வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

இந்து மதமாற்றத்திற்கு எதிராக அயோத்திதாசரின் தமிழர் அடையாள முழக்கம் - மகாராசன்





1881ஆம் ஆண்டு அயோத்திதாசரின் பெருமுயற்சியால் ‘திராவிட மகாஜன சபை’ என்ற அமைப்பு தொடங்கப் பெற்றிருக்கிறது. நீலகிரியில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் தலைவராக அயோத்திதாசரே பணியாற்றியிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில்தான் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் ஆரியப் பிராமணிய வைதீக மரபுகளை ‘இந்துத்துவம்’ எனும் வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்த பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றிருக்கின்றன. 

1881ஆம் ஆண்டு, ஆங்கிலேய வல்லாதிக்க அரசின் ஆட்சியாளர்கள் மக்கள் தொகைக் கணக்கிடும் பணியை மேற்கொண்டபோது, சமய அடையாளங்களைப் பதிவு செய்யும் வேலையையும் செய்திருக்கிறார்கள். பவுத்தர், சமணர், கிறித்துவர், இசுலாமியர், சீக்கியர் போன்ற செவ்வியல் சமய அடையாளங்களைச் சாராத பெருவாரியான மக்களுக்கு எந்தச் சமய அடையாளத்தை வழங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. 

‘யாரெல்லாம் கிறித்துவர்கள், இசுலாமியர், பவுத்தர், சமணர், சீக்கியர் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள்’ என, 1861 முதல் 1891 வரையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பெருவாரியான மக்கள் திரள் ‘இந்து’ எனும் அடையாளத்திற்குள் வலியத் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். 

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலமாக மறைமுகமான ‘மதமாற்றம்’ நிகழ்வதையும், ‘இந்துக்கள்’ என்ற அடையாளம், உயர்த்திக் கொண்ட சாதியினரின் தந்திரம் மூலம் ஆங்கிலேய வல்லாதிக்க அரசால் வலுக்கட்டாயமாக இந்திய - தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்படுவதையும் அறிந்த அயோத்திதாசர், இந்து எனும் அடையாளத் திணிப்பிற்கான எதிர்ப்புணர்வை அக்காலத்திலேயே மிகத் தீவிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். 

‘இந்து’ எனும் அடையாளம் ஆரியப் பிராமணிய வைதீக மரபை அடித்தளமாகக் கொண்டிருப்பது. அது, சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது எனக் கருதிய அயோத்திதாசர், இந்து எனும் அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் இந்து சமூகத்தின் சாதிய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால், சாதியக் கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் இந்து எனும் அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். இந்து என்ற அடையாளத்தை ஏற்க மறுத்த அயோத்திதாசர், அதற்கு மாற்றாக இந்து அல்லாத மாற்று அடையாளத்தையும் மிகத்தெளிவாக முன்வைத்திருக்கிறார். 

‘இந்திய தேசத்திலுள்ள பழங்குடி மக்களும், பஞ்சமர் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களும் ‘இந்துக்கள்’ என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. எனவே, இவ்விரு மக்களும் ‘ஆதித் தமிழர்கள்’ என்பதாகவே கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படல் வேண்டும்’ என்ற குரலை 1881ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே அயோத்திதாசர் வெளிப்படுத்தி இருக்கிறார் எனும் வரலாற்றுக் குறிப்பைத் தருகிறார் டி.தருமராஜ்.

இந்து எனும் அடையாளத்திற்கு மாற்றாக அயோத்திதாசர் முன்வைத்த அடையாளம், மொழி அடையாளமாக இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகப் பழங்குடியினரும், தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களும் ‘ஆதித் தமிழர்கள்’ என்ற அடையாளம், தமிழர்களான அவர்களது தமிழ்மொழி அடையாளத்தையும் - அம்மக்களின் தொன்மை வரலாற்றையும் குறிப்பதாக அமைந்திருக்கிறது.

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக