ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

சூத்திரர் எனும் பெயர் அடையாளம் - மெய்யும் பொய்யும் : மகாராசன்

சூத்திரர்: தமிழ் மரபின் 
பொருண்மை வேறு; 
ஆரிய மரபின் 
பொருண்மை வேறு.

மனித உயிர்வாழ்வுக்கு மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் உற்பத்திப் பெருக்கமும், சமூகக் கட்டுமானங்களும், பல்வேறு தொழில் குலங்களும், அரச உருவாக்கமும், வணிகச் சிறப்பும், கல்வி, கலைகள் உள்ளிட்ட யாவையும் வளர்ச்சி அடைந்திருப்பதன் பின்புலத்தில் இருந்திருப்பது வேளாண்மை உற்பத்திப் பெருக்கம்தான். அதனால்தான், 
     சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் 
     உழந்தும் உழவே தலை 
எனப் பதிந்திருக்கிறார் வள்ளுவர். உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மைத் தொழிலே சமூக வாழ்வின் உயிர்த் தேவையாகும். 
உழவுத் தொழில் ‘வேளாண் மாந்தர்’ குறித்து எடுத்துரைக்கும் தொல்காப்பியம், 
     வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
     இல் என மொழிப  பிறவகை நிகழ்ச்சி 
என்கிறது. உழவுத் தொழிலே வேளாண் மாந்தர்க்கு முதன்மைத் தொழில் எனக் கூறும் அதேவேளையில்,
     வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும்
     வாய்த்தனர் என்ப அவர் பெரும் பொருளே 
எனவும் கூறுகிறது. 

அதாவது, அரசருக்குரிய படைக் கருவியும், அரசருக்குரிய மாலையும் வேளாளர் எனும் வேளாண் மாந்தர்க்கு உரியன என்கிறது. இதனை வேறு ஒரு நூற்பாவிலும் வலியுறுத்தும் வகையில், 
     வில்லும் வேலும் கழலும் கண்ணியும்
     தாரும் ஆரமும் தேரும் மாவும்
     மன்பெறு மரபின் ஏனோர்க்கு உரிய
எனக் கூறியுள்ளது தொல்காப்பியம். 
அதாவது, வில், வேல், வீரக்கழல், தலைமாலை, கழுத்தணி, மார்பணி, தேர், யானை, குதிரை போன்றவை அரசருக்கு உரியனவாகும். இத்தகைய அரச அடையாளங்கள் வணிகரும் வேளாண் மாந்தரும் பெறுவர் என்கிறது. வேளாண் மாந்தரும் அரசராகவும் வணிகராகவும் இருந்திருப்பது இதன்வழிப் புலனாகும்.
திவாகரம் நிகண்டு வேளாளர் அறுதொழில்களாகக் கூறும்போது,
     வேளாளர் அறுதொழில் உழவு, பசுக்காவல்
     தெள்ளிதின் வாணிபம், குயிலுவம், காருகவினை 
     ஒள்ளிய இருபிறப்பாளர்க்கு ஏவல் செயல்
என்கிறது. உழவு, கால்நடை வளர்ப்பு, வாணிகம், இசைக்கருவி ஆள்தல், துணி நெய்தல், துறவு பூண்ட அந்தணர்க்குத் தொண்டு செய்தல் ஆகியன வேளாளர் எனும் வேளாண் மாந்தர்க்குரிய தொழில்களாகத் திவாகர நிகண்டு வகைப்படுத்தியிருக்கிறது. 

உழவுத்தொழில் புரியும் வேளாளர் எனும் வேளாண் மாந்தர்களின் பெயர்களையெல்லாம் ‘சூத்திரர்’ எனச் சுட்டும் வகையில்,
     பின்னவர், சதுர்த்தர், பெருக்காளர், வளமையர்
     மன்னு முத்தொழிலர், மண்மகள் புதல்வர்
     உழவர், ஏரினர் வாணர், காராளர்
     வினைஞர், மேழியர், வேளாளர் என்றிவை
     தொகுபெயரெல்லாம் சூத்திரர் பெயரே 
என்கிறது பிங்கல நிகண்டு. 
சூத்திரர் பெயர்களாக மேலே சுட்டிய பெருக்காளர், வளமையர், முத்தொழிலர், மண்மகள் புதல்வர், உழவர், ஏரின் வாழ்னர், காராளர், வினைஞர், மேழியர், வேளாளர் எனும் பெயர்கள் யாவும் உழவுத் தொழில் மரபினரின் - வேளாண் தொழில் மரபினரின் பெயர்களாகும். அதாவது, வேளாண் தொழில் மாந்தர்களை - வேளாண் தொழில் குலங்களைச் ‘சூத்திரர்’ எனவும் குறித்திருக்கும் வழக்கம் தமிழர் மரபில் இருந்திருக்கிறது. அதனால்தான், ‘வேளாளர்’ என்போரைச் ‘சூத்திரர்’ என அயோத்திதாசரும் குறிப்பிடுகிறார். 

அதாவது, ‘சூத்திரர் என்றும் வேளாளர் என்றும் வகுக்கப்பட்ட தொழிற்பெயர்கள் ஐரோப்பியனாய் இருக்கினும், அமேரிக்கனாய் இருக்கினும், சீனனாய் இருக்கினும், பர்மியனாய் இருக்கினும், எவனொருவன் பூமியை உழுது பண்படுத்தும் தொழிலையும், தானியங்கள் விருத்தியடையும் தொழிலையும் செய்வதுடன், கையையும் காலையும் ஓர் இயந்திரமாகக் கொண்டு பலவகைக் கருவிகளை உண்டு செய்தலும், அக்கருவிகளினால் மரக்கலங்கள் செய்தலும், இரதங்கள் செய்தலும், இருப்புப் பாதைகள் வகுத்தலும், தூரச் செய்திகள் அறிதலும், ஆடைகள் நெய்தலும், ஆபரணங்கள் செய்தலும், பல மதத்தோர் தொழும் சுவாமிகளை சிருஷ்டித்தலுமாகிய உலகச் சீர்திருத்தத் தொழில்களை விடாமுயற்சியால் விருத்தி செய்து, சகலருக்கும் உபகாரியாய் விளங்குகின்றானோ அவனையே சூஸ்திரன் என்றும், வேளாளன் என்றும் கூறப்படும். இதுவே நம் மூதாதைகள் வகுத்த சிறந்த தொழிற்பெயர்கள்’ என்கிறார் அயோத்திதாசர். 

உடல் திறனையும் தொழில் நுணுக்க அறிவுத் திறனையும் துணையாகக்கொண்டு, கைகளாலும் கால்களாலும் உற்பத்தியிலும் உழைப்பிலும் ஈடுபடுவோர் யாவரும் சூத்திரர் எனும் சொல்லாலும் குறிக்கப்பட்டிருப்பதைத்தான் அயோத்திதாசரும் விளக்கப்படுத்தியிருக்கிறார். அயோத்திதாசரைப் பொருத்தளவில், சூத்திரர் எனும் தொழில்பெயரும் - தொழில் குலமும் சகல தேச - சகல பாஷைக்காரர்களுக்கும் பொருந்தும் என்பதே ஆகும்.

தமிழர் மரபில் குறிக்கப்பட்டிருந்த ‘சூத்திரர்’ எனும் அடையாளத்திற்கும், ஆரிய வைதீக மரபில் நாலாம் வருணமாகக் கற்பிதம் செய்யப்பட்டுள்ள ‘சூத்திர’ அடையாளத்திற்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. 

தமிழர் மரபில் ‘சூத்திரம் - சூத்திரர்’ எனும் சொற்கள் உணர்த்தும் பொருண்மைகள் வேறு; ஆரிய வைதீக நூல்கள் கற்பிதம் செய்திருக்கும் ‘சூத்திர வருணம்’ குறிக்கும் பொருண்மைகள் வேறு வேறாகும். அதாவது, தமிழர் மரபின் சூத்திரர் வேறு; ஆரிய வைதீகத்தின் சூத்திர வருணம் வேறு ஆகும்.

ஆரிய வைதீக மரபில் கற்பிக்கப்பட்டுள்ள சூத்திர வருண குலத்தார் அடையாளமாக மனு தர்ம்ம சாத்திரம் கூறியிருப்பதாவது:
‘பிராமணன் சம்பளம் கொடுத்தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். ஏனெனில், அவன் பிராமணன் வேலைக்காகவே பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான்’ (அத் 8: 413).
‘யுத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவன், பத்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாகத் தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் எனத் தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்’ (அத் 8: 415). 

‘பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவிதத் தொழிலாளியான சூத்திரர் இடத்தினின்று பொருளை வலிமையாக எடுத்துக் கொள்ளலாம். எஜமாநன் எடுத்துக்கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரர் அல்ல’ (அத் 8: 417). 

மேற்குறித்தவாறு, ஆரிய வைதீக மரபில் பிராமண வருணத்தாருக்கும், சத்திரிய, வைசிய வருணத்தார்களுக்கும் அடிமையான கீழான இழிகுலம் என்பதாகவே சூத்திர வருண குலம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 
இத்தகைய அடையாளப்படுத்தலானது, தமிழர் மரபில் குறிக்கப்பட்டிருக்கும் ‘சூத்திரத் தொழில் குலங்கள்’ எனும் அடையாளத்திற்கு முரணாகவும் எதிராகவும் அமைந்திருக்கிறது. 

வேளாண்மை உழவுத்தொழிலும் - இதரக் கைத்தொழில்களும் மேற்கொண்டிருந்த வேளாண் குலங்களும் - இதரத் தொழில் குலங்களும் தம்மைச் ‘சூத்திரக் குலங்கள்’ எனவும் குறித்துக்கொள்ளும் வழக்கம் அக்காலத்தில் தமிழர் மரபாக இருந்திருக்கிறது. தமிழர்களின் தொழில் சார்ந்த அத்தகையச் சூத்திரர் எனும் அடையாளத்தைச் சிதைக்கும் நோக்கிலும் - இழிவுபடுத்தும் நோக்கிலும் - கீழ்மைப்படுத்தும் நோக்கில்தான் ஆரிய வைதீகத்தின் சூத்திரர் பற்றிய கற்பிதங்கள் அமைந்திருக்கின்றன. தமிழர்கள் மீதான ஆரிய வைதீக மரபினரின் வன்மங்களே இத்தகையக் கற்பிதங்களின் பின்புலமாக இருந்திருக்கின்றன. 

இந்நிலையில், ஆரிய வைதீகத்தினருக்கும் உழவுத் தொழில் மரபின் வேளாளர்களுக்குமான உற்பத்தித் தொழில் சார்ந்த பண்பாட்டு முரண்களே பகை முரண்களாக ஆகியிருக்கின்றன. உழவுத் தொழில் மரபினரான வேளாளர்களுக்கும் ஆரியர்களுக்குமான முரண்களை மறைமலை அடிகளார் எடுத்துரைக்கும் பகுதிகள் கவனிக்கத்தக்கவை.

‘ஆடு மாடு மேய்க்கும் தொழிலை மேற்கொண்டு, ஒவ்வொரு காலத்தில் ஒவ்வோர் இடத்தில் குடியேறி, கடைசியாக இப் பரத நாட்டில் புகுந்த ஆரியர், அஞ்ஞான்று வடக்கே வாழ்ந்த வேளாளரின் உழவுத்தொழில் சிறப்பும், அதனால் அவர் பெற்ற நாகரிக வாழ்க்கையும் கண்டு வியந்து அவ் வேளாளரை அண்டிப் பிழைக்கலாயினர். வேளாளரும் தமக்குள்ள செல்வப் பெருக்காலும், இரக்க நெஞ்சத்தாலும் தம்பால் வந்து தமது உதவியை அவாவிய ஆரியர்க்கு உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் தந்து பலவற்றாலும் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்..

வேளாளர் உழவுத் தொழிலை நடாத்தி நாகரிகத்தைப் பெருக்கச் செய்த பண்டை நாளில், ஆரியர் வேட்டுவ வாழ்க்கையிலும் ஆடு மாடு மேய்க்கும் இடையர் வாழ்க்கையிலுமே இருந்தனர். அதனாலேதான், ஆரியரும் அவர் வழிப்பட்டாரும் செய்த நூல்களில் உழவுத் தொழில் இழித்துரைக்கப்பட்டிருப்பதோடு, அதனைத் தம் இனத்தவர் எவரும் செய்தல் ஆகாது என்னும் கட்டுப்பாடும் காணப்படுகிறது..

பழைய நாளில் ஆரியப் பார்ப்பனர் ஆ எருது முதலியவற்றைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்று வந்தமையின், அவர் தமிழ்நாட்டுக் கோயில்களுள் நுழைதற்கும் இறைவன் திருவுருவத்தைத் தொடுதற்கும் தகுதியிலராக ஒதுக்கி வைக்கப்பட்டனர். கொலைத் தொழில் புலைத்தொழில்களைக் கைக்கொண்டு ஒழுகினமை பற்றி வேளாளரால் தாழ்த்தப்பட்ட ஆரியப் பார்ப்பனர், பையப் பைய அவ் இழிதொழில்களைக் கைவிட்டுத் தம்மைத் தாமே உயர்த்துப் பேசிக்கொண்டு, தம்மைத் தாழ்த்திய  வேளாளர்களைத் தாமும் தாழ்த்துதல் பொருட்டு அவரைச் சூத்திரர் என்று வழங்கலாயினர்’ என விவரிக்கிறார் மறைமலை அடிகளார். 

அதனால்தான், ஆரிய வைதீக மரபில் வேளாண்மைத் தொழில் பாவமான தொழிலாகக் கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழர் உற்பத்திப் பண்பாட்டின் அடையாளமாய் இருக்கும் வேளாண்மையை இழிவான - பாவப்பட்ட தொழில் என்கிறது ஆரிய வைதீகம். இதனை ஆரியப் பண்பாட்டுக் கருத்தியலாகவே பதிவு செய்யும் நோக்கில், ‘பிராமணனும் சத்திரியனும் வைசியன் தொழிலால் ஜீவித்த போதிலும், அதிக இம்சை உள்ளதாயும் பராதீநமாயும் இருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்க வேண்டியது’ (அத் 10:83)
‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியில் உண்டாலான பலப்பல ஜெந்துக்களையும் வெட்டுகிறது’ (அத் 10:84) என, உழவுத் தொழிலை ஆபத்தருமம் என்பதாகக் கருதி இழிவுபடுத்துகிறது மநு சாத்திரம். 

அவ்வகையில், உழவுத் தொழில் மரபின் வேளாளர்களைத் தாழ்த்துவதற்கான சூழ்ச்சிகளையும் கருத்தியல்களையும் பன்னெடுங் காலமாகவே உருவாக்கி வந்திருக்கின்றனர் ஆரிய வைதீக மரபினர். அத்தகைய வரலாற்று வன்மத்தின் வெளிப்பாடாகத்தான், ‘இழிகுலம்’ எனும் அடையாளப்படுத்தலுக்குச் ‘சூத்திரர்’ எனும் சொல்லைக் கையாண்டிருக்கிறார்கள் ஆரிய வைதீக மரபினர்.

ஆரிய வைதீக மரபில் சுட்டப்படும் ‘சூத்திரர்’ எனும் சொல்லாடல் குறித்து ம.சோ.விக்டர் கூறும் கருத்து இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. ‘சூத்திரன் என்ற சொல், சமற்கிருத மொழியில் ‘சூத்ர’ என்று சொல்லப்பட்டுள்ளது. இச்சொல்லை ஆரியர்களே அறிமுகம் செய்ததாகக் கூறிக்கொள்கின்றனர். வேதங்களில் சூத்திரன் என்ற சொல் காணப்படவில்லை. பிற்கால இலக்கியங்களே சூத்திரன் என்ற சொல்லைச் சுட்டுகின்றன. 

சூத்திரன் என்பவன் யார்? ஆரியர்கள் வகுத்த நான்கு சாதி நிலைகளில் இறுதியாகச் சொல்லப்படுபவன் சூத்திரன் ஆவான். சூத்திரன் என்பதற்கு அடிமை, வேலையாள் என்று சொல்லப்பட்டாலும், ‘சூத்ர’ என்ற சொல்லுக்கான வேர்ச் சொல்லில் அப்பொருள் காணப்படவில்லை. 
‘சூத்ர’ - இச்சொல்லுக்கான விளக்கத்தை அளிக்கும் சமற்கிருத அகரமுதலி, இச்சொல் எந்த மூலச் சொல்லிலிருந்து விரிந்தது என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை என்றும், இது ஐயத்திற்கு உரியதே என்றும் தொடக்கத்திலேயே கூறிவிட்டு, பின் அதற்கான பொருளைத் தருகின்றனர். எனவே, சூத்திரன் என்ற சொல்லுக்கான மூலச்சொல்லோ, வேர்ச்சொல்லோ சமற்கிருதத்தில் இல்லை என்பது தெளிவாகின்றது. சமற்கிருதத்தில் மூலம் காட்டப்படாத ஒரு சொல்லை எவ்வாறு சமற்கிருதச் சொல் எனக் கூற இயலும்? எனவே, சூத்திரன் என்பது தமிழினின்றும் எடுத்துக்கொள்ளப்பட்ட சொல்லே என்பது தெளிவு’ என்கிறார் ம.சோ.விக்டர். 

தமிழில் ‘சூத்திரம்’ எனும் சொல் வழக்கு இன்றளவிலும் பயின்று வரும் சொல்லாகும். சூத்திரம் எனும் தமிழ்ச் சொல்லுக்குரிய வேர்ச்சொல் பற்றி ம.சோ.விக்டர் கூறும்போது, ‘சுள் - சுர் - சூர் = கூர்மை, புள்ளி, குவிதல், சிறுத்தல். சூர் + திரம் = சூர்த்திரம் - சூத்திரம். திரம் - நிலைப்பாடு. சூர்த்திரம் - ஓர் இலக்கை விளக்குதல். சூத்திரம்: விரிவுபடுத்தப்பட்ட கணக்கு, அறிவியல், நுட்பக் கலைகள் சுருக்கமாகச் சொல்லப்படுவது’ என்கிறார்.  

‘சூத்திரம் என்னும் சொல்லுக்குப் பஞ்சுநூல்; இயந்திரம்; நுண்ணிய வேலை; தந்திரம்; இரகசியம்; சில்லெழுத்திற் பல பொருள் தெரிவிக்கும் யாப்புச் செய்யுளாகிய நூற்பா; சூத்திர வடிவில் அமைந்த நூல்; இயக்குவிக்குங்கயிறு; பெயர், விதி, விலக்குதல், நியமம், அதிகாரம், ஞாபகம் என்னும் அறுவகைச் சூத்திரங்கள்’ என அகராதிகள் பொருள் கூறுகின்றன. 
சூத்திரம் என்னும் சொல், இலக்கண நூலிலுள்ள பாடலைக் குறிக்கவும், கணக்கு மற்றும் அறிவியல் நுட்பங்களைக் குறிக்கவும் கையாளப்படும் தமிழ்ச் சொல்லாகும். இதனை நூற்பா எனவும் வழங்குவர். மேலும், சில எழுத்துக்களால் இயன்று செய்யுள் நடையில் இருப்பதையும் சூத்திரம் எனக் குறிப்பதுண்டு. 

அதாவது, விரிவாகச் சொல்லவேண்டிய கருத்தின் சாரத்தை நுட்பமாகவும் செறிவாகவும் உள்ளே அடக்கிக் கூறும் வடிவமே சூத்திரமாகும். அசைக்க முடியாத உண்மைகளையும், அளக்க முடியாத அரும்பொருளையும் விதிகளையும் கொண்டிருக்கும் குறியீட்டுச் சுருக்கம்தான் சூத்திரம் என்பதாகும்.

இந்நிலையில், நூல் என்பதன் இலக்கணத்தைக் குறித்துத் தொல்காப்பியம் வரையறுக்கும்போது,
     நூல் எனப்படுவது நுவலும் காலை 
     முதலும் முடிவும் மாறுகோள் இன்றித் 
     தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி 
     உள்நின்று அகன்ற உரையொடு புணர்ந்து 
     நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே 
என்கிறது. எடுத்துக்கொண்ட பொருளோடு முடிக்கும் பொருண்மை மாறுபடாத வகையில் அமைதல், கருதிய பொருளைத் தொகுத்தும் வகுத்தும் தொகை வகை ஆக்கியும் காட்டுதல், தன்னகத்து அமைந்த பொருளை விரிந்த உரையோடு எடுத்துரைப்பதற்கு ஏதுவாகப் பொருந்தி இருத்தல், நுண்மையாக விளக்கிக் காட்டுதல் ஆகிய பண்புகளை இலக்கணமாகக் கொண்டிருக்க வேண்டும். இத்தன்மை கொண்டிருப்பது நூலிற்குரிய இலக்கணம் ஆகும். 

நூல் என்பதற்குப் பொருள் கூறும் இளம்பூரணர், ‘அகன்ற உரையொடு பொருந்துதல் - சொல்லாத பொருண்மை எல்லாம் விரித்துக் கூற வேண்டிய நிலையில், அவற்றிற்கெல்லாம் இடம் கொடுத்து அமைதலும் வேண்டும்’ என்கிறார். 

நுண்ணிதின் கருத்தை விளக்கும் நூல் என்பதானது, பல பகுதிகளைக் கொண்டிருக்கும். நூலின் பகுதிகள் அல்லது உறுப்புகளாகச் சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் எனும் நான்கினைக் கூறும் தொல்காப்பியம், சூத்திரம் என்பதற்கு
     ஒரு பொருள் நுதலிய சூத்திரம் 
என்கிறது. அதாவது, ஏதேனும் ஒரு பொருள் குறித்துக் கூறுவது சூத்திரம் என்பதாகும். சூத்திரம் என்பதன் விளக்கமாய்த் தொல்காப்பியம் கூறும்போது,
     சூத்திரம் தானே 
     ஆடி நிழலின் அறியத் தோன்றி 
      நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க 
     யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே 
என்கிறது.

அதாவது, நூலின் இன்றியமையாத உறுப்பாக விளங்குவது சூத்திரம் ஆகும். அது கண்ணாடியில் தோன்றுகின்ற நிழலைப் போல, பொருளைத் தெளிவாக விளக்கும் தன்மை கொண்டது. அதில் இடம்பெற்ற சொற்களின் பொருளை எவ்வித ஆராய்ச்சியும் இல்லாமல் மிகுதியும் வெளிப்படையாகப் புலப்படச் செய்வது. இத்தன்மை பொருந்த யாப்பின்வழிப் பொருள் தோன்ற அமையுமாறு தொடுக்கப்படுவதே சூத்திரம் ஆகும். 

தொல்காப்பியம் போலவே, நன்னூல் எனும் இலக்கண நூலும் சூத்திரம் என்பதற்கு விளக்கம் கூறுகையில், மிகப்பெரிய கருத்தையும் சில சொற்களில் சுருக்கமாக விளக்குவது ‘சூத்திரம்’ எனக் கூறுகின்றது. இதனை,
     சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
     செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
     திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம் 
என்கிறது. அதாவது, சிறிய கண்ணாடி மிகப்பெரிய உருவத்தையும் தன்னுள் வாங்கி, தெளிவாக நமக்குக் காட்டுவதுபோல, சில எழுத்துக்களால் மிகப்பெரிய கருத்துகளையும் தனக்குள் அடக்கி, பொருளை இனிமையாக விளக்கும் நுட்பமான வரிகளே சூத்திரங்கள் எனப்படும். அவ்வகையில், சூத்திரம் என்பது வகுக்கப்பட்ட விதிகளின் சுருக்க வடிவம்; வாய்பாடு எனப் பொருள் கொள்ளலாம். 

சூத்திரத்தைப் படித்த அளவில் அதனால் சொல்லப்படுகின்ற பொருள் ஒருங்கே தோன்றுதல், சூத்திரத்தில் இடம்பெற்ற சொற்களுக்கு உரிய பொருள் எளிமையாக விளங்குதல் போன்றவை சூத்திரத்தின் பண்பாகும். இத்தகையச் சூத்திரத்தின் பண்பாகத் தொல்காப்பியம் கூறும்போது,
     மேற்கிளந்து எடுத்த யாப்பினுள் பொருளொடு 
     சில்வகை எழுத்தின் செய்யுட்கு ஆகிச் 
     சொல்லும் காலை உரையகத்து அடக்கி 
     நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகித்
     துளக்கல் ஆகாத் துணைமை எய்தி 
     அளக்கல் ஆகா அரும்பொருட்டு ஆகிப் 
     பல்வகை யானும் பயன் தெரிபுடையது 
     சூத்திரத்து இயல்பு என யாத்தனர் புலவர் 
என விரிவுபடக் கூறியிருக்கிறது.

அதாவது, தொகுத்தல், விரித்தல், தொகை விரி, மொழிபெயர்த்தல் என்னும் நால் வகையிலும் சொல்லப்பட்டவற்றைப் பொருளாகக் கொண்டிருத்தல்; சிலவாகிய எழுத்துக்களால் செய்யப்பட்ட செய்யுளாகி வருதல்; சொல்லுவார் சொல்லும் உரைகளுக்கு ஏற்ற கருத்துகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டிருத்தல்; நுண்மையான கருத்துகள் செறிந்ததாய் அவற்றை விளக்கமுற எடுத்துரைக்கும் தன்மையைப் பெற்றிருத்தல்; அசைக்கமுடியாத தெளிவினைத் தரும் துணைச் சூத்திரங்களை உடையதாய் இருத்தல்; வரையறுக்கப்படாத அரிய பொருளை உடைத்தாதல்; பல நிலைகளிலும் பயனைத் தருவதாய் அமைதல் என்னும் இயல்புகளைக் கொண்டதாய் உடையதனைச் சூத்திரம் என்னும் பெயரால் இயற்றி அமைத்தனர் புலவர் என்கிறது தொல்காப்பியம். இவ்விடத்தில், ‘அளக்கல் ஆகா அரும்பொருள்’ என்பதற்குப் பல நிலைகளிலும் பொருள் கொள்ளக் கிடத்தல் என விளக்கம் தருகிறார் இளம்பூரணர். 

தொல்காப்பியம் போலவே, நன்னூல் இலக்கண நூலும் சூத்திரம் எனும் சொல்லாடலுக்கான பொருண்மைகளைக் கூறியிருக்கிறது. சூத்திர நிலை குறித்துக் கூறும் நன்னூல்,
     ஆற்றொழுக்கு அரிமா நோக்கம் தவளைப் 
     பாய்த்துப் பருந்தின் வீழ்வு அன்ன சூத்திர நிலை 
என்கிறது. அதாவது, சூத்திரங்கள் ஒன்றோடு ஒன்று பொருளால் தொடர்ந்து நிற்கும் நிலைகள் பற்றிக்கூறும் நன்னூலானது, இடையறாது ஒருமுகமாக ஓடுகின்ற ஆற்று நீரோட்டத்தையும், முன்னும் பின்னும் பார்க்கின்ற சிங்கத்தின் பார்வையையும், இடையிடையே இடம் விட்டுக் குதித்துச் செல்கின்ற தவளையின் பாய்ச்சலையும், நெடுந்தூரத்திலிருந்து ஒன்றைக் கவர்ந்து போவதற்குத் தலைகீழாக வீழ்கின்ற பருந்தின் வீழ்ச்சியையும் போல்வன என, சூத்திரத்தின் நிலைகளை எடுத்துரைக்கின்றது.

சூத்திரம் எனும் தமிழ்ச் சொல்லானது, சூழ் + திரம் = சூத்திரம். சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம் - சூத்திரம். சூல் + திரம் = சூத்திரம்; சூழ் + திறம் = சூத்திறம் எனவும் குறிப்பதுண்டு.
சூத்திரம் என்பதற்கான மேற்காணும் விவரிப்புகளில் இருந்தே, சூத்திரர் என்பதற்கான பொருண்மைகளும் புலப்படுகின்றன. அவ்வகையில் நோக்கும்போது, சூழ்+திரன் = சூத்திரன். சூல் + திரன் = சூத்திரன்; சூழ் + திறன் = சூத்திறன் எனும் சொல்லானது, அனைத்துத் திறமைகளையும் - நுணுக்கங்களையும் - தொழில் நுட்பங்களையும் - அறிவுக் கூர்மையையும் கொண்டவன் என்பது பொருளாகிறது எனலாம். அதனால்தான், ‘தமிழர்கள் அக்காலத்தில் தங்களைச் ‘சூத்திறன்’ என்றே அழைத்துக்கொண்டனர்’ என்கிறார் ம.சோ.விக்டர்.

தமிழர் மரபில் குறிக்கப்பட்டிருந்த சூத்திரர் எனும் அடையாளத்தையும் - அதன் தொழில்பெயர்ப் பண்பையும் அடையாளப்படுத்தும் வகையில்தான், சூத்திரர் பற்றிய எடுத்துரைப்புகளை அயோத்திதாசர் முன்வைத்திருக்கிறார். சூத்திரர் எனும் சொல்லாடலுக்கு இழிந்த பொருண்மைகளை ஆரிய வைதீகம் சார்ந்த வேடதாரிப் பிராமணர்கள் கற்பித்து வைத்திருக்கும் சூழலில், அதை எதிர்த்தும் - மறுத்தும் - தலைகீழாக்கியும் அயோத்திதாசர் தந்திருக்கும் எடுத்துரைப்பானது, மேன்மை மிக்க - காரணப்பெயர் கொண்ட பொருண்மைகள் ஆகும். இத்தகையப் பொருண்மைகளைத் தமிழர் மரபிலிருந்தே மீட்டெடுத்து விளக்கப்படுத்துகிறார் என்பது கவனிக்கத்தக்கதும் ஆகும்.

மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..
*


அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

8 கருத்துகள்:

  1. அருமையான பதிவு அண்ணா

    பதிலளிநீக்கு
  2. மிகத் தெளிவான உரை

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா26/9/22, AM 9:06

    அருமை தோழர்! இன்றைய நிகழ்வுகளை படம் பிடித்து காட்டும் கண்ணாடி போல் உமது பதிவு திகழ்கிறது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா26/9/22, AM 11:53

    சிந்திக்க தூண்டும் கருந்துகள்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா30/1/23, AM 11:11

    உலகெங்கிலும் அடிமைகளே உழவுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர் என்ற பொதுவுண்மையிலிருந்து விலகிய பார்வை. வேளாண்மை என்ற சொல்லுக்கு வள்ளுவர் காலம் வரையிலும் உழவு (விவசாயம்) என்று பொருள் இல்லை.
    உழுதொழில் செய்வோரெல்லாம் வேளாளர் என்று தொல்காப்பியர் கூறவில்லை.

    பதிலளிநீக்கு