங்களை நடத்தியது என அனைத்து வழிகளிலும் இன அழிப்பு வேலையை முன்னெடுத்தது. 50:50 என்ற இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைக் கோரிய தமிழர் தரப்பு ஒடுக்குமுறை தொடர்ச்சியாகக் கூடவே பெரும்பான்மைத் தமிழீழத் தமிழர்களால் வாக்களிக்கப்பட்டு வெற்றிபெறச் செய்யப்பட்ட 1976 வட்டுக் கோட்டைத் தீர்மானம்தான் தனித் தமிழீழமே ஈழத்தமிழர் சிக்கலுக்கு தீர்வு என்ற அரசியல் மாற்றத்தையும் அமைதி வழியிலான போராட்டம் தீர்வு தராது, ஆயுத வழிப் போரட்டமே தீர்வு என்ற போராட்ட வழி மாற்றத்தையும் கொண்டு வந்தது.
தமிழ் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் தோன்றினாலும் தமிழீழக் கோரிக்கை மீதான பிடிப்பும் தெளிவும் தியாகமும், போராட்ட ஆற்றலும், ஆகச்சிறந்த தலைமையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே இப்போராட்டத்தின் நாயகர்களாக விளங்கினர். எதிரியைத் தாக்குதல் என்ற எளிய வடிவத்தில் தொடங்கிய இப் போராடடம் தாயகத்தின் பெரும்பகுதியை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மாற்று அரசு அதிகார உறுப்புகளையும் முப்படைப் பிரிவுகளையும் உருவாக்கி தற்கால உலகத்தில் நடைபெற்று வரும் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் விளங்கியது.
புதிய இராணுவ அரசியல் கோட்பாட்டு உருவாக்கத்திற்கான மூல வளங்களைக் கொண்டதாக இப்போராட்டம் விளங்கியது. இப்பிராந்திய இந்திய சீன மேலாதிக்கத்தாலும், ஏகாதிபத்திய சக்திகள் சிங்களத்தோடு இணைந்து நடத்திய இன அழிப்புப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் அழிக்கப்பட்டதன்மூலம் அப்புகழ்ப் பெற்ற தேசிய விடுதலைப் போராட்டம் தமிழீழத் தாயகத்திலிருந்து உலகம் தழுவியதாக மாற்றப்பட்டுள்ளது.
தேசிய இனச் சிறுபான்மையினர், மொழிச்சிறுபான்மையினர்
மலேசியா, சிங்கப்பூர், பர்மா, மொரிசீயஸ், ரீ யூனியன், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, அந்தமான், கர்நாடகா, கேரளா, ஆந்திரத்தின் உள்ளகப் பகுதிகள் மற்றும் பல தேசங்களில் குடியேற்றப்பட்ட, குடியேறிய தேசங்களில் நிலைத்து விட்ட தமிழர்கள் அத்தேசங்களில் சமூகப் பொருளியல் அரசியல் வாழ்வில் இணைக்கப்பட்ட பகுதிகளாகவே உள்ளனர். அவர்களின் வரலாற்றுத் தாயகமாக தமிழகம், தமிழீழம் இருந்தாலும் குடிபெயர்க்கப்பட்ட அவர்களின் வாழ்வு அத்தேசங்களில் நிலைத்து விட்டாலும் அத்தேசமோ அவ்வரசுகளோ அவர்களை ஒரு சமூகமாகப் பார்த்து தேசிய இன மற்றும் மொழிச் சிறுபான்மையினராக அங்கீகரித்து அவர்களின் மொழி பண்பாடு சமயம் அரசியல், பொருளியல், உரிமைகள் என எதையும் அங்கீகரிக்காமல் உதிரிகளாக வைத்துள்ளது. இதன் விளைவாக அவர்கள் சிறுபான்மையினருக்குரிய எந்த உரிமைகளையும் பெறாத நிலையிலேயே உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் வாழும் தேசங்களில் கடைநிலை மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
அகதிகள் மற்றும் தொழிலாளர்கள்
சர்வதேச சட்டங்களால் அகதிகளுக்கு வழங்கும் உரிமை மற்றும் பாதுகாப்பு சில நாடுகளில் மட்டுமே கிடைக்கும் நிலையில் உள்ளது. பிற தேசங்களில் அதற்காக நாம் ஒருங்கிணைய வேண்டிய நிலையில் உள்ளோம். அதேபோல் 300 ஆண்டுகளுக்கு முன் கூலி இனமாக பல மணி நேரம் பணிவாக பணி செய்யும் இனமாக அறியப்பட்டது போலவே இன்றும் உலகமெங்கும் தமிழக கிராமங்களிலிருந்து சென்ற தமிழ் இளைஞர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு தொழிலாளர்களுக்கு உரிய உரிமையோ பாதுகாப்போ ஏதுமற்ற நிலையிலேயே உள்ளனர்.
தேசிய இனமாகவும் தேசிய இனச் சிறுபான்மையினராகவும், மொழி இனச் சிறுபான்மையானராகவும் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தகுதிக்குரிய உரிமையுடன் வாழ்கிறார்களா என்றால் இல்லை. அவர்கள் தேசத்தால் வேறுபட்டு வாழ்ந்தாலும் வேறுபட்ட ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டாலும் தாயகங்களுக்கு தேசிய விடுதலை, புறத்தில் தேசிய இன சிறுபான்மையினர் உரிமை, மொழி இனச் சிறுபான்மையினர் உரிமை அகதிகளுக்கான உரிமை என தீர்வழிகளிலும் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் மீதான ஒடுக்குமுறையின் தன்மை இன ஒடுக்குமுறை என்பதும், அதற்கு எதிரான போராட்ட வழி இனப்போராட்டமே என்பதேயாகும்.
மாந்த சமூகம் இனப்போராட்டம் வர்க்கப் போராட்டம் என்ற இரண்டுபோராட்ட வழிகளில் தான் தற்போதைய வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. இரண்டு போராட்ட வழிகளில் இனப்போராட்டமே மூத்தது. இயற்கையோடான போராட்டத்திலும் விலங்குகளுக்கு எதிரான வேட்டையிலும் பிற குழுக்களுக்கிடையிலான மோதலிலும் தன் குழுவிற்குள்ளே மொழி உள்ளிட்ட பொதுத்தன்மைகளை உருவாக்கிக் கொள்வதிலும்தான் இனமும் இனப் போராட்டமும் தொடங்கியது.
இப்போராட்டத்தின் அடிப்படை தனக்குப் புறத்திலிருந்து தன் குழுவைப் பாதுகாப்பதே. தன் குழுவைப் பாதுகாப்பதன் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே. தன் குழு என்ற நிலை உருவான பிறகும் அக்குழுவிற்கான மொழி பண்பாடு மரபு, கலை, இலக்கியம், இசை, மருத்துவம், நில எல்லை என ஒவ்வொன்றாக வளர்ந்து ஒரு பொதுத்தன்மை கொண்ட இனமும், அவ்வினத்தால் புழங்கக்கூடிய நில எல்லையாக தேசமும் உருவாகிறது.
இனங்கள் தோன்றி வளர்ந்து, ஆதிப் பொதுமைச் சமூகம் வளர்ந்து, வளர்ச்சியின் விளைவாக அதில் ஆளும் பிரிவு, ஆளப்படும் பிரிவு எனப் பிரிவு படுவதிலும்; போரில் தோற்ற குழுக்களை அடிமைகளாக மாற்றுவதின் வழியாகவும்தான் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் தொடங்குகின்றன. இதிலிருந்து சில தேச நிலைகளில் ஆண்டான் அடிமை முறையும், அதிலிருந்து நிலவுடைமை முறையும், சில தேச நிலைகளில் நேரடியாக நிலவுடைமை அமைப்பு முறையும் தோன்றுகிறது. இனத்தால், மொழியால், தேச எல்லைகளால் இணைக்கப்பட்ட தேசங்கள் உற்பத்தி முறையாலும் தேச அரசாலும் இறுதியாக மையப்படுத்தப்படுவது தேசிய முதலாளிய வகுப்புப் புரட்சி முதலாளியதேச உருவாக்கம் என்பதாக உள்ளது. (இதில் வேறுபட்ட சமூக வளர்ச்சி நிலைகளும் உள்ளன.) இந்த வகையிலேயே பிரெஞ்ச், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன், ருஷ்யா உள்ளிட்ட தேசங்களும் தேசிய அரசுகளும் உருவாகின. வர்க்கப் போராட்டம்தான் இவற்றை மையப்படுத்தப்பட்ட தேசிய அரசாக தேசிய சமூகமாக உருவாக்கினாலும் அதன் மொழி, நிலம், மரபு, பண்பாடு உள்ளிட்ட உள்ளடக்கங்களை இனமே தீர்மானித்தது.
இந்த முன்மாதிரிகள் தடையற்ற புறத் தலையீடற்ற சமூக வளர்ச்சியின் முன் மாதிரிகளாகவும், பிரிட்டனுக்கு எதிரான அயர்லாந்து விடுதலைப் போராட்டமும், வெள்ளை நிறவெறிக்கு எதிரான ஆப்பிரிக்கக் கருப்பினத்தவர்களின் போராட்டமும், ஜப்பானுக்கு எதிரான சீன விடுதலைப் போராட்டமும், பிரெஞ்ச் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான வியட்நாமிய விடுதலைப் போராட்டமும் புறத்திலிருந்து வரக்கூடிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான இனப்போராட்டத்தின் முன்மாதிரிகளாக உள்ளன.
நடைபெறுவது இனப்போராட்டமா, வர்க்கப் போராட்டமா என்பதை அத்தேசிய சமூகத்தின் வளர்ச்சி மற்றும் சுதந்திரத்தை புற மேலாதிக்கம் தடை செய்கிறதா, அக மேலாதிக்கம் தடை செய்கிறதா என்பதிலிருந்தே தெரிவு செய்யப்படுகிறது. இதில் இரண்டில் ஒன்று முன்னெடுக்கப்பட்டாலும் இன்னொன்று இல்லாமல் போய்விடுவதில்லை. மாறாக, முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாக அது மாறிவிடுகிறது.
நிலவுடமைக்கும் போர்ப்பிரபுகளுக்கம் எதிரான சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் விவசாயிகள், தொழிலாளர்கள், தலைமையில் நடந்த வர்க்கப் போராட்டம் ஜப்பானிய எதிர்ப்பு சீன தேசிய விடுதலைப் போராட்டத்தின்போது முந்தைய வர்க்க விரோதிகளான நிலப்பிரபுக்கள் மற்றும் போர்ப்பிரபுக்களில் ஒரு பிரிவினர் கோமிங்டாங் கட்சி உட்பட தேசிய விடுதலையின் நண்பர்களாக மாறினர். சீன தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாக அவ்வர்க்கப் போராட்டம் மாறியது.
இப்படிப் புறத்திலிருந்து எழும் முரண் பாட்டிலிருந்து இனப்போராட்டமும், வளர்ச்சியின் விளைவாக அகத்திலிருந்து எழும் வர்க்கப் போராட்டமும்தான் மனித சமூகத்தை வழிநடத்தி இருக்கின்றன.
மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் விளைவாக வேறு வகையில் கூறுவதெனில் மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் தங்களுடைய முதலாளிகளிடம் தோற்றதின் விளைவாக உருவானது ஏகாதிபத்தியம். அது உருவாகி சுரண்டலை பல தேசங்களுக்கு விரிவாக்கிய பிறகு நடக்கும் போராட்டங்களும் அதன் துணையோடு உருவாக்கப்பட்ட பல்தேசிய நாடுகள் (எ.கா இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான்) உருவாகி சுரண்டலை மேலாதிக்கத்தை பல தேசங்களுக்கு விரிவாக்கிய பிறகு நடக்கும் அனைத்து போராட்டங்களும் அயல் மேலாதிக்கத்திற்கு எதிரான தேசிய இனப் போராட்டங்களே. உலக முதலாளிகள், ஏகாதிபத்தியம், பன்னாட்டு முதலாளிகள் தொழிலாளிகளிடமிருந்து சுரண்டப்படும் உபரியை விட தேசங்களிடமிருந்து சூறை யாடப்படும் வளத்திலிருந்தே அவர்களுடைய அமைப்பு முறையைக் காத்து வருகிறார்கள். உபரி அவர்களுக்கு உபரியாக மாறிப்போனது. ஏகாதிபத்தியங்களின் மற்றும் பல்தேசிய நாடுகளின் இருப்பு மற்றும் உயிர் ஒடுக்கப்படும் தேசங்களில்தான் தங்கி இருக்கிறது. அதற்கு எதிரான இனப் போராட்டத்தினால் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல பத்து தேசங்களை உருவாக்கி இருக்கிறது. ஏகாதிபத்திய ஐரோப்பிய முதலாளிகள் நேரடிக் காலணி ஆதிக்கம் சேமநல அரசு, புதுக் காலனியம், நிதி மூலதன ஆதிக்கம், சூறையாடும் முதலாளியம் என உருமாறும் உலக முதலாளியம் இன்று உலகமயம் என்ற பெயரில் மூன்றாவது உலக யுத்தத்தை ஒடுக்கப்படும் இனங்கள் மற்றும்  தேசங்களுக்கு எதிராக நடத்திக்கொண்டு இருக்கிறது.
இப்போரிலேயே நம் இனம் அழிப்பிற்கும் விடுதலைப் போராட்டப் பின்னடைவுக்கும் உள்ளானது. ஈழ விடுதலை அதன் தேசியத் தளத்தில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதையும் அது சர்வ தேசத் தளத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் நமக்கு மறு உறுதி செய்திருக்கிறது. இந்த உண்மை இந்திய மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் தமிழ்த்தேசிய விடுதலைக்கும் பிற ஒடுக்கப்பட்ட தேசிய இன விடுதலைக்கும் பொருந்தும்.
தமிழர்கள் உலகம் முழுவதும் பரவியதை வரலாறு தமிழர்களுக்கும் கொடுத்த நல்வாய்ப்பாகக் கருதி தமிழர்கள் தங்களுக்குள் உலக அமைப்பாக உருவாகி பிற ஒடுக்கப்படும் இனங்களோடும் சுரண்டப்படும் மக்களோடும் இணைந்த புதிய அகிலத்தை உருவாக்கி காலமும் சூழலும் நமக்கு வழங்கும் நண்பர்களின் துணையோடு இன ஒடுக்குமுறை உலக அமைப்பிற்கு எதிராக தேசிய இன விடுதலை அரசியலை முன்னெடுப்பதோடு தங்களது தாயகங்களின் விடுதலைக்கும், தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும்.
ஏகாதிபத்தியங்களை நம் ஒடுக்கப்படும் தேசங் களில் வீழ்த்தி அவர்களின் சொந்த தேசங்களுக்குத் திருப்பி அனுப்பி அவர்களின் சொந்த சகோதரர்களால் சவ அடக்கம் செய்யத் துணை நிற்பதன் மூலமும்; சோசலிச தேசங்களைப் படைப்பதன் மூலமும் உலக சோசலிச சமூகம் படைப்பதற்கான போரட்டத்தை ஒடுக்கப்பட்ட இனங்களும் சுரண்டப்படும் மக்களும் இணைந்து முன் நகர்த்துவோம்.
இதுவே தமிழர் முன்னணியின் பார்வையும் நோக்கமும் ஆகும்.
இயங்கியல் கண்ணோட்டத்தில் இனப்போராட்டக் கோட்பாட்டை ஏற்று மக்கள் திரள் வழியில் தமிழர் பணி முடிக்க அன்போடு அழைக்கிறோம்.

செயப்பிரகாசு நாராயணன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
தமிழர் முன்னணி .

ஏர் மகாராசன்
17.03.2019.

சனி, 9 மார்ச், 2019

எழுத்தின் மீதான வருணப் பேதங்களும் தமிழின் தனித்த மரபும்: மகாராசன்


மனிதர்களைப் பாலினப் பாகுபாடுகளாக வகைப்படுத்தியதைப்போல எழுத்துகளையும் பாலினப் பாகுபாடு செய்துள்ள பாட்டியல் நூல்கள், வருணப் பொருத்தம் எனும் பெயரில் தமிழ் எழுத்துகளை நான்கு வருணங்களாகவும் பாகுபாடு செய்துள்ளன.

தொழில் நிமித்தமாக நிலவியிருந்த சமூக வேறுபாடுகளின் மீது பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகளாகக் கற்பிதம் செய்து,  பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் நால் வருணங்களாக முன்மொழிந்த வருணக் கற்பிதங்கள்போல எழுத்துகளுக்கும் வருணப் பாகுபாடுகளைக் கற்பித்துள்ளன பாட்டியல் நூல்கள்.

மறையோர், அரசர், வணிகர், சூத்திரர் என எழுத்துகளை நால் வருணங்களாக / சாதிகளாக அவை வரிசைப்படுத்திக் கொள்கின்றன.

ஒழியா உயிரனைத்தும் ஒற்று முதலாறும்
அழியா மறையோர்க்காம் என்பர்;- மொழியும்
அடைவே ஓராறும் அரசர்க்காம் என்பர்
படையாத சாதிகளின் பண்பு

என்கிறது வெண்பாப் பாட்டியல்.

இதனையே, அந்தண சாதிக்குரிய எழுத்துகள்; அரச சாதிக்குரிய எழுத்துகள் என வருணப்படுத்துகிறது பன்னிரு பாட்டியல்.

நறுமலர்த் திசைமுகன் ஈசன் நாரணன்
அறுமுகன் படைத்தன அந்தணர் சாதி;
இந்திரன் வெங்கதிர் சந்திரன் படைத்தன
துன்னரும் சிறப்பின் மன்னவர் சாதி

என்கிறது அது. அதாவது, அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய உயிர் பன்னிரண்டு எழுத்துகளும், ஒற்று முதல் ஆறும் என்கிற க், ங், ச், ஞ், ட், ண் ஆகிய மெய் எழுத்துகளும் மறையோர் / அந்தணர் / பார்ப்பனர் சாதி எழுத்துகளாகவும், கூறப்படுகிறது. மெய்யெழுத்துகளான த், ந், ப், ம், ய், ர் ஆகியன அரசர் /  மன்னர் / சத்திரியர் எழுத்துகளாகவும் கூறப்படுகிறது.

வணிக சாதிக்குரிய எழுத்துகள், சூத்திர சாதிக்குரிய எழுத்துகள் எனப் பாகுபடுத்தும்போது,

பண்பார் வணிகர்க்காம் பாங்கில் லவறனக்கள்
மண்பாவும் சூத்திரர்க்காம் மற்றையவை- நண்பால்
அரன் அரிசேய் மால் கதிர் கூற்றாய் மழை பொன் மெய்க்கும்
பிரமன் படைப்புயிர்க்குப் பேசு

என்கிறது வெண்பாப் பாட்டியல்.

இதையே, பன்னிரு பாட்டியல் கூறும்போது

திருமிகு நிதிக்கோன் வருணன் படைத்தன
அணி மிகு சிறப்பின் வணிகர் சாதி;
கூற்றுவன் படைத்தன கூற்றன இரண்டும்
ஏத்திய மரபின் சூத்திர சாதி

என்கிறது. அதாவது, ல், வ், ற், ன் என்னும் நான்கு மெய்யும் வணிகர் /  வைசிய சாதி எழுத்துகளாகவும், ழ், ள் என்னும் இரண்டும் சூத்திர சாதி எழுத்துகளாகவும் பாகுபடுத்தப்படுகிறது. இதையே,

பன்னீர் உயிரும் முன்னொற்று ஆறும்
மன்னிய அந்தணர் வருணமாகும்;
தநபமயர எனச் சாற்றிய ஆறும்
மன மகிழ் அரசர் வருணமாகும்;
லவறன என்னும் நான்கு புள்ளியும்
இவர்தரு வணிகர்க்கு எய்தும் என்ப;
ழ ள எனும் இரண்டும் வளமையர்க்காகும்

என்கிறது இலக்கண விளக்கப் பாட்டியல் நூல்.
தமிழ் எழுத்துகள் குறித்தும், அவற்றின் ஒலி மற்றும் வரிவடிவங்கள் குறித்தும், அவற்றின் வகைப்பாடுகள் குறித்தும் தமிழ் இலக்கண இலக்கிய மரபில் உள்ள விவரிப்புகள் காரண காரிய இயல்புகளைக் கொண்டிருப்பவை; மொழியின் இயங்கியல் தன்மையின் இயல்போடு பொருந்திப் போகின்றவை. தமிழ் எழுத்துகளின் ஒலி வடிவங்கள், வரிவடிவங்கள், அவற்றுக்கான பெயர்கள், வேறு வேறான காலங்களில் வேறு வேறான நிலைகளை அடைந்த எழுத்துகளின் பரிணாம வளர்ச்சிகள், தமிழ் எழுத்துகளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள், எழுத்து வகைகள், தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துகளின் பெயர், வகை, தொகை, விரிகள் எனச் சொல்லப்படுகின்றவை அனைத்தும் மொழியியல் எனும் அறிவுப் புலமாய் வடிவமைந்திருப்பவை; பிற்காலத்திய மொழியியல் கோட்பாடுகளுக்கெல்லாம் அடித்தளமாக அமைந்திருப்பவை.

மேலும், தமிழர் வாழ்வியல், தமிழர் பரவிய நிலத்தியல், வரலாற்றியல், தொல்லியல், பண்பாட்டியலோடு ஓர் உயிர்ப்பான உறவையும் அடையாளத்தையும் கொண்டிருப்பதாகவே தமிழ் எழுத்து மரபு இயங்கி வந்திருக்கிறது. இத்தகைய எழுத்து மரபின் வாயிலாகவே, தமிழரின் அறிவு மரபு காலந்தோறும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது. தமிழரின் எழுத்து மரபு பற்றிய விவரிப்புகளுக்குள் தமிழின் தனித்த பண்பாட்டுத் தன்மை பொதிந்திருப்பதைக் காண முடியும். அதாவது, தமிழ் மக்களின் பேச்சு வழக்காறுகளாலும் எழுத்து வழக்காறுகளாலும்தான் தமிழ் செழிப்படைந்து வந்திருக்கிறது.

தமிழர்கள் பல்வேறு இனக் குழுக்களாகவும், குலங்களாகவும், தொழில் மரபினராகவும், சமயத்தவர்களாகவும், சாதியினராகவும், வட்டாரத்தினராகவும் இருப்பினும், அத்தகைய அடையாளங்களோ சார்புத் தன்மையையோ தமிழின் எழுத்து மரபில் இல்லை. அதிகார மய்யங்களால் தமிழ் அரவணைக்கப்பட்டிருந்தாலும், ஒதுக்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும், அதிகாரச் சார்பின்றியும் துணையின்றியும்தான் தமிழால் தனித்து இயங்க முடிந்திருக்கிறது. வலியோருக்கு மட்டுமின்றி எளியோருக்கும் தமிழ் எழுத்துகள் ஓர் அறிவாயுதமாய்ப் பயன்பட்டு வந்திருக்கின்றன. அவ்வகையில், தமிழ் எழுத்து மரபிற்கு அரசதிகாரம் /  சமயம் / சாதி / வர்க்கம் /  பாலினம் /  வட்டாரம் சார்ந்த எவ்வகைச் சார்புத் தன்மைகளும் கிடையாது எனலாம்.

ஓவியங்கள், குறியீடுகள், ஒலி வடிவங்கள், வரிவடிவங்கள் என்பதன் நீட்சியாகவே எழுத்து என்கிற மரபும் ஒரு மொழியின் இயங்குதலுக்கு அடிப்படை. தமிழி, வட்டெழுத்து என வளர்ச்சி அல்லது மாற்ற நிலைகளை அடைந்து வந்த தமிழ் எழுத்து மரபில், பிற மொழி / சமயம் /  பண்பாடு /  அதிகார நுழைவுகளாலும் படையெடுப்புகளாலும் ஆட்சி மாற்றங்களாலும் கிரந்தம் என்கிற எழுத்துமுறை திரிபுகளை ஏற்படுத்தியது. கிரந்தம் செல்வாக்கு பெற்ற அதே இடைக்காலத்தில்தான், தமிழ் எழுத்துகள் குறித்த விவரிப்புகளில் திரிபுநிலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழ் எழுத்துகளின் ஒலி, வரிவடிவங்களின் காரண காரிய இயல்புகளுக்கு மாறாகவும் புறம்பாகவும் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் எழுத்து மரபுக்கு முரணான கற்பிதங்கள் பாட்டியல் உள்ளிட்ட பிற்காலத்திய இலக்கணங்கள் வாயிலாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, இடைக்காலத்தில் அரசதிகாரத் துணையுடன் செல்வாக்கு செலுத்திய சாதி / சமய / பாலின / வர்க்கப் பாகுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் எழுத்துகளின் வழியாகப் பரவலாக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், தமிழ் எழுத்துகளுக்கும் அத்தகையச் சாதி /  சமய / பாலின /  வர்க்கச் சாயல்களையும் அடையாளங்களையும் புகுத்த முனைந்திருப்பதின் வெளிப்பாடே பாட்டியல் உள்ளிட்ட இடைக்கால இலக்கண நூல்களின் உருவாக்கமாகும்.

அதாவது, தனித்ததோர் எழுத்து மரபாய்த் தமிழ் இருப்பதிலிருந்து, அதற்குச் சார்புத் தன்மையை உருவாக்குவதே அந்நூல்களின் பெருநோக்கமாய் இருந்திருக்கிறது. ஆயினும், தமிழ் எழுத்துகள் பற்றிய அத்தகையக் கற்பிதங்கள் தமிழ் எழுத்து மரபில் சிதைவுகளை ஏற்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மகாராசன் எழுதிய
தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு
நூலில் இருந்து...