ஆய்வு நோக்கிலான எழுத்துக்குச் சொத்தக்காரர் என்ற அடையாளத்துடன் பார்த்து வந்த தோழர் மகாராசனின் "சொல் நிலம்" என்ற அவரின் முதல் கவிதைத் தொகுப்பை வாசித்ததில் குளிர்ந்து செழித்த நிலப்பகுதிகளில் குதியாட்டம் போட்டுத் திரிந்த கடந்தகால நினைவுகளினூடாக அவைகளையெல்லாம் இழந்து வெம்மைசூழ் உலகின் அவலத்தைக் கண்முன் காட்டுகின்ற அனுபவம் உணர முடிந்தது. சிதைவுக்காளாகி வருகின்ற, அல்லது முற்றிலும் சிதைந்துவிட்ட நிலவளம் குறித்து ஆதங்கத்துடன் எடுத்துரைப்பதே இக்கவிதைகளின் மையப்பொருள். இப்பொருள்கொண்ட கவிதைகள் பலதரப்புகளிலிருந்து எழுதப்பட்டு வந்தாலும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் படைத்திருக்கிறார் மகாராசன். அதனோடு ஆணவக்கொலை, பகாசுரக் கம்பெனிகளின் கோரப்பசிக்கெனத் திணிக்கப்படும் மீத்தேன், ஈத்தேன் போன்ற திட்டங்களின் அரசியலையும், ஈழத்து சோக அரசியலையும் பேசியிருக்கிறார்.
"பஞ்சமும் வஞ்சமுமாய்ப்
பொங்கிடும் துயரங்கள்
நிரம்பி வழிந்தாலும்,
உழவுத் துயரில் கசியும்
ஈர மொழியாய்
ஊறி நிற்கின்றன
சொற்கள்..."
பஞ்சம் வந்தது மாத்திரமல்ல, அப்பஞ்சம் வந்ததற்கே வஞ்சமே காரணம், அத்தகைய வஞ்சம் எங்கிருந்து ஏன் ஏவப்பட்டது என்பதையும் உணரச் செய்கின்ற படைப்பாக வீரியங்கொள்கிறது கவிதைகள். இழப்பின் வலியை உணர்த்துவதிலும், இழந்ததை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வாயிலைத் திறப்பதிலும் இலக்கியத்தின் பங்களிப்பு அபரிமிதமானது. கவிதைகள் என்றாலே கற்பனை - அழகியல் போன்றவை அலங்கரித்து எழுதப்படும். ஆனால் முற்றிலும் நேரடியாக சொற்களைப் பயன்படுத்துவதோடு, அவையனைத்துமே சமுதாயத்திற்கான மொழியாக ஒரு தனித்த வடிவத்தை மிளிரச் செய்திருப்பதில் மகாராசனின் எழுத்துத்தோளின் வலிமை அபாரமாகத் தெரிகின்றது.
"தாழி அறி
வரலாறு பிரி
வாழ்வு நுகர்.
"விதைச்சொல்" என்ற தலைப்பிலான இந்தக் கவிதை இத்தொகுப்பின் உச்சியில் நின்று நம்மை உலுக்குகிறது. உழவின் பெருமையை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதிச்சென்றுவிட்ட வள்ளுவன் வழிவந்த இந்த இனத்தின் கண்களை மறைத்துவிட்ட இழிசக்தியின் கோரமுகத்தை கிழித்துக் காட்ட முனையும் மகாரசனின் கம்பீரக் குரல் கவிதை வரிகள் முழுக்க ஒலிப்பதை நம்மால் கேட்க முடிகிறது. "பன்முகம்" என்ற கவிதை காட்டுகின்ற படிமம் நம் தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தின் பெருமைமிகு முகத்தைக் காண்பிப்பதாகவே உணர முடிகிறது.
"உழைப்பு சொற்களால்
நிலத்தை எழுதிப்போன
அப்பனும் ஆத்தாவும்
நெடும்பனைக் காடு நினைத்தே
தவித்துக் கிடப்பார்கள்
மண்ணுக்குள்"
இந்தத் தவிப்பும் ஏக்கமுமே மகாராசனின் முகத்தில் குடிகொண்டிருக்கின்றது என்பதை அறிவதே இத்தொகுப்பின் வாசிப்பனுபவமாக இருக்கும். இவரது செழிப்பான சொல் எனும் நிலத்தில் விதைக்கப்பட்ட கவிதை விதைகள் நிகழ்ந்துவிட்ட நிலப்படுகொலையை விருட்சமாய் நின்று விவரிக்கின்றன, அதற்கான நியாயஞ்செய்யுங்கள் என்று நம்மிடையே எதிர்பார்க்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக