சனி, 24 பிப்ரவரி, 2018

சோடை போகாத சொல் நிலம் :- பாவலர் வையவன்.


அண்மையில் தனது ஆறாவது படைப்பான ‘சொல் நிலம்’ கவிதைத் தொகுப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் தோழர் ‘ஏர்’ மகாராசன். நானும் எனது ஆறாவது தொகுப்பான ‘சொல் வெளி’ யை அனுப்பினேன். இருவருமே ‘சொல்’ குறித்து தலைப்பிட்டுருப்பதை ஒருகணம் எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. இன்னும் கூட வேறு எவரேனும் வெளியிட்ட நூல்களின் தலைப்பில் ‘சொல்’ இருக்கக் கூடும். சொல் குறித்து சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது. நிலத்துக்காகப் போராடும் அதே வேலையில் நாம் நம் சொற்களுக்காகவும் போராடவேண்டிய தேவையிருக்கிறது என்பது என் கருத்து. எனது ‘சொல் வெளி’ சொல்லின் பரப்பைச் சொல்கிறது. மகாராசனின் ‘சொல் நிலம்’ சொல்லின் பொருண்மையைப் பேசுகிறது.

 பொதுவாக கதையோ கவிதையோ கொண்டு வெளிவரும் நூல்கள் அதன் உள் தலைப்புகளுள் ஏதேனும்  ஒன்றை நூலின் தலைப்பாகக் கொண்டு இலங்கும். இத்தொகுப்பில் ஐம்பத்தியிரண்டு தலைப்பில் கவிதைகள் உள்ளன. ஆனால், ‘சொல் நிலம்’ என்ற தலைப்பில் தனியாகக் கவிதை இல்லை. ஆனால் சொல்லைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் பல்வேறு கவிதைகள் மதுரையின் மண்மணத்தோடு பேசுகின்றன. அத்தனை கவிதைகளுமே தீவிர அரசியலை, பண்பாட்டைப் பேசுகின்றன.

 உலகச் சிக்கல்கள் எல்லவற்றையும் சுருக்கி ஒற்றைச்சொல்லில் சொல்ல வேண்டுமானால் “ஏற்றதாழ்வு”தான் என்று எளிதாகச் சொல்லிவிடலாம். எப்போதும் வடக்கு நோக்கியே நிற்கும் காந்த முள்ளைப் போலவே, எப்போதும் வசதியானவர்கள் பக்கமே நிற்கிறது ‘ஆட்சி முள்’. எனவே,
 “எல்லா நாளும்
 பொழுதுகள் விடிந்தாலும்
 இல்லாதவர் வாழ்வையே
 கவ்விக்கொள்கிறது
 இருள்”
எனப் பேசும் இவர்கவிதை, மரநிழல் போர்த்திய காட்டின் குளுமையையும் மனித நிழல் போர்த்திய நாட்டின் வெம்மையையும் ஒப்பிட்டுக் காட்டி மலடு தட்டிப்போன வாழ்க்கையை மல்லாக்காகப் புரட்டிக் காட்டுகிறது.
 “நெல்லை விதைத்தவர்கள்
 சொல்லை விதைத்தார்கள்
 கூடவே தன்மானம் சேர்த்து”
என்னும் ‘செந்நெல் மனிதர்கள்’ கவிதை வெண்மணியின் வேதனையை வலியோடு விவரிக்கிறது. நிலம், உழைப்பு, கூலி என்பன மார்க்சியத்தின் அடிப்படைக் கூறுகள். ஆனால் இவையெல்லாம் மக்களிடமிருந்து எவ்வெவ்வழிகளில் சூரையாடப்பட்டன... படுகின்றன என்பதைப் பேசத்தான் கவிதைகளும் மற்ற படைப்புகளும். அதைத் தொகுப்பு முழுக்க நிறைவாகவே செய்திருக்கிறார் மகாராசன். அப்படி எழுதாத சொற்களை
 “கவித்தனம் காட்டவே
 எழுதிஎழுதித் தீர்க்கின்றன
 சொற்கள்”
எனச் சாடுகிறார். அண்மையில் சமூகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளுள் ஒன்று ஆணவப் படுகொலை. அதில் இவரது பார்வை சற்று விரிகிறது.
 “அதிகாரத்தின் ஆணவத்தால்
 கொல்லப்பட்டான் கோவலன்
 கள்வன் அவனில்லை என
 வழக்குரைத்து
 அதிகாரத்தைச் சாகடித்தாள்
 கண்ணகி...

 “ஆணவப் படுகொலைகளுக்கு
 காரணங்கள் தேவையில்லை
 சாமானியராய் இருத்தலே
 போதுமானது”
மகாராசனின் இந்நூல் மிகவும் கனமானது; அடர்த்தியானது; வலியானது. இதில் எல்லா கவிதைகளையுமே கொண்டாடவேண்டியிருக்கிறது. அதற்கு இவ்விடம் போதுமானதாயில்லை. சோடை போகாத சொல் நிலம் இது. இருப்பினும் இழப்பின் தவிப்போடு முடிகிறது நூல்
 “உழைப்புச் சொற்களால்
 நிலத்தை எழுதிப்போன
 அப்பனும் ஆத்தாவும்
 நெடும்பனைக்காடு நினைத்தே
 தவித்துக் கிடப்பார்கள்
 மண்ணுக்குள்”

 ஒரு சிறந்த நூலை அறிமுகம் செய்துவைக்க என்னுடைய இந்த சொற்கள் போதாது. அப்படித்தான் நான் உணர்கிறேன். வாங்கிப் படிக்கும்போதுதான் இதன் வன்மையை உணர முடியும். சிறந்த படைப்பு கொடுத்த... அதை எனக்கும் படிக்கக் கொடுத்த “ஏர்” மகாராசனுக்கு வாழ்த்துகள்!

               நூல்பெற: ‘ஏர்’, மகாராசன், 28.காந்தி நகர், செயமங்கலம், பெரியகுளம், 625 603 .
பேச: 94436 76082

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக