ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022
சூத்திரர் எனும் பெயர் அடையாளம் - மெய்யும் பொய்யும் : மகாராசன்
சனி, 26 பிப்ரவரி, 2022
தமிழ் மரபின் அந்தணர் வேறு; ஆரிய மரபின் பிராமணர் வேறு - மகாராசன்
நால்வகைத் தொழில் பிரிவுகளையும் - தொழில் குலங்களைக் குறித்தும் தொல்காப்பியம் மரபியலில் கூறியுள்ள செய்திகள் அவ்வகையில் கவனிக்கத்தக்கவை.
நூலே, கரகம், முக்கோல், மணையே
ஆயும் காலை அந்தணர்க்கு உரிய
என, ‘அந்தணர்’ என்போர்க்குரிய அடையாள மரபுகளாகச் சுட்டும் தொல்காப்பியம், நூல், கரகம் எனும் கமண்டலம், முக்கோல், இருக்கை மணை ஆகிய நான்கும் ஆயும் காலத்து அந்தணர்க்கு உரியவை என்கிறது.
அந்தணர் என்போரின் தொழில்கள் குறித்துத் திவாகர நிகண்டு கூறும்போது,
ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்
ஈதல், ஏற்றல் என்று இருமூவகை
ஆதிக் காலத்து அந்தணர் அறுதொழில்
என்கிறது. இதனையே பிங்கல நிகண்டும் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், தொல்காப்பிய மரபியலின் இன்னொரு நூற்பாவில்,
அந்தணாளர்க்கு அரசு வரைவின்றே
எனவும் கூறப்பட்டிருக்கிறது.
மேற்குறித்த பதிவுகளில் ‘அந்தணர்’ எனும் குலத்தோர் உயர்வானவர் என்றோ, அந்தணர் தொழில் உயர்வானது என்றோ தமிழர் மரபில் சுட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும், தமிழர் மரபில் சுட்டப்படும் அந்தணர் எனும் தொழில்குல மாந்தர், ஆரிய வைதீக மரபில் கூறப்படுகிற பிராமணர் எனும் குல மாந்தரிலிருந்து வேறானவர் ஆவர். அந்தணரெனும் சொல்லானது, பிராமணரைக் குறிக்கவும் பயன்படுத்தவில்லை என்பதும் நோக்கத்தக்கது.
இதைக்குறித்துப் பாவாணர் கூறுகையில், ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று தொல்காப்பிய மரபியலில் கூறியவை, மருத நகரில் உழவர் குலத்தினின்றும் முதன் முதல் தோன்றிய நாற்பெரும் பிரிவுகளே அன்றி, பிற்காலத்தில் தோன்றிய பல சிறு சிறு குலங்கள் அல்ல. தொல்காப்பியர் காலத்தில், மருத நகரில் பல குலங்கள் இருந்தன. ஆனால், பழைய முறைப்படி, நாற்பெரும் பிரிவுகளே கூறப்பட்டன. இப்பிரிவுகளுள் ஆரியப் பார்ப்பார் அடங்கார். அயலாராகவும் தமிழர் குலமுறைக்குப் பொருந்தாமலும் இருத்தலின், பார்ப்பார் முனிவரான அந்தணரும் அல்லர்; அரசரும் அல்லர்; வணிகரும் அல்லர்; வேளாளரும் அல்லர். அந்தணர் முதலிய நாற் பாலும் மரபியலில் கூறப்பட்டது தமிழ் முறை பற்றியே’ என்பார்.
அந்தணர் எனும் சொல்லானது, ஆரிய பிராமணர்களைக் குறிப்பதாகவே பல தரப்பினரும் கருதுகின்றனர். ஆயினும், தமிழ் அந்தணரும் ஆரியப் பிராமணரும் ஒரே தொழில் குலத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். அதேவேளையில், ஆரிய பிராமணர்களும் தம்மை அந்தணர் என்பதாகவே வேடமிட்டு வந்திருக்கின்றனர். தமிழர் மரபில் கூறப்படும் அந்தணர்களின் தொழில்குலப் பண்பொழுக்கமும், ஆரிய பிராமணர்களின் தொழில்குலப் பண்பொழுக்கமும் வேறு வேறானது என்பதைத் தமிழர் வரலாற்றில் காணமுடிகிறது.
சொல்லாலும் எழுத்தாலும் செயலாலும் அந்தணர் என்ற சொல் அன்பையும் அமைதியையும் அறத்தையும் அறிவையுமே சுட்டுகிறது. அம் மற்றும் தண்மை என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள அந்தணர் எனும் சொல்லானது, அம் + தண்ணர் = அந்தணர் எனப்படுகிறது. அவ்வகையில், தமிழர் மரபில் கூறப்படும் அந்தணர் குறித்துப் பாவாணர் எடுத்துரைக்கும் பகுதிகள் வருமாறு:
‘அவா, வெகுளி துறந்து, விருப்பு வெறுப்பற்ற துறவு நிலையாளர்களே அந்தணர் எனப்படுபவர் ஆவர். அந்தணர் : அழகுணர்வும், குளிர்மையும் கொண்ட பெரியோர், அறவோர். அந்தணர் என்போர் சினம் அறுத்தோர், கடுஞ்சொல் தவிர்த்தோர், அவா விடுத்தோர், மக்கள் நலம் விரும்புவோர் என விரிக்கலாம்.
அந்தணர் என்னும் பெயர், முதலாவது தனித்தமிழ் முனிவரைக் குறித்தது. அந்தணர் என்னும் சொல்லின் - அழகிய குளிர்ந்த அருளை உடையவர் - என்னும் பொருளுக்கு ஏற்ப,
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)
என்று, அந்தணர்க்கு இலக்கணம் கூறினதும் அன்றி, அதைத் துறவிகளைப் பற்றிக் கூறும் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்திலும் வைத்தார் திருவள்ளுவர்.
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப
என்று தொல்காப்பியத்தில் கூறிய முனிவர் செய்தியையே,
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் (குறள் 28)
அருள் என்னும் குணம் துறவிகட்கே உரியதாகும். அதனால்தான், அருளுடைமை, புலால் மறுத்தல், கொல்லாமை என்னும் மூன்றையும் திருவள்ளுவர் இல்லறத்தில் கூறாது துறவறத்தில் கூறினர். பிராமணருக்கு அருள் இல்லை என்பது மனுதர்ம நூலாலும், இப்போது அவர் பிறரை முக்கியமாய்க் கீழோரை நடத்தும் வகையினாலும் அறியப்படும்’ என்கிறார் பாவாணர்.
மேலும், ‘தமிழ் முனிவரான அந்தணர், சிறந்த அறிஞராயும் ஆசிரியராயும் ஆக்கவழிப்பாற்றல் உள்ளவராயும் இருந்தமையின், அரசர்கள் அவர்களை மதியுரைக்கும் தற்காப்பிற்கும் துணைக் கொண்டனர். இதையே, திருவள்ளுவர் திருக்குறள் பொருட்பாலில் ‘பெரியாரைத் துணைக்கோடல்’, பெரியாரைப் பிழையாமை’ என்ற அதிகாரங்களில் கூறுவர்.
அரசர்கள் போர், வேட்டை முதலியன பற்றிச் சென்றபோது, அவர்கட்குத் துணையாய் இருந்த அந்தணரே அரசு செய்யக்கூடும். இதையே
அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே
என்னும் நூற்பா குறிப்பதாகும். ‘வரைவு இன்றே’ என்பது, ‘விலக்கப்படவில்லை’ என்று பொருள்படுமேயன்றி, என்றும் உரியது என்று பொருள்படாது’ என்பார் பாவாணர்.
தமிழர் மரபில் அந்தணர் எனும் வகைப்பாடு, குலம் பற்றி உருவானதுமல்ல. மாறாக, தொழில் சார்ந்தும், பண்பொழுக்கம் சார்ந்தும் உருவானதாகும். தமிழர் மரபின் அந்தணருக்கும், ஆரிய மரபின் பிராமணருக்குமான வகைப்பாட்டு வேறுபாடுகளைக் குறித்து ம.சோ.விக்டர் கூறும்போது, ‘கற்றறிந்த அக்காலப் பெரியோர்களில் பலரும் பல்வேறு குணநலன்களைக் கொண்டிருந்தனர். கல்வியால் ஏற்படும் செருக்கு, தற்பெருமை, சினம் போன்ற தவிர்க்கப்படவேண்டிய பண்புகளையும் அவர்களில் சிலர் கொண்டிருந்தனர். அவ்வாறெல்லாம் இல்லாமல் கடுஞ்சொல் தவிர்த்து, விருப்பு வெறுப்புகளைக் களைந்து, அந்தணர் எனப்பட்டனர்.
கணிப்பதால் கணியர் என்றும், அறிதலால் அறிவர் - அறிஞர் என்றும், மேன்மையானவற்றைத் தைப்பதால் அல்லது இணைப்பதால் மேதை என்றும், மதிநுட்பம் நிறைந்ததால் மதியர் என்றும், புல்லி அறிவதால் புலவர் என்றும், நாளையும் கோளையும் பார்த்துக் கணக்கிடுவதால் பார்ப்பார் என்றும், அம்மையும் தண்மையும் கொண்டவர்களால் அந்தணர் என்றும் சொல்லப்பட்டனர். இவர்களின்றி கணக்கன், கணக்காயன், கங்காணி என்றவாறும் அறவுடையோர் அழைக்கப்பட்டனர்.
மக்களைப் பிளவுபடுத்தி, உழைப்பை உறிஞ்சி வாழும் பிராமணர்கள், அந்தணர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளத் தகுதியற்றவர்கள் ஆவர். தமிழ்த் துறவிகளும் சான்றோர்களும் நிலைநாட்டிய அந்தணர் என்ற பெருமையை, ஆரியர்கள் தம்மைக் குறித்துச் சொல்லிக்கொண்டு பெருமைப்படுவது, எவ்வகையிலும் பொருத்தமற்றது; தமிழ்த் துறவிகளைச் சிறுமைப்படுத்துவதும் ஆகும்’ என்கிறார்.
மேலும், ‘அரசருக்கு அறிவுரை கூறவும், குடிகளுக்கு நல்வழி காட்டவும், தாம் கற்ற கல்வி அறிவாலும் பட்டறிவாலும் சமூகத்தில் மதிக்கப்பட்ட சான்றோர் அந்தணர்கள். பிற்காலத்தில் துறவிகள் என்றும், முனிவர்கள் என்றும், சித்தர்கள் என்றும் சொல்லப்பட்டனர். அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்றவாறு பணிகளின் அடிப்படையில் சமூக அமைப்புகள் இருந்தன.
அந்தணரின் மகன், அந்தணராகவே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படவில்லை. அந்தண்மை என்பது பாட்டன், தந்தை, பெயரன் வழியில் வருவதில்லை. அரச மரபில் தோன்றிய இளங்கோ அந்தணராக அறியப்பட்டார். வணிகர் மரபில் தோன்றிய சாத்தனார் அந்தணராகக் கருதப்பட்டார். வேளாண் மரபில் வந்த மருதனார் அந்தணராகப் போற்றப்பட்டார். எனவே, அந்தணர் தகுதி பிறப்புவழி அல்லாது, அறவழியால் அறியப்படுவது. இதுவே தமிழர் மரபாகவும் இருந்தது. ஆரியர் வகுத்த பிராமண மரபு, பிறப்பு வழியிலானது; மக்களைப் பிளவுபடுத்துவது ஆகும்’ என வேறுபடுத்துகிறார் ம.சோ.விக்டர்.
தமிழர் மரபில் சுட்டப்படும் அந்தணர் என்போரின் பண்பொழுக்கத்தையும் அறநெறிகளையும் கொண்டிருக்கும் யாவருமே அந்தணர்தான் என்கிறார் அயோத்திதாசர். அந்தணர் எனும் தொழில் பெயர் அடையாளம், சகல தேச - சகல பாஷைக்காரர்களுக்கும் பொருந்தும் என்பதே அயோத்திதாசரின் கருத்தாகும்.
இதைக்குறித்து அவர் கூறும்போது, ‘பிராமணன் அந்தணன் என்று வகுக்கப்பெற்ற செயலின் பெயர்கள் தென்னிந்தியனாய் இருக்கினும், வட இந்தியனாய் இருக்கினும், தென் ஆபிரிக்கனாய் இருக்கினும், வட ஆபிரிக்கனாய் இருக்கினும், எவனொருவன் தேக சுத்தம், வாய் சுத்தம், மனோ சுத்தம் என்னும் திரிபொறி சுத்தம் உடையவனாய், நூற்றியெட்டு ரூப ஆசைகள் அற்று, சாந்தம், ஈகை, அன்பு என்னும் முப்பேரின்பங்களைப் பெருக்கி, காமம், வெகுளி, மயக்கம் என்னும் முச்சிற்றின்பங்களை அகற்றி, சருவ உயிர்களையும் தன்னுயிர் போல் காத்து, சீவர்களுக்கு உண்டாகும் பிணிப் பீடைகளை அகற்றி, கால மழைகளைப் பெய்ய வைத்து, குடிகளுக்குச் செல் காலம், நிகழ்காலம், வருங்காலம் என்னும் முக்காலச் செயல்களையும், நான்குவகை வாய்மெய்களையும் நெறிகளையும் புகட்டிச் சீர்பெறச் செய்யும் குளிர்ந்த தேகியைத் தென் மொழியில் அந்தணன் என்றும், பிரம மணம் வீசுதல் என்னும் - அவர்களுக்குள்ள நன்மெயின் செயல் பரவுதலை வடமொழியில் நம் மூதாதைகள் பிராமணன் என்றும் வகுத்திருக்கின்றார்கள். இதுவே விவேக விருத்தியால் மனதை ஆளும் செயல்பெயர்களாம்’ என்கிறார். அவ்வகையில், தமிழர் மரபில் காணப்பட்ட அந்தணர் எனும் தொழில்பெயர் அடையாளத்தைச் சகலருக்கும் பொதுமையான அடையாளமாகவே அயோத்திதாசர் முன்கொணர்கிறார் எனலாம்.
அந்தணர் அல்லது பிராமணர்கள் என்போரை ‘யதார்த்த பிராமணர்கள்’ எனவும், ‘வேடதாரிப் பிராமணர்கள்’ எனவும், இருவேறான தரப்பினராக அடையாளப்படுத்துகிறார் அயோத்திதாசர். அயோத்திதாசரைப் பொருத்தளவில், யதார்த்த பிராமணர்கள் என்போரே அந்தணர் ஆவர். பிராமணர்கள் எனச் சொல்லிக்கொண்டு வருண பேதங்களைப் பின்பற்றுவோரும் நடைமுறைப்படுத்துவோரும் வலியுறுத்துவோரும் மெய்யான பிராமணர்கள் அல்லர். மாறாக, பிராமணர்கள் போல வேடமிட்டுக்கொள்ளும் வேடதாரிப் பிராமணர்கள் ஆவர் என்கிறார் அயோத்திதாசர்.
யதார்த்த பிராமணர்கள் குறித்தும், வேடதாரிப் பிராமணர்கள் குறித்தும் விவரிக்கும் அயோத்திதாசர், ‘நீதியும், நெறியும், வாய்மெயும், தண்மெயும் நிறைந்த பிராமணனை மற்றும் விவேகிகள் பிராமணர் என்று அழைப்பார்களேயன்றி, தங்களுக்குத் தாங்களே பிராமணர் என்று சொல்லித் திரிய மாட்டார்கள்.
அவர்கள் செயலோ, தன்னைப்போல் சருவ உயிர்களையும் பாதுகார்த்தலும், சாந்தகுணம் பெருக்கமுற்று சகல பற்றுக்களும் அற்று, சமணநிலை கடந்து, பிரம மணத்தால் சருவ சீவர்களுக்கும் உபகாரியாக விளங்குவார்கள். இவர்களையே யதார்த்த பிராமணர்கள் என்று கூறப்படும்.
இந்நியாயர்களை மகட பாஷையில் பிம்மணரென்றும், சகட பாஷையில் பிராமணர் என்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைப்பார்கள்’ என்கிறார்.
வருண பேதத்தைக் கடைபிடிக்கும் பிராமணர்கள் தம்மை இரு பிறப்பாளர்கள் எனச் சொல்லிக்கொள்கின்றனர். இருபிறப்பு என்பதான நிலையானது, வருண பேதத்தைப் பின்பற்றுவோர்க்கு உரியதல்ல எனக் கருதும் அயோத்திதாசர், ‘சமணநிலை கடந்து அறஹத்துக்களால் உபநயனமென்னும் ஞானக்கண் பெற்று, உள்விழிப் பார்வை மிகுதியால் உண்மெய் உணர்ந்து, புறமெய் அகற்றி, தானே தானே தத்துவ சுயம்பிரகாச பரிநிருவாண சுகம் அடைவானாயின், அவனையே இரு பிறப்பாளன் என்று கூறப்படும்.
அதாவது, தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும், பரிநிருவாண பிறப்பொன்றுமேயாம். இத்தகைய உபநயனமென்னும் ஞானவிழி பெற்று, ஞானசாதன மிகுதியால் இரு பிறப்பாளனாகும் பரிநிருவாணத்திற்கு உரியவன் எவனோ அவனே யதார்த்த பிராமணன் ஆவான்’ என்கிறார்.
அதாவது, தாய் வயிற்றுப் பிறப்பு ஒன்று, பரி நிருவாணநிலை அடைதல் மற்றொரு பிறப்பு ஆகும். இத்தகைய இரு பிறப்பு நிலையானது யதார்த்த பிராமணர்களுக்குரியதாக அயோத்திதாசர் கூறுகிறார்.
இந்நிலையில், வேடதாரிப் பிராமணர்களைப் பற்றி விவரிக்கும் அயோத்திதாசர், ‘பெண்டுபிள்ளைக் கூட்டத்தினின்று பொருளாசை மிகுதி கொண்டு, தன்னவர்களை ஏற்றியும், அன்னியர்களைத் தூற்றியும், சீவகாருண்ணியமற்று தன்னையொற்ற மக்களைக் கொல்லாமல் கொன்று, பத்துக்குடிகள் நாசமடைந்த போதிலும், தன் குடி சுகமடைந்தால் போதும் என்னும் பொறாமெயே ஓர் உருவாகக் கொண்டுள்ளார்கள் தங்களைப் பிராமணரென்று சொல்லித் திரிவது வேஷ பிராமணமே ஆகும்’ என்கிறார் அயோத்திதாசர்.
யதார்த்த பிராமணர்கள் குறித்து ‘யதார்த்த பிராமண வேதாந்த விவரம்’ எனும் பகுதியிலும், வேடதாரிப் பிராமணர்கள் குறித்து ‘வேஷப் பிராமண வேதாந்த விவரம்’ எனும் பகுதியிலும் மிக விரிவாகவே விளக்கியுள்ளார் அயோத்திதாசர். அயோத்திதாசரின் இத்தகைய எடுத்துரைப்புகள் யாவும், வருண பேதங்களைக் கற்பிதம் செய்த பிராமணர்கள் என்போரின் வேடதாரி அடையாளத்தைக் கட்டவிழ்ப்பதாகும்.
வேடதாரிப் பிராமணர்களின் அடையாளத்தை அயோத்திதாசர் கட்டவிழ்த்திருக்கும் பாங்கு குறித்து எடுத்துரைக்கும் டி.தருமராஜ், ‘அயோத்திதாசருக்கு முன்னும் பின்னும், பலரும் சாதியின் தோற்றத்தைப் பேசிப் பார்த்திருக்கிறார்கள். சாதி, பிராமணன் உருவாக்கியது; வர்ணம், அவனுடைய கண்டுபிடிப்பு; தீண்டாமை, அவனே சொல்லித் தந்தான்; எல்லாவற்றையும் நிர்மாணித்தவன் பிராமணன்; அவன் புத்திசாலி, கவனமாயிருக்க வேண்டும்; அவனால் எதையும் சாதிக்க முடியும், அழிக்க முடியும். வேறெங்கோயிருந்து இங்கு வந்த வகையினன்; வரும் பொழுதே செழுமையான மொழியையும், சமயத்தையும், பண்பாட்டையும் கொண்டு வந்தான்; அந்தணன், அறிவாளி; எல்லோரையும் ஏமாற்றத் தெரிந்தவன்; தன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்துவான். இது போல் இன்னும் வகைவகையான விளக்கங்கள். பிராமண எதிர்ப்பு என்ற பெயரில் செய்யப்பட்ட பிராமணத் துதிகள்.
முதன்முறையாய், இந்த வகை விளக்கங்களிலிருந்து வேறுபடுகிறார் அயோத்திதாசர். பிராமணர்களை வேடதாரிகள் மட்டுமே என்றார். இங்கொன்றும் அங்கொன்றும் பேசக் கூச்சம் அற்றவர்கள்; பாதகங்களுக்கு அஞ்சுவதில்லை; குற்றவுணர்ச்சியை இழந்தவர்கள்; இட்டுக்கட்டிக் கதைகளைச் சொல்கிறவர்கள். மற்றபடி, புத்திசாலித் தனத்திற்கும் இவர்களுக்கும் வெகு தூரம் என்றார் அயோத்திதாசர்.
பிராமணர்களை நிராயுதபாணி ஆக்கினார். அவர்கள் சொந்தம் கொண்டாடும் பெயர் அவர்களுடையது இல்லை என்றார். அவர்கள் உரிமை பாராட்டும் மொழி அவர்கள் மொழி இல்லை என்றார். அவர்களது பழக்க வழக்கம் அவர்களுடையது இல்லை.
எல்லாமே வேஷம். பெயரில் வேஷம்; பேசும் மொழியில் வேஷம். உணவில் வேஷம்; தோற்றத்தில் வேஷம்; உடையில் வேஷம் - மொத்தத்தில் வேஷ விற்பன்னர்கள். பிராமண சாதி பற்றி எழுப்பி வைக்கப்பட்டிருந்த மாயையைப் பொல பொலவெனச் சரித்து விட்டார்’ என்கிறார். அவ்வகையில், தமிழர் மரபின் அந்தணர் என்போரின் தொழில் குலத்திற்கும், ஆரிய வைதீக மரபின் பிராமண வருண குலத்திற்கும் உள்ள வேறுபாடுகளைத் தெளிந்தறியலாம்.
மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..
வெள்ளி, 25 பிப்ரவரி, 2022
இந்து மதமாற்றத்திற்கு எதிராக அயோத்திதாசரின் தமிழர் அடையாள முழக்கம் - மகாராசன்
1881ஆம் ஆண்டு அயோத்திதாசரின் பெருமுயற்சியால் ‘திராவிட மகாஜன சபை’ என்ற அமைப்பு தொடங்கப் பெற்றிருக்கிறது. நீலகிரியில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் தலைவராக அயோத்திதாசரே பணியாற்றியிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில்தான் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் ஆரியப் பிராமணிய வைதீக மரபுகளை ‘இந்துத்துவம்’ எனும் வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்த பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றிருக்கின்றன.
1881ஆம் ஆண்டு, ஆங்கிலேய வல்லாதிக்க அரசின் ஆட்சியாளர்கள் மக்கள் தொகைக் கணக்கிடும் பணியை மேற்கொண்டபோது, சமய அடையாளங்களைப் பதிவு செய்யும் வேலையையும் செய்திருக்கிறார்கள். பவுத்தர், சமணர், கிறித்துவர், இசுலாமியர், சீக்கியர் போன்ற செவ்வியல் சமய அடையாளங்களைச் சாராத பெருவாரியான மக்களுக்கு எந்தச் சமய அடையாளத்தை வழங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
‘யாரெல்லாம் கிறித்துவர்கள், இசுலாமியர், பவுத்தர், சமணர், சீக்கியர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள்’ என, 1861 முதல் 1891 வரையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெருவாரியான மக்கள் திரள் ‘இந்து’ எனும் அடையாளத்திற்குள் வலியத் திணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலமாக மறைமுகமான ‘மதமாற்றம்’ நிகழ்வதையும், ‘இந்துக்கள்’ என்ற அடையாளம், உயர்த்திக் கொண்ட சாதியினரின் தந்திரம் மூலம் ஆங்கிலேய வல்லாதிக்க அரசால் வலுக்கட்டாயமாக இந்திய - தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்படுவதையும் அறிந்த அயோத்திதாசர், இந்து எனும் அடையாளத் திணிப்பிற்கான எதிர்ப்புணர்வை அக்காலத்திலேயே மிகத் தீவிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
‘இந்து’ எனும் அடையாளம் ஆரியப் பிராமணிய வைதீக மரபை அடித்தளமாகக் கொண்டிருப்பது. அது, சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது எனக் கருதிய அயோத்திதாசர், இந்து எனும் அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் இந்து சமூகத்தின் சாதிய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால், சாதியக் கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்து எனும் அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். இந்து என்ற அடையாளத்தை ஏற்க மறுத்த அயோத்திதாசர், அதற்கு மாற்றாக இந்து அல்லாத மாற்று அடையாளத்தையும் மிகத்தெளிவாக முன்வைத்திருக்கிறார்.
‘இந்திய தேசத்திலுள்ள பழங்குடி மக்களும், பஞ்சமர் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களும் ‘இந்துக்கள்’ என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. எனவே, இவ்விரு மக்களும் ‘ஆதித் தமிழர்கள்’ என்பதாகவே கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படல் வேண்டும்’ என்ற குரலை 1881ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே அயோத்திதாசர் வெளிப்படுத்தி இருக்கிறார் எனும் வரலாற்றுக் குறிப்பைத் தருகிறார் டி.தருமராஜ்.
இந்து எனும் அடையாளத்திற்கு மாற்றாக அயோத்திதாசர் முன்வைத்த அடையாளம், மொழி அடையாளமாக இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகப் பழங்குடியினரும், தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களும் ‘ஆதித் தமிழர்கள்’ என்ற அடையாளம், தமிழர்களான அவர்களது தமிழ்மொழி அடையாளத்தையும் - அம்மக்களின் தொன்மை வரலாற்றையும் குறிப்பதாக அமைந்திருக்கிறது.
மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..
*
ஏறு தழுவுதல்: உணர்ச்சிப் பொங்கிப் பெருகும் நூல் - அய்யனார் ஈடாடி.
விலங்குகளோ பறவைகளோ உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்தே வாழ்கின்றன. ஆனால், மனிதர்கள் மட்டுமே தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தானே உற்பத்தி செய்து கொண்டு, இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்தலைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.
அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், மருதநில மக்களின் வேளாண் தொழிலைப் பற்றியும், அவர்கள் உழவுக்குப் பயன்படுத்திய ஏர் மாடுகளைப் பற்றியும், மாடுகளின் வகைகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
தைத்திருநாள், தமிழர் திருநாளான பொங்கலைப்பற்றியும், மாட்டுப் பொங்கலைப் பற்றியும் கிராமத்திய ஏறு தழுவல் பற்றியும் எடுத்துரைக்கிறார்.
மாடுகளும் மனிதர்களும் ஒன்றே; குடும்பத்தில் ஒருவர் என்றும் சொல்கிறார். அப்படித்தானே இன்றளவும் தமிழ்ச் சமூகம் பார்த்து வருகிறார்கள்.
முக்கூடற்பள்ளுப் பாட்டுக்களை மேற்கோள் காட்டியும், ஆதிக்கச் சமூகத்தின் நிலம் மற்றும் உரிமைகளைப் பற்றி ஆங்காங்கே பேசுகின்றன இந்நூல்...
ஏறு தழுவுதல் எனும் மாடு தழுவல் தமிழர் பண்பாடு சார்ந்தது; நிலம் சார்ந்ததது; பண்பாடு சார்ந்தது; உரிமை சார்ந்தது; தமிழர் சார்ந்தது என்று உணர்ச்சி பொங்கிப் பெருக நூலை முடித்திருக்கிறார்.
மேன் மேலும் பற்பல படைப்புகளைப் படைக்க வாழ்த்துக்கள் எழுத்தாளருக்கு...
செவ்வாய், 15 பிப்ரவரி, 2022
அயோத்திதாசரைப் பேச மறுத்ததன் பின்புலம் : மகாராசன்
அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் வகையில், ஞான.அலாய்சியஸ் தொகுத்த ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ எனும் நூல் தொகுதிகள்தான், அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாட்டுப் புலத்தை அறிந்துகொள்வதற்கான கருவி நூல்களாக இருக்கின்றன. இந்நிலையில், அயோத்திதாசரைக் குறித்தும், அவரது அறிவுச் செயல்பாடுகளைக் குறித்தும் பேசுபொருளாக்கி வெளிவந்திருக்கும் ஆய்வு நூல்களுள் டி.தருமராஜ் எழுதிய ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’ எனும் நூல் மிக முக்கியமானதாகும்.
அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாடுகள் முழுவதையும் ஆராய்ந்து அவற்றைப் பேசுபொருளாக்கியிருக்கும் அந்நூல், தமிழ்ச் சமூகம் அயோத்திதாசரைப் பேசுபொருளாக முன்னெடுக்க மறந்த அல்லது மறைத்ததன் பின்புலம் குறித்துப் பேசியிருக்கிறது.
அத்தகையப் பின்புலச் சூழல் குறித்து எழுதும் டி.தருமராஜ், ‘சுமார் 125 வருடங்கள் கழித்து இன்றும்கூட தமிழ் கூறும் நல்லுலகில் ‘அயோத்திதாசப் பண்டிதர்’ என்ற பெயர் எந்தவொரு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியதல்ல. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில், தமிழகத்தின் மிகப்பெரும் சிந்தனையாளராக விளங்கிய அயோத்திதாசர், தமிழகத்து வரலாற்றாய்வாளர்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டார்.
தமது மரணம் வரையிலும், மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அயோத்திதாசரைப் பற்றிய ஒரு சிறு குறிப்புகூட இடம்பெற்று விடாதபடி பார்த்துக் கொண்ட தந்திரம், இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் வெற்றிகரமாகவே செயல்பட்டு வந்தது.
அயோத்திதாசரின் சமகாலத்தில் வாழ்ந்து வந்த தேசியக் கவிகளுக்கும், புரட்சியாளர்களுக்கும், சுதேசிகளுக்கும் அவருக்குப் பின் தோன்றி, சென்ற நூற்றாண்டில் தமிழகமே தலைமேல் வைத்துக் கூத்தாடிய திராவிடச் சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அவரை இருட்டடிப்புச் செய்ததில் கணிசமான பங்கு இருக்கவே செய்தது. தமிழ்ச் சமூகத்தின் நாடி நரம்புகளிலும் புரையோடிப் போயிருக்கும் சாதிய வெறியையும் காழ்ப்புணர்வையும் தவிர்த்து இதற்கு வேறென்னதான் காரணமாக இருக்க முடியும்?’ என்கிறார்.
டி.தருமராஜ் கருதுவதுபோல, அயோத்திதாசரைப் பேசுபொருளாக முன்னெடுக்காமைக்குச் ‘சாதியம்’ மட்டுமே காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அயோத்திதாசரின் சாதிப் பின்புலம் சார்ந்த வேறுபல சமூக ஆளுமைகளோடும் அரசியல் சமூகச் செயல்பாடுகளில் பங்கெடுத்திருப்பதோடு, அவற்றைப் பேசுபொருளாகவும் மற்றவரும் பொதுச் சமூகமும் முன்னெடுத்திருக்கும் வரலாறும் இருக்கிறது. ஆகவே, அயோத்திதாசரைப் பேசுபொருளாக்க மறந்தது அல்லது மறைத்ததில் சாதியம் மட்டுமே காரணம் அல்ல எனக் கருதலாம்.
பிறகு ஏன் அயோத்திதாசர் பேசுபொருளாக முன்னெடுக்கப்படவில்லை?
குறிப்பாக, திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல்வாதிகளும், திராவிடக் கருத்தியல் செயல்பாட்டாளர்களும் அயோத்திதாசரை முன்னெடுக்காமல் போனதற்கும் - முன்னெடுக்காமல் இருப்பதற்குமான வலுவான அரசியல் காரணம் ஒன்று மட்டுமே இருந்திருக்க வேண்டும். அது, அயோத்திதாசரின் ‘தமிழர்’ அடையாள அரசியலே ஆகும்.
தமிழர் அடையாள அரசியலை உள்ளீடாகக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளும் அயோத்திதாசரைப் பேசுபொருளாக முன்னெடுக்காமைக்கான பின்புலமும்கூட அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலே காரணமாகும். திராவிட அரசியலிலிருந்தும் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்தும் வேறுபட்டதான தன்மைகளைக் கொண்டிருப்பதே அயோத்திதாசர் முன்வைத்த தமிழர் அடையாள அரசியலாகும்.
மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..
*
தமிழர் சமூக அரசியலைப் பேசுபொருளாக்கும் அறிவாயுதம் : செ.தமிழ்நேயன்
தமிழர் அறிவு மரபின் தொடர்ச்சியாகப் பல்வேறு தளங்களில் பங்காற்றிய பண்டிதர் அயோத்திதாசர் பேச்சும் எழுத்துமான சிந்தனைப்பாடுகள் மிகமிக முக்கியமானவை. ஆயினும், பிற்காலத்தில் உருத்திரண்ட திராவிட அரசியலால் அவை மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் விட்டன.
தமிழ் மொழி பற்றிய அயோத்திதாசரின் பார்வைகள் மாறுபட்ட புதிய கண்ணோட்டத்தில் உள்ளன. வட்டாரப் பகுதிகளைக் கொண்டும் - அப்பகுதிகளில் வழங்கிய மொழி வழக்குகளைக் கொண்டும் தமிழை முத்தமிழாக வகைப்படுத்திப் (கொடுந்தமிழ், கருந்தமிழ், செந்தமிழ் என்ற வகையில்) பகுப்பாய்வு செய்திருப்பதும், சூத்திரன் என்ற சொல்லின் மெய்ப்பொருளைத் தெளிவாக வரையறுத்து அடையாளப்படுத்துவதும் கவனிக்கத்தக்கவை.
தமிழர் என்போர் சாதி பேதமற்றவர்கள் என்பதையும், சைவம், வைணவ சமய அடையாளங்கள் தமிழாக இருப்பினும், அந்த அடையாளங்களைப் பேசியவர்கள் எவ்வாறு தமிழரை ஒடுக்கினர் என்பதையும் வரலாற்றுப் பார்வையோடு விவரிக்கிறார் அயோத்திதாசர்.
பெளத்த சமய வெறுப்புதான், பிராமணர்களிடமும் பிராமணர் அல்லாத சாதிய மேட்டிமைக் கூட்டத்தினரிடமும் சாதியக் கட்டுகளையும் வன்மங்களையும் அவிழ்த்து விட்டிருக்கிறது என்பதை அயோத்திதாசர் விவரிக்கும் வரலாற்றியல் தரவுகள் கவனிக்க வேண்டியவையாகும்.
அயோத்திதாசர் பார்வையில் திராவிடர் என்பவர் தமிழர்தான்; சாதிய வேறுபாடு அற்றவர்தான் தமிழர்; மண்ணின் மக்கள்தான் தமிழர் என்பதை அறிய முடிகிறது.
அயோத்திதாசரின் தமிழ் எழுத்துகள் குறித்த ஆய்வுகள் மாறுபட்ட பார்வை கொண்டிருப்பவை. அதேபோல, அமுத எழுத்து, விட எழுத்து, சுதேசி, பரதேசி பற்றிய விளக்கம், பிராமணர் பற்றிய விளக்கங்கள் யாவும், தற்கால மேட்டிமைக் கருத்தியல் கட்டமைப்புகளையெல்லாம் சுக்கு நூறாக உடைக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
வைதீக மரபிற்கும் தமிழ் மரபிற்கும் இடையே உள்ள முரண்களை மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார் பண்டிதர். அந்தணர் என்போர் யார்? பிராமணர் யார்? வேடதாரிப் பிராமணர் யார்? என விளக்கும் பகுதிகள் புதிய பார்வையைத் தந்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், தமிழர்கள் ஒருபோதும் இந்துக்களாக இருந்திருக்கவில்லை; தமிழர்கள் இந்துக்களே இல்லை; தமிழர்களுக்கு இந்துக்கள் எனும் அடையாளமே தேவையில்லை; இந்து எனும் அடையாளமே தமிழர்களுக்குப் பொருத்தமற்றது என மிகத்தெளிவாகத் தமது வாதங்களை முன்வைத்திருக்கும் அயோத்திதாசர், தமிழர்கள் இந்து என்ற அடையாளத்திற்குள் நிற்பவர்கள் அல்ல; தமிழ் மட்டுமே அவர்களின் அடையாளம் என்று நிறுவுகிறார்.
திராவிடம் - திராவிடர் எனும் அடையாளத்தை முன்வைத்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக அடையாள மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கும் சூழலில், தமிழர் அடையாள விழிப்புணர்வு பெறுவதற்குப் பண்டிதரின் சிந்தனைகளை மீட்டுருவாக்கம் செய்திடவேண்டிய தேவை எழுந்திருக்கிறது. அயோத்திதாசர் பார்வையில் திராவிடர் என்று குறிக்கும் அடையாள அரசியல் முற்றிலும் வேறு வகைக் கண்ணோட்டத்தில் கையாளப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
திராவிடம்தான் ஆரிய எதிர்ப்பின் அடையாளம் என முன்வைக்கப்பட்டிருக்கும் சூழலில், தமிழர் மரபின் பல்வேறு கூறுகள் ஆரிய எதிர்ப்பையே கொண்டிருக்கின்றன என்பதையும் அயோத்திதாசர் பல்வேறு வகையில் எடுத்துக்காட்டுகிறார். ஆரிய எதிர்ப்பில் பண்டிதர் பேசிய பிராமணிய எதிர்ப்பு வேறாகவும், திராவிடம் பேசுவோர் முன்னெடுத்த பிராமணிய எதிர்ப்பு வேறாகவும் இருக்கிறது. சாதியப் பாகுபாடுகள் வளர்ந்ததில் பிராமணர் அல்லாதோர் பங்களிப்பும் பல்வேறு வகையில் இருந்துள்ளதையும் பண்டிதர் ஆவணப்படுத்தியுள்ளார். அவ்வகையில், ஆரிய எதிர்ப்பின் மெய்யான சிந்தனை மரபின் தொடர்ச்சியாக அயோத்திதாசர் திகழ்ந்திருக்கிறார்.
அயோத்திதாசர் சிந்தனைகள், தூங்கிக்கொண்டிருக்கும் தமிழர்களைத் தட்டி எழுப்பும் துடியாகக் கையிலெடுத்திருக்க வேண்டும். ஆனால், அவரது சிந்தனைகளைப் பரண்மேல் வைத்துப் புழங்காத பழம்பொருளாக மாற்றி வைத்திருக்கிறது ஒரு நூற்றாண்டுகாலத் தமிழ்ச் சமூகம்.
இந்நிலையில், தமிழ்ச் சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர் ஏர் மகாராசன் அவர்கள் எழுதியிருக்கும் ‘அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்: அறிவுச் செயல்பாட்டு மரபும் நீட்சியும்’ எனும் இந்நூலானது, தமிழர் அரசியலைப் பேசுபொருளாக்கும் அறிவாயுதமாய் அயோத்திதாசரை முன்வைத்திருக்கிறது.
அயோத்திதாசரைப் பேசுபொருளாக - அயோத்திதாசரின் சிந்தனைகளைப் பேசுபொருளாக முன்னெடுப்பதின் வழியாகத் தமிழர் அரசியல் உரையாடல்கள் வளம் பெறுவதற்கு வாய்ப்புகள் பலவுண்டு. அவ்வகையில், ஏர் மகாராசன் அவர்களது இந்நூல், தமிழர் அரசியல் உரையாடலுக்குப் பெருந்துணைபுரியும் என்றே நம்புகிறேன்.
தமிழர் அறிவு மரபின் நீட்சியாகத் திகழ்ந்திருக்கும் அயோத்திதாசர், ஒரு நூற்றாண்டுக்கும் முன்பாகவே முன்னெடுத்திருந்த தமிழர் அடையாள அரசியல் பற்றிய உரையாடல்கள், இன்றைய காலத் தமிழ்ச் சமூக அரசியல் தேவைகளுக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டியவை; மீளாய்வு செய்யப்பட வேண்டியவை; விவாதிக்க வேண்டியவை ஆகும். இத்தகைய அறிவுச் செயல்பாட்டுக்கு மகாராசனின் இந்நூல் பெருந்துணை புரியும் என்பதில் ஐயமில்லை.
தமிழர் சமூக அரசியல் உரையாடலை முன்னெடுத்திருக்கும் ‘அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்: அறிவுச் செயல்பாட்டு மரபும் நீட்சியும்’ நூலானது, இலக்கை நோக்கி வெற்றிபெற வாழ்த்துகள்.
மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலின் வாழ்த்துரையில் இருந்து..
*
தமிழ்த் தேசிய அரசியல் களத்திற்கான உரையாடல் திறப்பு : கே.வருசக்கனி
அவ்வகையில், பண்பாட்டு ஆய்வாளர் ஏர் மகாராசன் அவர்களின் ‘அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்’ எனும் நூல், தமிழக அரசியலை அரை நூற்றாண்டாகத் தீர்மானித்த இருபெரும் வெகுஜன அடையாளங்களாக முன்வைக்கப்பட்ட தமிழர், திராவிடர் என்ற அடையாளங்களை மையமாக வைத்து விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது.
