செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

தமிழ்த் தேசிய அரசியல் களத்திற்கான உரையாடல் திறப்பு : கே.வருசக்கனி


ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகத் தமிழ்ச் சமூகத்தின் அரசியல், இலக்கியம், சமயம், தத்துவம், மொழி, வரலாறு, பண்பாடு எனப் பல்வேறு அறிவுத்தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட பண்டிதர் அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தமிழ்ச் சமூகம் இப்போதுதான் அடையாளம் கண்டு விவாதித்து வருகின்றது.

அவ்வகையில், பண்பாட்டு ஆய்வாளர் ஏர் மகாராசன் அவர்களின் ‘அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்’ எனும் நூல், தமிழக அரசியலை அரை நூற்றாண்டாகத் தீர்மானித்த இருபெரும் வெகுஜன அடையாளங்களாக முன்வைக்கப்பட்ட தமிழர், திராவிடர் என்ற அடையாளங்களை மையமாக வைத்து விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது.

பிராமணர் × பிராமணரல்லாதோர் அடையாளத்தைத் திராவிட இயக்கங்கள் முன்னெடுப்பதற்கு முன்பாகவே திராவிட மகாஜன சபையைத் தொடங்கி, தமிழர் அடையாளத்தை முன்னெடுத்தவர் அயோத்திதாசர். அயோத்திதாசர் முன்மொழிந்த இரு அடையாளங்களான தமிழர், திராவிடர் என்ற அடையாளங்களையும், அவற்றின் அரசியல் பங்களிப்பையும் முரண்களையும் இந்நூல் விரிவாக விவாதிக்கிறது.

பிராமணிய மேலாதிக்கத்திற்கு எதிராக அயோத்திதாசர் முன்மொழிந்த திராவிடர், தமிழர் எனும் அடையாளங்கள் குறித்த பொருண்மைகள் இன்றைய சூழலில் விவாதிக்கப்பட வேண்டியவை. பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் திராவிட இயக்கங்கள் அயோத்திதாசரின் பங்களிப்பை மறைத்ததும் மறந்ததும் ஏன்? தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்தோர் பலரும் அயோத்திதாசரின் பங்களிப்பை மறைத்ததும் மறந்ததும் ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்கள்தான் இந்நூல் முன்வைத்திருக்கும் உரையாடல்கள் ஆகும்.

திராவிட அடையாளத்தை முன்வைத்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிடக் கட்சிகளும், திராவிட அரசியலுக்கு மாற்றாகத் தமிழர் அடையாளத்தை முன்வைத்துத் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் இயக்கங்களுள் சில பலவும் பிராமணியத்தோடு சமரசம் ஆகியுள்ள இன்றைய சூழலில், அயோத்திதாசர் முன்மொழிந்த அடையாளங்களின் உண்மையான அர்த்தத்தை விவாதிப்பது அவசியமாகிறது. அந்த விவாதத்தின் உரையாடல்களைத்தான் இந்நூல் தொடங்கி வைக்கிறது.

இவ்வாறு விவாதிப்பதன் மூலம், திராவிட இயக்கங்கள் தவறவிட்ட அல்லது தவறிவிட்டதை அடையாளம் காணவும், குறைபாடுகளைச் சரிசெய்யவும்கூட இவை அவசியமாகின்றன. அதேபோல, திராவிட அரசியலுக்கு மாற்றாக முன்னெழுந்து வருகிற தமிழ்த் தேசிய அரசியல் வளம்பெறவும் இதுபோன்ற அறிவுசார் விவாதங்கள் இன்னும் நிறைய வரவேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகின்றது.

இன்றைய சமூக அரசியல் மற்றும் பண்பாட்டுத் தளத்தில் பல்வேறு தரப்பினராலும் முன்மொழியப்படுகிற ‘தமிழர்கள் இந்துக்கள்’, ‘தமிழ் இந்துக்கள்’, ‘தமிழ் சைவம்’, ‘தமிழ் வைணவம்’ எனும் சொல்லாடல்களும், ‘சாதி’யை மையமாக வைத்துத் தமிழர் அடையாளத்தை முன்வைக்கும் போக்குகளும், பார்ப்பனரா? பிராமணரா? எனும் அடையாளச் சுட்டுகள் குறித்த விவாதங்களும், ‘நாங்களும் இந்துக்கள்தான்’ என அவ்வப்போது பல அரசியல் கட்சிகள் அறிவித்துக்கொள்வதும் பிராமணியத்தோடு சரணாகதி அடையும் போக்குகளைக் கொண்டிருப்பவை.  

இத்தகையச் சரணாகதிப் போக்கின் ஆபத்தையும், அதன் பின்னுள்ள அரசியலையும் நூறாண்டுகளுக்கு முன்பாகவே அயோத்திதாசர் விவாதித்துள்ள கருத்துகளைத்தான் இந்நூல் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக, ‘இந்து’ எனும் அடையாளத்திற்கு மாற்றாகத் ‘தமிழர்’ எனும் அடையாளத்தை அயோத்திதாசர் முன்னிறுத்துவதற்கான காரணங்களையும் இந்நூல் விவாதித்துள்ளது.

மேலும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை அங்கீகரிக்கும் தமிழ் சைவம், தமிழ் வைணவம் எனும் பெயரிலான அடையாளங்களுக்கு மாற்றாக, தமிழர்களுக்குச் சாதி கிடையாது; எனவே, சாதிபேதமற்ற தமிழர் அடையாளத்தையே அயோத்திதாசர் முன்னிலைப்படுத்தியிருக்கிறார். அதற்குப் பக்கபலமாக, சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத 'தமிழ்ப் பௌத்தம்' எனும் மெய்யியலைத் தமிழர் மெய்யியலாக முன்மொழிந்த காரணங்களையும், தமிழ் இலக்கியங்களின் துணையோடு வரலாற்று ரீதியாகச் சைவ - வைணவத்தைவிட, தமிழ்ப் பௌத்தமே மூத்தது; சிறந்தது என அயோத்திதாசர் நிறுவியுள்ள பாங்கையும் இந்நூல் விரிவாகப் பேசியிருக்கிறது.

பிராமணர்களையும், வைதீக ஆரிய மதத்தையும் முன்வைத்துப் பிராமணர்களை மட்டுமே அறிவாளிகளாகச் சித்தரிக்கும் பிராமணிய மையச் சிந்தனையைச் சுக்குநூறாக உடைத்து, சாதிபேதமற்ற தமிழர்களின் அறிவுச்செயல்பாட்டு மரபை அயோத்திதாசர் மீட்டெடுத்திருக்கிறார். இந்நிலையில், சூத்திரர், வேஷ பிராமணர் போன்ற சொற்களுக்கான அர்த்தம் பற்றி அயோத்திதாசரின் கருத்துகளையும், தமிழ் மரபில் அந்தணர் மற்றும் சூத்திரர் குறித்த தரவுகளையும் அயோத்திதாசரின் கருத்துகளோடு ஒப்பிட்டு விளக்குகிறது இந்நூல்.

பிராமணிய மைய வரலாறுகளுக்கு எதிராக, மாற்றுப் பண்பாட்டு வரலாறுகளை முன்வைத்த அயோத்திதாசரின் சிந்தனைகளையும், அவரது ஆய்வு முறையியல்களையும், சமூக அரசியல், இலக்கியம், சமயம், தத்துவம், மொழி, வரலாறு, பண்பாடு எனப் பல்வேறு தளங்களில் வைத்து விவாதிக்க வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமும் ஆகும்.

சாதிபேதமற்ற தமிழர் அடையாளத்தை முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கு, இந்நூல் ஒரு திறந்த உரையாடலை ஏற்படுத்தித் தரும் என நம்புகிறேன்.

இந்நூல் வழியாக அயோத்திதாசர் சிந்தனைகளை மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ள ஆய்வாளர் ஏர் மகாராசன் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

மகிழ்ச்சியுடன்
கே.வருசக்கனி
ஆய்வாளர், நாட்டுப்புறவியல்துறை,
மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.
*

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலின் அணிந்துரையில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.
அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக