சனி, 24 பிப்ரவரி, 2018

சோடை போகாத சொல் நிலம் :- பாவலர் வையவன்.


அண்மையில் தனது ஆறாவது படைப்பான ‘சொல் நிலம்’ கவிதைத் தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் தோழர் ‘ஏர்’ மகாராசன். நானும் எனது ஆறாவது தொகுப்பான ‘சொல் வெளி’ யை அனுப்பினேன். இருவருமே ‘சொல்’ குறித்து தலைப்பிட்டுருப்பதை ஒருகணம் எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இன்னும் கூட வேறு எவரேனும் வெளியிட்ட நூல்களின் தலைப்பில் ‘சொல்’ இருக்கக் கூடும். சொல் குறித்து சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது. நிலத்துக்காகப் போராடும் அதே வேலையில் நாம் நம் சொற்களுக்காகவும் போராடவேண்டிய தேவையிருக்கிறது என்பது என் கருத்து. எனது ‘சொல் வெளி’ சொல்லின் பரப்பைச் சொல்கிறது. மகாராசனின் ‘சொல் நிலம்’ சொல்லின் பொருண்மையைப் பேசுகிறது.

 பொதுவாக கதையோ கவிதையோ கொண்டு வெளிவரும் நூல்கள் அதன் உள் தலைப்புகளுள் ஏதேனும்  ஒன்றை நூலின் தலைப்பாகக் கொண்டு இலங்கும். இத்தொகுப்பில் ஐம்பத்தியிரண்டு தலைப்பில் கவிதைகள் உள்ளன. ஆனால், ‘சொல் நிலம்’ என்ற தலைப்பில் தனியாகக் கவிதை இல்லை. ஆனால் சொல்லைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் பல்வேறு கவிதைகள் மதுரையின் மண்மணத்தோடு பேசுகின்றன. அத்தனை கவிதைகளுமே தீவிர அரசியலை, பண்பாட்டைப் பேசுகின்றன.

 உலகச் சிக்கல்கள் எல்லவற்றையும் சுருக்கி ஒற்றைச்சொல்லில் சொல்ல வேண்டுமானால் “ஏற்றதாழ்வு”தான் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எப்போதும் வடக்கு நோக்கியே நிற்கும் காந்த முள்ளைப் போலவே, எப்போதும் வசதியானவர்கள் பக்கமே நிற்கிறது ‘ஆட்சி முள்’. எனவே,
 “எல்லா நாளும்
 பொழுதுகள் விடிந்தாலும்
 இல்லாதவர் வாழ்வையே
 கவ்விக்கொள்கிறது
 இருள்”
எனப் பேசும் இவர்கவிதை, மரநிழல் போர்த்திய காட்டின் குளுமையையும் மனித நிழல் போர்த்திய நாட்டின் வெம்மையையும் ஒப்பிட்டுக் காட்டி மலடு தட்டிப்போன வாழ்க்கையை மல்லாக்காகப் புரட்டிக் காட்டுகிறது.
 “நெல்லை விதைத்தவர்கள்
 சொல்லை விதைத்தார்கள்
 கூடவே தன்மானம் சேர்த்து”
என்னும் ‘செந்நெல் மனிதர்கள்’ கவிதை வெண்மணியின் வேதனையை வலியோடு விவரிக்கிறது. நிலம், உழைப்பு, கூலி என்பன மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள். ஆனால் இவையெல்லாம் மக்களிடமிருந்து எவ்வெவ்வழிகளில் சூரையாடப்பட்டன... படுகின்றன என்பதைப் பேசத்தான் கவிதைகளும் மற்ற படைப்புகளும். அதைத் தொகுப்பு முழுக்க நிறைவாகவே செய்திருக்கிறார் மகாராசன். அப்படி எழுதாத சொற்களை
 “கவித்தனம் காட்டவே
 எழுதிஎழுதித் தீர்க்கின்றன
 சொற்கள்”
எனச் சாடுகிறார். அண்மையில் சமூகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளுள் ஒன்று ஆணவப் படுகொலை. அதில் இவரது பார்வை சற்று விரிகிறது.
 “அதிகாரத்தின் ஆணவத்தால்
 கொல்லப்பட்டான் கோவலன்
 கள்வன் அவனில்லை என
 வழக்குரைத்து
 அதிகாரத்தைச் சாகடித்தாள்
 கண்ணகி...

 “ஆணவப் படுகொலைகளுக்கு
 காரணங்கள் தேவையில்லை
 சாமானியராய் இருத்தலே
 போதுமானது”
மகாராசனின் இந்நூல் மிகவும் கனமானது; அடர்த்தியானது; வலியானது. இதில் எல்லா கவிதைகளையுமே கொண்டாடவேண்டியிருக்கிறது. அதற்கு இவ்விடம் போதுமானதாயில்லை. சோடை போகாத சொல் நிலம் இது. இருப்பினும் இழப்பின் தவிப்போடு முடிகிறது நூல்
 “உழைப்புச் சொற்களால்
 நிலத்தை எழுதிப்போன
 அப்பனும் ஆத்தாவும்
 நெடும்பனைக்காடு நினைத்தே
 தவித்துக் கிடப்பார்கள்
 மண்ணுக்குள்”

 ஒரு சிறந்த நூலை அறிமுகம் செய்துவைக்க என்னுடைய இந்த சொற்கள் போதாது. அப்படித்தான் நான் உணர்கிறேன். வாங்கிப் படிக்கும்போதுதான் இதன் வன்மையை உணர முடியும். சிறந்த படைப்பு கொடுத்த... அதை எனக்கும் படிக்கக் கொடுத்த “ஏர்” மகாராசனுக்கு வாழ்த்துகள்!

               நூல்பெற: ‘ஏர்’, மகாராசன், 28.காந்தி நகர், செயமங்கலம், பெரியகுளம், 625 603 .
பேச: 94436 76082

புதன், 21 பிப்ரவரி, 2018

பள்ளுப்பாட்டின் குறியீட்டு அரசியல் : கருத்துரையும் பதிலுரையும்.

 நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூலைக் குறித்துத் தோழர் பாவெல் பாரதி பள்ளு இலக்கியத்தின் குறியீட்டு அரசியல் கட்டுரையை எழுதி இருந்தார். அந்தக் கட்டுரை குறித்துத் தோழர் சிறீரசா அவர்கள் கருத்துரை பதிந்திருந்தார். இதற்கு தோழர் பாவெல் பாரதி பதிலுரை அளித்துள்ளார். அவை வருமாறு.

சிறீரசா கருத்துரை:

 பள்ளு இலக்கியம் தோன்றிய களம் பற்றிய ஆய்வாகவும், அதில் வரும் சித்தரிப்புகள் பற்றிய புறநிலைப் பார்வையுடனான ஆய்வாகவும் அதனை வளர்த்தெடுத்தலே நம் காலத்தின் ஆய்வாளர்கள் செய்ய வேண்டியது. மாறாக, அந்தப் பனுவலுக்குள்ளே மட்டும் நின்று மல்லடிக்கும் வகை ஆய்வுகள் மார்க்சிய ஆய்வு முறையியலை வளர்ப்பதில்லை. தமிழகத்தின் நில அமைப்பு, அவை உடைமை கொள்ளப்பட்ட முறைகள், உற்பத்தி முறைகள், உற்பத்தியை அபகரிக்கும் முறைகள், உற்பத்திப் பங்கீடு முறைகள் பற்றிய எந்தவகையான புறநிலை ஆய்வுகளுமே இதுகாறும் செய்யப்படவில்லை. மாறாக, பனுவல்கள் சார்ந்த ஆய்வுகளைப் பனுவல்களுக்குள்ளேயே மட்டும் நின்று நிகழ்த்துவனவாகவே உள்ளன. சைவம், வைணவம் என்பதே கூட குறியீட்டு வகை மதங்கள்தான். சைவத்துக்கும் வைணவத்துக்குமான முரண் என்பதும குறியீட்டுவகை முரண்தான். அடிப்படை முரண்பாடாக வரலாற்றில் முதன் முதலில் எழுந்த பால் முரண்பாட்டின் குறியியலில் இருந்து அவை தோற்றம் கொள்கின்றன. பள்ளு இலக்கியத்தில் சொல்லப்படும் சைவ வைணவக் கூறுகளின் புறநிலைகள் 4, 5 ஆம் நூற்றாண்டுகளில் பக்தி இயக்கத்தின் தோற்றம் கொள்கின்றன. நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளோடு, அவற்றில் பால் சார்ந்த ஆண், பெண் குறியீட்டு ஆதி முரண் சார்ந்த கண்ணோட்டங்களும் முரண்களை உருவாக்குகின்றன. வைணவம் பெண் சார்ந்த குறியீடு என்றால், சைவம் ஆண் சார்ந்த குறியீடாக உள்ளது. அது மாமன் மச்சான் உறவாகிற குறியீடும் அதிலிருந்தே தோற்றம் கொள்கிறது. இடைக்காலத்தில் சமுகத்தின் பெரும்பிளவு இரு மதங்கள் சார்ந்த நிலவுடைமைப் பிரிவுகளாகத் தோற்றம் கொள்கிறபோது, அரசு முறையின் ஆதிக்கத்தில் அடங்கிப்போன அத்தனை உப கூறுகளும், குல முறைகளும், சைவ வைணவச் சார்பெடுக்கும் வகையில் தகவமைக்கப்பட்டன, அல்லது தகவமைந்து கொண்டன. நாட்டார் தெய்வங்கள், குல முறைக் கடவுள்கள் இத்தகைய தகவமைப்புக்குள்ளாயின. அவை நாட்டார் மரபியலோடு, சைவ, வைணவ அடையாளங்களையும் தரித்துக் கொண்டன. ஏற்கெனவே இங்கிருந்த கருப்பு, கிருஷ்ணன், விஷ்ணுவோடு இணக்கம் கண்டார், அல்லது வேஷங்கட்டப்பட்டார். அதுபோலவே தாய்த் தெய்வங்கள், பிற தெய்வங்கள் சிவன், ஈஸ்வரி போன்ற கடவுள் முறைகளோடு கணக்கில் சேர்க்கப்பட்டனர். நாட்டார் தெய்வ வழிபாடுகள் முழுக்க இன்றைக்கு இத்தகைய கலப்பு இன வழிபாடாகவே உள்ளன. அவை விநோதக் கலவைகளாக உள்ளன. அதுபோலவே பள்ளு இலக்கியத்தின் மாந்தர்களை வெறும் உழைப்பாளர் என்று சொல்வது சரியானதல்ல, அவர்கள் விவசாய உழைப்பாளர்கள், உழைப்பாளர் என்றார் அது நவீனத் தொழில் முறை சார்ந்த உழைப்பாளர்களைப் பொதுவில் குறிப்பதாக உள்ளன. விவசாயத் தொழிலாளர்களா? அல்லது விவசாயக் கூலிகளா என்பது போன்ற பதங்களை இலக்கியத்தின் வருணனைகள் மூலம் தெளிவுபடுத்திப் பயன்படுத்துவதே சிறந்தது. அதுபோலவே பிரித்தாளுதல் என்கிறது நவீன உத்தியல்ல, அவை பழஞ்சமூகத்திலிருந்து நவீன சமூகம் தனதாக்கிக் கொண்டவை. பள்ளு இலக்கியங்கள் இடைக்காலத் தமிழகத்தின் நிலவுடமைச் சமுக அமைப்பின் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள், உற்பத்திப் பொருட்கள், உற்பத்திப் பங்கீடு, உற்பத்திப் பண்பாடு, பண்பாட்டு உற்பத்தி போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய இலக்கியப் பிரதி. அதிலிருந்து, வானமாமாலை விட்ட இடத்திலிருந்து, நொபுரு கரோஷிமா போன்றவர்கள் தொட்டுத் தடவிச் சென்ற இடத்திலிருந்து, தமிழச் சமூக அமைப்பு பற்றிய புறநிலை ஆய்வைத் தொடர வேண்டிய கடப்பாடு மார்க்சிய ஆய்வாளர்களுக்கு உண்டு. அவர்களோடு நின்றால் கிட்டத்தட்ட ஆய்வுலகம் 50 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதென்றே பொருள்...


பாவெல் பாரதி பதிலுரை:

மார்க்சிய ஆய்வு முறையியலை வளர்க்க வேண்டிய அல்லது தேக்கத்தைப் போக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிற அக்கறை மிக்க பின்னூட்டம்.

ஆய்வு வளர்ச்சிக்கேற்ப பள்ளு பற்றிய ஆய்வு வளர்த்தெடுக்கப்படவில்லை. தமிழ் ஆய்வுச் சூழலில் அது நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில்தான் இக்கட்டுரைகளை மகாராசன் கொண்டுவந்துள்ளார்.

இன்று 50 ஆண்டுகளுக்கு முந்திய நொபுரு கரோஷிமாவே கூட இன்னும் வந்து சேர்ந்தபாடில்லை.  தற்பொழுதுதான் தமிழ் வாசகர்களுக்கு வந்து சேர்ந்துகொண்டிருக்கிறார். இன்னொரு கரோஷிமாவும் வானமாமலையும் உருவாகவும் இல்லை. என்பதுதான் தமிழ் ஆய்வுச் சூழல்.

சைவ, வைணவக் குறியீட்டம்சம் குறித்த உங்கள்  கருத்து மிக முக்கியமானது.

இந்தக்கட்டுரை நா.வா.அவர்களின் ஏழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை  அறிமுகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டதே!. கூடுதலாக பள்ளுப்பாட்டில் வரும் இரண்டு கூறுகளை மட்டும் எடுத்துக் கொண்டு  குறியீட்டுத் தன்மை எப்படி பள்ளுவில் இயக்கம் பெற்று அரசியலைப் பேசுகிறது என்று தொட்டுக்காட்டும் முயற்சிதான்.

பள்ளு இலக்கியம் என்ற வயல் சார் உற்பத்திபற்றிப் பேசும் பொழுது பயன்படுத்தப்படுகிற  உழைப்பாளர் என்ற பதம் பொருட்பிழையைக் கொடுத்து விடாது என்றே கருதுகிறேன். விரிவான கட்டுரையில் உழைப்பின் வகைமை குறித்தே தனித்து எழுதலாம்.

//திசை திருப்புவதுமாகச் செய்து கொண்டிருக்கிற நவீன நிர்வாகத் தந்திரத்தைத்தான் பள்ளு இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது.//

என்ற கருத்து பிரித்தாளுதல் நவீன உக்தியல்ல பழம் உக்தி என்ற உங்கள் பார்வையோடு  உடன் படுவதுதானே! தோழர்.

//தமிழகத்தின் நில அமைப்பு, அவை உடைமை கொள்ளப்பட்ட முறைகள், உற்பத்தி முறைகள், உற்பத்தியை அபகரிக்கும் முறைகள், உற்பத்திப் பங்கீடு முறைகள் பற்றிய எந்தவகையான புறநிலை ஆய்வுகளுமே இதுகாறும் செய்யப்படவில்லை.//

உண்மைதான். இதனை இடதுசாரி ஆய்வாளர்கள்தான் செய்யமுடியும்.

எனக்குத் தெரிந்து கிராமப்புறத்தில் நில உடைமை (Land holding) அதன் சமூகப் பின்னணி, கிராமப்புற உற்பத்தி உறவு நில உடைமை எப்படி அது கைமாறுகிறது  என்பது குறித்து 1977 ல் தமிழகத்தில் தேனி மாவட்டம் கோகிலாபுரம் என்ற ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து  ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாய்வைச் செய்தவர்கள் தற்போது கேரளாவின் திட்ட கமிசன் துணைத்தலைவராக உள்ள பொருளாதார வல்லுநர் தோழர் V.K.ராமச்சந்திரன், மதுரா சுவாமிநாதன்.(D/0 M.S.சுவாமிநாதன்- தற்போது V.K.ராமச்சந்திரன் மனைவி ) என்.ராம் உள்ளிட்ட அன்றைய மாணவர் குழு.

மீண்டும் 1999 ல்  IGDR மும்பை ,கொல்கத்தா ISI  நிறுவனம் ஆகிய ஆய்வு நிறுவனங்களில் அப்பொழுது முக்கியப் பொறுப்பில் இருந்த வி.கே.ராமச்சந்திரன். அவரது ஆய்வு மாணவர்களைக் கொண்டு Reasearch for Agrarian studies என்ற ஆய்வைச் செய்தார்.
அம்மாணவர்கள் பலர் .

நானும் என் சகோதரர் வழக்கறிஞர் பாலதண்டாயுதமும் அவர்களோடு 1999 ல் இரண்டுமாத காலம் அவ்வாய்வில் கலந்து கொண்டோம்.

எனது சகோதரர் ஜார்கண்ட், ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, மேற்கு வங்காளத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளிலும் அவர்களோடு கலந்து கொண்டார். இந்திய அளவில் கிராமப் புறச் சமூகத்தைப் புரிந்து கொள்ளும் மாதிரித் தரவாக V.K.ராமச்சந்திரன் அவர்கள் அதனை வளர்த்தார்.

இப்படியான ஆய்வுகளின் அடிப்படையை வரலாறு, இலக்கியங்களோடும்  ஒப்பிட்டு விரிக்க வேண்டியுள்ளது.
மொத்த பள்ளு இலக்கியத்தையும் தற்கால பல்துறை  ஆய்வுத் தரவுகளையும்  உள்வாங்கிக் கொண்டு மார்க்சிய நோக்கில் மறு ஆய்வுக்கு உட்படுத்தும் பணியைச் செய்யவேண்டி உள்ளது.

ஆரோக்கியமான பின்னூட்டத்திற்கு
நன்றி தோழர்.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

நிலத்தை உடுத்தியிருக்கும் நெல்லின் மணம் தான் சொல் நிலம் :- கூடல் தாரிக்

சொல் நிலம் -  மகாராசனின் முதற்கவிதை நூல்.முனைவர் பட்டம் பெற்ற ஒர்  உழவனின் நூலில் நிலம் இழத்தலின் வலியைத்தவிர வேறு பெரிதான வலி எதுவும் இருந்துவிடப்போகின்றது என்று சொல்ல இயலாது .அதனை விடவும் பெரிதாக வேறு எந்த வலி இருந்து விடப்போகின்றது.
   வயல் குறித்தும், உழவு குறித்தும்,விவசாயம் குறித்தும் கொந்தளிப்பான தருணத்தில் கவிதை எழுதிவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பும் மனநிலைக்கு அப்பாற்பட்டது,ஏர்பிடித்து உழுதவனின் கரங்களில் இருந்து வெளியாகும் வார்த்தைகள்.
    நிலத்தோடு தனது வாழ்வியலைப்பிணைத்துக்கொண்ட மனிதனின் மனநிலையில் கவிதைகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன.எந்த விதத்தாக்கமும் இல்லாமல் தனித்துவமான மொழிநடை கவிஞனின் தேர்ந்த ஆற்றலைப்புலப்படுத்துகின்றது.சுனாமியைக்குறித்தக்கவிதைக்கு அலை நிலம் என்று தலைப்பிட்டிருப்பது அனைத்தையும் நிலமாகவேப்பார்க்கும் மனநிலையைப்புலப்படுத்துகின்றது.நிலத்திலேயே தன் வாழ்வைத்தொலைத்தவனின் காதலும் தனிமையும் முளைப்பதுவும் பூப்பதுவுமான மானாவாரிக்காடு நீ /மழைக்கடுத்துச்செழிக்கும் எனதூர் மண்போல/ பாழ் நிலம் நினைத்துத்தவித்துக்கிடக்கும் கலப்பை போல் தனித்துப்போனது யாவும் / என்று நிலத்தோடு தொடர்புடையதாக வரிகளால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
     அன்றாட வாழ்வில் எளிமையாகப்பயன்படுத்தி விட்டு நகர்ந்து செல்லும் சொல்லுக்கும் அதனை வாழ்வியல் சூழலுக்குள் உட்புகுத்தி வெளிப்படுத்துபவனின் மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை சற்றும் வலி குறையாமல் பதித்துவிட்டுச்செல்கின்றன பல கவிதைகள்.விவசாயத்தைத்தவிர வேறெந்த தொழிலும் அறியாதவனிடம் அழுது கொண்டிருந்தாலும் /உழுது கொண்டே இருந்தாலும் இருவென்று /காலில் விழுந்து கிடக்கிறது நிலம்/.
     மண்ணை வாரி தூத்திப்போடவும் மனசில்லயே  மக்கா/ என்று கதறுபவனின் வார்த்தைகள் காற்றில் கலந்து கண்ணீரை சுவாசிக்க வைக்கின்றன.
     உடலில் மழை பூத்து /ஒழுக ஒழுக உழைப்பைக்கற்பதற்கும்/உழவு மழையில் நனைவதற்கும், உவர் நிலச்சிறுக்கியின்  செல்லச்சிணுங்கல்களை இரசிப்பதற்கும், களையெடுத்துக்காய்த்துப்போன கைகளால் கோதி விடும் கருப்பிகளின் வியர்வை நாற்றத்தை நுகர்வதற்கும் நடை பயிற்சிக்காக வரப்பில் நடப்பவனால் இயலாது நிலத்தவனால் தான் வாய்க்கப்பெறும். ஆனாலும் கவிஞனின் வரிகள் அதன் வலியை வாசிப்பவனுக்கும் உணர்த்து விடுகின்றன.
     நிலத்தை ஆத்தாளாகவே வர்ணிக்கும் கவிஞனும் நெடும் பனைக்காடு நினைத்தே மண்ணுக்குள் தவித்துக்கிடக்கும் அப்பனும் ஆத்தாளும்,மண்ணின் அருவி போல /முண்டியடுத்துப்பூத்து /சட்டென மேலே பறந்து இறக்கை உதிரக/்கீழே விழுந்து /அம்மணமாய் ஊர்ந்து திரியும் ஈசல்களும் செங்காட்டின் புழுதியை கண்களுக்குள் அப்பிவிடுகின்றார்கள்.
      விவசாய நிலத்தை இழந்து கொண்டிருப்பவனின் மனநிலையில் நிலமிழந்த அகதியின் மனநிலையையும், வெண்மணியின் வெப்பத்தையும் இணைத்திருப்பது நிலம் வாழ்க்கைத்தேவைக்கான குறியீடாக பதிவு செய்யப்பட்டுள்ளது தொகுப்பின் கூடுதல் பலம்.
   காற்றசைப்புகளில் /உதிர்ந்து விழுகிற/பன்னீர்ப்பூக்கள்/முகம் சிரித்துச்/செந்தரையில் கிடப்பதைப்போல/கூட்டமாய்ச் சலசலத்து/குரல் சிந்திய கூட்டிசை/காற்றில் கரைந்து/செவியில் நுழைந்து/செல்லத் துள்ளலாய்க்/கண்ணில் மணக்கின்றன/பூனைக் குருவிகள்/என்கின்றது தொகுப்பின் ஒரு கவிதை.எனக்கென்னவோ இத்தொகுப்பினை வாசித்து முடித்தவுடன் நிலத்தை உடுத்தியிருக்கும் நெல்லின் மணத்தைத்தான் நுகரமுடிகின்றது.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

பள்ளுப்பாட்டின் குறியீட்டு அரசியல்: நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி நூல் குறித்த திறனாய்வு :- பாவெல் பாரதி.






ஏர் மகாராசன் தொகுத்து வெளிவந்துள்ள "நா.வானமாமலையின் பள்ளுப்பாட்டு ஆராய்ச்சி" நூல் இரண்டு விதத்தில் கவனம் பெறுகிறது. ஒன்று இது நா.வா அவர்களின் நூற்றாண்டை நினைவு கூறுமுகமாக வெளிவந்திருப்பது. இரண்டு, அடிப்படைவாத ஆதிக்கச் சுரண்டல்  சக்திகள் விளிம்பு நிலைச் சமூகங்களை விழுங்க எத்தனிக்கும் இச்சூழலில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வியலை அவர்களின் இலக்கியப் பதிவுகளை விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலாக மாற்ற வேண்டிய தேவையை உணர்ந்து வினையாற்றியதற்காக!

தோழர் நா.வா அவர்கள் தமிழ்ச்சூழலில்  மார்க்சியத்தை ஆய்வு முறையியலாக ஆக்கியவர். செவ்வியல் இலக்கியங்களைத் தொகுத்த தமிழ்தாத்தா  உ.வே.சா.போல  நாட்டுப்புற இலக்கியங்களின் தந்தை என்று அறிஞர்களால் அழைக்கப்பட்டவர். தமிழக வரலாற்றை மக்கள் வரலாறாக எழுதுதல் என்ற  மாற்று வரலாற்றெழுதியல் கண்ணோட்டத்தை உருவாக்கியவர். தமிழகத்தில் செறிவான ஆய்வுப் பரம்பரையை உருவாக்கியவர். அவரின் நினைவை இந்நூற்றாண்டில் விதைத்த தோழர் மகாராசனும் ஆதி பதிப்பகமும்  பாராட்டுக்குரியவர்கள்.

நா.வா அவர்களால் 1956-57 காலத்தில் சரசுவதி இதழில் எழுதப்பட்ட  பள்ளுப்பாட்டு குறித்த ஏழுகட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
*பள்ளுப்பாட்டின் உள்ளடக்கம்;  *பள்ளுப்பாட்டின்தோற்றம்; *பள்ளுப்பாட்டு வளர்ச்சி; *பள்ளுப்பாட்டு மாறுதல்கள்; *பள்ளுப்பாட்டின் கதைப்போக்கு;
*பள்ளேசல்,
* பள்ளும் இணைவிழைச்சும் என்ற வரிசையில் அமைந்த  ஆய்வுக்கட்டுரைகள் இவை. இதில் முதலிரண்டு மற்றும் கடைசி ஆகிய மூன்று கட்டுரைகள் பள்ளுப்பாட்டு பற்றிய நல்ல அறிமுகத்தையும் அதன் தோற்றப் பின்னணியையும், இருபால் கவர்ச்சி இன்பங்குறித்தும் பேசுகின்றன.
அழகர் பெயரிலான கோயில் நிலத்தின் உழவு திணைக்களமே கதை நிகழிடம். 

மலைத்தோட்டத் தொழிலின் கங்காணியை 
( கண்காணி ) ஒத்த மருத நிலத்து பண்ணைக் கங்காணியான பண்ணைக்காரன், உழவின் ஆதாரமான குடிகளான பள்ளன், அவரின் இரண்டு மனைவிகளான மூத்த பள்ளி,  இளைய பள்ளி,  ஆகியோரே மையமான பாத்திரங்கள் . 

பண்ணையாரின் கொடுமைகளையும் , சுரண்டலையும் உழவுக்குடிகளின் பாடுகளையும், மனைவிகளின் முரண்களையும், சக்காளத்தி சண்டைகளையும்,   இளசுகளின் காதலையும், காமத்தையும், பண்ணைக்காரனின் இச்சையையும், பள்ளியர்களின் கிண்டலையும் பெருசுகளின் சில்மிசங்களையும், சேட்டைகளையும், அவற்றினூடாக அவர்களின் உயிர் நிலத்தோடு ஒட்டிக் கொள்வதற்காக  அடைந்து கொள்கிற சிற்சில இன்பங்களையும், துன்பங்களையும்  ஊடுதலையும் கூடுதலையும்  கொண்ட எதிர்பார்ப்பற்ற எளிய வாழ்க்கையை ஆடலுக்கேற்ற  இசைப்பாடலாக எளிய மொழியில் பாடுகிற பாடல்தான் பள்ளுப்பாட்டு.

உணவு உற்பத்தி காலம் தொட்டு உருவாகியிருக்கச் சாத்தியமுள்ள உழவுப் பாட்டின் தொடர்ச்சியாக பள்ளுப் பாட்டு இத்தகைய வடிவில் கி.பி. 17 ஆம் நூற்றாண்டு முதல் கிடைக்கிறது. பள்ளுப்பாட்டின் தோற்றம் குறித்துக் கூறும் நா.வா. அவர்கள் "மன்னர்கள் ஆதரவு தமிழ்ப் புலவர்களுக்கு கிட்டாது போன பிறமொழி ஆட்சிக்காலமான நாயக்க,  கன்னட , மராத்தி , நவாப்  காலத்தில் மக்களின் இப்பாடல் வடிவம் செய்யுள் வழக்குப் பெற்றிருக்கும் என்று கருதுகிறார் .

அன்றைய புலவர்கள் ஆட்சியாளர்களைக் காணச் செல்லும் பொழுது அவர்கள் கண்டும் காணாமல் வேறுவேலை செய்வதுபோல்  பாவனை செய்து புலவர்களை அலட்சியம் செய்தது குறித்து பின் இடைக்காலத்து புலவர் இராமச்சந்திர கவிராயர் பாடிய தனிப்பாடல் ஒன்றை நா.வா.வின் கருத்தோடு இணைத்துப் பார்க்கும் பொழுது பாடலுக்கு கூடுதல் புரிதல் கிடைக்கிறது.

*வணக்கம்வரும் சிலநேரம்
*குமர கண்ட
வலிப்புவரும் சிலநேரம்
*வலியச் செய்யக்
கணக்குவரும் சிலநேரம்
*வேட்டை நாய்போல்
கடிக்கவரும் சிலநேரம்
*கயவர்க்கெல்லாம் இணக்கம் வரும்படி தமிழைப் பாடிப்பாடி எத்தனை நாள் திரிந்து திரிந்து உழல்வேன் ஐயா!
என்று புலவர்களின் நிலையை நொந்து இறைவனிடம் முறையிடும் வகையில் ராமச்சந்திர கவிராயர் பாடியிருப்பது தெரிகிறது.  பள்ளு உருவாகிய இதே காலகட்டத்தில்தான் மக்கள் இலக்கியங்களான குறவஞ்சியும், நொண்டி நாடகமும் தலையெடுத்துள்ளன.

மக்கள் செல்வாக்கு மிக்க பண்பாட்டு கலாச்சார அம்சங்களை ஆளும் வர்க்கம் உட்செறித்து  தமக்கானதாக மாற்றி தமது ஆளும் வர்க்கப் பாண்டின் உப கூறாக்கி தம் அடுக்கு வரிசைக் கூம்பில் ஓர் இடத்தை வழங்கி மேலாண்மை செய்யும் தந்திரத்தைக் காலம் முழுவதும் செய்து கொண்டுதான் இருக்கிறது. நமது நாட்டார் கடவுளர்  பலர் நிறுவன வைதீக , அவைதீக மதங்களின் பரிவாரங்களாக மாற்றப்பட்டது போல் பல கலை இலக்கிய வடிவங்களும் அப்படி உள்ளிழுக்கப் பட்டவைதான்.

மூன்று முதல் ஆறு வரையிலான நான்கு கட்டுரைகளில் இத்தகைய    அவதானிப்பு மிகமுக்கியமானது. மக்கள் கலையான முக்கூடற் பள்ளுவின் தாக்கம் பெற்று  ஆளும் வர்க்கத்தின் கருத்தியலை பள்ளு வடிவத்திற்குள் எப்படி திணிக்கிறது என்பதையும் ஒப்பிட்டு வர்க்கப்பார்வையில் விளக்கியிருப்பது சிறப்பு.

பள்ளுப்பாட்டு வடிவம் நாடகவடிவம் பெற்று  அதன் தாக்கம் தமிழகம் தாண்டியும்  யாழ்ப்பாணம் வரை பரவியுள்ளதோடு ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளுப்பாடல்கள் தோன்றியுள்ளன . பள்ளுப் பாட்டு வடிவம் மக்களிடத்தில் பெற்ற செல்வாக்கால் பல்வேறு நாட்டார் கோவில்களிலும் விழாக்களிலும் நிகழ்த்தப்படுகிற வடிவமாகியது. திருநெல்வேலிப் பகுதி வைணவக் கோயில்களில் உற்சவங்களின் போது கோயில் கணிகையர்களால் பள்ளுப்பாட்டு நடனம் ஆடும் வழக்கம் உருவாகிற அளவிற்குச் செல்வாக்கு செலுத்தியுள்ளது.  அதுமட்டுமல்ல ஸ்ரீரங்கம் கோயில்களில் இன்றும் பள்ளு உற்சவம் நடைபெறுகிறது என்றும் ஆனால் பாடல் வரிகள் மௌனிக்கப்பட்டு வெறும் தாள இசைக்கேற்ப அரையர் ஒருவர் ஆடிவருகிற அளவில் உற்சவம் மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் நா.வா.

முக்கூடற்பள்ளுவும் குருகூர்ப் பள்ளுவும் அடிப்படையில் மாறுபடுகிற விதம் குறித்து நா.வா. அவர்களின் ஒப்பீடு இங்கு கருதத்தக்கது.

பள்ளரின் உயிர்ப்பான உழவு வாழ்வை அனுதாபத்தோடு சித்தரித்த உழைக்கும் வர்க்கத்தை கதைப் பொருளாகக் கொண்டது முக்கூடற்பள்ளு. கதைப் பொருளை நீர்த்துப் போகச்செய்து வெறும் கவிதைச் சிறப்பையும் வருணனைச் சிறப்பையும் மட்டும் கொண்டுள்ளதாக மாற்றப்பட்ட அதிகாரவர்க்கத்தின் குரல்தான்  குருகூர்ப் பள்ளு.

முக்கூடற்பள்ளிலே தங்கள் உழைப்பைக்குறித்தும் மூத்த குடியில் பிறந்தது பற்றியும் பெருமிதம் கொள்ளும் இயல்பான மாந்தரைப் படைத்திருக்க குருகூர்ப் பள்ளோ சிற்றிடையும், சிலம்பும் அணிந்த தெய்வப் பெண்ணரசியாகவும்  தங்கள் உழவுப் பண்பாட்டையும் குலப் பெருமைகளையும் பேசாமல் பக்திப் பிரவாகத்தில் சூழ்ந்து பழைய புராணக்கதைகளைப் பாராயணம் செய்யும் ; திருமால் பெருமைகளைப் பேசும் பக்தி முத்திய பள்ளன் பள்ளியரைப் படைத்திருக்கிறது. குறிப்பாக
சிற்றிடையும், சிலம்பும் அணிந்த தெய்வப் பெண்ணரசியாகவும் பள்ளியரைக் காட்டுகிறது.

முக்கூடற்பள்ளுவில் தெய்வ வணக்கத்தில்  அவர்களின் தெய்வமான பூலாவுடையார், குமுக்காவுடையார், புலியூருடையார், வடக்குவாய்ச்செல்லி ஆகியோரையும் அழகரையும் ஒரு வரிசையில் நிறுத்தி அவர்களுக்கு தேங்காயும், கரும்பும், கிடாயும், சாராயமும், கள்ளும் படைத்து வணங்க ; குருகூர்ப் பள்ளுவோ,  பள்ளர்கள் வணங்கும் தெய்வத்தையும் நம்மாழ்வாரையும் ஒரே வரிசையில் வைக்க மனம் கூசி தெய்வ வணக்கத்தை இரண்டு அடியில் முடித்து விடுகிறார்.

முக்கூடற்பள்ளு , மழைபெய்தால் குதித்தோடி வேலைக்குச் செல்வதாக பள்ளர்களைப் படைக்க குருகூர்ப்பள்ளு பள்ளர்கள் சோம்பேறிகள் வேலைக்கு ஒளிப்பவர்கள், அடித்துத்தான் வேலை வாங்க வேண்டும் என்ற கருத்தை உருவாக்க முயல்கிறது.
அதேபோல முக்கூடற்பள்ளு பள்ளன் உழுதல், விதைத்தல் ,முளைத்தல், நீர்பாய்ச்சுதல் , நாற்று விளைத்தல், முளைத்த நாற்றின் முகங்கண்டு , குழந்தை முகம் கண்டு  பிள்ளைப் பேற்றின் வலி மறந்த தாயாய் மகிழ்ச்சி அடைந்தான் என்று உழவனின் மகிழ்ச்சியைப் படம் பிடிக்கிறது. குருகூர்ப் பள்ளு 'விதைத்த விதை வெள்ளி முளை போலரும்பி பசுமையாக மாறிற்று ' என்று ஒட்டாமல் கூறி கடந்து போகிறது. இதுதான் உழுதுண்பானுக்கும் உழுவித்துண்பானுக்கும் உள்ள ஈடுபாடு வேறுபடுமிடம்.

பள்ளேசல் என்ற பகுதி பள்ளுப்பாட்டின் முக்கியமான வடிவம். உழவு அறுவடை முடிந்து பள்ளியர்களுக்கு பங்கு கொடுக்கும் பொழுது இரண்டு பள்ளியர்களுக்கு இடையே சண்டை ஏற்படுவதும்   இறுதியில் சண்டை  சமாதானம் ஆவதும் பற்றியது. எப்படிச் சமாதானம் ஆகிறது என்பதுதான் நாம் இங்கே காணவேண்டியது. 

முக்கூடற்பள்ளுவில் இரண்டு  பள்ளியர்கள் தாமே சமாதானமடைகின்றனர். திருக்கோஷ்டியூர் திருப்பத்தூர் பள்ளுவில் கணவன் சமாதானம் செய்து வைக்கிறான். குருகூர் பள்ளிலோ பண்ணைக்காரன் சமாதானம் செய்து வைக்கிறான். முக்கூடற் பள்ளில் பள்ளியர் தாங்கள் பொறுப்புணர்ந்து குடும்ப வாழ்க்கையைக் கருதியும் கிளைஞரது நன்மையைக் கருதியும் ஒன்று  சேர்கிற சமாதானமும் சகிப்புத்தன்மையும் மிகுந்த பெண்ணாக படைக்கப்பட்டுள்ளாள்.
திருக்கோட்டியூர் திருப்பத்தூர் பள்ளில் தங்கள் அறிவின் திறத்தினால் சண்டையை நிறுத்தாமல் கணவன் சொல்லை மீறமுடியாமல் கணவன் சொல்லி சமாதானமடைகிற ஆணுக்கடங்கிய பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள். குருகூர்ப் பள்ளோ பள்ளியர் தாழ்ந்தவர்கள்; சண்டை போடுவது அவர்கள் இயற்கை; மாடுகள் சண்டை போட்டால் சொந்தக்காரன் பிரித்துவிடுவது போல பண்ணைக்காரன் பிரித்து வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீதி வழங்கும்  பொருப்பை பண்ணைக்காரனுக்கு வழங்கி அடிமையாக பெண்ணாகப்  படைக்கப்பட்டுள்ளாள்.
இதிலிருந்து கலையைக் கையாள்கிறவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

இனி விவாதக்குறிப்பு:
----------------------------------------
முக்கூடற்பள்ளு இலக்கியத்தில் வரும் பள்ளியர்கள் பாத்திர அமைப்பு  வெறும் குடும்பச் சண்டை என்று  எளிதாகக் கடந்து செல்லக் கூடியதாகத் தெரியவில்லை. அது ஆழமான அரசியல் பேசுவதற்காகவே அமைக்கப்பட்ட பாத்திரங்களோ! என்று கருதவேண்டியுள்ளது. அவை பேசும் இரண்டு விசயங்களை இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒன்று இவர்களின் சமயம் தொடர்பான வர்ணிப்பு மற்றும் சண்டை,  இரண்டு உழைப்புக்காகப் பெறுகின்ற கூலி  தொடர்பான சண்டை.
இரண்டு பள்ளியர்களில் மூத்தவள் வைணவ சமயம் சார்ந்தவளாகவும், இளையவள் சைவ சமயம் சார்ந்தவளாகவும் இருக்கிறாள்.

மூத்த பள்ளி
" நெற்றியில் இடும் மஞ்சணப் பொட்டும் ; மற்றொரு திருநாமப் பொட்டும்  "அணிந்தவளாக இருக்கிறாள்.
இளைய பள்ளி
" மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க ;
சிறியநுதல் பிறை வெண்ணீற்றுக் குறியொளி வீச " வருகிறாள்.
இவர்களுக்குள் நடக்கிற சண்டை  தனி நபர் தாக்குதலையும் தாண்டி வணங்குகிற  கடவுளர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கத் துவங்குகிறார்கள்.

வைணவ சமயத்தினளான மூத்த பள்ளி
" நரி தான் பரியாகச் சாதித்தானும் சம்பு வல்லோடி ? " என்று இளைய பள்ளி வணங்கும் சிவபெருமான் நரியைக் குதிரையாக்கிய கதையை காட்டி ஜாலவித்தை சிவனுக்கும் அவனடியார்களுக்குமே கைப்பழக்கமானது. என்று இடித்துரைக்கிறாள்.

இளைய பள்ளி " கல்லைப் பெண்ணாகச் சாதித்தான் உங்கள் பொம்மானல் லோடி " என்று திருமாலைக் கிண்டல் செய்கிறாள்.
மீண்டும் மூத்த பள்ளி , " ஏற ஒரு வாகனமும் இல்லாமையினால் - மாட்டில் ஏறியே திரிந்தானுங்கள் ஈசனல்லோடி " எனறு கூற பதிலுக்கு இளைய பள்ளி " மாடு தானுமில்லாமல் - பட்சி மீதிலேறிக் கொண்டானுங்கள் கீதனல்லோடி. என்று கூறுகிறாள்.

அடுத்து மூத்த பள்ளி ," சுற்றிக்கட்ட நாலுமுழத் துண்டுமில்லாமல் - புலித் தோலையுடுத் தானுங்கள் சோதியல் லோடி ? " என்று கூற , இளைய பள்ளி  ," கற்றைச் சடைகடி மரவுரியுஞ் சேலைதான் - பண்டு கட்டிக் கொண்டான் உங்கள் சங்குக் கையனல்லோடி ? " என்று கூறுகிறாள். இவ்வாறு இருவரும் மாறி மாறி சிவனையும், திருமாலையும் புராணக் கதைகளைக் கூறி வம்புக்கிழுக்கிறார்கள்.

இங்கு பள்ளனின் மனைவியாகிய இருவரும் முறையே வைணவ , சைவ சமயச்சார்பானவர்களாக இருப்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது. சைவ வைணவச் சண்டையை எப்படிப் புரிந்து கொள்வது.

இரு குழுச் சமூகமுறைச் சாதி அல்லது பழங்குடிகளில் சில பிரிவினரின் இரு குழுக்கள் சைவ கடவுளின் பேரிலும் . மற்றொரு குழு   வைணவ கடவுளின் பேரிலும் இருக்கும். அப்படியானால் பள்ளர்கள் இரு குழுச்சமூக முறையினர் தானா? என்பதை காணவேண்டும்.

ஆதி உடைமைச் சமூகத்தில் காணப்பட்ட தொல்குடிகள் பலவற்றில் தொடக்கத்தில் ஒரு சமூகம் இரண்டு பெருங்குழுக்களாக மட்டுமே பிரிந்து அவ்விரு குழுக்களுக்கிடையில் பெண்களைத் திருமணத்தின் வழியாகப் பகிர்ந்து கொள்ளும் முறை இருந்தது என்பதை ஏங்கெல்ஸ் ஆய்வு செய்துள்ளார். இதனை இருகுழுச்சமூகமுறை என்பர்.
இரு குழுச்சமூக முறை கொண்ட சாதி மற்றும் பழங்குடிகளில்  குடி வழியைத் தொடர்புபடுத்துவதற்கும் மண உறவை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு குழுவை வைணவக் குழுவாகவும் மற்றொரு குழுவை சைவக்குழுவாகவும் கருதப்படுகிற மரபு இருப்பதை இனவரைவியல் தரவுகள் மூலம் அறியலாம்.

மலையாளிப் பழங்குடியினர் பெருமாள் கூட்டம் அண்ணாமலையார் கூட்டம் என இரு குழுக்களாக அழைக்கப்படுகின்றனர்.
மலை வெள்ளாளரிடம் உள்ள இரண்டு கூட்டங்களில் ஒரு குழு அரபுலீஸ்வரரையும் மற்றொரு குழு ரங்கநாதரையும் வழிபடுகின்ற குழுக்களாக உள்ளன. கோட்டைப் பிள்ளைமார் சாதியினர் திருநீர்க்காரர்கள், திருநாமக்காரர்கள் எனும் இரு பிரிவினராகக் கருதப்படுகின்றனர்.  அதேபோல் விழுப்புரம் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் கே.நல்லூரில் வசிக்கும் வன்னியர்களும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மஞ்சைக்கொல்லை கிராமத்தில் வசிக்கும் வன்னியர்களும் சைவ வைணவப்பிரிவை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்குள் மண உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அனுப்பர்களிடம் பெரிய ஓலை, சிறிய ஓலை என்னும் இரண்டு அகமணப்பெருங்கூட்டங்கள் உள்ளன. காப்பிலியர்களிடம் தர்மகட்டு, மூனுகட்டு ஆகிய இரண்டு அகமணப் பெருங்குழுவினராகப் பாகுபடுகின்றனர். இவர்களும் சைவ வைணவக் குழுவினராகப் பாகுபடுகின்றனர்.  ( இவர்களிடம் சைவம் வைணவம் எப்படிப் புகுந்தது என்பது தனித்து விவாதிக்கப்படவேண்டிய அரசியல்.)
சைவ வைணவப் பிரிவுகள் என்னும் நிலையில் அல்லாது இரு குழுச்சமூகமுறை காணிக்காரர், குறும்பர் போன்ற பழங்குடியினரிடமும் வேலமர், செட்டியார் சாதுசெட்டியார் சாதிகளிடமும் உள்ளது.
இப்படியான சமய அடிப்படையிலோ அல்லது சமூக  அடிப்படையிலோ இயங்குகிற இருகுழுச் சமூக முறைப் பழங்குடிகளையும் சாதிகளையும் காணலாம்.

ஆனால் பள்ளர் சாதியை சைவ வைணவ  இரு குழுச்சமூகமாக வகைப்படுத்தமுடியுமா? என்ற கேள்வி எழுகிறது. ஆதிப் பொதுவுடைமைச்சமூகம் தொடங்கி  வேளாண்மைச் சமூகமாக உருமாறிய நீண்டகாலப் படிமலர்ச்சியில் இரு குழுச்சமூகமுறையில் இருந்து பல்வேறு கால்வழிக்குழுக்கள் கொண்ட சமூகமுறை வரை தோன்றியுள்ளது.

"கள்ளர்களிடமும் பறையர்களிடமும் முறையே 370, 260 க்கும் மேற்பட்ட கால்வழிக் குழுக்கள் உள்ளன. பண்டைக்காலத்தில் இவ்விரு குடிகளும் வேளாண்குடிகளாக இருந்ததாலேயே இவர்களிடம் நூற்றுக்கணக்கான கால்வழிக்குழுக்கள் இருந்துள்ளன" என்கின்றனர் இன வரைவியலாளர்கள்.

"ஒரு சமூகம் சிறு சிறு வட்டாரங்களின் மீதும் அங்குள்ள நிலங்களின் மீதும் பெறுகின்ற உரிமையாலேயே கால்வழிக் குழுக்களின் பெருக்கம் ஏற்படுகிறது.  வேளாண்குடிகளிடமே நூற்றுக்கணக்கான கால்வழிக்குழுக்கள் இருந்துள்ளன. "
என்ற இனவரைவியல் உண்மை , உழவுக்குடிகளான பள்ளர்களுக்கும் சேர்த்துத்தான்.

"சிந்திய எள்ளை எண்ணினாலும் பள்ளர் வகையை எண்ண முடியாது." என்ற வழக்கும் பள்ளர்கள் இரு வழிச்சமூக முறையினர் அல்ல எண்ணற்ற கால்வழிக் குழுக்களை உடையவர்கள் என்பதை உணர்த்தும்.
அதேபோல பள்ளர்கள் வணங்கும் தெய்வங்களாக
"பூத்த தலைச் செஞ்சேவல் சாத்திரத்தாலே
      பூலியுடையார் கொள்ளப் பலிதானிடும்
வாய்த்த சாராய ம் பனையூற்றுக் கள்ளும்
       வடக்குவாய்ச் செல்லியுண்ணக் குடத்தில் வையும்
தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே ,
      தொழுது தொழுது வேண்டும் மழை பெய்யவே ,
ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே
      எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே!"
என்ற பாடலில் பூலாவுடையார், குமுக்காவுடையார் , புலி யுடையார், வடக்குவாய்ச்செல்லி ஆகிய புலால் உண்ணக்கூடிய , கள்ளும் சாராயமும் அருந்தக்கூடிய  குலதெய்வங்களோடு அழகரையும் வழிபடுகிறார்கள். இங்கு பள்ளரை சைவ வைணவக் குழுக்களாகக் கூறவில்லை.

ஆனால் இங்கே குலதெய்வ வழிபாட்டுக்காரனான பள்ளன் சைவ , வைணவ ஆகியவிரு சமயங்களைச் சார்ந்த பெண்களையும் மணம் புரிகிறான் . இதன்படி பார்த்தாள் இருவரும் சகோதரிகளாவர். ஆனால்  விசுணுவின் தங்கை பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்து கொடுக்கிற மாமன் மச்சான் உறவுதான் சைவ, வைணவ உறவு.

எனவே இனவரைவியல் அடிப்படையிலும் வழக்கிலும் கால்வழிக் குழுக்களாக உள்ள பள்ளியரை சைவ, வைணவ மதத்தினராகப் படைக்கவேண்டிய தேவை  என்ன என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது.
முக்கூடற்பள்ளு  அழகருக்குச் சொந்தமான நிலம் என்கிறது. அப்படியென்றால் அது வைணவக் கோவிலுக்குச் சொந்தமானது என்று பொருள். சைவ, வைணவ கோவில்களும், மடங்களும் வழிபாட்டு நிறுவனங்களாக மட்டும் அல்லாமல் மிகப் பெரும் நிலவுடைமையாளர்களாகவும் இருந்திருக்கின்றன என்பதை அறிவோம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் சொத்துக்களும்  உரிமையானவை என்றால் அக்கோவிலை நிருவகிக்கும் உயர்சாதியினரே சொத்துக்களையும் மேலாண்மை செய்யும் உரிமையுடையவர்களாகிறார்கள்.
நிலங்களை கோயிலுக்கும் மடங்களுக்கும் தானமாகக் கொடுத்ததில் சோழர்கள் முன்னணியிலும் அடுத்து விசயநகர அரசும் இருந்தது. உதாரணமாக சில கோய்வில் நிலவரங்களைப் பார்ப்போம்.  

திருவாருர் தியாகேசர் கோயிலுக்கு 6000 ஏக்கர் நிலங்களும் சீர்காழி வைத்யநாதசாமி கோவிலுக்கு 6000 ஏக்கர் நன்செய் நிலமும் 1176 ஏக்கர் புன்செய் நிலமும் வழங்கப்பட்டும் இவற்றின் பராமரிப்பு பிராமண வெள்ளாள நிலப்பிரபுத்திவத்தின் கீழும் இருந்தது. அதேபோல தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 18 சைவ மடங்கள் இருந்தன. சங்கரமடம் 4000 ஏக்கர் நிலமுடையதாகவும் திருவாவடுதுறை மடத்துக்கு தமிழகம் முழுவதும் 24000 ஏக்கர் நிலங்களும் , தர்மபுரம் மடத்துக்கு 2000 ஏக்கர் நிலங்களும் திருப்பனந்தாள் மடத்துக்கு 3000 ஏக்கர் நிலங்களும் சோழ, நாயக்க அரசுகளால் வழங்கப்பட்டன.
கோவில் நிலங்கள் வாரம்தாரிமுறை நிலப்பிரபுக்களின் கீழ் இருந்ததால் அவை நேரடியாகப் பயிர்த்தொழில் செய்பவர்களுக்கு விடாமல் அரசு அதிகாரிகளுக்கு விடப்படுகின்றன. அவற்றை அவர்கள் மற்றவர்கள் மூலம் பயிரிட்டு உற்பத்தியில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு கோவில் கருவூலத்திற்குப் பெயரளவிற்குக் கொடுத்துவிட்டு பெருமளவில் அனுபவித்து வந்தனர் என்ற செய்தியைக் கரோஷிமா கல்வெட்டுச் சான்றுகள் மூலம் விளக்குகிறார். அதனால்தான் இன்று இந்து அறநிலைத்துறை வசமுள்ள கோயில்களைக் கைப்பற்ற ஒரு கூட்டம் அலைகிறது.

இப்படியான சொத்துடைத்த கோயிலுக்கு மட்டுமல்ல இவ்வுலகுக்கே அதிபதிகளான சிவனையும் , திருமாலையும் வம்புக்கு இழுத்தது. சமயமடாதிபதிகள் அல்ல சாதாரண கூலிக்காரர்கள் , அதுவும் பெண்கள்.  கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கூட நம்பிக்கையைப் புண்படுத்தக் கூடாதென்பதற்காக கடவுளின் தனிப்பட்ட முறையில் தாக்கத் துணியமாட்டார்கள்.   இவ்வுலகை ஆக்கவும், அழிக்கவும் திறம்பெற்ற இரு பெரும் கடவுளர்களை தெருச்சண்டை கோதாவில் நிறுத்தி பக்தர்களின் மனதைப் புண்படுத்திய, அதுவும் பண்ணை அடிமைப் பெண்களை வைத்து ஏச வைக்க  பள்ளு இலக்கிய ஆக்கத்தால் எப்படி முடிந்தது.

வைதீக சமயத்தின் பேரால் -  கடவுளின் பெயரால் சுரண்டிக் கொழுக்கிற உடைமையாளர்களை , சுரண்டலுக்கு வழி வகுக்கிற கடவுளை , அவற்றை நியாயப்படுத்த புணையப்பட்ட புராணங்களை , சமய நம்பிக்கை கொண்ட அவர்களை வைத்தே  கடவுள்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிற கட்டுடைப்பைச் செய்துள்ளது முக்கூடற் பள்ளு இலக்கியம். ஒரு வேளை சமய நம்பிக்கையாளர்களை வைத்து கேள்வி கேட்கச் செய்வது பாதுகாப்பானது  என்று கருதி பள்ளியர் பாத்திரம் சைவ, வைணவச் சார்பாளராகப் படைக்கப்பட்டதா?
இல்லை பள்ளியரின் சைவ வைணவச் சண்டை, சைவ உடைமையளர்களுக்கும் வைணவ உடைமையாளர்களுக்கும் உள்ள முரண்பாட்டை குறியீடு செய்து படைக்கப்பட்டதா?

காலம் முழுவதும் சமய முரண்பாடு என்பது உடைமைகளை உரிமையாக்கும் பொருளாதார முரண்பாடே என்பதும் நாமறிந்ததே!  மேலும் சமயச் சண்டை சமாதானம் ஆவது  தங்களுக்குள் கலகம் செய்து கொண்டாலும்  உடைமையாளர்கள் தமக்குள்  செய்து கொள்ளும் வர்க்கச்சேர்மானம் என்று கருதுவதா?

எனவே முக்கூடற்பள்ளு இலக்கியம் பள்ளியர்கள் வழியே பேசும் சைவ-வைணவ ஏசல் என்பது உழைக்கும் பெண்களுக்கான சமயச் சண்டையோ குடும்பச் சண்டையோ அல்ல. அதில் குறியீட்டு அரசியல் இருக்குமோ! என்று கருதத்தோன்றுகிறது.
மேலும் சமயச் சண்டை சமாதானம் ஆவது  உடைமையாளர்கள் தமது உடைமையைக் காத்துக் கொள்ள செய்து கொள்ளும் வர்க்கச்சேர்மானம் என்றும் கருதலாம்.

அடுத்து கூலிப்பங்கு தொடர்பானது. கோயில் காரியங்களுக்கும் சத்திரதானங்களுக்கும், பெரிய நம்பி திருமாளிகைக்கும்,  மடங்களுக்கும், கங்காணிக்கும் கொடுத்துவிட்டு விதை நெல்லுக்காக மிஞ்சியதை களஞ்சியத்தில் போட்டுவிட்டதாகக் கூறிகிறான். உடனே தனக்கு  கல்லும் மண்ணும் கலந்த நெல்லைக் கொடுத்துவிட்டு  இளைய பள்ளிக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டதாகச் சண்டையிடுகிறாள் பெரிய பள்ளி.
இங்கு
ஆடித்திருநாளுக்கென்று ஒதுக்கப்பட்ட  நெல் ஆறாயிரம் கோட்டை
பங்குனித் திருநாளுக்கு ஆறாயிரம் கோட்டை, அணைக்கட்டுமானச் செலவுக்கு என்று ஆயிரம் கோட்டை, மண்டகப்படிக்கு முறைக்கு ஆறாயிரம் கோட்டை , மறையோர்க்கு நாலாயிரம் கோட்டை, தினப் பூசைக்கு எண்ணாயிரம் கோட்டை நெல் என்று ஆயிரக்கணக்கான நெல்லை கொடுத்து விட்டு உழுதவனுக்கு
வாழ்க்கைக்குப் போதிய நெல் கூடக்கிடைக்கவில்லை என்று சுரண்டல் மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும் இங்கு இன்னொரு விசயத்தையும் கவனிக்க வேண்டும்.

அவ்வளவு நெல்லையும் அபகரித்த ஆள்பவர்களின் மேல் திரும்ப வேண்டிய கோபம் சிறிதளவு அதிகமாகக் கூலி வாங்கிய இளைய பள்ளியிடம் திருப்பிவிடப்பட்டுள்ளது.
காலங்காலமாக சுரண்டும் வர்க்கம் சுரண்டுகிறவர்களின் மீது உழைப்பவர்களின் கவனம் திரும்பிவிடாத அளவிற்கு அவர்களின் சிந்தனையை மடைமாற்றி அவர்களுக்குள்ளான உள்  முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி விடுகிறார்கள். பூசணிக்காய் ஒழித்த இடத்தைத் தேடாமல்  சிந்திய கடுகைத் தேடுவது போல மக்களைத் திசை திருப்பிவிடும் தன்மையைத்தான் மூத்தபள்ளி, இளைய பள்ளியின் கூலிப்பங்குச்  சண்டையில் படைக்கப்பட்டுள்ளது.

அடுத்து உழைப்பாளிகளின் கோபம் திரும்புகிற இன்னொரு இடம் கங்காணியாக இருக்கிற பண்ணைக்காரன்.கண்ணுக்குத் தெரியாத  நிலத்தின் உண்மையான உரிமையாளன் மீது திரும்ப வேண்டிய கோபம் அவனது கூலிக்கு வேலை செய்யும் பிரதிநிதியின் மேல் திரும்புகிறது.
இன்று  அம்பானிகளும், அதானிகளும், வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளும் நம் செல்வத்தைக்   கொள்ளையிடுவதிலிருந்து  நம் கவனத்தைத் திசை திருப்பி சக மனிதர்களைக் காட்டி பொறாமை கொள்ளச் செய்வதும் தூரத்திலிருக்கும் அதிகாரத்தை மறைத்து கண்ணுக்குத் தெரிகிற உடனடி நிர்வாகத்தின் மீது கோபத்தைத் திசை திருப்புவதுமாகச் செய்து கொண்டிருக்கிற நவீன நிர்வாகத் தந்திரத்தைத்தான் பள்ளு இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது.

ஆக முக்கூடற் பள்ளு என்பது கோயில் நில உடைமை உற்பத்தி உறவின் தன்மையையும், வைதீகக் கடவுள் கட்டுடைப்பும் உடைமையாளர்களின் அக முரண்பாடையும் உழுவித்துண்போரின் திறமையான சுரண்டலையும் நிலத்தில் உடலுழைப்பைக் கொடுத்தும் சகல பணிகளையும் செய்கிற உழுதுண்போர் சுரண்டப்படுவதை அறிந்தும் திசை திருப்பப் படுவதையும் உழு குடிகளான பள்ளர் பள்ளியரை மையமாக வைத்து மக்கள் மொழியில் நகைச்சுவை ததும்ப உழவுக்குடிகள் படும்பாட்டை குறியீட்டு வடிவில் இயற்றிய மாற்றுக் குரலாக இருக்கிறது.

இத்தொகுப்பு நூல் பள்ளு இலக்கியத்தை முழுவதுமாக வாசிக்கவும் மீளாய்வு செய்யவுமான தேவையை உருவாக்கியிருப்பதில் வெற்றியடைந்துள்ளது.
முன்னோடி ஆய்வுக்காக நா.வா..அவர்கள் தமிழ்ச்சமூகத்தால் நன்றி கூறப்படவேண்டியவர். 

எவரின் கடமையோ! என்றிறாமல் காலத்தே வினையாற்றிய  தோழர் மகாராசனும் அதனை  அச்சு வாகனமேற்றி அழகுபார்த்த ஆதி பதிப்பகமும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஒரு படைப்பு சொல்லியதையல்ல சொல்லாமல் கிசுகிசுப்பதையும் கேட்கும் பொழுதுதான் அல்லது சந்தேகிக்கும் பொழுதுதான்   மறைந்திருக்கும் எதிர்வினையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

சொல்நிலம் : நாளைய விடுதலைத் தேசத்தின் விதை நெல் :- நா.காமராசன்


    சொல் நிலம் : தமிழ் மண்ணின் வேர்களைத்தேடி பயணிக்கிறது ஒவ்வொரு கவிதையும்.தோழர் மகராசன் தன் வாழ்ந்த வாழ்வியலிருந்தே ஒவ்வொன்றையும் கிளறி எடுத்து இங்கே படைத்திருக்கிறார்.

   "உயிர்க்கூடு
   வேர்கரைக்கும் விழுதுகள்
   தனியன்
   விதைச்சொல்
   சாவிப்பயிர்
   உலர்நிலச்சிறுக்கி
   நிலத்தாள்
   குறுணிமழை
    ஈசப்பால்
    உயிர்க்கொடி " தலைப்புகளே நம்மை உள்ளிழுத்துச் செல்கிறது.
ஈரநிலங்களுக்கு பதிலாக செங்காடும் புழுதிக்காடும் எங்கும்
விரவிக்கிடக்கிறது . கோபத்தீ பற்றிக்கொண்ட ஒவ்வொருவரின் எழுத்திலும் இருக்கக்கூடிய நியாயங்களே இவர் நிலமெங்கும்
சொல்லாய் தெறித்து நிற்கிறது.

"அய்யா சாமீ ஆண்டே எனக்
கால்பிடித்து கதறி அழுது,
வயிற்றுப்பாட்டுக்காய்
கூடக்கொஞ்சம் கொடுங்களேன்
எனக் கேட்டிருந்தால்
போதுமடா போ போவென்ற
பதக்கு நெல்லை கொடுத்திருக்கலாம்
பழைய தோரணையோடு

நெல்லை விதைத்தவர்கள்
சொல்லை விதைத்தார்கள்
கூடவே தன்மானம் சேர்த்து
வெண்மணி வயலின்
செந்நெல் மனிதர்கள்"
ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின்
நியாயங்களையும் அவர்கள் போர்க்
குணங்களையும் வரிகள் முழுதும்
கொப்பளிக்கச் செய்திருக்கிறார் ஒரு படைப்பாளியைத்தாண்டி இந்த மண்ணின் மைந்தனாய்.

"சிறுவாட்டுக்காசும்
சுருக்கூப்பை காசும்
விதைநெல் குளுமைக்குள்
வெள்ளாமைக்கென
முடிந்துபோட்ட காசும்
ஆத்தா அப்பன் நெனைப்பாலே
எடுத்து வச்ச காசும்,
மூத்த புள்ளயக்
கட்டிக் கொடுக்க
அடுக்குப்பானைக்குள்
போட்டு வந்த காசும்,
குட்டச்சி அம்மனுக்கும்
மறத்தியாளுக்கும்
பாண்டிக்கருப்பனுக்கும்
குளத்துக்கரை அய்யனாருக்கும்
நேர்த்திக்கடனாய் போட
வச்சிருந்த காசும்,
செல்லாக்காசெனப் போச்சே
செல்லாக்காசெனப் போச்சே"
குருவிகள் சேர்ப்பதைப்போல் எளிய
மனிதர்கள் சேர்த்தக்காசை ஒரே
இரவில் செல்லாதென அறிவித்த
கேடுகெட்டவர்களின் முகத்தில் காரிஉமிழ்கிறது இவ்வரிகள் ஒவ்வொன்றும்!

இதோ காவிரியின் அநீதியைப்ற்றி
அப்போதே
"பூநூலால் கோர்க்கப்பட்ட
இந்திய வரைபட சாயங்களை
அவ்வப்போது
ஆறுகள்தான் அழிக்கின்றன"
ஒரு படைப்பாளியைத்தாண்டி போராளியின் குரலாய் கனன்று
விழுந்திருக்கிறது வரிகளில்!

ஈரமுள்ளவர்களாலும் அறத்தின்நின்று போராடுபவர்களாலும் மட்டுமே இத்தகைய படைப்புகளைத்தர முடியும்.அந்த வரிசையில் தோழர்
மகராசனின் "சொல்நிலம் " நாளைய விடுதலைத்தேசத்தின் விதைநெல்லாகவும் இருக்கும்.

மென்மேலும் படைப்புகள் செழிக்க
புரட்சிகர வாழ்த்துக்கள் தோழர்!

தோழமையுடன்
நா.காமராசன்
மண்டகொளத்தூர்.

சனி, 17 பிப்ரவரி, 2018

சொல் நிலம் : சுண்டக் காய்ச்சப்பட்ட சொற்களால் இலக்கு நோக்கி இயங்குகின்றது :- த.ரெ. தமிழ்மணி


பாவலர் மகாராசன் தூவலில் இருந்து ஓவியமாய் உயிர்த்திருக்கிறது சொல்நிலம்.  நூலில் கவிதை இல்லை; நூலே கவிதையாய் இருக்கிறது. கவிதை...கவிதை... வடிவமைப்பு, தலைப்புகள் எல்லாமே கவிதை. தாய்மண்ணில் வேர்கொண்டு விடுதலையை விதைக்கிறது இவரின் தூவல். 52 கருப்பொருள்களில் பாடப்பட்ட இந்நூலின் முதற்பொருள் மாந்தநேயம்.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகளாய் ஆன வாழ்வு, இழப்பிற்குப் பின் உறவுகளுக்காக ஏங்குவதை-

"சில பறவைகளின் ஒப்பாரி
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
கூடு தேடி."
             
                -என்று பதிவு செய்கிறார்.
தமிழினம் எங்கெல்லாம் படர்ந்திருக்கிறதோ அங்கெல்லாம் தேடித் தேடி உயிர் குடித்தது கடல். அதன் துயரத்தை அறிவுமதி ஓர் இசை வட்டும் குறும்படமும் எடுத்து
வெளிப்படுத்தியுள்ளார். ஆழிப் பேரலை நிகழ்த்திய அழிவைச் சாதிவன்மமாகப் பார்க்கும் மகாராசனின் நோக்கும் வலியிலிருந்து பிறந்ததுதான் என்பதை கீழ்வரும் சொற்களில் உணரமுடிகிறது.

உரிமை பறிக்கும்
சாதித் திமிராய்
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.

காதல் அழகு. அதைக் கவிதையில் சொல்வது இன்னும் அழகு. அதுவும் மழைவந்த பின் கொழுக்கும் மண்ணோடு ஒப்பிடும் மகாராசன் பார்வை அழகு.

முளைப்பதும் பூப்பதுமான
மானாவாரிக் காடு நீ
மழைக்கடுத்துச் செழிக்கும்
எனதூர் மண்போல.

அறத்தீ மனிதர்கள் என்னும் தலைப்பில் இனவிடுதலைக்குத் தம் உயிர்எழுதியவர்களை இவர் எழுதுகிறார்-

நீருக்கும் நிலத்துக்கும்
அழுத கண்ணீர்
நெருப்பிலும் கரையுமென்று
நீரிலே
நெருப்பெழுதிப் போனீர்கள்.

இயங்களால் சிதைக்கப்படும் மண் தமிழ்த்தேசம். தன் தொல்வாழ்விழந்ததன் அனைத்திற்கும் காரணமானதை இவரும் சுட்டுகிறார். அதை,
நீரின்றி அமையாது தமிழகம் தலைப்பிலான கவிதையில் காணலாம்

பூணூலால் கோர்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வபோது
ஆறுகள்தாம் அழிக்கின்றன.

      - என்ற வரிகளில் மகாராசன் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டார் என உணரலாம். அது விதைச்சொல் என்ற கவிதையில் இவ்வாறு வெளிப்படுகிறது.

எனது முதுகுத்தண்டிலா
உனது மாளிகையெனக்
கேள்வி எழுப்பு.

வீறு பயிர் செய்து
கனல் பாய்ச்சி
விடுதலையைப் பறி

என விடுதலைமுழக்கம் வெடிக்கிறது.

கூடுகள் இழந்து
காயங்கள் சுமந்த
தூக்கணாங்குருவிகள்
மீண்டு மீண்டும் வரும்

எனவரும் "ஈழப்பபனைகளும் குருவிகளும்" கவிதையிலும் அந்த நம்பிக்கை அறியக் கிடக்கிறது.

இங்கு சுட்டப்படாத ஒவ்வொரு கவிதையிலும் சுண்டக் காய்ச்சப்பட்ட சொற்கள் தம் இலக்கு நோக்கி இயங்குகின்றன. பேதம் அழித்த தேசம் படைக்கும் தமிழ்த்தேசியராய்ப் பாவலரை நாம் அடையாளம் காண்கிறோம்.
 

திங்கள், 12 பிப்ரவரி, 2018

சொல் நிலம் : நிகழ்ந்துவிட்ட நிலப்படுகொலையை விருட்சமாய் நின்று விவரிக்கின்றது :- விசாகன்


ஆய்வு நோக்கிலான எழுத்துக்குச் சொத்தக்காரர் என்ற அடையாளத்துடன் பார்த்து வந்த தோழர் மகாராசனின் "சொல் நிலம்" என்ற அவரின் முதல் கவிதைத் தொகுப்பை வாசித்ததில் குளிர்ந்து செழித்த நிலப்பகுதிகளில் குதியாட்டம் போட்டுத் திரிந்த கடந்தகால நினைவுகளினூடாக அவைகளையெல்லாம் இழந்து வெம்மைசூழ் உலகின் அவலத்தைக் கண்முன் காட்டுகின்ற அனுபவம் உணர முடிந்தது. சிதைவுக்காளாகி வருகின்ற, அல்லது முற்றிலும் சிதைந்துவிட்ட நிலவளம் குறித்து ஆதங்கத்துடன் எடுத்துரைப்பதே இக்கவிதைகளின் மையப்பொருள். இப்பொருள்கொண்ட கவிதைகள் பலதரப்புகளிலிருந்து எழுதப்பட்டு வந்தாலும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் படைத்திருக்கிறார் மகாராசன். அதனோடு ஆணவக்கொலை, பகாசுரக் கம்பெனிகளின் கோரப்பசிக்கெனத் திணிக்கப்படும் மீத்தேன், ஈத்தேன் போன்ற திட்டங்களின் அரசியலையும், ஈழத்து  சோக அரசியலையும் பேசியிருக்கிறார்.

"பஞ்சமும் வஞ்சமுமாய்ப்
பொங்கிடும் துயரங்கள்
நிரம்பி வழிந்தாலும்,
உழவுத் துயரில் கசியும்
ஈர மொழியாய்
ஊறி நிற்கின்றன
சொற்கள்..."

பஞ்சம் வந்தது மாத்திரமல்ல, அப்பஞ்சம் வந்ததற்கே வஞ்சமே காரணம், அத்தகைய வஞ்சம் எங்கிருந்து ஏன் ஏவப்பட்டது என்பதையும் உணரச் செய்கின்ற படைப்பாக வீரியங்கொள்கிறது கவிதைகள். இழப்பின் வலியை உணர்த்துவதிலும், இழந்ததை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வாயிலைத் திறப்பதிலும் இலக்கியத்தின் பங்களிப்பு அபரிமிதமானது. கவிதைகள் என்றாலே கற்பனை - அழகியல் போன்றவை அலங்கரித்து எழுதப்படும். ஆனால் முற்றிலும் நேரடியாக சொற்களைப் பயன்படுத்துவதோடு, அவையனைத்துமே சமுதாயத்திற்கான மொழியாக ஒரு தனித்த வடிவத்தை மிளிரச் செய்திருப்பதில் மகாராசனின் எழுத்துத்தோளின் வலிமை அபாரமாகத் தெரிகின்றது.

"தாழி அறி
வரலாறு பிரி
வாழ்வு நுகர்.

"விதைச்சொல்" என்ற தலைப்பிலான இந்தக் கவிதை இத்தொகுப்பின் உச்சியில் நின்று நம்மை உலுக்குகிறது. உழவின் பெருமையை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதிச்சென்றுவிட்ட வள்ளுவன் வழிவந்த இந்த இனத்தின் கண்களை மறைத்துவிட்ட இழிசக்தியின் கோரமுகத்தை கிழித்துக் காட்ட முனையும் மகாரசனின் கம்பீரக் குரல் கவிதை வரிகள் முழுக்க ஒலிப்பதை நம்மால் கேட்க முடிகிறது. "பன்முகம்" என்ற கவிதை காட்டுகின்ற படிமம் நம் தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தின் பெருமைமிகு முகத்தைக் காண்பிப்பதாகவே உணர முடிகிறது.

"உழைப்பு சொற்களால்
நிலத்தை எழுதிப்போன
அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே
தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்"

இந்தத் தவிப்பும் ஏக்கமுமே மகாராசனின் முகத்தில் குடிகொண்டிருக்கின்றது என்பதை அறிவதே இத்தொகுப்பின் வாசிப்பனுபவமாக இருக்கும். இவரது செழிப்பான சொல் எனும் நிலத்தில் விதைக்கப்பட்ட கவிதை விதைகள் நிகழ்ந்துவிட்ட நிலப்படுகொலையை விருட்சமாய் நின்று விவரிக்கின்றன, அதற்கான நியாயஞ்செய்யுங்கள் என்று நம்மிடையே எதிர்பார்க்கின்றன.

வியாழன், 8 பிப்ரவரி, 2018

சொல் நிலம் – மொழி வயலில் விளைந்து நிற்கும் சொற்கதிர்கள் : - அன்பரசு

தோழர் மகாராசனின் எழுத்துக்கள் எப்போதும் மொழியையும் நிலத்தையும் மையமாக கொள்பவை,உழவுக்குடிகளின் வாழ்க்கைப் பாடுகளை தனது கட்டுரைகள் பலவிலும் ஆழமான ஆய்வுகளாக வெளிப்படுத்தியுள்ளார்.அவரது அண்மைய எழுத்து கவிதையாக சொல்நிலம் கவிதை தொகுப்பாக வெளிவந்துள்ளது.இது அவரின் முதல் கவிதை தொகுப்பும் கூட வயல் சார்ந்து விளைச்சலின் ஒவ்வொரு கணத்தையும் கண்டு வளர்ந்த அகத்தின் தன்னுணர்வு வெளிப்பாடாய் அமைந்துள்ள கவிதைகள் அவை.தனது எழுத்துக்களின் உள்ளீடாய் அமையும் மொழி,நிலம் அது சார்ந்த மனித மனத்தின் தவிப்புக்களுக்கு கவிதை வடிவம் தந்திருக்கிறார் மகாராசன். தமிழ்நிலத்தோடு இயைந்து வாழும் உழவுக்குடியின் மொழியாக, இயற்கையோடு உறவாடும் மனித மனத்தின்,ஓர் இனத்தின் தவிப்புகளை,கோபங்களை,கலக உணர்வை வெளிக்காட்டுகின்றன கவிதைகள், மகாராசனுக்கு வாழ்வின் சகல பரிமாணங்களும் ஒரு விளைச்சல் செயல்பாடாகவே பட்டிருக்கின்றன இயற்கையின் செயல்பாடுகளுக்குள்,குறிப்பாக
விளைச்சலுக்கு மனிதத் தன்மையேற்றும் வகையில் அவருடைய பல கவிதைகள் அமைந்துள்ளன.

“மகரந்த மனிதங்களால்
சூல் வலி கூடி
பூக்கும் அழுகையில்
காய்த்த ஈரம்
தேங்கியது கூட்டில்”(உயிர் கூடு)

“நீங்கள்

நீர்த் தடம் தேடி
நிலத்துள் பரவும்
வேர்களை சுமக்கும்
பெருமரமாய்த்
தளிர்த்திருக்கலாம்.

கிளைகளும் இலைகளும்
பூக்களும் பிஞ்சுமாய்
காயும் கனியுமாய்ப்
பல்கிப் பெருகி
தன்னல நிழல் போர்த்தி
வாழ்வை சுவைத்திருக்கிலாம்” (அறத்தீ மனிதர்கள்)

போன்ற கவிதை வரிகள் இயற்கைக்கும் மனிதத்திற்கும் இணக்கமான உறவை காணும் மனநிலையின் வெளிப்பாடாய் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாததும் எதிராக நிறுத்த முடியாததுமான நிலையை சுட்டிக்காட்டுகின்றன.

மேலும்,இன்றைய தமிழ் இனம் எதிர்கொள்ளும்,காவிரி,ஈழம்,மீத்தேன்,மற்றும் சாதீய சிக்கல்கள்
குறித்து மகாராசனின் கவிதைகள் அறவுணர்வோடு,தமிழ்நிலத்தின் உரிமைக்குரலை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளன,அது குறித்து இன்னோரு பொழுதில் விரிவாக எழுத விரும்புகிறேன்.

“நனவிலும் கனவிலும்
பாடாய்ப் படுத்தும்
நினைவுகள்,
இப்படியான
கவிதைகளில்தானே
செழித்து நிற்கின்றன’(கூதிர் காலம்)

 என மகாராசனே கூறுவது போல தனது உயிர்ப்பான நினைவுகளை கவிதைகளாக வளர்த்திருக்கும் தோழர் மகாராசனுக்கு வாழ்த்துக்கள்.

சொல் நிலம் - மண்ணின் காதல் : - கண்மணிராசா

சமீபத்தில் அறிமுகமான தோழர் ஏர் மகாராசன்.ஆனால், அவரது கவிநூலான "சொல் நிலம்"வாசித்தவுடன் ஆண்டாண்டு காலம் தொடர்ந்த தோழமை உணர்வு மனதில்.
மக்களைப் பாடுவதே மகத்தான இலக்கியம்..என்பதில் உடன்பட்டு இந்த மண்ணை..மக்களைப் பாடும் எந்தக் கவிஞனும் நம் தோழனே.

ஒற்றைப் பசுங்கால்
வெள்ளோவியச் சிறுக்கிகளின்
வெள்ளந்திச் சிரிப்புக்குள்ளும்
மணம் கமழ்கிறது
களையெடுத்துக் காய்த்துப் போன
கைவிரல் கோதிய கருப்பிகளின்
வியர்வை.
...இது   நூலிலுள்ள மல்லி  கவிதையின் வரிகள்.
இதில் என்ன அழகில்லை..
என்ன உணர்வில்லை...உழைக்கும் மக்களை இதைவிட உன்னதமாகச் சொல்லமுடியுமா...?

நம் நிலமும்....ஐந்திணையும்
எங்கிருந்தோ நீளும் ராட்சதக் கரங்களால் தின்னப் பட்டு கொண்டிருக்கும் இந்த சூழலில்
ஆறாம் திணையாய் கவிதையும் கவிதையின் நிமித்தமுமாய் எழுந்து யாராடா அவன் எம்நிலத்தில் என குரலெழுப்பும் கவிஞன் நம் கவிஞனல்லவா...?


முல்லைக்குத் தேர் கொடுத்த
பாரிகளும்
மயிலுக்குப் போர்வை கொடுத்த
பேகன்களும்
வாழ்ந்திட்ட பெருநிலத்தில்
நரிமணம்
நெய்வேலி
கல்பாக்கம்
கூடங்குளம்
நெடுவாசல்
கதிராமங்கலம்
மிச்சமிருக்கும் மானம் எனக்
கொடுத்தும் கெட்டும்
கொடை மடத்துச் சான்றாவோம்
அம்மணமாய்க் கூவியபடி.

இந்தக் குரல் நம் குரல்.
இது நம் கவிதை.

சாதியவன்மமும் ...மதமும் கூறு போட்டு நம்மைக் காவு வாங்குகையில் அதைப் பேசாது எழுதாது உன்னத இலக்கியங்களை படைக்கும் போக்கின் நடுவே
பாண்டிக் கருப்பனுக்கும்
குளத்தங்கரை அய்யனாருக்கும்
நேர்த்திக் கடன்
போட சேர்த்த பணத்தை ஒற்றை இரவில் செல்லாது என அறிவித்த திமிரை  எதிர்த்து பாடும் நூல் நம் நூல்.

அழுதுகொண்டிருந்தாலும்
உழுது கொணடிரு எனக் காலில் விழும் நிலத்தை கசியும் கண்களோடு கையிலேந்தி....அதன் கேவலை கவிதையிலேந்தி வந்திருக்கும் நூல் சொல்நிலம்.

கள்ளியை உலர்நிலச் சிறுக்கியென்னும் மகாராசன்
மண்ணின் காதலன்.
வார்த்தைகளின் வழியாக மட்டுமல்ல, நேரில் பழகிய தருணங்களிலும் இதை யாவராலும் உணர முடியும்.


வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

சொல் நிலம் : மக்களுக்கான கவிதைகள் :- தமிழ்ப் பரிதி


சொல் நிலத்தின் கவிதைகள் என்பன பல்வேறு பேசுபொருள்களை கொண்டிருப்பினும் அரசியல் கவிதைகள் மக்களின் வலியை, மண்ணின் மரபை பேசும் கவிதைகளே எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும். அத்தகைய கவிதைகளையே தாங்கள் சொல் நிலத்தில் கொடுத்திருக்கிறீர்கள். நூலில் 87 கவிதைகளின் தலைப்புகளே தமது பாடு பொருளை சொல்லிவிட்டன. அனைத்து கவிதைகள் பற்றியும் சொல்ல வேண்டியவை நிறைய இருப்பினும் என்னால் சிலவற்றை மட்டுமே மேற்கோள் காட்ட முடிந்தது.

போலி சனநாயகத்தை எள்ளிச் சிரிக்கும் குண்டர்கள் கவிதை மிக அருமை

கருப்பிகளின் வியர்வை என்ற சொல் மிக அழகாக அக்கவிதையில் வந்து விழுந்திருக்கிறது.

இவை மக்களுக்கான கவிதைகள்.
கவிஞர்களுக்கான கவிதைகள் அல்ல இவை. இவற்றை புகழ்ந்தோ திறனாய்ந்தோ எவரும் பேசினாலும் பேசாவிட்டாலும் இவை என்றும் நிலைத்து நிற்கும் கவிதைகளாய் வாழும்
வாழ்த்துகள் தோழர்

சொல் நிலத்தில் நிலத்தின் சொற்கள் :- தமிழ்ப் பரிதி


சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கண்ணில் பட்ட ஒரு சிறு கவிதை நூல் தோழர் ஏர்மகாராசனுடைய சொல்நிலம்.
நிலத்தின் வலியும் பெத்த ஆத்தாளின் வலியும் ஒன்றெனச் சொல்லி பல தலைப்புகளில் நம் வேர்களைத் தேடும் கவிதைகள் இவருடையது.

"செங்காட்டில்
 ஏரூட்டி உழுகிற
 கருத்த மேனிக் கண்களில்
 முளைகட்டிக் கிடக்கிறது
 பசி ஒளி.

அழுது கொண்டிருந்தாலும்
உழுது கொண்டே இருவென்று
காலில் விழுந்து கிடக்கிறது
நிலம்."

ஏர்மகாரசனின் சொல் நிலம் கவிதை நூலில் நெஞ்சைக் கவ்விக் கொண்ட ஒரு கவிதை.
கருத்தமேனித் தமிழன் தன் நிறம் வெளுத்துப் போகட்டும் கொஞ்சம் வெள்ளையாவோம் என்றே விரும்புகிறான். நிறம் மட்டுமல்ல நிலமும் போய்க்கொண்டிருக்கிறது அவனைவிட்டு.

செல்லாக் காசுகளின் ஒப்பாரி என்றொரு கவிதை மக்களின் வாழ்வை வழமையை அழகாகக் சொல்லிவிட்டு நச்சென்று ஆள்வோரின் தலையில் குட்டிவிட்டுப் போகுமொரு கவிதை இது.

"சிறுவாட்டுக் காசும்
சுருக்குப்பைக் காசும்
விதைநெல் குளுமைக்குள்
வெள்ளாமைக்கென
முடித்துப் போட்ட காசும்
ஆத்தா அப்பன் நினைப்பாலே
எடுத்து வச்ச காசும்,
மூத்த புள்ளயக்
கட்டிக்கொடுக்க
அடுக்குப் பானைக்குள்ள
போட்டு வந்த காசும்,
குட்டச்சி அம்மனுக்கும்
மறத்தியாளுக்கும்
பாண்டிக் கருப்பனுக்கும்
குளத்துக்கரை அய்யனாருக்கும்
நேர்த்திக்கடனாயல போட
வச்சிருந்த காசும்
செல்லாக் காசாப் போச்சே
சொல்லாக் காசாப் போச்சே.."

நெடுநகர்கள் இன்று கெடு நகர்களாய் மாறிவரும் நிலையில் யாரையும் யாரும் அறியாமல் யாருக்கும் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் எல்லாரும் நண்பர்கள்தாம் மின்னணுத்திரையில் மட்டுமென்று வாழ்கின்ற இச்சூழலில்...
இக்கெடு நகர்கள் விலக்கும் விளிம்புநிலை  மக்களை பற்றிப்பேசுமொரு கவிதை...

"தூசுகள் மண்டிய
நகரங்களில்
அப்பிக் கிடக்கின்றன
வன்மங்கள்.

அங்குமிங்கும்
அலைந்து திரிகின்றன
முகமூடிகள் போர்த்திய
உடல்கள்.

தெருக்களின் மூலையில்
ஒடுங்கிக்கின்றன
தோல் வற்றிய முகங்கள்.

கொளுத்தவர் வலுக்கவும்
இளைத்தவர் இறக்கவுமான
நிகழ் வெளியாய்
சுருங்கிப் போனது
உலகம்.

எல்லா நாளும்
பொழுதுகள் விடிந்தாலும்
இல்லாதவர் வாழ்வையே
கவ்விக் கொள்கிறது
இருள்."

கவிதைகள் ஆழ உழுத அரசியல் கவிதைகளாய் மண்ணின் விடுதலை மக்களின் விடுதலையைப் பேசி

"வீறு பயிர் செய்து
கனல் பாய்ச்சி
விடுதலையைப்பறி"

என்கிறது சொல் நிலத்தின் கவிதைகள்...

வாழ்த்துகள் தோழர்  ஏர் மகாராசன்