பிராமணர் × பிராமணரல்லாதோர் அடையாளத்தைத் திராவிட இயக்கங்கள் முன்னெடுப்பதற்கு முன்பாகவே திராவிட மகாஜன சபையைத் தொடங்கி, தமிழர் அடையாளத்தை முன்னெடுத்தவர் அயோத்திதாசர். அயோத்திதாசர் முன்மொழிந்த இரு அடையாளங்களான தமிழர், திராவிடர் என்ற அடையாளங்களையும், அவற்றின் அரசியல் பங்களிப்பையும் முரண்களையும் இந்நூல் விரிவாக விவாதிக்கிறது.
பிராமணிய மேலாதிக்கத்திற்கு எதிராக அயோத்திதாசர் முன்மொழிந்த திராவிடர், தமிழர் எனும் அடையாளங்கள் குறித்த பொருண்மைகள் இன்றைய சூழலில் விவாதிக்கப்பட வேண்டியவை. பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் திராவிட இயக்கங்கள் அயோத்திதாசரின் பங்களிப்பை மறைத்ததும் மறந்ததும் ஏன்? தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தோர் பலரும் அயோத்திதாசரின் பங்களிப்பை மறைத்ததும் மறந்ததும் ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்கள்தான் இந்நூல் முன்வைத்திருக்கும் உரையாடல்கள் ஆகும்.
திராவிட அடையாளத்தை முன்வைத்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிடக் கட்சிகளும், திராவிட அரசியலுக்கு மாற்றாகத் தமிழர் அடையாளத்தை முன்வைத்துத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் இயக்கங்களுள் சில பலவும் பிராமணியத்தோடு சமரசம் ஆகியுள்ள இன்றைய சூழலில், அயோத்திதாசர் முன்மொழிந்த அடையாளங்களின் உண்மையான அர்த்தத்தை விவாதிப்பது அவசியமாகிறது. அந்த விவாதத்தின் உரையாடல்களைத்தான் இந்நூல் தொடங்கி வைக்கிறது.
இவ்வாறு விவாதிப்பதன் மூலம், திராவிட இயக்கங்கள் தவறவிட்ட அல்லது தவறிவிட்டதை அடையாளம் காணவும், குறைபாடுகளைச் சரிசெய்யவும்கூட இவை அவசியமாகின்றன. அதேபோல, திராவிட அரசியலுக்கு மாற்றாக முன்னெழுந்து வருகிற தமிழ்த் தேசிய அரசியல் வளம்பெறவும் இதுபோன்ற அறிவுசார் விவாதங்கள் இன்னும் நிறைய வரவேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகின்றது.
இன்றைய சமூக அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் பல்வேறு தரப்பினராலும் முன்மொழியப்படுகிற ‘தமிழர்கள் இந்துக்கள்’, ‘தமிழ் இந்துக்கள்’, ‘தமிழ் சைவம்’, ‘தமிழ் வைணவம்’ எனும் சொல்லாடல்களும், ‘சாதி’யை மையமாக வைத்துத் தமிழர் அடையாளத்தை முன்வைக்கும் போக்குகளும், பார்ப்பனரா? பிராமணரா? எனும் அடையாளச் சுட்டுகள் குறித்த விவாதங்களும், ‘நாங்களும் இந்துக்கள்தான்’ என அவ்வப்போது பல அரசியல் கட்சிகள் அறிவித்துக்கொள்வதும் பிராமணியத்தோடு சரணாகதி அடையும் போக்குகளைக் கொண்டிருப்பவை.
இத்தகையச் சரணாகதிப் போக்கின் ஆபத்தையும், அதன் பின்னுள்ள அரசியலையும் நூறாண்டுகளுக்கு முன்பாகவே அயோத்திதாசர் விவாதித்துள்ள கருத்துகளைத்தான் இந்நூல் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, ‘இந்து’ எனும் அடையாளத்திற்கு மாற்றாகத் ‘தமிழர்’ எனும் அடையாளத்தை அயோத்திதாசர் முன்னிறுத்துவதற்கான காரணங்களையும் இந்நூல் விவாதித்துள்ளது.
மேலும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்கும் தமிழ் சைவம், தமிழ் வைணவம் எனும் பெயரிலான அடையாளங்களுக்கு மாற்றாக, தமிழர்களுக்குச் சாதி கிடையாது; எனவே, சாதிபேதமற்ற தமிழர் அடையாளத்தையே அயோத்திதாசர் முன்னிலைப்படுத்தியிருக்கிறார். அதற்குப் பக்கபலமாக, சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத 'தமிழ்ப் பௌத்தம்' எனும் மெய்யியலைத் தமிழர் மெய்யியலாக முன்மொழிந்த காரணங்களையும், தமிழ் இலக்கியங்களின் துணையோடு வரலாற்று ரீதியாகச் சைவ - வைணவத்தைவிட, தமிழ்ப் பௌத்தமே மூத்தது; சிறந்தது என அயோத்திதாசர் நிறுவியுள்ள பாங்கையும் இந்நூல் விரிவாகப் பேசியிருக்கிறது.
பிராமணர்களையும், வைதீக ஆரிய மதத்தையும் முன்வைத்துப் பிராமணர்களை மட்டுமே அறிவாளிகளாகச் சித்தரிக்கும் பிராமணிய மையச் சிந்தனையைச் சுக்குநூறாக உடைத்து, சாதிபேதமற்ற தமிழர்களின் அறிவுச்செயல்பாட்டு மரபை அயோத்திதாசர் மீட்டெடுத்திருக்கிறார். இந்நிலையில், சூத்திரர், வேஷ பிராமணர் போன்ற சொற்களுக்கான அர்த்தம் பற்றி அயோத்திதாசரின் கருத்துகளையும், தமிழ் மரபில் அந்தணர் மற்றும் சூத்திரர் குறித்த தரவுகளையும் அயோத்திதாசரின் கருத்துகளோடு ஒப்பிட்டு விளக்குகிறது இந்நூல்.
பிராமணிய மைய வரலாறுகளுக்கு எதிராக, மாற்றுப் பண்பாட்டு வரலாறுகளை முன்வைத்த அயோத்திதாசரின் சிந்தனைகளையும், அவரது ஆய்வு முறையியல்களையும், சமூக அரசியல், இலக்கியம், சமயம், தத்துவம், மொழி, வரலாறு, பண்பாடு எனப் பல்வேறு தளங்களில் வைத்து விவாதிக்க வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமும் ஆகும்.
சாதிபேதமற்ற தமிழர் அடையாளத்தை முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு, இந்நூல் ஒரு திறந்த உரையாடலை ஏற்படுத்தித் தரும் என நம்புகிறேன்.
இந்நூல் வழியாக அயோத்திதாசர் சிந்தனைகளை மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ள ஆய்வாளர் ஏர் மகாராசன் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.
மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலின் அணிந்துரையில் இருந்து..
*
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.
அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506
வேளாண் மக்கள் ஆய்வுகளும் (Agrarian Studies) சமூகத் தேவையும் : மகாராசன்
தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. அது, உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் எனப் படர்ந்து விரிந்திருக்கிறது. தமிழக நிலப்பரப்பையே மாற்றியமைத்த வரலாறு வேளாண்மைக்கு உண்டு. எழுத்து என்ற புதிய தொழில் நுட்பத்தின் வருகைக்கும் வேளாண்மைக்கும் நெருங்கிய தொடர்பும் உண்டு. சங்கக் கவிதைத் தொகுதிகளை உருவாக்கியதற்கும் நெல் வேளாண்மைக்கும்கூடத் தொடர்புகள் உண்டு. அரிசியிலிருந்து அதிகாரத்தைக் கற்பனை செய்யும் வழக்கம் தமிழில் இருந்திருக்கிறது. அதாவது, வேளாண்மை உற்பத்திக்கும் அதிகார உருவாக்கத்திற்கும் மிக நெருங்கிய உறவுகள் இருந்திருக்கின்றன.
வேளாண் மலர்ச்சிக் காலத்தைப் பண்பாட்டு மலர்ச்சிக் காலம் என்றும், கலை மலர்ச்சிக் காலம் என்றும், அரசு மலர்ச்சிக் காலம் என்றும் நம்மால் நிரூபிக்க முடியும். சொல்லப்போனால், கடந்த அய்யாயிரம் ஆண்டுகளில் தமிழ்ச் சிந்தனையை வேளாண்மையே - நெல் வேளாண்மையே வடிவமைத்திருக்கிறது. அதன் புற அகச் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண்களை வேளாண் வாழ்க்கையில் தடம் காண முடியும். அவ்வகையில், வேளாண் வாழ்க்கை என்பது வேளாண் மக்கள் என்றே இங்கே பொருள்படுகிறது.
தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்திக் களமாக இருக்கும் வேளாண்மைத் தொழில் மரபுகளைக் குறித்தும், அத்தகைய வேளாண் தொழில் மரபினர்களான வேளாண் மக்களைக் குறித்துமான தனித்துவ அக்கறையும், ஆய்வுகளும், படைப்புகளும், கலைகளும், மீள் உருவாக்கங்களும் முன்னெடுக்கப்படாமலேதான் இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருட்களைப் பரந்துபட்ட பொதுச் சமூகத்தின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய தேக்கநிலையே இன்றுவரை நிலவுகின்றது.
காலங்காலமாகவே ஆளும் வர்க்கத்தாலும், அதிகார நிறுவனங்களாலும், சுரண்டல் முறைகளாலும், உலகமய நுகர்வு வெறித்தனங்களாலும், உலக வல்லாதிக்க நாடுகளாலும், பன்னாட்டு வணிக நிறுவனங்களாலும் மட்டுமல்ல; இந்திய ஒன்றியம் மற்றும் தமிழ்நாட்டு அரசு நிறுவனங்களாலும் அவற்றின் நடைமுறைக் கொள்கைகளாலும் மட்டுமல்ல; உணவு உற்பத்தியை அனுபவிக்கும் பொதுச் சமூகத்தின் பாராமுகத்தாலும் அதிகம் வஞ்சிக்கப்படுவது வேளாண்மைத் தொழிலும், அது சார்ந்த வேளாண் மக்களுமே ஆவர்.
எல்லாக் காலத்திலும், எல்லா வகையிலும், எல்லாத் தரப்பினராலும் வஞ்சிக்கப்படுகிற - சுரண்டப்படுகிற - ஒடுக்கப்படுகிற - இழப்புகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்கிற வேளாண்மைத் தொழில் குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் மய்யப்படுத்திப் பேசுவதும் எழுதுவதுமான ஆய்வுச் செயல்பாடுகள் - கலை இலக்கியப் படைப்பு உருவாக்கங்கள் - அரசியல் உரையாடல்கள் மிக அதிக அக்கறையுடனும் அதிகமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், வேளாண்மையும் வேளாண் மக்களுமே இந்தச் சமூகத்தின் உணவு உற்பத்தி அரங்கமாகவும் உற்பத்தி உறவுகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் பழங்குடிகள், பெண்கள், பட்டியல் சமூகத்தினர், உழைக்கும் வர்க்கத்தினர், மத மற்றும் மொழிச் சிறுபான்மையினர், இந்திய ஒன்றிய அதிகாரத்தால் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் பற்றிய பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேவேளையில், இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தியின் அங்கமாகத் திகழும் வேளாண் மக்களைக் குறித்தான பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படவே இல்லை.
இந்திய ஒன்றியத்தின் பிற பகுதிகளிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் அக்கறையோடு கூடிய ஆய்வுகளும் படைப்புகளும் அரசியல் உரையாடல்களும் மிக அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு, உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் தத்தமது வேளாண்மை - வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருளைக் கவனப்படுத்தி வருகின்றன. இத்தகைய வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரிலேயே தனித்துவமாகச் செய்து வருகின்றனர். தமிழ்ச் சமூகத்தில்தான், வேளாண்மை குறித்தும் - வேளாண் மக்களைக் குறித்தும் பேசுபொருட்களாக முன்வைத்து ஆய்வுகள், படைப்புகள், உரையாடல்கள் முன்னெடுப்பதற்குத் தயக்கமும் கூச்சமும் புறக்கணிப்பும் நிறைந்த ஒவ்வாமையும் ஒதுக்குதலும் நிலவிக்கொண்டிருக்கின்றன.
வேளாண்மையும் வேளாண் மக்களும் இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உயிர்நாடி என்பதைப் பொதுச் சமூகம் இன்னும் உணரவே இல்லை. இந்தச் சூழலில்தான், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வு'களாக (Agrarian Studies) முன்னெடுத்து, பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் உலக சமூகத்தின் பார்வைக்கும் முன்வைக்கும் செயல்பாடுகளை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரில் முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டிய சமூகத் தேவைகளும் உள்ளன.
இவ்வாறு, வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies)
முன்னெடுக்கப்படும் உரையாடல்கள் மூலமே, உலகின் பல பகுதிகளில் உள்ள வேளாண் மக்கள் ஆய்வுப் புலங்களோடு உறவும் ஒருங்கிணைப்பும் பகிர்வும் நடைபெற இயலும். இந்த ஒருங்கிணைப்பின் வழியாகவே தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த கவனிப்பை உலக அரங்கிலும் உள்ளூர் அரங்கிலும் கவனப்படுத்த முடியும்.
பாலினம், நிறம், இனம், சாதி, மதம் போன்றவற்றால் ஒடுக்குதலுக்கும் சுரண்டுதலுக்கும் உள்ளாகும் அனைத்துத் தரப்பினரும் உள்ளூர் அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும் ஒருங்கிணைப்பையும் உறவையும் வைத்திருக்கின்றன. அதனால், அதனதன் பிரச்சினைப்பாடுகள் அல்லது பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அந்தவகையில், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்தும் 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரில், ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படுகிறபோதுதான், வேளாண்மையும் வேளாண் மக்களும் உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் பேசப்பட வைக்க முடியும். இதை வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies) முன்னெடுத்து 'வேளாண் மக்களியம்' (Agrarianism) எனும் கோட்பாடாகவும்கூட எதிர்காலத்தில் வடிவமைக்க இயலும்.
அந்தவகையில், வேளாண் மக்கள் ஆய்வுகளை (Agrarian Studies)
முன்னெடுக்க பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அரசியலாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள், வேளாண் மக்கள் தரப்பினர், இதரத் தொழில் பிரிவினர், அறிவுத்துறையினர் போன்றோர் முன்வரத் தொடங்கி உள்ளனர். வேளாண் மக்களின் வாழ்வியலையும், வேளாண் மக்களின் பிரச்சனைப்பாடுகளையும், அவர்களது கோரிக்கைகளையும் பொதுச் சமூக வெளியில் பேசுபொருளாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு தொழில் பிரிவினருக்கும் - சாதியினருக்கும் - வட்டாரத்தினருக்கும் - சமயத்தினருக்கும் என ஒவ்வொரு வகையிலும் தனித்த பண்பாட்டு அடையாளக் கோலங்களும், வரலாற்றுப் பின்புலமும், உற்பத்திப் பங்கேற்பும் நிரம்ப உண்டு. இங்குள்ள சமூகக் குடிகள் குறித்தச் சமூக மற்றும் பண்பாட்டு வரையறுப்புகள் வெளிநாட்டவர் அடையாளப்படுத்திய அளவுக்கு, இங்குள்ளவர்களால் விரிவான வரைவுகளை உருவாக்கவோ தொகுக்கவோ மீளாய்வு செய்யவோ முன் வருவதில்லை; அவ்வாறு முன்வைத்திருக்கவுமில்லை.
இங்குள்ள ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகங்களைப் புரிந்து வைத்திருப்பதிலும், புரிந்து கொள்ள முயற்சிப்பதிலும் நிறையப் போதாமைகள் இருக்கின்றன. அதிலும்கூட, தவறாகவும் உள்நோக்கத்தோடும்தான் புரிந்து கொள்கின்றன அல்லது புரிந்து வைத்திருக்கின்றன.
ஒவ்வொரு சமூகத்திடமும் குவிந்து கிடக்கிற பண்பாட்டுக் கோலங்களை - வகிபாகத்தை - சமூகப் பங்கேற்பை - பொருளாதாரப் பின்புலத்தை - சமூக உளவியலை - கல்வி வேலை வாய்ப்புகளை - சமூக வளர்ச்சிக் கட்டங்களை - உடலியல் மற்றும் அறிவு தொடர்பான மனித வளம் உள்ளிட்ட தரவுகளை உள்ளடக்கிய சமூக வரைவியல் - இன வரைவியல் ஆய்வுகள் சார்ந்து எழுதுவதும் பேசுவதும் விவாதிப்பதும்கூட, பிற்போக்கானதாகவும் சமூக விரோதமானதாகவும் பொதுப்புத்தி நோக்கிலேயே கருதப்படுகின்றன.
ஒரு சமூகத்தின் அசைவியக்கங்களையும், அவற்றின் வேர்களையும் பின்னணிகளையும், அவை கொண்டிருக்கும் கருத்தாக்கங்களையும், அவை நிகழ்காலச் சமூக அமைப்பில் உலவக்கூடிய வகிபாகத்தையும், அதன் அகத்திலும் புறத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், அது பிற சமூகத்தவருடன் கொண்டிருக்கும் உறவையும் இணக்கத்தையும் - நட்பையும் முரணையும், அச்சமூகம் கட்டமைக்கும் அதிகார வெளிகளையும், அதில் நிலவக்கூடிய உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகள் போன்ற சமூக உறவு நிலைகளையும், அதன் வார்ப்புக்குப் பின்னாலிருக்கும் மானுடவியல் வரலாற்றுக் குறிப்புகள்.. என நீளுகிற ஒரு சமூகம் சார்ந்த அத்தனை விவரிப்புகளையும், வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கப்படுத்தும் எடுத்துரைப்புகள் மிக மிகக் குறைவு.
சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் மக்கள் திரள் இயக்கங்கள்கூட சமூக வரைவியல் - இன வரைவியல் தளங்களைக் குறித்த புரிதலிலும் எடுத்துரைப்பிலும் பின்தங்கியேதான் இருக்கின்றன. ஒவ்வொரு மக்கள் திரள் சமூகங்களைக் கற்றுக் கொள்வதும் புரிந்து கொள்வதும்கூட இன்னொரு வகையில் சமூகக் கல்விதான். நிலவுகிற சமூக அமைப்பில் சமூக, அரசியல், பொருளியல், அதிகாரக் கட்டமைப்பு அல்லது மறு கட்டமைப்பு சார்ந்த சமூக மாற்றப் பணிகளை - சீர்திருத்தத்தை - போராட்டத்தை - புரட்சியை உருவாக்குவற்கு முன்பாகவோ அல்லது உருவாக்கும்போதோ, ஒவ்வொரு சமூகக் குழுவைப் பற்றியுமான புரிதல்கள் அடிப்படைத் தேவையாகும். இத்தகையப் புரிதலுக்குச் சமூக வரைவியல் - இன வரைவியல் சார்ந்த ஆய்வுகள் பேருதவி புரியக் கூடியவையாகும்.
எத்தகையச் சமூக மாற்றத்திற்கான செயல்பாட்டிற்கு முன்பாகவும், ஒவ்வொரு சமூகப் பிரிவினரிடமும் நிலவுகிற சமூகக் கோலங்கள் என்ன? அவற்றின் சமூகப் பண்பாட்டுத் தகவுகள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் சமூக மாற்ற இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள்கூட, அவற்றின் அரசியல் வரைவுகள் உருவாக்கப்பட்டிருக்கும் அளவுக்கு, பல்வேறு சமூகப் பிரிவினரைக் குறித்த வரைவியலையும் வரைவுகளையும் இதுவரை முன்வைக்கவில்லை.
சாதிய மேலாதிக்கமும் - அதன்வழிப்பட்ட பண்பாட்டு மேலாதிக்கமும் நிலவுகிற தமிழ்ச் சமூகச் சூழலில், சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகவும் - பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு எதிராகவும் போராடுகிற பண்பாட்டு அடையாள அரசியலும் இருந்துகொண்டேதான் வருகின்றது. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்தியச் சமூக அமைப்பில் பாரம்பரியமாக மூன்று வகையான ஆதிக்கங்கள் நிலை பெற்றுள்ளன. அவை, அரசியல் ஆதிக்கம், பொருளியல் ஆதிக்கம், பண்பாட்டு ஆதிக்கம். இந்த மூன்று வகை ஆதிக்கங்களுள் மூன்றாவதாக அமையும் பண்பாட்டு ஆதிக்கம், சாதி வேறுபாடுகளை ஆழமாகக் கொண்ட இந்தியச் சமூகத்தில் வலுவாக வேரூன்றி உள்ளது.
இந்திய மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றைக் கற்கும்போது, ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்கள் குறித்தும் - அவர்கள் வருவாய் ஈட்டிய முறை குறித்தும் அறிந்து கொள்ளும் அளவுக்கு, பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் மீது திணிக்கப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. அவற்றை மிக எளிதாக ஒதுக்கி விடுகிறோம்.
ஆனால், உண்மையான சமூக வரலாறு என்பது, பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் - அவற்றுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களையும் உள்ளடக்கியதாகும். எனவே, இத்தகைய போராட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வது சமூக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது என்பார். அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் வேளாண் தொழில் மரபினர் நிகழ்த்திய பண்பாட்டு அடையாளப் போராட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறது வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
வேளாண் மக்களைப் பற்றிய சமூக வரைவியலை - தொழில் மரபுகளை - பண்பாட்டுக் கோலங்களை - வரலாற்று வகிபாகத்தைச் சமூகத்தின் பொதுப் பார்வைக்கும் புரிதலுக்கும் விவாதத்திற்கும் உதவும் வகையில்தான், வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டத்தின் சமூக ஆய்வுகள் அமையவிருக்கின்றன. அதன் சிறுமுயற்சிதான், ‘வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்’ எனும் நூலாக வெளி வருகின்றது. நேர்மையோடும் சமூக அறத்தோடும் பயணிக்கும் யாவருக்கும் இந்நூல் உதவும்.
வேளாண் மக்களின் சுய மரியாதை மற்றும் சமூக நீதிக்கான உரையாடல்கள் பொதுச் சமூகத்தாலும், சமூக மாற்ற இயக்கங்களாலும் முன்னெடுக்கப்பட வேண்டும்; வேளாண் மக்களின் வேட்கையும் கோரிக்கையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். நூலாக்கத்திலும் - நூல் சார்ந்த உரையாடல்களிலும் துணை நின்ற அனைவருக்கும் மிகுந்த நன்றி.
வரலாற்றை நேர் செய்வோம்.
திங்கள், 14 பிப்ரவரி, 2022
உழுகுடிப் பண்பாட்டரசியலின் புதிய ஆவணம் : வேளாண் மரபின் தமிழ் அடையாளம் - மீனாசுந்தர்
மானிடப் பண்பாட்டியல் கூறுகள் எண்ணிறந்தவை. அவற்றை மேலும் செழுமைப்படுத்தவும் நிகழ்கால வாழ்வியலில் புதிய முகங்களுடன் பரிமாணம் பெற்றுள்ள அதன் பல்வேறு உட்கூறுகளைக் கண்டறிந்து அடையாளப்படுத்தவும் சமூகவியலாளர்கள் பண்பாட்டியல் ஆய்வில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வேளாண் வாழ்வியல். என்ற பண்பாட்டியலாய்வு அண்மைக் காலமாக அசுர வேகமெடுத்துள்ளது. இதுவரை பார்த்த பார்வையினின்று விலகி அது காத்திரமாகப் புதிய எழுச்சியைப் பெற்றுள்ளது. மரபுசார் வேளாண்மை குறித்தும் அதில் காலங்காலமாக நேரிடையாக ஈடுபட்டு வரும் மக்கள் குறித்தான செய்திகளும் தற்சமயம் பெரும் பேசுபொருளாகி வருகின்றன. தமிழர் வாழ்வின் ஆணிவேராக விளங்குவது திணை வாழ்வியல். திணை வகைமைகள் நிலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அதனால் தான் முதற்பொருளெனக் காலத்துடன் இணைத்து அது தொல்தமிழில் குறிக்கப் பெறுகின்றது. கருப்பொருள்கள் யாவும் முதற்பொருளை அடிப்படையாகக் கொண்டே வரையறை செய்யப்பட்டுள்ளன. சங்ககாலத் தமிழ் மண்ணில் சாதி, சமய அடையாளத்திற்கான எந்த நேரடிச் சான்றும் உறுதியாக இதுவரை கிட்டவில்லை. கிடைத்திருக்கும் அனைத்தும் பண்பாட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பது தமிழர் மேன்மையை உலகிற்கு உரத்துச் சொல்கிறது. பண்பாடு என்றளவில் ஐவகை திணைகளிலும் வாழ்ந்த குடிகளும் அவர்தம் தொழிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. நாகரிகச் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு வயல்சார் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட மருதத்திணையின் பங்கு பெருமிதம் கொள்ளத்தக்கது. இதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.
நிகழ்கால வாழ்விற்கேற்ப தம் பரிமாணத்தைப் புதுப்பித்துக் கொண்டே வரும் வேளாண்மையும், எத்தனையோ ஏற்ற இரக்கங்களுக்கு நடுவிலும் தமக்குப் பேராண்மையை வழங்கும் ஒன்றாகக் கருதிப் பூர்வீகத் தொழிலான வேளாண்மையை விட்டு விடாத வேளாண் குடிகளும் என்றும் நன்றியோடு வணங்கத் தக்கவர்கள். சுழன்றும் ஏர் பின்னது உலகமென்கிறார் வள்ளுவர். இதிலிருந்தே உழவின் முக்கியத்துவம் அறியலாம். உலகம் முழுமையும் நிறைந்து கிடக்கும் தொழிலாளர் குழுமத்திற்குள் உழுகுடிகளின் விழுக்காடு மிக அதிகம். அவர்களின் உடல் வன்மையும் மரபார்ந்த தொழில் நுட்ப அறிவும் மற்றவரெவரும் போட்டியிட முடியாத அளவிற்கு மேம்பாடுடையவை. அதனால் தான் ஏர்த் தொழிலும் போர்த் தொழிலிலும் அவர்கள் ஒரே நேரத்தில் ஈடுபட்டு பல்வேறு வெற்றிகளை பழந்தமிழகத்தில் ஈட்ட முடிந்தது.
தமிழ்நாட்டின் உழுகுடிகளுக்கு நீண்ட வரலாறும் நெடிய பண்பாட்டுத் தொடர்ச்சியும் உண்டு. எனினும் அவர்கள் மற்றவர்களின் பார்வையில் எந்தத் தகுநிலையில் வைத்துப் பார்க்கப்படுகிறார்கள்? இந்தப் பார்வைப்பிழை எப்படி ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது? அதிலிலுள்ள நுண்ணரசியல் எப்படி வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது? இவை ஆழ்ந்து யோசிக்கத் தக்க அம்சங்கள். ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டு செய்ய முனைவதற்கும் பன்னெடுங்காலம் பூர்வீகக் குடிகளாய் அம்மண்ணிலேயே தலைமுறைகள் மட்க நிலை கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உலக உயிர்களுக்கு உணவு வழங்கும் புனிதத் தொழிலைச் செய்யுமவர்கள் ஒட்டுமொத்தக் குடிகளின் தலைமக்களாய் பார்க்கப்பட வேண்டியவர்கள். ஆனால் தலைகீழாய்ப் பார்க்கப்படும் விபத்து எங்ஙனம் நிகழ்ந்தது? உண்மையில் அவர்கள் யார்? அவர்கள் ஆளுமையின் திரட்சியென்ன? ஒவ்வோர் உழுகுடி மாந்தனும் ஒரு நடமாடும் வேளாண்மைப் பல்கலைக்கழகம்மெனச் சொல்லுமளவிற்கு நீரியல் மேலாண்மையை அவர்கள் எங்கிருந்து கற்றார்கள் போன்ற பல வினாக்களின் தரவுக் களஞ்சியமாக விங்குகிறது "வேளாண் மரபின் தமிழ் அடையாளம் - உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்" என்னும் இந்நூல். தமிழகமறிந்த மக்கள் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான முனைவர் மகாராசன் மிகுந்த சிரத்தையுடன் இந்நூலைத் தமிழ்ச் சமூகத்திற்குப் படைத்தளித்திருப்பது மிகப் பொருத்தமாகப் படுகிறது. ஏனெனில் உழுகுடிகளின் அடையாளமான ஏரையே தான் நடத்திய இதழிற்குப் பெயராக வைத்து ஏர் மகாராசன் எனச் சிறப்பிக்கப்படுபவர் அவர்.
வேளாளர் என்பவர் யார்? அது சாதிப் பெயரா? பண்பாட்டியல் பெயரா? சாதிப் பெயரெனில் அதில் பல்வேறு உட்பிரிவுகள் எங்ஙனம் வந்தன? உட்பிரிவுகள் அனைத்தும் இணையாகக் கருதப்படுகின்றனவா? போன்ற மனத் தெறிப்புகளை உண்டாக்கும் முதற்பகுதி நூலிற்குள் நுழையவும் தெளியவும் அகன்ற வாயிலைத் திறந்து விடுகின்றது. இது குறித்த ஆய்வுகள் தமிழ் சூழலில் பரந்த அளவில் முன்னெடுக்கப்படாத கவலையை ஆய்வாளர் அறிமுகப் பகுதியிலேயே பதிவு செய்து விடுகிறார். அவர் மொழியில் கூறுவதெனில், "எல்லாக் காலத்திலும் எல்லா வகையிலும் எல்லாத் தரப்பினராலும் வஞ்சிக்கப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற, ஒடுக்கப்படுகின்ற இழப்புகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்கிற வேளாண்மை குறித்தும் வேளாண் மக்களைக் குறித்தும் மய்யப்படுத்திப் பேசப்படுவதும் எழுதுவதுமான ஆய்வுச் செயல்பாடுகள், கலை இலக்கிய படைப்பு உருவாக்கங்கள், அரசியல் உரையாடல்கள் மிக அதிக அக்கறைடனும் அதிகமாகவும் முன்னெடுக்கப்பபட வேண்டும்" இந்த வார்த்தைகள் மிக முக்கியமானவை. கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவரின் பார்வைக் குறைபாட்டைப் போலக் கண்களை இடுக்கி, கண்டதே காட்சி கொண்டதே கோலமெனப் பார்க்கும் பொதுச் சமூகம் இனி எத்திசை நோக்கிப் பயணப்பட வேண்டுமென்பதை தொடக்கத்திலேயே ஆணியறைந்து அறிவிக்கிறார் ஆசிரியர். நூலெழும் தேவையை ஆசிரியர் வாயாலேயே சொல்லக் கேட்பது நமக்குள் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
வேளாண்மை என்பதற்கு ஈகை என்று பொருள் தருகிறார் வள்ளுவர். உழவின் அடிப்படைப் பண்பே மற்றவர்களுக்கு உணவை ஈதல் என்ற நிலையில் உழவுக்கு அப்பெயரே வழங்கி வருவது மிகப் பொருத்தம். இன்னொரு வகையில் அதன் வேர்ச் சொல்லை ஆராய்கையில் வேள், ஆண்மை என்று இரண்டாகப் பிரித்தால் வேள் என்பதற்கு நிலமென்றும் ஆண்மை என்பது ஆளுதல் என்றும் பொருள்படுகின்றன. வேள், ஆள் வேளாண்மையை ஆளும் ஆள் வேளாள் என்றாகிறது. ர் விகுதி தமிழில் மாண்பின் பின்னொட்டாக விளிப்பது மரபு. ஆகவே வேளாண்மையை தொழிலாகக் கொண்டவர் வேளாளர் ஆகிறார். இது தொழிற் பண்பாட்டினடிப்படையில் எழுந்த பெயர். தொழிலை மையப்படுத்திய சாதி உருவாக்கத்தின் போது இது சாதியாக உருமாற்றம் பெறுகிறதென்ற வகையில் ஆய்வாளர் சான்றினடிப்படையில் ஒவ்வொன்றையும் நிறுவுகிறார். இதற்குச் சங்க இலக்கியம் தொடங்கி, நிகண்டுகள் கடந்து மறைமலையடிகள், தேவநேயப்பாவாணர் உள்ளிட்ட ஆழங்கால்பட்ட தமிழாளுமைகளின் கருத்துகள் வரை எடுத்துக் கையாள்கிறார். இதன் மூலம் தமிழ் மண்ணில் வேளாண்மைப் பூர்வீகக் குடிகள் யாரென்ற வினாவை அழுத்தமாகக் எழுப்புகிறார். இன்று வரை அத்தொழிலை உயிர் மூச்சாகக் கருதி சேற்றுக்கால் உழவராக விளங்குபவர் யாரோ அவரே வேளாளர் என்ற விளக்கம் இயல்பாய் நம்மனத்தைப் பற்றிக் கொள்கிறது. நம்மை அறத்தின் பக்கம் இருத்திச் செல்கிறார் மகாராசன். .இவ்விடத்தில் கருங்களமர், வெண்களமர் என்ற இருவகை வேளாண்குடிகளை முன்வைப்பது விரிவான புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
வேளாண்குடிகளின் தொன்மங்கள், அவர்களின் மழைச்சடங்குகள், இந்திர வழிபாடு, அவர்களுக்கும் ஆசிவக வழிபாட்டு மரபுக்குமான தொடர்பு, உழவுப் பண்பாட்டின் அகமும் புறமும் போன்ற பலவும் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. இந்திரன் பெயர்க்காரணம், தமிழர், ஆரியர் இந்திர வழிபாடுகளின் வேறுபாடு, சிந்து நதியின் மூலம் மற்றும் சிந்துதல் (மழை) என்னும் வினைச் சொல்லிலிருந்து கிளைத்திருக்கும் இந்திரம், பின் சங்க காலம், காப்பியக் காலமென விரிவதைத் தரவுகளுடன் கொடுக்கிறார். சிலப்பதிகாரத்தில் கொண்டாடப் பெறும் இந்திர விழா உள்ளிட்ட எண்ணற்ற தகவல்களை அள்ளியள்ளி தருகிறார். இந்திரன் என்பதற்கு ஆய்வறிஞர் கா.சு.பிள்ளை குறிப்பிடும் கருத்தைப் பொருத்தமாக எடுத்துக் கையாள்கிறார். வயலுக்கு நீர் இன்றியமையாமை என்பதால் இன் திறன் என்பது இந்திரனாக மருவிற்று என்று அறிவுப் பாய்ச்சல் நிகழ்த்துகிறார் கா.சு. பிள்ளை. மேலும் ஆரிய இந்திர வழிபாடு இறைச்சி வேண்டுவதையும் தமிழர் இந்திர வழிபாடு அதை மறுப்பதையும் சுட்ட வேண்டிய மிக முக்கியச் செய்தி.
வேளாண் மரபினரின் நீரறுவடைப் பண்பாடு என்னும் நிறைவு இயல் இந்நூலின் சிகரம் எனச் சொல்லத் தோன்றுகிறது. நாகரிகங்கள் ஆற்றங்கரைகளில் தான் ஊற்றெடுத்தன என்கிறது வரலாறு. ஆற்றங்ரைகளில் வாழ்ந்தவர்கள் உழுகுடி மக்கள் என்று விளக்கத் தேவையில்லை. இன்றும் அவர்களின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகள் அவ்வாறே அமைந்துள்ளன. அவர்கள் பெற்றிருந்த நீரியல் அறிவாண்மையை இயல் முழுவதும் மிக விரிவாகப் பேசுகிறார் மகாராசன். தமிழகத்தின் ஆற்றுப் பாசனங்களை முழுவதுமாகப் பதிவு செய்வதுடன் நீர் சேமிப்பு முறைகளை, சேமிக்கும் இடங்களை, மரபு சார்ந்த அவற்றின் காரணப் பெயர்களை, நீராதாரப் பகுதிகளைக் காத்திரத்துடன் பதிவு செய்கிறது நூல். நீர் மேலாண்மையைக் கைக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு அடையாளப் பெயர்கள் நீர்ப்பாய்ச்சி, நீராணிக்கம், நீர்க்கட்டி, மடைக்குடும்பன் என்பவை. அவ்வாறு வழங்கப் பெறுவதை ஒரு சேரத் திரட்டித் தருவது மிகச் சிறப்பு. இதன் நீட்சியை அவர் நீரறுவடைப் பண்பாடாக விரித்துச் செல்கிறார். அதில் குறிப்பிடப் பெறும் உள்ளூர் தன்னாட்சியெனும் தனித்த பண்பு நீராளும் மரபினரின் அறிவு மேன்மையை புலப்படுத்துகிறது. நீரியல் மேலாண்மை சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய உலகில் திரும்பவும் பழைய நிலையை நாம் மீட்க விரும்பினால் என்னென்ன பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதைக் கற்பித்துச் செல்லும் பொருண்மை மிக்க பகுதி இது.
நெல்லின் வகைகள், நீர் தேக்குமிடங்களின் பெயர்கள், நீரில் துள்ளும் மீன்களின் வகைகள், பருவ காலங்களின் கணக்கீட்டு முறைகள், உழுகருவிகள் மற்றும் அதைக் கொண்டு நிகழ்த்தப் பெறும் சடங்குகளின் வகைகள், உழவு மாடுகளின் வகைகள், அவர்களுக்கும் மாடுகளுக்குமான தொழிற்புனித உறவு, பழந்தமிழ் ஆலயங்களில் அவர்களுக்கிருந்த முக்கியத்துவம், உழுகுடியினரை மையப்படுத்திய பொங்கல் விழா என அத்தனைக்கும் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தும் கல்வெட்டுகள், செப்பேடுகள், வாய்மொழி மரபு போன்றவற்றிலிருந்தும் சான்றுகளைப் போதும் போதுமென்கிற அளவிற்கு எடுத்து இணைக்கிறார் ஆசிரியர். உழுகுடி மரபினரின் இத்தனை சான்றுகளை ஒருசேரப் பார்க்கையில் நமக்குப் பெருமூச்செழுகிறது. போர்க்களத்திலும் ஏர்க்களத்திலும் ஒருசேர நின்று களமாடியவர்கள் என்பதற்கான அரசவகைச் சான்றுகளையும் காலத்துடன் இணைத்துக் கொடுத்திருப்பது மிகச் சிறப்பு.
யாப்பு வெளியீடாக அழகிய வேலைப்பாட்டுன் வந்திருக்கிறது இந்நூல். நாற்று முடியில் குங்குமப் பொட்டுடன் காட்சிதரும் அட்டைப்படம், கட்டமைப்பு கவர்கின்றன. மகாராசன் தொடர்ச்சியான மானுட இயக்கம் கொண்டவர். களத்தில் நிற்பவர். புறக்கணிக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட, விளிம்புநிலை மாந்தர்கள் மீது கரிசனமும் செயலூக்கமும் கொண்டவர். திருநங்கைகள் பெரும் பேசுபொருளாக ஆகாத காலக் கட்டத்திலேயே அவர்கள் குறித்த பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகளை சமூக ஆவணமாக அக்கறையோடு தொகுத்தளித்தவர். அஃது ஏற்படுத்திய அதிர்வலைகள் பற்பல. அந்நூல் திருநங்கையியம் குறித்துப் பிறகு பல நூல்கள் எழவும், பொதுச் சமூகத்தின் முன் அவர்கள் குறித்துக் கூச்சமின்றி உரையாடவும் அகன்ற வாயிலைத் திறந்து விட்டதெனில் மிகையன்று.
“வேளாண் மரபின் தமிழ் அடையாளம்” எனும் இந்நூல் உழவுப் பண்பாட்டரசியலின் புதிய ஆவணமாகத் திகழ்கிறது. இதற்காகப் பன்னெடுங்காலம் அவர் கடும் உழைப்பைச் செலுத்தியிருப்பதைக் குறிப்பிடப்பட்டிருக்கும் சான்றாதாரங்கள் நிறுவுகின்றன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் சோ.தருமனின் அணிந்துரை நூலிற்கு மகுடமாகத் திகழ்கிறது. "வேளாண்மையைப் பூர்வீகத் தொழிலாகக் கொண்டவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டார்கள்" என்ற அவரின் வார்த்தைகள் ஒட்டுமொத்த வேளாண் சமூக மக்களின் ஒப்புதல் வாக்குமூலம். குற்றச் செயல்கள் நாளும் பெருகுவதைக் கண்டு செய்வதறியாது திகைத்திருக்கும் இச்சூழலில், யாவரும் இவ்வார்த்தைகள் சொல்லும் நுட்பமான கற்பிதத்தை உணர்ந்தால் போதும். பிரச்சினைகள் தீர்ந்து விடும். மரபுசார் உணவும், உழவும், உழுகுடியினர் மீதான கவனமும் ஒருசேரக் குவிந்துவரும் இவ்வேளையில் இந்நூல் அவற்றின் மீதான புதிய வெளிச்சத்தை பாய்ச்சி உயர்ந்தெழுகிறது. வேளாண்மை சார்ந்த கல்வி நிலையங்கள் அத்தனையிலும் புதிய தலைமுறையினர்க்குப் பாடமாக வைக்கத்தக்க உயர் பொருண்மையைக் கொண்டு இலங்குகிறது “வேளாண் மரபின் தமிழ் அடையாளம்” என்னும் இந்நூல்.
தமிழ் அடையாளம்,
மகாராசன்,
யாப்பு வெளியீடு,
5 ஏரிக்கரைச் சாலை,
2 ஆவது தெரு, சீனிவாசபுரம், கொரட்டூர்,
சென்னை 76.
தொடர்புக்கு 9080514506
கட்டுரையாளர்:
மீனாசுந்தர், தமிழ்ப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்
தொடர்புக்கு:
7010408481