சனி, 17 பிப்ரவரி, 2018

சொல் நிலம் : சுண்டக் காய்ச்சப்பட்ட சொற்களால் இலக்கு நோக்கி இயங்குகின்றது :- த.ரெ. தமிழ்மணி


பாவலர் மகாராசன் தூவலில் இருந்து ஓவியமாய் உயிர்த்திருக்கிறது சொல்நிலம்.  நூலில் கவிதை இல்லை; நூலே கவிதையாய் இருக்கிறது. கவிதை...கவிதை... வடிவமைப்பு, தலைப்புகள் எல்லாமே கவிதை. தாய்மண்ணில் வேர்கொண்டு விடுதலையை விதைக்கிறது இவரின் தூவல். 52 கருப்பொருள்களில் பாடப்பட்ட இந்நூலின் முதற்பொருள் மாந்தநேயம்.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகளாய் ஆன வாழ்வு, இழப்பிற்குப் பின் உறவுகளுக்காக ஏங்குவதை-

"சில பறவைகளின் ஒப்பாரி
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
கூடு தேடி."
             
                -என்று பதிவு செய்கிறார்.
தமிழினம் எங்கெல்லாம் படர்ந்திருக்கிறதோ அங்கெல்லாம் தேடித் தேடி உயிர் குடித்தது கடல். அதன் துயரத்தை அறிவுமதி ஓர் இசை வட்டும் குறும்படமும் எடுத்து
வெளிப்படுத்தியுள்ளார். ஆழிப் பேரலை நிகழ்த்திய அழிவைச் சாதிவன்மமாகப் பார்க்கும் மகாராசனின் நோக்கும் வலியிலிருந்து பிறந்ததுதான் என்பதை கீழ்வரும் சொற்களில் உணரமுடிகிறது.

உரிமை பறிக்கும்
சாதித் திமிராய்
உயிர்கள் பறித்தது
கடல் திமிர்.

காதல் அழகு. அதைக் கவிதையில் சொல்வது இன்னும் அழகு. அதுவும் மழைவந்த பின் கொழுக்கும் மண்ணோடு ஒப்பிடும் மகாராசன் பார்வை அழகு.

முளைப்பதும் பூப்பதுமான
மானாவாரிக் காடு நீ
மழைக்கடுத்துச் செழிக்கும்
எனதூர் மண்போல.

அறத்தீ மனிதர்கள் என்னும் தலைப்பில் இனவிடுதலைக்குத் தம் உயிர்எழுதியவர்களை இவர் எழுதுகிறார்-

நீருக்கும் நிலத்துக்கும்
அழுத கண்ணீர்
நெருப்பிலும் கரையுமென்று
நீரிலே
நெருப்பெழுதிப் போனீர்கள்.

இயங்களால் சிதைக்கப்படும் மண் தமிழ்த்தேசம். தன் தொல்வாழ்விழந்ததன் அனைத்திற்கும் காரணமானதை இவரும் சுட்டுகிறார். அதை,
நீரின்றி அமையாது தமிழகம் தலைப்பிலான கவிதையில் காணலாம்

பூணூலால் கோர்க்கப்பட்ட
இந்திய வரைபடச் சாயங்களை
அவ்வபோது
ஆறுகள்தாம் அழிக்கின்றன.

      - என்ற வரிகளில் மகாராசன் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டார் என உணரலாம். அது விதைச்சொல் என்ற கவிதையில் இவ்வாறு வெளிப்படுகிறது.

எனது முதுகுத்தண்டிலா
உனது மாளிகையெனக்
கேள்வி எழுப்பு.

வீறு பயிர் செய்து
கனல் பாய்ச்சி
விடுதலையைப் பறி

என விடுதலைமுழக்கம் வெடிக்கிறது.

கூடுகள் இழந்து
காயங்கள் சுமந்த
தூக்கணாங்குருவிகள்
மீண்டு மீண்டும் வரும்

எனவரும் "ஈழப்பபனைகளும் குருவிகளும்" கவிதையிலும் அந்த நம்பிக்கை அறியக் கிடக்கிறது.

இங்கு சுட்டப்படாத ஒவ்வொரு கவிதையிலும் சுண்டக் காய்ச்சப்பட்ட சொற்கள் தம் இலக்கு நோக்கி இயங்குகின்றன. பேதம் அழித்த தேசம் படைக்கும் தமிழ்த்தேசியராய்ப் பாவலரை நாம் அடையாளம் காண்கிறோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக