தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. அது, உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் எனப் படர்ந்து விரிந்திருக்கிறது. தமிழக நிலப்பரப்பையே மாற்றியமைத்த வரலாறு வேளாண்மைக்கு உண்டு. எழுத்து என்ற புதிய தொழில் நுட்பத்தின் வருகைக்கும் வேளாண்மைக்கும் நெருங்கிய தொடர்பும் உண்டு. சங்கக் கவிதைத் தொகுதிகளை உருவாக்கியதற்கும் நெல் வேளாண்மைக்கும்கூடத் தொடர்புகள் உண்டு. அரிசியிலிருந்து அதிகாரத்தைக் கற்பனை செய்யும் வழக்கம் தமிழில் இருந்திருக்கிறது. அதாவது, வேளாண்மை உற்பத்திக்கும் அதிகார உருவாக்கத்திற்கும் மிக நெருங்கிய உறவுகள் இருந்திருக்கின்றன.
வேளாண் மலர்ச்சிக் காலத்தைப் பண்பாட்டு மலர்ச்சிக் காலம் என்றும், கலை மலர்ச்சிக் காலம் என்றும், அரசு மலர்ச்சிக் காலம் என்றும் நம்மால் நிரூபிக்க முடியும். சொல்லப்போனால், கடந்த அய்யாயிரம் ஆண்டுகளில் தமிழ்ச் சிந்தனையை வேளாண்மையே - நெல் வேளாண்மையே வடிவமைத்திருக்கிறது. அதன் புற அகச் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண்களை வேளாண் வாழ்க்கையில் தடம் காண முடியும். அவ்வகையில், வேளாண் வாழ்க்கை என்பது வேளாண் மக்கள் என்றே இங்கே பொருள்படுகிறது.
தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்திக் களமாக இருக்கும் வேளாண்மைத் தொழில் மரபுகளைக் குறித்தும், அத்தகைய வேளாண் தொழில் மரபினர்களான வேளாண் மக்களைக் குறித்துமான தனித்துவ அக்கறையும், ஆய்வுகளும், படைப்புகளும், கலைகளும், மீள் உருவாக்கங்களும் முன்னெடுக்கப்படாமலேதான் இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருட்களைப் பரந்துபட்ட பொதுச் சமூகத்தின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய தேக்கநிலையே இன்றுவரை நிலவுகின்றது.
காலங்காலமாகவே ஆளும் வர்க்கத்தாலும், அதிகார நிறுவனங்களாலும், சுரண்டல் முறைகளாலும், உலகமய நுகர்வு வெறித்தனங்களாலும், உலக வல்லாதிக்க நாடுகளாலும், பன்னாட்டு வணிக நிறுவனங்களாலும் மட்டுமல்ல; இந்திய ஒன்றியம் மற்றும் தமிழ்நாட்டு அரசு நிறுவனங்களாலும் அவற்றின் நடைமுறைக் கொள்கைகளாலும் மட்டுமல்ல; உணவு உற்பத்தியை அனுபவிக்கும் பொதுச் சமூகத்தின் பாராமுகத்தாலும் அதிகம் வஞ்சிக்கப்படுவது வேளாண்மைத் தொழிலும், அது சார்ந்த வேளாண் மக்களுமே ஆவர்.
எல்லாக் காலத்திலும், எல்லா வகையிலும், எல்லாத் தரப்பினராலும் வஞ்சிக்கப்படுகிற - சுரண்டப்படுகிற - ஒடுக்கப்படுகிற - இழப்புகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்கிற வேளாண்மைத் தொழில் குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் மய்யப்படுத்திப் பேசுவதும் எழுதுவதுமான ஆய்வுச் செயல்பாடுகள் - கலை இலக்கியப் படைப்பு உருவாக்கங்கள் - அரசியல் உரையாடல்கள் மிக அதிக அக்கறையுடனும் அதிகமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஏனெனில், வேளாண்மையும் வேளாண் மக்களுமே இந்தச் சமூகத்தின் உணவு உற்பத்தி அரங்கமாகவும் உற்பத்தி உறவுகளாகவும் இருந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகும் பழங்குடிகள், பெண்கள், பட்டியல் சமூகத்தினர், உழைக்கும் வர்க்கத்தினர், மத மற்றும் மொழிச் சிறுபான்மையினர், இந்திய ஒன்றிய அதிகாரத்தால் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் பற்றிய பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேவேளையில், இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தியின் அங்கமாகத் திகழும் வேளாண் மக்களைக் குறித்தான பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படவே இல்லை.
இந்திய ஒன்றியத்தின் பிற பகுதிகளிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் வேளாண்மை குறித்தும், வேளாண் மக்களைக் குறித்தும் அக்கறையோடு கூடிய ஆய்வுகளும் படைப்புகளும் அரசியல் உரையாடல்களும் மிக அதிக அளவில் முன்னெடுக்கப்பட்டு, உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் தத்தமது வேளாண்மை - வேளாண் மக்களைக் குறித்துமான பேசுபொருளைக் கவனப்படுத்தி வருகின்றன. இத்தகைய வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரிலேயே தனித்துவமாகச் செய்து வருகின்றனர். தமிழ்ச் சமூகத்தில்தான், வேளாண்மை குறித்தும் - வேளாண் மக்களைக் குறித்தும் பேசுபொருட்களாக முன்வைத்து ஆய்வுகள், படைப்புகள், உரையாடல்கள் முன்னெடுப்பதற்குத் தயக்கமும் கூச்சமும் புறக்கணிப்பும் நிறைந்த ஒவ்வாமையும் ஒதுக்குதலும் நிலவிக்கொண்டிருக்கின்றன.
வேளாண்மையும் வேளாண் மக்களும் இந்தச் சமூகத்தின் மிக முக்கியமான உயிர்நாடி என்பதைப் பொதுச் சமூகம் இன்னும் உணரவே இல்லை. இந்தச் சூழலில்தான், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த பேசுபொருட்களை 'வேளாண் மக்கள் ஆய்வு'களாக (Agrarian Studies) முன்னெடுத்து, பொதுச் சமூகத்தின் கவனத்திற்கும் உலக சமூகத்தின் பார்வைக்கும் முன்வைக்கும் செயல்பாடுகளை 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரில் முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டிய சமூகத் தேவைகளும் உள்ளன.
இவ்வாறு, வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies)
முன்னெடுக்கப்படும் உரையாடல்கள் மூலமே, உலகின் பல பகுதிகளில் உள்ள வேளாண் மக்கள் ஆய்வுப் புலங்களோடு உறவும் ஒருங்கிணைப்பும் பகிர்வும் நடைபெற இயலும். இந்த ஒருங்கிணைப்பின் வழியாகவே தமிழ்ச் சமூகத்தின் வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்த கவனிப்பை உலக அரங்கிலும் உள்ளூர் அரங்கிலும் கவனப்படுத்த முடியும்.
பாலினம், நிறம், இனம், சாதி, மதம் போன்றவற்றால் ஒடுக்குதலுக்கும் சுரண்டுதலுக்கும் உள்ளாகும் அனைத்துத் தரப்பினரும் உள்ளூர் அளவில் மட்டுமல்ல; உலக அளவிலும் ஒருங்கிணைப்பையும் உறவையும் வைத்திருக்கின்றன. அதனால், அதனதன் பிரச்சினைப்பாடுகள் அல்லது பேசுபொருட்கள் ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் அரசியல் உரையாடல்களாகவும் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அந்தவகையில், வேளாண்மை மற்றும் வேளாண் மக்களைக் குறித்தும் 'வேளாண் மக்கள் ஆய்வுகள்' (Agrarian Studies) எனும் பெயரில், ஆய்வுகளாகவும் படைப்புகளாகவும் உரையாடல்களாகவும் முன்னெடுக்கப்படுகிறபோதுதான், வேளாண்மையும் வேளாண் மக்களும் உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் பேசப்பட வைக்க முடியும். இதை வேளாண் மக்கள் ஆய்வுகளாக (Agrarian Studies) முன்னெடுத்து 'வேளாண் மக்களியம்' (Agrarianism) எனும் கோட்பாடாகவும்கூட எதிர்காலத்தில் வடிவமைக்க இயலும்.
அந்தவகையில், வேளாண் மக்கள் ஆய்வுகளை (Agrarian Studies)
முன்னெடுக்க பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், அரசியலாளர்கள், களச் செயல்பாட்டாளர்கள், வேளாண் மக்கள் தரப்பினர், இதரத் தொழில் பிரிவினர், அறிவுத்துறையினர் போன்றோர் முன்வரத் தொடங்கி உள்ளனர். வேளாண் மக்களின் வாழ்வியலையும், வேளாண் மக்களின் பிரச்சனைப்பாடுகளையும், அவர்களது கோரிக்கைகளையும் பொதுச் சமூக வெளியில் பேசுபொருளாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொரு தொழில் பிரிவினருக்கும் - சாதியினருக்கும் - வட்டாரத்தினருக்கும் - சமயத்தினருக்கும் என ஒவ்வொரு வகையிலும் தனித்த பண்பாட்டு அடையாளக் கோலங்களும், வரலாற்றுப் பின்புலமும், உற்பத்திப் பங்கேற்பும் நிரம்ப உண்டு. இங்குள்ள சமூகக் குடிகள் குறித்தச் சமூக மற்றும் பண்பாட்டு வரையறுப்புகள் வெளிநாட்டவர் அடையாளப்படுத்திய அளவுக்கு, இங்குள்ளவர்களால் விரிவான வரைவுகளை உருவாக்கவோ தொகுக்கவோ மீளாய்வு செய்யவோ முன் வருவதில்லை; அவ்வாறு முன்வைத்திருக்கவுமில்லை.
இங்குள்ள ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகங்களைப் புரிந்து வைத்திருப்பதிலும், புரிந்து கொள்ள முயற்சிப்பதிலும் நிறையப் போதாமைகள் இருக்கின்றன. அதிலும்கூட, தவறாகவும் உள்நோக்கத்தோடும்தான் புரிந்து கொள்கின்றன அல்லது புரிந்து வைத்திருக்கின்றன.
ஒவ்வொரு சமூகத்திடமும் குவிந்து கிடக்கிற பண்பாட்டுக் கோலங்களை - வகிபாகத்தை - சமூகப் பங்கேற்பை - பொருளாதாரப் பின்புலத்தை - சமூக உளவியலை - கல்வி வேலை வாய்ப்புகளை - சமூக வளர்ச்சிக் கட்டங்களை - உடலியல் மற்றும் அறிவு தொடர்பான மனித வளம் உள்ளிட்ட தரவுகளை உள்ளடக்கிய சமூக வரைவியல் - இன வரைவியல் ஆய்வுகள் சார்ந்து எழுதுவதும் பேசுவதும் விவாதிப்பதும்கூட, பிற்போக்கானதாகவும் சமூக விரோதமானதாகவும் பொதுப்புத்தி நோக்கிலேயே கருதப்படுகின்றன.
ஒரு சமூகத்தின் அசைவியக்கங்களையும், அவற்றின் வேர்களையும் பின்னணிகளையும், அவை கொண்டிருக்கும் கருத்தாக்கங்களையும், அவை நிகழ்காலச் சமூக அமைப்பில் உலவக்கூடிய வகிபாகத்தையும், அதன் அகத்திலும் புறத்திலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களையும், அது பிற சமூகத்தவருடன் கொண்டிருக்கும் உறவையும் இணக்கத்தையும் - நட்பையும் முரணையும், அச்சமூகம் கட்டமைக்கும் அதிகார வெளிகளையும், அதில் நிலவக்கூடிய உற்பத்தி முறைகள், உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சக்திகள் போன்ற சமூக உறவு நிலைகளையும், அதன் வார்ப்புக்குப் பின்னாலிருக்கும் மானுடவியல் வரலாற்றுக் குறிப்புகள்.. என நீளுகிற ஒரு சமூகம் சார்ந்த அத்தனை விவரிப்புகளையும், வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கப்படுத்தும் எடுத்துரைப்புகள் மிக மிகக் குறைவு.
சமூக மாற்றத்தை முன்னிறுத்தும் மக்கள் திரள் இயக்கங்கள்கூட சமூக வரைவியல் - இன வரைவியல் தளங்களைக் குறித்த புரிதலிலும் எடுத்துரைப்பிலும் பின்தங்கியேதான் இருக்கின்றன. ஒவ்வொரு மக்கள் திரள் சமூகங்களைக் கற்றுக் கொள்வதும் புரிந்து கொள்வதும்கூட இன்னொரு வகையில் சமூகக் கல்விதான். நிலவுகிற சமூக அமைப்பில் சமூக, அரசியல், பொருளியல், அதிகாரக் கட்டமைப்பு அல்லது மறு கட்டமைப்பு சார்ந்த சமூக மாற்றப் பணிகளை - சீர்திருத்தத்தை - போராட்டத்தை - புரட்சியை உருவாக்குவற்கு முன்பாகவோ அல்லது உருவாக்கும்போதோ, ஒவ்வொரு சமூகக் குழுவைப் பற்றியுமான புரிதல்கள் அடிப்படைத் தேவையாகும். இத்தகையப் புரிதலுக்குச் சமூக வரைவியல் - இன வரைவியல் சார்ந்த ஆய்வுகள் பேருதவி புரியக் கூடியவையாகும்.
எத்தகையச் சமூக மாற்றத்திற்கான செயல்பாட்டிற்கு முன்பாகவும், ஒவ்வொரு சமூகப் பிரிவினரிடமும் நிலவுகிற சமூகக் கோலங்கள் என்ன? அவற்றின் சமூகப் பண்பாட்டுத் தகவுகள் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் சமூக மாற்ற இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள்கூட, அவற்றின் அரசியல் வரைவுகள் உருவாக்கப்பட்டிருக்கும் அளவுக்கு, பல்வேறு சமூகப் பிரிவினரைக் குறித்த வரைவியலையும் வரைவுகளையும் இதுவரை முன்வைக்கவில்லை.
சாதிய மேலாதிக்கமும் - அதன்வழிப்பட்ட பண்பாட்டு மேலாதிக்கமும் நிலவுகிற தமிழ்ச் சமூகச் சூழலில், சாதிய மேலாதிக்கத்திற்கு எதிராகவும் - பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு எதிராகவும் போராடுகிற பண்பாட்டு அடையாள அரசியலும் இருந்துகொண்டேதான் வருகின்றது. இதைக் குறித்து ஆ.சிவசுப்பிரமணியன் கூறும்போது, இந்தியச் சமூக அமைப்பில் பாரம்பரியமாக மூன்று வகையான ஆதிக்கங்கள் நிலை பெற்றுள்ளன. அவை, அரசியல் ஆதிக்கம், பொருளியல் ஆதிக்கம், பண்பாட்டு ஆதிக்கம். இந்த மூன்று வகை ஆதிக்கங்களுள் மூன்றாவதாக அமையும் பண்பாட்டு ஆதிக்கம், சாதி வேறுபாடுகளை ஆழமாகக் கொண்ட இந்தியச் சமூகத்தில் வலுவாக வேரூன்றி உள்ளது.
இந்திய மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றைக் கற்கும்போது, ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்கள் குறித்தும் - அவர்கள் வருவாய் ஈட்டிய முறை குறித்தும் அறிந்து கொள்ளும் அளவுக்கு, பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் மீது திணிக்கப்பட்ட பண்பாட்டு ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. அவற்றை மிக எளிதாக ஒதுக்கி விடுகிறோம்.
ஆனால், உண்மையான சமூக வரலாறு என்பது, பண்பாட்டு ஒடுக்குமுறைகளையும் - அவற்றுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களையும் உள்ளடக்கியதாகும். எனவே, இத்தகைய போராட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்வது சமூக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது என்பார். அவ்வகையில், தமிழ்ச் சமூகத்தின் வேளாண் தொழில் மரபினர் நிகழ்த்திய பண்பாட்டு அடையாளப் போராட்டங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்திருக்கிறது வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
வேளாண் மக்களைப் பற்றிய சமூக வரைவியலை - தொழில் மரபுகளை - பண்பாட்டுக் கோலங்களை - வரலாற்று வகிபாகத்தைச் சமூகத்தின் பொதுப் பார்வைக்கும் புரிதலுக்கும் விவாதத்திற்கும் உதவும் வகையில்தான், வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டத்தின் சமூக ஆய்வுகள் அமையவிருக்கின்றன. அதன் சிறுமுயற்சிதான், ‘வேளாண் மரபின் தமிழ் அடையாளம் : உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்’ எனும் நூலாக வெளி வருகின்றது. நேர்மையோடும் சமூக அறத்தோடும் பயணிக்கும் யாவருக்கும் இந்நூல் உதவும்.
வேளாண் மக்களின் சுய மரியாதை மற்றும் சமூக நீதிக்கான உரையாடல்கள் பொதுச் சமூகத்தாலும், சமூக மாற்ற இயக்கங்களாலும் முன்னெடுக்கப்பட வேண்டும்; வேளாண் மக்களின் வேட்கையும் கோரிக்கையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். நூலாக்கத்திலும் - நூல் சார்ந்த உரையாடல்களிலும் துணை நின்ற அனைவருக்கும் மிகுந்த நன்றி.
வரலாற்றை நேர் செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக