சனி, 26 பிப்ரவரி, 2022

தமிழ் மரபின் அந்தணர் வேறு; ஆரிய மரபின் பிராமணர் வேறு - மகாராசன்


நால்வகைத் தொழில் பிரிவுகளையும் - தொழில் குலங்களைக் குறித்தும் தொல்காப்பியம் மரபியலில் கூறியுள்ள செய்திகள் அவ்வகையில் கவனிக்கத்தக்கவை. 

     நூலே, கரகம், முக்கோல், மணையே

     ஆயும் காலை அந்தணர்க்கு உரிய 

என, ‘அந்தணர்’ என்போர்க்குரிய அடையாள மரபுகளாகச் சுட்டும் தொல்காப்பியம், நூல், கரகம் எனும் கமண்டலம், முக்கோல், இருக்கை மணை ஆகிய நான்கும் ஆயும் காலத்து அந்தணர்க்கு உரியவை என்கிறது. 

அந்தணர் என்போரின் தொழில்கள் குறித்துத் திவாகர நிகண்டு கூறும்போது,

     ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்

     ஈதல், ஏற்றல் என்று இருமூவகை

     ஆதிக் காலத்து அந்தணர் அறுதொழில் 

என்கிறது. இதனையே பிங்கல நிகண்டும் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், தொல்காப்பிய மரபியலின் இன்னொரு நூற்பாவில்,

     அந்தணாளர்க்கு அரசு வரைவின்றே

எனவும் கூறப்பட்டிருக்கிறது.

மேற்குறித்த பதிவுகளில் ‘அந்தணர்’ எனும் குலத்தோர் உயர்வானவர் என்றோ, அந்தணர் தொழில் உயர்வானது என்றோ தமிழர் மரபில் சுட்டப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேலும், தமிழர் மரபில் சுட்டப்படும் அந்தணர் எனும் தொழில்குல மாந்தர், ஆரிய வைதீக மரபில் கூறப்படுகிற பிராமணர் எனும் குல மாந்தரிலிருந்து வேறானவர் ஆவர். அந்தணரெனும் சொல்லானது, பிராமணரைக் குறிக்கவும் பயன்படுத்தவில்லை என்பதும் நோக்கத்தக்கது. 

இதைக்குறித்துப் பாவாணர் கூறுகையில், ‘அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று தொல்காப்பிய மரபியலில் கூறியவை, மருத நகரில் உழவர் குலத்தினின்றும் முதன் முதல் தோன்றிய நாற்பெரும் பிரிவுகளே அன்றி, பிற்காலத்தில் தோன்றிய பல சிறு சிறு குலங்கள் அல்ல. தொல்காப்பியர் காலத்தில், மருத நகரில் பல குலங்கள் இருந்தன. ஆனால், பழைய முறைப்படி, நாற்பெரும் பிரிவுகளே கூறப்பட்டன. இப்பிரிவுகளுள் ஆரியப் பார்ப்பார் அடங்கார். அயலாராகவும் தமிழர் குலமுறைக்குப் பொருந்தாமலும் இருத்தலின், பார்ப்பார் முனிவரான அந்தணரும் அல்லர்; அரசரும் அல்லர்; வணிகரும் அல்லர்; வேளாளரும் அல்லர். அந்தணர் முதலிய நாற் பாலும் மரபியலில் கூறப்பட்டது தமிழ் முறை பற்றியே’ என்பார்.

அந்தணர் எனும் சொல்லானது, ஆரிய பிராமணர்களைக் குறிப்பதாகவே பல தரப்பினரும் கருதுகின்றனர். ஆயினும், தமிழ் அந்தணரும் ஆரியப் பிராமணரும் ஒரே தொழில் குலத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். அதேவேளையில், ஆரிய பிராமணர்களும் தம்மை அந்தணர் என்பதாகவே வேடமிட்டு வந்திருக்கின்றனர். தமிழர் மரபில் கூறப்படும் அந்தணர்களின் தொழில்குலப் பண்பொழுக்கமும், ஆரிய பிராமணர்களின் தொழில்குலப் பண்பொழுக்கமும் வேறு வேறானது என்பதைத் தமிழர் வரலாற்றில் காணமுடிகிறது.  

சொல்லாலும் எழுத்தாலும் செயலாலும் அந்தணர் என்ற சொல் அன்பையும் அமைதியையும் அறத்தையும் அறிவையுமே சுட்டுகிறது. அம் மற்றும் தண்மை என்ற சொற்கள் இடம் பெற்றுள்ள அந்தணர் எனும் சொல்லானது, அம் + தண்ணர் = அந்தணர் எனப்படுகிறது. அவ்வகையில், தமிழர் மரபில் கூறப்படும் அந்தணர் குறித்துப் பாவாணர் எடுத்துரைக்கும் பகுதிகள் வருமாறு: 

‘அவா, வெகுளி துறந்து, விருப்பு வெறுப்பற்ற துறவு நிலையாளர்களே அந்தணர் எனப்படுபவர் ஆவர். அந்தணர் : அழகுணர்வும், குளிர்மையும் கொண்ட பெரியோர், அறவோர். அந்தணர் என்போர் சினம் அறுத்தோர், கடுஞ்சொல் தவிர்த்தோர், அவா விடுத்தோர், மக்கள் நலம் விரும்புவோர் என விரிக்கலாம். 

அந்தணர் என்னும் பெயர், முதலாவது தனித்தமிழ் முனிவரைக் குறித்தது. அந்தணர் என்னும் சொல்லின் - அழகிய குளிர்ந்த அருளை உடையவர் - என்னும் பொருளுக்கு ஏற்ப, 

     அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் 

     செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30) 

என்று, அந்தணர்க்கு இலக்கணம் கூறினதும் அன்றி, அதைத் துறவிகளைப் பற்றிக் கூறும் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்திலும் வைத்தார் திருவள்ளுவர். 

     நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த 

     மறைமொழி தானே மந்திரம் என்ப 

என்று தொல்காப்பியத்தில் கூறிய முனிவர் செய்தியையே, 

     நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 

     மறைமொழி காட்டி விடும் (குறள் 28) 

அருள் என்னும் குணம் துறவிகட்கே உரியதாகும். அதனால்தான், அருளுடைமை, புலால் மறுத்தல், கொல்லாமை என்னும் மூன்றையும் திருவள்ளுவர் இல்லறத்தில் கூறாது துறவறத்தில் கூறினர். பிராமணருக்கு அருள் இல்லை என்பது மனுதர்ம நூலாலும், இப்போது அவர் பிறரை முக்கியமாய்க் கீழோரை நடத்தும் வகையினாலும் அறியப்படும்’ என்கிறார் பாவாணர்.

மேலும், ‘தமிழ் முனிவரான அந்தணர், சிறந்த அறிஞராயும் ஆசிரியராயும் ஆக்கவழிப்பாற்றல்  உள்ளவராயும் இருந்தமையின், அரசர்கள் அவர்களை மதியுரைக்கும் தற்காப்பிற்கும் துணைக் கொண்டனர். இதையே, திருவள்ளுவர் திருக்குறள் பொருட்பாலில் ‘பெரியாரைத் துணைக்கோடல்’, பெரியாரைப் பிழையாமை’ என்ற அதிகாரங்களில் கூறுவர். 

அரசர்கள் போர், வேட்டை முதலியன பற்றிச் சென்றபோது, அவர்கட்குத் துணையாய் இருந்த அந்தணரே அரசு செய்யக்கூடும். இதையே 

     அந்தணாளர்க்கு அரசு வரைவு இன்றே 

என்னும் நூற்பா குறிப்பதாகும். ‘வரைவு இன்றே’ என்பது, ‘விலக்கப்படவில்லை’ என்று பொருள்படுமேயன்றி, என்றும் உரியது என்று பொருள்படாது’ என்பார் பாவாணர். 

தமிழர் மரபில் அந்தணர் எனும் வகைப்பாடு, குலம் பற்றி உருவானதுமல்ல. மாறாக, தொழில் சார்ந்தும், பண்பொழுக்கம் சார்ந்தும் உருவானதாகும். தமிழர் மரபின் அந்தணருக்கும், ஆரிய மரபின் பிராமணருக்குமான வகைப்பாட்டு வேறுபாடுகளைக் குறித்து ம.சோ.விக்டர் கூறும்போது, ‘கற்றறிந்த அக்காலப் பெரியோர்களில் பலரும் பல்வேறு குணநலன்களைக் கொண்டிருந்தனர். கல்வியால் ஏற்படும் செருக்கு, தற்பெருமை, சினம் போன்ற தவிர்க்கப்படவேண்டிய பண்புகளையும் அவர்களில் சிலர் கொண்டிருந்தனர். அவ்வாறெல்லாம் இல்லாமல் கடுஞ்சொல் தவிர்த்து, விருப்பு வெறுப்புகளைக் களைந்து, அந்தணர் எனப்பட்டனர். 

கணிப்பதால் கணியர் என்றும், அறிதலால் அறிவர் - அறிஞர் என்றும், மேன்மையானவற்றைத் தைப்பதால் அல்லது இணைப்பதால் மேதை என்றும், மதிநுட்பம் நிறைந்ததால் மதியர் என்றும், புல்லி அறிவதால் புலவர் என்றும், நாளையும் கோளையும் பார்த்துக் கணக்கிடுவதால் பார்ப்பார் என்றும், அம்மையும் தண்மையும் கொண்டவர்களால் அந்தணர் என்றும் சொல்லப்பட்டனர். இவர்களின்றி கணக்கன், கணக்காயன், கங்காணி என்றவாறும் அறவுடையோர் அழைக்கப்பட்டனர். 

மக்களைப் பிளவுபடுத்தி, உழைப்பை உறிஞ்சி வாழும் பிராமணர்கள், அந்தணர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளத் தகுதியற்றவர்கள் ஆவர். தமிழ்த் துறவிகளும் சான்றோர்களும் நிலைநாட்டிய அந்தணர் என்ற பெருமையை, ஆரியர்கள் தம்மைக் குறித்துச் சொல்லிக்கொண்டு பெருமைப்படுவது, எவ்வகையிலும் பொருத்தமற்றது; தமிழ்த் துறவிகளைச் சிறுமைப்படுத்துவதும் ஆகும்’ என்கிறார். 

மேலும், ‘அரசருக்கு அறிவுரை கூறவும், குடிகளுக்கு நல்வழி காட்டவும், தாம் கற்ற கல்வி அறிவாலும் பட்டறிவாலும் சமூகத்தில் மதிக்கப்பட்ட சான்றோர் அந்தணர்கள். பிற்காலத்தில் துறவிகள் என்றும், முனிவர்கள் என்றும், சித்தர்கள் என்றும் சொல்லப்பட்டனர். அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்றவாறு பணிகளின் அடிப்படையில் சமூக அமைப்புகள் இருந்தன. 

அந்தணரின் மகன், அந்தணராகவே இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படவில்லை. அந்தண்மை என்பது பாட்டன், தந்தை, பெயரன் வழியில் வருவதில்லை. அரச மரபில் தோன்றிய இளங்கோ அந்தணராக அறியப்பட்டார். வணிகர் மரபில் தோன்றிய சாத்தனார் அந்தணராகக் கருதப்பட்டார். வேளாண் மரபில் வந்த மருதனார் அந்தணராகப் போற்றப்பட்டார். எனவே, அந்தணர் தகுதி பிறப்புவழி அல்லாது, அறவழியால் அறியப்படுவது. இதுவே தமிழர் மரபாகவும் இருந்தது. ஆரியர் வகுத்த பிராமண மரபு, பிறப்பு வழியிலானது; மக்களைப் பிளவுபடுத்துவது ஆகும்’ என வேறுபடுத்துகிறார் ம.சோ.விக்டர். 

தமிழர் மரபில் சுட்டப்படும் அந்தணர் என்போரின் பண்பொழுக்கத்தையும் அறநெறிகளையும் கொண்டிருக்கும் யாவருமே அந்தணர்தான் என்கிறார் அயோத்திதாசர். அந்தணர் எனும் தொழில் பெயர் அடையாளம், சகல தேச - சகல பாஷைக்காரர்களுக்கும் பொருந்தும் என்பதே அயோத்திதாசரின் கருத்தாகும். 

இதைக்குறித்து அவர் கூறும்போது, ‘பிராமணன் அந்தணன் என்று வகுக்கப்பெற்ற செயலின் பெயர்கள் தென்னிந்தியனாய் இருக்கினும், வட இந்தியனாய் இருக்கினும், தென் ஆபிரிக்கனாய் இருக்கினும், வட ஆபிரிக்கனாய் இருக்கினும், எவனொருவன் தேக சுத்தம், வாய் சுத்தம், மனோ சுத்தம் என்னும் திரிபொறி சுத்தம் உடையவனாய், நூற்றியெட்டு ரூப ஆசைகள் அற்று, சாந்தம், ஈகை, அன்பு என்னும் முப்பேரின்பங்களைப் பெருக்கி, காமம், வெகுளி, மயக்கம் என்னும் முச்சிற்றின்பங்களை அகற்றி, சருவ உயிர்களையும் தன்னுயிர் போல் காத்து, சீவர்களுக்கு உண்டாகும் பிணிப் பீடைகளை அகற்றி, கால மழைகளைப் பெய்ய வைத்து, குடிகளுக்குச் செல் காலம், நிகழ்காலம், வருங்காலம் என்னும் முக்காலச் செயல்களையும், நான்குவகை வாய்மெய்களையும் நெறிகளையும் புகட்டிச் சீர்பெறச் செய்யும் குளிர்ந்த தேகியைத் தென் மொழியில் அந்தணன் என்றும், பிரம மணம் வீசுதல் என்னும் - அவர்களுக்குள்ள நன்மெயின் செயல் பரவுதலை வடமொழியில் நம் மூதாதைகள் பிராமணன் என்றும் வகுத்திருக்கின்றார்கள். இதுவே விவேக விருத்தியால் மனதை ஆளும் செயல்பெயர்களாம்’ என்கிறார். அவ்வகையில், தமிழர் மரபில் காணப்பட்ட அந்தணர் எனும் தொழில்பெயர் அடையாளத்தைச் சகலருக்கும் பொதுமையான அடையாளமாகவே அயோத்திதாசர் முன்கொணர்கிறார் எனலாம்.

அந்தணர் அல்லது பிராமணர்கள் என்போரை ‘யதார்த்த பிராமணர்கள்’ எனவும், ‘வேடதாரிப் பிராமணர்கள்’ எனவும், இருவேறான தரப்பினராக அடையாளப்படுத்துகிறார் அயோத்திதாசர். அயோத்திதாசரைப் பொருத்தளவில், யதார்த்த பிராமணர்கள் என்போரே அந்தணர் ஆவர். பிராமணர்கள் எனச் சொல்லிக்கொண்டு வருண பேதங்களைப் பின்பற்றுவோரும் நடைமுறைப்படுத்துவோரும் வலியுறுத்துவோரும் மெய்யான பிராமணர்கள் அல்லர். மாறாக, பிராமணர்கள் போல வேடமிட்டுக்கொள்ளும் வேடதாரிப் பிராமணர்கள் ஆவர் என்கிறார் அயோத்திதாசர்.

யதார்த்த பிராமணர்கள் குறித்தும், வேடதாரிப் பிராமணர்கள் குறித்தும் விவரிக்கும் அயோத்திதாசர், ‘நீதியும், நெறியும், வாய்மெயும், தண்மெயும் நிறைந்த பிராமணனை மற்றும் விவேகிகள் பிராமணர் என்று அழைப்பார்களேயன்றி, தங்களுக்குத் தாங்களே பிராமணர் என்று சொல்லித் திரிய மாட்டார்கள்.

அவர்கள் செயலோ, தன்னைப்போல் சருவ உயிர்களையும் பாதுகார்த்தலும், சாந்தகுணம் பெருக்கமுற்று சகல பற்றுக்களும் அற்று, சமணநிலை கடந்து, பிரம மணத்தால் சருவ சீவர்களுக்கும் உபகாரியாக விளங்குவார்கள். இவர்களையே யதார்த்த பிராமணர்கள் என்று கூறப்படும்.

இந்நியாயர்களை மகட பாஷையில் பிம்மணரென்றும், சகட பாஷையில் பிராமணர் என்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும் அழைப்பார்கள்’ என்கிறார்.

வருண பேதத்தைக் கடைபிடிக்கும் பிராமணர்கள் தம்மை இரு பிறப்பாளர்கள் எனச் சொல்லிக்கொள்கின்றனர். இருபிறப்பு என்பதான நிலையானது, வருண பேதத்தைப் பின்பற்றுவோர்க்கு உரியதல்ல எனக் கருதும் அயோத்திதாசர், ‘சமணநிலை கடந்து அறஹத்துக்களால் உபநயனமென்னும் ஞானக்கண் பெற்று, உள்விழிப் பார்வை மிகுதியால் உண்மெய் உணர்ந்து, புறமெய் அகற்றி, தானே தானே தத்துவ சுயம்பிரகாச பரிநிருவாண சுகம் அடைவானாயின், அவனையே இரு பிறப்பாளன் என்று கூறப்படும். 

அதாவது, தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும், பரிநிருவாண பிறப்பொன்றுமேயாம். இத்தகைய உபநயனமென்னும் ஞானவிழி பெற்று, ஞானசாதன மிகுதியால் இரு பிறப்பாளனாகும் பரிநிருவாணத்திற்கு உரியவன் எவனோ அவனே யதார்த்த பிராமணன் ஆவான்’ என்கிறார். 

அதாவது, தாய் வயிற்றுப் பிறப்பு ஒன்று, பரி நிருவாணநிலை அடைதல் மற்றொரு பிறப்பு ஆகும். இத்தகைய இரு பிறப்பு நிலையானது யதார்த்த பிராமணர்களுக்குரியதாக அயோத்திதாசர் கூறுகிறார்.

இந்நிலையில், வேடதாரிப் பிராமணர்களைப் பற்றி விவரிக்கும் அயோத்திதாசர், ‘பெண்டுபிள்ளைக் கூட்டத்தினின்று பொருளாசை மிகுதி கொண்டு, தன்னவர்களை ஏற்றியும், அன்னியர்களைத் தூற்றியும், சீவகாருண்ணியமற்று தன்னையொற்ற மக்களைக் கொல்லாமல் கொன்று, பத்துக்குடிகள் நாசமடைந்த போதிலும், தன் குடி சுகமடைந்தால் போதும் என்னும் பொறாமெயே ஓர் உருவாகக் கொண்டுள்ளார்கள் தங்களைப் பிராமணரென்று சொல்லித் திரிவது வேஷ பிராமணமே ஆகும்’ என்கிறார் அயோத்திதாசர்.

யதார்த்த பிராமணர்கள் குறித்து ‘யதார்த்த பிராமண வேதாந்த விவரம்’ எனும் பகுதியிலும், வேடதாரிப் பிராமணர்கள் குறித்து ‘வேஷப் பிராமண வேதாந்த விவரம்’ எனும் பகுதியிலும் மிக விரிவாகவே விளக்கியுள்ளார் அயோத்திதாசர். அயோத்திதாசரின் இத்தகைய எடுத்துரைப்புகள் யாவும், வருண பேதங்களைக் கற்பிதம் செய்த பிராமணர்கள் என்போரின் வேடதாரி அடையாளத்தைக் கட்டவிழ்ப்பதாகும்.

வேடதாரிப் பிராமணர்களின் அடையாளத்தை அயோத்திதாசர் கட்டவிழ்த்திருக்கும்  பாங்கு குறித்து எடுத்துரைக்கும் டி.தருமராஜ், ‘அயோத்திதாசருக்கு முன்னும் பின்னும், பலரும் சாதியின் தோற்றத்தைப் பேசிப் பார்த்திருக்கிறார்கள். சாதி, பிராமணன் உருவாக்கியது; வர்ணம், அவனுடைய கண்டுபிடிப்பு; தீண்டாமை, அவனே சொல்லித் தந்தான்; எல்லாவற்றையும் நிர்மாணித்தவன் பிராமணன்; அவன் புத்திசாலி, கவனமாயிருக்க வேண்டும்; அவனால் எதையும் சாதிக்க முடியும், அழிக்க முடியும். வேறெங்கோயிருந்து இங்கு வந்த வகையினன்; வரும் பொழுதே செழுமையான மொழியையும், சமயத்தையும், பண்பாட்டையும் கொண்டு வந்தான்; அந்தணன், அறிவாளி; எல்லோரையும் ஏமாற்றத் தெரிந்தவன்; தன்னை உயர்த்திப் பிறரைத் தாழ்த்துவான். இது போல் இன்னும் வகைவகையான விளக்கங்கள். பிராமண எதிர்ப்பு என்ற பெயரில் செய்யப்பட்ட பிராமணத் துதிகள்.

முதன்முறையாய், இந்த வகை விளக்கங்களிலிருந்து வேறுபடுகிறார் அயோத்திதாசர். பிராமணர்களை வேடதாரிகள் மட்டுமே என்றார். இங்கொன்றும் அங்கொன்றும் பேசக் கூச்சம் அற்றவர்கள்; பாதகங்களுக்கு அஞ்சுவதில்லை; குற்றவுணர்ச்சியை இழந்தவர்கள்; இட்டுக்கட்டிக் கதைகளைச் சொல்கிறவர்கள். மற்றபடி, புத்திசாலித் தனத்திற்கும் இவர்களுக்கும் வெகு தூரம் என்றார் அயோத்திதாசர்.

பிராமணர்களை நிராயுதபாணி ஆக்கினார். அவர்கள் சொந்தம் கொண்டாடும் பெயர் அவர்களுடையது இல்லை என்றார். அவர்கள் உரிமை பாராட்டும் மொழி அவர்கள் மொழி இல்லை என்றார். அவர்களது பழக்க வழக்கம் அவர்களுடையது இல்லை.

எல்லாமே வேஷம். பெயரில் வேஷம்; பேசும் மொழியில் வேஷம். உணவில் வேஷம்; தோற்றத்தில் வேஷம்; உடையில் வேஷம் - மொத்தத்தில் வேஷ விற்பன்னர்கள். பிராமண சாதி பற்றி எழுப்பி வைக்கப்பட்டிருந்த மாயையைப் பொல பொலவெனச் சரித்து விட்டார்’ என்கிறார். அவ்வகையில், தமிழர் மரபின் அந்தணர் என்போரின் தொழில் குலத்திற்கும், ஆரிய வைதீக மரபின் பிராமண வருண குலத்திற்கும் உள்ள வேறுபாடுகளைத் தெளிந்தறியலாம். 


மகாராசன் எழுதிய அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல் நூலில் இருந்து..




*
அயோத்திதாசரின் தமிழர் அடையாள அரசியல்,
மகாராசன்,
ஆதி பதிப்பகம் வெளியீடு,
விலை: உரூ 120/-
தொடர்புக்கு:
தில்லை முரளி
+91 99948 80005.

அஞ்சலில் நூல் பெற:
செந்தில் வரதவேல்
90805 14506

4 கருத்துகள்:

  1. தெளிவான பதிவு, எளிதில் இவர்களை ஒப்பிட முடிகிறது

    பதிலளிநீக்கு
  2. அருமையான கருத்து, தெளிவான விளக்கம், தொல்காப்பிய மேற்கோள்கள் மிக பொருத்தம்,சிறப்பு....

    பதிலளிநீக்கு
  3. மிகவும் பயனுள்ள தகவல்களை தாங்கிய எழுத்து நடை மிகச்சிறப்பு. வாழ்த்துகள் ஐயா💐💐💐

    பதிலளிநீக்கு
  4. கருத்துச் செறிவிற்கேற்ற செறிவான மொழிநடை. சிந்திக்கச் செய்த விளக்கங்கள். நன்று தொடர்க ஐயா💐

    பதிலளிநீக்கு