செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

அயோத்திதாசரைப் பேச மறுத்ததன் பின்புலம் : மகாராசன்

தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபைத் தமது அறிவுச் செயல்பாடுகளால் வளப்படுத்தியவர்களுள் அயோத்திதாசப் பண்டிதரும் ஒருவர். தமிழர்களின் அறிவுச் செயல்பாட்டு மரபின் நீட்சியாகவும், அம்மரபை நவீனப்படுத்திய அறிவுச் செயல்பாட்டாளராகவும் அயோத்திதாசர் திகழ்ந்திருக்கிறார். ஆனாலும், அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாடுகள் குறித்துப் பன்னெடுங்காலமாகவே பரவலான அளவுக்குப் பேசுபொருளாக்கப்படவில்லை.


அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் வகையில், ஞான.அலாய்சியஸ் தொகுத்த ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ எனும் நூல் தொகுதிகள்தான், அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாட்டுப் புலத்தை அறிந்துகொள்வதற்கான கருவி நூல்களாக இருக்கின்றன. இந்நிலையில், அயோத்திதாசரைக் குறித்தும், அவரது அறிவுச் செயல்பாடுகளைக் குறித்தும் பேசுபொருளாக்கி வெளிவந்திருக்கும் ஆய்வு நூல்களுள் டி.தருமராஜ் எழுதிய ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’ எனும் நூல் மிக முக்கியமானதாகும். 

அயோத்திதாசரின் அறிவுச் செயல்பாடுகள் முழுவதையும் ஆராய்ந்து அவற்றைப் பேசுபொருளாக்கியிருக்கும் அந்நூல், தமிழ்ச் சமூகம் அயோத்திதாசரைப் பேசுபொருளாக முன்னெடுக்க மறந்த அல்லது மறைத்ததன் பின்புலம் குறித்துப் பேசியிருக்கிறது. 

அத்தகையப் பின்புலச் சூழல் குறித்து எழுதும் டி.தருமராஜ், ‘சுமார் 125 வருடங்கள் கழித்து இன்றும்கூட தமிழ் கூறும் நல்லுலகில் ‘அயோத்திதாசப் பண்டிதர்’ என்ற பெயர் எந்தவொரு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியதல்ல. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில், தமிழகத்தின் மிகப்பெரும் சிந்தனையாளராக விளங்கிய அயோத்திதாசர், தமிழகத்து வரலாற்றாய்வாளர்களால் திட்டமிட்டே மறைக்கப்பட்டார். 

தமது மரணம் வரையிலும், மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அயோத்திதாசரைப் பற்றிய ஒரு சிறு குறிப்புகூட இடம்பெற்று விடாதபடி பார்த்துக் கொண்ட தந்திரம், இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் வெற்றிகரமாகவே செயல்பட்டு வந்தது. 

அயோத்திதாசரின் சமகாலத்தில் வாழ்ந்து வந்த தேசியக் கவிகளுக்கும், புரட்சியாளர்களுக்கும், சுதேசிகளுக்கும் அவருக்குப் பின் தோன்றி, சென்ற நூற்றாண்டில் தமிழகமே தலைமேல் வைத்துக் கூத்தாடிய திராவிடச் சிந்தனையாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அவரை இருட்டடிப்புச் செய்ததில் கணிசமான பங்கு இருக்கவே செய்தது. தமிழ்ச் சமூகத்தின் நாடி நரம்புகளிலும் புரையோடிப் போயிருக்கும் சாதிய வெறியையும் காழ்ப்புணர்வையும் தவிர்த்து இதற்கு வேறென்னதான் காரணமாக இருக்க முடியும்?’ என்கிறார். 

டி.தருமராஜ் கருதுவதுபோல, அயோத்திதாசரைப் பேசுபொருளாக முன்னெடுக்காமைக்குச் ‘சாதியம்’ மட்டுமே காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அயோத்திதாசரின் சாதிப் பின்புலம் சார்ந்த வேறுபல சமூக ஆளுமைகளோடும் அரசியல் சமூகச் செயல்பாடுகளில் பங்கெடுத்திருப்பதோடு, அவற்றைப் பேசுபொருளாகவும் மற்றவரும் பொதுச் சமூகமும் முன்னெடுத்திருக்கும் வரலாறும் இருக்கிறது. ஆகவே, அயோத்திதாசரைப் பேசுபொருளாக்க மறந்தது அல்லது மறைத்ததில் சாதியம் மட்டுமே காரணம் அல்ல எனக் கருதலாம். 

பிறகு ஏன் அயோத்திதாசர் பேசுபொருளாக முன்னெடுக்கப்படவில்லை?

குறிப்பாக, திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல்வாதிகளும், திராவிடக் கருத்தியல் செயல்பாட்டாளர்களும் அயோத்திதாசரை முன்னெடுக்காமல் போனதற்கும் - முன்னெடுக்காமல் இருப்பதற்குமான வலுவான அரசியல் காரணம் ஒன்று மட்டுமே இருந்திருக்க வேண்டும். அது, அயோத்திதாசரின் ‘தமிழர்’ அடையாள அரசியலே ஆகும்.

தமிழர் அடையாள அரசியலை உள்ளீடாகக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளும் அயோத்திதாசரைப் பேசுபொருளாக முன்னெடுக்காமைக்கான பின்புலமும்கூட அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியலே காரணமாகும். திராவிட அரசியலிலிருந்தும் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்தும் வேறுபட்டதான தன்மைகளைக் கொண்டிருப்பதே அயோத்திதாசர் முன்வைத்த தமிழர் அடையாள அரசியலாகும். 

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..

*

அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக